ஒரு வெள்ளிக்கிழமை அம்மம்மா இறந்து விட்டார் என்ற செய்தி தாயகத்திலிருந்து கடல் கடந்து எனக்கு வந்திருந்தது.
அப்போது உடனே என் நினவுக்கு வந்தது தாயகத்தில் நாம் வாழ்ந்த காலத்தில் எண்பதாம் ஆண்டுகளின் நடுக்கூறுகளில்
அம்மம்மாவின் இருப்பு எவ்வாறு இருந்தது என்று.
எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை இரண்டு அம்மம்மாக்கள். ஒருவர் எமது தாயைப் பெற்றெடுத்தவர்
இன்னொருவர் அவரின் இளைய சகோதரி. இருவரையுமே அம்மம்மா என்று தான் நினைவு தெரிந்த நாளில் இருந்து அழைத்து வந்திருக்கிறோம். எங்கள் அம்மாவுக்கு மட்டும் அவர் குஞ்சியம்மா.
குஞ்சியம்மா வீட்டுக்கு அம்மா போகாத நாளில்லை, அத்திபூத்தாற் போல எப்போதாவது ஒருநாள் ஏதாவது ஒரு பணி நிமித்தம் அம்மா அங்கு செல்லாவிட்டால் "ஏன் பிள்ளை நேற்றுக் காணேல்ல" என்ற
உரிமையான விசாரிப்பு அம்மம்மாவிடம் இருந்து வரும் என்ற பயமும் அம்மாவிடம் இருந்தது. இந்த விசாரிப்பு எங்களையும் உள்ளடக்கியிருந்தது. அவர்கள் வீட்டுக்கு எப்போது சென்றாலும்
"சாப்பிட்டுட்டியே" என்பது தான் அம்மம்மாவின் முதல் கேள்வியாக இருக்கும்.
சோதிப்பிள்ளை என்ற அவரின் பெயருக்கேற்ப தான் வாழ்ந்து முடித்த காலம் வரை அவரின் முகத்தில் ஒரு பொலிவு எப்போதும் இருக்கும். செய்யும் வேலைகளில் நேர்த்தி இருக்கவேண்டும் என்ற
அவரின் எதிர்பார்ப்புப் போலவே அவருடைய உடையலங்காரமும் இருந்தது. வீண் ஆடம்பரம் என்பது அவரின் செய்கையிலும் இருந்ததில்லை.
அம்மம்மா வீட்டை ஒட்டிய வைரவர் கோயிலுக்கு வரும் அயல் வீட்டுக்காரர் சோதிப்பிள்ளை அக்காவிடமும் சுகம் விசாரிக்காமல் போகமாட்டார்கள். வரும் விருந்தாளிகளுக்குத் தேத்தண்ணி கொடுத்துச்
சுகம் விசாரித்து விட்டுத்தான் மறுவேலை அவருக்கு.
ஒரு பெரும் செல்வந்தரின் மனைவி என்ற இடாம்பீகம் அவரது வாழ்க்கையில் துளியும் ஒட்டியிருந்ததை எங்களால் காணமுடியவில்லை. வீட்டில் இருக்கும்
போது சமையலறையில் வேலையாட்களோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வேலைகளைக் கவனிப்பது என்பது ஒருபுறமிருக்க, வெயில் சாய்ந்ததும்
தன் கறுத்தக் குடையை விரித்து நிழலைப் பரப்பி அந்த நிழலில் நடை பயின்று இணுவிலில் இருந்து தாவடி முகப்பு வரை சென்று தன் இரண்டாவது மகன் வீட்டில் இருந்து அதனைச் சூழவுள்ள தம் காணிகளை மேற்பார்த்து
வருவது அவரின் இன்னொரு கடமை. வெறுமனே காணிகளாக இல்லாது மா, பலா, வாழை எல்லாம் தலையெடுத்து அவற்றைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வைத்துத் தானே மேற்பார்வை செய்து
வந்திருந்தார்.
இந்தியாவில் தீபாவளி எப்படி ஒரு பெருங் கொண்டாட்டமாக இருக்குமோ அந்த அளவுக்கு விசேஷமான முதன்மைப் பண்டிகை என்றால் ஈழத்தைப் பொறுத்தவரை அது தைப்பொங்கல் தான். தைப்பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கலும் எங்களூரில் வெகு விசேஷமாக இருக்கக் காரணம் ஊர் மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மை செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும் அதிகாலை சூரியன் எழ முன்பு துயில் கலைந்து தோட்டத்துப் பயிருக்குத் தண்ணீர் இறைக்கப் போவதும், மாலை வீடு திரும்பியதும் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் ஒரு எட்டு நடை நடந்து தோட்டத்தைப் பார்த்துவிட்டு அசை போ மாட்டோடு வீடு திரும்பித்தான் மறுவேலை. எண்பதுகளின் நடுப்பகுதி வரை உழவு இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு அதிகம் இல்லாததால் ஏர் பூட்டவும், சந்தைப்படுத்தல் போக்குவரத்துக்கும் மாடு தான் உற்ற தோழன். எங்கள் அப்பாவும் ஆசிரியராகவும் தோட்டக்காரராகவும் இரட்டைச் சவாரி செய்தாலும் எங்கள் வீட்டில் ஆடு தான் அரசாண்டது. ஆடு வளர்ப்பது அப்பாவுக்கு மூன்றாவது வேலை. எங்களூர் மாடுகளுக்கு இத்தகு உயரிய பொறுப்பு இருந்ததால் மாட்டுப் பொங்கல் நேரம் அவற்றுக்கான கவனிப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். வாய் பேசாத ஜீவன் என்று பேர்தான் ஆனால் மேய்ச்சலுக்குப் போன மாட்டுடனோ அல்லது வண்டி கட்டிப் போகும் மாட்டுடனோ கூடவே தன்னுடைய சொந்த இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டே வரும் மாட்டுக்காரரைக் கண்டிருக்கிறேன். இங்கே நான் பகிர்ந்திருக்கும் படங்கள் போன வருஷம் எங்களூரில் நடந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வை நண்பர் வாயிலாகப் பெற்றது.
தாவடியில் இருக்கும் வீட்டில் ஒரு கொட்டகை அமைத்து அங்கே மாடுகளை வளர்த்து வந்தார் அம்மம்மா. மாட்டுப் பொங்கல் அன்று அந்தக் கொட்டகை வழக்கத்துக்கு மாறான பொலிவோடு இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று தீர்மானம் போட்டு வைத்துவிடுவார். முதல்வேலையாக மாடுகளைக் கொட்டகையில் இருந்து அப்புறப்படுத்தி வெளியே வளர்ந்திருக்கும் தென்னை மரங்களின் கீழ் ஆளுக்கு (மாட்டுக்கு) ஒரு தென்னை மரம் என்று ஒதுக்கிவிடுவார். அவை பசியாறி ஓய்வெடுக்க கற்றை கற்றையாக வைக்கோல்களை இறைத்து விட்டால் அவை தன்பாட்டுக்குக் காரியத்தில் இறங்கும்.
உச்ச வேகத்தில் பாயும் தண்ணீர்க் குழாயின் இறைப்பால் அந்த மாட்டுக் கொட்டகையின் இண்டு இடுக்கெல்லாம் ஒளிந்திருக்கும் குப்பைகள் ஐயோ அம்மா என்று அலறிக்கொண்டு வெளியே ஓடும். சாணி பூசிய நிலத்தின் உண்மைச் சாயம் வெளுக்கும். பின்னர் ஈர்க்குமாறு எடுத்து அந்த நிலமெல்லாம் ஒத்தடம் எடுக்குமாற்போல நீரை வெளித்தள்ளிக் காய வைக்கும் வேலை. மாடுகள் இதையெல்லாம் புதினமாகப் பார்த்துக் கொண்டு படுத்திருந்து அசை போடும்.
அடுத்த வேலை ஒவ்வொரு மாடாக இழுத்து வந்து ஜலக்கிரீடை பண்ண வைப்பது. நன்றாகக் குளித்த் மாடுகளின் முன் நெற்றியில் திருநீற்றை இழுத்து விட்டுப் பென்னம் பெரிய குங்குமப் பொட்டை வைத்தால் பக்திப் பழமாக நிற்கும் அந்தத் தோற்றமே அழகு.
இதற்குள் மாட்டுக் கொட்டகை ஓரளவு காய்ந்திருக்கும். வெளியே மாக்கோலம் போட்டு முந்திய நாள் தைப்பொங்கலுக்குச் செய்த அதே பாவனையில் மாட்டுப் பொங்கல் வைக்கப்படும். வாழை இலையை மாடுகளுக்கு முன்னே வைத்து பொங்கல் சம்பிரதாயபூர்வமாகப் படைக்கவும், முந்திய நாள் சுட்ட வெடியில் மீதி வைத்தவை வெடித்துத் தீர்க்கப்படும்.
ஒரு செல்வந்தரின் மனைவியாக இருந்ததோடு, படித்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும், எல்லோருடனும் பேசி அவர்களைக் கவரும் வல்லமையைக் கொண்டிருந்தவர் அம்மம்மா.
அவருக்கே இயல்பான நகைச்சுவை உணர்வைப் பலதடவை எண்ணிச் சிரித்ததுண்டு.
ஒருமுறை கொழும்பிலே இருக்கும் அவரது இல்லத்தில் மாலை வேளை தொலைக்காட்சியில் இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கிறோம்,
அம்மம்மாவும் தன் ஆஸ்தான சவுக்குக்கதிரையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதில் இசையமைப்பாளர் தேவா தன் பிரபல பாடலான "நான் சொல்ல மாட்டேன் அதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்" என்று பாடுகிறார்.
அம்மம்மாவுக்குச் சினம் வந்து விட்டது.
"நீ சொல்லாட்டிப் போவன் எங்களுக்கென்ன" என்று சொல்லிவிட்டு எழும்பிப் போகிறார்.
அம்மம்மாவின் வயதை ஒத்தவர்களுக்கு இருக்கும் தீவிரமான மனப்போக்கு இல்லாத, இயல்பாகப் பழகக் கூடிய
ஆளுமையாகவே அவர் இறுதி வரை இருந்திருக்கிறார். இந்த ஆளுமை என்பது அவருடைய வாழ் நாள் தோறும் நிரம்பியிருந்தது என்பதற்கு வாழ்நாளின் கடைசி மாதங்கள் மெய்ப்பித்திருந்தன.
அந்த நாட்களில் அவரின் நினைவு தவறி, பிள்ளைகளையும் அடையாளம் காணாத அளவுக்கு வந்த போது, எங்களை அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டிருப்பார்.
திடீரென்று "நான் யார் தெரியுமா" என்று கேட்டால் "ஓ தெரியும், இப்ப கொஞ்ச முதல் சொன்னனீங்கள் எல்லோ" என்று கேட்பவரையே வெட்க வைக்கும் அளவுக்கு சாமர்த்தியமாகப் பதில்
சொல்லுவார். எங்கள் அம்மம்மா இதைப் போல ஏராளம் நினைவுகளை எங்களைச் சுமக்க வைத்து விடை பெற்றிருக்கின்றார்.
அம்மம்மாவின் பிரிவோடு எங்களின் முந்திய தலைமுறையின் ஒரேயொரு நட்சத்திரமும் உதிர்ந்து இரண்டாண்டுகள் ஆயிற்று. ஆனால் அவர் எமக்குக் காட்டிய பரிவும், வாழ்ந்து காட்டிய நெறியும் அடுத்த தலைமுறைக்கும் இட்டுச்
சொல்லும்.
6 comments:
அழகியப் படங்களுடன் அன்பைப் பற்றிய பதிவு அழகுக்கு அழகு சேர்க்கிறது.
amas32
மிக்க நன்றிம்மா
வணக்கம்
உண்மையில் எமது தாயக மண்ணில் பொங்கல் நாள் நெருங்கினால் அதைப் போல மகிழ்ச்சி வேற ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் அப்படி சிறப்பாக செய்வார்கள்.... வீட்டுப்பொங்கல் என்றாலும் சரி மாட்டுப்பொங்கல் என்றாலும் சரி.. பதிவை படிக்கும் போது...ஒருகனம் கடந்த கால நினைவை ஒரு தடைவை மீட்டுப்பார்க்க செய்கிறது..
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்..அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரண்டு மனம் வேண்டும்,
இறைவனிடம் கேட்பேன்!
நினைத்து வாழ ஒன்று,
மறந்து வாழ ஒன்று !
எண்ட பாட்டு வரி தான் இப்ப எனக்கு ஞாவகம் வருது.
வணக்கம் அன்பின் ரூபன்
உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள். பதிவைப் படித்து உங்கள் கருத்தை அளித்தமைக்கும் மிக்க நன்றிகள்.
ந.குணபாலன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
Post a Comment