Thursday, March 07, 2019
வாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு
துயர் மிகு ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் நேர்ந்த இக்கட்டுகளை அனுபவ ரீதியாக எழுதிப் போந்தால் அது மெய்த்தன்மையோடே பல நாவல்களைப் பிரசவிக்கும். அதனால் தான் தொண்ணூறுகளுக்குப் பின் எழுந்த ஈழ இலக்கியங்களில் பெரும்பாலானவை காதலையும், இயற்கையையும் கொண்டாடவில்லை, போரின் வடுக்கள் தந்த பரிமாணங்களாகவே விளங்கின. இதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் என்னடா இது ஒரே தன் வரலாறு பேசும் படைப்பு என்றோர் சலிப்புத் தன்மை எட்டினாலும், இந்த அனுபவங்களோடு வாழ்ந்தவர்கள் அதை மீறிய கற்பனை உலகில் சஞ்சரிக்க விரும்புவதில்லை. தூத்துக்குடி படுகொலையோ, எல்லை தாண்டிக் காணாமல் போகும் மீனவன் நிலையோ, அல்லது கஜா போன்றதொரு சூறாவளி அனர்த்தமோ நிகழும் போது அதன் பின்னணியில் ஒரு படைப்பு எழுந்திருந்தால் அது காலத்தைத் தாண்டி நிற்கும் ஒரு வரலாற்றுப் படைப்பாக இருக்கும். இந்த மாதிரியான சிந்தனையோடே ஈழத்து எழுத்தாளர்கள் தாம் எதிர்கொண்ட போரியல் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு கதைகளை, நாவல்களை எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள். அதில் சொல்லப்படும் சம்பவங்கள், கதை மாந்தர்கள் எல்லாம் வாசகனுடைய வாழ்க்கையின் பக்கங்களைக் கிளறுவனவாக இருக்கும். அவ்விதம் எழுந்த ஒரு படைப்பே வாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்”.
இந்திய இராணுவம் ஈழ மண்ணை விட்டு வெளியேறிய பின்னரான பிரேமதாச ஆட்சிக் காலத்தைக் களமாகக் கொண்டு இந்த நாவல் இயங்குகின்றது. இரண்டாம் கட்ட ஈழப் போரென்பது முந்திய காலத்தோடும், பிந்திய கால மூன்றாம் கட்ட ஈழப் போரோடும் ஒப்பிடுகையில் மாறுபட்ட போரியல் வாழ்வினைக் கொண்டது. இந்தக் கால கட்டத்தில் தான் கொழும்பு நோக்கி வட புலத்து மக்கள் லொட்ஜ் (lodge) என்ற தற்காலிகத் தங்கு விடுதிகளில் (பலருக்கு அது ஆண்டுக் கணக்கில்) தங்கி வாழ நேர்ந்தது. வெளிநாட்டுக்குப் போகவிருக்கும் இளைஞனோ, யுவதியோ அல்லது குடும்பமோ அதன் நோக்கிலும், அன்றி அப்போது வெளிநாட்டுத் தொடர்பாடல் தொடங்கி வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை ஈறாக முடங்கிப் போய் விட்ட நிலையில் கொழும்புக்கு வந்து அதன் நிமித்தமான தங்கலாகவும் இந்த லொட்ஜ் வாழ்க்கை பலருக்கு வாய்த்தது. தினம் தினம் காவல்துறையின் முற்றுகைகள், கைதுகள், நாட் கணக்கில் சிறையில் இருந்து திரும்புதல் என்று இங்கே விடுதி வாழ்க்கையில் இதுவும் ஒரு அங்கமாகவே மாறி இருந்தது அப்போது. இந்த நாவலைப் படிக்கும் போது அந்தப் பழைய நினைவுகளைக் கிளறி வைக்கிறது.
“கலாதீபம் லொட்ஜ்” இல் அடைக்கலமாகும் கதை மாந்தர்களின் குணாதிசியங்கள், அவர்களின் பின்புலங்கள் என்று நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் முதற் பந்தியில் குறிப்பிட்டது போன்று இறந்த காலத்து வாழ்வியலின் கண்ணாடியாக போர்க்கால இலக்கியங்கள் சமைக்கப்பட்ட போது இதுவும் அத்தகைய காலத்து மனிதர்களை நினைப்பூட்டுகிறது.
நாவலின் முடிவை ஓரளவு ஊகிக்குமளவுக்கு முதல் அத்தியாயம் கோடிட்டு விடுகிறது.
இலங்கையின் தலை நகரில் ஒரு இருண்ட உலகம் இருந்தது. அங்கே திடீர்க் கைதுகளால் காணாமல் போன தம் மகன்களைத் தேடிக் கொண்டிருக்கும் தாய்மார், கொட்டியா (புலி) ஆக்கப்பட்டு 3 ஆம் மாடி சித்திரவதைக் கூடத்தில் இருக்கும் இளைஞர்கள் என்று அந்த உலகத்தை மறந்து விட முடியாது. கலாதீபம் லொட்ஜ் அவ்வாறானதொரு களத்தை மையப்படுத்தியே நகர்கிறது.
ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் ஈழத்துக் கவிஞர்களது போர்க்காலக் கவிதை நறுக்குகளை இட்டது எந்த வகையிலும் அந்தந்த அத்தியாயங்களை நியாயம் செய்யாமல் துருத்தி நிற்கின்றன. சில அத்தியாயங்களில் கவிதையே இல்லாமல் தொடர்ச்சித் தன்மை அற்றிருக்கின்றன.
நாவலில் உரையாடல் தவிர்ந்த மொழி வழக்கில் யாழ்ப்பாணத்துத் தமிழா, கொழும்புத் தமிழா அல்லது சென்னைத் தமிழா என்ற குழப்பம் எழுந்திருக்கிறது. பல்வேறு நிலபுலன்களில் மாறி, மாறி வாழ்க்கைப்படுவோருக்கு (நான் உட்பட) இந்த மொழிச் சிக்கல் எழுந்திருக்கிறது. நாவலை இந்திய வாசகர்களும் புரிந்து வாசிக்க வேண்டுமென்று கருதியோ என்னமோ சொற்களுக்கான விளக்கக் குறிப்புகள் நாவல் கோட்பாட்டில் முரணாக இருக்கிறது. அத்தோடு உரையாடல்களையும், கதை நகர்த்தலையும் இறந்த கால வாக்கிய அமைப்பாக அமைத்திருப்பதால் அதில் புகுந்து ஒன்ற முடியாத சூழலும் அவ்வப்போது தலை தூக்குகிறது.
நாவலின் ஆரம்பத்தில் முன்னெடுத்த கள விபரணம், உரையாடல் போன்றவற்றை நிகழ் பருவத்தில் எடுத்துச் செல்லும் போது வாசகனும் அந்த உலகத்தில் நுழைந்து தங்கி விடுவான். ஒரு நாவலின் அடிப்படையே அதில் தங்கியிருக்கிறது.
இந்த நாவல் இன்னும் செம்மைப்பட்டு எழுதப்பட வேண்டியது, வாசு முருகவேல் இன்னும் சில ஆண்டுகள் கழித்து மீள இதைப் படிக்கும் போது உணர்வார்.
தொண்ணூறுகளின் முற்பகுதி தொடங்கி நகரும் கதை என்பதால் ஜே.வி.பி கிளர்ச்சி, சிங்கள நாட்டில் நிகழும் கலவரங்களை அத்தியாயங்கள் வரலாற்றுப் பின்னணி கலந்து கொடுத்திருந்தாலும் கலாதீபம் லொட்ஜில் இருந்து விலகியே அவை இருக்கின்றன.
“கொழும்பு லொட்ஜ்” என்ற குறுநாவலை இதே காலப்பகுதியை முன் வைத்து செங்கை ஆழியான் படைத்திருந்தார். அந்த நாவலில் லொட்ஜ் வாழ்வை முழுமையாக மையப்படுத்தியதோடு அந்தக் களத்தில் நின்றே முழு நாவலையும் அடக்கியிருந்தார். அங்கே முழுமையானதொரு லொட்ஜ் வாழ்க்கை திருத்தமாகப் பதிவாகியிருந்தது. வாசு முருகவேலும் “கலாதீபம் லொட்ஜ்” வழியாக அப்படியொரு மையத்தைக் கட்டியெழுப்பிருக்கிறார்.
ஒரு தங்கு விடுதி வாழ்க்கை, அதுவும் புறச் சூழல் ஒரு பரபரப்பான வர்த்தக உலகம் இயங்கும் நெருக்கடியான அமைப்பு என்று
கொழும்பு வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுவதிலும், அந்த விடுதியில் தங்கி நிற்போரின் பின்னணி, அவர்களின் குணாதிசியங்களைக் காட்டுவது போன்றவற்றைச் சிறப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார்.
வீதித் தடை ஒன்றில் போராளிப் பெண் அகப்பட்டு சயனைட் அருந்தும் காட்சி விபரிப்பில் இருக்கும் உயிரோட்டமும் தொடர்ந்து தொடர்ந்து நகரும் பரபரப்பான சூழலையும் நேர்த்தியாகவும், வாசகன் அந்தக் கள நிலையை உணரும் வண்ணமும் தன் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் புழகத்தில் இருந்த வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்பு முகவர் நிலையங்கள், ராணி காமிக்ஸ் படிக்கும் வழக்கம் என்று நாவலின் காலத்தை மையப்படுத்திய வர்ணணைகள், பொருளாதாரத் தடை நிலவிய காலத்து வடபுலத்து வாழ்க்கை என்று விலக்க முடியாத அக்காலத்து வாழ்வியல் விடயங்களையும் உள்ளடக்கியிருக்கிறார்.
“கலாதீபம் லொட்ஜ்” வழியாக தொண்ணூறுகளின் ஆரம்ப காலகட்டத்தில் போர் தீண்டிய ஈழத்தவரின் வாழ்வியலின் போக்கு பற்றிய வரலாற்றுப் பதிவைக் கொடுத்த வகையில் வாசு முருகவேல் வெற்றி பெற்றிருக்கிறார்.
கானா பிரபா
06.03.2019
Monday, March 04, 2019
உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019) வென்ற யசோதை செல்வகுமாரனுடன் நேரடிச் சந்திப்பு
உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக சிட்னியில் வாழும் ஈழத் தமிழ்ப் பெண் திருமதி யசோதை செல்வகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலையகத்துக்கு வந்து நீண்டதொரு பேட்டியை வழங்கிச் சிறப்பித்தார்.
அந்தப் பேட்டியைக் கேட்க
இந்த நேரடிப் பேட்டியின் முடிவில் நமது சமூக வானொலியில் இவ்வாறானதொரு நேர்காணலைக் கொடுக்கத் தனக்களித்த சந்தர்ப்பத்துக்கும் நன்றி பகிர்ந்ததோடு தனது Twitter பக்கத்திலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வானொலிப் பேட்டியை ஒழுங்கு செய்த எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் திரு ஈசன் (செல்லையா கேதீசன்) அவர்களுக்கும் மிக்க நன்றி.
இந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்ட ஆழமான, சிந்திக்கத் தூண்டும் கருத்துகளில் இரண்டு மிக முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டும்.
மாணவருக்கான கல்வியறிவைத் தாண்டி மேலதிக வெளித் தகமைகள் (Extracurricular activities) மற்றும் தலைமைப் பண்பு மிக அவசியமானது என்று வலியுறுத்தினார்.
கூடவே அவுஸ்திரேலியாவில் குறிப்பாக இங்கு குடியேறிய ஆசிய நாட்டவர் பின்பற்றும் பாடசாலைகள் மீதான தரப்படுத்தலை அவர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும், எல்லாப் பாடசாலைகளுமே திறன் மிகு ஆசிரியர் சமூகத்தோடே இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார்
மாணவருக்கான கல்வியறிவைத் தாண்டி மேலதிக வெளித் தகமைகள் (Extracurricular activities) மற்றும் தலைமைப் பண்பு மிக அவசியமானது என்று வலியுறுத்தினார்.
கூடவே அவுஸ்திரேலியாவில் குறிப்பாக இங்கு குடியேறிய ஆசிய நாட்டவர் பின்பற்றும் பாடசாலைகள் மீதான தரப்படுத்தலை அவர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும், எல்லாப் பாடசாலைகளுமே திறன் மிகு ஆசிரியர் சமூகத்தோடே இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார்
மற்றைய நாடுகளோடு ஒப்பிடும் போது அவுஸ்திரேலியாவின் கல்வித் தரம் குன்றியது போன்றதொரு மாயை தவறானது என்றும் அதற்கு முன்னுதாரணமாக கடந்த ஆண்டுகளிலும் இந்த ஆண்டும் உலகின் முதல் பத்து தலை சிறந்த ஆசிரியர்களில் அவுஸ்திரேலியர்கள் இடம் பிடித்ததைச் சுட்டிக் காட்டினார்.
யசோதை அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் ( Rooty Hill High School) வரலாறு, சமூகமும் கலாசாரமும், புவியியல் பாடங்களை கற்பிக்கும் ஓர் ஆசிரியர்.
இக் கல்லூரியில் கல்விகற்கும் 80வீதமான மாணவர்கள் அகதிகளாகவும், புலம்பெயர்வாளர்களாகவுமே உள்ளனர், அகதிகள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் சமத்துவமான கல்விக்காக அவர் தினமும் அங்கு போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற்திட்டங்களை போதித்து வருகிறார்.
இக் கல்லூரியில் கல்விகற்கும் 80வீதமான மாணவர்கள் அகதிகளாகவும், புலம்பெயர்வாளர்களாகவுமே உள்ளனர், அகதிகள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் சமத்துவமான கல்விக்காக அவர் தினமும் அங்கு போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற்திட்டங்களை போதித்து வருகிறார்.
Varkey Foundation https://www.globalteacherprize.org என்ற அமைப்பின் வழியாக இந்த உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முன்னைய ஆண்டில் உலகின் தலை சிறந்த ஆசிரியர் என்ற ரீதியில் முதல் 50 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இம்முறை
179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து முதல் பத்துப் பேரில் ஒருவராக யசோதை செல்வகுமாரன் தெரிவாகியிருக்கின்றார்.
இதற்கு முன்பதாக அவுஸ்திரேலியாவின் Commonwealth Award ஐயும் இவர் பெற்றுச் சிறப்புச் சேர்த்திருக்கிறார்.
179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து முதல் பத்துப் பேரில் ஒருவராக யசோதை செல்வகுமாரன் தெரிவாகியிருக்கின்றார்.
இதற்கு முன்பதாக அவுஸ்திரேலியாவின் Commonwealth Award ஐயும் இவர் பெற்றுச் சிறப்புச் சேர்த்திருக்கிறார்.
இவரோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் முதன்மை நிலை பெறும் ஆசிரியரை எதிர்வரும் மார்ச் 24 ம் திகதி துபாயில் நடைபெறும் நிகழ்வின் வழியாகத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். அவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசையும் வழங்கவுள்ளனர்.
எந்தவிதமான வாக்களிப்பு முறைமையோ, தரப் பாகுபாடுமோ இல்லாது ஆசிரியர் ஒருவரின் ஆளுமைத் திறன், அவரின் கற்பித்தல் பண்பு இவற்றை அலசி ஆராய்ந்தே இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
திருமதி யசோதை செல்வகுமாரன், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் உப அதிபர் மற்றும் பெளதீகவியல் ஆசிரியர் திரு இராமலிங்கம் வல்லிபுரம் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி யசோதை செல்வகுமாரன், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் உப அதிபர் மற்றும் பெளதீகவியல் ஆசிரியர் திரு இராமலிங்கம் வல்லிபுரம் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சுற்று நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிரியை திருமதி யசோதை செல்வகுமாரனைத் தமிழ் சமூகம் சார்பில் நாமும் வாழ்த்துவோம்.