ஈழத்தின் புகழ்பூத்த ஐந்து ஈஸ்வரங்கள் என்று கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்து விளங்குபவை. இவற்றுள் திருக்கோணஸ்வரமும், திருக்கேஸ்தீஸ்வரமும் திருஞான சம்பந்தராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற சிறப்பையும் தாங்கி நிற்பவை. இன்றைய அரசியல் சூழ்நிலைகளில் முருகக்கடவுளாக இருந்தால் சிங்களப் பெரும்பான்மை சமூகம் ஸ்கந்த தெய்வோ என்று கருணை காட்டும். மற்றய இந்துக் கடவுள் என்றால் இரண்டாம் பட்சம் தான் என்ற சூழ்நிலையில் இலங்கையின் தெற்கிலே இப்போது "திருநந்தீஸ்வரம்" என்றதோர் வரலாற்றுத் தொன்மைமிக்க ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது அதுவும் பெரும்பான்மை சமூகத்தவர் ஒருவரின் காணிக்குள் இது இருக்கின்றது என்ற செய்தியை இந்தமுறை இலங்கைப் பயணத்தில் அறிந்து கொண்டேன். இந்தமுறைப் பயணத்தில் திருநந்தீஸ்வரம் காணவேண்டும் என்று முனைப்பெடுத்து ஒரு நாளும் குறித்துக் கொண்டேன். இனிமேல் தான் சிக்கல்.
திருநந்தீஸ்வரம் என்ற ஆலயம் கொழும்புக்கு அண்மித்திருக்கும் இரத்மலானை என்ற இடத்தில் இருக்கின்றது என்ற தகவலைத் தவிர இந்த ஆலயத்து எப்படிப் போவது என்ற தகவல் கொழும்பில் இருக்கும் பலருக்கே தெரியாத விஷயமாக இருக்கின்றது. சரி எதற்கும் ஒரு டாக்ஸி பிடித்துக் காலையிலேயே இரத்மலானை சென்று அங்கே விசாரிப்போம் என்று நினைத்து, டாக்ஸிக்காரருடன் காலை வேளை கொழும்பு நோக்கிப் பரபரப்பாக ஓடும் காலைவேளை வேலைப்படைக்கு எதிர்த்திசையில் பயணப்படுகின்றோம். இரத்மலானை வந்தாச்சு, இந்தப் பிரதேசம் சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதி. சாரதி இப்போது என் முகத்தைப் பார்க்கிறார். சிங்கள மொழியில் நந்தி என்றால் கொனா , ஆலயம் என்றால் கோவிலய இந்த இரண்டையும் இணைத்துப் பொருத்தினால் கொனா கோயிலய என்ற பெயர் கிட்டுகிறது. காரை நிறுத்தி விட்டு பக்கத்தில் இருந்த பேக்கரிக்காரரிடம் கேட்டோம். அவர் எதிர்த்திசையைக் காட்டி இந்தக் கோயிலுக்கான பாதையைச் சொல்கிறார் சிங்களத்தில். டாக்ஸிக்காரரும் புரிந்ததும் புரியாததும் மாதிரி தலையாட்டி விட்டு காரை இயக்குகிறார். இப்போது வாகனம் இரத்மலானை கடற்கரைப்பக்கமாகத் திரும்பி சந்து பொந்துகளை முத்தமிட்டுப் பயணிக்கிறது. வழியெங்கும் மிகவும் வறிய, அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்க்கையைக் காட்டும் சின்னஞ்சிறு வீடுகளும், பொதுக்குடிநீர்க் குழாயில் காலைக்குளியலிக்குக் கியூ நிற்கும் குழந்தைகளும். சாரதி இடையில் ஒன்றிரண்டு பேரை விசாரித்து ஒருவாறு "கொனா கோவியலய" என்ற ஆலயத்தைக் கண்டுபிடித்தார்.
சுற்றிலும் குடிமனைகள் சூழ்ந்த அந்த ஆலயப்பகுதியில் முன்னே எதிர்ப்படுவது பாரிய அரசமரம், அதைத் தாண்டி வந்தால் புதிதாகக் குடமுழுக்கு செய்ப்பட்ட "திருநந்தீஸ்வரம்" ஆலயம் மிடுக்காக நிற்கின்றது.
திருநந்தீஸ்வரம் ஆலயம் வரலாற்றுத் தொன்மை மிக்க, ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய ஈழத்தின் பழம்பெரும் ஆலயங்களில் ஒன்று. இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் போர்த்துக்கேயர் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 1518 ஆம் ஆண்டு நந்தீஸ்வரம் ஆலயம் முற்றுமுழுதாக போர்த்துக்கேயரினால் நிர்மூலமாக்கப்பட்டது. அங்கு பூஜைகளை நடத்திவந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அந்த இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்தனர். அவருடைய மகனை மதம் மாறுமாறு பலாத்காரமாக அழைத்துச் சென்றனர்.
அதன் பிறகு அப்பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவர் கோயிலைப் பராமரித்து வந்துள்ளார். பெர்னாண்டோ என்ற குடும்பப் பெயருடன் வழிவந்தவர்களே பரம்பரை பரம்பரையாக இன்றுவரை கோயிலைப் பராமரித்து வருகின்றனர்.
போர்த்துக்கேயர் கோயிலை அழித்ததை நினைவுகூருமுகமாக அங்கு சித்திரங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.
இராமாயணக் காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரம் கருதப்படுகிறது.
1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ இராகுல தேரர் என்ற பௌத்த துறவி ‘சலலிஹினி சந்தேசய’ எனும் காவியத்தை இயற்றினார். அந்தக் காவியத்தில் இந்த ஆலயம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் பற்றியும் அங்கு தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியும் அந்த நூலில் துறவி எழுதியுள்ளார்.
இந்தத் தகவல்களை வைத்துப் பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டு தலத்தை ஒத்ததாக முருகனுக்கு ஓர் ஆலயம் அமைத்து கதிர்காம முருகன் ஆலயத்தைப் போன்று பூஜை முறைகள் நடைபெறுகின்றன. அதனையும் பாரம்பரியமாக சிங்களவர்களே நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை வைத்து பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது.
இவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு ஆலயம் புனரமைக்கப்பட்டுவருவதன் பின்னணியும் உண்டு.
கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் 50 வருடங்களுக்கு அதிகமாக பிரதம சிவாச்சாரியாராக கடமையாற்றி இலங்கைக்கு நிறைவானதொரு சமயப் பணி செய்த குஞ்சிதபாத குருக்களின் கனவில் தோன்றிய சிவன் தான் இன்னும் நந்தீஸ்வர ஆலய வலாகத்தில் இருப்பதாகவும் தனக்கு கோயில் எழுப்புமாறும் கூறியுள்ளார்.
பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் 1980 களில் சிவன் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.
ஆதிகால எழுத்துக்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் அப்பகுதியில் காணப்படுகின்றன. கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குளம் ஒன்று தீர்த்தமாக இருந்ததாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
ஆலயத்தின் மகத்துவம் வெளிப்படத் தொடங்க 2005 ஆம் ஆண்டு இந்த ஆலயத்துக்கு சிவன்கோயில் குருக்களே அடிக்கல் நாட்டிவைத்து திருப்பணியை தொடங்கிவைத்தார்.
(வரலாற்றுக் குறிப்புக்கள் நன்றி: இராமானுஜம் நிர்ஷன், வீரகேசரி)
வெள்ளிக்கிழமை நாளில் வந்திருக்கின்றோம். உட்பிரகாரத்தைச் சுற்றிவிட்டு காலைப்பூசை பார்க்கவேண்டும் என்று நினைத்துக் காத்திருக்கிறோம். கோயிலுக்குப் பக்கத்தில் இன்னொரு
நூதனசாலை அமைந்திருக்கின்றது.
அந்த மண்டபத்துக்குள் நுழையும் வாய்ப்பு அப்போது கிட்டவில்லை ஆனாலும் வெளியில் நின்று கமாராவுக்குள் அங்கே இருக்கும் அரும்பொருட் காட்சிகளைப் படம் பிடிக்கின்றேன். மிக அமைதியான ஆலயச்சூழலில் வெள்ளிக்கிழமை நாளில் பத்துப்பேரை உள்ளடக்கிய கூட்டம். பூசை ஆரம்பிக்க முன்னர் ஒரு முதியவரும், பெண்மணியும் தேவார திருப்பதிகங்களைப் பாடிச் சிறப்பிக்கின்றார்கள். ஒரு முதிய பெண்மணியும், இன்னொரு நடுத்தர வயதுப்பெண்ணும் கோயிற் சுற்றுப்பிரகாரத்தைச் சுத்தம் செய்வதிலும், பூசைக்குத் தேவையான ஆயத்தங்களிலும் முனைப்பாக இருக்கின்றார்கள். அவர்கள் தான் அந்த ஆலயத்தினைப் பராமரிப்பவர்கள்.
ஐயர் அவசரமாக வந்து காலைப்பூசையை ஆரம்பிக்கின்றார். திரைச்சீலை விலக திருநந்தீஸ்வரரை இலிங்க உருவில் கண்ணாரக் கண்டு துதித்துப் போற்றுகிறேன். திருநந்தீஸ்வரர் ஆலயத்தைக் கண்ட மனநிறைவோடு அந்த வெள்ளிக்கிழமை அமைகின்றது.