இன்றோடு எமது இலங்கை வானொலியில் ஆட்சி செய்த குரல்களில் ஒன்றாக விளங்கிய “சுந்தா” சுந்தரலிங்கம் அவர்களது 20 வது ஆண்டு நினைவாகும்.
தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு “சுந்தா அங்கிள்”. இம்மட்டுக்கும் அவரோடு நேரடியாக முகம் கொடுத்துப் பழகவில்லை.
ஈராயிரத்தின் முற்பகுதியில் என் வானொலி யுகத்தின் கன்னிப் பருவம் அது. அப்போது வானொலிக் குரல்களில் பழக்கப்பட்ட திரு. கணேசன் மேகநாதனும், நானுமாக ஒரு சனிக்கிழமை இரவு நேயர்களுடன் கலந்துரையாடும்
கருத்துக்களம் நிகழ்ச்சி படைக்கின்றோம். நிகழ்ச்சி முடியும் போது அதிகாலை ஒரு மணி இருக்குமென்ன்று நினைக்கின்றேன். அந்த நேரத்தில் ஒரு பாராட்டு அழைப்பு வருகின்றது.
அது “சுந்தா” அங்கிள் தான். மறு நாள் எங்கள் இருவருக்கும் தன் கையெழுத்திட்ட தன்னுடைய வானொலி வாழ்வின் சுய வரலாற்றுப் பகிர்வான “மன ஓசை” நூலையும் எம்மிடம் சேர்ப்பிக்கின்றார்.
அதுதான் எனக்குக் கிடைத்த முதல் வெகுமதி. அன்றிலிருந்து 21 ஆண்டுகள் வானொலிப் பயணம் தொடர்கின்றதென்றால் அதன் மூல விதை இப்பேர்ப்பட்ட மூத்த ஊடகர் இலங்கையிலும், புலம்பெயர் சூழலிலும் வானொலி ஊடகப் பணியில் பல்லாண்டு அனுபவம் கொண்டவர் கொடுத்த பாராட்டு. அதற்கு விலை இல்லை அதனால் தான் அது இன்னமும் என் மனசில் இருக்கின்றது. இளம் ஊடகரைத் தட்டிக் கொடுக்கும் பண்பு அவரிடம் ஏகலைவனாகக் கற்ற பால பாடமது. அதன் பின் என் இணைய வலைப்பதிவு உலகின் முதல் வாசகி, மூத்த வாசகியாக அன்போடு அழைக்கும் பராசக்தி ஆன்ரியைக் கொடுத்து விட்டுப் போய் விட்டாரோ என்று நினைப்பதுண்டு. ஏனெனில் என்னுடைய படைப்பு எது வந்தாலும் அதைப் படித்து விட்டுக் கருத்துச் சொல்லி விட்டுத் தொடரும் பண்பை இந்த 16 வருட இணைய வலைப்பதிவு வாழ்வில் ஆன்ரி வழியாகக் காண்கின்றேன்.
இந்த வாரத் தொடக்கத்திலேயே இன்று வரப் போகும் சுந்தா அங்கிளின் நினைவு நாளை நினைத்துக் கொண்டிருந்தேன்.
என்ன விந்தை, மகளைப் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வருவதற்காகக் காரில் பயணிக்கும் போது வழக்கம் போல ஏதாவது ஒரு இணைய வானொலியைக் கேட்போமென்று கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை எழுமாற்றாகத் தான் போட்டேன் நேற்று. முதல் நாளே அவர்கள் சுந்தா அங்கிளுக்கான நினைவுப் பகிர்வு நிகழ்ச்சியை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். என் கார்ப் பயணத்தில் அந்த நினைவுப் பயணத்தை இணைத்துக் கொண்டே வந்தேன். 20 ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தா அங்கிள் விடை பெற்ற நாளில் கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிபரும், முன்னாள் இலங்கை வானொலி ஊடகருமான திரு இளையபாரதி அவர்கள் தொகுத்து வழங்கிய நினைவுப் பகிர்வு அது. “சுந்தா” சுந்தரலிங்கம் என்ற ஆளுமையை நேசித்த நேய நெஞ்சங்கள், நண்பர்கள் என்று பலரின் நினைவுத் தொகுப்பாகப் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண்மணி சொன்ன கருத்தை
முன் சொன்ன என் அனுபவத்தோடு பொருத்திப் பார்த்தேன். அது இதுதான்.
“திரு.சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்,
அத்தோடு எல்லோரையும் மனம் திறந்து பாராட்டுவார்…..”
இப்படியாகத் தொடர்ந்தது அந்தப் பகிர்வு.
திரு. இளையபாரதி அவர்களும் “சுந்தா” சுந்தரலிங்கம் அவர்களது வானொலிப் பங்களிப்பில் அவரின் தனித்துவமான ஆளுமை குறித்துச் சிலாகித்து,
“இந்தத் திறமைசாலிக்கு நிகர் இவரே” என்று சொன்ன போது சிலிர்த்தது.
மொழியாற்றலும், பேச்சாற்றலும் மட்டுமல்ல இப்பேர்ப்பட்ட ஊடக ஜாம்பவான்களின் ஆசீர்வாதம் தான் வானொலி ஊடகத்துறையில் நீண்ட ஆயுளைக் கொடுத்து நிற்கும்.
சிநேகமாய் ஒலிக்கும் சுந்தரக்குரல் .....
ரேடியோ சிலோன் சுந்தா ....
தனி மனித வாழ்வில் எங்கே ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் அங்கே என் பாடல் ஒன்று ஒலிக்கும் என்றார் கவியரசர் கண்ணதாசன்.
அதேபோல ....ஈழத்து ரசிகர்களைப் பொறுத்தவரை......அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்து அவர்கள் உணர்வுகளையும் கனவுகளையும் சிநேகமாய் வருடிக் கொடுத்ததில் இலங்கை வானொலி வகித்த பங்களிப்பை வெறும் வார்த்தைகளால் மட்டும் விளக்கி விட முடியுமா?
இலங்கை வானொலியை ஆய்ந்து .... அறிந்து ....உணர்ந்து .... தெளிந்து .... ரசித்த சுகமான அந்த நினைவலைகளை மறுபடியும் மறுபடியும் அசை மீட்கத் தெரிந்த இலங்கை ரசிகர்களுக்கு மட்டுமே அந்த அருமை பெருமையின் ஆழம் புரியும்.
அத்தகைய சிலோன் ரேடியோவில் கணீரென்ற குரலாலும், அழகுத் தமிழ் உச்சரிப்பாலும், நடிகராகவும், அறிவிப்பாளராகவும் நேயர்களை வசப்படுத்தி.... வானொலியின் வரலாற்றுப் பக்கங்களில் தனி முத்திரையைப் பதித்தவர்.... ப, ரேடியோ சிலோன் சுந்தா என அழைக்கப்படும் ஒலிபரப்பாளர் திரு. வீ. சுந்தரலிங்கம் அவர்கள் .
இவரது செம்மையான உச்சரிப்பில் உலாவந்த செய்தி வாசிப்பையும், நேர்த்தி மிக்க நேர்முக வர்ணனைகளையும், கீர்த்திமிக்க இசைத் தொகுப்பு நிகழ்ச்சிகளையும், பாய்ந்து வரும் சிங்கம் என பலன் தருவது டியுறோல் போன்ற பளபளப்பான விளம்பரங்களையும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?
இன்னும் ... இன்னும் .... எத்தனை நினைவலைகள் ?....நேயர்களை சிந்திக்க வைத்த பஞ்சபாணம், விவேகச் சக்கரம் போன்ற நிகழ்ச்சிகளிலும் நம்மோடு சிநேகமாக உறவாடிய அந்த சிங்காரக் குரல் .... அரை நூற்றாண்டுக்கு மேலாக வசந்தத் தமிழ் வாசனையை வான் அலைகளில் பரப்பியது.
இலங்கை ரசிகர்களை மட்டுமல்ல தென்னிந்திய வானொலி ரசிகர்களையும் வசீகரித்த திரு. சுந்தா அவர்கள் எழுதிய 'மன ஓசை' என்ற நூலில் இருந்து ஒரு பகுதியை ரசிகன் வாசகர்களுக்காக இங்கே தொகுத்துத் தருகின்றோம்.
வானொலியில் நேர்முக வர்ணனைகள் எங்கள் காலத்தில் மிகவும் பிரபலமானதொரு நிகழ்ச்சி.
தொலைக்காட்சி வராத காலம். முழுக்க முழுக்க மக்கள் வானொலி வர்ணனைகளையே கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு கணமும் விழிப்பு, விழிப்பு, விழிப்பு, விரைந்து நுண்மதியுடன் செயற்படும் ஆற்றல், சுய பொறுப்புணர்வு-இவையே நல்ல ஒரு ஒலிபரப்பாளனாவதற்கு இன்றியமையாத அடிப்படைகள் என்பதனையே இந்த அனுபவங்கள் எல்லாம் எமக்கு உணர்த்தி நின்றன.
இந்த அனுபவக் களத்திடை வானொலி வர்ணனைகளின் போதும் சில வேளைகளில் பிழைகள் வந்து சேரும். இவற்றை உடனுக்குடன் ஈடுசெய்ய முடியாமலிருக்கும் விளைவாக நிகழ்ச்சி முடிய பத்திரிகைகளின் கிண்டல் கேலிகளைச் சந்திக்க நேரிடும். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
நான் வானொலியில் இணைவதற்கு முன்னால் கூட இவ்வாறே வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களைப் பார்த்திருக்கிறேன்.
இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் இறுதி ஊர்வல வர்ணனை நடந்து கொண்டிருந்தது.
காட்சியை வர்ணித்த அறிவிப்பாளர் உணர்ச்சி மேலிட ஒப்புமை தேடி மிதிலைக் காட்சி போல என்று விளாசி விட்டார். இறுதி ஊர்வலத்தை மிதிலைக் காட்சியுடன் ஒப்பிடுவதா?
மறுநாள் காலை பத்திரிகையில் விமர்சனங்கள்....இதுபோலவே பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான வர்ணனையிலும் சுவார°யமான சங்கதிகள்.
ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார் என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார்.
எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா?
ஒருவிதத்தில் பத்திரிகை கண்டனங்கள் அவசியமும் கூட. அவை எமது எச்சரிக்கை உணர்வினுக்கு துணை செய்தன.
இத்தனை அனுபவ விழிப்புடனும் வர்ணனைகளிலே அதீத உணர்ச்சிக்குள்ளாகி விமர்சனங்களை எதிர்கொண்ட அனுபவம் ஒன்று எனக்கும் நேர்ந்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.
மறைந்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் உருவச் சிலை திறப்பு விழா வைபவம் பாராளுமன்ற வளாகத்தில் நடந்து கொண்டிருந்தது.
டி.எஸ். சேனநாயக்கா அவர்களின் புதல்வர் டட்லி சேனநாயக்கா தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதாக ஏற்பாடு.
இந்த நிகழ்ச்சியை பார்த்த வேளை வர்ணனையாளராக இருந்த என் மனதில் எனது தந்தையார் பற்றிய நினைவுகள் விஸ்வரூப தரிசனமாகியிருக்க வேண்டும்.
மகன் தந்தைக்கு ஆற்றும் இந்த மலர் ஆராதனைப் பற்றி குறிப்பிடும் போது மிகை உணர்ச்சியுடன் அதிகமாகவே கதைத்து விட்டேன்.
நிகழ்ச்சி முடிந்து திரும்பி நிலையத்துக்கு வந்தபோது எனது சகா ஒருவர் உனது நடிப்பு நன்றாக இருந்தது என்று கேலி செய்தார்.
என்னுடைய அன்றைய மனநிலையை அவர் அறிய நியாயமில்லை. அந்த வகையில் அவர் கேலி செய்தது சரிதான். என்னைப் பொறுத்தவரை , இது ஒரு நல்ல பாடமாக இருந்தது.
அதாவது வர்ணனைகள் செய்யும்போது சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது. நிகழ்வுகளை தெளிவாக - அழகாக , கேட்கும் நேயர்களின் அகத்திரைக்குக் கொண்டுவந்து விடுவதே எமது முக்கிய கடமையாகும்.
இந்த அனுபவ பாடங்கள்தான் பின்னால் ஒரு நல்ல வர்ணனையாளனாக நான் பாராட்டுப் பெற வழிவகுத்தன.
என் ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும் புகழும் தேடித்தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.
அப்பொழுது நான் இலங்கை வானொலியிருந்து இலங்கை பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.
அன்றைய இலங்கை வானொலி இயக்குனர் நாயகம்(டைரக்டர் ஜெனரல்) நெவில் ஜயவீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.
சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகின்றான்.
வாய்ஸ் ஓப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக (மூன்று, நான்கு நாட்கள்)வர்ணனை செய்ய உள்ளது. வாய்ஸ் ஓப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாக தமிழிலும் சிங்களத்திலும் தாமுடியுமா என்று அவர் கேட்டார்.
என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார்.
பெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது.
இரண்டு பேருமே நிச்சயம் முடியும் என்று உறுதி கூறினோம்.
அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி எங்களை கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக் கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாக அவற்றைத் திரையிட வைத்தார்கள்.
திரையிடும் போதுதான் உண்மையாகவே இது எப்படி நடக்கப் போகிறது. எப்படி அவர்கள் பேசப் போகின்றார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. ஆங்கிலத்திலே பேசுவதை தமிழிலோ சிங்களத்திலோ மொழி பெயர்ப்பது ஒன்று.
ஆனால் மறு பக்கத்திலோ அமெரிக்கன் ஆங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கர்கள் பேசுகின்ற முறையும் ஆங்கிலத்தையே அவர்கள் பேசினாலும் அதை உச்சரிக்கும் முறையும் இந்த மாதிரியான வான்வெளிப் பிரயாணத்திற்கான சேவையிலே இருக்கின்ற அந்தத் திட்டத்திலே வேலை செய்கின்றவர்கள் பேசுகின்ற சொற்பிரயோகங்களும் பிரயோகித்த சொற்களும் வேறுவிதமாக இருந்தன. இதனைப் படங்களைப் பார்த்த பின்தான் நாம் அறிந்தோம்.
சாதாரணமாக பாராளுமன்றத்திலே பேசுகின்ற ஒரு உரையினைத் தமிழிலோ சிங்களத்திலோ கொடுப்பது போன்றதல்ல இது என்று எங்களுக்குத் தெரியும்.
அமெரிக்கர்களின் இந்தப் பேசும் முறை, இவர்கள் பேசும் மொழி அவர்களுடைய ஆங்கில உச்சரிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக இவ் வான்வெளிக் களங்களிலே என்ன மாதிரியான சொற்களை எல்லாம் பிரயோகிக்கின்றார்கள் என்ன மாதிரியெல்லாம் அது இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்கு புதிதாக இருந்தது.
ஆனால் எங்களுக்கு அமெரிக்கன் தூதரகம் மிகவும் உதவியாக ஒத்தாசையாக இருந்து அந்தப் படங்களை எங்கள் வசதிப்படி எங்களுக்கு எப்போது தேவையோ அப்போதெல்லாம் போட்டுக் காட்டினார்கள். ஒருவகையில் எங்களுக்குப் பயிற்சியளித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.
இத்தனை உதவிகளையும் ஒத்தாசை செய்த அவர்கள் இந்நிகழ்ச்சி தரமாக அமைய வேண்டும் மக்களுக்குத் தெளிவாக இவை புரிய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு உதவியாக மேலும் நான்கு பேரை ஆயத்தம் செய்தார்கள்.
பேராசிரியர் குலரத்தினம் , இவர் புவியியல் பேராசிரியராக சர்வகலா சாலையிலே இருந்தவர்.
பேராசிரியர் ஏ.டபிள்யூ. மயில்வாகனம், இவர் பௌதிகவியல் பேராசிரியராக இருந்தவர். ஆனந்த சிவம் என்று ஒரு இளைஞர், அவர் ஒரு விஞ்ஞானி .
திரு. கோபால பிள்ளை மகாதேவா என்ற ஒரு விஞ்ஞானி
இப்படியாக ....நான்கு பேரை அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். எங்களுக்கும் சற்று ஓய்வு கொடுப்பதற்காக இப்படியான ஏற்பாட்டை அவர்கள் செய்திருந்தார்கள்.
இதே போல சிங்களத்திலும் அல்பிரட் பெரேராவுக்கும் இதே மாதிரியான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருந்தார்கள்.
எங்கள் ஒலிபரப்பு எத்தகைய வெற்றியைப் பெற்றது ? என்பதற்கு சான்றாக சில விஷயங்களைச் சொல்ல நினைக்கின்றேன்.
சந்திர மண்டலப் பிரயாணம் தொடர்பான இந்த ஒலிபரப்பை ஆல் இந்தியா ரேடியோ எங்களைப் போல வர்ணனையாகத் தரவில்லை என்பதாலும், தமிழிலே அது தொடர்பான எந்த நிகழ்ச்சியும் இருக்கவில்லை என்பதாலும் எமது நிகழ்ச்சிக்கு தென்னிந்திய நேயர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
முன்பின் தெரியாதவர்கள் கூட ..... கிட்டதட்ட லட்சம் பேர் என்று சொல்லலாம் ..... அவ்வளவு கடிதங்கள் வந்தன.
ஒரு நாள் நான் இலங்கை வானொலி நிலையத்திற்குப் போயிருந்தபோது திரு. நெவில் ஜெயவீர என்னை அழைத்தார்.
அவர் மெல்லியதொரு புன்முறுவலுடன் தனது உதவியாளரைக் கூப்பிட்டு அந்தச் சாவியை எடுத்துவரச் சொன்னார். என்னையும் கூட்டிக்கொண்டு அவருடைய காரியாலயத்திற்குப் பக்கத்திலே இருந்த ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அதைத் திறக்கச் சொன்னார். ஒரு சிறிய அறை அது.
கதவைத் திறந்ததும் அதற்குள் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அப்படியே குவிந்து வீழ்ந்தன.
என்னைக் கட்டித்தழுவி இவைதான் உமக்கும் எங்களுக்கும் கிடைத்த பரிசு என்றார் பெருமையாக.
அன்றைய அமெரிக்க ஜனாதிபதி இலங்கை வானொலியின் இந்தச் சேவையைப் பாராட்டி அல்பிரட் பெரேராவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தமது கைப்பட கடிதங்கள் எழுதியிருந்தார். கூடவே அமெரிக்க வரலாறு தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் ஜனாதிபதியின் கையெழுத்துடன் அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பின்னர் எனது நண்பர்கள் கூட என்னை அப்போலோ சுந்தா என அழைக்கத் துவங்கினர். எனது வாழ்க்கையிலே எனக்குக் கிடைத்த பெரும் பாராட்டாக இதை நான் கருதுகிறேன்.
8888888888888888888888888888888888888888888888
சுந்தா சுந்தரலிங்கம் அவர்களது மன ஓசை நூலில் இருந்து ஒரு பகுதியை மேற் கண்ட இடுகையாக ஊடகர் யாழ் சுதாகர் பகிர்ந்திருந்தார்
இலங்கை வானொலி யுகத்தில் சாதனை புரிந்த “சுந்தா” சுந்தரலிங்கம் அவர்கள் குறித்து இன்றைய சமுதாயமும் அறிந்து கொள்ள வேண்டும், நினைவில் இருத்த வேண்டும்.
அதனால் மேலும் சில விரிவான பகிர்வுகளை இங்கே தருகின்றேன்.
'சுந்தா’ சுந்தரலிங்கம் 90
வானொலி ஊடகவியலாளரின் கலைப்பயணம்
எழுத்தாக்கம் : திரு. லெ.முருகபூபதி
ஒலி வடிவம் : கானா பிரபா
அப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள் – கானா பிரபா
சுந்தா (எ) வீ.சுந்தரலிங்கம் அவர்களின் இலங்கை வானொலிக் குரல் – வானொலி ஆவண நேயர் திரு விஜய்ராம்.ஏ.கண்ணன்
பிபிஸி தமிழோசை ஒலிபரப்பில் 1991 ஆம் ஆண்டு ஒலிபரப்பான "சுந்தா" சுந்தரலிங்கம் அவர்கள்
தமிழோசை பொறுப்பாளர் சங்கரமூர்த்தி "ஷங்கர்" அவர்களுக்கு அளித்த செவ்வி.
வணக்கம் கூறி விடை பெறுவது சுந்தா சுந்தரலிங்கம் (ஈழத்து நூலகம்)
சுந்தா அங்கிள் என்றும் எம் மனதில் உயிர்த்திருப்பார்.
கானா பிரபா
29.10.2021