அதிகபட்சமாக தன் சொந்த ஊரை விட்டு விலகி இருந்தது ஆசிரியப்பணிக்காக இலங்கையின் மலையகப் பகுதியான ஹட்டனில் இருந்ததும், அதற்குப் பின்னர் 95 ஆம் ஆண்டின் இடப்பெயர்வின் போது சாவகச்சேரி என்ற பகுதியில் இருந்ததும் தான் அவரின் உச்சபட்ச சாதனை.
"ஐயா! நீங்கள் பின்னடிக்கு இந்த நாட்டுக்கு வந்து சீவிப்பீங்களோ?"
"எங்கட நாட்டுச் சுவாத்தியம் உங்கட அவுஸ்திரேலியாவில் இருக்குதோ"
"அங்கை ஆட்களைத் திருப்பி அனுப்பினமாம் நீங்களும் வரலாம் தானே"
இப்பிடி அடிக்கடி கேட்டு என் மனதில் என்ன ஒட்டியிருக்கிறது என்று ஆழம் பார்ப்பார் அவர். ஐயா, தம்பி என்று மரியாதையான வார்த்தையோடு தான் சிறுவயதில் இருந்து அழைக்கும் பழக்கம் அவருக்கு.
கூழைக் குடிச்சு வாழ்ந்தாலும் சொந்த ஊரில் இராசா மாதிரி இருக்கலாம் என்று பெருமையடிப்பார் 20 ஆண்டுகளைத் த்ச்ன் புலம்பெயர்வுச் சூழலில் மூழ்கடித்துவிட்ட என்னைப் பார்த்து.
ஒரு ஏழைக் கமக்காரத் தந்தைக்கு ஐந்து பெண் சகோதரிகளோடு ஒரேயொரு ஆண் என்று வாய்த்தவர் அவர். கஷ்டப்பட்டுப் படித்து ஆசிரியத்தொழிலைக் கையிலெடுத்துப் பணிக்கு அவர் சேரவும் அவரின் தகப்பனார் காத்திருந்தது போலப் பொறுப்பைச் சுமத்திவிட்டுக் காலமாகிவிட்டார். அப்பாவைப் பொருத்தவரை தன்னுடைய வாழ்நாளின் முக்கால் பங்கை தோட்டத்துச் செம்ப்பாட்டு மண்ணிலும் பங்கு போட்டுக் கொண்டவர். விடிகாலை மூன்று, நான்கு மணிக்கே எழுந்து கிட்டத்தட்ட அரைமணி நேரம் தொலைவில் இருக்கும் தோட்டம் காணத் தன் சைக்கிளில் இருளைக் கிழித்துப் போட்டுவிட்டு இறங்கிவிடுவார். தோட்டத்தில் குழைப்போடுதலில் தொடங்கி வெயிலுக்கு முந்திப் பயிருக்கு நீர் இறைக்க வேண்டும் என்ற முனைப்போடு வருஷத்தின் பருவகாலத்துக்கேற்ப அவரின் நிகழ்ச்சி நிரல் இருக்கும். காலை ஆறரை மணிக்கெல்லாம் வீடு திரும்பி, காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி அறிக்கையோடு குளியல், சாப்பாட்டோடு தன்னுடைய ஆசிரியப் பணிக்குக் கிளம்பிவிடுவார். மாலை மீண்டும் ஒருமுறை தோட்டத்துக்குச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, இணுவில் கந்தசுவாமி கோயிலின் முற்றத்தில் இளைப்பாறிவிட்டு வீடு திரும்பி வெரித்தாஸ், பிபிசி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் இரவின் மடியில் வரும் வரை இயங்கிவிட்டு அந்த நாளை முடிப்பார். இதுவே வார இறுதி நாளாக இருந்தால் காலையின் தோட்ட வேலை நீளும். அம்மா ஆக்கித்தந்த சாப்பாட்டோடு நானும் ஒரு எட்டு அங்கே போய் வர வசதியாக இருக்கும்.
" உதேன், கட்டிவச்ச குழையெல்லாம் அப்பிடியே இருக்குது, ஏன் சாப்பிடேல்லை? இல்லாட்டால் இந்தா, இந்தக் கஞ்சியைக் குடி" அப்பா ஆட்டுடன் கதைத்துக்கொண்டிருப்பார்..அந்த ஆட்டுக்கு லட்சுமி என்பது பெயராம்.
" அப்பா! வயசு போன காலத்தில ஏன் உந்த ஆடு வளர்ப்பு?" அங்கலாய்ப்போடு நான்.
" தம்பி! நீங்களெல்லாம் இங்கை இல்லாத குறைக்கு ஒரு ஆறுதலுமாச்சு" என்று மெல்லச் சிரிப்போடு என் அப்பா சொன்னார் அப்போது.
" உதேன், கட்டிவச்ச குழையெல்லாம் அப்பிடியே இருக்குது, ஏன் சாப்பிடேல்லை? இல்லாட்டால் இந்தா, இந்தக் கஞ்சியைக் குடி" அப்பா ஆட்டுடன் கதைத்துக்கொண்டிருப்பார்..அந்த ஆட்டுக்கு லட்சுமி என்பது பெயராம்.
" அப்பா! வயசு போன காலத்தில ஏன் உந்த ஆடு வளர்ப்பு?" அங்கலாய்ப்போடு நான்.
" தம்பி! நீங்களெல்லாம் இங்கை இல்லாத குறைக்கு ஒரு ஆறுதலுமாச்சு" என்று மெல்லச் சிரிப்போடு என் அப்பா சொன்னார் அப்போது.
ஒருமுறை என் அலுவலக வேலை நிமித்தமாக ஜப்பான் நாட்டுக்குச் சென்றுவிட்டு தொலைபேசி மூலம் அப்பாவுடன் பேசுகிறேன்,
"அப்பா! ஜப்பான்காறர் நேரக்கணக்கில்லாமல் மாடு மாதிரி உழைக்கிறாங்கள்" என்றேன்.
"ஏன் தம்பி நாங்கள் மட்டும் குறைச்சலோ நாங்களும் அப்பிடித்தானே" என்று யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் பிரதிநிதியாகக் குரல் கொடுத்தார் அப்பா.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அப்பா தன் தோட்ட வேலைக்காக இறைக்கும் பணமும், வருவாயும் கையும் கணக்கும் சரியாக இருக்கும். சிலவேளை யுத்த காலத்தில் எல்லாம் மண்ணெண்ணை விலை அசுர வேகத்தில் உயர்ந்த போதெல்லாம் தோட்ட அறுவடை நஷ்டமாகத் தான் இருக்கும். ஆனாலும் விடாமல் அடுத்த ஆண்டும் மண்வெட்டியோடு தோட்டத்துக்குள் இறங்கிவிடுவார்.
மதிப்பு மிக்க வாத்தியாராக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவு இருக்காது அவரிடம். ஒருமுறை பணக்கார உறவினர் ஒருவர் அப்பாவை வாத்தியார் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு வாருங்கள் இதை விட மூன்று மடங்கு சம்பளத்தோடு பெரிய உத்தியோகம் தருகின்றேன் என்றவரைத் திட்டித் தீர்த்துவிட்டு வந்துவிட்டார் அப்பா. தன்னுடைய உழைப்புக்கேற்ற அங்கீகாரம் தான் செய்யும் பணியில் இருந்து தான் வேண்டுமென்ற ஓர்மத்தின் வெளிப்பாடு அது.
பிரமச்சாரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நால்வகை நெறிகளை இந்து நாகரிகம் பாடம் படித்தபோது வராத தெளிவு அப்பாவை இப்போது பார்த்தபோது இன்னும் தெளிவாகப் புரிகிறது. அசைவ விரும்பியான அவர் இருபது வருடங்களுக்கு முன்னரேயே அந்தச் சுவையை ஒதுக்கி வைத்துவிட்டார். மனம் ஒத்துழைத்தாலும் உடம்பை நோக வைக்கக்கூடாது என்று இப்போது தோட்ட வேலையையும் நிறுத்திவிட்டார். இப்போது அவரின் முழு நேரப்பணியே யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகளோடு மூழ்கியிருப்பது. சைக்கிளை எடுத்துக் கொண்டு கோயிலுக்குத் தனியாகக் கிளம்பிவிடுவது அல்லது சிவதொண்டன் நிலையத்தில் தியானத்தில் மூழ்கியிருப்பது. ஆனாலும் நாட்டு நடப்புகளையும், உலகச் செய்திகளையும் விட்டு வைப்பதில்லை. பிபிசி, தூத்துக்குடி வானொலி நிலையம், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தோடு சூரியனும் சக்தியும் சேர்ந்துவிட்டன. நாட்டு நடப்பைப் பற்றிய எள்ளல் ஊரை நேசிக்கும் யாழ்ப்பாணத்தானின் கண்ணோட்டத்தில் இருந்து வரும் அவரிடமிருந்து.
சில சமயம் அவுஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது என்றும் சொல்வார் அவர்.
அப்பாவின் தோற்றமே வீண் ஆடம்பரம் கொண்டு வரும் இழுக்கு என்று சொல்லுமாற்போல இருக்கும். தன்னுடைய உழைப்பில் கட்டிய கல்வீடு தான் அவருக்குப் பெருமை. தேவையில்லாத பொருட்கள் எங்கள் வீட்டுக்கு வராது, அதே போலத் தேவையில்லாமல் மற்றவர் பிரச்சனையையும் வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக நிற்பவர்.
வெளிநாட்டில் இருந்து நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் "தம்பி காசு கீசு கைச்செலவுக்குத் தேவையோ " என்று கேட்பவரிடமா நான் என் டாலரைக் கட்டமுடியும்?
அப்பாவின் நடைமுறைகளையும், சித்தாந்தங்களையும் அடுத்த யுகத்தின் பிரதிநிதியாக ஒரு காலத்தில் முரண்டு பிடித்து ஏற்க மறுத்த என்னைப்போலவே இந்தத் தலைமுறை இடைவெளி தொடர்கின்றது. ஆனால் அவரின் பிரதிபலிப்புகள் எம்மையறியாமலேயே ஆட்கொண்டு பெரும்பாலும் அதே குணாதிசியத்தோடு வாழ்வது நமக்கே புரியாமல் இருக்கும்.
ஒவ்வொரு தந்தையும் தன் காலத்து வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கும் கடத்திப் போகும் முயற்சியிலேயே பெரிதும் வாழ்ந்து கழிப்பர்.
அம்மாவின் நேசம் என்பது வயிற்றில் இருந்ததாலோ என்னமோ உடனே பலாபலன் கிட்டிவிடும். ஆனால் அப்பாவின் நேசம் என்பது தன்னுடைய பாதையில் வந்த சவால்களும், நெருக்கடிகளும் தன் பிள்ளைக்கும் வரக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு பிறக்கின்றது. அப்பாவும் ஆண் பிள்ளைக்குமான உறவு எப்போதும் "போரும் சமாதானமும்" என்ற நிலையில் தான் இருக்கும். கிட்டத்தட்டத் தன் மனச்சாட்சியோடு சண்டையிட்டு வெல்வது போன்ற உணர்வு ஒவ்வொரு தகப்பனுக்கும்.
ஆனால் அந்தத் தந்தையின் உபதேசங்கள் தானாகப் புரிவதும், பின்னர் தெளிவதும் ஒவ்வொரு மகனும் தந்தையாகும் போதுதான்.