அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக மூத்த சட்டவாளர், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் திரு.கந்தையா நீலகண்டன் அவர்களைக் கலையகத்தில் சந்தித்து
உரையாடிய போது அவர் பகிர்ந்து கொள்டவைகளின் எழுத்துப் பகிர்வை நேற்று எம்மை விட்டு நீங்கிய அன்னாரின் நினைவில் இங்கு தருகிறேன்.
மலேசியாவில் பிறந்த திரு கந்தையா நீலகண்டனுடன் தன் சகோதர்களையும் சிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கில் அவரது தந்தையார் தன் வேலையில் இருந்து விலகிக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயருகிறார்கள்.
ஆரம்பத்தில் கரணவாய் தெற்கு மகாவித்தியாலயம் பின்னர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் ஆகிய பாடசாலைகளிலும் பயின்ற இவர் தன் உயர் கல்வியை
யாழ் இந்துக் கல்லூரியில் படித்து முடித்தார்.
தன்னுடைய 23 வது வயதிலே சட்டத்தரணியாகத் தேர்ச்சி பெற்று நீலகண்டன் & நீலகண்டன் சட்டத்தரணி நிறுவனத்தைக் கொண்டு நடத்தினார்.
அகில இலங்கை இந்து மாமன்றம் சைவ சமயத்தின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு பெரியோர்களால்
1955 தோற்றம் பெற்றது. இந்த அமைப்புக்கெனத் தலைநகர் கொழும்பில் காணி ஒன்றும் அரசாங்கத்தால்
1958 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தாலும்
1990 வரை கட்டடம் ஏதுமில்லாதிருந்தது. அன்றைய
தலைவர் மறைந்த திரு.பாலசுப்ரமணியம், செயலாளர் திரு கந்தையா நீலகண்டன் மற்றும் திரு கைலாசபிள்ளை, திரு.பவதிராஜா ஆகியோரின் பெரு முயற்சியில் கட்டடம் ஒன்று நிறுவி முடிக்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்து மாமன்றக் கட்டடம் அப்போது சொல்லெணாத் துயரோடு கதி கலங்கி நின்ற தமிழ் மக்களின் வேதனைத் துயர் துடைக்க, கட்டிட வருமானம் முழுவதையும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்துவதென முடிவு செய்தார்கள்.
இரத்மலானை இந்துக்கல்லூரியில் வன்னியிலிருந்து வந்த 150 பிள்ளைகளுக்கு விடுதி வசதி ஏற்படுத்த இது ஏதுவாக இருந்தது. கலாநிதி வேலாயுதபிள்ளை இந்த முயற்சிக்குப் பெரிதும் துணை நின்று செயற்பட்டவர்.
இந்து மாமன்றத்தின் சின்னம் எதைக் குறிக்கிறதோ அந்தச் சின்னத்தின் தோற்றப்பாடான இறைவனின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதே இந்து மாமன்றத்தின் நோக்காகக் கொண்டிருக்க வேண்டுமென்று செயற்பட்டார்கள்.
தொண்ணூறுகளில் தமிழ் அரசியல் தலைமை துணிவுடன் செயற்படாத காலத்திலும் இந்து மக்களின் குரலாக இந்து மாமன்றமே இயங்கிக் குரல் கொடுத்திருக்கிறது.
சுனாமி, வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் வந்த போதும் அந்தப் பணி நீண்டது.
2005 ஜனவரி 1 அன்று சன்னிதி மடத்தில் சுனாமியில் காவு கொண்ட உறவுகளுக்குக் கூட்டுப் பிரார்த்தனை செய்த போது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட
இராமகிருஷ்ண மடத் தலைவர் சொன்னார்
“உங்களை ஆண்டவன் உயிரோடு விட்டு வைத்திருப்பதற்குக் காரணமே ஏதிலிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே” என்று.
அந்த வகையில் மனித நேயம் நிதியம் வழியாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் எம் உறவுகள் வழியாகப் பல்வேறு அறப்பணிகள் செய்ய முடிகிறது.
திருக்கோபுரம் எழுப்புவது மட்டுமல்ல உண்மையான சைவ நெறிச் செயற்பாடு அதைத் தாண்டிய மனித நேய முயற்சிகளில் கை கொடுக்க வேண்டும். இந்து மாமன்றம்
இந்து ஒளி காலாண்டு இதழை 18 வருடம் கடந்து வெளியிடுகிறது. வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் எழுதிய “இந்து சமய சிந்தனைகள்” தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.
2005 ஆண்டு இந்து மாமன்றத்தின் பொன்விழா மகாநாட்டில் 48 அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.
மலையகம், மட்டக்களப்பு என்று இந்து மாமன்றத்தின் பணி விரிந்தது.
2014 இல் மட்டக்களப்பில் நாவலர் விழாவும் யாழில் விபுலானந்தர் விழாவும் நடத்தியிருந்தார்கள். இதற்கு திரு.யோகீஸ்வரன் எம்.பி இன் வழி நடத்துதலே முக்கியமாக அமைந்தது.
இன்றைய காலகட்டத்தில் இந்து மாமன்றம் இளைஞர்களுக்காக சிவதொண்டர் அணியை உருவாக்கி மன்றங்களிலும், கல்லூரிகளிலும் அவர்காலை இயங்க வைத்தது.
சைவ வித்தகர் என்ற பயிற்சி நெறியை
இலவசமாக நல்லூரில் வழங்கி வருகிறார்கள். எம்மிடையே ஆறுமுக நாவலர், தங்கம்மா அப்பச்க்குட்டி வழியில் ஆறு திருமுகன் போல
பல ஆறுதிருமுருகன் ஐயா போல் பலர் தேவை என்ற ஆதங்கத்தையும் பகிர்ந்தார்.
கீரிமலை கேணிக்கருக்கில் 16 அறைகள் கொண்ட மடத்தை ஆறு.திருமுருகன் அவர்கள் அமைத்ததை நினைவு கூர்ந்து மெச்சினார்.
இடம்பெயர்ந்து வாழும் எம் மக்கள் 38 நலன்புரி நிலையங்கள் குறிப்பாக மாதகலில் இருக்கிறார்கள். இவர்களுக்கான உணவு வசதியை ஏற்படுத்தியதோடு
World Food Programme இற்கு விண்ணபித்து உதவி கோரியிருக்கிறார்கள். திரு விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கு முதல்வராக வருவதற்கு எங்கள் மன்றத்தின் பங்களிப்பு இருந்தது என்று குறிப்பிட்டார்
இன்று எமக்கான பலமான அரசியல் சக்தி இல்லை. எல்லாத் தமிழர் ஒருமையோடு இயங்கவேண்டும்.
எங்கள் மக்களை கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தைக் குறிப்பிட்டார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வன்னி மாணவர்கள் உடு துணியில் இருந்து கஷ்டப்பட்ட போது பல்கலைக்கழகம் 2000 ரூபாவே வழங்க முடியும் என்ற போது திரு ஆறு திருமுருகன் செயற்பாட்டில் லண்டன் ஶ்ரீ கனகதுர்க்கை ஆலயத்தின் மனித நேயப் பணியாக
270 மாணவருக்கு ஒவ்வொருக்கும் 10000 ரூபா கிடைக்க வழி செய்யப்பட்டது. 60 மடிக்கணனிகள் லண்டனில் இருந்து அன்பர் ஒருவரால் அன்பளிக்கப்பட்டது.
போரின் பின் இளம் மாணவர்கள் இராணுவத்தால்
கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட போது அந்த 275 மாணவர்களையும் கொழும்பு அழைத்து வந்து “இதை முகாம் என்று சொல்லாதீர் விடுதி என்று சொல்லுங்கள்” என்று சொல்லி அவர்களுக்குக் கல்வி வசதி ஏற்படுத்தினார்கள்.
மண் சரிவால் மலையகம் எதிர்கொண்ட இழப்புகளில் இருந்து காக்க உதவியிருக்கிறார்கள்.
அகில இலங்கை இந்துமாமன்ற வைர விழா 2015 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
http://www.hinducongress.lk/tamil/ இல் இம்மன்றத்தின் செயற்பாடுகள் உள்ளன.
இந்து மக்களுக்கு கையேடு கிரியைகளுக்கான விளக்கம் மற்றும் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் வெளியிட்டார்களாம்.
இந்து கலாசாரத்துறை அமைச்சு என்று தனியான அமைச்சு இப்போது இல்லை பெளத்த மதம் போல ஏனய சமயங்களான எங்களுக்கு நிதியுதவி கிடைப்பதில்லை என்றார்.
திருக்கேதீஸ்வரம் மாமல்லபுரச் சிற்பிகளின் உதவியோடு 360 மில்லியன் செலவில் இந்திய அரசாங்கம் உதவியோடு 100 கொள் கலங்கள் தருவித்துத் திருப்பணி நடக்கிறது.
இலங்கையின் இந்துத் தலங்கள் வரைபடம் குறித்த வரைபடம் உருவாக்கப்படும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
புலம்பெயர் தமிழர் எம் தாயக உறவுகளின்
கல்வி வளர்ச்சியால் உதவ வேண்டும்,
வட மாகாணத்தில் தொழில் நுட்பக் கல்லூரி வர வேண்டும், வெளி நாட்டு வர்த்தக பொருளாதார முயற்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தையும் சொல்லி வைத்தார்.
பேட்டியைக் கேட்க
http://radio.kanapraba.com/interview/Neelakandan.mp3
கானா பிரபா
19.02.18