
கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் போன போது சகவலைப்பதிவர் கறுப்பியைத் தான் சந்திக்க முடிந்தது. அந்த நேரம் சுபாங்கனும் யாழில் இருந்தார் என்பதை நான் கொழும்பு வந்து சிட்னிக்கு விமானம் ஏறியபின் தான் தெரிந்தது. இப்போதெல்லாம் காலையில் இருந்து மாலை வரை நான் செய்யும் காரியங்கள் ட்விட்டரில் பதிவாகிவிடுவதால் சகோதரன் சுபாங்கன் நான் யாழ் வந்ததும் சந்திப்போமா என்றார். அந்த நேரம் நிருஜாவும் வேலை விடயமாக யாழ் வந்ததால் இருவரையும் ஒரே நாளில் சந்திக்க முடிவானது. கொக்குவில் இந்து தேர் முட்டியில் அமர்ந்தவாறே ஊர்க்கதைகளையும், பதிவுலகம் பற்றியும் ஆசை தீர ஒரு மணி நேரம் பேசினோம்.

(நிரூஜா, நான், சுபாங்கன்)
சுபாங்கன் இன்னும் பல்கலைக்கழகப் படிப்பில் இருக்கும் மாணவன்,தரங்கம் (http://subankan.blogspot.com/) என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். கடந்த நல்லூர்த் திருவிழாக்காலத்தில் இவர் எடுத்த கலை நயம் மிக்க புகைப்படங்களுக்கு நான் அடிமை. அமைதியாகவும், பண்பாகவும் பேசும் நல்ல பிள்ளை இவர். ட்விட்டரில் @subankan என்ற ஐடியில் அவ்வப்போது உள்ளேன் ஐயா என்பார்.
நிரூஜா என்றதும் ஏதோ சிம்ரன் ரேஞ்சுக்கு ஒரு குமர்ப்பெட்டையை நினைத்துக் கற்பனை வளர்த்துக் கொண்டால் கறுப்பி என்ற பெயரில் டெரர் பாண்டியாக இருக்கும் நண்பர் போல உங்கள் ஆசை எல்லாம் மண்ணாப் போக. நிரூஜா என்ற புனைப்பெயருக்குள் அவர் ஒரு வசீகரமான ஆண் செவ்வானச் சிதறல்கள்…( http://www.suwadi.org/) என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர் என்பதோடு @nirujah என்ற ட்விட்டர் ஐடியில் வந்தும் கலக்குபவர். தகவல் தொழில் நுட்பத்தில் லண்டனில் மேற்படிப்புப் படித்தாலும் நாடு திரும்பி (வந்தி கவனிக்க) சேவை ஆற்றுபவர்.இவரிடம் இலங்கையின் தகவல் தொழில் நுட்பத்துறையின் இன்றைய நிலை குறித்து நிறைய அறிந்து கொண்டேன்.
பின்னர் தேனீர் அருந்துவோமா என்று பக்கத்தில் இருக்கும் தேனீர்க் கடையைக் குறி வைத்துக் கேட்டால் நிரூஜா கூல்பார் போகலாமே என்று கேட்டார். சரி அவரின் ஆசையை விட்டுவைப்பானேன் என்று பரணி கூல்பார் சென்று றோல்ஸ், பிளேன் ரீ, குளிர்பானம் உண்டு எம் சந்திப்பை இனிதே நிறைவு செய்தோம். லுமாலாவில் வெளிக்கிட்டு தாவடி வரை வந்த பின்னர் தான் என் மொபைல் போனைத் தவறவிட்டது தெரிந்து மீண்டும் பரணி கூல்பாருக்குச் சென்றதும் கோயில் தேர் முட்டிப் படிக்கட்டில் அது பத்திரமாக இருந்ததும் நிரூஜாவும், சுபாங்கனும் அறியாதவை.
தென் கொரியாவிற்குப் பணி நிமித்தம் சென்று வலையுலகில் சும்மா கொஞ்ச நேரம் http://koculan.blogspot.com/ என்ற வலைப்பதிவை ஆரம்பித்து பங்காளியாகி என்னோடு நண்பரானவர் பின்னர் தாயகம் போன பின்னர் தன் வலைப்பதிவை நட்டாற்றில் விட்டதால் என்னிடம் வாங்கிக்கட்டியவர். நான் யாழ்ப்பாணம் வந்ததை அறியத்தந்ததும் தான் எழுத முடியாத சூழலை முதலில் சொல்லிவிட்டுத் தான் சந்திப்பைத் தொடர்ந்தார். இப்போது யாழ்ப்பாணத்தின் பிரதேச செயலகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருக்கும் இவரை ஒரு வேலை நாளில் சந்தித்துப் பேசினேன். இலங்கை நிர்வாக சேவை தொடர்பாக தற்போதைய நடைமுறை குறித்து இவரிடம் இருந்து நிறைய அறிந்து கொண்டேன். அதிக நேரம் எடுக்காது மீண்டும் சந்திப்போம் என்று அவசரமாக விடைபெற்றேன். கையில் கமரா இருந்தும் அவரோடு ஒரு படம் எடுக்க நினைப்பு வராததால் என்னையே நான் திட்டித்தீர்த்தேன் பின்னர்.
சமீபகாலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வலையுலகத்தைக் கலக்கும் சகோதரன் மதி சுதாவைச் (http://mathisutha.blogspot.com/) சந்திக்கும் வாய்ப்புத் தவறிவிட்டது, அடுத்தமுறை இவரைத் தான் முதலில் சந்திக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.

வலையுலகத்தை விட இப்போதெல்லாம் ட்விட்டர் வழியாக நிறைய நட்புக்களும், சொந்தங்களும் கிட்டுகின்றன. அப்படி வந்து வாய்த்தவர் தான் அருமைத்தம்பி சண்முகன். @shanmugan10 என்ற ட்விட்டர் ஐடி வழி இவரைச் சந்திக்கலாம். இவரும் இன்னும் மாணவப்பருவத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்கின்றார். சிட்னியில் இருந்து யாழ்ப்பாணம், கொழும்பு, நுவரெலியா, கண்டி என்று நான் போகும் இடமெல்லாம் இவரும் வெற்றி எஃப் எம் வாயிலாக எனக்கும் பாட்டுக் கேட்டுக் குஷிப்படுத்துவார். கொழும்பு வந்ததும் சந்திக்கலாமா என்றார். பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலின் முகப்புத் திண்ணையில் அமர்ந்து நாட்டு நடப்புக்களைப் பேசினோம். நான் லுமாலாவில் சைட் அடிக்கக் கிளம்பிய காலத்தில் பிறந்த பையன் இவர். இந்தச் சின்ன வயதில் தாயகம் மீது இவர் கொண்ட நேசம் கண்டு உள்ளுக்குள் பெருமிதம் அடைந்தேன். எமது சந்திப்பு முடிந்ததும் கனத்த மனதோடு தான் வீடு திரும்பினேன், இவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அப்போது.

ட்விட்டர், வலையுலகம் வழியாக இணையும் உறவுகளோடு ஃபேஸ்புக் வழியாகக் கிட்டியவர் நண்பர் சேரன் கிருஷ். எனது கம்போடிய உலாத்தல் பதிவுகள் தான் என்னை இவருக்கு அறிமுகப்படுத்தி நட்பாக்கியது. நான் கொழும்பில் இருக்கும் போது பயணப்பதிவுகளை ஆரம்பித்தது கண்டு நாட்டில் இருந்தால் சந்திக்கலாமா என்றார். சேரன் கிருஷ் ஐயும் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலுக்கு அழைத்தேன் ஒரு நாட் காலைப் பொழுதில். அன்று சங்கடஹர சதுர்த்தி. சேரன் கிருஷ் பேரைப் பார்த்தால் ஆர்ப்பாட்டமான ஆளாக இருப்பார் என்று மனக்கணக்குப் போட்டிருந்தேன். ஆனால் மிகவும் அமைதியானவர் http://cherankrish.blogspot.com என்ற வலைப்பதிவு வைத்திருந்தாலும் அதிகம் எழுதாமல் மற்றவர்களை நிறையப்படிப்பவர் என்று இவரோடு பேசும் போது உணர்ந்து கொண்டேன். நாங்கள் இருவரும் மட்டும் தான் சந்திக்கப்போகிறோம் என்று நினைத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் நண்பர் மருதமூரானும் வந்து இணைந்து கொண்டார். மருதமூரான் http://maruthamuraan.blogspot.com/ என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். இலங்கையின் அரசியல் விமர்சனங்களைத் தன் ஊடகவியலாளர் பார்வையோடு நேரில் பேசும் போதும்
சொல்பவர். புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டில் ஆரம்பித்து ஒரு சுற்று சுற்றிப் பேச்சுவார்த்தை நடத்தும் போது இடையில் ஒரு அம்மா வந்து சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து கொடுத்தார்.
"கொஞ்சமாப் போடுங்கோ அம்மா" இது மருதமூரான்
"கொஞ்சமாக் கேட்டால் கடவுள் கொஞ்சம் தான் தருவார்" இது அந்த அம்மா
சேரன் கிருஷ் ஐயும் மருதமூரானையும் சந்தித்த அந்த முதற் சந்திப்பும் அம்மா கொடுத்த சர்க்கரைப் பொங்கல் போல.
"அவன் இவன்" படத்தின் பிரீமியர் ஷோ கொன்கோட் தியேட்டரில் ஓடுதாம், வாழ்நாளில் முதற்தடவையாக பிரீமியர் ஷோவைப் பார்த்து ஜென்மசாபல்யம் அடைய எண்ணி கொன்கோட் இற்கு வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்குப் போனேன். பல்கனிக்குப் போகும் கியூவில் காத்திருந்தால் தியேட்டருக்கு உள்ளே இருந்து "அங்கை பார் கானா பிரபா" கேற்றுக்குள்ளால் குரல் வந்த திசையைப் பார்த்தால் அங்கிருந்து முன் அறிமுகம் இல்லாத ஒருவர். "நான் தான் அனுதினன்" என்று வந்த அவரோடு கூடவே நம்ம நிரூஜாவும். என் முகத்தைப் பார்த்து அடையாளம் கண்டு பேசிய அனுதினனோடு இன்னொரு சந்திப்புக் கிடைத்தால் நிறையப் பேச வேணும். ஆடுகளம் என்ற பெயரில் எழுதிவரும் அவரின் வலைப்பதிவு http://anuthinan0.blogspot.com/.
மூத்த ஊடகவியலாளர் சகோதரர் எழில்வேந்தன் அவர்களை ஒவ்வொரு பயணத்திலும் சந்திப்பது வழக்கம். இந்தமுறை அவர் தனது விடுமுறை நாளிலும் 2 மணி நேரத்துக்கு மேல் ஒதுக்கி என்னைத் தன் காரில் அழைத்துக் கொண்டு ஒரு தேனீர் விருந்தகம் சென்று இலக்கியம், நாட்டு நடப்பு எல்லாம் பேசி நிறைவான சந்திப்பை முடித்தோம். எழில் அண்ணா தனது தந்தையும் ஈழத்தின் மூத்த படைப்பாளியுமான கவிஞர் நீலாவணனின் படைப்பு ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

சிட்னியில் தொடங்கி கொழும்பு, நுவரேலியா எல்லாம் பயணிக்கும் போதும் வெற்றி எஃப் எம் காதுக்குள் கூடவே வந்தது. குறுகிய காலத்தில் இலங்கையின் முன்னணி வானொலிகளில் ஒன்றாக இந்த வானொலி உயர்ந்திருக்கின்றது. இதற்குப் பின்னால் வானொலியின் இயக்குனராக விளங்கும் வாமலோஷன் என்ற லோஷனின் கடின உழைப்பும் அவருக்கு வாய்த்த நல்லதொரு வானொலிக் குழுமமும் தான். லோஷன் வானொலித்துறையில் தசாப்தம் கடந்து வெற்றிகரமாக இயங்கிவருபவர், வலையுலகிலும் இவரின் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்கலாம் http://loshan-loshan.blogspot.com/
வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமன்றி "எம்மால் முடியும்" என்ற சமூகப்பணி மூலமும் இந்த வானொலி புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றது. வெற்றி எஃப் எம் இணைய முகவரி http://www.vettri.lk/
லோஷனின் வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி எஃப் எம் நிலையக் கலையகம் செல்கின்றேன். அந்தக் கலையகத்தில் சுறுசுறுப்பாய் தேனீக்கள் போல உழைத்துக் கொண்டு தகவல்களைத் திரட்டிக் கொண்டு நிகழ்ச்சிகளுக்கான தயார்படுத்தல்களைச் செய்துகொண்டிருக்கின்றது இளைஞர் பட்டாளம் ஒன்று. கூடவே வெற்றி தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்புப் பிரிவும் இயங்குகின்றது. நேரடி அஞ்சல் பகிரப்படும் நிகழ்ச்சிக் கலையகம் சென்றால் நண்பர் விமல் பகல் பந்தி செய்து கொண்டிருக்கின்றார். கூடவே ஒரு பயிற்சி அறிவிப்பாளினி இருக்கின்றார். அங்கே சில நிமிடத்துளிகளைச் செலவழித்தவாறே நேரடி நிகழ்ச்சி நடைபெறும் அனுபவத்தை ரசிக்கின்றேன். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு என்பதை முழு நேரப் பணியாகக் கொண்டு இயங்குவது என்பது ஒரு பெரும் வரம்.