
அண்ணைக்கு ஒரு கொத்து றொட்டி போடு!

"உன்னை எவ்வளவு நேரம் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறன், செவிடு மாதிரி ஏனெண்டு கேளாமல் என்னடா பின்னுக்குச் செய்து கொண்டிருக்கிறாய்" தாவடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் றோட் பக்கம் போதும் திசையின் ஓரமாய் இருக்கும் கொத்துறொட்டிக் கடைக்குள் நான் நுழைந்ததும் அந்தக் கடைக்கார அம்மா தன் வேலையாளுக்குக் கொடுத்த வசவு தான் அது. ஊரில் முந்திய நாட்களில் வருஷம் 365 நாளில் 356 நாள் கோயில் திருவிழா விரதமிருக்கும் எங்கட வீட்டுக்காரருக்குத் தெரியாமால் கூட்டாளிமாரோட தஞ்சம் புகும் இடங்கள் தான் இந்தக் கொத்துறொட்டிக்கடைகள். கடைக்குள் நுழைந்து ஓடர் கொடுத்ததும் ஏதோ ட்ரம்ஸ் சிவமணி கணக்காய் கொத்து றொட்டி அடிக்கிற இரும்புத் தகட்டில் முட்டையை அடித்துப் போட்டு விட்டு, நறுக்கியிருந்த வெங்காயம் , பச்சை மிளகாய்க் குவியலை ஒரு கையால் எடுத்துத் துளாவி விட்டு , பரோட்டாவைக் கண்டம் துண்டமாய் வெட்டித்தள்ளும் கொத்துறொட்டி மாஸ்டரின் கோடாலியின் இரும்புத் துண்டு போல இருக்கும் ஆயுதம். சைட்டில் இருக்கும் மாட்டிறச்சிக் கறியும் அதில் சங்கமிக்க, மேலே கோழிக்குழம்பு தீர்த்தமாடும். பத்து நிமிஷத்தில் வெங்காயம், மிளகாய், பரோட்டா எல்லாம் திரண்ட கலவை திசூப் பேப்பரில் சுத்திய பிளாஸ்டிக் கோப்பையில் போடப்பட்டுப் பரிமாறப்படும்.
அந்தப் பழைய நினைப்பு மீண்டும் தலைதூக்க, தாவடிச் சந்திக் கடைக்குத் தனியே போய் உட்காருகிறேன். கொத்துறொட்டி வந்தது. பசியில்லை ஆனால் கொஞ்சமாவது சாப்பிட்டுப் பார்ப்போம் என்று ஒரு சில விள்ளல்களை வாயில் வைத்து விட்டுக் கை கழுவுகிறேன். அந்த நாளில் நண்பர்களோடு போய்ச் சாப்பிட்ட காலம் ஒரு தனிச்சுவை போல... அது சாப்பாட்டில் விளைந்ததா அல்லது நட்பில் சுவைத்ததா தெரியவில்லை.

மாடு கண்டு ஈண்டுட்டுது சிக் லீவ்
யாழ்ப்பாணத்து நண்பர்களை விட்டு விலகும் போது பள்ளிக்காலம், இப்போதோ அவர்களைக் காணும் போது உழைப்பாளிகள். ஒரு நண்பன் ஒரு சிற்றூரில் ஆசிரியராக இருக்கிறான். அவனோடு சேர்த்து ஒரு நாலு ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர் அவ்வளவு தான் அந்தப் பள்ளிக்கூடத்தின் கொள்மானம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தலைமை ஆசிரியருக்கு அடுத்து என் நண்பன் தான் சீனியராம் ;). ஒரு நாள் தலைமை ஆசிரியர் இவனைக் கூப்பிட்டு
"ஒருக்கால் வகுப்புகளைப் பார்த்துக் கொள்ளும் நான் கல்விக் கந்தோருக்குப் போட்டு வாறன்"
என்று விட்டுப் போய் விட்டார். தலைமை ஆசிரியர் போனபின் தான் இவனுக்கு உறைத்தது அன்று சொந்தக்காரர் கோயிலுக்குக் காவடி எடுக்கினம், போகவேண்டுமே என்று இவனும் கொஞ்ச நேரத்தில் சாப்பாட்டுக்குக் கிளம்பி விட்டான். காவடிச் சோறு பரமாறப்படப்போகுது. இவன் பந்தியில் உட்கார்கிறான். பக்கத்தில் யாரடா என்றால் சாட்சாத் தலைமை ஆசிரியரே தான்.
"உம்மை எல்லோ வகுப்பைப் பார்க்கச் சொன்னனான்" - தலைமை ஆசிரியர்
"சேர்! நீங்கள் இங்கை வருவீங்கள் எண்டா வந்திருக்க மாட்டன்" இது என் நண்பர்.
ஒரு அலுவலக நாளில் சொந்தக்காரர் வீடொன்றுக்குப் போனேன். அந்த வீட்டுக்காரரின் மகன் அன்றைக்கு வேலைக்குப் போகவில்லை, ஏனென்று ஆர்வக்கோளாறினேன் அதற்கு அவன்
"மாடு கண்டு ஈண்டுட்டுதண்ணை அதான் போகேல்லை"

கிழித்துப் படிக்கப்படும் புத்தகங்கள்


யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தடியில் வழக்கம் போலப் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குப் போய் நூல்களை மேய்ந்தேன். சுவாமி(?) நித்தியானந்தாவின் அருள்மொழிகளைத் தாங்கிய குண்டு குண்டான புத்தகங்களைக் கண்டபோது நக்கீரன் சொன்னது ஞாபகம் வந்தது. அட நான் சொல்லவந்தது நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே.
ஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றில் இலங்கைப் பிரச்சனை குறித்து ஏதாவது கட்டுரையோ, கார்ட்டூனோ வந்தால் அவை கிழிக்கப்பட்டுத் தான் இங்கு விற்பனைக்கு விடப்படுகின்றன. இதே ரீதியில் நக்கீரன் போன்ற சஞ்சிகைகளைக் கிழித்தால் விளம்பரப்பக்கம் தான் மிஞ்சுமோ என்றோ நக்கீரன் போன்ற பத்திரிகைகளுக்குத் தடா. பஸ் நிலையத்தில் இருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலை சிறியது, வேறு பெரிய கடை உண்டா என்று கடையில் வேலை செய்த பெண்ணிடம் கேட்டேன். "வேம்படி றோட்டில் ஒண்டிருக்கு, போய்ப் பாருங்கோ"
அடுத்த நிமிடம் வேம்படி றோட் பூபாலசிங்கத்துக்கு லுமாலா பறந்தது.
அங்கே வேலையில் இருந்த பெண்ணை அழைத்து
"ஈழத்து எழுத்தாளர்கள் படைப்புக்கள் இருக்கா" - இது நான்
"புதுசா ரமணிச்சந்திரன், உமா பாலகுமாரின் புக்ஸ் இருக்கு, வேணுமா" - இது வேம்படி றோட் பூபாலசிங்கம், அங்கே இருந்த பெண்

யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பும் நாள், நண்பர்கள் இணுவில் சந்தியால் வரும் கொழும்பு பஸ்ஸில் என்னை ஏற்ற நிற்கின்றார்கள். பேசாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு இங்கேயே இருப்போமா மனம் மாறி மாறி என்னைக் கூறு போடுகிறது. கொலைக்குற்றவாளியின் இறுதி விருப்பங்களை நிறைவேற்றிவ விட்டு தூக்குமேடைக்கு அனுப்பும் நிலை அது.
விருப்பமில்லாத பிள்ளையைப் பாலர் வகுப்புக்குத் துரத்தி அனுப்புமாற் போல மனம் உள்ளே மெளனமாகக் குமுற அம்பாள் பஸ்லில் ஏறுகிறேன். மீண்டும்
"உன்னை நினைத்து" படத்தைப் போட்டுச் சாவடிக்கிறார்கள்.
என் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே!


