Thursday, October 06, 2011
Steve Jobs படைத்த Apple உலகில் நான்
Innovation distinguishes between a leader and a follower - Steve Jobs
கடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன். எல்லோர் முகத்திலும் ஒரே சமயம் சட்டென்று ஒட்டிக்கொண்ட துயர ரேகைகளைக் காண முடிந்தது. வேலை ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் இவரின் இழப்பை ஏற்க ஒப்பாமல் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவுக்குப் பின்னான நடைப் பயிற்சியின் போது சிட்னியின் நகரப்பகுதியில் இருக்கும் Apple Store இற்க்குக் கால்கள் இழுக்க அந்தத் திசையில் நடந்தேன். அந்த வளாகத்தின் முகப்பில் இழவு வீட்டுக்குக் கூடி நிற்கும் இனசனங்கள் கூட்டம் திரளத் தொடங்கியது. கடை முகப்பில் Steve Jobs இன் புகைப்படத்துக்கு முன் மலர்க்கொத்து ஒன்று. அங்கிருந்து மெல்லக் கிளம்பி Dymocks புத்தகசாலை சென்று அங்கே நிரப்பியிருந்த புத்தகப் பரப்புகளில் இருந்து iCon என்ற Steve Jobs குறித்த நூலை வாங்கிக் கொண்டு திரும்புகின்றேன். காலை வந்த செய்தியை உணர்ந்த அதே நிலையில் இன்னும் வைத்திருக்கும் அளவுக்கு நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்தி விட்டார் இந்த மனிதர். கடந்த இரண்டு ஆண்டுகாலம் என்னைச் சுற்றி இயங்கிய உலகத்தை நினைத்துப் பார்க்கின்றேன். இவையெல்லாமே i வரிசையாக அமைந்திருக்கின்றன.
Steve Jobs என்ற மனிதரின் வாழ்க்கையை தேடிப்பிடித்து அவர் இது நாள் வரை செய்த சாதனைகளைச் சிலாகித்துச் சொல்லுமளவுக்கு அவரை நான் அறிந்திருக்கவில்லை அல்லது ஆர்வமும் ஏற்படவில்லை. ஒரு சில வருஷங்களுக்கு முன் என்றோ ஒரு நாள் இலத்திரனியல் கடைவளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட iMac கணினியின் புறத்தோற்றத்தைக் கண்டு மயங்கிக் கூட வந்த நண்பனிடம் இந்தக் கொம்பியூட்டரை வாழ்நாளில் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையைச் சொல்லிவைத்ததோடு சரி. எப்போதோ என் மனக்கிணற்றில் போட்ட அந்தக் கல் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் மிதந்தது. இடையில் iPhone என்ற கைத்தொலைபேசியின் வரவு இந்த Apple உலகம் எப்படியிருக்கும் என்று ஒரு முன்னோட்டம் வைக்க உதவியது. அதற்கும் முன்னால் வாங்கிய iPod வெறும் பாட்டு உலகத்தோடு சுருங்கியதால் ஆப்பிள் உலகத்தை அதிகம் தெரிந்திருக்க வைப்பிருக்கவில்லை.
அப்போது iMac வெறும் காட்சிப் பொருள் அல்ல, விண்டோஸ் இற்கு மாற்றீடான இன்னொரு பொருள் என்ற நிலையை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லும் யுகப்புரட்சி மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வந்தது. அப்போது என்னிடம் பாவனையில் இருந்த கணினியும் மெல்லத் தன் ஓட்டத்தை நிறுத்த, iMac ஐ வாங்கும் வேளை வந்தது. ஆனால் எனக்குத் தெரிந்த நண்பர்கள் யாருமே வைத்திருக்காத ஒன்றை வாங்கிவிட்டுப் பின் ஏதாவது தொல்லைகள் வந்தால் என்ன செய்ய என்ற ஒரு தயக்கமும் இருந்தது. எனவே ட்விட்டரில் iMac பாவனையாளர்களின் அனுபவங்களைக் கேட்டேன். 14 வருஷங்களுக்கு முன் மெல்பனில் பல்கலைக்கழக வாழ்வில் நான் வாங்கிய முதற்கணினியை சுவாமி அறையில் வைத்துப் பூஜிக்க வைத்து விட்டுத் தான் அதை இயக்க வைத்தான் கோயம்புத்தூரில் இருந்து வந்து என்னோடு தங்கியிருந்த சகாபாடி. இடையில் எத்தனையோ கணினிகள் வந்து போய்விட்டன. ஆனால் iMac ஐ வாங்கித் திறந்த நாள் என் முதல் கணினியை வாங்கிய அதே த்ரில்லோடு அமைந்தது. iMac இன்று இரண்டாவது ஆண்டாக என் வாழ்வோடு பயணிக்கின்றது. GarageBand இல் இசைத்துணுக்குகளை ஒலிப்பதிவு செய்யவும் ரிங்டோனாகவும் மாற்றவும் அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டேன். 12 வருஷமாக விண்டோஸ் பாவனையாளனாக இருந்து திடீரென்று நுழைந்த ஆப்பிள் உலகம் புதுமையாகவும் தினம் ஒரு பாடம் நடத்தும் பள்ளியாகவும் இருக்கின்றது.
iMac வீட்டுக்கு என்றால் வீதிக்கு iPhone என்று ஏற்படுத்திக் கொண்டேன். ரயிலில் பயணிக்கும் போது வானொலி கேட்க ஏதுவாக tuneinradio ஐ இறக்கிக் கொண்டேன். இன்றுவரை அதுதான் என் வழித்துணை. மெல்ல மெல்லத் தேவையான ஒவ்வொரு iPhone app ஐயும் இறக்கிப் பார்த்துச் சோதனை செய்து அதன் பயன்பாடுகளை விலாவாரியாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நாளாக முனைப்பாக மாறிப்போனது. காரில் பயணிக்கும் போது அது நாள் வரை இருந்த சீடி ப்ளேயரில் இருந்த நாட்டம் விலகி iPhone வழியாக இணைய வானொலிகளைக் காரின் FM Tuner வழி இயக்கிக் கேட்பது இன்னொருபக்க சுவாரஸ்ய அனுபவம்.
நண்பர்களின் பிறந்த நாள், களியாட்டங்களுக்குப் பாடல்களைப் போடும் பொறுப்பும் அவ்வப்போது கிடைக்கும் கெளரவங்களில் ஒன்று. இதற்கும் பெரிய சீடி ப்ளேயரைக் கட்டிக்காவ வேண்டுமே என்று நினைத்தபோது யதேச்சையாக ஒரு இலத்திரனியல் கடையில் கண்ட Party Walker இன்னொரு தீர்வைத் தந்தது. இந்த Party Walker இன் தலையில் ஐபோனையோ ஐபொட் இனையோ செருகினால் போதும் அட்டகாசமான உலகத்தரத்தில் இசை முழங்கும். அதையும் வாங்கிவைத்துக் கொண்டேன். களியாட்டங்களுக்கு மட்டுமன்றி வீட்டில் இருக்கும் போதெல்லாம் சத்தமாகப் பாட்டைக் கேட்டுக் களி கொள்ளும் தருணங்களில் Party Walker துணை நிற்பார்.
அவ்வப்போது சிட்னியின் நகர மையத்தில் அமைந்திருக்கும் Apple Store சென்று என்ன சமாச்சாரங்கள் புதிதாக வந்திருக்கின்றது என்று ஆராய்வது என் குழந்தைத்தனமான வேலைகளில் ஒன்று. அப்படியாக நெடுநாள் கண்வைத்துக் கியூவில் நின்று வாங்கிய பெருமையைக் கொடுத்தது iPad 2 இன் வரவு. தாயகத்துக்குப் பயணப்பட்ட போது Dialog Sim பொருத்தி iPad 2 வழியாக அப்போதெல்லாம் உலகைத் தரிசித்தேன். இப்போதும் படுக்கைக்குப் போகும் முன் iPad இல் கொஞ்ச நேரம் உலாவிவிட்டு வராவிட்டால் எனக்கு இருப்புக் கொள்ளாது.
நண்பர் கே.ஆர்.எஸ் சென்ற மாதம் காட்டிய இன்னொரு சமாச்சாரம் தான் நான் சமீப காலத்தில் வாங்கிய இன்னொரு ஆப்பிள் சார்ந்த சமாச்சாரம். வானொலி ஊடக உலகில் இருக்கும் இதுநாள் வரை நேரடியாக வானொலி ஒலிப்பதிவுக்கூடத்துக்குக் கலைஞர்களையோ அல்லது பேட்டி காணும் இன்ன பிறரையோ அழைத்து வந்தே ஒலிப்பதிவு செய்யும் சாத்தியம் இருந்து வந்தது. ஆனால் iRig என்ற ஒலிவாங்கி ஐபோன் அல்லது ஐபாட் ஐ இணைத்து ஒலிப்பதிவுக்கூடம் தவிர்ந்த வெளிப்புறங்களிலும் வானொலி சார்ந்த பேட்டிகளைச் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றேன்.
இப்படியாக ஆப்பிள் உலகத்தின் ஒவ்வொரு சாதனங்களோடும் என்னைத் தீவிரமாக இணைக்க முடிந்தது அந்த உலகத்தைக் காட்டிய பிதாமகர் Steve Jobs உழைப்புத் தான். என்னைப்போல எத்தனையோ மில்லியன் நுகர்வோரைக் கவர்ந்த அந்த மகாமனிதரின் செயல்திறனும் காலத்துக்கேற்ப நுகர்வோர் சந்தையில் ஏற்படுத்தி வந்த சத்தமில்லாப்புரட்சிகளுமே இந்த நிறுவனத்துக்கு ஏகப்பட்ட மறைமுகமான விளம்பரங்களை ஆப்பிள் உலகின் பாவனையாளர்களாலேயே கொடுக்கும் அளவுக்கு மாறியிருக்கின்றது. சாம்பல் பின்னணியில் கடித்த கறுத்த ஆப்பிள் இந்த முத்திரைக்குள் அடங்கி அமைதியாக இருக்கின்றது Steve Jobs இன் ஆன்மா.