Thursday, May 23, 2013
யாழ்ப்பாண யாத்திரை
கடந்த நவம்பர் மாதம் தான் தாயகத்துக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தேன், அப்போது நினைக்கவில்லை அடுத்த ஆறு மாதத்தில் இன்னொரு பயணம் வாய்க்குமென்று. யாழ்ப்பாணத்தில் இருக்கும் என் பெற்றோரைக் காணவும், இன்னும் சில தனிப்பட்ட வேலைகளுக்காகவும் மீண்டும் தாயகம் நோக்கிப் பயணப்பட வேண்டியிருந்தது. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவுக்கும் காத்திருக்கும் கொக்கு போல மலிவு விலை விமானச் சீட்டுக்கள் மலேசியன் எயார்லைன்ஸ் வழியாக கைக்கெட்டியும் இறுதி நேரம் வரை என் பயணம் குறித்து முடிவெடுக்காததால் வழக்கம் போல சிங்கப்பூர் எயார்லைன்ஸே சரணம் என்று களத்தில் குதித்தேன். கூடவே இலங்கைக்குப் போவதற்கான விஸாவையும் உத்தியோகபூர்வ இணையம் வழியாகச் சென்று நிரப்பிப் பணம் கட்டி எடுத்தாயிற்று. இப்போது இலங்கைக்கான விஸா எடுப்பதற்கான போலி இணையத்தளங்கள் சிலவும் களத்தில் இறங்கியிருப்பதாக விமானச் சீட்டு விற்பனை முகவர் எச்சரித்திருந்தார்.
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் மதியம் மூன்று மணி வாக்கில் சிட்னியிலிருந்து கிளம்பும் போதே விமானத்தில் காண்பிக்கும் படங்களின் பட்டியலை நோட்டம் விட்டேன். என் நினைப்புப் பொய்யாகவில்லை, சுந்தர்.C இன் "முரட்டுக்காளை", சந்தானத்தின் சுட்ட லட்டுத் தின்ன ஆசையா போன்ற கலைப்படங்களை (!) வழக்கம் போலவே யாரோ ஒரு கலா ரசிகர் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார். எனவே இது ஆவுறதில்லை என்று மனசுக்குள் முடிவெடுத்துக் கொண்டு என் iPad இன் வயிறு முட்டச் செருகி வைத்த படங்களில் "மை டியர் மார்த்தாண்டன்" படத்தை ஓடவிட்டேன். சிங்கப்பூர் வரும் வரை எட்டரை மணி நேரப் பயணத்தில் படமும், புத்தக வாசிப்புமாகக் கழித்தாகிவிட்டாயிற்று. சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கான பயணம் இரவைக் கிழித்துக் கொண்டு போவதால் என் கண்கள் சொக்கிச் செருக, அப்படியே சாய்ந்து விட்டேன்.
கொழும்பு விமான நிலையத்தில் வைத்தே Dialog செல்போன் நிறுவனத்தின் ரூபா 1300 மதிப்பிலான Toursit prepaid SIM card ஐயும் வாங்கிக்கொண்டேன் அதில் 1 GB data வும், அழைப்புக்களும் உள்ளடங்கலாக இருந்தன. அங்கிருந்தே ஒரு டாக்ஸி மூலம் ரூபா 2800 ஐச் செலுத்தி கொழும்பு நகரப்பகுதிக்கு வந்து சேர அதிகாலை இரண்டு மணியைத் தொட்டது. கிடைத்த ஒருவார விடுமுறையை என் சொந்த ஊரிலேயே அதிகம் இருந்து விடுவோம் என்று முன்கூட்டியே இன்னொரு ஏற்பாட்டையும் செய்து வைத்திருந்தேன். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேரூந்துக்கள் இரவு வேளைகளில் மட்டுமே செல்லும். பகலில் என்றால் அரச பஸ் சேவை மட்டுமே, அதில் ஏறி உட்கார்ந்தால் யாழ்ப்பாணம் போய்ச் சேர்வதற்குள் இரண்டு பகல் ஆகிவிடும் நானும் செத்தல் மிளகாய் ஆகிவிடுவேன். எனவே கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு காலையில் புறப்படும் யாழ்தேவி (அதிகாலை 5.45 மணிக்கு இது கிளம்பும்) அல்லது Intercity எனப்படும் அதிவேகச் சேவை (காலை 6.45 மணிக்கு இது கிளம்பும்) என்று இரண்டில் ஏதாவது ஒன்றில் பயணித்துப் பின்னர் வவுனியாவில் இருந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் போகலாம் என்று முடிவெடுத்தேன். என் நினைப்பைச் செயற்படுத்த ஆபத்பாந்தவனாய் வந்தார் புதுமாப்பிள்ளை வந்தியத்தேவன் என்ற மயூரன். அவர் எனக்காக Intercity ஆசனப்பதிவைச் செய்து கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்துக்கு காலை ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டார். வந்தியத்தேவனுடன் புகையிரத நிலைய தேநீர்ச்சாலையில் சூடான நெஸ்கஃபே அருந்திக் கொண்டு குறைந்த நேரத்தில் நிறையப் பேசி முடித்தோம்.
Intercity ரயிலும் வந்தது, என் ஆசனத்தைத் தேடி உட்கார்ந்து கொண்டேன். அதுவரை துணையாக இருந்த வந்தியத்தேவனும் விடைபெற்றுச் சென்று விட்டார். எனக்குப் பக்கத்தில் ஒரு ஐரோப்பிய நாட்டு இளைஞன் ஊர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறான். கையோடு ஒரு தண்ணீர்ப்போத்தலைக் கொண்டு போயிருக்கலாமோ என்று பின்னர் வருந்த வைத்தது அந்தத் தண்ணியில்லாக்காட்டு ரயில். எங்கள் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் திருவிழாக்கால விரதம் வேறு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இல் கொறித்த உணவுக்குப் பின்னர் வயிறும் பாலைவனமாக இருந்தது. சாப்பாட்டுச் சாமான்கள் இரண்டு தடவை கூவிக்கூவி விற்றார்கள் ஆனால் தண்ணீரோ, தேநீரோ விற்குமாற்போல இல்லை. ரயிலின் வேறு பெட்டியில் உணவுச் சாலை இருக்கலாம், ஆனால் என் கூடவந்த பயணப்பொதிகளைத் தனியே தவிக்க விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் ஐந்தரை மணி நேரம் தண்ணீரின்றிக் கடுந்தவப் பயணம் மேற்கொண்டேன். பொல்காவல என்ற ரயில் நிலையம் வரை பெட்டி கனத்த கூட்டம் இருந்தது ஆனால் அந்த நிறுத்தத்தில் பாதியாகக் கழன்றது, மீதிக் கூட்டம் அநுராதபுரத்தில் இறங்கிக் கொண்டது. கூட இருந்த வெள்ளைக்காரனும் அநுராதபுரத்தில் இறங்கிவிட்டான். வவுனியாவில் ரயில் முத்தமிடும் போது நானும் இன்னும் இரண்டு தமிழ்க்குடும்பங்களும் மட்டுமே அந்தப் பெட்டியில்.
வவுனியா ரயில் நிலையம் நண்பகல் 12.15 ஐக் காட்டிக் கொண்டிருந்தது. நீண்ட சூட்கேஸுடனும், கழுத்தைச் சுற்றி நெரிக்கும் பையுடனும் அல்லாடிக்கொண்டே வெளியே வந்தேன். ஆட்டோக்காரர்களின் சங்கமம். அதில் பொட்டும், திருநீறும் வைத்த ஒரு அப்பாவி ஆட்டோக்காரர் முகத்தைத் தேர்ந்தெடுத்து "வவுனியா பஸ் ஸ்ராண்ட் போகோணும் அண்ணை, எவ்வளவு?" என நான் கேட்க, "ஏறுங்கோ, நூறு ருவா தாங்கோ" என்று விட்டு சூட்கேஸை கேட்காமலேயே உள்ளே வைத்தார். இந்த வவுனியா மண்ணில் இருபது வருஷங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கிறேன். குருமண் காடு பகுதியில் தங்கியிருந்து படித்த காலம் கொஞ்சம் என்றாலும் ஓரளவு ஊரைத் தெரிந்து வைத்திருக்கிறேன். இப்போது எல்லாம் மாறிவிட்டது, சூழலும் முந்தியது போலலல்ல ஆனாலும் ஒரு அசட்டுத் துணிச்சலோடு பயணிக்கிறேன்.
வவுனியா பஸ் நிலையத்துக்கு வந்தாச்சு அங்கே வலப்பக்கமாக லைன் கட்டியிருக்கும் சிவப்புக் கலர் பஸ்கள் அரச பஸ்கள், இடப்பக்கம் இருப்பவை தனியார் பஸ்கள் என்று கைகாட்டிவிட்டு ஆட்டோக்காரர் சென்றுவிட்டார். வவுனியாச் சூரியன் விட்டேனா பார் என்று தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாள் தொடர்ச்சியான பயணம், பசிக்களை வேறு.
மீண்டும் சூட்கேஸ், பயணப்பொதியோடு குழந்தைகளோடு இழுபடும் தாய் போல இழுத்துக் கொண்டு ஏதாவது ஒரு தேநீர்ச்சாலை சென்று வயிற்றை நிரப்புவோம் என்று ஒரு கடைக்குப் போய் "தம்பி பணிஸ் (sweet bun) இருக்குதோ" என்று நான் கேட்க "இல்லையண்ணை" என்ற பதில் வர, இன்னொரு கடைக்குப் போனேன் இருப்பதில் ஏதாவதை வாங்கிக் கடிக்கலாம் என்று. அங்கே சென்று குளிர்பானத்தால் உடலைக் குளிர்வித்து விட்டு "பணிஸ் இருந்தா தாங்கோ" என்றேன். கடைக்காரப் பையன் கொடுத்த பணிஸ் ஐ வாயில் வைத்தால் என் பற்களை நொறுக்கும் போல இருந்தது, அதை எடுத்து ஒரு பஸ்ஸுக்கு எறிந்தால் ஜன்னல் கண்ணாடியே உடையும் போல. "வேற ஏதும் சைவச்சாப்பாடு இருக்கோ" "இந்தாங்கோ இதில் இருக்கிறதெல்லாம் சைவம் தான்" என்று கடைக்காரப்பையன் நீட்டியதில் ஒரு போண்டாவைப் பேப்பரில் சுற்றி எண்ணெயை முதலில் அகற்றினேன். பின்னர் சூம்பிப்போன அந்த போண்டாவை எடுத்து வாயில் வைத்தால் நவரசங்களும் என் முகத்தில் பதிவாக, தின்றால் பாவம் என்று அப்படியே போட்டுவிட்டு காசைக் கரியாக்கிவிட்டு வெளியே வந்தேன்.
அங்கே நிற்பவர்களிடம் யாழ்ப்பாணம் போகும் பஸ் எது என்று விசாரித்து ஒன்றைப் பிடித்து விட்டேன். "ஒரு மணிக்கு வெளிக்கிடும் அண்ணை, சூட்கேசை பின்னாலை இருக்கிற ஸ்பேசிலை போடுங்க" "இல்லைத்தம்பி நான் கையில வைச்சிருக்கிறன்" "உந்தப் பெரிய சூட்கேசை எப்பிடியண்ணை கையிலை வச்சிருப்பியள்" என்று கேட்டு சூட்கேஸை என்னிடமிருந்து பிரித்தான். பஸ் புறப்படுவதற்கு முன் கிடைத்த அவகாசத்தில் கச்சான் (நிலக்கடலை), அவித்த சோளம், பத்திரிகை என்று கூடைகளோடு சிறு வியாபாரிகள். கச்சானை வாங்கி வயிற்றை நிரப்புவோம் என்று ஒரு சரை கச்சான் பொட்டலத்தையும், அன்றைய வீரகேசரிப் பத்திரிகையையும் வாங்கினேன். கச்சானில் ஒன்றிரண்டை உடைத்தால் எலும்பும் தோலுமாக இருந்தன. ஒருகாலத்தில் வன்னியில் விளையும் நிலக்கடலைகள் கொழுத்த சீமாட்டிகளாக இருக்கும், இப்போது அவையும் ஊர்ச்சனம் போல வந்துட்டுது என்று நினைத்துக் கொண்டேன். தினமும் அந்தப் புழுதிக்காட்டு வழியே பயணப்படும் இப்படியான பஸ்ஸில் ஏசி இருக்கா என்றால் ஏசி விடுவார்கள், இருக்கைகள் இருக்கக் கூடிய தரத்தில் இருந்தன.
கூட்டம் அதிகமில்லைத்தானே என்ற என் நினைப்பில் மண்ணாக ஒன்று, இரண்டு பத்தாகக் கூட்டம் நிரம்பி, வவுனியாவை விட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் போது ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தது பஸ்.
"பூங்கொடிதான் பூத்ததம்மா" பாடலோடு இளையராஜா தன் கச்சேரியை ஆரம்பித்தார். எத்தனை ஆண்டுகள் சென்றாலும் இந்த பஸ் பயணங்களின் பாடல்கள் மட்டும் இளையராஜாவின் எண்பதுகளிலேயே தங்கிவிடுகின்றனவே என நினைத்துக் கொண்டேன்.
எனக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் இரண்டு பெண்கள். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு வந்தார்கள். ஓமந்தைச் சோதனைச் சாவடி வந்தது. "பாஸ்போர்ட் உள்ளவை, வெளிநாட்டுக்காறர் இறங்குங்கோ, வெளியில போய் பதிவு செய்யவேணும்" என்று பஸ் நடத்துனர் கூவினார். உள்ளூர் அடையாள அட்டை கொண்டவர்களுக்கு பஸ் இல் இருக்கும் போதே அடையாள அட்டை பார்க்கப்படுகிறது. நான் இறங்கினேன், அட நான் மட்டும் தான் வெளிநாட்டுக்காறன் போல. இராணுவச் சோதனைச் சாவடியில் பதிவு செய்து விட்டு பஸ்ஸில் ஏறினேன். இப்போது எனக்குப் பக்கத்தில் இருந்தவள் என்னை ஒரு அனுதாபப் பார்வை பார்த்து பேச்சுக் கொடுக்கிறாள்.
"அண்ணை எந்த இடம்"
"ஒஸ்ரேலியாவில் இருந்து வாறன் தங்கச்சி"
"ஓ, முந்தி வெளிநாட்டுக்காறர் இப்பிடியான பஸ்ஸில் வரவே பயப்பிடுவினம், இப்ப துணிஞ்சிட்டியள் என்ன" என்று சிரித்தாள். எனக்கு வயிற்றைக் கலக்கியது ஏன் இப்பிடிப் பயப்புடுத்துறாள் இவள்.
"இப்ப ஒஸ்ரேலியாவுக்கு எங்கடை ஆட்கள் நிறையப் பேர் வருகினம் என்ன"
"ஓமோம் ஆனால் இப்ப முந்தின மாதிரி இல்லை, ஒஸ்ரேலியன் அரசாங்கம் கடுமையா இருக்குது"
"என்னண்ணை செய்யுறது யுத்தம் முடிஞ்சாலும் அதின்ர வடுக்கள் இன்னும் போகேல்லை, ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு விதமான இழப்புக்கள், சனம் தான் என்ன செய்யும்" என்ற அவளிடம்,
"நீங்கள் ரெண்டு பேரும் கூட்டாளிமாரோ" என்று கேட்டேன், அதுவரை பேசாமல் இருந்த இரண்டாமவள் சிரித்துக் கொண்டே "சீச்சி இவ என்ர அக்கா" என்றாள்.
மூத்தவள் தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்,
அந்தச் சகோதரிகளில் மூத்தவர் பத்துவருஷங்களுக்கு முன்னர் மணம் முடித்தவர் கணவன் வாகனமோட்டிப் பிழைப்பு நடத்தியவராம். கல்யாணமாகி 6 மாதத்தில் மட்டக்களப்பில் ஒரு வேலையாய் போனவர், வாகனத்தோடு காணாமல் போய்விட்டாராம் இரட்டை ஆண்மக்களோடு, தன் கணவனை கடந்த 10 ஆண்டுகளாகத் தேடுகிறாள் இந்த முப்பது வயதுப் பெண். இப்போது அவளுக்கு இன்னொரு சிக்கல், தன் இரண்டு பிள்ளைகளையும் விடுமுறைக்காக வவுனியாவில் இருக்கும் மாமியார் வீட்டில் விட்டிருந்தாராம். இப்போது பிள்ளைகளைத் தரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாளாம் மாமியார். "இத்தனை ஆண்டுகளாக கல்யாணம் செய்யாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்ததற்கு இதுதானா அண்ணா தண்டனை? எனக்குப் பொலிஸ் இல் சொல்லி அவ்ர்களின் மானத்தை வாங்கவிரும்பவில்லை"என்று தன் துயரத்தை என்னிடம் பகிர்ந்தாள்.
என்னால் முடிந்த ஆலோசனையைச் சொல்லித் தேற்றினேன். அதற்குப் பின் ஒரு பெரிய அமைதி, கடைக்கண்ணால் பார்த்தேன், ஒரு கையை முன் இருக்கையின் கம்பியில் வைத்துக் கொண்டே உடல் குலுங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் போல இன்னும் ஆயிரக்கணக்கில் தன் கணவன், மகன் உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மாதக்கணக்கு தாண்டி இப்போது வருடக்கணக்கில் இருக்கிறார்கள் முடிவில்லாத தொடர்கதையாக.
கிளிநொச்சி வந்தது, பஸ் ஓரங்கட்டியது. "நீ போய் ஏதாவது வாங்கிச் சாப்பிடு எனக்கும் ஏதாவது வாங்கி வா" என்று தன் தங்கைக்குக் கட்டளை இட்டுவிட்டு என்னிடம் திரும்பி "அண்ணை நீங்களும் ஏதாவது சாப்பிட்டு வாங்கோ, இஞ்சை தாங்கோ பாக் ஐ" என்று என் கைப்பையை வாங்கினாள். அந்த தேநீர்ச்சாலையில் பஸ் நிற்கும் அந்த சில நிமிடங்களுக்குள் பரபரப்பான வியாபாரம் நடக்கிறது. சுற்றும் நோட்டமிட்டேன். பாலைப்பழம் விற்கிறார் ஒருத்தர். பாலைப்பழம் சாப்பிட்டு வருஷக்கணக்காச்சு வாங்குவோமா விடுவோமா என்று நான் நினைப்பதற்குள் அந்தப் பெட்டியே விற்றுத் தீர்ந்துவிட்டது. "மலையாளபுரம் வீதி" என்ற பெயர்ப்பலகையைக் கண்டு சிறிது ஆச்சரியப்பட்டேன். அதற்கான விடை பின்னர் வன்னியில் இருக்கும் என் நண்பன் மூலமாகத் தெரிந்து கொண்டேன். இந்திய வம்சாவளியினர் வன்னிப்பிரதேசங்களில் குடியேறிப் பல ஆண்டுகளாகின்றன. அதில் ஒன்று தான் இந்த மலையாளபுரமாம்.
பஸ் ஹோர்ண் அடித்து பயணிகளை மீண்டும் நிரப்பிக்கொண்டு கிளம்பியது. அக்காக்காரியிடம் தங்கை ஏதோ குசுகுசுத்தாள்.
"அண்ணை பிரச்சனை இல்லையெண்டா உங்கட ஜன்னல்கரை சீற்றுக்கு இவவை விடமுடியுமோ, சத்தி வருமாப் போல இருக்காம்"
"இதென்ன தங்கச்சி முதலிலேயே சொல்லியிருக்கலாமே நான் விட்டிருப்பன்" என்று சொல்லிக் கொண்டே இடம் மாறினேன். வவுனியாவில் வாங்கிய தண்ணீர்ப்போத்தல் உடைபடாமல் இருந்தது.
"இந்தாங்கோ இதைக் குடியுங்கோ" என்று நான் தண்ணீர்ப்போத்தலை நீட்ட
"சீச்சீ வேண்டாமண்ணை, கிணத்துத் தண்ணியைத் தவிர உப்பிடிப் போத்தில அடைச்சதைக் குடிச்சுப் பழக்கமில்லை" என்று மறுதலித்தாள் சின்னவள்.
என்னிடம் இருந்த வீரகேசரிப்பேப்பரை உரிமையோடு வாங்கிக் கொண்ட மூத்தவள் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே
"இப்ப ஊர் முந்தின மாதிரி இல்லைண்ணை, கஷ்டப்பட்டு முன்னுக்கு வாற இளம் சந்ததியும் இருக்கு அதே நேரம் வெளிநாட்டுக் காசு கூடி, தலைகால் தெரியாமல் நடக்குறவையும் இருக்கினம்,
இதைவிடக் கொடுமை அண்மைக்காலமா தாய், தகப்பன் இல்லாமல் கஷ்டப்படுற ஆதரவற்ற சின்னனுகளைப் பாதுகாக்கிற இடங்கள்ல இருக்கிறவை அந்தப் பிள்ளையள் மேல நடத்துற பாலியல் துஷ்பிரயோகம், இப்பிடியான கலாச்சாரச் சீரழிவை எல்லாம் தட்டிக்கேட்க ஆருமே இல்லை இப்ப"
என்று ஆதங்கப்பட்டாள் பெரியவள்.
வழக்கமாக முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் இறங்கிப் போகும் பஸ்கள், ஆனால் இந்த பஸ் புதுசாப் போட்ட வீதிப் படுக்கையைக் கண்ட குஷியில் நிலை கொள்ளாமல் வேகமெடுத்தது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு வந்து தரித்த போது மணி நாலு.
"சந்தோஷமாப் போட்டு வாங்கோ, எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று கூட வந்த அந்தச் சகோதரிகளுக்கு விடை கொடுத்து விட்டு ஆட்டோக்காரரைத் தேடி வீடு வந்தேன்.
யாருடைய துணையும் இல்லாமல் ஏன் வீட்டுக்காரருக்கே இப்படியானதொரு பயணத்தில் வருகிறேன் என்று சொல்லாமல்தான் யாழ்ப்பாணம் வந்து இறங்கினேன்.
"கொழும்பில இருந்து ரயில் எடுத்து, இப்பிடி எல்லாம் வந்தனீங்களோ" என்று ஆச்சரியப்பட்டார் அப்பா.
"ஏன் அப்பா இது என்ர நாடு தானே" என்று நான் விட்டுக்கொடுக்காமல்
மெலிய முறுவல் கலக்கப் பெருமிதத்தோடு பார்த்தார் அப்பா.
Friday, May 03, 2013
சித்தெறும்பு என்னை கடிக்குது
வழக்கம் போல எனக்கே எனக்கான பொழுதுபோக்கைத் தேடி YouTube ஐ மேய்கிறேன். சில சமயம் மனசுக்குள் ஏதாவது ஒரு பாடலைக் கேட்கவேண்டும் என்று நினைத்து அந்தப்பக்கம் போனால் தேடிப்போன பாடலை விட்டு வேறு ஏதாவது பாடலில் மோகம் வந்து கேட்கத்தோன்றும். அப்படித்தான் இன்றும், வெகு நாள் கழித்து "சின்னராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது" கண்ணிற் பட்டது.
பாடல் ஒலிக்கிறது, என் நினைவுச்சுழல் தொண்ணூற்றி மூன்றை நோக்கிப் பின்னோக்கிப் போகிறது.
அப்போது பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலமது, கடும் யுத்த ஒரு பக்கம், ஆனாலும் இளைஞர்களுக்கு ஏதோ ஒருவகையில் கிட்டிய ஒரே ஆறுதல் சினிமாப்பாட்டு. புதுசா ரஹ்மான் என்ற இசையமைப்பாளர் வந்து கொம்ப்யூட்டர்ல மியூசிக் போடுறார். இளையராஜாவின் அணியில் இருந்த சந்தர்ப்பவாதிகள் எதிரணி அமைத்துக் கொண்டு விட்டார்கள். நமக்கோ ஏகப்பட்ட கடுப்பு. ஆனாலும் ராஜா அந்த நேரத்தில் மானாவாரியாக இசையமைத்த படங்கள் உப்புமா கம்பெனியில் இருந்து பி.வாசு படங்கள் வரை எமக்குப் பக்கபலமாக இருந்து எதிர்க்கட்சிக்காரரைச் சமாளிக்கக் கைகொடுத்தன. யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்ட் பக்கமா இருக்கிற ஒரு மரப்பெட்டி மேல் மாடியில் சண் றெக்கோடிங் பார், ஷண் தான் எனக்கு ஆஸ்தான பாடல் ஒலிப்பதிவாளர். "என்னண்ணை படப்பாட்டு வந்திருக்கு" என்று கேட்டால் என்றால் நோட்டுப் புத்தகத்தில் புதுசா வந்த படத்தின் தலைப்பைப் போடு இரண்டு கீறு அதுக்குக் கீழே இழுத்து விட்டு, பாடல்களையும் பாடியவர்களின் விபரங்களைப் போட்ட நோட்டுப் புத்தகத்தைக் காட்டுவார். இதெல்லாம் சம்பிரதாயபூர்வமான விஷயம் என்றாலும் அவருக்குத் தெரியும் நான் என்ன முடிவு எடுப்பேன் என்று.
"இந்தப் படம் இளையராஜா இசையமைச்சதெல்லோ, முழுக்க றெக்கோர்ட் பண்ணுங்கோ" என்று விட்டு ஒரு நைந்து போன ஒலிநாடாவைக் கொடுத்து விட்டு வருவேன். அந்தக் காலத்தில் கசெட் இற்கும் தடை என்பதால் பாடல் பதிவு செய்யப்பட்டு அலுத்துப் போன கசெட்டில் மீளவும் வேறு பாடல்களைப் பதிப்பித்துக் கேட்கும் காலம். ஷண் ரெக்கோர்டிங் பார் குறித்து எழுத வேண்டியது நிறைய, அதைப் பிறகு பார்ப்போம்.
ஒருநாள் டியூசன் முடிந்து திருநெல்வேலிச் சந்தியால் நாலைந்து பெடியளுடன் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருக்கிறோம், ஒரு முடக்கில் இருந்த ரெக்கோர்ட்ங் பார் இல் இருந்து வருகிறது பாட்டு, "சின்னராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது". அப்போதுதான் அந்தப் பாட்டைக் கேட்கிறோம், ஆளையாள் பார்த்துச் சிரிக்கிறோம், "என்னடா இது சித்தெறும்பு கடிக்குதாம் எப்பிடியெல்லாம் எழுதுறாங்கள்" ஆனால் அந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்திலேயே ராஜாவின் பாடல் என்பதால் எதிரணிக்கு இடம் கொடுக்காமல் "அருமையான ரியூன் மச்சான், ஜானகி பின்னுறா" என்று விட்டுக்கொடுக்காமல் பேசுகிறோம். ஆனாலும் உள்ளுக்குள் வெட்கம். ஏனென்றால் மின்சாரம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பாடல் கேட்பதென்றால் வீட்டு முற்றத்தில் சைக்கிளைக் கிடத்தி, பெடலை உருட்டும் போதுஅதில் உள்ள டைனமோவில் இருந்து மின்சாரத்தை டேப் ரெக்கார்டரில் பாய்ச்சித் தான் பாடலைக் கேட்கவேண்டும். சுற்றும் முற்றும் உள்ள வீட்டுக்காரருக்கும் பாடல் அலறும் அளவுக்குச் சத்தமாக இருக்கும்.
அடுத்த நாளே ஷண் ரெக்கோர்டிங் பார் சென்று இல் வால்டர் வெற்றிவேல் பாட்டு முழுக்க அடிச்சாச்சு, எல்லாப்பாட்டிலும் இந்தப் பாட்டுத் தான் கேட்க வேண்டும் போல இருக்கு. ஏன்றென்றால் ஷண் ரெக்கோர்டிங் பார் காரனும் இந்தப் பாட்டை விடுவதாக இல்லை. திரும்பத் திரும்பப் போட்டு மனசில் இந்தப் பாடலை ஆக்கிரமிக்கச் செய்துவிட்டார். நண்பன் சுதா வீட்டுக்குக் பாடல் கசெட் ஐ எடுத்து செல்கிறேன். புதுசா "வால்டர் வெற்றிவேல்" எண்டு ஒரு படப்பாட்டு வந்திருக்கு. ஒரு பாட்டு இருக்கு கேளும் முசுப்பாத்தியா இருக்கும் என்று நைசாகக் கதையளக்கிறேன். சில சமயம் எதிராளி எங்களை அவமானப்படுத்த முன்னர் நாங்களே சரண்டர் ஆகி விட்டால் பிரச்சனை பாதி முடிந்த மாதிரித்தான். அப்படித்தான் இங்கேயும். 'கட்டெறும்பு என்னைக் கடிக்குது எண்டெல்லாம் பாட்டு எழுதினம் கேட்டுப் பாருங்கோ" என்று நைச்சியமாகப் பேச, சுதாவும் சிரித்துக் கொண்டே சைக்கிளைக் கிடத்திவிட்டு பெடலை சுழற்றுகிறார். எடுத்த எடுப்பில் முதல் பாட்டே "சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது" ஒரு கையால் பெடலைச் சுத்திக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார் கூட்டாளி சுதா.
அந்தப் பக்கமாகப் போன சுப்பையாண்ணை, வயசு எழுபதுக்கு மேல் இருக்கும் "உதென்னடா பாட்டுப் போடுறியள் கட்டெறும்பு கடிக்குது எண்டு, அந்த நாளேலை நாங்கள் கேட்ட பாட்டும், இப்ப வாற பாட்டுக்களைக் கேட்டால் சீவன் போகுது" என்று புறுபுறுத்துக் கொண்டு நகர்கிறார். கொஞ்ச நாளில் ஊரெல்லாம் பரவுகிறது "சித்தெறும்பு" பாட்டு. எங்களுக்கும் வலு சந்தோசம், எதிர்க்கட்சிப் பாட்டுக்காரரும் விரும்பிக் கேட்கினம். படம் வந்த நேரம் பிரபு தேவா போட்ட தொள தொள ஜீன்ஸ் உம் பிரபலம். அதை பகி ஜீன்ஸ் என்று சொல்லி, "அண்ணை பொக்கற் பக்கம் நாலு கீறு டிசைன் போட்டு, கால் பக்கம் தொள தெளவெண்டு இருக்கோணும் என்ன" என்று ஊரிலுள்ள தையல்கடைக்காரருக்கும் நவ நாகரிகம் கற்றுக் கொடுத்தாச்சு. கோயில் திருவிழாவில் நாதஸ்வரக்காரரும் வடக்கு வீதிக்கு சுவாமி உலா வரும் போது ராகமிழுக்கிறார் அட அவர் வாசிக்கிறதும் "சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது". கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பாடலை ரசிக்கிறோம்.