காவலூர் ராசதுரை அவர்கள் ஈழம் நன்கறிந்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், விளம்பர நிறுவன நிர்வாகி, சிறுகதை, கட்டுரைப்படைப்பாளி ஆவார்.
என்னுடைய வானொலிப் பணியின் ஆரம்ப காலத்தில் 2000 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இவர் சிட்னிக்குத் தன் பிள்ளைகளைப் பார்க்கும் நோக்கில் வந்தபோது குறுகிய வானொலிப் பேட்டி ஒன்று எடுத்திருந்தேன். அப்போது "பொன்மணி" என்ற ஈழத்துத் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்ற அடையாளமே அவர் குறித்த அறிமுகமாக வெகுவாக என்னிடம் இருந்திருந்தது. பொன்மணி திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா இவர். பொன்மணி திரைப்படம் பல்வேறு விதமான விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்தாலும் இந்தப் படம் செய்த ஒரு பெரும் பணி, படத்தில் நடித்த கலைஞர்களில் ஈழத்தின் அறிவுசால் மட்டத்தில் பெரிதும் போற்றப்படும்பேராசிரியர் சிவஞானசுந்தரம் (நந்தி), பேராசிரியை சித்ரலேகா மெளனகுரு உள்ளிட்டோர் நடித்த படம் அதுமட்டுமன்றி ஈழத்து வாழ்வியலின் ஆவணப்படமாகப் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது.
ஒலிப்பதிவு செய்யப்படாமல் நேரடியாக வானலையில் வந்த அந்தப் பேட்டியின் போது "ஐயா" என்று நான் அவரை விளித்துக் கேள்விகளை ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் "என்னை ஐயா என்று கூப்பிடாதேங்கோ" என்று சங்கோஜப்பட்டார். எனக்கு அப்போது கொஞ்சம் கிலேசமாகவும் இருந்தது. ஒரு மூத்த ஆளுமைக்கான கெளரவ அடையாளமாகவே "ஐயா" என்ற பதத்தைப் பாவித்தேன். ஆனால் பின்னாளில் அவர் சிட்னியில் நிரந்தரமாகத் தங்கி நட்புப் பூண்டிருந்த காலத்தில் தான் அவரை முழுமையாக அறிந்து கொண்டு தெளிந்தேன். காவலூர் ராசதுரை அவர்கள் விளம்பதுறை குறித்த நீண்ட நெடிய அனுபவம் மிக்கவர். ஆனால் தன்னளவில் வீண் விளம்பரங்கள் ஒட்டாமல் பார்த்துக் கொண்ட அடக்கமான ஆளுமை அவர்.
"விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்" என்ற நூலை எழுதியவர். ஈழத்தமிழ்ப் பதிப்புலகில் மட்டுமன்றி தமிழகத்திலும் கூட விளம்பரத்துறை குறித்த விரிவான எழுத்துகள் தமிழில் வந்ததில்லை. அந்த வகையில் குறித்த இந்த நூலை நான் படிக்கும் போது இவரின் பன்முகப்பட்ட அனுபவத்தை வியந்தவாறே படித்தேன்.
பொதுசனத் தொடர்புத் துறையில் ஈடுபடுவோர் பலர். ஆயினும் இந்த்துறையின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டுமல்ல அதன் சூட்சுமங்களையும் உணர்ந்து தம் முத்திரை பதிப்போர் ஒரு சிலரே. அந்தச் சிலருள் காவலூர் ராசதுரையும் ஒருவர். பத்திரிகைத் துறையாகட்டும், சிறுகதை, நாவல், இலக்கிய, விமர்சனமாகட்டும் ஒலிபரப்புத் துறையாகட்டும் ஏன் விளம்பரத்துறையாகட்டும் எதிலுமே தன் கைவரிசையைக் காட்டு வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை மெய்ப்பித்து வருபவர் காவலூர் ராசதுரை.
1978 இல் வானொலி உத்தியோகத்திலிருந்து விடுபட்டு தனிப்பட்ட முறையில் விளம்பரத் தாபனம் ஒன்றை நிறுவினார்.குறுகிய காலத்த்ல் முன்னணி விளம்பர நிறுவனங்களுடன் போட்டி போட்டு சர்வதேச நிறுவனங்கள் பலவற்றுக்கும் கூட விளம்பரப் பிரதிநிதி நிறுவனமாக வசீகரமாக அதனை நடத்து வருகிறார். (வீ.ஏ.திருஞானசுந்தரம் தினகரன் வாரமஞ்சரி ஏப்ரல் 13, 1986.)
110 பக்கங்களுடன், பத்திரிகை விளம்பரத்தின் பூர்வீகம், அமெரிக்க விளம்பரத்துறையின் ஆரம்பம், விளம்பர முகவர்களின் உதயம், விளம்பரத்தின் ஆற்றலும் ஆற்றாமையும், விளம்பரத்தைத் திட்டமிடல், சந்தை நிலை பற்றிய ஆய்வு, விளம்பர ஊடகங்களைத் தெரிவு செய்தல், விளம்பரத்தை அமைக்கும் முறைமை, விளம்பர வாசகத்தின் கட்டுக்கோப்பு, விளம்பரத்தின் வடிவமைப்பு, அச்சு ஊடகத்துக்கென விளம்பரம் அமைத்தல், இலங்கையில் விளம்பரத்துறையின் வரலாறு, இலங்கையில் வானொலி விளம்பரத் துறையின் வரலாறு, வானொலி விளம்பரங்கள், விளம்பர அறிவிப்பாளர்களின் தகைமைகள், வர்த்தக ஒலிபரப்பின் வீச்சும் சொல்வாக்கும், தொலைக்காட்சி விளம்பரங்கள், விளம்பரமும் சாதியமும், விளம்பரமும் பெண்ணியல் வாதமும், விளம்பரத் துறையில் சில்லையூர் செல்வராசன் ஆகிய தலைப்புக்களில் ஒக்டோபர் 2001 வெளியிடப்பட்டது. வசீகர அட்வேட்டைசிங் வெளியிட்டது.
குழந்தை ஒரு தெய்வம் (சிறுகதைக் கோவை), வீடு யாருக்கு (குறுநாவல்), ஒரு வகை உறவு (சிறுகதைக் கோவை) போன்ற நூல்களையும் இவர் ஆக்கியளித்தார். (
மேற்கோளின் பத்திகள் நன்றி: காவலூர் ராசதுரை அவர்கள் எழுதிய "விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்"
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 இவரின் மறைவினையொட்டி நான் பணிபுரியும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களிடமிருந்து நினைவுப் பகிர்வைத் தற்போது எடுத்துக் கொண்டேன். இதோ அதன் ஒலிவடிவம் Download பண்ணிக் கேட்க 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை ஏப்ரல் 7 ஆம் திகதி 2007 இல் நடத்தினோம். அந்தச் சந்திப்பின் முக்கிய நிகழ்வாக அந்த ஆண்டு 75 வது அகவையை திரு காவலூர் ராசதுரை அவர்கள் பூர்த்தி செய்யும் தருணம் கெளரவிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் இரகசிய ஒழுங்குகளை திரு முருகபூபதி அவர்கள் செய்து வைத்திருந்தார். ஏனெனில் இந்த விஷயம் தெரிந்தால் ராசதுரை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது தெரியும். ஆனால் கலைஞர்களும் படைப்பாளிகளும் அவர்தம் வாழும் காலத்தில் கெளரவிக்கப்படவேண்டும் என்ற முனைப்போடு செயற்படும் திரு முருகபூபதி அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக அமைந்தது இந்த நிகழ்வு. பெருமதிப்புக்குரிய கவிஞர் அம்பி, மூத்த கலைஞர் திரு சிசு நாகேந்திரன், ஓவியர் ஞானம், இலங்கை ஒலிபரப்புத்துறை முன்னை நாள் பணிப்பாளர் திருமதி ஞானம் இரத்தினம், எழுத்தாளர் கலாநிதி ஆ.கந்தராசா, கவிஞர் திரு.செ.பாஸ்கரன், டாக்டர் பாரதி ஆகியோர் பங்கேற்று இந்த இலக்கியச் சந்திப்பையும் காவலூர் ராசதுரை அவர்களின் 75 வது பிறந்த நாள் கெளரவிப்பையும் பூரணத்துவப்படுத்தினார்கள்.
அந்த நிகழ்வில் பேசிய திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் காவலுர் ராசதுரை அவர்கள் இலங்கை வானொலியில் கொடுத்த பங்களிப்பின் அறியப்படாத பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கலைக்கோலம் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக இவர் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், இன்னொரு அறியாத தகவல் இலங்கை வானொலிக்கே தனித்துவமான "செய்தியின் பின்னணியில்" என்ற சமகால நாட்டு நடப்பு அலசல் நிகழ்ச்சியைக் கொண்டு வந்தவரும் காவலூர் ராசதுரை அவர்களே என்ற செய்தியை அப்போது சொல்லியிருந்தார்.
காவலூர் ராசதுரை அவர்களின் படைப்பான "காலங்கள்" அப்போது ரூபவாஹினியில் வந்த காலகட்டத்தையும் மறக்க முடியாது. தோட்டத்தொழிலாளர் வாழ்வியலை இந்த நாடகம் பிரதிபலித்திருந்தது.
எழுத்தாளர் திரு.லெ.முருகபூபதி அவர்கள் நிகழ்வைத் தலைமை தாங்கிப் பேசிய போது
திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் திரு.காவலூர் ராசதுரை அவர்கள்இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்த போது
கவிஞர் அம்பி அவர்கள் ராசதுரை அவர்களைக் கெளரவித்த போது
கலாநிதி ஆ.கந்தராசா ராசதுரை அவர்களைக் கெளரவித்த போது
ஓவியர் ஞானம் அவர்கள் ராசதுரை அவர்களைக் கெளரவித்த போது
காவலூர் எஸ்.ராசதுரை அவர்களின் 75வது பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாடிய போது
அந்த நிகழ்வின் காணொளி சிறுதுளியாக வீடியோவில் பகிர்கிறேன். இந்தக் காணொளியில் அமரர் ராசதுரை, எழுத்தாளர் முருகபூபதி, திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் இடம்பெறுகின்றார்கள்.
ஒக்டோபர் 7, 2007 ஆம் ஆண்டு சிட்னியில் இயங்கும் தமிழ் முழக்கம் வானொலியின் 15 வது ஆண்டு நிறைவு நிகழ்வில் ஆம் ஆண்டு ஈழத்தின் புகழ் பூத்த நாடகக் கலைஞர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணர் அவர்களது "அண்ணை றைற்" என்னும் தனி நடிப்பு நாடகங்களின் தொகுதியை ஒலிவட்டை வெளியிட எண்ணினேன். அதற்குப் பொருத்தமானவர் திரு காவலூர் ராசதுரை அவர்களே என்று கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணரிடம் தெரிவித்த போது அவர் தொலைபேசி வழியாகக் காட்டிய குதூகலம் இன்னும் நினைப்பில் இருக்கிறது. அவ்வளவு தூரம் தான் வானொலியில் பணிபுரிந்த காலகட்டத்தில் காவலூர் ராசதுரை அவர்களின் மேல் பெரு மரியாதை வைத்திருந்தார். கே.எஸ்.பாலச்சந்திரனின் ஆரம்பகால நாடக வாழ்வியிலில் திரு காவலூர் இராசதுரை அவர்களின் ஊக்குவிப்பும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது என்று பாலா அண்ணர் அப்போது சொல்லியிருந்தார்.
"அண்ணை றைற்" தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டை பிரபல எழுத்தாளரும், இலங்கை வானொலியின் முன்னை நாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திரு காவலூர் இராசதுரை அவர்கள் வெளியிட, வானொலி மாமா திரு.மகேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
என்னளவில் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இன்றும் நான் நினைத்துத் திருப்தியடையும் ஒரு பணியாகவே இதைப் பார்க்கிறேன்.
சிட்னியில்
எனது வீட்டில் இருந்து ஒரு சில நிமிட நடை தூர நெருக்கம் மட்டுமல்ல காவலூர்
இராசதுரை அங்கிள் என்று நான் தொலைபேசியிலும் நேரிலும் பேசும் போது
பல்லாண்டு காலப் பந்தம் கொண்டவர் போல அந்த ஒரு சில வருடப் பழக்கத்தோடே
என்னுடன் நட்புணர்வு பேணி வந்தவர்.
அவர்
வாத நோயினால் முழுமையாகப் பாதிக்கப்பட முன்னர் கடைசியாக Parramatta என்ற
நகரில் எதேச்சையாகச் சந்தித்தேன். "அங்கிள் ஒரு நிமிஷம், என்றுவிட்டு
ஓடிப்போய் காருக்குள் இருந்த என்னுடைய "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை
நோக்கி" என்ற நூலை எடுத்து வந்து ஆசையோடு அவர் கையில் திணித்தேன். அப்போது
அவரைப் பீடித்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை உணரமுடிந்தது. "என்னால முந்தியப்
போல தொடர்ச்சியாகப் பேசமுடியாது" என்று இழுத்து இழுத்துப் பேசினார்.
"அங்கிள் உடம்பைக் கவனமாப் பார்த்துக் கொள்ளுங்கோ என்று விடைகொடுத்தேன்.
உடல் நலம் தேறிய பின்னர் அவரை வைத்து ஒரு நெடிய வானொலிப் பேட்டி செய்து
அவரின் வாழ்வியல் அனுபவங்களைப் பதிவாக்க வேண்டும் என்ற அவா அப்போது
இருந்தது. அவரும் செய்யலாம் என்றே சொல்லியிருந்தார். அந்த வாய்ப்பும் கிட்டாமல் போயிற்று. ராசதுரை அங்கிள்! உங்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பேன், உங்களின் நினைவுகள் எம்மை விட்டு மறையாது நிலைத்திருக்கும்.
காவலூர் ராசதுரை அவர்களின் நூல்களைப் படிக்க http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D