A map by *MUNSTER*, c.1588
கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகு என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்பது அக்காலம் தொட்ட வழக்கு.
துருக்கியப்படை ஒன்று அப்போது சிலாபம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தோற்றுப் போனது. பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய கோட்டையை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர்.
பின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீஸ்தவனாக்கிய மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர்.
தம் எண்ணம் போலத் தர்மபாலாவைக் கிறீஸ்தவனாக்கினர். அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீஸ்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர்.
போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம்
கனக சூரிய சிங்கையாரியான் இழந்த தன் மகுடத்தை மீண்டும் சூட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த பின் அவனது மூத்த மகனான பரராஜசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராஜ சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராஜசேகரன்.
சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் அழிவுற்ற ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு. சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.
பரராஜசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன. இப்படிப் பரராஜசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருஷ்டிமுனிவர் என்பார் அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்
"அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் "
என வினவினான்.
புருஷோத்தம, நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான். இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியின் மாயவலைக்குட்பட்டு அரசை அவன் கையிற் கொடுத்திடுவான். சங்கிலி கொடுங்கோலோச்சித் தன்னரசை அந்நிய தேசவாசிகளான பறங்கியர் கையிற் கொடுத்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர். அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர். அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் - ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்திலும் மீள்வதில்லை" என்றார்.
இதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி
"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".
சுபதிருஷ்டிமுனிவர் குறி சொன்ன அந்தக் கொடிய நிகழ்வுகள் அடுத்த பதிவுகளில் தொடர்கின்றன.
உசாவ உதவியவை:
1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
3. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
சித்திரம்:
1. map by *MUNSTER*, c.1588 (ebastian Münster (1488-1552) was a German cartographer, cosmographer) - Columbia University வரலாற்றுத் தளம்
2.போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம் - Library of congress an illustrated guide
8 comments:
அண்ணா முதலாவது படம்
A.C யா
B.C யா
வணக்கம் மாயா
இது கி.பி தான். அதாவது போர்த்துக் கேயர் வந்த காலத்துப் படம்.
பிரபா!
துருக்கியரும் இலங்கையில் கண்வைத்துள்ளார்களா??
சிலர் இலங்கையிலும் முஸ்லீம்களைத் துலுக்கர் எனக் குறிப்பிடுவது இதனாலேயா?
பறங்கியர் என்பது இலங்கை+ போத்துக்கீய கலப்பால் வந்த இனம் என இதுவரை நான் கருதினேன்.
இந்த இனத்தை தென்னிந்தியாவில் 'சட்டைக்காரர்' என்பர்.( அதாவது பெண்கள் போடும் கவுணை வைத்தே இப் பெயர்)
வணக்கம் அண்ணா
வரலாற்று நூல்களை மேயும் போது செவ்வாய்கிரகத்து வாசிகளைத் தவிர எல்லாருமே இலங்கைக்கு வந்து அடிமைகளாக்கி ஆட்சி செய்துவிட்டுப் போய்விட்டார்கள் ;-(
நான் உசாவிய வரலாற்று நூற்பிரகாரம் வரலாற்றாசிரியர் போர்த்துக்கீசரைப் பறங்கியர் என்று குறிப்பிட்டுள்ளார். கலப்புக் குழந்தைகளும் அப்பெயர் தாங்கிவருதல் கண்கூடே.
செல்லம்!!
நான் எழுதினா தப்புத் தப்பாகத்தான் எழுதுவேன் என அடம்பிடிக்கக்கூடாது.
நல்ல பிள்ளையாக முதலில் தெளிவாக படிக்க வேண்டும். பல தவறுகள் உண்டு.
திருகோணமலைக் கோட்டையில் உள்ள கிரந்த சாசனத்தின் (கொட்றிங்ரன்) மொழி பெயர்ப்பு:
முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவ பின்
பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து
எண்ணாரே பின்னரசர்கள்.
செல்லம்!! திருகோணமலை மக்களிடையே உள்ள வாய்மொழி வழக்கு என்ன என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்! இதோ:
முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே மன்னா கேள்
பூனைக்கண், செங்கண் புகைக்கண்ணன் போனபின்
தானே வடுகாய் விடும்.
செல்லம்! நீங்க சொன்ன முனிவர் நிறைய தப்புக்கள் விடுவார் போலத் தெரிகிறது. போர்த்துக்கீசர் 40 ஆண்டுகாலமா இலங்கையில் இருன்தார்கள்?
முக்கிய குறிப்பு: இது கல்வெட்டு இல்லைச் செல்லம். சாசனம். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
ஒரு ஈழத் தமிழன்
வணக்கம் ஒரு ஈழத்தமிழனே
உங்கள் கருத்துக்கு நன்றி. இங்கே நான் தரும் பதிவுகள் என் சொந்தக் கருத்தல்ல என்பதை ஆரம்பப் பதிவில் இருந்து சொல்லி வருகின்றேன்.
மீண்டும் சொல்கிறேன், உசாத்துணைகளில் குறிப்பிட்ட முக்கியமான எந்த விடயத்தையும் மாற்றாது அப்படியே தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
நான் தற்போது இந்தப் பதிவுகளுக்காகப் பயன்படுத்தும் நூல்களிலேயே ஒன்றுக் கொன்று சில இடங்களில் முரண்பட்டும் இருக்கின்றன.
என்னுடைய வேலை, நல்லூர் ஆலயம் தொடர்பில் தொடர்புபட்ட செய்திகளை அவ்வரலாற்று நூல்களில் இருந்து எடுத்துத் தருவதே. அவற்றில் மாற்றம் செய்யவும் எனக்கு அவ்வளவு அதிகாரம் கிடையாது.
"முன்னாட் குளக்கோட்டன்" என்று குறிப்பிடும் இந்தப் பகுதி ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய "யாழ்ப்பாணச் சரித்திரம்" என்ற நூலில் பக்கம் 60, கடைசிப்பந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
போர்த்துக்கேயர் வருகை குறித்து எழுதும் போது இதை எடுத்தாண்டிருக்கின்றேன், அவ்வளவே.
முன்னே குளக்கோட்டன் குறித்த விபரங்களுக்கு:
முடிந்தால் கனகசபாபதி சரவணபவன் எழுதிய "வரலாற்றுத் திருகோணமலை" நூலைத் தேடியெடுத்துப் பார்க்கவும். பக்கம் 173 - 174 இல் இக்கல்வெட்டு குறித்த விபரங்கள் விரிவாக எழுத்தப்பட்டுள்ளன. மீண்டும் சொல்கின்றேன் "கல்வெட்டு" என்றே அவரது ஆய்வுக்குறிப்பும் தெரிவிக்கின்றது.
//நீங்க சொன்ன முனிவர் நிறைய தப்புக்கள் விடுவார் போலத் தெரிகிறது. போர்த்துக்கீசர் 40 ஆண்டுகாலமா இலங்கையில் இருன்தார்கள்?//
இலங்கையைப் பற்றி முனிவர் சொன்னதாக நீங்கள் புதுக்கரடி விடாமல், மீண்டும் வாசியுங்கள், யாழ்ப்பாண இராச்சியம் குறித்தே அங்கு அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர் கி.பி 1590 முதல் கி.பி 1658 வரை இருந்தார்கள் சொல்லப்படுகின்றது. அது நாற்பது வருடங்களைக் கடந்த காலம் என்றாலும் ஓரளவு ஏற்கக்கூடியகாலமே.
உங்கள் கிண்டல் பற்றி வேறு எந்தக் கருத்தும் கிடையாது.
தொடர்ந்து எழுதுங்கள். நல்ல விடயங்கள் உள்ளது உங்கள் கட்டுரையில்
வணக்கம் தாசன்
தங்கள் வருகைக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகள்.
Post a Comment