skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Wednesday, July 05, 2006

வாடைக்காற்று


செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் "இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.

நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.

இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.

இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும்.
பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.

மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.


செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.

இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.

இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது "செம்மீன்" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
" எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்" என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.

நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
















வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். "ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.















இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து " கல்லுக்குள் ஈரம்" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.


வாடைக்காற்று திரைப்படமான போது


கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , "நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்" என்றாராம்.















நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்


திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)

"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.

Posted by கானா பிரபா at 2:53 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook

51 comments:

Jayaprakash Sampath said...

நமக்குப் பிடித்த ஆக்கங்களை குறித்து எழுதும் போது அதற்கென ஒரு தனிப்பரிமாணமும் அழகும் வந்து விடுகிறதோ?

வாடைக்காற்று படம் குறித்து கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், அப்படத்திற்கு, இத்தகைய கனமான இலக்கிய பின்புலம் இருக்கிறது என்று தெரியாது.

இதிலே நடித்த ஏ.ஈ. மனோகரன், எமக்கு, சிலோன் மனோகர் என்ற பெயரிலே பரட்டைத் தலையுடன், ஏற்கனவே அறிமுகமானவர். பிற நடிகர்கள் குறித்து தெரியவில்லை. இதில் நடித்த சந்திரகலா, தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் நடித்த சந்திரகலாவா என்பதும் தெரியவில்லை.

இடுகைக்கு நன்றி

July 05, 2006 3:39 PM
ஈழநாதன்(Eelanathan) said...

பிரபா அற்புதமான இரைமீட்பு.செங்கை ஆழியானின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது வாடைக்காற்று.அதிலும் நெடுந்தீவின் புவியியல் அமைப்பு,வாழுயிர்கள் மாந்தர்கள் என்று நுட்பமான வர்ணனைகள் மூலம் அவற்றை கதையினுள் உலவ விட்டிருக்கிறார்கள்.நெடுந்தீவு மக்கள் கல்லாலே வேலி(பகிறு)அமைப்பதைக் கூட குறிப்பிட்டிருப்பார்.நீங்கள் சொல்லும் பாரதிராஜா படம் கல்லுக்குள் ஈரம் பார்த்ததில்லை ஆனால் கடல் மீன்கள் பார்த்தபோது வாடைக்காற்று நாவல் தான் ஞாபகம் வந்தது

July 05, 2006 3:49 PM
கானா பிரபா said...

வணக்கம் இகாரஸ் பிரகாஸ்

வாசித்துக் கருத்தெழுதியமைக்கு என் நன்றிகள்.
தமிழ் நாட்டின் சந்திரகலா வேறு, இவர் வேறு.
என் பதிவின் முதற் படத்தில் இருப்பவர்கள் ஏ.ஈ மனோகரனும் (சிலோன் மனோகர்), ஈழத்துச் சந்திரகலாவும்.

இதில் குறிப்பிட்ட கே.எஸ் பாலச்சந்திரன் (பட உதவி இயக்குனர்), கமல் நடித்த தெனாலி படத்துக்கான வசன ஒத்துளைப்புப்புக்கு இவரின் வாத்தியார் வீட்டில் என்ர வானொலி நாடக ஒலிப்பேழை பயன்பட்டது. (இவரின் படம், வாடைக்காற்று திரைப்படமான போது என்ற தலைப்பின் கீழ் உள்ளது)

மற்றைய நடிகர்கள் பற்றி உங்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.

July 05, 2006 3:52 PM
கானா பிரபா said...

கருத்துக்கு நன்றி ஈழநாதன்,

காலத்தால் முந்திய செம்மீன் படக்களமும் வாடைக்காற்றை நினைவுபடுத்துகின்றது.

July 05, 2006 3:55 PM
Jayaprakash Sampath said...

//மற்றைய நடிகர்கள் பற்றி உங்களுக்குத் தெரியவாய்ப்பில்லை//

உண்மை. ஈழ இலக்கியமாவது, இணையம் மூலமாக, அப்படியிப்படி என்று தெரிய வருகிறது.ஈழக் கலைஞர்கள் குறித்து சுத்தமாகத் தெரியாது. ஈழத்தமிழ் சினிமாவின் வரலாறு பற்றி, ஏதோ ஒரு மன்றத்திலே, தொடர் ஒன்றை வாசித்த ஞாபகம். ரமணீதரன் சுட்டி கொடுத்தார் என்று நினைவு.

July 05, 2006 6:24 PM
சின்னக்குட்டி said...

//ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்//



நிச்சயமான உண்மை கான பிரபா..... கிடைத்தற்க்கரிய படங்களுடன் இந்த பதிவு நன்றாக இருக்கிறது....

July 05, 2006 7:25 PM
கானா பிரபா said...

வணக்கம் பிரகாஷ்

என்னால் முடிந்த அளவிற்கு எனக்குத் தெரிந்த ஈழத்துக்கலைஞர்கள் பற்றிய குறிப்பைத் தருகின்றேன்.

July 05, 2006 8:28 PM
சின்னக்குட்டி said...

/83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்//

உண்மையா பிரபா... கொப்பி இருக்கிறதா சந்தோசம்.......முன்பு எல்லாம் எரிந்து விட்டதாய் கூறினார்களே...

July 05, 2006 9:18 PM
கானா பிரபா said...

வணக்கம் சின்னக்குட்டி

உங்களுக்கும் வாடைக்காற்றின் மேல் அபிமானம் இருப்பது தெரியும்:-)

July 05, 2006 9:18 PM
கானா பிரபா said...

வணக்கம் குண்டக்க மண்டக்க

தாங்கள் அனுப்பிய பின்னூட எழுத்துக்கள் வாசிக்கமுடியவில்லை, தயவுசெய்து யூனிகோட் இல் மீளவும் பின்னூட்டமிடுங்கள்

July 05, 2006 9:20 PM
கானா பிரபா said...

வணக்கம் சின்னக்குட்டி

அண்மையில் செங்கை ஆழியானை நான் பேட்டிகண்டபோது உறுதிப்படுத்தினார். எனக்கும் மகிழ்ச்சியே.

July 05, 2006 9:45 PM
Anonymous said...

பிரபா!
இந்த நாவலைப் படித்த போது; நெடுந்தீவைத் தெரியாது; பின் பலவருடங்களால் ஒரே ஒரு தடவை சென்றுள்ளேன்; கதாசிரியரின் உள்வாங்கும் திறனை நினைத்து மெச்சினேன்.கூழக்கடாப் பறவை பற்றிக் கதையில் வருவது,படித்து விட்டு அப்படி ஒரு பறவை எப்படி இருக்கும் என எண்ணி ;பருந்து போல் கற்பனை செய்து வைத்தேன்; இங்கு தொலைக்காட்சியில் பார்த்தபின்பே அதன் பிரமாண்டம்; பறக்குமாற்றல்;எண்ணி வியந்தேன்.
வாடைக்காற்று படம்; நான் தென்னிந்திய சினிமாவின் தாக்கத்திலிருந்ததால்,புது விடயமாக ,ஒன்று இரண்டு, பார்த்த சிங்களப் படங்களின் சாயல் போல் இருந்தது. தொலைக்காட்சி வந்தபின் பல மொழிப்படங்களைப் பார்த்த போதுதான்; இவர்கள் வித்தியாசமாக முயற்ச்சி செய்கிறார்கள் ;என்பது பிடிபட்டது.
நிறையத் தகவல்கள் தந்துள்ளீர்கள்!
யோகன் பாரிஸ்

July 05, 2006 10:24 PM
Anonymous said...

கானா பிரபா, வாடைக்காற்று நாவல் வாசித்திருக்கிறேன். ஆனால் படம் பார்க்கக் கிடைக்கவில்லை. (படச்சுருள்ஓரளவு முழுமையாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. உங்கள் பதிவு படத்தையே பார்த்தது போல் இருக்கிறது. நல்ல விமர்சனம். படங்கள் அருமை. (கருப்பு வெள்ளைக்கு நிகர் எதுவுமில்லை).

//நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது//

உண்மைதான். அ. பாலமனோகரனின் நிலக்கிளி நாவல் எனக்குப் பிடித்தமான அருமையான நாவல். அது இப்போது இணையத்தில் கிடைக்கிறது. நூலக இணைப்பு இதோ:
நிலக்கிளி

July 05, 2006 10:37 PM
கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

செங்கை ஆழியானின் தனித்துவமான வர்ணனை காட்சிக்களத்தைக் கண்முன் கொண்டுவந்துவிடும்

July 05, 2006 10:37 PM
கானா பிரபா said...

வணக்கம் சிறீஅண்ணா

தங்கள் கருத்துக்கும், நூலக இணைப்புக்கும் என் நன்றிகள்

July 05, 2006 10:48 PM
வசந்தன்(Vasanthan) said...

பதிவுக்கு நன்றி பிரபா.

//இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.//

இது அவரது பிற நாவல்களிலும் இருக்கும் சிக்கல்தான்.

July 06, 2006 12:00 AM
ரவி said...

Its Superb...:)

July 06, 2006 12:13 AM
Anonymous said...

வணக்கம் பிரபா,

அருமையான பதிவு.இதில் நடித்த யேசுரட்ணம் பிரான்சில் இருக்கிறாரர்

அன்புடன் பிரகலாதன்


A.E.Manoharan and Chandrakala acted in a song sequence shot at Vallipuram Temple Area in Point Pedro Area for "Vaadai Katru" film in 1977.
http://balafilms.homestead.com/VaaKaa1.html

July 06, 2006 1:32 AM
கானா பிரபா said...

வணக்கம் பிரகலாதன்

தங்கள் வருகைக்கும், மேலதிக தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கும் என் நன்றிகள்.

July 06, 2006 8:44 AM
கானா பிரபா said...

வாசித்துக் கருத்தளித்த ரவி, உங்களுக்கு என் நன்றிகள்

July 06, 2006 8:46 AM
கானா பிரபா said...

//வசந்தன்(Vasanthan) said...

இது அவரது பிற நாவல்களிலும் இருக்கும் சிக்கல்தான்.//


வணக்கம் வசந்தன்

செங்கை ஆழியானின் கதைகளை நன்றாக அனுபவத்துப் படிப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்பதால் இது உங்களுக்கும் தெரிந்திருக்கிறது.

July 06, 2006 8:49 AM
விருபா - Viruba said...

வணக்கம் கானா பிரபா,

செங்கை ஆழியானின் பத்துக் குறுநாவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு "ஆயிரமாயிரம் ஆண்டுகள்" என்ற தலைப்பில் புதிய புத்தகமாக இந்த மாதம் வெளிரவுள்ளது.

இதில் இடம் பெறுபவை,
"பழைய வானத்தின் கீழே"
"முதல் தவறு"
"ஒரு பௌர்ணமிக்காலம்"
"நிலமகளைத் தேடி..."
"யொகாறா"
"அக்கினிக் குஞ்சு"
"சாம்பவி" (கணையாழி)
"யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று" (கணையாழி)
"மீண்டும் ஒரு சீதை" (கலைமகள்)
"வரமும் தவமும்"

July 06, 2006 11:38 AM
கானா பிரபா said...

வணக்கம் விருபா

இந்த நல்ல தகவல்களைத் தந்தமைக்கு என் நன்றிகள்.

July 06, 2006 11:49 AM
U.P.Tharsan said...

இப்படியான பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் பிரபா.. என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவும். நன்றி

July 06, 2006 9:53 PM
மணியன் said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளரையோ கலைஞர்களையோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுத்தியிருப்பது உங்கள் எழுத்தின் வெற்றி. வாடைக்காற்று நாவல் இணையத்தில் கிடைக்குமா ?

July 06, 2006 10:53 PM
கானா பிரபா said...

நிச்சயம் தருவேன் தர்ஷன், தங்கள் வருகைக்கு என் நன்றிகள்

July 07, 2006 8:39 AM
கானா பிரபா said...

//மணியன் said...
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளரையோ கலைஞர்களையோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுத்தியிருப்பது உங்கள் எழுத்தின் வெற்றி. வாடைக்காற்று நாவல் இணையத்தில் கிடைக்குமா ? //

கருத்துக்கு நன்றிகள் மணியன்

வாடைக்காற்று இணையம் மூலம் வாங்கலாம், ஈ புக் ஆகப் படிக்கமுடியாது.

மேல் பின்னூட்டமிட்ட விருபாவின் தளத்தில் ஒருமுறை இது பற்றி விசாரிக்கவும், அது போல்
இந்தத் தளத்தையும் சென்று பாருங்கள், ஒன் லைனில் வாங்கும் வசதியுண்டு:
http://www.tamilemarket.com/pro/book_seng01.htm

July 07, 2006 8:57 AM
Jeevan said...

இங்கே வாடைக் காற்றைப் பற்றி
வார்த்தைகளால் வரையும் போது
இதமாய் இருக்கிறது.

ஈழத்தின் நல்லதொரு நாவலை படமாக்கியிருந்தாலும் அது 1983ல் நடைபெற்ற இன அழிப்பின் போது எரிந்து விட்டதாகவே அறிந்து வேதனைப்பட்டேன்.

இத் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்த ஏ.வி.எம்.வாசகர் அவர்கள் கனடாவிலிருந்து சுவிஸுக்கு வந்த போது.....ஐரேப்பிய தொலைக் காட்சிக்கு ஓர் நேர் காணல் எடுத்த சமயம் என் வீட்டுக்கு வந்திருந்தார். படப்பிடிப்பு காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நேர்காணலிலும் என்னுடனும் பகிர்ந்து கொண்டார்.

இப்போது இருக்கும் ரீல்களை வைத்து ஒரு டீவீடியாய் ஒரு தொகுப்பு நிகழ்வாய் வெளியிட்டால் அது ஈழத்தின் ஒரு ஆவணமாக இருக்கும்.

ஏதாவது ஒத்துழைப்பு தேவையெனில் என்னால் உதவ முடியும்............

பகிர்தலுக்கு நன்றி பிரபா!

July 07, 2006 8:44 PM
கானா பிரபா said...

வணக்கம் அஜீவன்

தங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைக்கும் என் நன்றிகள். நிச்சயமாக இதைச்
செங்கை ஆழியான் அவர்களிடம் தொடர்புகொண்டு அறியத் தருவேன்.

July 07, 2006 9:13 PM
Anonymous said...

aemanoharan and anadarani's contemporary photos show how the time got changed.

Like kallukkuL iiram and vaadikaattru compare there two songs

nith kanagaratnam's kudaththanaiyil and Krishnaraj's ayaa onnu

July 08, 2006 2:44 AM
கானா பிரபா said...

//Anonymous said...
aemanoharan and anadarani's contemporary photos show how the time got changed.

Like kallukkuL iiram and vaadikaattru compare there two songs

nith kanagaratnam's kudaththanaiyil and Krishnaraj's ayaa onnu //

வணக்கம் அநாமோதய நண்பரே

தேவாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முன்னர் மலேசியத்தமிழர்களின் லொக் அப் என்ற பாடற் தொகுப்பின் "கொக்கரகர" என்ற பாடலை அப்பட்டமாகப் பிரதியெடுத்து சாக்லெட் படப்பாடலாகத் தந்தார்.

இப்போது நீங்கள் தந்த ஒப்பீடுகையும் மிகப்பொருத்தம்.
நித்தி கனகரட்ணம் தற்போது அவுஸ்திரேலியா, மெல்பனில் தான் இருக்கிறார். எங்கள் வானொலியின் அபிமானிகளில் ஒருவர்.

July 08, 2006 10:50 AM
கானா பிரபா said...

வணக்கம் அநாமோதய நண்பரே

மேலும் ஒரு தகவல், ஏ.ஈ மனோகரனோடு இருப்பவர் சந்திரகலா. ஆனந்தராண்
"நாகம்மாவும் மரியதாசும்" என்ற படத்தில் இருக்கிறார்,

July 08, 2006 10:54 AM
Anonymous said...

thambi prabaa appadiyaa? seythikaluku nanri ;))))

July 08, 2006 11:15 AM
Anonymous said...

ஏ.ஈ மனோகரனோடு இருப்பவர் சந்திரகலா. ஆனந்தராணி
"நாகம்மாவும் மரியதாசும்" என்ற படத்தில் இருக்கிறார்,enpathaiththaan sonneen. aanantharanai meadai nadakangkaLil wadiththup paarththirukkireen. koomaalikaLilum nirmala rajasigaththoodu kannaadi vaarppu tholaikkaadchiyilum. niththi kanagaraththinam ausraliavil iruppathu theriyum. vaadaikkaatru thunai naayagan indrapalavum ausraliavileethaan irukkiraar. I hate him for his phd thesis on tamils

July 08, 2006 11:20 AM
கானா பிரபா said...

Anonymous said...
ஏ.ஈ மனோகரனோடு இருப்பவர் சந்திரகலா. ஆனந்தராணி
"நாகம்மாவும் மரியதாசும்" என்ற படத்தில் இருக்கிறார்
என்பதைத்தான் சொன்னேன். ஆனந்தராணி மேடை நாடகங்களில் நடித்துப் பார்த்திருக்கிறேன். கோமாளிகளிலும் நிர்மலா ராஜசிங்கத்தோடு கண்ணாடி வார்ப்பு தொலைக்காட்சியிலும். நித்தி கனகரத்தினம் அவுஸ்திரேலியாவில் இருப்பது தெரியும். வாடைக்காட்ரு துணை நாயகன் இந்திரபாலவும் அவுஸ்திரேலியாவில்தான் இருக்கிறார். I hate him for his phd thesis on tamils //

தவறாகப் புரிந்து கொண்டமைக்கு மன்னிக்கவும் நண்பரே.
கண்ணாடி வார்ப்புக்கள் முன்னர் 80 களில் இலங்கை வானொலியில் நாடகமாக வந்தபோது அதை ஒலிப்பதிவு செய்துவைத்திருந்து நேயர் ஒருவர் நான் நடத்தும் "முற்றத்து மல்லிகை" நிகழ்ச்சிக்காகத் தந்தார். என் வானொலிப் படைப்புக்களுக்கான தளம் உருவாகிய பின் அதை ஒலியேற்றுகின்றேன்.

இந்திரபாலாவின் சிந்தனையில் சமீபத்தில் மாற்றம் வந்திருப்பதாகவும் , சமீபத்தில் அவர் எழுதிய வரலாற்று நூல் அதைச் சான்றுபகிர்வதாகவும் அறிந்தேன்.

July 08, 2006 11:54 AM
Kanags said...

//இந்திரபாலாவின் சிந்தனையில் சமீபத்தில் மாற்றம் வந்திருப்பதாகவும் , சமீபத்தில் அவர் எழுதிய வரலாற்று நூல் அதைச் சான்றுபகிர்வதாகவும் அறிந்தேன்.//

இந்திரபாலா அவர்கள் ஈழம் என்ற சொல்லுக்கு பல முரண்பாடான கருத்துக்களை வைத்திருந்தார். அது ஒரு சிங்களச் சொல்லென்று தனது thisis இல் நிறுவியிருந்தார் (!). இது குறித்து பல சர்ச்சைகள் அன்று எழும்பியிருந்தன. ஈழம் குறித்து Peter Schalk இன் ஆய்வுகள் தமிழ்ச் சொல்லென விளக்கியிருக்கிறது.

July 08, 2006 1:24 PM
கானா பிரபா said...

மேலதிக தகவல்களுக்கு நன்றி சிறீ அண்ணா. வரலாற்றாசிரியர்கள் தவறிழைக்கும் போது அது பேரினவாதிகளுக்குச் சாதகமாகிவிடுகிறது.

July 08, 2006 1:35 PM
Machi said...

ஈழத்து திரைப்படம் என்பது எனக்கு புது செய்தி. தமிழகம் தவிர வேறு எங்கும் தமிழ் திரைப்படம் தயாரிக்கப்படவில்லை என்று தான் நினைத்திருந்தேன்

July 08, 2006 1:39 PM
கானா பிரபா said...

வணக்கம் குறும்பன்
தாங்கள் இப்போது நம் நாட்டுப் படங்கள் பற்றி அறிந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி.

July 08, 2006 1:44 PM
Kanags said...

//ஈழத்து திரைப்படம் என்பது எனக்கு புது செய்தி. தமிழகம் தவிர வேறு எங்கும் தமிழ் திரைப்படம் தயாரிக்கப்படவில்லை என்று தான் நினைத்திருந்தேன்//
குறும்பன் புலி/புளி பற்றி பதிவு போட்ட கையோட இங்கு வந்து குறும்பு விடுகிறார் போற் தெரிகிறது.

July 08, 2006 2:34 PM
கானா பிரபா said...

Kanags said...
//குறும்பன் புலி/புளி பற்றி பதிவு போட்ட கையோட இங்கு வந்து குறும்பு விடுகிறார் போற் தெரிகிறது.//

:-)))

July 08, 2006 2:40 PM
கடல்கணேசன் said...

வணக்கம் பிரபா.. தலைப்பைப் பார்த்தவுடன் என் மனதுக்குள் "வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே, நல்ல வாழ்க்கையுண்டு எங்களுக்கு ஓடத்திலே.. இரவினிலே(நிலவினிலே?) தொழிலுக்காக செல்லுகிறோம்.. அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகிறோம்.." என்ற வரிகள் என் மனத்தில் ஓடியது.. எழுபதின் இறுதிகளில் (அல்லது எண்பதின் ஆரம்பத்தில்) இலங்கை வானொலியில் ஒலித்த இந்தப் பாடல் இன்றும் என் மனதில் பதிந்த ஒன்று. தமிழ்நாட்டில் இருந்து இலங்கை வானொலியைத் தவறாமல் கேட்ட அந்த நாட்கள் மறக்க முடியாதவை.. உங்கள் கட்டுரை என்னை பழைய நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றது.(அதே போல் இன்னும் நினைவில் உள்ள இன்னொரு பாடல்,"இந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன்.. அதுதான் எனக்குத் திருநாள்.. என் கனவுகள் பலித்திடும் பெருநாள்.." எனத்தொடங்கும் பாடல்.(படம் எதுவென்று நினைவில் இல்லை..).. உங்கள் பதிவுகள் அழுத்தமாகவும், வாசிப்பவர்களை கூடவே கைபிடித்து நீங்கள் எழுதும் உலகிற்கே அழைத்துச் செல்லும் வலிமை கொண்டவை..

July 10, 2006 1:01 AM
கானா பிரபா said...

வணக்கம் கடல்கணேசன்
தமிழ்நாட்டுச் சகோதரர் நீங்கள் எங்கள் ஈழத்துப் பாடல்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசியதை நான் வாசித்தபோது எனக்கு மெய் சிலிர்த்தது. உண்மை.
எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது தெரியுமா?
"இந்த ஊருக்கு ஒருநாள்" என்ற பாடலை முத்தழகு பாட நான் உங்கள் தோழன் திரைப்படத்தில் வந்தது என நினைக்கின்றேன்.
மிகவும் நன்றிகள் உங்களுக்கு.

July 10, 2006 9:01 AM
Anonymous said...

முதற்தடவை வருகிறேன். பத்து வருடத்துக்கு முன் வாசித்த கதை, நினைவுபடுத்தியதற்கு நன்றி ,
naayakan

October 09, 2006 10:35 PM
கானா பிரபா said...

வணக்கம் நாயகன்

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

October 10, 2006 11:58 AM
Anonymous said...

கானப்பிரபா,
வாடைக்காற்று நாவலைப் பற்றி கூறப்போய் ஈழத்து திரைப்படங்களைப்பற்றிய பல தகவல்கள் வருவதற்கு களம் அமைத்திருக்கிறீர்கள். நன்றி இருப்பினும் சில திருத்தங்ஙகள்.

வாடைக்காற்று திரைப்படத்தின் துணைநாயகர்களில் ஒருவர் அவுஸ்திரெலியாவில் வாழும் பேராசிரியர் இந்திரபால என்பது தவறு. இங்கிலாந்தில் வசிக்கும் மருத்துவர் இந்திரகுமார் அவர்களே வாடைக்காற்றில் என்னோடும், மனோகரனோடும் இணைக்கதாநாயகனாக நடித்தவர். விணவெளி யாத்திரை பற்றி நூல்கள் எழுதிப் பிரசித்திபெற்றவர்.

இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் என்ற பாடல் நான் உங்கள் தோழன் என்ற படத்தில் இடம்பெற்றதல்ல. மாமியார் வீடு என்ற படத்தில் ஜோசப் ராசேந்திரன் பாடியது. இவர்தான் வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே பாடலையும் பாடியவர்.
கே.எஸ்.பாலச்சந்திரன்

January 17, 2007 4:46 AM
கானா பிரபா said...

வணக்கம் பாலச்சந்திரன் அண்ணா

முதலில் எங்கள் தாயகத்தின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான நீங்கள் என் வலைப்பூவிற்கு வந்ததற்கு மிக்க நன்றிகள்.

என் மூலப்பதிப்பில் டொக்ரர் இந்திரகுமார் என்றே குறிப்பிட்டிருந்தேன், வாசகர் ஒருவர் தான் தவறுதலாகப் புரிந்து கொண்டிருந்தார், நானும் சுட்டிக்காட்ட மறந்துவிட்டேன்.

மாமியார் வீடு பாடல் பற்றி நாம் அறியாத தகவல்களை உறுதிப்படுத்தியமைக்கும் மிக்க நன்றிகள்.

January 17, 2007 8:40 AM
Mark K Maity said...

மிக அருமையான கட்டுரை. மினகட்டு செய்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும். இன்நிலையில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அனைத்து தமிழ் நூல்களையும் இணையத்தில் ஈ புத்தகமாக வருவதை நான் விரும்பவில்லை. காரணம் நிறைய புத்தகங்கள் வெளிவராமைக்கு காரணம் எம் மக்களின் வாசிப்பு பழக்கமே. ஒரு குறிப்பிட்ட அளவு புத்தகம் 500 அச்சடித்து விற்பதானால் ஒரு புத்தகத்திற்கு 200 ஆகும் என்றால் 1000 அச்சடித்து ஒரு புத்தகத்தின் செலவு 90-110 ருபாயாக இருக்கும். ஆனால் எங்கள் மக்கள் 500 புத்தக்ததை வாங்க மாட்டார்கள். வாழ்கை்கையில் முன்னேறுவது எப்படி ஜேதிடம் என்று மிகப் பயனுள்ள புத்தகங்களை விரும்பி வாங்குவார்கள். நல்ல இலக்கிய அறிவியல் கல்வி சம்பந்தமான புத்தகங்களை வாங்க மாட்டார்கள். ஒரு புத்தகத்தின் விலையை தீர்மானிப்பது வாசகர்கள் தான். (நல்ல வெளியீட்டாளர்கள் விற்பனையாளர்கள் .... அப்படி யாரும் உண்டா??) என் கருத்து மேற்படி விடயத்தில் இருந்து கொஞ்சம் விலகிப் போகி விட்டது. மன்னிக்கவும்.

January 26, 2008 6:39 AM
கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

வாசித்துத் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

என்னைப் பொறுத்தவரை இயன்றளவு அச்சில் ஏறும் நூலாகவே வாங்கி விடுவேன். பெரிய நாவல்கள், புதினங்களை வாசிப்பதற்கு அதுவே மிகச்சிறந்த ஊடகம்.

மின்னூலாக்குவதில் ஒரு நன்மை இருக்கின்றது. அது, எம்மினத்தோடு அழிந்து கொண்டிருக்கும் இலக்கியங்கள் ஏதோ வடிவில் சேமிக்கப்பட்டிருப்பதற்கு இது வகை செய்கின்றது. அத்தோடு பரவலான வாசகர்களையும் போய்ச்சேர்கின்றது.

January 26, 2008 11:44 AM
வவ்வால் said...

கானா,

நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள், நாவலாக வந்து திரைப்படமாக வரும் போது ஏற்படும் சிதைவுகள் இல்லாமல் படம் வந்திருக்கும் போல தெரிகிறது.

நான் ஒரே ஒரு இலங்கை , இந்திய கூட்டு தயாரிப்பு படம் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன், முத்துராமன் நடித்திருப்பார் அதில். பெயர் தெரியவில்லை.

பைலட் பிரேம் நாத் என்ற படமும் அப்படிப்பட்ட கூட்டு தயாரிப்பா?


சிலோன் மனோகரின் பட்டு மாமியே உன் சிட்டு மகள் எங்கே போன்ற பாடல்கள் மூலம் அறிவேன், மற்றப்படி உங்கள் மூலம் பல புதிய தகவல்களை அறியப்பெற்றேன்.

முன்னர் கடல்புறத்தில் என்று ஒரு தொலைக்காட்சி தொடர் கூட வந்தது அதுவும் நீங்கள் சொன்ன இக்கதையை ஒத்தே இருக்கும்.

January 26, 2008 12:05 PM
கானா பிரபா said...

வாங்க நண்பா

நீங்க சொன்ன முத்துராமன் படம் பேரு "நங்கூரம்". அதில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் நம்மூர் வி.கே.டி.பாலன். மதுரா ட்ராவல்ஸ் என்று சென்னையில் வைத்திருக்கின்றார். கூடவே பொதிகை தொலைக்காட்சியில் வாழ்வில் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களைப் பேட்டி கண்டு நிகழ்ச்சி செய்கின்றார்.

இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பாக வந்த மேலும் சில படங்க>

தீ - ரஜினி காந்த்
பைலட் பிரேம்நாத் - சிவாஜி
ரத்தத்தின் ரத்தமே - ஜெய்சங்கர்

என்று தொடரும். மேலும் சில படங்களும் உண்டு.

வாடைக்காற்று திரைப்படமே ஈழத்தில் அப்போது வெளிவந்த படங்களில் முழுமையான திரைப்படத்துக்கான தகுதியைக் கொண்டிருந்ததாகச் சொல்லுவார்கள்.

January 26, 2008 7:27 PM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (3)
    • ►  March 2023 (1)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ▼  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ▼  July 2006 (13)
      • கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு
      • நட்சத்திர அனுபவம்
      • காழ்ச்சா - அன்பின் விளிம்பில்
      • அடைக்கலம்
      • தேரடியில் தேசிகனைக் கண்டேன்!
      • பிஞ்சுமனம் - குறும்படப்பார்வை
      • மறக்கமுடியாத மலரக்கா
      • வாடைக்காற்று
      • சயந்தனுக்குக் கண்ணாலம்
      • ரச தந்திரம் - திரைப்பார்வை
      • திரையில் புகுந்த கதைகள்
      • வாழைமரக்காலம்
      • நட்சத்திர வணக்கம்
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
    செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes