Monday, June 25, 2012
"அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும்
தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வாக்கில் ஊரில் இருந்த சமயம், சகதோழன் ஒருவன் தனது மாமாவின் உதவியோடு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தான். அந்த நேரம் "ஏன்ரா உனக்குப் போக வேற இடம் கிடைக்கேல்லையே, வாத்தியார் சொன்னது மாதிரி பின்னடிக்கு மாடு மேய்க்கப் போறாயோ" என்று கூட்டமாகக் கேலி செய்ததும், "வந்தாண்டா பால்காரன்" என்று அன்றைய அண்ணாமலை காலத்தில் அவன் எங்களுக்குப் பலிகடா ஆனான். அப்போதெல்லாம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்றால் பால்மாடுகளும், பண்ணையும் தான் என்ற நினைப்பு, எல்லாம் அங்கர் பால்மா விளம்பரம் செய்த சதி. ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் அவனை மேற்குலக நாடு ஒன்றுக்கும், கேலி செய்த நண்பர்களுள் தலையாய என்னை அடுத்த ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு விஸா அனுப்ப வைத்துவிட்டது.
அதன் பின் நடந்த ஆரம்ப நாட்களின் களோபரங்கள், விஷ்ணுபுரம், காவல் கோட்டம் அளவுக்குப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ள வேண்டியவை என்றாலும் இன்றுவரை எனக்கு முள்ளாய் ஒரு விஷயம் குத்திக் கொண்டே இருக்கிறது. மெல்பனுக்கு நான் வந்த பின்னர் பழக்கமான ஒரு சகபாடி, இவன் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன், வந்து ஆறுமாதம் தான் ஆகியிருக்கும், நம் ஊர்ப்பழக்க வழக்கங்களை நையாண்டி பேசிக் கொண்டும், தான் இனி ஒஸி என்றும் பட்டம் குத்திக் கொண்டான். இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் அந்த நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றது, பல சமயங்களில் சிலரது செய்கைகள் அதைத்தானாக நினைப்பூட்டிக் கொண்டு.
கடந்த வியாழன் அன்று அவுஸ்திரேலிய அரசின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர இலாகாவின் (Australian Bureau of Statistics) 2011 ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டு விபரங்கள் வந்தபோதும் பழைய சகா கதவைத் திறவடி கதையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. எனக்கும் சரி, இந்தக் குடிசன விபரத்தை எதிர்பார்த்த சக நண்பர்களுக்கும் ஓரளவு ஏமாற்றம் தரக்கூடிய செய்தியாகத் தான் எண்ணத் தோன்றியது 2011 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் குடிசன மதிப்பீட்டில் தமிழர் எண்ணிக்கை தொடர்பான தகவல். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டுத் தரவுகளின் படி அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 151 பேர் என்பதாக இருக்கின்றது. இதைவிட சில ஆயிரமாவது மேலதிகமாக இருக்கலாம் என்பதே நமது ஐயமாக இருக்கின்றது. தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்த விரும்பாதோர், இங்கே பிறந்து வளரும் பிள்ளைகள், சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தோரில் தமிழை மூத்த தலைமுறை மொழியாக மட்டும் கொண்டு, ஆங்கிலத்தைத் தம் தாய் மொழியாகத் தழுவிக் கொண்டோரும் என்று இந்த இருபதாயிரத்துக்குள் வருமோ என்று நினைப்பதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் புள்ளிவிபர இலாகாவின் அறிக்கையின் பிரகாரம் கிடைத்த தகவல்களை வைத்து அலசி ஆராயலாம் என நினைக்கிறேன். 2011 ஆம் ஆண்டின் ணக்கெடுப்பின் விபரங்கள் கடந்த வாரம் வெளியாகின்றன என்ற செய்தியறிந்து புள்ளிவிபர இலாகாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரமான தகவல் கையேடு ஏதும் அச்சில் கிட்டுமா என்று கேட்டேன். இணையத்தைப் பார்க்கச் சொன்னார்கள். எனது அலுவலகத்தில் இருந்து ஒரு எட்டு நடந்தால் பிராந்திய புள்ளிவிபர இலாகா அலுவலகம் உண்டு எனவே அதன் படியேறினேன். எந்த விபரம் தேவை என்றால் நாங்கள் பிரதியெடுத்துத் தருவோம் ஆனால் நாளாகும், காசும் ஆகும் என்றார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்தக் கணக்கெடுப்பில் ஏன் இணையத்தை மட்டும் நம்ப வைக்கிறார்களோ, மக்கள் வரிப்பணத்தில் கொஞ்சூண்டாவது இப்படியான பயன்தரு வேலைகளின் அச்சிடும் பணிக்கு ஒதுக்கலாமே அரசே?
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 50 ஆயிரத்து 151 பேர். இதன் முக்கிய பங்காளிகளைக் கீழ்வரும் அட்டவணை விளக்குகின்றது.
இதில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னும், 95 ஆம் ஆண்டுக்குப் பின்னர் துரித வேகமாகவும் அகதிகளாகக் குறிப்பிடத்தமிழர்களை உள்வாங்கிக் கொண்டது இந்த நாடு, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தொழில், கல்வி சார் வழியாகக் குடியுரிமை பெற்றவர்கள். அடுத்த நிலையில் இருக்கும் இந்தியத் தமிழர் தொழில் மற்றும் கல்வி சார் வழியாகக் குடியுரிமை பெற்றவர்கள். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வாழ்ந்த அடுத்த தலைமுறைத் தமிழர்கள் தமது வாழ்க்கைத் தரத்தை நோக்காகக் கொண்டு இந்த நாட்டிற்கு இடம்பெயர்ந்தவர்கள். முதியோர் நலன், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் ஏனைய ஆசிய நாடுகளோடு ஒப்பிடும் போது பல சலுகைகளை (இலவசம் உட்பட) வழங்குவதே சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்குக் குடிபெயர்ந்தார்கள் என்று சொல்லலாம்.
அவுஸ்திரேலியாவை மாநிலங்களாக வகைப்படுத்தி முறையே நியூசவுத்வேல்ஸ் (தலைநகர் சிட்னி), விக்டோரியா ( தலைநகர் மெல்பர்ன்), குயின்ஸ்லாந்து (தலைநகர் பிரிஸ்பேன்), தெற்கு அவுஸ்திரேலியா (தலைநகர் அடலெய்ட்), மேற்கு அவுஸ்திரேலியா ( தலைநகர் பேர்த்), வட மாநிலம் (தலைநகர் டார்வின்), தஸ்மேனியா (தலைநகர் ஹோபார்ட்), ஆகியவை மாநில ஆட்சியின் கீழும் அவுஸ்திரேலிய தலைநகர் பிராந்தியம் (தலைநகர் கான்பெரா) இது அரசாங்கத்தின் நேரடி ஆளுகையிலும் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. பேராசிரியர் ஆ.கந்தையா அவர்களின் People speaking Tamil at home in Australia என்ற நூலில் 2006 ஆம் ஆண்டு வரை தமிழர் குடியேற்றம் தொடர்பில் கீழ்க்காணும் அட்டவணை காணப்பெறுகின்றது. அதைத் தமிழில் தருகின்றேன்.
2000 - 2010 ஆம் ஆண்டுக்கும் உட்பட்ட காலப்பகுதியில் 1303 பேரில் இருந்து 2900 பேர் வரையாக அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இதைவிடக் கண்டிப்பாக குடிபெயர்ந்த தமிழர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மதக் கோட்பாடுகளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து, அடுத்தவர் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் வழிபாட்டிடங்களை அமைக்கவும், பிரார்த்தனைகளில் ஈடுபடவும் வழி சமைத்திருக்கும் இந்த நாட்டில் தமிழரில் 36,940 பேர் இந்துக்கள், 4932 பேர் கத்தோலிக்கர், இஸ்லாமியர் 1893 பேர், அங்கிலிக்கன் திருச்சபை 1150 பேர், பெந்தகோஸ் 1055 பேர், எந்தவித மதமும் கைக்கொள்ளாதோர் 722 பேர் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.
கீழ்க்காணும் அட்டவணைகள் 2011 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி தமிழரின் தனிநபர் வருமான வகுப்புகளைக் காட்டுகின்றன (SBS - Census Explorer 2012)
தாம் விரும்பிய கல்வியைத் தேர்ந்தெடுத்துக் கற்கவும், எந்தவிதமான பாரபட்சமான கல்விக்கொள்கையும் கொண்டிராத இந்த நாட்டில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் மேல்வகுப்புப் படித்தோர் பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே கற்றுத் தேர்ந்தோர் மேற்படிப்புக்குமாகத் தம் கல்வியைத் தொடர ஏராளமான கற்கை நெறிகளும், கல்வி நிறுவனங்களும் உண்டு. அதே சமயம் கல்வி, மற்றும் தொழில் சார் அனுபவத்திற்கேற்ப வேலை வாய்ப்புக்களை வழங்குவதிலும் இந்த நாட்டில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. தனியார் வியாபாரங்கள் குறிப்பாக இலங்கை இந்திய மளிகைக்கடைகள், இலங்கை, இந்திய உணவகங்களை வைத்திருப்போரும் கணிசமானோர் உண்டு. மேற்குலக நாடுகளோடு ஒப்பிடும் போது சொந்த வீடு வாங்கி வைத்திருப்போர் இந்த நாட்டில் அதிகம் எனலாம்.
Australia வில் தமிழ்க்கல்வி என்ற வகையில் ஆரம்பக் கல்வி தொட்டு பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வி வரையாகத் தமிழை ஒரு பாடமாகப் பயிலக் கூடிய வாய்ப்பும் வசதியும் ஆஸ்திரேலிய அரசின் அங்கீகாரத்தோடு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நியூ சவுத்வேல்ஸ் மாநிலம், மற்றும் விக்டோரியா மாநிலம் ஆகிய மாநிலங்களிலேயே பல்கலைக்கழகம் வரையிலான கற்கை நெறிக்கான வசதி உண்டு. இதனால் பெருமளவான தமிழ்ப்பிள்ளைகள் பயன்பெற்று வருவதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதற்கென ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ப்பாடசாலைகள் இயங்கி வருகின்றன.
ஊடகம் என்ற வகையில் பத்திரிகை ஊடகத்தைப் பார்ப்போமேயானால், இந்த நாட்டில் 50 இற்கும் மேற்பட்ட தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் தொடங்கி ஒருவருடமோ இரண்டு வருடமோ ஓடி ஓய்ந்த வரலாறுகள் உண்டு. இப்போது எஞ்சியிருப்பவை என்று பார்த்தால் ஈழமுரசு, தென்றல், தமிழ் ஓசை ஆகிய இலவச ஏடுகளும் கலப்பை, வல்லினம் போன்ற பணம் கொடுத்து வாங்கக் கூடியசஞ்சிகையும் அடங்குகின்றன. இந்திய சஞ்சிகைகளோடு போட்டி போட வேண்டிய சவாலையும், உள்நாட்டில் பரவலான வாசகர்கள் இன்மை, எழுத்தாளர்கள் அதிகம் நாட்டம் கொள்ளாமை போன்றவையே இந்த நாட்டில் இயங்கும் தமிழ்ப் புதினங்களுக்குச் சவாலாக அமைகின்றன.
வானொலி ஊடகத்தை எடுத்து நோக்கினால் SBS என்ற பல்லின மொழி பேசும் வானொலி வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையின் ஒரு மணி நேரத்தைத் தமிழுக்காக ஒதுக்கியுள்ளது. இதைத் தவிர பல்வேறு சமூக வானொலிகள் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று வாரத்தின் ஏதாவது ஒரு நாளைப் பங்கு போட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்குவதோடு 24 மணி நேரத் தமிழ் வானொலிகளாக அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இன்பத் தமிழ் ஒலி ஆகியவையும் இயங்குகின்றன. 24 மணி நேர வானொலிகளைக் கேட்பதற்கு விசேட கருவிகள் தேவை .
அதே சமயம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்போது இணையமூடாகவும் கேட்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 2 சதவீதமான மக்கள் தொகையைப் பிரதிபலிக்கும் தமிழர் பரம்பல் என்பது இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இயங்கும் இந்த நாட்டின் வாழ்வியல் போன்று இலங்கை, இந்தியத் தமிழர் என்ற பாகுபாடு கடந்து மொழியால் ஒன்றுபட்ட ஒரே இயங்குதளத்தில் சொல்லிலும் சிந்தனையிலும் இயங்கினால் நம் தமிழ் மொழியின் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான அத்திவாரமாக அது நின்று நிலைக்கும் எனலாம்.
உசாவியவை:
Australian Bureau of Statistics 20/06/2012
SBS - Census Explorer 2012
People speaking Tamil at home in Australia - Dr.A.Kandiah (January 2008)
கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும் - கலாநிதி ஆ.கந்தையா (December 2004)
Thursday, June 14, 2012
இன்று முதல் "கள்ளத்தீனி" கொடுக்கிறேன்
வெகுநாளாக மனக் கிடப்பில் போடப்பட்டிருந்த சமாச்சாரத்தை இன்று முதல் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். என்னைச் சுற்றி நடப்பவை, நான், பார்த்த, கேட்ட, சுவைத்த, ரசித்த, ருசித்த, ருசிக்காத சமாச்சாரங்களின் கலவையாக சின்னச் சின்னதாய் துணுக்குகளாகக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இந்த சமாச்சாரம் ஒன்றும் வலையுலகிற்குப் புதிதான அம்சம் அல்ல, வாரா வாரம் நண்பர் கேபிள் சங்கர் வெற்றிகரமாகக் கொத்துப் பரோட்டாவாகத் தரும் விடயம் போலத் தான். இன்னும் சொல்லப் போனால், எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் "கற்றதும் பெற்றதும்" போன்ற தொடர்களில் தொட்டுக் காட்டிய விஷயம் தான். ஆனால் இங்கே ஒப்பீடு எதுவுமின்றி மனம் போன போக்கில் என் பாணியில் பகிரலாம் என்றிருக்கிறேன். இப்போதெல்லாம் வலையுலகத்தை மெல்ல மெல்ல ட்விட்டர் தன் 140 எழுத்துக்கள் தின்று ஏப்பம் விடும் சூழலில், நறுக்குகளாகச் சில விஷயங்களைக் கொடுத்துக் கடந்து போகவும் இப்படியான தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
கள்ளத்தீனி என்ற சொற்பதம் தமிழக நண்பர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்களோ தெரியவில்லை. சிறு அளவில் அடக்கப்படும் மிக்சர், இனிப்பு வகையறா உள்ளிட்ட தின்பண்டங்களைத் தான் ஈழத்தில் பொதுவாக இந்தப் பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்தத் தின்பண்டங்கள் உடலுக்கு எவ்வளவு தூரம் ஆரோக்கியத்தை விளைவிக்கின்றன என்பது முக்கியமல்ல ஆனால் சாப்பிடும் கணம் கொடுக்கும் சுவை மட்டுமே முக்கியம். இந்தளவோடு நிறுத்தி என் கள்ளத்தீனிப் பதிவுக்குப் பாய்கிறேன்.
000000000000000000000000000000
சமீப காலங்களில் இணையத்தில் நுனிப்புல் மேய்ந்து பழகியதால் ஏற்கனவே வாங்கிக் குவித்த புத்தகங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வேளை மீண்டும் ஒரு சபதம், வாரம் ஒரு புத்தகம் படித்து முடிக்கவேண்டும் என்று. அதன் பிரகாரம்
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பின் சிட்னியில் இயங்கும் தமிழ் அறிவகம் சென்றேன். சிட்னியில் பிராந்திய அளவில் செயற்படும் நூலகங்களில் தமிழ் நூல்கள் ஏழைக்கேற்ற எள்ளுப்பொரியாக இருக்கும் நிலையில் சிட்னியில் உள்ள இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான ஒரே தமிழ் நூலகம் என்ற பெருமை. ஆனால் எத்தனை பேர் இந்த நூலகத்தைப் பயன்படுத்துகின்றார்கள் என்பது மில்லியன் அவுஸ்திரேலிய டாலர் கேள்வி. இதையெல்லாம் சொல்லும் நானே 10 மாதங்களுக்குப் பிறகு தானே சென்றேன் ;-) .
எடுத்த எடுப்பில் தமிழ்மகன் எழுதிய "ஆண்பால் பெண்பால்"(நாவல்), Gordon Weiss இன் "இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்", பாமரன் தமிழக அரசியலில் தொடராக எழுதிய "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல" என்று மூன்று புத்தகங்கள்.
பாமரனின் "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல" படித்து முடித்தாயிற்று என்பதை விட ஒரு பெரும் பாறாங்கல்லை நெஞ்சில் தூக்கி வைத்தாயிற்று என்று சொல்லலாம். பாமரன் யார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு தமிழ் வாசக உலகம் அவரை அறியாமல் இல்லை. பாமரனின் உள்ளத்து உணர்வுகளின் வடிகாலாய் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பே "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல" (உயிர்மை வெளியீடு). முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் இருந்து போபால் விஷவாயுக் கசிவு வரை கிட்டத்தட்ட மூன்றாண்டுகளின் பதிவுகளாகப் பார்க்க முடிகின்றது. எள்ளல் தொனியோடு ஒவ்வொரு கட்டுரைகளும் சொல்லும் செய்திகள், அலங்காரம் இல்லாத எழுத்து நடை என்று ஈழத்தில் இறுதிக்கட்ட யுத்த அனர்த்தம் நடந்த வேளை பாமரன் கனத்த மனத்தோடும் கண்ணீரோடும் எழுதிய கட்டுரைகள் சமகாலத்தவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்த, அனுபவித்த நிகழ்வுகளாக இருக்கலாம். ஆனால் மறதி வியாதி தமிழ்ச்சமூகத்துக்கு எதிர்காலத்தில் தமிழகத்தில் ஊமையாய் வெதும்பித் தீர்த்த உணர்வாளர்களின் சாட்சியங்களாக உண்மைகள் பலதைப் பகிரும்.
இப்போது தமிழ்மகனின் "ஆண்பால் பெண்பால்" நாவலை எடுத்துப் புரட்ட ஆரம்பிக்கிறேன்.
00000000000000000000000000000000000000000000000000000000000000
ஒரு காலத்தில் சுவர் விளம்பரங்களும் சரி, கட் அவுட் விளம்பரங்கள் ஆனாலும் சரி, தூரிகை ஓவியங்கள் தான் முன்னிற்கும். காலப்போக்கில் தொழில் நுட்ப மாறுதல்களால் டிஜிட்டல் விளம்பரங்கள் வரை வந்து விட்டன. எண்பதுகளில் நம்மூர் தியேட்டர்களின் கட் அவுட்டில் மணியம் ஆட்ஸ் என்று ஓரமாகக் கையெழுத்திட்ட தூரிகை ஓவியங்களும் சரி, பொம்மை, பேசும் படம் போன்ற இதழ்களில் பரணி என்று கையெழுத்திட்ட சினிமா விளம்பரங்களின் தூரிகை ஓவியங்களும் சரி மறக்கப்பட்ட சூழலில், சமீபத்தில் ஒரு விளம்பரம் என்னை ஈர்த்தது. ரவுடி ரத்தோர் என்ற ஹிந்திப் படத்துக்கான விளம்பரங்களில் தூரிகையால் வரையப்பட்டதான பிரதிபலிப்பில் அவை இருந்தன. இப்போதுள்ள உயர் தொழில் நுட்ப உலகில் இந்தத் தூரிகை போல நகாசு வேலைகளைக் காட்டுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை ஆனாலும் அந்த விளம்பர உத்தி திரும்பிப் பார்க்க வைத்தது. எண்பதுகளில் சினிமா விளம்பரங்களுக்குத் தன் தூரிகையால் கைவண்ணம் கொடுத்த ஓவியர் பரணி "வறுமையின் நிறம் சிகப்பு" படத்தில் கே.பாலசந்தரால் வாய் பேச முடியாத ஓவியராகவே நடித்துத் தன்னைப் பதிவு செய்துவிட்டார். இப்படியான துறைகளில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்துத் தன் படங்களிலோ, சின்னத்திரையிலோ பிம்பமாக்கிப் பதிவு செய்த பாலசந்தரின் பணியும் தனியே நோக்கப்பட வேண்டியது.
000000000000000000000000000000000000000000000000000000000000000
சிட்னியின் காலை ரயிலைப் பிடித்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஏகப்பட்ட கூத்துக்களைப் பார்க்கலாம். அதில் சகிக்க முடியாதது எட்டு கம்பார்ட்மெண்டுக்கும் கேட்குமளவுக்குத் தம் இயர்ஃபோன் வழியாக வழிந்தோடும் இசையைக் கேட்டுப் பக்கத்தில் இருப்போரை இம்சைப்படுத்தும் , உரக்கப் பேசி ஊரைக் கூட்டும் சக பயணிகள். இந்த அனர்த்தங்கள் எல்லாம் ரயில்வே கடவுளின் காதுகளை எட்டியிருக்க வேண்டும். அமைதி காக்கும் பெட்டிகள் என்று சிட்னியின் ரயில்வே நிர்வாகம் சோதனை முறையில் சில ரயில்களை இயக்க ஆரம்பித்திருக்கிறது. பார்ப்போம் இதற்கு எதிராக ஏதேனும் கூச்சல் வருகிறதா என்று.
00000000000000000000000000000000000000000000000000000000000000000
சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணா அவர்களைப் பேட்டி எடுக்கவேண்டும் என்று நான் பணிபுரியும் வானொலி நிர்வாகியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. அன்று மாலையே என் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்குகொள்கிறார் என்றும் சொன்னபோது கையும்,காலும், வாயும் ஓடவில்லை. பாலமுரளிகிருஷ்ணா போன்ற மேதைகளைப் பார்த்தாலே போதும் என்ற அளவில் இருக்கும் எனக்கெல்லாம் இது ஓவர் தான் ;-) ஆனால் பேட்டிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருந்து, குழந்தைச் சிரிப்போடு பொறுமையாகவும் நிதானமாகவும் நாற்பது நிமிடப் பேட்டி கொடுத்து நெகிழ வைத்து விட்டார். வெறும் மூன்று மாதம் பாடசாலைப் படிப்பு, எனக்கு சங்கீதத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது, எதிர்மறையான விமர்சனம் தான் என்னை மேலும் ராக ஆராய்ச்சியில் பணி செய்ய வழி செய்தது போன்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பாலமுரளிகிருஷ்ணா ஒரு நிறைகுடம் என்பதை மீண்டும் மெய்ப்பித்தது.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
காதல் கைகூடிக் கல்யாணக் கதவு தட்டும் வேளை காதலர்கள் அமெரிக்காவில் இருந்து பாரிஸ் நகரத்துக்குப் போகின்றனர். காதலனோ ஒரு எழுத்தாளன், நித்தமும் கனவுலகமே கதி. அரையும் குறையுமாகத் தான் எழுதிய நாவலை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கும் வேளை, கடந்த நூற்றாண்டுக்குப் பயணித்து Ernest Hemingway உள்ளிட்ட அந்தக் காலத்து எழுத்தாளர்களோடு அளவளாவும் கனவுலகில் சஞ்சரிப்பதும் நிகழ்காலத்துக்குத் தாவுவதுமான கதையோட்டம். இரண்டு மாறுபட்ட ரசனை கொண்ட காதலர்களைக் குறியீடாக வைத்து நவீனத்துக்கும், பழங்காலத்துக்குமான பயணமாகப் பதிவாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியவர் ஹாலிவூட் இன் பல்துறை வித்தகர் Woody Allen. படத்தைத் தேடிப்பிடித்துப் பாருங்கள், நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.
Posted by
கானா பிரபா
at
10:16 PM
13
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook