ஏரும் ஊரும் பட்டை நனையும்
எங்கள் அன்னை நெஞ்சினிலே
காரும் சூழும் கண்ணீர் வடிக்கும்
கன்னி மாதா நெஞ்சினிலே
போரும் சூழும் ரத்தம் சுவறும்
பொன்னித் தாயாள் நெஞ்சினிலே
தேரும் ஓடும் சங்கும் முழங்கும்
தேவன் செவ்வேள் கோயிலிலே
ஆரைக் காட்டு அழகைக் காட்டி
ஆலிங் கனங்கள் செய்து நிதம்
ஊரைக் கட்டி உவக்கும் மட்டும்
ஊரில் களங்கம் வந்ததென்ன
மாரைக் காட்டிக் களப்பில் ஓடி
மேழித் தனங்கள் செய்த நிலம்
போரைக் கூட்டி பகையில் வீழ்ந்து
போரில் சுடலை யான தென்ன
குப்பி லாம்பு ஏற்றி வைத்து
கல்வி கற்கும் கால மிதோ
கப்பி சுற்றி வா னொலிக்கும்
கை கொடுக்கும் ஆதி யிதோ
முற்பிறப்பில் செய்த தீதோ
முற்றிப் போன வீண் முரசோ
தப்பி விட்டால் தாயம் என்று
தஞ்சம் தேடும் நாளிதுவோ?
விந்தை மீந்து வளர்ந்த காலம்
வீழ்ந்து ஆதி ஆனதுவோ
சந்தை போட்டு சலித்துப் போன
சாத்வீகங்கள் மாண்டனவே! - மாவை வரோதயன்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திரையிசை சுவடு இல்லாத, ஈழத்தின் கலைப்படைப்புக்கள், படைப்பாளிகள், மெல்லிசைப்பாடல்கள் குறித்த வானொலி நிகழ்ச்சி ஒன்றை உருவாக்க விழைந்தேன். அதற்கு "முற்றத்து மல்லிகை" என்று பெயர் சூட்டி முதலாவது நிகழ்ச்சியை ஈழத்தின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான அமரர் நீலாவணனின் மகன், வானொலிப்படைப்பாளி திரு எஸ்.எழில்வேந்தன் அவர்களை முதல் நிகழ்ச்சியின் பகிர்வை வழங்க வானலையில் அழைத்திருந்தேன். தொடர்ந்து வரும் முற்றத்து மல்லிகை நிகழ்ச்சிகளில் ஈழத்தில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளையும், படைப்பாளிகள் குறித்த செய்திகளையும் "ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்" என்ற ஒலிப்பகிர்வாக கொடுக்க யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எழில் அண்ணாவிடம் கேட்டபோது அவர் மாவை வரோதயனை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிலிருந்து வாரா வாரம் மாவை வரோதயனின் "ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்" இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது அந்த நிகழ்ச்சியில். வெறும் இலக்கியச் செய்தித் தொகுப்பாக இல்லாது தனக்கே உரிய பாணியில் விமர்சனம் கலந்து அவற்றைக் கொடுத்ததோடு, தன் செய்தியை அடியொற்றி ஒரு குறுங்கவியையும் கொடுத்து நிறைவு செய்வார் மாவை வரோதயன். மாவை வரோதயன் என்ற பெயர் இலக்கிய உலகில் அதிகம் தெரியாவிட்டாலும் வீரகேசரி போன்ற பத்திரிகைகளின் வார இதழினைப் பார்த்தால் இவரின் விமர்சனக் கட்டுரைகள், மதிப்பீடுகளை
படித்த எண்ணற்ற வாசகர்கள் இருப்பார்கள். மாவை வரோதயன் அண்ணர் நேற்று அகால மரணமடைந்தார் என்ற செய்தியை இழப்பு குறித்த செய்தியை செ.பொ.கோபிநாத் இன் வலைப்பதிவின் மூலம் அறிந்து மிகுந்த கவலையடைந்தேன்.
நான் பணிபுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மாவை வரோதயன் குறித்த நினைவுப்பகிர்வை எனக்கு அவரை அறிமுகப்படுத்திய எழில் அண்ணாவையே வழங்க வேண்டும் என்றெண்ணி அவரைத் தொடர்பு கொண்டேன். தொடர்ந்து மாவை வரோதயன் குறித்த தன் பகிர்வை வழங்குகின்றார் எஸ்.எழில்வேந்தன் அவர்கள்.
ஒலி வடிவில்
மாவை வரோதயன் அவர்களை முதன்முதலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நண்பர் யோகராஜா அவர்களின் வீட்டில் தான் கண்டேன். யோகராஜா அவர்களின் வீட்டின் ஒரு பகுதியில் தான் மாவை வரோதயன் அப்போது குடியிருந்தார். அந்த வகையில் நான் யோகராஜாவைக் காணச் செல்லும் போதெல்லாம் மாவை வரோதயன் அமர்ந்து உரையாடுவார். நாங்கள் யோகராஜா வீட்டில் கூழ் எல்லாம் காய்ச்சி உண்ட ஞாபகங்கள் இப்போது வருகின்றன.
மாவை வரோதயனின் இயற்பெயர் சத்தியகுமாரன். இவர் யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள மாவிட்டபுரம், பளை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் தந்தையார் சிவகடாட்சம் பிள்ளை அவர்கள் பணி நிமித்தம் காரணமாக மட்டக்களப்பிலே சம்மாந்துறை என்ற இடத்திலே இருந்தார். சம்மாந்துறைக்குச் செல்வதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். சம்மாந்துறையிலே அவர் வசித்த போது சம்மாந்துறை முஸ்லீம் மத்திய கல்லூரியிலும், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியிலும் அவர் பயின்றிருக்கிறார். அதனால் அவருக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து சில இஸ்லாமிய அமைப்புக்களுக்காக அந்தக் காலத்திலே அவர் சுவரொட்டிகள் எல்லாம் ஒட்டியிருக்கிறார் என்று கூட எனக்கு ஒருமுறை சொல்லியிருக்கிறார். அவருடைய இந்தப் புலம்பெயர் வாழ்வு அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கிற்குச் சென்று அங்கே மக்களுடன் வாழ்ந்து பழங்கிய வாழ்க்கை அவருடைய வாழ்க்கையிலே பெரிய விரிவாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். பின்னரே முஸ்லீம் நண்பர்கள் மட்டக்களப்பு நண்பர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். அவர் மட்டக்களப்பைப் பற்றிக் கூட சில பாடல்கள், கவிதைகளை இயற்றியிருக்கிறார். இதற்குப் பின்னர் அவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்ற பின்னர் தான் கொழும்பிலே நான் அவரைச் சந்தித்த போது பரீட்சைத் திணைக்களத்திலே பணிபுரிந்தார்.
பரீட்சைத் திணைக்களத்திற்குச் செல்கின்ற பலருக்கும் அவர் பல்வேறு வகையிலே உதவி செய்திருக்கிறார். பலர் அவரைப்பற்றிச் சொல்லும் போது யாருக்குமே தெரியாவிட்டாலும் கூட அங்கே உதவிக்குப் போது அங்கே உதவி செய்திருக்கின்றார்.
அதற்குப் பின்னர் அவர் சுகாதாரப் பரிசோதகராகப் (P.H.I) பணிபுரிந்தார். அப்போது வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக சயரோகம் சம்பந்தமான சிகிச்சைகளுக்காக இவர் சுகாதாரப் பரிசோதகராகப் பணிபுரிந்தார். பலர் இந்தச் சயரோகம் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டிருப்பதால் இவர் கொழும்பைச் சூழவுள்ள கிராமங்கள், மூலை முடுக்குகள் எல்லாவற்றிற்கும் சென்று சயரோகக்காரர்களுக்கு அறிவுறுத்தி, சில சமயம் தன் கைப்பணத்தைக் கூடச் செலவு செய்து வைத்தியசாலையில் சிகிச்சை செய்வதற்காக ஊக்கப்படுத்தினார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவருடன் பணியாற்றிய வேறு நண்பர்களும் இதைச் சொல்லியிருக்கிறார்கள். "இந்த மனுஷன் தன்னுடைய கைக்காசைச் சிலவழித்தே ஆட்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகச் சிலவேளைகளில் பொருட்கள், சாப்பாட்டுப் பார்சல்களை பிள்ளைகளுக்குக் கொடுத்து தகப்பனை அல்லது தாயை வைத்திய சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு செல்கின்ற அந்த மனிதாபிமானம் என்பது அவருக்கு நிறைய இருந்தது.
அவரது இலக்கியப் பணிகளைப் பார்க்கும் போது அவர் ஒரு கவிதையாளராக, சிறுகதையாளராக, கட்டுரையாளராக என்று பன்முகப்பட்ட முகங்களைக் காட்டியிருக்கிறார், அவர் நாடகங்களை எழுதியிருக்கிறார். வில்லுப்பாட்டு எழுதி அதில் நடித்திருக்கிறார் என்று பலவிதமாகச் சொல்லலாம். அவர் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருந்தார். கொழும்பிலே தேசியக் கலை இலக்கியப் பேரவையின் இலக்கியக் குழுச் செயலாளராக அவர் நீண்டகாலம் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
பின்னர் வானொலிப் பங்களிப்புப் பற்றிச் சொல்வதானால் , சில்லையூர் செல்வராசன் செய்து கொண்டிருந்த "பா வளம்" "கவிதைக் கலசம்" போன்ற நிகழ்ச்சிகளிலே அவர் பங்குபற்றியிருக்கிறார். அப்போது அவர் கவிதைகளை அனுப்புகின்ற போது சில்லையூர் செல்வராசன் அவர்கள் அதனைத் திருத்தி அவற்றினை ஒலிபரப்புகின்ற அந்தப் பாங்கிலே மயங்கி அவர் சில்லையூர் செல்வராசனின் ஒரு ஏகலைவனாகவே மாறிவிட்டார் என்று சொல்லலாம். அவரது கவிதைகளைப் பார்த்தால் சில்லையூராரின் அந்த நடை, போக்குகள் இருப்பதைக் கூடக் காணலாம். ஏனெனில் அவர் சில்லையூராரின் கவிதைகளில் ஈர்க்கப்பட்டவர் என்று சொல்லலாம். குறிப்பாக சில்லையூராருக்காக இவர் இறக்கும் வரை வாதாடிக் கொண்டிருந்தார். சிலவேளைகளில் சீரியஸ் கவிஞர் இல்லை, சும்மா மேம்போக்காக நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே தவிர அவர் ஒரு தீவிரமான கவிதையாளர் அல்ல என்ற ஒரு குரல் இங்கு எழுந்த போது தொடர்ச்சியாக பத்திரிகைகளிலே மாவை வரோதயன் பல கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவரது தீவிரமான, நல்ல கவிதைகளை வெளிக்காட்டியிருக்கின்றார். அந்த வகையிலே அவரது கவிதைப் போக்கைச் சொல்லலாம்.
மாவை வரோதயனது கவிதைத் தொகுதி ஒன்று "இன்னமும் வாழ்வேன்" என்று வந்திருக்கிறது. தேசியக் கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக அது வெளிவந்திருக்கிறது. அந்த இன்னமும் வாழ்வேன் என்ற கவிதைத் தொகுதியிலே இருக்கின்ற கவிதைகள் அனைத்துமே மரபுக் கவிதைகளாக இருக்கும். ஆங்காங்கே இடங்கள் இருக்கின்ற பகுதியிலே சின்னச் சின்ன சீட்டுக் கவிதைகள் அதாவது சில்லையூராரின் ஊரடங்கப் பாடல்களில் இருக்கின்ற சின்னச் சின்னக் கவிதைகள் போன்று அவற்றை எழுதியிருக்கின்ரார். அவை நகைச்சுவையாகவும் இருக்கும். அவை நகைச்சுவையாகவும் இருக்கும் அதே போன்று குத்திக் காட்டுவது போலவும் இருக்கும். இன்னமும் வாழ்வேன் என்று சொன்ன மனிதர் நேற்று அதிகாலை 1 மணி அளவிலே இறந்து விட்டார். இன்னமும் வாழ்வேன் என்று அவர் கவிதைகளில் அவர் வாழ்வார் என்று அப்போதே அவர் எடுத்துக் கூறினாரோ என்று நான் யோசிக்கின்றேன்.
மற்றய அவரது சிறப்பு விமர்சனத்துறை. அவர் எவரையும் விமர்சிக்கத் தயங்குவதில்லை. யாராவது ஒருவர் பிழைவிட்டால் அது நானாக இருக்கட்டும் ஏன் சில்லையூர் செல்வராசனாக இருந்தால் கூட அவர் தொலைபேசி அழைப்பெடுத்துச் சொல்லுவார். எனக்கு ஒரு பிரபல எழுத்தாளர் பெண்மணி சொன்னார். ஒருநாள் இரவு பதினோரு மணி அளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அது மாவை வரோதயன் தான், "நீங்கள் காலையிலே நிகழ்ச்சியிலே சொன்ன கருத்து தப்பானம்மா நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதென்று" இரவு பதினொரு மணிக்கு அவரோடு மிகக் காத்திரமாக உரையாடிக் கொண்டிருந்தாராம். பொறுக்க முடியாமல் அந்த அம்மா சொன்னாராம் "தம்பி! இப்போது இரவு பதினோரு மணி இப்போது பேச நேரம் பொருத்தமாக இல்லை, நாளைக்கு அழைப்பெடுங்கள் நாளைக்குப் பேசுவோம் என்று சொல்லுகின்ற அளவுக்கு இருந்ததாம்.
அதேபோன்று வானொலியின் பக்கம் மிகவும் கவனத்தைச் செலுத்தினார். வானொலியிலே தமிழ்ப் பிழைகள், தமிழ்க்கொலைகள் அவர் அடிக்கடி என்னிடம் தொலைபேசி அழைப்பெடுத்து "அண்ணா! இப்படி பேசுகிறார்களே என்ன செய்வது நாங்கள், நான் இதைப்பற்றி கட்டுரை எழுதப்போறேன்" என்று தொடர்ச்சியாகத் தன் எதிர்ப்புக் குரலைக் காட்டிக் கொண்டே வந்தார்.
இலக்கியம் தொடர்பாக எந்தத் தவறு நிகழ்ந்தாலும் அது தொடர்பாகத் தனது எதிர்ப்புக் குரலைக் காட்டுகின்ற ஒரு பாங்கு அவரிடம் இருந்தது.
அதே போன்று இன்னொரு சம்பவத்தைச் சொல்லலாம். வானொலியிலே ஒரு பெண்மணி பணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்திலே அவர் வானொலி நிலையத்தை நடத்துகின்ற பாங்கை வைத்துக் கொண்டு மாவை வரோதயன் நகைச்சுவையாக ஒரு அம்மானை பாடியிருந்தார். அது பத்து பதினைந்து பக்கத்தில் வரக்கூடிய ஒரு நூலாக வெளியிட்டு அதற்கு "வாணி அம்மானை" என்று நினைக்கின்றேன், சரியாக எனக்கு அந்தப் பெயர் தெரியவில்லை. அதில் மிகச்சிறப்பு என்னவென்றால் அந்தப் பெண்மணி செய்கின்ற பணிகளை கிண்டலடித்து மிகவும் நாசுக்காக அம்மானை வடிவத்திலே பாடியிருந்தார். அதில் ஆகச் சிறப்பு என்னவென்றால் அந்த அம்மானை யாருக்கு எதிராகப் பாடப்பட்டதோ அந்தப் பெண்மணியிடமே முன்னுரை வாங்கி அந்தப் புத்தகத்திலே போட்டிருந்தார். அந்தப் பெண்மணிக்கு அவர் என்ன பாடியிருக்கின்றார் என்று தெரிந்ததோ தெரியவில்லை. அந்தப் பெண்மணி தனக்கு எதிராகப் பாடப்பட்ட அம்மானைக்கே முன்னுரை வழங்கியிருந்தார் என்பது மிகச்சிறப்பான ஒரு விஷயம்.
மாவை வரோதயனின் "வேப்பமரம்" என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. உண்மையில் அவர் சிறுகதைகளில் நாட்டம் கொண்டது வேல் அமுதன் அவர்கள் யாழ்ப்பாணத்திலே நடாத்திய மகவம் என்ற ஒரு இலக்கிய அமைப்பிலே நீண்டகாலம் இருந்தார். இந்த மகவம் அமைப்பு சிறுகதைகளை எழுதுகின்ற முறைகளை இளம் எழுத்தாளர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அதே போன்று ஒவ்வொரு வாரமும் பத்திரிகைகளில் வெளிவருகின்ற சிறுகதைகளை எடுத்து ஓவ்வொரு மாதமும் அவற்றுக்கு பரிசு வழங்குகின்ற அமைப்பாக இந்த வேல் அமுதனின் மகவம் அமைப்பு இருந்து வந்தது. அதிலே அவர் கொஞ்சக்காலம் ஈடுபட்டு அங்கே சிறுகதைகள் எழுதுகின்ற நுட்பங்களைத் தெரிந்து கொண்டார். அவர் ஒருமுறை சொல்லியிருக்கிறார் "சிறுகதை எழுதினால் இது சிறுகதை இல்லை என்று சொல்லுகிறார்களே தவிர எப்படிச் சிறுகதை எழுதுவதென்று எவருமே சொல்லித் தருவதில்லை" என்று அவர் சொல்லியிருக்கிறார். இவரின் வேப்பமரம் என்ற சிறுகதைத் தொகுதியை தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டது.
தேசியக் கலை இலக்கியப் பேரவையின் மாசிகையான தாயகம் பத்திரிகையிலே "வலிகாமம் மைந்தர்கள்" என்ற தலைப்பிலே ஒரு தொடர் எழுதி வந்தார். வலிகாமம் பகுதியிலே வாழ்ந்த மனதைக் கவர்ந்த நபர்கள், பாத்திரங்கள் பற்றி தொடர்ச்சியாக அதில் எழுதி வந்தார். அதைத் தவிர ஐம்பெருங்காப்பியங்களை வைத்துக் கொண்டு அவர் நாடகங்களை எழுதியிருக்கிறார். அவற்றை வினோதன் கலை இலக்கிய மன்றம் என்ற திருமதி ஜெயந்தி வினோதன் அவர்கள் ஒவ்வொரு மாதமும் நடத்திய நிகழ்விலே அந்த நாடகங்கள் அரங்கேற்ப்பட்டிருக்கின்றன. அதைத் தவிர சில வில்லுப்பாட்டுக்களை எழுதி தானே பாடி அவற்றை அரங்கேற்றியும் இருக்கின்றார்.
இப்படி பன்முகப்பட்ட ஆற்றல்கள் கொண்ட மனிதராக அவர் இருந்திருக்கின்றார். இந்த வில்லுப்பாட்டுக்கள், நாடகங்கள் என்பவற்றை வெளியிடுவதற்குத் தயாராக இருந்தார். ஆனால் முடியாமல் போய் விட்டது. தேசியக் கலை இலக்கியப் பேரவையின் சோ.தேவராஜா அவர்கள் அது தொடர்பாக கவனமெடுத்திருக்கிரார். அவற்றை வெளியிடுவதற்காக முன்வந்திருக்கின்றார்.
சில மாதங்களுக்கு முன்னர் மாவை வரோதயன் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து நாங்கள் எல்லோரும் கவலைப்பட்டோம். அவரை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் பணியை சோ.தேவராஜா தம்பதியினர் இறங்கியிருந்தார்கள். அதற்காக இலக்கிய நண்பர்கள் நாங்கள், நலன் விரும்பிகள் எல்லோரும் எங்களால் முடிந்த அளவு பணத்தைத் திரட்டிக் கொடுத்தோம். தேவராஜா அவர்கள் சில நாடகங்களைக் கூட அரங்கேற்றி அந்த நாடகங்களின் மூலம் கிடைத்த பணத்தைத் திரட்டி இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அங்கே அவருக்கு சத்திர சிகிச்சை செயதார்கள். அதனாலும் அவரால் குணமடைய முடியாமல் போய் விட்டது. பிறகு இடத்தை மாற்றிப் பார்த்தால் குணமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மாவை வரோதயனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் கொஞ்சம் குணமடைந்து வந்த வேளை திடீரென அந்த நோய் முற்றி நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கே இறந்ததாகச் செய்தி கிடைத்திருக்கிறது.
மாவை வரோதயனைப் பற்றிச் சொல்வதானால் நிறையச் சொல்லலாம். அவரது நேர்மையான குணத்தைப் பற்றி , அவரது விமர்சனப் பாங்கைப் பற்றிச் சொல்லலாம். அவரது இன்னமும் வாழ்வேன் கவிதைத் தொகுதியில் இருந்து ஒரு கவிதையைச் சொல்லி என் பகிர்வை நிறைவு செய்கின்றேன்.
உள்ளதும் கெட்டு உடுதுணியோடு
ஊரினை விட்டு ஓடி வந்தேன்
பள்ளமும் மேடும் பகடையும் தாண்டி
பாழினில் மூழ்கி மீண்டு வந்தேன்!
நற்றொழில் தேடி நகரினில் சேர்ந்து
நாரென இற்று வாடி நின்றேன்
புற்றுரை தேரை படுதுயர் வாழ்வில்
பேறென இங்கு ஏது கண்டேன்
நித்தமும் நோகும் வயற்றினுக்காக
நேர்வதை செய்து வாழுகின்றேன்
மத்தென ஆட்டி மதி நிறைத்தாரும்
மானிடப் பணியைத் தேர்வதில்லை
சுற்றமும் சூழல் சுகமுற வாழ்ந்தும்
சோதனை எந்தன் தோள்களிலே
கற்றது கானல் கனலென ஆயும்
காசெனைச் சேரப் போவதில்லை
உண்ணவும் ஓய்ந்து உறங்கவும்
ஊர்க்கதை பேச நேரமில்லை
எண்ணவும் எண்ணி எழுதவும்
ஆற்றலைக் காட்டப் பாதையில்லை
எத்தனை தோல்வி எனை மறைத்தாலும்
ஆசைகள் நெஞ்சில் ஆழ வைத்தே
இத்தரை மீதில் இன்னமும் வாழ்வேன்
ஈற்றினில் மேன்மை காணுமட்டும்! - மாவை வரோதயன்
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையில் வந்த மரண அறிவித்தல்
சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன்
(பொதுச்சுகாதாரப் பரிசோதகர், கொழும்பு, கவிஞர் மாவை வரோதயன்)
மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் தற்போது உடு விலில் வசித்தவருமான சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன் (பொதுச் சுகாதாரப் பரிசோதகர், கொழும்பு) நேற்று (29.08.2009) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.அன்னார் சிவகடாட்சம்பிள்ளை தேவி (உரும் பிராய்) தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வர்களான குமாரகுலசிங்கம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் ஜெயகௌரி யின் (புள்ளிவிபர உத்தியோகத்தர், மாவட்டச் செயலகம், யாழ்ப் பாணம்) அன்புக் கணவரும் காலஞ்சென்ற ஆரணி, அருணன் (மானிப்பாய் மகளிர் கல்லூரி, தரம் 1 மாணவன்), சுஹாபரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவகுமாரன் (திருகோணமலை), சிவானி (சுவிஸ்), சியாமினி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோ தரனும் ஜெயக்குமாரி (ஜேர்மனி), தயாபரன் (கனடா), ஈஸ்வரன் (சுவிஸ்), கிருபாகரன் (உடுவில்), பிரபாகரன் (உதவிப் பதிவாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), ஜெகதீஸ்வரன் (உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (30.08.2009) ஞாயிற் றுக்கிழமை மு.ப. 11 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயா னத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
ச.ஜெயகௌரி (மனைவி).
"குமார் இல்லம்",
உடுவில் தெற்கு, சுன்னாகம்.
021 4591101, 0777714556.
அமரர் மாவை வரோதயனின் படைப்புக்களை ஈழத்து நூலகத்தில் காண
இன்னமும் வாழ்வேன் - கவிதைத் தொகுதி
வேப்பமரம் - சிறுகதைத் தொகுதி
நன்றி:
ஒலிப்பகிர்வை வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்
மரணச் செய்தியை எடுத்து வந்த செ.பொ.கோபிநாத் வலைப்பதிவு
ஈழத்து நூலகம் இணையம்
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை
Sunday, August 30, 2009
Monday, August 10, 2009
ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு
கழிந்து போன யூலை 7 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான குடும்பங்களில் எதையெல்லாம் மறந்திருப்பார்களோ தெரியாது ஆனால் அந்த நேரம் Channel 7 தொலைக்காட்சியின் The Zoo நிகழ்ச்சியை மட்டும் மறந்து தொலைத்திருக்கமாட்டார்கள். அது வேறொன்றும் இல்லை. அன்று தான் தன் வயிற்றில் 22 மாதங்களாச் சுமந்து வந்த தன் பிள்ளையை Thong Dee ஈன்ற பொழுதைக் காட்டிய விவரண நிகழ்ச்சி அது. அட இதுக்குத் தானா என்று நினைக்கலாம், ஆனால் இந்த குழந்தை யானை அவுஸ்திரேலியர்களின் கவனத்தையும் நேசத்தையும் ஈர்க்க ஒரு விசேஷ காரணம் இருந்தது.
Thong Dee தாய்லாந்தின் வீதி யானையாக இருந்து சிட்னியில் உள்ள Taronga Zoo வுக்கு கொண்டுவரப்பட்டவள். இவள் தவிர Porntip, Pak Boon, Tang Mo ஆகிய பெண் யானைகளும் இங்கே உண்டு. 22 மாதங்களாக தன் வயிற்றில் கருவைச் சுமந்த Thong Dee ஐ இந்த சரணாலயத்தின் பாதுகாவலர்கள் கண் போல் காத்தனர் என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் இவள் நல்லபடியாக ஒரு பிள்ளையை ஈன்றால் அதுதான் அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய இனத்து யானை என்ற பெருமையைப் பெறும் என்பதேயாகும்.
யூலை 4 ஆம் நாள் பிறந்தது, Thong Dee இன் வயிற்றில் 96 கிலோவாக இருந்த பாரம் இறங்கும் நாள் அது. Pak Boon, Tang Mo என்ற மற்றைய பெண் யானைகள் தம் கூண்டுகளில் இருந்து Thong Dee இன் போக்கில் ஏற்பட்ட விசித்திரமான மாற்றங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தன. அதிகாலை 3.08 ஆகிறது Thong Dee பெருங்குரலெடுத்து அலறுகிறாள். சரணாலயத்தின் யானைகள் பிரிவின் மேற்பார்வையாளர்களும் மருத்துவரும் Thong Dee ஐ சாந்தப்படுத்த முடியாது திணறுகின்றார்கள். மெல்ல மெல்ல Thong Dee இன் உடம்பிலிருந்து வருகின்ற அந்த உயிர்ப் பொதி தொப்பென்று கீழே விழுந்து அசைகின்றது. அதன் உடம்பெல்லாம் கர்ப்ப நீரால் குளிப்பாட்டிய பீய்ச்சல் பரவியிருக்கின்றது. இவ்வளவு நாள் தன்னில் இருந்த பாரம் இறங்கிதே என்பதை விட அந்த நூறு கிலோக் குழந்தை தன் உடம்பில் இருந்து வெளியேற வேதனையால் Thong Dee துடித்துக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்து அலறினாள். தான் கீழே போட்ட அந்தக் குட்டியை நோக்கி அவள் வருவது எதற்காக? குட்டியைக் கொல்லவோ என்று பதைபதைக்கின்றார்கள் கூண்டின் உள்ளே இருக்கும் அந்தக் கண்காணிப்பாளர்கள். அந்தக் குட்டியை இவள் சேதாரப்படுத்தக்கூடாது என்ற கவனமும் எச்சரிக்கையும் அவர்களை ஆட்கொள்கிறது. கால்களை மட்டும் அசைத்து மெல்ல எழும்ப எத்தனிக்கும் அந்த ஆண் யானைக்குட்டியின் சின்னத் தும்பிக்கை ஆட Thong Dee மெல்லப்போய் அந்தச் சிறுதும்பிக்கையினைத் தன் தும்பிக்கையால் அலம்பிக் கொண்டே மெல்ல இறுக்கிக் கொண்டாள். அதுவரை சோர்வும், எதிர்பார்ப்பும் கலந்த கலவையாய் இருந்த சரணாலய கண்காணிப்பாளர்கள் ஆறுதல் கொள்கிறார்கள். Taronga Zoo வின் இயக்குனர் Guy Cooper கண்களில் இருந்த நித்திரைக் கலக்கத்தை மீறி ஆனந்தக் கண்ணீர் பரவிக் கண்களைச் சிவப்பாக்கி நிற்கின்றது.
Thong Dee இன் கூண்டுக்குள் வந்திருந்த புதிய விருந்தாளி யார் என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுகார யானைகள் Pak Boon, Tang Mo அந்தக் குட்டியை கூண்டுக்குள்ளால் தும்பிக்கை விட்டுத் தடவிப்பார்க்கிறார்கள். யானை மேற்பார்வையாளர்கள் இந்தப் பெண்களுக்கு இனி எப்படியெல்லாம் இந்தக் குழந்தையோடு மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார்கள். Thong Dee இன் முலைகளைக் காட்டி பால் குடிக்குமாறு அந்தக் குட்டிக்குப் பழக்குகிறார்கள். ருசி கண்ட பூனை போல ஒரு நாள் பழக்கத்தில் பால்குடித்துப் பழிய அந்தக் குட்டியன் சதா எந்த நேரமும் தாயின் மடி தேடித் தாகம் தீர்க்கிறான். சும்மாவா ஒரு நாளைக்கு இவனுக்குத் தேவைப்படும் பால் 12 லீட்டர் ஆச்சே. சில நேரங்களில் இவனின் அரியண்டம் தாங்க முடியாமல் மென்மையாக விரட்டும் தாயைத் தன் முதுகால் இட்டுத் தள்ளி கூண்டின் ஒரு மூலையில் வைத்துப் பால் குடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தையும் பழகிக்கொண்டான் அந்தக் குட்டி யானை. நேரே பார்த்தபடி பின்னுக்குப் பின்னுக்குப் போகும் விசித்திரமான பழக்கத்தையும் பழகிக் கொண்டான், இவன் தந்தை Gung இற்கு இதே மாதிரியான பண்பு இருந்ததைச் சொல்லி ஒப்பிட்டுப்பார்த்தார்கள். ANZ போன்ற முக்கிய வங்கிகளின் பணக்கொடுப்பனவு இயந்திரத்தின் (ATM)கணினித் திரையில் கூட "அவுஸ்திரேலியா ஈன்றெடுத்த முதல் ஆசிய யானைக் குட்டியை வரவேற்கிறோம்" என்று அமர்க்களப்படுத்தினார்கள்.
எல்லாம் சரி, அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானை ஆச்சே என்ன பெயர் வைக்கலாம்? அதற்கும் ஒரு வழி ஏற்படுத்தினார்கள் சரணாலயத்தினர். அவுஸ்திரேலியாவின் எல்லாத் தினசரிகள்,வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தக் குட்டி யானைக்குப் பெயர் வைக்கும் போட்டி ஒன்று வைத்தார்கள். அதுவும் சும்மா இல்லை , போட்டியில் சிறந்த பெயரை வைத்துக் கவர்பவருக்கு தாய்லாந்து சென்று வர விமானச் சீட்டு என்றும் கவர் போட்டார்கள். முப்பதாயிரம் பேருக்கு மேல் இந்தப் பெயர்வைக்கும் போட்டியில் கலந்து கொண்டார்கள். யூலை 27 ஆம் திகதி இந்தக் குட்டிக்கு என்ன பெயர் கிடைக்கப் போகின்றது என்று எல்லோரும் ஆவலோடு இருக்க Blayney என்பவருக்குத் தான் பெயர் வைத்த அதிஷ்டம் கிட்டியது, கூடவே அவரின் குடும்பம் தாய்லாந்தின் Lampang யானைச் சரணாலயம் சென்று வரத் தேர்வானது. Blayney வைத்த பெயர் தான் என்ன? “Luk Chai” என்பது தான் இந்தக் குட்டிக்குக் கிடைத்த பெயர் Look- Chai என்று உச்சரிக்க வேண்டிய அந்தப் பெயரின் அர்த்தம் தான் என்ன? தாய்லாந்தின் மரபுரிமை அர்த்தப்படி அந்தப் பெயரின் அர்த்தம் என் மகன் (my son) என்பதாம்.
பிறந்து மூன்று கிழமை கழித்துப் பெயர் வைக்கப்பட்ட “Luk Chai” அந்த மூன்று கிழமைக்குள் நிறையப் பாடங்களைப் படித்து முடித்து விட்டான். தன் தாயுடனும், மற்றைய சித்திமார் Pak Boon, Tang Mo கூட உலாவப் போகும் போது முந்திரிக்கொட்டையாய் அவர்களை விலக்கி விட்டு தான் ஓடிக்கொண்டே முந்திப் போவது போன்ற கெட்ட பழக்கம இவனிடம் இருந்தது, அதை நயமாகச் சொல்லி மெதுவாக குழப்படி செய்யாமல் போக வேண்டும் என்று பயிற்சியாளர்கள் சொல்லிக் கொடுக்க அதைக் கேட்டு நடந்தான் Luk Chai. மண் சகதியில் நீர்க்குளியல் எடுப்பதென்றால் Luk Chai இன் சாதிக்கு (யானைகளுக்கு) கொள்ளைப் பிரியம். இதென்ன புதிய அனுபவமாக இருக்கிறது என்று ஆரம்பத்தில் கொஞ்சம் நெளிந்தவன் பின்னர் சேற்றுக் குளியலை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அளவுக்கு அந்த விளையாட்டில் ஒன்றிப் போனான். காலை முழுவதும் நீர்க்குளியல் அடித்துக் களைத்த இவர் மெல்லச் சோர்த்து போய் கீழே பொத்தொன்று விழுந்து தூங்கிப் போகும் அழகே தனி. சில வேளைகளில் நின்று கொண்டே "ஸ்ஸ்ஸ்யப்பா கண்ணைக் கட்டுதே" என்று "குட்டி" தூக்கம் போடுவதுண்டு.
கறுத்த நிறத்தில் கிடைத்த பெரும் உருண்டைப் பந்தை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அந்தப் பந்தில் வயிற்றில் அமுக்கி அமுக்கிப் பார்த்தான். தினமும் 12 லீட்டர் பால் குடிக்கிறானே இவனின் நிறை எவ்வளவாய் இருக்கும், அந்த நிறை இவனின் வளர்ச்சிக்கு ஏற்றதா என்றெல்லாம் கண்காணிப்பாளர்கள் சோதனை செய்ய வேண்டிய கடனும் இருந்தது. நிறை அளக்கும் இயந்திரத்தைக் கொண்டு போய் அவன் முன் வைத்தால் ஒரு சுற்றுப் பார்த்து விட்டு சரி எதுக்கும் ஏறி நிற்போம் என்று ஏறிய அவனின் இன்றைய நிறை 132 கிலோவாம். இப்போதெல்லாம் அந்த நிறை அளக்கும் இயந்திரத்தில் நீண்ட நேரம் ஏறி நின்றால் என்ன என்று இவன் யோசித்துச் செய்யும் அடம்பிடிப்புக்களும் நடப்பதுண்டாம்.
Luk Chai இற்கு என ஒதுக்கிய நீர்த்தொட்டியில் பயிற்சி கொடுக்க வந்த முதல் நாளன்று தன் முன் இரண்டு கால்களையும் மட்டும் தொட்டியில் வைத்துக் கொண்டே இனி என்ன செய்யலாம் என்று யோசித்துத் திணறியவன் நாளடைவில் நீர் யானையோ என்று எண்ணும் அளவுக்கு நீர்மூழ்கி மகிழ்ந்தான். தன்னுடைய தாய் Thong Dee மற்றைய சித்திமார் Pak Boon, Tang Mo எல்லோரும் ஏதோ பச்சை நிற வஸ்துவை வாயில் தள்ளுகிறாகளே இதுவும் பசியைப் போக்குமா என்றெண்ணி ஒரு நாள் அவர்களுக்குப் பக்கமாகப் போய் தானும் கீழே கிடந்த பச்சிலை,குழைகளை வாய்க்குள் தள்ளப்பார்த்தால் அது பழக்கமில்லாதவன் கையில் கிடந்த சீனத்து chopstick போல மெல்ல நழுவ இவன் தும்பிக்கையைத் தான் வாயில் திணிக்க முடிந்தது. இனிமேல் இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்று இன்னும் தன் தாய்ப்பாலின் மகத்துவம் தேடிப் போகிறான் இவன். தாயின் மடியில் பால் குடிக்கும் அழகே தனி. கொஞ்ச நேரம் ஒரு காலை அந்தரத்தில் தூக்கிக் கொண்டே கொஞ்ச நேரம் பால் குடித்து
விட்டு பிறகு இந்தக் காலை நிலத்தில் நிறுத்தி விட்டு அடுத்த காலைத் தூக்கியவாறே தாகம்/பசி தீர்க்கிறான்.
தன் தாயிடம் மட்டுமன்றி சித்திமார் Pak Boon, Tang Mo வுடனும் கூட நேசம் கொள்கின்றான், அவர்களும் இவன் குழந்தை தானே என்று பரிவாக நடப்பதுண்டு. ஆனால் Luk Chai இந்த அனுகூலத்தை அளவுக்கதிகமாகவே பயன்படுத்தித் தொலைப்பதுண்டு. சித்தி Tang Mo படுத்திருக்கும் போது தன் முதுகால் நெம்பித் தள்ளி "எழும்பு எழும்பி விளையாட வா" என்று தொல்லைப்படுத்துவான். தன் தாய் மர்றும் சித்திமாருக்குக் கீழே ஒளிந்து உலாவுவதும் இவனுக்குப் பிடிக்கும்.
மண்மேட்டுத் திட்டியைக் கண்டதும் எவரெஸ்ட் சிகரம் ஏறுபவன் போல ஓடிப்பாய்ந்துப் போய் அதில் ஏறிக் கவிழ்ந்து விழுந்து இவன் அழுத கதை கூட உண்டு. அதற்குப் பிறகு தாய்க்காறி இந்த மண்மேட்டுப் பக்கம் Luk Chai போக விடுவதில்லை. தான் பெற்ற கலைகளை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக்கொடுக்கிறாள் Luk Chai இன் தாய் Thong Dee மெல்ல மெல்லச் சொல்லிக் கொடுக்க கிளிப்பிள்ளை போல பயின்று கொண்டிருக்கிறான் இவன். நீச்சல் குளத்தில் நீரை மொண்டு மெல்லப் பீய்ச்சியடிப்பது, பந்தை அமுக்குவதற்கு மட்டுமல்ல மெல்லக் காலால் உதைத்தால் தொலைவுக்குப் போகும் என்பதையும் அறிந்து கொண்டான். சேற்று மண்ணில் விளையாடுவது மட்டும் முக்கியமல்ல மெல்ல இருந்து சேற்றுக் குளியலைச் செய்வது கூட அவசியமானது என்றெல்லாம் இப்போது அவனுக்குத் தெரியும். இப்போது Luk Chai பிறந்து ஒரு மாதம் கடந்து விட்டது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயாக Thong Dee யும் அவன் சித்திமாரும் Pak Boon, Tang Mo பார்க்க "நான் வளர்கிறேனே மம்மி" என்று சொல்லாமற் சொல்லி Luk Chai வளர்கிறான் பெரியவனாக.
0000000000000000000000000000000000000000000000000000000000000
அது ஒரு ஏழு, எட்டு வயதிருக்கும் எனக்கு. என் ஆரம்பப் பள்ளியான அமெரிக்கன் மிஷனில் பரிசளிப்பு விழா வருகுதாம். எங்கட வகுப்பில் பேச்சுப் போட்டி, வாசிப்புப் போட்டி, நல்ல வடிவா எழுதுறவைக்கு எண்டெல்லாம் போட்டிகள் வைக்கினம். விடுவனே நான், இரவிரவா கத்திக் கத்திப் பேச்சுப் போட்டியைப் பாடமாக்க முனைய என்ர அப்பாவோ அதை எப்படி ஏற்ற இறக்கத்தோட பேசவேணும் எண்டும் சொல்லித் தருகினம். போட்டி நாள் வந்தது. நானும் மனப்பாடம் செய்ததை கிறுகிறுவெண்டு ஒப்புவிக்கிறன், நான் பேசிக்கொண்டே போக காதுக்குள்ள அப்பா "ஏற்ற இறக்கத்தோட சொல்லவேணும்" எண்டது திரும்பத் திரும்ப வருகுது. அடுத்த நாள் ரீச்சர் ஒழுங்கு முறைப்படி ஆர் ஆருக்கெல்லாம் பரிசு கிடைக்கும் எண்டு அறிவிக்கிறா. எட, பேச்சுப் போட்டியில எனக்குத் தான் முதற் பரிசு.
பரிசளிப்பு விழா நாளும் வந்தது. அப்ப வரைக்கும் தெரியாது என்ர சித்தப்பா தான் எனக்கு பரிசு தருவார் எண்டு. அவர் அந்தப் பள்ளிக்கூடத்தின் பழைய மாணவர், தொழில் அதிபர் என்ற பெருமை வேறு அவரை மேடைக்கு இழுத்து வந்தது. மேடையில் சித்தப்பாவின் கையால் பரிசை வாங்குறேன்.
பிறவுண் பேப்பரால் சுத்திய அந்தப் பரிசைப் பிரித்துப் பார்த்தால் "யானை", மஸ்கோ முன்னேற்றப்பதிப்பகம் என்று போட்டிருந்தது அந்தக் கதைப்புத்தகம். அப்போதெல்லாம் சோவியத் யூனியன் என்ற நாடு இருந்த போது தமிழில் எல்லாம் இப்படியான ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் எல்லாம் வரும். சோவியத் நாடு எண்ட 2 ஆனந்த விகடன் சைஸ் சஞ்சிகை கூட வந்தது.
"யானை" என் விருப்பத்துக்குரிய புத்தகமானது. ஏனென்றால் எனக்குக் கிடைத்த முதல் பரிசு நீ தானே. காட்டில் இருந்து களவாக ஓடிவரும் யானை நகரத்தில் வாழும் சிறுவன் ஒருவனின் நட்புக் கிடைத்து இருக்கையில் ஒரு நாள் அந்தச் சிறுவனின் பள்ளிக்குத் தானும் போகவேண்டும் என்று அடம்பிடித்துப் போனது மாத்திரம் இல்லாமல் அங்கே இருந்த சோக்கட்டியையும் கடித்துப் பார்த்தால் வாயெல்லாம் வெந்து, ஐயோ இந்த ஊரே வேண்டாம் என்று ஓடி விடுமாம்.
000000000000000000000000000000000000000000000000000000000000000
அன்று ஆரம்பித்தது என் யானை ஆசை ஆனைக்குட்டியின் படம் வந்தால் என் முகத்தில் ஒளியைக் காணலாம். சின்னச் சின்ன யானைக்குட்டிகளின் சிலைகள் என் முன்னே வீற்றிருக்க தட்டச்சிக் கொண்டிருக்கிறேன் நான். உலகில் நான் நேசிக்கும் முதல் விருப்பத்துக்குரிய யானைக்குட்டியே உன் டயறியை எழுதியதில் பெருமை அடைகின்றேன்.
0000000000000000000000000000000000000000000000000000000000000000
பிற்குறிப்பு: “Luk Chai” என்ற யானைக்குட்டி பிறந்த தினம் முதல் அதன் படிநிலை வளர்ச்சிகளை Taronga Zoo இன் இணையத்தில் டயறிக்குறிப்பாகப் பதிந்து வைக்கிறார்கள், அந்த விபரங்களை நிதமும் வாசித்துத் தலைக்கேற இந்தப் பதிவை எழுதி முடித்தேன். இதில் “Luk Chai” பற்றிச் சொன்ன தகவல்கள் யாவும் உண்மையே.
படங்கள், தகவல் உதவி: Taronga Zoo இணையத்தளம்
“Luk Chai” யானைக்குட்டியின் பிறப்பினைக் காட்டும் காணொளியை ரசிக்க