Sunday, April 16, 2006
யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு
தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். முதல் நாள் ஊர்க்கோயில் வளவுகுள்ள இருக்கிற ஐயர் வீட்ட போய் கண்ணாடிப்போத்தலுக்க மருத்து நீர் வாங்கி வந்து வச்சிட்டு இருப்பம். அடுத்த நாள் வெள்ளன எழும்பி மூலிகைக் கலவையான மருத்து நீரைத் தலையில் தடவி விட்டு கிணத்தடிக்குப் போய் கண் எரிச்சல் தீர அள்ளித் தோய்ந்து விட்டுப் புதுச் சட்டையை மாட்டிக்கொள்வோம்.
வருசம் பிறக்கும் நேரத்துக்கு முன்னமே மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போய்க் காத்திருந்து வருசப்பிறப்புப் பூசையையும் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டுவோம்.
வீடும் முதல் தினங்கள் மச்சச் சாப்பாடு காய்ச்சின தீட்டுப் போக முதல் நாளே குளித்துத் துப்பரவாக இருக்கும்.
எங்கட வீட்டுச் சுவாமி அறைக்குள் பயபக்தியாக நுளைஞ்சால் அப்பாவிட்ட இருந்து புதுக் காசு நோட்டுக்கள் வெற்றிலையில் சுற்றிக் கைவியளமாக் கிடைக்கும். அடுத்தது நல்ல நேரம் பார்த்து இனசனங்கள் வீட்டை நோக்கிய படையெடுப்பு.
அவர்கள் வீட்டிலும் அரியதரம், சிப்பிப் பலகாரம், வடை,முறுக்கு, பயற்றம் உருண்டை என்று விதவிதமான பலகாரங்களுடன் நல்ல தேத்தண்ணியும் கைவியளமும் கிடைக்கும். காற்சட்டைப் பொக்கற்றுக்குள் காசைத் திணித்துவிட்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டுவோம். வீட்டை வந்ததும் காற்சட்டையைத்துளாவித், திணித்திருக்கும் நாணயக்குற்றிகளையும், ரூபா நோட்டுக்களையும் மேசையில் பரப்பிவைத்து எண்ணத்தொடங்குவேன். ராசா பராக்கிரமபாகுவின்ர படம் போட்ட அஞ்சு ரூபா, பத்து ரூபாப் புதுநோட்டுக்களும் ஒரு ரூபாய், ரண்டு ரூபாய்க் குற்றிகளும் என்னைப் பார்த்த புளுகத்தில இருப்பது போல ஒரு பிரமை, சந்தோசத்தோட அவற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பன்.
எங்கட சொந்த ஊரில இப்பிடி அனுபவிச்சுக் கொண்டாடக்கூடிய வருசப் பிறப்பு பன்னண்டு வருசத்துக்குப் பிறகு இந்த ஆண்டு கிடைச்சது.
வருசப்பிறப்புக்கு முதல் நாள் வெறுமையான குடி தண்ணீர்ப் போத்தலும் கொண்டு பிள்ளையாரடி ஐயர் வீட்ட போனன். ஐயரின் பேத்தி முறையான சின்னன்சிறுசுகள் (எதிர்கால ஐயர் அம்மா!)பெரிய கிடாரத்தில இறைக்கப் பட்டிருந்த மருத்து நீரை அள்ளி வருபவர்களுக்கு அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தனர். இருபது ரூபாய் நோட்டை நீட்டி வீட்டுப் போத்தலை நிரப்பிக்கொண்டேன்.
" அம்மா ! இவ்வளவு நேரமும் அள்ளியள்ளி இடுப்பு விட்டுப் போச்சுது" என்று செல்லமாக முனகியவாறு அந்தச்சிறுமி என் போத்தலை மருத்து நீரால் நிரப்பினாள்.
அடுத்த நாள் வருசப்பிறப்பு நாள். அதிகாலை 4.31க்கு இலங்கை நேரப்படி வருசம் பிறக்கப் போகுது, வெள்ளன எழும்ப வேணும் எண்டு மொபைல் போனில அலாரம் வைத்தேன். அதிகாலை நான் வைத்த அலாரம் எழும்ப முன்னமே ப்க்கத்து ஊர்க்கோயில் ஒலி பெருக்கிகளில் சீர்காழி கோவிந்தராஜனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பலமாகப் பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.
நானும் எழும்பிக் குளித்து முடித்துவிட்டு மடத்துவாசல் பிள்ளையாரக்குப் போனால், நேரம் அதிகாலை 3.45. அப்போதே சனக்கூட்டம் இருந்தது.சின்னஞ்சிறுசிகளிலிருந்து வயதானாவர்கள் வரை அதிகாலை வேளையில் திரண்டிருந்தனர். உள்வீதி சுற்றிச் சுவாமி தரிசனம் முடித்து விட்டு வருசம் பிறக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தேன். சரியாக 4.31க்கு ஆலயத்தின் காண்டாமணி ஓங்கி ஒலித்தது.
காண்டாமணி ஓசையைத் தொடர்ந்து கோயில் பேரிகை முழங்க நாதஸ்வர மேளக் கச்சேரியும் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. அவற்றை அமுக்குமாற்போலப் பக்தர்களின் பக்திப் பரவசம் அவர் தம் வாய்வழியே " அப்பூ பிள்ளையாரப்பா" என்று ஓங்கி ஒலித்தது.தன் குமர் கரை சேர ஒரு பிரார்த்தனை, வெளிநாடு போக வழி ஏற்படுத்த ஒரு பிரார்த்தனை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற இன்னொரு பிரார்த்தனை, இப்படியாக அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் பிரார்த்தனைகளாக வெளிப்பட்டன. தலைக்கு மேல் கை கூப்பி அனைவரும் ஒரு சேர அந்த ஆண்டவனின் பூசையில் ஒருமுகப்பட்டு நின்றனர்.
திரைச்சீலை மறைப்பு விலகிச் சுவாமி தரிசனமும், தீபாராதனைகளும் தொடர்ந்து சுவாமி வெளிவீதி வலமும் இடம்பெற்றது.
விபூதி சந்தனப் பிரசாதம் பெற்று விட்டுப் பக்கத்துக்கோயிலான கந்தசாமி கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தேன்.
அடுத்தது நல்லூர்க் கந்தசாமி கோயில். நான் கோயிலுக்குப் போனபோது சுவாமி உள்வீதி சுற்றி வெளிவீதிக்கு வரும் வேளை அது. " சுவாமி வெளியில வரப்போகுது, உங்கட வாகனங்களை அப்புறப்படுத்துங்கோ" எண்டு ஒருவர் ஒலி பெருக்கியில் முழங்கிக்கொண்டிருந்தார். சனத்திரள் இன்னொரு நல்லூர் மகோற்சவத்தை ஞாபகப்படுத்தியது.
தாவடி பிள்ளையாரடியிலும் அன்று தேர்த்திருவிழா. அப்பாவின் ஊர்க்கோயில் என்பதால் சென்று பார்த்தேன்.
காலை பத்து மணியாகிவிட்ட பொழுதில் யாழ் நகரவீதிக்குப் போனேன். மனோகராத்தியேட்டர் புது வருச ரிலீஸ் " திருப்பதி" பட போஸ்டர்களும் ஹீரோ கொண்டா மோட்டார் சைக்கிள் இளைஞர் கூட்டத்துடன் மொய்த்திருந்தது.
காக்காய் கூட்டத்திலும் குறைவான சனம் தான் நின்றிருந்தது. சில கடைகள் தன் படிக்கால்களைக் கழுவி " பெண் பார்க்கப்போகும் போது ஒளித்திருந்து பார்க்கும் புது மணப் பெண் போல ஒற்றைக் கதவு திறந்திருக்க நாட்கடை வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தன. முதல் நாள் நான் நகரப் பகுதிக்கு வந்தபோது எள் போட்டாலும் விழ் முடியாச் சன்க்கூட்டம் இருந்திருந்தது. "நூறு ரூபாய்க்கு வருசப்பிறப்பு" என்று தான் விற்கும் ரீசேட்டை விளம்பரப்படுத்திய பாதையோரக் கடைக்காரர்களையும் காணோம்.
தொண்ணூற்று மூண்டாம் ஆண்டு ஏசியாச்சைக்கிளிளில் கூட்டாளிமாரோடை கூட்டாளிமாரோட கோயில்களுக்குப் போய்ப் பிறகு ரவுணுக்கு வந்து சுற்றிப் போனது ஞாபகத்துக்கு வந்தது.இப்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில இருக்கினம்.
வருசப்பிறப்பு நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிக் கொண்டு இணுவிலுக்குத்திரும்பினேன்.
புதிதாய்ப் பிறந்த வருடத்திலாவது நிரந்தர நிம்மதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு நிற்குமாற்போலக் காங்கேசன் துறை வீதி அமைதியாகக் குப்புறப் படுத்துக்கிடந்தது. பாதை நீண்ட தூரம் போல எனக்குப் பட்டது.