மகா வம்சத்தின் தொடர்ச்சியாக அமையும் சூள வம்சத்தின் ஆரம்பம் மகாசேனன் என்ற மன்னனிடமிருந்து தொடரும் அவனது ஶ்ரீ மேக வண்ணனில் ஆரம்பித்து கண்டி இராச்சியத்தை ஆண்ட ஶ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியை ஆங்கிலேயர் கைப்பற்றும் வரையான காலப்பகுதியை உள்ளடக்குகிறது இந்த நூல்.
இலங்கையின் தொன்மையும் நீண்ட ஆளுகைக்குட்பட்ட இராசதானியாக விளங்கிய அனுரதபுரத்திலிருந்து பல்வேறு நில ஆளுகைகள் சமய, சமூக, பொருளாதாரச் சூழல், பெளத்தத்தின் உட்பிரிவுகளாக விளங்கிய தேரவாத பெளத்தம் மற்றும் மகாயான பெளத்தம் இவற்றை மையப்படுத்திய ஆட்சியும் அதன் பெறு பேறாய் அமைந்த பெளத்த பிக்குகளுக்கிடையேயான உட்பகைகள் ஆட்சி மாற்றம் வரை செல்வாக்குச் செலுத்தியதை உணர முடிகின்றது.
அக்கால கட்டங்களில் அரசாண்ட மன்னர்கள் எழுப்பிய விகாரைகள், பெளத்த சின்னங்கள் இந்த நூலில் இருந்த போதிலும் அடிக்குறிப்புகளில் அவற்றை அமைத்த மன்னர் பெயர் இல்லாததும், வெவ்வேறு பக்கங்களில் கலந்திருப்பதும் இந்த நூல் வாசிப்போட்டத்தோடு துணை புரியவில்லை.
இதிகாசங்களில் படித்தவாறு போலவே சூளவம்சம் எடுத்துப் பகிரும் மன்னராட்சிகளின் பின்னணியில் சூதும் வாதும் கலந்தே பயணப்பட்டிருக்கிறது. வாரிசுகளுக்கிடையில் சண்டை, வெவ்வேறு இராச்சியங்களுக்கு இடையிலான பகை, இந்த எல்லா இராச்சியங்களையும் கட்டியாள வேண்டும் என்ற மிதப்பில் மண்ணாசை கொண்டு போரிட்டோர் என்ற பொது அடிப்படையிலேயே இலங்கையின் மன்னராட்சி முறைமை காலத்துக்குக் காலம் இயங்கி வந்திருக்கிறது.
சூள வம்சம் கூறும் மன்னராட்சிகளுக்கு முந்திய காலம் குறித்து மகா வம்சம் சொல்லியிருப்பதைப் படிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணியாக எல்லாளன் உள்ளிட்ட தமிழ் மன்னர்களை இந்தப் பெளத்த சமூகம் எப்படிப் பார்த்திருக்கிறது, பொலநறுவையில் நிலவிய இந்து மரபு குறித்த அவர்களின் நோக்கு எப்படி அமைந்திருக்கிறது. என்ற ஆர்வமே மேலெழுகிறது. அத்தோடு இந்த சூள வம்சம் சமகாலத்தில் யாழ்ப்பான இராசதானியில் நிலைபெற்றிருந்த தமிழ் மன்னர்கள் குறித்த வரலாற்றுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.
சூள வம்சத்தை மூல நூலாகப் படிக்கும் சாதாரணன் இந்து மதம் மீதும், தமிழர் மீதும் சினம் கொள்ளத் தக்க வகையில் எழுதப்பட்ட குறிப்புகளே விஞ்சியது எனும் அளவுக்குக் கொடுங்கோலராகச் சித்தரிக்கபடுகிறார்கள்.
சேனாதிபதி சேனனின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவன் அநுராதபுரத்தில் தமிழர்களிடம் ஆட்சியைக் கையளித்த பின்னர் நிகழ்ந்தவைகளில் இவ்வாறான விபரணை வருகிறது
//தமிழர்கள், இராச்சதர்கள் போல நாட்டினை நாசமாக்கினர். நாட்டு மக்களிடமிருந்து தமக்குத் தேவையானவற்றைப் பறித்துக் கொண்டனர் //
ஐந்தாம் மகிந்தனின் ஆட்சியில் அவனது படையிலுள்ள வீரர்களின் நடத்தை குறித்து இப்படியொரு குறிப்பு
// அவனது படையிலுள்ள கேரள வீரர்கள் (தமிழர்) தம் கரங்களில் வேல்களையும், வாள்களையும் ஏந்தி, அரண்மனை வாயிலில் பலாத்காரமாக அமர்ந்து "வேதனத்தைத் தருவதற்கு முன் அரசன் உணவருந்தக் கூடாது" எனக் குரலெழுப்பினர்.//
கலிங்க தேசத்து மன்னன் மாகனின் முற்றுகை எடுத்த போது
// நாங்கள் கேரளத்தின் பூதங்கள் என்றவாறு இலங்கை வாழ் மக்களின்
உடைகள், ஆபரணங்களைக் கொள்ளையிட்டனர். சிங்கள மக்களுக்குச் சொந்தமான மாடுகளையும், எருமைகளையும் அபகரித்துக் கொண்டனர்.//
//தன் தந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக சீதாவாக்கை இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்கன் பிக்குகளின் தலைவரிடம் பரிகாரம் வேண்டவே அவர் சொன்னதில் திருப்தி இல்லாது சிவனை வழிபடுகிறவர்களின் ஆலோசனையில் அவன் உடல் முழுதும் சாம்பலைப் பூசிச் சைவனாகினான். பிக்குகள் சிலரை எரியூட்டிக் கொலை செய்தான். பெளத்தத்தின் புனித நூல்களை எரித்ததோடு சேத்தியங்களை இடித்துத் தள்ளினான். பிக்குகள் தம் அங்கிகளைக் களைந்து தலை மறைவாகி, ஊரை விட்டு ஓடினர்.//
பூர்வீகத் தமிழரைப் பற்றிய அசட்டைத் தன்மையோடே அவர்கள் குறித்த முழுமையான தேடலும் பதிவும் இல்லாது அமைந்த வரலாற்று நூல் இது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராச தந்திர உறவுகள் எவ்வாறு இரு நாட்டு ஆட்சி அதிகாரங்களுக்குத் துணை போனது என்பதும் வரலாற்றின் வழி வெளிப்படுகிறது. பாண்டிய மன்னன் ஶ்ரீமாற வல்லபனுடன் முரண்பட்ட அவன் மகன் வரகுணன் என்ற இளவரசன் தந்தைக்கு எதிராகக் கலகம் செய்து இலங்கைக்கு வர, அவனுக்கு வேண்டிய படையுதவிகளை அனுப்பி ஶ்ரீமாற வல்லபனைக் கொல்லுமாறு இரண்டாம் சேனன் பணித்தான். இதற்கு முன் சேனனின் மாமன் முதலாம் சேனன் ஆட்சியில் பாண்டிய மன்னன் அனுரதபுரத்துக்குப் படையெடுத்து புத்தர் சிலை மற்றும் சொத்துகளைச் சூறையாடினான் என்ற பழைய பகையும் இரண்டாம் சேனனி. வன்மத்துக்குக் காரணமாக அமைந்தது. அவ்வாறே பாண்டிய மன்னன் கொல்லப்பட்டு, இலங்கையிலிருந்து கவரப்பட்ட திரவியங்கள், மதுரையில் கொள்ளையிடப்பட்ட பொருட்களோடு அவன் சேனாதிபதி நாடு திரும்பினான்.
மதுரை வரை தன் படையோடு சென்று போரிட்டு வென்ற வரலாற்றை அறிகையில் ஆச்சரியமே எழுகிறது.
அதே போல இலங்கையின் வடபகுதியான உத்தரதேசத்தின் நாகதீபத்தைக் கைப்பற்றிய சோழ மன்னன் வல்லபனை மகிந்தன் தன் சேனாதிபதியை அனுப்பி வெற்றிவாகை சூட வைத்து இரு அரசர்களுக்கும் நட்பு உடன்படிக்கை எழுந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
சோழ மன்னன் இராஜராஜனின் படையெடுப்பும் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது.விலை மதிப்பற்ற சொத்துகளை இராஜராஜன் படைகள் சூறையாடியதாகவும், சமாதான உடன்படிக்கை என்று சொல்லி ஏமாற்றிச் சிறை வைத்ததாகவும், தந்த தாதுக் கோயிலை அழித்ததோடு விகாரைகளில் உள்ள தங்கச் சிலைகள், ஆபரணங்களைச் சூறையாடினர் என்று தொடரும் வரலாற்றில் இந்த நிகழ்வை "குருதி குடிக்கும் பூதங்கள் போல" என்ற சொலவாடை வழியாக விபரிக்கப்படுகிறது.இவ்வாறு இராஜராஜனின் பொல நறுவை ராஜ்ஜியம் ஒரு சில பத்தியோடு கடக்கிறது.)
"என்னைக் காலவாவிக்கு அழைத்துச் செல் அங்கு என் புதையலைக் காட்டுகிறேன்" என்று தன் மகன் காசியப்பனுக்குச் சொல்லிய தாதுசேனன் "அந்த வாவியில் குளித்து விட்டு நீரைக் கையில் ஏந்தி "இது தான் நான் தேடிய புதையல்" என்று சொல்லி மரணத்தைச் சந்திக்கும் வரலாற்றுப் பதிவு ஏற்கனவே சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் படித்தது. இம்முறை படிக்கும் போது இந்த மன்னர்கள் குளம் கட்டுவதையும், வாவிகளையும் அமைப்பதையும் எவ்வளவு தூரம் தம் ஆட்சியின் முக்கிய தேவையாக உணர்ந்தார்கள் என்பதை நிரூபிப்பதாக உணர முடிகிறது. அதே நேரம் ஆட்சியதிகாரத்துக்கு வரும் எந்த மன்னனும் பெளத்த சாசனத்தைப் பின் பற்றி அதன் வழி புதிய புதிய விகாரைகளை எழுப்பவும், புனருத்தாரணம் செய்வும், பெளத்த பிக்குகளுக்கான வசதி வாய்ப்புகளைச் செய்து கொண்டுக்கவும் அமையும் அரசே நல்லாட்சி என்று இந்த நூல் பூடகமாகச் சொல்கிறது. இதனை இன்றைய ஆட்சியாளர்களுடனும், நடைமுறைகளுடனும் கூட ஒப்பிட முடிகிறதில்லையா?
சூளவம்சத்தின் பாட்டுடைத் தலைவன் பராக்கிரமபாகுவின் வரலாற்றுப் பக்கங்களில் "ஒரு குடையின் கீழ்" இலங்கை முழுவதையும் கொண்டு வருவதற்காக அவனின் படிப்படியான வளர்ச்சியும்,கைக்கொண்ட ராஜதந்திர முறைமைகளும் சற்றே விரிவாகப் பகிரப்படுகின்றன.
"வதிவிடத்தினைச் சுற்றியுள்ள நிலம் கூட மனிதனுக்குப் பயன் தராது வீணே கிடக்கக்கூடாது" என்ற அவன் இலக்கு நோக்கி அவன் பயணித்திருக்கிறான். அவன் கட்டியெழுப்பிய வெளி நாட்டுத் தொடர்புகளும் விபரிக்கப்படுகின்றன.
தன்னிடம் அடைக்கலம் புகுந்த பாண்டிய மன்னன் பராக்கிரமனுக்காக, இலங்காபுரத் தண்ட நாயக்கனை அனுப்பி ஆட்சியைப் பிடித்த இன்னோர் பாண்டிய இளவரசன் குலசேகரன் படைகளோடு சண்டையிட்டு மீண்ட கதையும் விபரிக்கப்படுகிறது.