“மாமயில் ஆடக் கண்டேன்
கதிர்காமத்தில்....”
ஈழத்து முற்றம் நிகழ்ச்சியை வழங்கிய ஈராயிரத்தின் முற்பகுதிகளில் அடிக்கடி இந்தப் பாடலுக்கும் இடம்கொடுப்பேன்.
அருந்ததி ஶ்ரீரங்கநாதன் அவர்களது குரலில் வெளிப்படும் அந்த இனிய நாதத்துக்குச் சிறப்பு தினமேது என்று அந்தப் பக்திப் பாடலும் இடம்பிடித்து விடும்.
ஈழத்தின் நாம் வாழ்ந்த காலத்தில் கலைத்துறையில் உச்ச ஆளுமைகளில் ஒருவராக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற அறிமுகத்தோடு புலம்பெயர் வாழ்வில் புகுந்த எனக்கு அவரின் பாடலையே வானொலிப் படைப்புகளில் வழங்கும் பேறு கிட்டியது.
அருந்ததி ஶ்ரீரங்கநாதன் அவர்களது குடும்பமே கலைகளை வளர்க்கும் தோப்பாக இருந்தது. சிட்னியிலும் தொடர்ந்து கலைப்பணி ஆற்றிய ஜயலட்சுமி கந்தையா புகழ்பூத்த நடனக் கலைஞர் மற்றும் ஆசிரியை ஒரு சகோதரி, இன்னொரு சகோதரி பரத இசை மரபு என்ற தமிழக அரசின் விருது பெற்ற நூலினை யாத்த ஆய்வாளர், பேராசிரியை ஞானாகுலேந்திரன் என்று அவரி இரு சகோதரிகளையும் சிட்னி மண்ணில் காணும் வாய்ப்பும் நமக்குக் கிட்டியது. காலவோட்டத்தில் அருந்ததி ஶ்ரீரங்க நாதன் அவர்களும் சிட்னி மண்ணில் நிலைபெற்று விட்டார்.
இவரது தந்தை சிவசுப்பிரமணியம்; தாய் வீரலஷ்மி. இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்பு இந்து மகளிர் கல்லூரியிலும் உயர்கல்வியை வேம்படி மகளிர் கல்லூரியிலும் பயின்று, பட்டப்படிப்பைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று பீ.ஏ. சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். படிக்கும் காலத்தில் வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வாய்ப்பாட்டிலும் வீணையிலும் டிப்ளோமாச் சான்றிதழ்களைப் பெற்றார். அம்பிகா தாமோதரம், ஞான குலேந்திரன், கேரளாவைச் சேர்ந்த சங்கீத வித்துவான் அந்தனி மாஸ்டர், இசை மேதை மஹாராஜபுரம் சந்தானம் ஆகியோரிடம் இசைக் கலையையும் கயிலாயம்பிள்ளை மாஸ்டர், ஜயலக்ஷ்மி கந்தையா, பாலசுந்தரி பிராதலிங்கம் ஆகியோரிடம் நடனக் கலையையும் ஆந்திராவைச் சேர்ந்த செல்வி ராஜா, மற்றும் கல்யாண கிருஷ்ண பாகவதர் ஆகியோரிடம் வீணை இசைக் கலையையும் கற்றுத் தேர்ந்தார்.
அவரோடு சேர்த்து மொத்தம் ஐந்து பெண்பிள்ளைகளும் யோகர் சுவாமிகளின் அருட்கடாட்சம் பெற்றவர்கள் என்று மறைந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவி சுந்தா சுந்தரலிங்கம் சொல்லுவார்.
அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் புதல்வர்கள் சாரங்கன் மற்றும் சியாமளங்கனும் ஈழத்து மெல்லிசைப் பாடல் இயக்கத்திலும், இசைத்துறையிலும் முக்கிய பங்காளிகளாக விளங்கி வருகிறார்கள் என்பது உலகறிந்த ஒன்று.
அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் எழுபதுகளிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இயங்கி உள்ளார்.
1975 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான நிகழ்ச்சித் தயாரிப்புக்காக ஜப்பானிய பரிசை வென்ற திருமதி ஶ்ரீரங்கநாதன் , 1989 ஆம் ஆண்டில் வானொலி தயாரிப்புக்கான வானொலிச் சாதனைப் பெண் விருதைப் பெற்றுக்கொண்டார். 1995ஆம் ஆண்டில் வானொலியின் சிறந்த இசையாளர் என்ற ஜனாதிபதி விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரது கலைச் சேவையைக் கெளரவிக்கு முகமாக கலாசூரி விருதை வழங்கியுள்ளது இலங்கை அரசு. 1998ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று ஜனாதிபதியின் சாதனை பெண் விருது இவருக்குக் கிடைத்தது. 1989ல் இவருக்குக் கிடைத்த மற்றுமொரு சிறந்த விருது "உண்டா” ஆகும்.
திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் இசைப் பணி இலங்கையோடு நின்று விடவில்லை. அவருடைய இசைப் பணியை பல சர்வதேச அமைப்புக்கள் பாராட்டிக் கெளரவித்துள்ளன.
1996 ஆம் ஆண்டில் இலண்டன் கேம்பிரிஜில் உள்ள சர்வதேச சாதனையாளர் சங்கம் இவர் ஒலிபரப்பு துறைக்கும் இசைத்துறைக்கும் ஆற்றி பணியைக் கெளரவிக்கும் வகையில் Degree of Merit பட்டத்தை வழங்கியது.
1977ஆம் ஆண்டு இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொடர்பியல் மாநாட்டில் இலங்கை ஒலிபரப்பின் வரலாறு" என்ற தலைப்பில் இவர் உரையாற்றினார்.
இந்த உரைக்கு Award of Excellence விருது வழங்கப்பட்டது.
தேசிய-சர்வதேச மட்டத்தில் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர் இலங்கையின் கலாசாரத் தூதுவராகப் பல நாடுகளுக்கு விஜயம் செய்திருப்பதுடன் மகாநாடுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.
இவரது சேவைகளைப் பாராட்டி ஜப்பானிய சர்வதேசப் பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.
கலாசூரி திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் 1999 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
உசாத்துணைக் குறிப்புகள் நன்றி : வானொலி மஞ்சரி ஏப்ரல் 1999 & நூலகம் தளம்
நம்மிடையே வாழ்ந்து ஈழத்தின் கலை அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த அருந்ததி ஶ்ரீரங்கநாதன் அவர்களது ஆன்மா இறையடி சேர்ந்து இளைப்பாற எம் பிரார்த்தனைகள்.
கானா பிரபா
17.02.2025