ஏழு
வருடங்களுக்கு முன்னர் வலைப்பதிவு உலகத்துக்கு வந்தபோது டோண்டு ராகவன்
சார் மூலம்தான் இந்த இணையச்சூழலின் இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டேன் அது
மிக அதிர்ச்சிகரமானதும் படிப்பினையையும் என் வலைப்பதிவு உலகின்
ஆரம்பகாலத்தியே கொடுத்தது என்றவகையில் அவரை என்னால் மறக்கமுடியாது. என்னுடைய
ஆரம்பப்பதிவுகளில் ஒன்றில் தன் பின்னூட்டம் வழியாக அறிமுகமானார் கூடவே
"உங்கள் படத்தை பார்த்தால் ஹிந்தி நடிகரும் நடிகை நூதன் அவர்களின் மகன் மோனிஷ் பெஹல் அவர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்" என்று அவர் சொல்லவும் யார் இந்த நூதன்
என்று இரகசியமாக கூகிளானிடம் முறையிட்டுச் சரிபார்த்துக்கொண்டேன்.
பின்னர் டோண்டு சார் யாரென்று அறிய அவரின் வலைப்பதிவைப் படிக்கத்தொடங்கினேன். அந்தக்காலத்து டெல்லி, சென்னை வாழ்வியலை எல்லாம் அவரின் ஆரம்பகாலப் பதிவுகள் தொட்டுச் சென்றிருக்கும், ஆனால் அறுபதுகளில் நடந்த நிகழ்வுகளையும் சமீபத்தில் 1969 இல் என்று அவர் தனித்துவமாகக் கொடுப்பார் அதுதான் அவர் ஸ்டைல்.
ஒருமுறை
அவரின் பதிவுக்கு முதன்முதலில் பின்னூட்டம் இடுகிறேன் அப்போதுதான் நான்
முதல் பந்தியில் சொன்ன இணைய உலகின் மறுபக்கம் தெரிய வந்தது அனாமோதயப்
பின்னூட்டம் வழியாக. உலகத்தில் உள்ள அத்தனை வசவு மற்றும் ஆபாசச் சொற்களை
ஒன்று திரட்டி வந்த அந்தப் பின்னூட்டத்தில் டோண்டு ராகவனின் பதிவைத்
தவிர்க்கவும் என்ற எச்சரிக்கையும் சேர்க்கப்பட்டிருந்தது.
அதன்
பின்னர்தான் டோண்டு சாருக்கும் அப்போது இயங்கிய பதிவருக்குமான மோதலின்
பரிமாணம் இன்னும் மெல்ல பரவலாக வந்து, வசவு பின்னூட்டங்கள், போலி ப்ளாக்கர்
ஐடி, பதிவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த மூன்றாந்தர அல்லது கடை நிலை
எழுத்துக்கள் பரவலாக வந்தன. பேசாமல்
வலைப்பதிவு உலகையே விட்டு ஓடிவிடலாம் என்ற அளவுக்குப் பயங்கரமான
நிகழ்வுகள். அப்போதுதான் ப்ளாக்கர் ஐடியோடு எலிக்குட்டி சோதனை செய்து
கொள்ளுங்கள் என்றெல்லாம் டோண்டு சார் ஒவ்வொரு பதிவிலும் தேடித்தேடிப்
பின்னூட்டமிடுவார், இப்பிடிபின்னூட்டமிடுவது உண்மையான டோண்டு என்றறிய மூன்று சோதனைகள் உண்டு.
1. என் பெயர் மற்றும் அடைப்பு குறிகளுக்கிடையில் என் ப்ளாக்கர் எண்ணுடன் dondu(#4800161) என்று வரும். எலிக்குட்டியை அதன் மேல் வைத்து பார்த்தால் கீழே உங்கள் திரையில் உள்ள பட்டையில் அதே ப்ளாக்கர் எண் தெரிய வேண்டும்.
2. கூடவே உங்கள் ப்ளாக்கர் கணக்கில் போட்டோக்கள் எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவும் மேலே இருப்பது போல தெரியும்
3. நான் வேறு எந்த ப்ளாக்கூகளில் பின்னூட்டமிட்டாலும் அதன் நகல், (இப்பின்னூட்டம் உட்பட) என்னுடைய தனிப்பதிவில் வரும்.
அன்றிருந்த தமிழ்மண நிர்வாகம் பட்ட இன்னல் அளவில் அதன்பிறகு அவ்வளவு மோசமான சூழலை இதுவரை அவர்கள் சந்தித்திருக்கமாட்டார்கள்.
அப்போதுதான்
தனிப்பட்ட வாழ்க்கையின் எல்லையை எவ்வளவு தூரம் இணையத்தில் பகிரலாம் என்ற
சுயகட்டுப்பாடு எடுக்க இந்தப் பிரச்சனை என் வலையுலகவாழ்வின் ஆரம்பத்திலேயே
அமைந்தது ஒரு எச்சரிக்கைமணி எனலாம்.
தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்ப நாட்தொட்டு இன்றுவரை மாற்று ஊடகங்கள் வரும் போதெல்லாம் அங்கெல்லாம் தாவியவர்களை விட, விடாது பற்றிப்பிடித்து தொடர்ந்தார் தன் வலைப்பதிவுகளை.
டோண்டு சாரின் பதிவுகளில் ரசித்ததுக்கும் மேலாக விசனப்பட்டதும் வருந்தியதுமுண்டு, ஆனால் அதே அளவுக்கு அவரின் உடல் நிலை நோயால் மோசமடைந்தது என்றறிந்தபோது உள்ளுர வேதனைப்பட்டும் இருந்த மன உணர்வே இவரின் மேல் ஏனோ தீராக்கோபம் கொள்ளமுடியவில்லை என்பதை எனக்கு உணர்த்திய சந்தர்ப்பங்களில் ஒன்று. போலியான நட்பை விட நியாயமான எதிர்க்கருத்தைத் தாங்கும் பக்குவ நிலையில் ஒன்று அது.
தான் கொண்ட ஜாதிப்பற்று, மதப்பற்று, ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு நேரெதிரான போக்கு ஆகிய உணர்வுபூர்வமான விடையங்களில் தன்னுடைய கருத்திலிருந்து இம்மியளவும் பிசகாதவர், யாருக்கும் சமரசம் செய்துகொள்ளமாட்டார், மாற்றுச்சாரார் என்னதான் நியாயமான கருத்துக்களைக் கொடுத்தாலும் கூட. இந்த விடயத்தில் தன்னுடைய பதிவுகள் மட்டுமன்றி தேடித்தேடித் தீப்பந்தங்களைத் தன் மடியில் கட்டுவார். வலைப்பதிவுகளைக் கடந்து ட்விட்டர், கூகுள் ப்ளசிலும் இது நீண்டது.
என்னதான் எதிராளியை விசனமூட்டும் வகையில் எழுதினாலும், அடுத்த சிலபதிவுகளில் முரண்பட்ட குறித்த நபரோடு எதுவுமே நடக்காதது போல குசலம் விசாரிக்கும் பாங்கிலோ அல்லது தான் ஒத்துப்போகும் கருத்துக்கு வலுச்சேர்க்கவும் தன் கருத்தைக் கொடுக்கும் போது என்ன மனுஷர்யா இவர் என்று ஆச்சரியப்படவைப்பார். ஏனெனில் தம்மோடு முரண்டுபிடிக்கும் கருத்தாளர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து ஓட ஓட விரட்டுவதில் பதிவுலகம் சளைத்ததல்ல.
இந்தப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போதும், பின்னூட்டம் வழியாக தன்னிலை விளக்கம் கொடுக்க வந்துவிடுவாரே என்னுமளவுக்கு அவரை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
டோண்டுவாகிய அவர் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது
என்பது பற்றி அவரே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம்
கூற ஆசைப்பட்டார் புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசைப்பட்டார்.
அவர் ஆன்மா சாந்தியடைவதாக.
அவர் ஆன்மா சாந்தியடைவதாக.