"துன்பம் நேர்கையில் நீ யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா" பொன்னம்பலம் மாமா ராகமெடுத்துப் பாடுகிறார்
"உது பாரதிதாசன் எழுதின பாட்டெல்லோ" - நான்
கொடுப்புக்குள்ள சிரிச்சுக் கொண்டு "பார்த்தியே உவன் பிரபு கண்டுபிடிச்சிட்டான்" பக்கத்தில நிற்கும் குமரனிடம் பெருமையாகக் கண் சிமிட்டி விட்டு
"யாழெடுத்து மீட்ட மாட்டாயா" என்று தொடருகிறார்.
அண்ணா கோப்பி என்று எங்களூரில் பெயர் பெற்ற தொழிலகத்தின் உரிமையாளர் நடராசா மாமா வீட்டில் பொன்னம்பலம் மாமாவும் வரும் போது நாங்கள் இளையராஜாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம், அவரோ "அமுதும் தேனும் எதற்கு" என்று சைக்கிளிலில் இருந்து இறங்கும் போதே பாடிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்.
இவ்வளவுக்கும் பொன்னம்பலம் மாமாவின் மகன் எங்களோடு கூடப் படிக்கிறவன். ஆனால் அந்த தகப்பன் ஸ்தானத்தையும் கடந்து எங்களோடு உறவாட பழைய பாடல்களை அஸ்திரமாகப் பாவிப்பார் பொன்னம்பலம் மாமா. அவரின் உருவத்தை நினைவுக்குக் கொண்டு வரும் போதெல்லாம் அந்தக் கருப்பு நிறத்தோலைத் தாண்டிய பிரகாசமான திவ்ய ஜோதியான
முகமும் நெற்றியில் நிரந்தரமாகத் தங்கியொருக்கும் சந்தனப் பொட்டும் தான் ஞாபகத்துக்கு வரும். வெளிர் நிறச் சட்டையும், வெள்ளை வேஷ்டியும் தான் அவரின் தேசிய உடை. அவருடைய மகன் கொஞ்சம் விளையாட்டுத்தனம் மிகுந்தவன் படிப்பில் பெரிய நாட்டமில்லை. எங்களின் உயர் வகுப்புப் பரீட்சை முடிவுகள் வந்த போது பொன்னம்பலம் மாமாவைச் சந்திக்கிறோம்.
"உவன் தம்பிக்கு என்ன றிசல்ட்" - பொன்னம்பலம் மாமா
சொல்கிறோம்
"றிசல்ட் குறைஞ்சாலும் காரியமில்லை கவலைப்படாதை எண்டு சொல்லுங்கோ" என்று விட்டு எங்களைக் கடக்கிறார். இது நடந்து இருபது வருஷங்கள் கடந்து விட்டது.
"பொன்னம்பலம் மாமா செத்துப் போனாராம்" ஒரு வாரம் கழிந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பன் வழியாக வந்தது இந்தச் செய்தி.
இன்று வேலை முடிந்து ரயிலில் பயணிக்கும் போது பேஸ்புக் ஐ மேய்கிறேன். எங்கள் ஊரின் முகப்புப் பக்கத்திலிருந்து இன்னொரு மரண அறிவித்தலோடு
"அப்பன்! வாறன் ராசா" எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு போகும் போது குரல் வந்த திக்கைப் பார்த்தால் மணியண்ணை தன் சைக்கிளில் என்னைக் கடந்து போய்க் கொண்டிப்பார். ஒற்றைக் கை உயர ஏந்திக் கை காட்டிக் கொண்டே போகும். எங்கள் ஊரின் கம்பீரம் என்றால் அது மணியண்ணை தான் என்று சொல்லுமளவுக்கு முறுக்கிவிட்ட மதுரை வீரன் மீசையும் கம்பீரமான தோற்றமும்
கொண்டவர். ஆனால் உருவத்துக்கும் அவருடைய குணத்துக்கும் எள்ளவும் தொடர்பில்லாத குழந்தை உள்ளம் கொண்டவர். அதனால் தான் அரைக்காற்சட்டைப் பையன்களையும் தேடிக் குசலம் விசாரிக்கும் பண்பு அவரிடமிருந்தது. ஊரிலுள்ள சின்னஞ்சிறுசுகளில் இருந்து பெருசுகள் வரை எல்லாருக்கும் அவர் மணியண்ணை தான்.
எங்களூரின் வசதி படைத்த பெருந்தனக்காரர்களில் அவரும் ஒருவர். மடத்துவாசல் பிள்ளையார் கோயிலின் மணிக் கோபுரத்தை அந்தக் காலத்திலேயே பகட்டாக அமைத்துக் கொடுத்தவர். இன்றைக்கும் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலைச் சுற்றி எல்லாமே மாறி விட்டாலும் அந்த மணிக்கூட்டுக் கோபுரம் மட்டும் அப்படியே நிமிர்ந்து நிற்கிறது. காலை ஆறரைப் பூசை மணி இணுவில் தாண்டி கோண்டாவில் காணக் கேட்கும்.
மடத்துவாசல் பிள்ளையாரடியின் மகோற்சவத்தின் தீர்த்தத்திருவிழாவுக்கு மணியண்ணை தான் உபயகாறர்.
மடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.
பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.
வசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.
அரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி? என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா? என்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.
"வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்" கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பக்கத்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம்.
பக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.
சோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.
சுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், "அரோகரா! அரோகரா" எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்காற்சட்டை தெரியும்.
வானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.
மணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,
"என்ர பிள்ளையாரப்பு! எங்களையெல்லாம் காப்பாத்து"
இனி மடத்துவாசல் பிள்ளையார் கோயில் திருவிழாவில் மணியண்ணையும் பொன்னம்பலம் மாமாவும் இருக்கமாட்டினம்.