Sunday, August 08, 2021
ஈழத்து நாடக இயக்கக்காரர் க.பாலேந்திரா அகவை எழுபதில்
Thursday, August 05, 2021
கின்னஸ் சாதனை படைத்த ஈழத்தமிழன் “ஆழிக்குமரன்” ஆனந்தன்
வல்வெட்டித்துறை மண் தம் தேசம் காத்த வீர மறவர்களை மட்டுமல்ல, கல்விமான்கள், விளையாட்டு வீர்ர்கள் பலரையும் ஈன்றெடுத்த பூமி அது.
அப்படியாகப்பட்டதொரு வீரனாக விளைந்தவர் தான் ஆழிக்குமரன் ஆனந்தன். இவர் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் சேவையில் பணிபுரிந்த விவேகானந்தனின் மகன் வி.எஸ்.குமார் ஆனந்தன். ஆனந்தன் மனைவி பெயர் மானில், ராஜன் மற்றும் ராஜேஷ் என்று இரண்டு மகன்கள்.
உலக சாதனை கொண்ட இந்த வீரன் தன் சிறு பிராயத்தில் இளம் பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். ஆனால் அவரின் பின்னாளைய சாதனைக்கு அதுவொன்றும் தடைக்கல் அல்ல.
ஆனந்தன் உலக சாதனைப் பதிவேட்டில் தன் பெயரைப் பொறிக்கும் முன்பே கல்வியிலும் ஆளுமைப்பட்டவராகத் துலங்கினார்.
அறிவியலில் B.Sc (லண்டன்), சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் LL.B (இலங்கை) என்று பட்டப் படிப்புத் தேர்ச்சி கண்டு தன்னை ஒரு சட்டவாளராக உருவாக்கிய பின்னர் தான் தன்னுடைய சாதனைப் பயணத்தின் வீச்சை ஆழப்படுத்தினார்.
நீச்சல் உலகில் இவர் தன் சாதனைத் தடத்தைப் பதிய வைத்தது தனது 28 வது வயதில்.
அப்போது 1971 ஆம் ஆண்டில் பாக்கு நீரிணை வழியே இலங்கையில் மன்னாரில் இருந்து தொடங்கி இந்தியாவின் தனுஷ்கோடி தொட்டு மீண்டும் மன்னாரை முத்தமிட்டார். அப்போது வெறும் 51 மணி நேரத்திலேயே இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார். இந்தச் சாதனையின் அடையாளமாக “ஆழிக்குமரன்” என்ற பட்டத்தை வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஈழத்தின் மூத்த ஊடக ஆளுமை எஸ்.டி.சிவநாயகம் வழங்கிச் சிறப்பித்தார். அன்று முதல் அதுவே அவரின் அடையாளமுமாய் ஆகிப் போனது.
இவரின் தொடர் சாதனைப் பயணத்தில்
டிசம்பர் 1978 இல்
128 மணி நேரம் ட்விஸ்ட் டான்ஸ் (Twist Dance)
மே 1979 இல்
187 மணிநேரம், 1487 மைல் தூரம் இடைவிடாத சைக்கிள் ஓட்டுதல் (Non-stop cycling)
மே 1979 இல்
33 மணி நேரம் ஒரு காலில் சமநிலைப்படுத்துதல் (Balancing on one foot)
டிசம்பர் 1979 இல்
136 மணி நேரம் Ball punching செய்தல்
மே 1980 இல்
இரண்டு நிமிடங்களில் 165 தடவை Sit up செய்தல்
டிசம்பர் 1980 இல்.
9100 முறை High Kicks செய்தல்
ஆகஸ்ட் 1981 இல்
இடை விடா நடைப் பயணமாக 159 மணிநேரம், 296 மைல் தூரம்
ஆகஸ்ட் 1981 இல்,
சென்னை அண்ணா நீச்சல் குளத்தில் 80 மணி நேரம் Water-Treading
அவர் ஒரு மோசமான மோட்டார் சைக்கிள் விபத்தைத் துரதிஷ்டவசமாகச் சந்தித்தார். ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார்; பின்னர் அவர் இன்னும் ஆறு மாதங்கள் ஊன்றுகோலில் இருக்க வேண்டியிருந்தது. அதன் பிறகும், அவர் Billiards Cue-Levelling மற்றும் மோட்டார் சைக்கிள் வேக ஓட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டார்.
1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சோகம் ஏற்பட்டது. இடை விடாச் சாதனை தாகம் கொண்ட வீரனின் வாழ்க்கையில் முற்றுப்புள்ளி போட்ட தினம் அது.
இங்கிலாந்தின் தென்கிழக்கு முனையான Dover இலிருந்து பிரான்ஸின் தென் முனையமான Cap Gris-Nez வரையான (சுமார் 30 மைல்கள்) ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற போது
அவர் பாதி வழியில் சரிந்தார். சாதகமற்ற நீரோட்டங்கள் மற்றும் ஆறு மணி நேர வீர எதிர்ப்பிற்குப் பிறகு உலக சாதனை வீரனின் முடிவுரை எழுதப்பட்டது.
“இந்தக் கடலின் தன்மைக்கேற்ப என்னைத் தயார்படுத்தக் பயிற்சிக் காலம் போதவில்லை”
என்ற கவலையை உதிர்த்தே இவ்வுலகில் இருந்து விடைபெற்றார்.
ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைத்திறமைகளை கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் இவரின் படம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இன்று 06.08.2021 “ஆழிக்குமரன்” ஆனந்தன் அவர்களது 37 வது நினைவாண்டாகும். (25 மே 1943 - 6 ஆகஸ்ட் 1984)
ஆழிக்குமரன் ஆனந்தன் குறித்து வீடியோஸ்பதி குரல் பகிர்வு
https://www.youtube.com/watch?v=FQBiTkeycT8
கானா பிரபா
மூலத் தகவல்கள் நன்றி :
Dictionary of Biography of the Tamils of Ceylon (Published January 1997) (ஈழத்து நூலகம்.கொம்)
Compiled by: S.Arumugam
with assistance from M.Theagarajah and C.J.T.Thamotheran
ஈழ நாடு பத்திரிகை (08.08.1984) ஈழத்து நூலகம்.கொம்
படங்கள் நன்றி : eLanka.com.au