இந்தச் சம்பவம் நடந்து இற்றைக்கு பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் எப்போதாவது ஒருநாள் என் நினைவின் அடுக்குகளில் இருந்து ஏதோ ஒரு சமயத்தில் ஞாபகத்தில் எழுந்து மறைந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றும் அப்படியே மீண்டும் நினைப்பூட்டிவிட்டது விஸ்வரூபம் படம் பார்த்த பின்.
1995 ஆம் ஆண்டு, தாயகத்தில் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஆட்சிக்கட்டிலைப் பிடிக்கிறார். மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கிறது ஆனால் அதுவும் கானல் நீர் தான் என்று உணரும் சமயம் வெளிநாட்டில் இருக்கும் என் சகோதரர், அப்போது கொழும்பில் உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என்னை அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறார். அப்போது மெல்பேர்னில் இருக்கும் அந்தக் கல்லூரிக்கு முகவராக கொழும்பில் உள்ள சிங்களவர் இயங்கிக் கொண்டிருந்தார். என்னுடன் இரண்டு சிங்களப் பெண்களும், மூன்று சிங்கள ஆண்களுடன் ஒற்றைத் தமிழனாக மெல்பேர்னுக்கு வருகிறேன். வந்த பின்னர் நடந்த சதிராட்டங்கள் தனி நாவல் அளவுக்குப் போடவேண்டியவை. ஆனால் அதுவல்ல இங்கே நான் சொல்ல வந்தது.
மெல்பனுக்கு வந்த அந்த ஒரு மாதமும் எல்லோருமே ஒரே வீட்டில் தற்காலிகமாகத் தங்கிக் கொண்டே அந்த ஒரு மாதத்தில் இருப்பிடம் பார்த்து, கிட்டியபின் வீடு மாறுவதாகத் திட்டம். ஐந்து சிங்கள நண்பர்களுக்கும் எனக்கும் ஒரே ஊடக மொழி ஆங்கிலம், காரணம் அசல் யாழ்ப்பாணத்தான் எனக்குத் தமிழைத் தவிர சிங்களத்தைக் கற்கும் வேளையும், வேலையும் இருகவில்லை. அவர்களில் நிமால் என்ற ஒரே ஒருத்தன் மட்டும் என்னுடன் முகம் கொடுத்துப் பேசினான், தமிழ்ப்படங்களை விரும்பிப்பார்ப்பேன் என்றும் அப்போது வந்த ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுக்கள் பிடிக்கும் என்றும் "சின்னச் சின்ன ஆசை" பாட்டை சிங்களத் தமிழில் பாடியெல்லாம் காட்டிக் கொண்டு வந்தான். மற்றவர்கள் என்னோடு அதிகம் பேசாவிட்டாலும் ஓரளவு சமாளித்துக் கொண்டு இருந்தார்கள்.
கல்லூரியில் முதல் நாள் வகுப்பு, அந்த வகுப்பில் ஆங்கிலேயர்களை விட, சீனர், ஜப்பானியர், கொரியர் என்று பிற ஆசிய நாட்டவரே சூழ வலம் வந்திருந்தார்கள். வகுப்பு ஆசிரியர் வந்து விட்டார். ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகப்படுத்தச் சொல்லக் கேட்கின்றார். சீனத்துப் பெடியன், ஜப்பானியப் பெண், கொரிய ஆண், ஜப்பானிய ஆண் என்று ஒவ்வொருவராக தாம் எங்கிருந்து வந்தோம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.
ஐந்து சிங்களவர்களைக் கடந்து ஆறாவதாக நான், எழுந்து நின்று "சிறீலங்காவில் இருந்து வருகின்றேன், என் தாய் மொழி தமிழ்" என்றும் சொல்கிறேன்.
"டீச்சர் இவன் ஒரு பயங்கரவாதி, எங்கள் நாட்டில் இருக்கும் எல்லோரையும் இவனின் சகோதரர்கள் அழிக்கிறார்கள்" குரல் வந்த திசையைப் பார்க்கிறேன், எங்களோடு கூட வந்த சிங்களப் பையன் லக்மால் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிச் சொல்லிகொண்டிருக்கிறான். எனக்கு அந்த இடத்தில் மரத்தில் கட்டிவிட்டுக் கட்டெறும்புகளை உடம்பெல்லாம் பரப்பிவிட்டது போல குறுகி நிற்கிறேன். ஆனாலும் ஓரக்கண்ணால் நிமாலைப் பார்க்கிறேன், அவன் எனக்கு ஆதரவாக ஏதாவது பேசித் திசை திருப்புவானோ என்று. அவனின் கண்ணாடியும் சேர்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. எனக்கோ முன்பின் இப்படியானதொரு தாக்குதலைச் சந்திக்காத தருணம் இருபதை எட்டிப்பிடித்தாலும் ஆசிரியைத் தாயின் சேலைத்தலைப்புக்குள் அடங்கிய செல்லப்பிள்ளையாக அதுநாள் வரை வளர்ந்துவிட்டேனே, (இன்று அப்படி நடந்திருந்தால் நிலமை வேறு ;-) ) ஆனாலும் அந்தக் கண நொடிகளுக்குள் சுதாகரித்துக் கொண்டு ஆசிரியரும் லக்மாலின் கதையைப் பொருட்படுத்தாது அடுத்த மாணவனைக் காதுகொடுத்துக் கேட்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த நாளே மெல்பேர்னில் உள்ள ஒரு தமிழர் மூலம் எனக்கு உறைவிடம் கிட்டி நான் விலகிப் போனேன். அந்தச் சம்பவம் எனக்கு மட்டுமல்ல, என் போன்ற சமூகத்தினருக்கு ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் ஒருமுறையாவது கிட்டியிருக்கும்.
விஸ்வரூபம் படம் வரப்போகிறது என்பதைக் காட்டும் trailer முதற்கொண்டு, பாடல்கள் வரை என்னைப் பெரிதாக ஆக்கிரமிக்கவில்லை. அதற்கு முதற்காரணம், தமிழில் சண்டைப்படங்களை எல்லாம் தியேட்டர் சென்று பார்க்குமளவுக்கு மனோதைரியம் எனக்கில்லை. விதிவிலக்காக ஷங்கர் படங்களைப் பார்ப்பதற்கு அவர் கொடுக்கும் காட்சிகளின் பிரமாண்டமும், ரஜினி படங்கள் என்றால் கிட்டும் முழு நீளப் பொழுது போக்குமே காரணம். அதையும் தாண்டி விஸ்வரூபம் படத்துக்கு என்னை தியேட்டருக்கு இழுத்தது இந்தப் படம் கிளப்பிய சர்ச்சைகள் தான். எனவே சர்ச்சைகளும் படம் பார்க்க விரும்பாதவனைத் தியேட்டருக்கு இழுக்கும் என்பதற்கு நான் நல்ல உதாரணம் ;-)
விஸ்வரூபம் ஒரு சாதா தமிழ் மசாலாப் படமாகத்தானே இருக்கும் என்ற என் நினைப்பை அடியோடு மாற்றிவிட்டது படத்தின் ஆரம்பித்தில் இருந்து. என்னளவில் இந்தப் படம் தமிழ் சினிமா என்ற ரீதியில் புதிய அனுபவமாக அமைந்தது. அதற்கு கமலில் இருந்து பொருத்தமான அளவான நடிகர் தேர்வு, காட்சிக் களம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, மிகமுக்கியமாக எடிட்டிங் ஆகியவை சொல்லி வைக்கவேண்டிய ஒற்றுமைக் கூட்டு. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை போரடிக்காத காய் நகர்த்தல்கள், முடியும் போது அடுத்த பாகம் வரும் என்றபோது எழும் எதிர்பார்ப்பு வரை கமல்ஹாசனுக்கான வெற்றியாக எடுத்துக் கொள்ளலாம். தமிழ் சினிமாவில் ஏதோவொரு அம்சத்தில் தூர நோக்கு என்ற கமலின் பலத்தை, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற சரியில்லாத சேர்க்கை பாழாக்கிவிடும். கமல் எட்டடி பாய்ந்தால் கூட இருக்கும் ரவிக்குமார்கள் பதினாறு அடி கீழே தள்ளிவிடுவார்கள். தசாவதாரத்தில் வரும் மொக்கை மசாலா இடைச்செருகல், சந்தானபாரதித்தனமான வில்லன்கள் சரியான சான்று.
ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை கமலோடு கூட உழைத்தவர்களும் சரி, அவருக்குப் பின்னணியில் இருந்த ஆலோசகர்களும் சரியாகவே இயங்கியிருக்கிறார்கள் படத்தின் உருவாக்கம் என்ற ரீதியில். என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல கேரளச் சூழலில் இயங்கும் மெது ஓட்டமான மலையாளப்படத்தைத் தமிழ்ப்படத்தோடும், தமிழ்ப்படத்தை ஆங்கிலப்படத்தோடும் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்கும் மனோபாவம் இல்லை. அந்தந்த சினிமாக்கள் அவரவர் எல்லையில் இருந்து திருப்திப்படுத்தியிருக்கின்றனவா என்றே பார்த்துத் திருப்திப்பட்டுக்கொள்வேன். அந்தவகையில் விஸ்வரூபம் இதுவரை நான் கண்ட தமிழ் சினிமாக்களில் மேம்பட்ட தரம் கொண்டது என்பேன். ஏதோவொரு டொரண்ட்டில் நோண்டியும், பஜாரில் கிடைக்கும் டிவிடியிலும் இந்தப் படம் தியேட்டரில் கொடுக்கும் உன்னத அனுபவத்தில் ஒருவீதமேனும் நிறைவேற்றாது என்பபேன்.
விஸ்வரூபம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய படமே அல்ல.
விஸ்வரூபம் படத்தின் நெருடல்கள் என்ற வகையில் இரண்டே இரண்டு இன்னும் உறுத்திக் கொண்டிருக்கின்றன.
நெருடல் ஒன்று "அமெரிக்கன் பெண்களையும், குழந்தைகளையும் ஒண்ணும் பண்ணமாட்டான்" என்று கமல் சொல்லும் போது வயிறு குலுங்கிச் சிரிக்கத் தோன்றுகிறது. இதுவரை கமல் ஆஸ்காருக்கு அனுப்பிய படங்களை விட விஸ்வரூபம் தான் தொழில் நுட்ப ரீதியில் மேம்பட்டது, கவனிக்கப்படவேண்டியது என்பதால், அமெரிக்கனுக்கு காக்காய் பிடித்து அந்தப் பக்கத்தையும் கவனித்துவிடுவோம் என்று கமல் எண்ணினாரோ தெரியவில்லை.
என்னதான் இன்னொரு நாட்டுத் தீவிரவாதி அல்லாவின் பெயரை உச்சரித்துக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபட்டாலும், தொடர் காட்சிகளில் ஒரு எல்லைக்கு மேல் என்னையே கொஞ்சம் நெளிய வைக்கிறது. காரணம் நாம் வாழும் சூழல் அப்படி. ஒரு படைப்பைப் பகுத்துப் பார்த்து அது எந்த விஷயத்தை முக்கியமாகச் சொல்லிவைக்கின்றது என்ற அளவுக்கு நம் தமிழ்ச்சூழலுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பேன். இந்தச் சூழலில் இப்படியொரு படத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்தில் தலிபானாக கமல் நடிப்பார் என்று சொல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர மூளையும் அவருக்கு இல்லை. கமல் போன்ற மூத்த கலைஞனுக்குப் பொறுப்புணர்வு மிக முக்கியம்.
இப்பொழுதே சமூக வலைத்தளங்கள் ஈறாக கோஷ்டி பிரித்து மதச்சண்டை அளவில் வீணான சர்ச்சைகள். அல்லாவின் நாமத்தைத் தொடர் காட்சிகளில் வைக்கும் போது சக இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தாது, அப்படியே புண்படுத்தினாலும் கண்டுக்காதீங்க என்ற ரீதியில் வரும் ஒப்புச்சப்புக்களைச் சொல்ல நான் யார்?
இந்தப் படத்தைத் திரையிடத் தமிழக அரசு தடைவிதித்ததன் நியாய தர்மங்கள் இங்கே தான் பிறக்கின்றன.
சிறுபான்மை இனத்தவன் என்ற ரீதியில் ஏதோவொருவகையில் நானும் என் சார்ந்த சமூகமும் கிட்டத்தட்ட இதேரீதியான மன உளைச்சலில் இருப்பதால் என்னை இந்தக் காட்சியமைப்புக்கள் அதிகம் பாதித்திருக்கலாம்.
இங்கேதான் மேலே நான் சொன்ன என் வாழ்வில் கடந்து போன சிங்களப் பையன் லக்மால் ஐயும் துணைக்கு அழைக்கிறேன். ஆப்கானிஸ்தான் என்ன பாகிஸ்தான் என்ன அதையும் கடந்து இந்தியா, இலங்கை என எங்கிருந்து வந்தாலும் தாடி வைத்துத் தொப்பி வைத்த எந்த இஸ்லாமியனையும் தீவிரவாதி என்ற ஒரே முத்திரையோடு சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது.
வெறுமனே படம் என்று ஒதுக்குமளவுக்கு கமல் போன்ற மூத்த படைப்பாளியின் இப்படியானதொரு படைப்பைக் கடந்து போய்விடமாட்டார்கள். படைப்பாளியின் சுதந்திரம் என்று என்னதான் நாம் தாராள மனம் கொண்டு இயங்கினாலும், இதே படைப்பு நேர்மை நாம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நியாயமாக ஒலிக்குமா என்பதே என் ஆதங்கம்.
ஆதங்கப்படுவதற்கும் சுதந்திரம் உண்டுதானே?
Sunday, January 27, 2013
Thursday, January 17, 2013
மின்சாரக் கனவுகள்

கடந்த ஆண்டு தாயகத்துக்குப் போனபோது வழக்கமான விடிகாலை, அடுக்களையில் இருந்து அம்மா எழுப்பும் சத்தம் கேட்டு விழித்து மெல்ல அந்தப்பக்கம் போகிறேன். ஜாம் போத்தலுக்குள் சம்பிரதாயத்துக்குச் சொட்டு எண்ணையும், பஞ்சுமாக, மேலே ஒரு துண்டியில் சுடர் விட்டுக்கொண்டிருந்தது அந்த விளக்கிலிருந்து கிளம்பிய ஒளி. இந்தக் குப்பி விளக்கின் வயசு இருபது இருக்கும். இன்றும் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இப்போது மின்சார வசதி முழுமையாகச் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் அவ்வப்போது ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ மின்சாரம் நின்றால் உலகமே அழிந்துவிடுமாற்போல இயங்கும் நிலை இன்று. ஆனாலும் அம்மா அதிகாலை இந்தக் குப்பிவிளக்கை மறக்காமல் தன் சேவகனாக வைத்திருந்தது வியப்பைத் தந்திருந்து. "லைற் போட்டா நித்திரை குழம்பிவிடும் ஐயா" என்று நான் எதிர்பார்த்த அதே பதில் அவரின் பதில் வரும் என்பதால் கேட்காமல் விட்டிருந்தேன். ஆனால் எனக்குத் தெரியும் இயன்றவரை தான் சிக்கனமாக இயங்கவேண்டும் என்ற முனைப்பு அம்மாவின் ரத்தத்தில் ஊறியது என.
தமிழகத்தில் மின்சாரத் தட்டுபாடு சமீப காலமாகத் தலை போகும் விஷயமாக இயங்கும் சூழலில், நினைத்துப் பார்க்கிறேன் அந்த நாட்களை, இற்றைக்கு இருபது வருஷங்களுக்கு முன்னர் ஐந்து ஆண்டுகளாக முழுமையாக இந்தக் குப்பி விளக்கில் தான் கழிந்திருக்கிறது இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்து விலகிய பின்னர், மீண்டும் தேனிலவு கசந்து தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிரேமதாசா காலத்தில யுத்தம் ஆரம்பமான நேரம் அது, எங்களூரில் இருபத்து மணி நேரமும் மின்சாரம் இருந்தது. ஆனால் யுத்தச் சூழல் நெருங்க நெருங்க, அதுவும் சவாலாகிப் போனது. அதுநாள் வரை எங்கள் அயலூரான சுன்னாகம் என்ற இடத்தில் இருந்தே பிரதான மின்வழங்கியில இருந்து அயலூர்களுக்கு மின்சாரம் வந்து கொண்டிருந்தது. அதை இலக்குவைத்தெல்லாம் இலங்கை விமானப்படையின் விமானங்கள் குண்டு போட்டுப் பார்த்தார்கள், அதிலிருந்தும் ஓரளவு தப்பி ஒரு சில மாதங்கள் கடும் நெருக்கடியிலும் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கிருந்து வழங்கப்படும் மின்சாரம் கடத்தப்படும் உப மின்வழங்கிகளை இலக்கு வைத்து விஷமிகள் இயங்க ஆரம்பித்துவிட்டார்கள். இரவு நேரங்களில் சில விஷமிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் உபமின்வழங்கிகளை இலக்குவைத்து அந்த மின்வழங்கியில் இருக்கும் ஒயிலைத் திருடுவதற்காக அவற்றை உடைத்துத் திடுடி விடுவார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பகுதியாக மின் இழப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கம் சாதிக்கா முடியாத வேலையை நம்மூரில் இருக்கும் விஷமிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கச்சிதமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்தச் சூழலில் எங்கள் ஊரில் இருந்த இளைஞர்கள் ஒன்றுதிரண்டு "விழிப்புக்குழு" அமைத்து இரவிரவாக நம்மூரில் இருக்கும் உப மின்வழங்கியைச் சுற்றிக் காவல் இருந்தார்கள். ஊருக்கு வெளிச்சம் கிடைக்கவேண்டும் என்ற ஒரே முனைப்பில் இயங்கிய அவர்களுக்குக் கிடைத்தது சுழற்சி முறையில் எங்கள் கிராமத்து வீடுகளில் இருந்து சூடான தேத்தண்ணியும் வடையும் தான். கொஞ்சக் காலம் கழிந்த பின் சுன்னாகம் மின்வழங்கி நிலையம் இலங்கை அரசாங்கத்தின் குண்டுகள் முற்றாகத் தாக்கியபின் உப மின்வழங்கிகளும் செயல் இழந்தன. கோயிலடி நண்பர்களின் விழிப்புக் குழுவுக்கும் வேலையில்லாமல் போனது.
"நான் உழைச்சுச் சம்பாதிச்ச காசில இந்த ஒழுங்கைக்கு (சிறு தெரு) முதன்முதலில் லைட் போஸ்ட் போட்டனான்" என்று எங்கள் அப்பா பெருமையாகச் சொன்னது ஒரு காலம். அப்போது செல்வந்தர்களாக இருந்தவர்களும் நடுத்தெருவுக்கு வந்து விட்ட சூழலில், இருந்த ஒரு சில ஜெனரேட்டர்கள் தான் அவர்களின் வயிற்றைக் கழுவ வாடகைக்குப் போய் வந்தன. ஏதாவது அத்தியாவசியமான தினத்துக்கோ, கொண்டாட்டத்துக்கோ ஒரு சில மணி நேரம் வாடகை ஜெனரேட்டர் மூலம் மின் குமிழ்கள் சிரித்துப் பார்க்கும். ஒரு லீட்டர் மண்ணெண்ணை (கெரசின்) இருநூறு, முன்னூறு ரூபாயில் விற்கும் போது வாடகை மின்சாரமும் கெளரவமான பொருளாகிவிட்டது. கோண்டாவிலில் விடுதலைப்புலிகளின் "படிப்பகம்" என்ற இடத்தில் ஜெனரேற்றர் மூலம் அப்போது உயர்வகுப்பு மாணவர்களின் படிப்புக்கு உதவுமாற்போல இரவில் மின்சாரம் வழங்கி வந்தார்கள். அங்கு போய் படித்தவர்களும் உண்டு. புதுசாக லாந்தர் விளக்கெல்லாம் அப்போது வாங்க முடியாது கொழும்பிலிருந்து அத்தியாவசிய உணவுப்பொருட்களே வருவதற்கு மாதக்கணக்காக இருக்கும் நிலையில் லாந்தர் விளக்காவது. எப்போதோ பாவித்துச் சீண்டாத லாந்தர் விளக்குளை, அநாத ரட்சகா என்று தேடிப் போய் எண்ணெயை நிரப்பினால் பழிவாங்குமாற்போல அதன் அடிவயிற்றிலிருந்து எண்ணையைப் பீய்ச்சும். இனியென்ன எறியவேண்டியதுதான்.
யுத்த நெருக்கடிகள் ஒவ்வொரு விதமாக நம்மவரைப் பதம்பார்த்தபோது, நாங்களும் விடாப்பிடியாக ஒவ்வொரு இழப்பையும் ஈடு செய்யுமாற்போல புதுப்புதுக் கண்டுபிடிப்புக்களோடு வாழத் தலைப்பட்டோம். மின்சாரத்துக்கு மாற்றுவழிமுறைகள் நீர் இறக்கும் இயந்திரத்தை ஜெனரேட்டராக மாற்றியியதில் இருந்து, சைக்கிள் டைனமோவைச் சுழற்றி வானொலி கேட்பது வரையும் இருக்க, இரவுச் சூரியனாய்க் கிட்டியதுதான் இந்த ஜாம் போத்தல் விளக்குகள். எறிவதற்குத் தயாராக இருந்த பாவித்த ஜாம்போத்தல்களை, தட்டுப்பாடான சூழலில் சிறு கொள்கலன்களில் நிரப்பி விற்கும் தேங்காய் எண்ணையை வாங்கி மருந்து போல அந்தப் போத்தல்களில் சிறிதளவு ஊற்றி, அந்த எண்ணெய் வேகமாகப் பாவனையடைந்துவிடாமல் பஞ்சையும் திணித்து,திரியைப் பட்டும்படாமல் நடுவில் செருகினால் விளக்கு தயார். மணிக்கணக்கில் நம் சிக்கனம் உணர்ந்து செயற்படுவதில் சூரன் இவன்.
இது ஒருபுறமிருக்க ஊரே இருளில் மூழ்கி, குட்டி ஜாம்போத்தல் விளக்கில் முழுவீடும் இயங்கும் போது வானத்தில் இருந்து வட்டமிடும் இயந்திரக்கழுகார் இலங்கை விமானப்படையின் விமானங்களுக்கு ஊரே இருட்டுகாடாய் இருக்கும். அதைச் சமாளிக்க, வெளிச்சக் குண்டை முதலில் போட்டு விட்டு அந்த வெளிச்சத்தில் பொதுமக்களின் வீடுகளை இலக்கு வைத்துக் குண்டு போட்டதையும் சொல்லி வைக்கவேண்டும்.
90 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளின் இரவுகள் குப்பி விளக்கிலும், பகலில் சூரிய விளக்கிலும் கழிந்த நாட்கள் அவை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை எல்லாமே குப்பி விளக்கில் தான் படித்து முடித்தோம். ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கில் படித்துப் பட்டம் பெற்றதற்கு நிகரான பெருமை அது. இன்றைக்குப் புலம்பெயர்ந்த சூழலில் மின்சாரம் ஒரு நிமிடம் நின்றாலே அதிசயமாக இருக்கும் சூழலிலும், என் வீட்டில் தேவையில்லாமல் மின் விளக்குகள் எரியாது, இந்த ஜாம்போத்தல் விளக்கு போதித்த பாடம் அது.
குப்பிவிளக்குப் படம் நன்றி: குளக்காட்டான் (வசந்தன் பதிவு வழியாக)