skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Tuesday, June 07, 2022

பொன் விழாக் காணும் ஈழத்து நாடகர் & ஊடகர் திரு. G.P.வேதநாயகம் பேசுகிறார்

 


இலங்கை வானொலி யுகத்தில் வானொலி நாடகங்கள் தனித்துவம் மிகுந்தவை. ஆற்றல் மிகு பங்காளிகளாக ஈழத்தின் எழுத்தாளர் சமூகம் கூட இந்த வானொலி நாடகங்களில் தம் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இவர்களோடு வானொலி நாடகப் படைப்பாளியாக மட்டுமன்றி, நாடகக் கலைஞராகவும், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொடந்து சாதனை படைத்திருக்கின்றார் திரு. G.P.வேதநாயகம். அவரின் படைப்புகளில் ஈழத்தின் முன்னணி வானொலிக் கலைஞர்கள் பலர் இணைந்து பணியாற்றியதும் இலங்கை வானொலி வரலாற்றில் தனித்துவமாகச் சொல்லி வைக்க வேண்டியது.

திரு. G.P.வேதநாயகம் அவர்களுக்கு இந்த ஆண்டு பொன் விழா ஆண்டு. கடந்த ஏப்ரல் மாதம் தாயகத்துக்குக் குறுகிய ஐந்து நாள் பயணம் போது ஊடகரும், எம் உறவினருமான திரு. கணபதி சர்வானந்தா அவர்களின் அழைப்பின் பேரில் திரு. G.P.வேதநாயகம் அவர்களது நூல்கள் வெளியீடு கண்ட பொன் விழா நிகழ்விலும் கலந்து கொண்டேன்.

நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக திரு. G.P.வேதநாயகம் அவர்களின் நாடக & ஊடகப் பயண அனுபவங்களை பெற்றிருந்தேன். அதனை உங்களுக்குப் பகிர்கின்றேன்.

https://www.youtube.com/watch?v=CHqcQKkT8Iw

திரு. G.P.வேதநாயகம் அவர்களது படைப்புகளைக் காண


https://www.youtube.com/channel/UCiWXF4TCimtDHUSX78AdKCw


கானா பிரபா


Posted by கானா பிரபா at 12:28 PM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Friday, May 20, 2022

செம்பியன் செல்வன்


இன்று ஈழத்தின் இலக்கியப் படைப்பாளி செம்பியன் செல்வன் அவர்களது 17 வது நினைவாண்டாகும்.

ஈழத்து இலக்கியப் பரப்பில் செழுமையான படைப்புகள் வர வேண்டும் என்ற சிந்தனையும், ஈழத் தமிழரது சுய நிர்ணயப் போராட்டத்தில் சமரசமில்லாத போக்கும் கொண்டவர் என்பதை அவரை எட்ட நின்று தரிசித்து உணர்ந்திருக்கிறேன். 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அறுபதுகளில் இருந்த இருந்த தமிழ் மாணவர் குழாம் பின்னர் ஈழத்து இலக்கியப் பயணத்தினைக் கொண்டு நடத்தும் முக்கிய எழுத்துலக ஆளுமையாக விளங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையை என் பள்ளி நாட்களில் வாசிக்கக் கிட்டிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள் உணர்த்தி நின்றன. அவையிரண்டும் அதே மாணவர் குழாமில் ஒருவராக இருந்த செம்பியன் செல்வன் அவர்களது தொகுப்பாக அமைந்த

கதைப் பூங்கா

https://noolaham.net/project/181/18028/18028.pdf

மற்றும் 

விண்ணும் மண்ணும்

https://noolaham.net/project/16/1579/1579.pdf

ஈழத்து இலக்கியங்களைத் தேடி நுகர்வோர் கண்டிப்பாகப் படிக்க வேண்டி படைப்புகள் இவை.

செம்பியன் செல்வன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட அமிர்த கங்கை சஞ்சிகையைப் படித்தவர்கள் ஈழத்துச் சஞ்சிகைப் பரப்பில் அதன் செழுமையான பங்களிப்பைக் கண்டுணர்வர்.

https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

செம்பியன் செல்வன் அவர்களின் வாழ்க்கைப் பகிர்வு

https://noolaham.net/project/176/17555/17555.pdf

செம்பியன் செல்வன் குறித்து எழுத்தாளர் தெளிவத்தை யோசப்

https://www.vaaramanjari.lk/2020/03/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?fbclid=IwAR1NoDqlkG1NUpO27hNbzbcPQXvY7pLjS80FlhIBLbp_zJ4mUt1GeK6FIvI

1988 ஆம் ஆண்டு அநு.வை நாகராஜனின் "காட்டில் ஒரு வாரம்" என்ற சிறுவர் நாவல் வெளியீடு விழா வைத்தீஸ்வராக்கல்லூரில் நடந்தபோது செங்கை ஆழியானை முதன்முதலில் பார்தேன். அவரின் கையொப்பத்தை அந்த நிகழ்வு நிறைவுற்றபோது பெறலாம் என்று விழா அழைப்பை நீட்டினேன்.

" காயிததில எல்லாம் 

கையெழுத்தை வைக்காதயும்" 

என்று செங்கை ஆழியானைத் தடுத்துவிட்டு,

" தம்பி அந்தப் புத்தகத்தைக் குடும், அதில வைக்கட்டும்" 

என்றார் பக்கத்தில் நின்ற செம்பியன் செல்வன்.

சிரித்துக்கொண்டே நான் நீட்டிய புத்தகத்தில் தன் கையெழுத்தைப் பதித்தார் செங்கை ஆழியான்.

கானா பிரபா

செம்பியன் செல்வன் படம் மற்றும் இணைப்புகள் நன்றி ஈழத்து நூலகம்

Posted by கானா பிரபா at 12:28 PM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Wednesday, May 18, 2022

சிவா தியாகராஜா 🙏


“எனக்கு என் பிள்ளையின் வித்துடல் வேண்டும்” 

எல்லோரையும் அமைதிப்படுத்தி விட்டு இராணுவ முகாம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

மந்திகை இராணுவ முகாமில்

“நான் மொறிஸியஸின் அம்மா”

சிவா தியாகராஜா 🙏

வீரமறவர்களை வயிற்றில் சுமந்த அன்னை.

தன் மூன்று பிள்ளைகளை ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஈய்ந்தவர் இன்று காலை விண்ணேகி அவர்களிடம் சேர்ந்தார்.


"அந்த வீட்டைச் சுற்றி இராணுவ முகாம்கள். நான் சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன்.

சுடச் சுடப் புட்டும், முட்டைப்பொரியலும் கொண்டு வந்து தந்து 

“களைச்சிருக்கிறாய் அப்பு! 

முதல்ல சாப்பிடு பிறகு கதைக்கலாம்” 

என்றார்.

எனக்குக் கண்களில் கண்ணீர் நிறைந்து பொங்கியது. நான் பொங்கிய கண்ணீரைத் துடைக்கவில்லை. எனக்கு ஏற்கனவே பசி. தலை சுற்றுவது போல் உணர்வு. மளமளவென்று சாப்பிடத் தொடங்கினேன். அந்நேரம் அவ்வுணவு எனக்கு அமிர்தம் போலத் தோன்றியது. அம்மா என்னைப் பரிவோடு பார்த்தபடி இருந்தார்.”

“தான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும் அவர் அம்மா இல்லை, எங்கள் அத்தனை பேருக்கும் தான். நாம் துவளும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து எம்மை உயிர்ப்புடன் செயற்பட வைத்துக் கொண்டிருந்த அம்மா!”- ஈழ விடுதலைப் போராளி றியோ நிலவன்

“பெரு நினைவின் சிறுதுளிகள்” நூலில்.

Posted by கானா பிரபா at 10:11 PM 1 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Thursday, May 12, 2022

மாஸ்டர் சிவலிங்கம் எனும் ஈழத்தின் சிறுவர் இலக்கியத்தின் ஒப்பற்ற கதை சொல்லி




இன்று காலை எமது மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுத் துயருகிறேன். ஈழத்தின் சிறுவர் இலக்கியத்தில் மிகக் கனதியான பங்களிப்பைச் செய்தவர். அந்தக் காலத்தில் சிந்தாமணி பத்திரிகையில் இருந்து இலங்கை வானொலி சிறுவர் நிகழ்ச்சியில் இடம் பெறும் கதை சொல்லல் வரை என் பால்ய காலத்தின் கதை சொல்லியாகத் திகழ்ந்தவர்.

எம்மைப் பொறுத்தவரை அவர் ஈழத்தின் "வாண்டுமாமா" என்று சொன்னால் மிகையில்லை. மட்டக்களப்பு மண்ணில் இருந்து சிறுவர் இலக்கியம் மட்டுமன்றி வாழும் வரலாறாகத் திகழ்ந்தவர்.

மாஸ்டர் சிவலிங்கம் குறித்த ஆவணம்
https://www.youtube.com/watch?v=nHhNlel0F7Q

மாஸ்டர் சிவலிங்கம் கதை சொல்கிறார்
https://www.youtube.com/watch?v=1o_awTCVPM4

வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவுடன் ஒரு சந்திப்பு
https://www.muthusom.com/2015/11/MasterSivalinkam.html

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் இழப்பில் துயருறுகிறேன்.

கானா பிரபா

Posted by கானா பிரபா at 8:33 AM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Sunday, April 24, 2022

ஈழத்துத் திரைப்பட ஆவணக் களஞ்சியம் திரு. தம்பிஐயா தேவதாஸ் பேசுகிறார்

என் பதின்மப் பருவத்தில் 1987 ஆம் ஆண்டு கடும் போர்ச்சூழலில் அம்மாவின் சக ஆசிரியை ஒருவரின் வீட்டில் இடம்பெயந்து வாழும் சூழல் அமைகின்றது. அப்போது அவர்களின் வீட்டின் ஒரு அறையின் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தக அடுக்கின் மேல் என் கவனம் செல்கின்றது. அந்தப் போர்க்காலச் சூழல் முழுவதும் அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றாக வெறியோடு படித்தேன். அவை அனைத்துமே வீரகேசரி பிரசுரங்கள். அந்தக் காலகட்டத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்த எனக்கு ஒரு நாவலின் ஓட்டமும் கதைப் பின்னணியும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அதுதான், திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் மொழிபெயர்ப்பு நாவலான “நெஞ்சில் ஒரு இரகசியம்".

சிங்களத்தின் மகோன்னத எழுத்தாளர் கருணாசேன ஜயலத் அவர்களுடைய “Golu Hadawath” என்ற புகழ்பூத்த நாவலின் தமிழ் வடிவம் தான் “நெஞ்சில் ஒரு இரகசியம்". பள்ளிக்கூடக் காலத்துக் காதல் வாழ்வை வெகு யதார்த்தமாகச் சித்தரித்த அந்தப் படைப்பை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் தன்னுடைய பள்ளி வாழ்வோடு ஒப்பிட்டுக் கண்கள் பூப்பான்.

இந்த நாவல் பின்னர் சிங்களத் திரைப்படமாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது.  அவுஸ்திரேலியாவுக்கு வந்த காலத்தில் மெல்பர்னில் சிங்களவர் கடைகளுக்குப் போய் இந்தப் படத்தின் வீடியோ இருக்கிறதா என்று 95 களில் நான் தேடியதை நினைத்துச் சிரிப்பேன் இப்போது.

இப்படியாக 1987 இல் திரு. தம்பிஐயா தேவதாஸ் என்ற ஆளுமையை அறிந்து கொண்ட எனக்கு அவரின் இன்னொரு முகமும் தெரிந்தது 1995 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன் தினம் தான். அப்போது கற்பகம் என்ற பனைவள உற்பத்திப் பொருள் விற்பனைக் கூடத்துக்குச் சென்ற என்னை “இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை” என்ற நூல் ஈர்த்தது. என் பயணப் பொதிக்குள் அதையும் அடக்கி வைத்தேன். இலங்கையில் தயாராகி வெளிவந்த திரைப்படங்களின் (ஈழத்துப் போர்க்காலப் படங்கள் நீங்கலாக) ஆவணச் சுவடி அது. படங்கள், தகவல்களோடு அது ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்.

தொடர்ந்து தாயகத்துக்குப் பயணப்படும் போதெல்லாம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் திரு. தம்பிஐயா தேவதாஸின் ஏதாவது ஒரு புத்தகம் கண்ணிற்பட்டால் வாங்கி வந்து விடுவேன். அப்படித்தான் “குத்துவிளக்கு” படத்தின் மீள் வாசிப்பு, பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா, இலங்கைத் திரையுலக முன்னோடிகள், இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் உள்ளிட்ட நூல்களை வாங்கி வைத்திருக்கிறேன்.

திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் ஃபேஸ்புக் நட்பில் இணைந்த போது எனக்குக் கிடைத்த பெறுமதியான நட்பாகப் போற்றி வருகிறேன். தொடர்ந்து என் பகிர்வுகளை வாசித்துச் சிலாகித்துப் பேசும் போது கிடைத்தற்கரிய கொடுப்பினையாக நினைப்பேன்.

அதனால் தான் அவரை “SPB பாடகன் சங்கதி” என்ற எனது நூலுக்கு அணிந்துரை எழுத வைத்த போது அவர் கொடுத்த பகிர்வால் நெகிழ்ந்தேன்.

திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் ஆசிரியராகவும் கடமையாற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் இயங்குகின்றார். அத்தோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட ஆளுமை. 

இலங்கைத் தமிழ், சிங்கள சினிமா சார்ந்த நூல்கள் மட்டுமன்றி, கல்வி, வரலாறு, பண்பாடு சார்ந்த நூல்களையும் எழுதியிருக்கின்றார்.

இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் “காதம்பரி” நிகழ்ச்சி வழியாகப் பல ஆளுமைகளைப் பேட்டி எடுத்திருக்கிறார். அவரின் YouTube பக்கத்தில் சில ஆவணங்களைக் காணலாம். 

திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களைப் பேட்டி எடுக்க வேண்டும் என்ற என் வாழ்நாள் கனவு பலித்தது பெருத்த மன நிறைவு. 

அந்தப் பேட்டியின் வழியாகத் தனது இலக்கியச் செயற்பாட்டை விரிவாகப் பகிர்ந்திருக்கின்றார்

இங்கே

https://www.youtube.com/watch?v=BH0nMhwX8I4

இன்று பிறந்த நாட் காணும் எங்கள் அன்புக்குரிய திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் நோய், நொடியின்றிப் பல்லாண்டு காலம் வாழ அவரின் ரசிகர்களில் ஒருவனாக வாழ்த்தி மகிழ்கின்றேன்.

கானா பிரபா

24.04.2022


Posted by கானா பிரபா at 10:10 AM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Saturday, March 26, 2022

இலங்கை வானொலி மூத்த ஆளுமை திருமதி ஞானம் இரத்தினம் விடை பெற்றார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உலகளாவிய புகழ் கொண்டு முன்னணி வானொலி நிலையமாகத் திகழ்ந்த போது அதனைக் கட்டியெழுப்பிய சிற்பிகள் பலர் நம் காதுகளுக்குள் உறவாடும் குரல்களாகவும், வானொலியின் இயக்கத்துக்குப் பின்னணியில் இயங்கியவர்களாகவும் அமைந்து விளங்கினர்.

இவர்களில் பெரும்பாலானோர் 83 இனக் கலவரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நாடு தாண்டி உலகின் பல்வேறு கரைகளைத் தொட்ட போது அவுஸ்திரேலியாவும் சில ஆளுமைகளை வாரிக் கொண்டது. 

அந்த வகையில் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அமரர் சுந்தா சுந்தரலிங்கம், அமரர் காவலூர் இராசதுரை, அமரர் பொன்மணி குலசிங்கம் மற்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் திருமதி பாலம் லஷ்மணன் அம்மா, எஸ்.எழில்வேந்தன் ஆகியோரோடு இன்னொரு மூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அம்மாவையும் குறிப்பிட வேண்டும். 

எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை  ஏப்ரல் 7 ஆம் திகதி 2007 இல் நடத்தினோம். அந்தச்  சந்திப்பின் முக்கிய நிகழ்வாக அந்த ஆண்டு 75 வது அகவையை திரு காவலூர் ராசதுரை அவர்கள் பூர்த்தி செய்யும் தருணம் கெளரவிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் இரகசிய ஒழுங்குகளை திரு முருகபூபதி அவர்கள் செய்து வைத்திருந்தார். 

அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வானொலிக்கால இனிய நினைவுகளை மீட்டினார். http://www.madathuvaasal.com/2014/10/blog-post_15.html

2007 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி திருமதி ஞானம் இரத்தினம் அவர்களைச் சந்திக்க்கிறேன். நீண்டதொரு உரையாடலின் பின் தன்னுடைய அனுபவப் பகிர்வு நூலான “The Green Light” ஐயும் அன்போடு தந்து வழியனுப்பினார்.

திருமதி ஞானம் அவர்கள் ஒரு வழிகாட்டி அறிவிப்பாளராகவும், மக்கள் சேவையாளராகவும் தன்னுடைய வானொலிப் பணியை முன்னெடுத்தவர் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதன்மைத் தலைவர் மற்றும் இயக்குநர் நாயகம்  (chairman) பொறுப்பேற்ற திரு நெவில் ஜெயவீர குறிப்பிட்டிருக்கிறார்.

ஏராளம் அரிய தகவல்கள், புகைப்படங்களோடி தன் வானொலி வாழ்வியலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரலாற்றோடு இணைத்து திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கும் போது இது சுய புராணமாக அன்றி இலங்கை வானொலியின் வரலாற்றுப் பதிவாகவே அமைகின்றது. 

“The Green Light” நூலைத் தான் உருவாக்க ஏதுவாக 1998 இல் இலங்கை வானொலியில் ஊடகர் திரு இளையதம்பி தயானந்தா அவர்கள் தன்னிடம் எடுத்த வானொலிப் பேட்டியைத் தொடர்ந்து இந்த அனுபவங்களை ஆவணமாக்குங்கள் என்று தன்னை வேண்டியதாகத் திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். “The Green Light” நூல் குறித்த முழுமையான பகிர்வைப் பின்னர் பகிர்கிறேன்.

திருமதி ஞானம் இரத்தினம் குறித்து பெருமதிப்புக்குரிய ஊடகர் பி.விக்னேஸ்வரன் P Wikneswaran Paramananthan அண்ணாவின் பகிர்வையும் இங்கே தருகிறேன்.

இலங்கை வானொலி பல திறமைமிக்க ஒலிபரப்பாளர்களின் கடின உழைப்பால் புகழ்பெற்ற ஒரு ஸ்தாபனம்.  இலங்கை வானொலி தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய சேவையும் அதனால் அது அடைந்த பிரபல்யமும் கௌரவமும் மிகப் பெரியது.  இதில் ஆண்களின் பங்கு அதிகமென்றாலும் சில பெண்களும் மிக முக்கிய பதவிகளிலிருந்து அரும்பணியாற்றியிருக்கிறார்கள்.  எண்ணிக்கையில் மிகக் குறைவென்றாலும் இவர்கள் இலங்கை ஒலிபரப்பு வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.  அந்த மிகக்குறைந்தளவான அதிகாரிகளில் திருமதி. ஞானம் இரத்தினமும் ஒருவர்.  

பட்டப்படிப்பின் பின்னர் இலங்கை வானொலியின் கல்விச்சேவையில் தயாரிப்பாளராகச் சேர்ந்த ஞானம் இரத்தினம் அவர்கள், நான் பணிக்குச் சேர்ந்த 1970ஆம் ஆண்டில் வானொலி மஞ்சரிக்குப் பொறுப்பான ஆசிரியராக இருந்தார்.  பின்னர் தேசியசேவையின் தமிழ்ப்பிரிவுத் தலைமைப் பொறுப்பையேற்ற அவர், ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாகக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டபோது இயல், நாடகப் பிரிவின் கட்டுப்பாட்டாளராகப் பதவியேற்றார்.  தொடர்ந்து, தமிழ்ச்சேவை ஒன்றுக்குப் பொறுப்பான மேலதிக இயக்குனராப் பதவிவகிக்கும்போது, இலங்கையில் தேசிய தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட, மலேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பயிற்சிபெற்ற அவர், ரூபவாஹினியின் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பான இயக்குனராகப் பதவியேற்றார்.  தமிழ்ப்பிரிவு இவரது நேரடிக் கண்காணிப்பில் இருந்தது.  அப்போது அவரின் நெறிப்படுத்தலிலும் ஆலோசனைகளுக்கமையவும் நான் பணியாற்றினேன்.  

அவர் எந்தப்பிரச்சினைகளையும் கையாளும் விதம் எனக்கு வியப்பூட்டும்.  சிந்தனைத் தெளிவுமிக்க பெண்மணி.  தாயுள்ளம்கொண்ட அவர் கடிந்து பேசமாட்டார்.  தமிழிலும் ஆங்கிலத்தலும் மிகுந்த புலமைபெற்ற அவர், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும்போது, ஆங்கிலம் ஓர் இலகுவான மொழிபோல் எமக்குத் தோன்றும்.  தமிழ்போலவே ஆங்கிலத்திலும் இலகுவான நடையில், தங்குதடை ஏதுமின்றிப் பேசும் அவர், 1983ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து சிட்னியில் வசித்து வந்தார். 

ஜுலை மாதம் 17ஆம் திகதி,2021 அவருக்கு 92ஆவது பிறந்தநாள் நிகழ்வை அவரோடு இணைந்து பணியாறிய ஊடகர்களோடு அதே நாளில் கொண்டாடி மகிழ்ந்தோம். அதன் காணொளி

https://www.youtube.com/watch?v=iRIaKfQwl9I

திருமதி ஞானம் இரத்தினம் அவர்களின் ஆன்மா சாந்தியடையவதாக.

புகைப்படம் நன்றி: மூத்த ஊடகர் பி.விக்னேஸ்வரன் அவர்கள்.

கானா பிரபா

26.03.2022


Posted by கானா பிரபா at 7:13 PM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

83





எனக்குக் கிரிக்கெட் பார்ப்பதை விட, கிரிக்கெட்டைப் பார்ப்பவர்களைப் பிடிக்கும். பால்ய நாட்களில் அப்படியான வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களோடு தான் வாழ்ந்தேன். ஒரு கையடக்க வானொலியைக் (Pocket Radio) காதுக்கு அருகே வைத்து, இன்னும் அதை உள்ளே தள்ளிக் கொண்டு உன்னிப்பாகக் கிரிக்கெட் போட்டியை அணுஅணுவாக ரசிக்கும் அண்ணன்மார்கள். அதுவும் எங்கோ பல மைல் தொலைவில் நடக்கும் விளையாட்டின் விறுவிறுப்பைத் தங்கள் உடலில் அப்படியே இறக்கிக் கொண்டு, இருப்புக் கொள்ளாது வீட்டு முற்றத்தின் எல்லாப் பரப்புகளையும் அளந்து கொண்டே நடந்தும், குதித்தும் ஸ்கோர் விபரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்ப்பதே புதினமாக இருக்கும்.

தூரதர்ஷனை நம்பி அன்டெனாவைத் திருப்பித் திருப்பிப் பாயாச அலைகளுக்குள் புள்ளியாய் தெரியும் வீரகளை உன்னி உன்னிப் பார்த்துச் சலித்து விட்டு மீண்டும் ட்ரான்சிஸ்டரே கதி என்று அடைக்கலமாகிவிடுவார்கள் அந்த அண்ணன்மார்கள்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு நடிகன், நடிகை போஸ்டரை அந்த அண்ணன்மாரின் வீடுகளில் பார்க்க முடியாது. புத்தம் புதிய  Sportstar magazine ஐ வாங்கிய கையோடு அதை அப்படியே கொஞ்சி விட்டு முழுக்க முழுக்க எழுத்துக் கூட்டிப் படித்து விட்டு நண்பர் வட்டாரத்தில் ஒரு சுழற்சிக்கு வாசிக்கக் கொடுத்து விட்டு அந்த அட்டைப் படத்தில் இருக்கும் தம் நாயகர்களை அப்படியே சுவற்றில் ஒட்டி விடுவார்கள். இந்த சஞ்சிகைக்காரரும் தனி நீள வர்ணப்படங்களை இதற்காகவே இணைத்தும் விடுவார்கள். சுவர் முழுக்க கபில்தேவ் வகையறாக்காள் தான். அந்த எண்பதுகளின் இறுதிப் பகுதிக்கு முந்திய காலகட்டம் எல்லாம் இலங்கையின் தமிழர் பகுதி என்றால் இந்திய அணி ஆதரவளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தது.

அதனால் தான் இந்தியா தோற்றால் “உங்கள் அணி தோற்று விட்டது” என்ற எள்ளலையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

முதற் பத்தியில் சொன்னது போலவே கிரிக்கெட் பார்ப்பதை விட பார்ப்பவர்களைப் பிடிக்கும் என்ற அதே மனோநிலையோடு 

83 என்ற படத்தைப் பார்த்தேன்.

உலகக் கிண்ண கிரிக்கெட் 1983 இல் இந்தியா வெற்றிக்கனியைப் பறித்த அந்த மையப்புள்ளியை நோக்கியதான படைப்பு இது. ஆகவே தெரிந்த வரலாற்றை மீள ஒப்புவிக்கும் சவாலான முயற்சி. அதில் பாதியை அல்ல முழுவதையுமே கடந்து விட்டதையே படம் பார்த்து முடிந்ததும் உணர்ந்து கொண்டேன். அதுவும் அந்த இறுதிக் காட்சியில் எழும் கலவையான உணர்வலைகளால் நெகிழ்ந்து கரைந்து விட்டேன்.

இந்தப் படத்தை இரண்டு பரிமாணங்களில் தரிசிக்கலாம்.

ஒன்று, இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் மீண்டும் ஒன்று கூடித் தம் பழைய நினைவை மீட்டிப் பார்ப்பது போலவும்,

இன்னொன்று, மறு அந்தத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்று கூடி அந்தக் கணங்களைத் தரிசித்த காலத்தைத் தனித்தனியாக நினைத்துப் பார்ப்பதும் போலவும் தோன்றியது.

இந்தப் படைப்பும் அவ்விதமே வீரர்களினதும், ரசிர்களதும் கோணத்தில் மாற்றி மாற்றிக் காட்டப்பட்டிருப்பது வெகு சிறப்பு.

இந்தியா என்ற அகண்ட தேசத்தின் பல்லின, மொழி, மத பேதங்கள் எல்லாம் கரைந்து போவது இந்தக் கிரிக்கெட் என்ற விளையாட்டால் தான் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. 

காட்சி ஓட்டத்தில் ஒரு கட்டத்தில் நாட்டில் நிலவும் பதட்ட நிலைக்கு எதிராக இந்திரா காந்தி அவர்களின் அமைச்சரவைப் பேச்சும் அப்படியே முன் சொன்னதை அடியொற்றியது.

நாற்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் யஷ்பால் சர்மா என்ற ஒருவரை தவிர மீதி எல்லோருமே நிகழ்காலத்தில் இருப்பவர்கள். கூடவே அவர்களின் ரசிகர்களும். இவ்விதமானதொரு சூழலில் இவ்விதமான நிகழ் வரலாற்றுச் சித்திரத்தை எடுக்கும் போது காட்சியோட்டம் மட்டுமல்ல, ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் மிக நுணுக்கமாக அமைந்திருக்க வேண்டும். அதையே கபில்தேவ் ஆக அமைந்த ரன்வீர் சிங் இலிருந்து ஶ்ரீகாந்த் (ஜீவா) என்று ஒருவர் விடாமல் அவர்களின் குணாதிசியங்கள் முதற்கொண்டு முக அமைப்பு வரை மிகக் கச்சிதமாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். அதுவே இப்படைப்பின் பெருவெற்றி.

அது மட்டுமல்ல மேற்கிந்திய அணி வீரர்களைக் கூட இவ்விதமே பொருந்திப் போக அமைத்தது பெரு வியப்பு.

அந்த வர்ணனையாளர் பொம்மன் இரானி சும்மாவே தனக்குக் கொடுத்த பாத்திரமாக வாழ்ந்து விட்டுப் போகும் மனுஷன் இங்கே மட்டும் விட்டு வைப்பாரா என்ன? அந்த வர்ணனைக் குரல் அப்பட்டமான 80களின் வர்ணனையாளர் தோரணை.

காட்சிகளை உணர்ச்சித் தூண்டலாக அமைக்காமல் அதன் போக்கில் அமைத்து விடுவதால் எல்லாமே இயல்பாகவே மனதில் பதிகிறது. அதுவும் லண்டனில் இறங்கி பஸ்ஸுக்குக் காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு முன்னே மிடுக்கோடு நகரும் மேற்கிந்திய அணி வீரர்களின் அந்த நாயகத் தனம் இருக்கிறதே அப்பப்பா.....

கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்த்தப்படும் மாற்று அணியின் உளவியல் யுத்தம் முதற்கொண்டு நுணுக்கமாகப் பதிய வைத்திருப்பது இன்னொரு சிறப்பு.

வெற்றியின் இலக்கு என்பது நாம் குறைவாகப் பெற்றிருந்தாலும், அதை விடக் குறைவாக எதிராளியை இறக்கி வைப்பதே என்ற சூத்திரத்தைப் போதிப்பதும் அதை நடைமுறைப்படுத்துவதுமாக அமையும் இறுதிச் சுற்று வாழ்க்கைக்கு ஒரு படிப்பினையும் கூட.

இன்றைக்கு கிரிக்கெட் உலகில் எத்தனையோ சாதனையாளர் அதற்குப் பின் வந்து விட்டாலும், இன்னும் பலர் வரக் காத்திருந்தாலும் இவர்களுக்கெல்லாம் விதையாக இருந்தவர்கள் அவர்கள் காட்டிய உத்தியும், தன்னம்பிக்கையும் தான். 

கிரிக்கெட் விளையாட்டின் இன்னொரு தனித்துவமும் அதுதான். முன்னோர்கள் கற்பித்ததை வைத்து அதைப் பாடங்களாக வைத்து இன்னும் மெருகேற்றுவது. இதையே திரையிசையிலும் இசையமைப்பாளர்கள் பின்பற்றியிருந்தால் எவ்வளவு மேம்பட்டிருக்கும் என்று நினைப்பதுண்டு.

படத்தின் ஓட்டத்தோடு வாஞ்சையோடு தடவும் இசையும், பாடல்களும் (இசை ப்ரீத்தம்) . அதனால் தான் “கொடியேற்று” https://youtu.be/x1hyDdgsFN4 வரும் போது நெகிழ்வோடு அது காட்சியை ஆரத் தழுவுகிறது.

83 படத்தைப் பார்த்து முடித்த பின்னர் எண்பதுகளின் அண்ணன்மாரோடு பேசி முடித்த திருப்தி. 

முழங்கால் வரை மடித்த கிப்ஸ் மார்க் சாரம் கட்டிய அந்த அண்ணன்மார் நீட்டிய அன்டெனா கொண்ட கையடக்க வானொலியைக் காதுக்குள் வைத்துக் கொண்டே பதட்டத்தோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பது நிழலாக மனதில் விரிகின்றது.

கானா பிரபா

26.03.2022


Posted by கானா பிரபா at 10:07 AM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Saturday, March 19, 2022

இசையமைப்பாளர் உதயா


எந்தவொரு செயலுக்கும் பின்னால் ஒரு உந்து சக்தியாக மறைபொருள் ஒன்று நம்மை இயக்கிக் கொண்டிருப்பதை நான் பரிபூரணமாக நம்புபவன். அதிலும் SPB பாடகன் சங்கதி ஆக்கங்களை எழுத ஆரம்பித்த போது, தானாகவே வந்து சேர்ந்த அனுபவங்களை இப்போதும் நினைத்துப் பிரமிப்பேன்.

கடந்த டிசெம்பர் 25, 2021 அன்று காலை SPB பாடகன் சங்கதி நூலின் இறுதி வரைபைப் பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென்று பொறி தட்டவே “அடடா இவரிடமும் எஸ்பிபி குறித்த அனுபவங்களைக் கேட்டிருக்கலாமே” என்று நினைத்து உடனே அழைத்தேன். இரண்டு மூன்று தடவை அழைத்து நான் ஓய்ந்து போன தருணத்தில், அவரிடமிருந்து அழைப்பு.

“பிரபா நான் இப்போது தான் தேவாலயம் சென்று விட்டு வருகிறேன்” என்று அழைத்துப் பேசியவர் நான் அன்று காலை தேடிய அதே இசை ஆளுமை உதயன் விக்டர் அவர்கள்.

அந்த கிறிஸ்மஸ் தினத்தன்று எஸ்பிபி அவர்களைத் தன்னுடைய முதல் படத்தில் பாட வைத்த நெகிழ்வான வரலாற்றை அவர் சொல்ல அப்படியே அதைக் கிரகித்து, எழுத்தில் வடித்துப் புத்தகத்துக்குச் சேர்த்துக் கொண்டேன்.

புத்தகமும் வெளிவந்து SPB பாடகன் சங்கதி குறித்துத் தன்னுடைய விமர்சனத்தைப் பகிர்ந்த திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் இந்தப் புத்தகத்தில் மிக முக்கியமானதில் ஒன்றாகக் கோடிட்டுக் காட்டியது 

இசையமைப்பாளர் உதயா அவர்களுக்கும் எஸ்பிபிக்குமான அந்தச் சந்திப்பே தான். அதைப் பார்த்து விட்டுக் கண்மூடி ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன்.

இசையமைப்பாளர் உதயா அவர்கள் எஸ்பிபியை வைத்துத் தன் முதல் பாடலாகக் கொடுத்தது இதுதான்

ஓ ஊர்வலம் என் கண்ணில் தேர் வரும்”

https://www.youtube.com/watch?v=ssHxC0N-O4c

கேட்டுப் பாருங்கள் எவ்வளவு ரம்மியமாக இருக்கும்.





இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு புறப்படுபவர்கள் எல்லோருமே அதீத புகழ் வெளிச்சத்தை அடைவதில்லை. பலர் சோர்ந்து போய் வேறு துறைகளை நாடுவதுண்டு. ஆனால் தன்னுடைய “மாநகர காதல்” என்ற ஈழத்துத் திரைப்படம் வெளிவராத கடந்த 32 ஆண்டுகளிலும் தன்னை ஒரு இளைய சிந்தனை கொண்ட இசையமைப்பாளராகவே வைத்துக் கொண்டு இயங்கிவருபவர் உதயா அண்ணர்.

அதன் அறுவடைகளில் ஒன்று தான், கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் அன்பு நண்பன் வசீகரனோடு இணைந்து கொடுத்த “காதல் கடிதம்” இசைத் தொகுப்பின் வெற்றி. ஈழத்தின் பொப்பிசைப் பாடல் யுகத்துக்குப் பின்னர் பண்பலை வானொலிகளில் ஒரு பெரும் இசைப் புரட்சியை எழுப்பியது 

“யாழ்தேவியில் காதல் செய்தால்” 

https://www.youtube.com/watch?v=ClXGlsrIOyM

இந்தப் பாடலை அந்தக் காலத்தில் ஒலிபரப்பாத ஈழத்து, மற்றும் உலகத் தமிழர் வானொலிகளே இல்லை எனலாம்.

கார்த்திகை 27 என்ற ஈழத்து தேச மறவர் பாடல்களோடு ஏராளம் ஈழத்துத் தேசிய எழுச்சிப் பாடல்கள், தமிழ்த் திரைப்படங்கள் என்று பயணித்துக் கொண்டிருக்கிறார். அதற்கும் மேலாக நல்லிசை எங்கிருந்தாலும் தேடிக் கொண்டாடுவதும், இசை ரசிகர்களை அரவணைத்துச் சிலாகிப்பதுமான நற்பண்புகளைக் கொண்ட இசைப் பெருந்தகை உதயன் விக்டர் என்ற உதயா அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா

19.03.2022


Posted by கானா பிரபா at 12:54 PM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Saturday, February 26, 2022

"காட்டுக்குயில்" படைத்த நிரோஜினி ரொபர்ட் பேசுகிறார்

இந்த ஆண்டின் முற்பகுதியில் "காட்டுக்குயில்" என்ற  கவிதை நூல் வழியாகப் படைப்புலகில் தன் முதற் பதிப்பை அரங்கேற்றியிருக்கும் சகோதரி நிரோஜினி ரொபர்ட் ஐ நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நிகழ்ச்சிக்காகவும், வீடியோஸ்பதி காணொளித் தளத்துக்காகவும் சந்தித்திருந்தேன்.

கவிஞர் வாலியின் பாடல் வரிகளின் ஆரம்ப அடிகளைக் கொண்ட இரண்டு நூல்கள் இந்த ஆண்டில் வெளிவந்திருக்கின்றன. ஒன்று நிரோஜினி கொடுத்த "காட்டுக்குயில்" இன்னொன்று என்னிடமிருந்து SPB பாடகன் சங்கதி. 

இன்று Nirojini Robert அவரது பிறந்த நாளில் இந்தப் பேட்டியைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிரோஜினி.

https://www.youtube.com/watch?v=W-ily2eAYDI&t=65s

Posted by கானா பிரபா at 10:07 AM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Saturday, February 19, 2022

தரையில் இறங்கும் விமானங்கள்



இன்று விடிகாலையில் இருந்து மூன்று மணி நேரம் தவப்படுக்கையில் இருந்தது போலொரு உணர்வோடு கட்டுண்டு கிடந்தேன் “தரையில் இறங்கும் விமானங்கள்” புதினத்தில் மூழ்கியபோது.

கதையில் வரும் விஸ்வம் போலவே ஆகிக் கொண்டேன், அவனின் அண்ணி ருக்மிணி போலவே விஜயராணி அக்காவை நினைத்துக் கொண்டேன்.

விஜயராணி அக்கா இருந்த காலத்தில் அடிக்கடி சொல்லுவா

“பிரபா ! தரையில் இறங்கும் விமானங்கள் படியுங்கோ

இந்துமதி சோக்கா எழுதியிருக்கிறார்” என்று. 

ஆனால் விஜயராணி அக்கா வாழ்ந்த காலத்தில் “தரையில் இறங்கும் விமானங்கள்” படித்து அவரிடம் இந்த நாவல் குறித்த உள்ளக்கிடக்கையைப் பேசியிருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பா என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கும் எழுத்தாளர் இந்துமதிக்கும் கூட ஒத்த வயது. 

நாம் மற்றவர்கள் மீது கொள்ளும் கற்பிதங்கள், ஆனால் அவர்கள் எந்தவிதமான மனநிலையோடு தங்களைச் சந்தோஷப்படுத்திக் கொள்கிறார்கள், வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழத் தலைப்படுகிறார்கள் என்ற ஞானத்தின் திறவுக்கோலாகப் படைக்கப்பட்ட அற்புதமான நாவலிது.

விஸ்வத்தின் அண்ணி ருக்மிணி போலவே விஜயராணி அக்காவால் வாழ்வியலின் ஞானோதயத்தின் கதவுகள் திறந்த அனுபவங்கள் பலவுண்டு. அதனால் தான் இந்த நாவலைப் படிக்கும் போது விஸ்வத்துக்கும் அவனின் அண்ணிக்குமான உரையாடல்கள் அச்சொட்டாக என் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தது போலிருந்தது.

பெண் எழுத்தாளர் என்றால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றி பெண்களின் சமூகச் சிக்கலைத்தான் எழுதுவார்கள் போன்ற கற்பிதங்கள் என் வாசிப்பனுபவம் மேம்பட்ட காலத்தில் பொய்யுரையாய்ப் போனதுண்டு. இந்துமதி அவர்களால் ஒரு ஆணின் கோணத்தில் பயணிக்கும் இந்த நாவல் கூட முன்சொன்ன கற்பிதத்தை உடைத்த வகையினது.

மாமூல் உலகியல் வாழிவியலில் ஒட்ட முடியாத, இளமைப் பருவத்தில் மூழும் பெருங் கனவுகளோடு வாழும் விஸ்வம் மெல்ல மெல்ல எவ்விதம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்கிறான் என்பதைப் போதனை மொழியாக இல்லாத, சம்பவக் கோவைகளினூடு நகர்த்துக்கிறார் எழுத்தாளர். இங்கேயும் பெண் பாத்திரங்கள் வந்தாலும், அன்றைய வாழ்வியலில் எதிர் நோக்கிய சமூகச் சிக்கலையோ கையாளாது இன்னொரு கோணத்தில் விஸ்வம் என்ற ஆண் சமூகத்தில் இருந்து தன் அண்ணியின் மீதான அனுதாபப் பார்வையும், அது எப்படிக் கடக்கப்படுகிறது என்பதையும் அற்புதமாக வடிவமைத்திருக்கின்றார் எழுத்தாளர்.

எண்பதுகளின் வாழ்வியலில் இருந்தவர்களுக்கு இந்தப் படைப்பும், களமும் வெகு அந்நியோன்னியமாக இருக்கும். நாவலோட்டத்தில் வானொலியில் வரும் “இளைய பாரதம்” உட்பட. அங்கிருந்து இன்றைய உலக ஓட்டத்தோடு நாமும் ஓடுவதைப் பொருத்திக் கொண்டால் நாவலின் நிறைவுப் பாகத்தில் நிற்கும் விஸ்வம் போல ஆகி விடுவோம்.

நம்முடைய கற்பிதங்களும், வாழ்வியலும் எவ்விதம் இன்னொரு மனிதரால் வேறு வகையாக நோக்கப்படுகிறது என்பதையும், நாம் இன்னொருவர் மீது வைத்திருக்கும் மதிப்பீடு அவர் பார்வையில் எவ்விதம் சமரசம் செய்யப்படுகிறது என்பதையும் கொண்டு பயணிக்கும் விஸ்வத்துக்கும் அவன் அண்ணிக்கும், விஸ்வத்துக்கும் அவனது அண்ணுக்கும் இடையிலான உரையாடல்கள் வெகு யதார்த்தமாக அமைந்திருக்கும்.  அந்தந்த சம்பாஷணைகள் வரும் இடத்தில் அந்தக் களத்திலே நாமே இருந்தது போலொரு பிரமை.

“நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,

பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,

எங்கிருந்தோ வந்தான், 

இடைச்சாதி யென்று சொன்னான்”

பாரதியாரின் கவிதை தான் ஞாபகத்துக்கு வந்தது விஸ்வத்துக்கும் அவன் அண்ணி ருக்மிணிக்கும் இடையிலான பந்தத்தைப் படித்த போது.

தமிழ் நாவல் இலக்கியத்தில் இந்த மாதிரியானதொரு கோணத்தில் கதை புனைந்ததும் புதுமை. இது எழுபதுகளில் (1977) முதற் பதிப்பு கண்ட படைப்பு என்பதைக் குறிப்பிட வேண்டியது முக்கியம்.

யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் தூரதர்ஷன் தொலைக்காட்சியைப் பார்க்க அன்டெனா திருப்பி புள்ளிக் குவியல்களுக்குள் மங்கலாக வந்து போனதில் “தரையில் இறங்கும் விமானங்கள்” தொலைக்காட்சித் தொடரும் ஒன்று என்பது என் ஞாபகக் கிடங்கின் ஒரு மூலையில் இருக்கிறது. ஆனால் அந்தத் தொடரை முழுமையாகப் பார்க்க இயற்கை கைகொடுக்கவில்லை. 

சமீபத்தில் இந்துமதி அவர்கள் இந்தத் தொலைக்காட்சித் தொடரில் நடிகர் ரகுவரன் அவர்கள் விஸ்வம் பாத்திரத்தில் நடிக்க, வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாரதியார் பாடல்கள் பாடியதைக் குறிப்பிட்டிருந்தார். 

இறுதி அத்தியாயங்களை என் வீட்டுப் பூந்தோட்டத்தில் படித்துக் கொண்டிருந்தவன் படித்து முடித்ததும் நூலை ஒரு பூக்கிடக்கையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டேன். 

இந்த நாவலைப் படித்து முடித்ததும் மீண்டும் முன்னோக்கிப் போய் இந்த இடத்தைப் படித்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

“தூரத்தில் விமானம் ஒன்று சிவப்பு விளக்குப் பளிச்சிட வட்டமடித்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அது மீனம்பாக்கத்தில் தரையில் இறங்கி விடும். பின், மூச்சு இரைக்கப் பிடிவாதமாக ஓடும், கடைசியில் நின்று போய் விடும்....!

விஸ்வத்தின் அடிவயிற்றிலிருந்து ஒரு பெருமூச்சு எழும்பித் தணிந்தது.

ஊருக்குப் போகும் போது அம்மாவிடம் இந்த நூலைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

தரையில் இறங்கும் விமானங்கள் 

தந்த எழுத்தாளர் இந்துமதி அவர்களுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கானா பிரபா

19.02.2022

Posted by கானா பிரபா at 1:11 PM 1 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Friday, February 04, 2022

மணி ஓசை கேட்குதம்மா.....



மணி ஓசை கேட்குதம்மா...கோயில்

மணி ஓசை கேட்குதம்மா...

பரராஜ சேகரப் பிள்ளையார் திருகோயில்

மணி ஓசை கேட்குதம்மா.......

இணுவில் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலின் பென்னம் பெரிய காண்டாமணி ஒலிக்க, கணீரென்று மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடும் அந்தத் தெய்வீக நாதம் கேட்டால் அப்படியே எம் பிள்ளையாரை நினைத்து மனம் கரைந்து வழிபடும்.

இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் சுசீலா அக்கா, எனது அம்மாவின் வாசிப்புத் தோழி. நான் சின்னக் குழந்தையாக இருந்த காலத்தில் விதானையார் மாமா வீட்டுக்கு என்னையும் அழைத்துப் போவார். அங்கே சுசீலா அக்கா எடுத்து வைத்திருந்த புத்தகங்கள் அம்மாவின் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருக்கும். அப்படித் தொடர்ந்த தொட்டிலில் பழக்கம் தான் என்னையும் தீவிர “படிப்பாளி” ஆக்கி ஏதோ எழுதவும் வைக்கிறது.

 

சுசீலா அக்கா குடும்பம் தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்து அங்கேயே தங்கி விட்டார்கள். ஆனால் அவரால் தன் இணுவில் மண் வாசனையை மறக்க முடியவில்லை. அதனால்தான் தன் ஊர்க்கோயில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆன “மடத்துவாசல்” பிள்ளையாருக்கும் பாடல் இயற்றிப் பதிப்பித்திருந்தார்.

இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் பாமாலை என்ற பத்துப் பாடல் கொண்ட தொகுப்புக்கு இணுவையூர் வீரமணி ஐயர்,சுசீலா ஆகியோர் கவிவரிகள் கொடுக்க, டி.வி.ரமணி இசையில் அனைத்துப் பாடல்களையும் பாடியவர் மலேசியா வாசுதேவன். இரண்டாவது தொகுதியில் டி.வி.ரமணி இசையில் 11 பாடல்களில்அமைந்திருக்கின்றன.
ஈழத்தின் புகழ்பூத்த இசை மேதை இணுவையூர் வீரமணி ஐயர் அவர்களும் பாடல்களை எழுதிச் சிறப்பிக்க மீதி அனைத்தையும் சுசீலா அவர்களே எழுதினார். இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு, உன்னிகிருஷ்ணன் அவர்களும் இளம் பாடகர்களுமாகப் பாடியிருக்கிறார்கள்.


 

 

இந்தப் பாடல் தொகுப்பு எவ்வளவு ஆத்மார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றது என்பதற்கு உதாரணமாக இந்த ஒன்றைக் கேளுங்கள்

“உண்ணாமல் இருப்பேனா

உன்னை எண்ணாமல் இருப்பேனோ

என் இணுவை விநாயகனே”

https://www.youtube.com/watch?v=icj9bbTpjDk

தன்னுடைய இந்த இசைத் தொகுப்பை 1997 ஆம் ஆண்டில் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் குடமுழுக்குக் கண்ட போது சுசீலா அவர்கள் யாத்திருந்தார்.

இன்று 25 வருடங்கள் கழித்து பரராஜ சேகரப் பிள்ளையார் கும்பாபிஷேகம் காண்கிறார். ஊரே அந்தப் பக்திப் பரவச நிலையில் இருக்கிறது.

ஆனால் சுசீலா அக்கா நம்மோடு இல்லை.

தனது பிள்ளையாரின் கும்பாபிஷேகம் அறிவித்துப் புனருத்தாரணம் செய்யும் காலச் சூழலிலேயே பிள்ளையாரிடம் சேர்ந்து விட்டார்.

அடுத்த முறை தாயகம் போகும் போது எங்கள் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் காலைப் பூசை முடிந்ததும் வழக்கம் போல

“மணி ஓசை கேட்குதம்மா” பாடலை கோயிலின் லவுட்ஸ்பீக்கர் பாடும் போது சுசீலா அக்காவும் நினைப்பில் வருவார்.

கானா பிரபா

04.02.2022


Posted by கானா பிரபா at 12:38 PM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Thursday, January 13, 2022

SPB பாடகன் சங்கதி - முதல் வாசகர் பகிர்வு

இன்றைய எனது நாளை இனிதாக்கியிருக்கிறது அன்பு உள்ளம் சரஸ்வதி சுவாமிநாதன் தொண்டைநாடு இந்த நூலை முழு மூச்சாகப் படித்து விட்டு வழங்கியிருக்கும் பகிர்வு 😍🙏

கானா பிரபா

அவரின் பகிர்வு இதோ ✍🏻

'வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும்' என்பது ஒரு ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் ஸ்லோகன். ஆனால் 'SPB பாடகன் சங்கதி' என்ற நூலின் ஆசிரியர் கானா பிரபா பல கலைஞர்களை அவர்கள் வாழும் போதே கொண்டாடியவர் என்பது இந்த நூலை வாசிக்கையில் பல கட்டுரைகளின் இறுதியில் கொடுக்கப்பட்ட குறிப்புகளின் மூலம் அறிய முடிந்தது. அது மிகவும் பாராட்டிற்குரியது.

எந்தவொரு கலைஞனனும் பிறரை மகிழ்விக்க தன்னையே ஆஹூதியாக்கி கொள்வான். SPB எனும் கலைஞன், பாடகன் தனது குரலால் என்னைப்போன்று 1975 ல் பிறந்த பலருக்கு அருமருந்தாக இருந்திருக்கிறார் ஆனால் அவைகளை எழுத்தாக்க கானா பிரபா போன்றவர்களுக்கே வாய்த்திருக்கிறது.

எனது அம்மாவோடு நடந்த ஒரு முரணில் ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற எனது முட்டாள்தனத்தை,'ஏழைஜாதி' என்ற திரைப்படத்தில் வரும் இந்த வீடும் உனக்கு சொந்தமில்லை என்று இளையராஜா பாடிய பாடல்வரிகள் மாற்றின. மதுராந்தகம் ரயில் நிலையம் அருகில் இருக்கும் ஒரு முஸ்லீம் வீட்டின் வெள்ளிக்கிழமை ஒளியும், ஒலியும் அம்முடிவை மாற்றியது என்பதே நிஜம். ( அதனை நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம் ) அந்தப் பாடலை https://www.youtube.com/watch?v=qN6MIqGE5yw இந்த நூல் ஓரிடத்தில் அலசுவது என்னைப் பொருத்தவரை நெகிழ வைத்தது. இதுபோல் பலருக்கும் பலவித அனுபவங்களை இந்த நூல் தரும் என்பது எனது நம்பிக்கை.

இசை இறைவனை அடையும் ஒரு மகத்தான வழி. சினிமா இயல், இசை, நாடகம் மற்றும் பிற கலைகளின் கலவை. அத்தகைய திரைப்படத்துறையிலும், பல தனிப்பாடல்களிலும் கோலோச்சிய கலைஞன் ( குறிப்பாய் கிருஷ்ண கானம் பற்றி நூல் விவரிப்பது மார்கழி குளிர் போன்ற இனிமை ) SPB க்கு மிக உன்னதமான, ஆத்மார்த்தமான அஞ்சலியாக இந்த நூலைப் பார்க்கிறேன்.

இதற்குமுன், 'கானா பிரபா' என்பவரைப் பற்றி அறியாத எனக்கு இந்த நூல் அவரது பிற நூல்களை தேடவும் வழிவகுத்திருக்கிறது. மேலும் எனது நூல்களின் வெளியீட்டில் முக்கிய பங்களிப்பைத் தரும் அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்கள் எந்தெந்த இடங்களில் இந்த நூலை மேம்படுத்தியிருக்கிறார் என்பதை அவரோடு எனக்கிருக்கும் அன்பு, நட்பு, தொடர்பானது பல வரிகளில் / இடங்களில் எனக்கு உணர்த்தியது.

இந்த நூல் ஒரு 360 டிகிரியில் SPB யை தரிசிக்க / உணர உதவுகிறது. கலைடாஸ்கோப் எப்படி ஒவ்வொரு சுழற்சியிலும் பலவிதமான வர்ணஜாலங்களை காட்டுமோ அத்தகைய ஜாலங்களை இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் காட்டுகிறது.

பொதுவாக ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் எனில் 500 பக்கத்திற்கு 500 ரூபாய் என்று ஒரு புத்தகத்தை பலர் பக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடுவர். ஆனால் SPB உடன் நாம் மேற்கொண்ட இசைப் பயணத்திற்கும், கானா பிரபா பல பாடலை உள்வாங்கி நமக்கு அதன் பின்பிலத்தை விளக்குவதற்கும், நம்மை அந்தந்த காலக்கட்டத்தின் டைம் மிஷினில் பயணிக்க வைத்தமைக்கும், கடந்த இரு நாட்களாக எனது Wifi இணைய அளவை முழுமையாக பயன்படுத்தி பாடல்களை தேடி, பார்க்க, கேட்க, உணர வைத்து எங்களது 7 நாட்கள் கோவிட் தனிமைப்படுத்தலின் 2 நாட்களை இனிமையாய் கடக்க வைத்தமைக்கு விலையே இல்லை என்பதே நிஜம்.

SPB யை அவரது குரல் மட்டுமன்றி் அவரது பிற தனிப்பட்ட எண்ணம், சொல், செயல்களுக்காகவும் நான் அதிகம் நேசித்ததுண்டு. அவைகளில் ஒன்று அவரது மனம் நிறைந்த ஆசிர்வாதங்களைத் தரும் அவரது குரலும், உடல்மொழியும் அவர் விஜய்டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பல சிறு பிள்ளைகளை ஆசிர்வதிக்கும் போதும் அந்த ஆசிர்வாதம் என்னையும் ஏனோ சிலிர்ப்பூட்ட வைக்கும் அது Make belief, Myth என்று கூட சிலருக்குத் தோன்றலாம்.

ஆனால் பல இடங்களில், :கானா பிரபா' சில வரிகளில் SPB யைப்பற்றி எழுதியவைகள் அதே சிலிர்ப்பை எனக்கு தந்தது எனில் அது பூரணம் / சத்தியம் போன்றவைகளை எவர் உணர்ந்தாலும், எவர் எழுதினாலும் அது பூரணம் / சத்தியமாகவே இருக்கும் என எனக்கு உணர்த்தியது. அத்தகைய வரிகளை இங்கு விளக்குவதைவிட அவைகளை நீங்களே தேடி, "யுரேகா...யுரேகா..." என கூவினால் சிறப்பு என்பதே எனது விருப்பம்.

Detailing, Facts & Figures, Presentation, Interpretation, Conclusion, Sum-up போன்றவையே ஒரு கட்டுரையை அழகுறவும்,தனித்துவமாகவும் காட்டும். பலரை வசீகரிக்கும். அத்தகைய வசீகரத்தை இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் காண முடிகிறது.

இந்த நூலைப் பெற்றவுடன் T. ராஜேந்தர் - SPB என்ற கூட்டணியை இந்த நூல் தொட்டிருக்குமெனில் அது முழுமையானது என ( எனது பால்யவயது நினைவுகளினால் ) நினைத்தேன் அதனை நூலின் உள்ளடக்கத்தின் வரிசையில் கண்டதும் ( 38 வது கட்டுரையாக ) அதனை முதலில் படித்த பின்பே நூலை முதலில் இருந்து தொடர்ந்தேன். இப்படி பலருடைய ரசனைக்கும், தேர்வுக்கும் பலவிதமான Fuel இந்த நூலில் உள்ளது.

Maestro Music போல SPB music என ஒரு app ஒன்று இத்தகைய SPB ஆர்வலர்களோடு கைகோர்த்து எதிர்வரும் காலத்தில் ஒன்று வருமெனில் அது காற்றில் கலந்து பல்லாண்டு நிலைத்திருக்கும். எனது கனவு மெய்ப்பட , பெரிய கடவுள் துணைபுரியட்டும்.

நிறைவு,
திருப்தி,

போன்ற வார்த்தைகளே இந்த நூலுக்கான பொருத்தமான விமர்சனமாக இருக்கும்.

ஆசிரியர் கானா பிரபா அடுத்து புரட்சி கலைஞர் விஜயகாந்த் குறித்து எழுதவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதுவும் பலரை அடைந்து அவருக்கு இன்னொரு மைல் கல்லாக இருக்கட்டும் என்று எனது சத்குருநாதனை பிரார்த்திக்கிறேன்.

வாழ்த்துக்கள் கானா பிரபா.

என்றென்றும் அன்புடன்,
தந்தையின் பணியில்,
சரஸ்வதி சுவாமிநாதன்.
9710572504
tnswamynathan@gmail.com

குறிப்பு :

இந்த நூலின் அத்தியாயங்கள் 52 என்பதால் இனிவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு கட்டுரையாக மீள் வாசிப்போடு, பாடல்களை தேடி கேட்டால், 2022 இனிமையாக எனக்கு நகரும் என்றே தோன்றுகிறது.

சரஸ்வதி சுவாமிநாதன் தொண்டைநாடு

Posted by கானா பிரபா at 12:12 PM 1 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Sunday, January 09, 2022

“SPB பாடகன் சங்கதி” நூல் அறிமுகம் ஆசிரியர் : கானா பிரபா


“SPB பாடகன் சங்கதி” என்ற நூல் தமிழ்த்திரையிசையில் கோலோச்சிய மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் திரையிசைப் பயணத்தின் வரலாற்றை ஒரு ரசிகனின் பார்வையில் கண்டு பயணிக்கும் நூலாக வெளிவந்துள்ளது.
இந்த நூலில் 52 கட்டுரைகள் தாங்கி, 448 பக்கங்களோடு பல்வேறு இசையமைப்பாளர்கள், திரைத்துறைப் பிதாமகர்களோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பயணம், இவற்றோடு SPB பாடிய அரிய பல பாடல் தொகுப்புகள், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பிராந்திய மொழிகளிலும் அவர் எவ்விதம் கொண்டாடப்பட்டு நேசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் போன்ற விடயங்கள் சம்பவ உதாரணங்களோடு பதியப்பட்டு வெளிக் கொணரப்பட்டிருக்கின்றது.
இந்தியாவில் “அகநாழிகை” மற்றும் இதர நாடுகளில் “மடத்துவாசல்” பதிப்பங்கள் வழியாக இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.


இந்த நூலின் முதற்பிரதியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது வாழ்நாள் சகா கங்கை அமரன் (இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குநர்) அவர்கள் பெற்றுக் கொண்ட சம்பிரதாயபூர்வ நிகழ்வு கடந்த ஜனவரி 8 ஆம் திகதி திரு.கங்கை அமரன் அவர்களது இல்லத்தில் “அகநாழிகை” பதிப்பாசிரியர் திரு. பொன்.வாசுதேவன் அவர்களுடன், திரைப் படைப்பாளி அஜயன் பாலா அவர்கள் வெளியிட்டு வைக்க இனிதே நிகழ்ந்தது.
தற்போது நிகழும் அசாதாரண நிகழ்வுகளால் நூல் வெளியீடு தள்ளிப் போடப்பட்டாலும், எதிர்வரும் காலத்தில் இந்த நூலின் வாசிப்பு அனுபவ நிகழ்வை நடத்தத் தீர்மானித்திருக்கின்றார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த நூல் குறித்து முன்னுரை எழுதிய எழுத்தாளர் என்.சொக்கன் பகிர்விலிருந்து
கானா பிரபாவின் இசை சார்ந்த பதிவுகளைப் படித்துதான் நான் அவருடைய ரசிகனானேன், ஒவ்வொரு பாடலையும் இசைத்துணுக்கையும் அவர் ரசிக்கிற விதம் என்னை மயக்கியது. பின்னர் அவருடைய சுற்றுலா, வாழ்வியல் கட்டுரைகளையும் படித்து மகிழ்ந்தேன். இவை அனைத்திலும் என்னை மிக ஈர்த்த விஷயங்கள், ஒரே நேரத்தில் ஆழமாகவும் அகலமாகவும் செல்கிற அவருடைய கவனிப்பு, மயக்கும் மொழி, ஈக்கும் தீங்கு செய்யாத அன்பு.
இவை அனைத்தும், இந்தப் புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன, அவருடைய ஒவ்வோர் எழுத்திலும்தான்!
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இணையத்திலும் அதற்கு வெளியிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள், இவர்கள் எல்லாரும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள், அவருடைய குரலில் ஒரு சிறு இசைத்துணுக்கைக் கேட்டாலும் நிமிர்ந்து கைதட்டுகிறவர்கள். ஆனால், அப்படிப்பட்ட புகழ் பெற்ற, பரவலாகக் கேட்கப்பட்ட கலைஞருடைய இசைப் பயணத்திலும் நாம் அறியாத அல்லது கவனித்திருக்காத குறிப்புகளை, பார்வைகளைக் கானா பிரபா திரட்டித் தருகிறார், வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன், நடிகர்களுடன், மொழிகளுடன் SPB அமைத்த கூட்டணியைத் தனித்தனியாக எடுத்து ருசிக்கத் தருகிறார். ஆங்காங்கே பொருத்தமான வரலாற்று நிகழ்வுகள், ரசிக்கக்கூடிய வரிகள் என்று எந்தவிதத்திலும் சலிப்பூட்டாத இனிய பயணம் இது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அணிந்துரை வழங்கிய திரைப்பட ஆய்வாளர் திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களது பகிர்விலிருந்து
திரையிசைப் பாடல்களை ஒலிபரப்பும் சாதனங்களில் வானொலி முக்கிய மானதாகும்.
இலங்கை வானொலியில் திரைக்கு வராத படப்பாடல்களையும் ஒலிபரப்புவார்கள். இலங்கை வானொலியில் இதற்கென "மலர்ந்தும் மலராதவை” என்ற நிகழ்ச்சியையேவைத்திருக்கிறார்கள்.
இந்த அனுபவங்களை நூலாசிரியர் சிறுவயதிலேயே பெற்றிருப்பார்
அவ்வாறான பாடல்களையும் இந்நூலில் சேர்த்திருக்கிறார்.
எஸ்.பி.பியின் வாழ்க்கை வரலாறு இங்கு எழுதப்படவில்லை ஆனால் அவர் பயணம் செய்த பாதை பற்றி எழுதப்பட்டிருக்கிறது.எஸ்பிபியின் இசைப்பாதையில் எம்எஸ்வியும், இளையராஜாவும்ஆக்கிரமித்திருப்பார்கள். ஆனால் இந்நூலில் எஸ்பிபியுடன் கடமையாற்றிய புகழ் வெளிச்சம் பெறாத திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் பற்றியும் குறிப்பிட்டிருப்பது விசேட அம்சமாகும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அணிந்துரை வழங்கிய திரைக் கலைஞர் திரு. சித்ரா லட்சுமணன் அவர்களது பகிர்விலிருந்து
தமிழ்நாட்டிலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் தமிழ்த் திரை இசைக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர் என் இனிய நண்பரான கானா பிரபா.
தமிழிலே வெளியான எல்லா திரைப் பாடல்களைப் பற்றியும் முழுமையான தகவல்களை தன்னுடைய மனதிலே இவரால் பதிந்து வைத்திருக்க முடிகிறது என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பது தமிழ்த் திரைப்பாடல்கள் மீது இவருக்குள்ள அளவில்லாத காதல்தான்.
இசையின் காதலனான கானா பிரபாவிற்கு எஸ்.பி.பால சுப்ரமணியத்தின் மீது இருக்கும் காதலின் பிரதிபலிப்புதான் இந்த “பாடகன் சங்கதி” என்ற நூல்.
எஸ்,பி.பாலசுப்ரமணியத்தோடு அன்றாடம் பழகியவர்கள் கூட இப்படி ஒரு நூலை எழுதியிருக்க முடியாது என்று கூறத்தக்க அளவில் பல புதுப்புது தகவல்கள் இந்த நூலிலே இருக்கின்றன.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அந்த மகா கலைஞனுக்கு காலத்தைக் கடந்து நினைவிலே நிற்கக் கூடிய அருமையான பதிவுகள் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ள கானா பிரபாவிற்கு வாழ்த்துகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கானா பிரபா எழுதிய “SPB பாடகன் சங்கதி” வெளிவந்து ஒருவார காலத்திலேயே முதற்பதிப்பின் பதிவு செய்யப்பட்ட பிரதிகள் விற்பனை செய்யப்பட்டு அடுத்த பதிப்புக்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றது இந்த நூல்.
Posted by கானா பிரபா at 11:31 AM 1 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ▼  2022 (13)
    • ▼  June 2022 (1)
      • பொன் விழாக் காணும் ஈழத்து நாடகர் & ஊடகர் திரு. G.P...
    • ►  May 2022 (3)
      • செம்பியன் செல்வன்
      • சிவா தியாகராஜா 🙏
      • மாஸ்டர் சிவலிங்கம் எனும் ஈழத்தின் சிறுவர் இலக்கிய...
    • ►  April 2022 (1)
      • ஈழத்துத் திரைப்பட ஆவணக் களஞ்சியம் திரு. தம்பிஐயா ...
    • ►  March 2022 (3)
      • இலங்கை வானொலி மூத்த ஆளுமை திருமதி ஞானம் இரத்தினம் ...
      • 83
      • இசையமைப்பாளர் உதயா
    • ►  February 2022 (3)
      • "காட்டுக்குயில்" படைத்த நிரோஜினி ரொபர்ட் பேசுகிறார்
      • தரையில் இறங்கும் விமானங்கள்
      • மணி ஓசை கேட்குதம்மா.....
    • ►  January 2022 (2)
      • SPB பாடகன் சங்கதி - முதல் வாசகர் பகிர்வு
      • “SPB பாடகன் சங்கதி” நூல் அறிமுகம் ஆசிர...
  • ►  2021 (34)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (3)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • "ஈழமண் தந்த குயில்" வர்ணராமேஸ்வரன்
    "நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி வாடும் வயிற்றை என்ன செய்ய காற்றையள்ளித் தின்று விட்டு கையலம்பத் தண்ணீர் தேட...... பக்கத்திலே குழந்தை வ...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes