Sunday, July 09, 2006
காழ்ச்சா - அன்பின் விளிம்பில்
நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த படம், அதுவும் நல்ல பிரதியில் என்ற என் எண்ணம் கைகூடியது கடந்த வாரத்தில் தான். Bangalore, Land Mark இல் வாங்கிய VCD ஆன காழ்ச்சா என்ற படம் தான் அது. காழ்ச்சா என்றால் பார்வை (Vision), தரிசனம் என்று தமிழில் அர்த்தப்படும். மலையாளத்தின் சிறந்த திரைப்படைப்பாளிகளான பத்மராஜன், லோகிதாஸ் ஆகியோரின் உதவி இயக்குனராக இருந்து பின் இந்த "காழ்ச்சா" என்ற முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் பிளெஸ்ஸி. 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் சிறந்த இயக்கத்துக்காக பிளெஸ்ஸியும், சிறந்த நடிப்புக்காக மம்முட்டியும் பிலிம்பேர் விருதையும் எடுத்த படம். திரை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படி இந்தத் திரைப்படத்துக்கு நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. படம் பார்த்து முடித்தபோது உணர்ந்தேன், இவ் எதிர்பார்ப்புக்கள் பொய்யாகவில்லை.
படக்கதைச்சுருக்கம் இதுதான்.மாதவன் (மம்முட்டி) கேரளாவின் வசதி குறைந்த கிராமங்கள் தோறும் தன் 16 எம்.எம் திரைப்படக்கருவி மூலம் படம் காட்டிப் பிழைப்பவன். ஒருநாள் இப்படியாகப் படம் காட்டும் வேளை, ஒரு அநாதைச் சிறுவன் மேல் இவன் கவனம்படுகின்றது. அந்த சிறுவன் பெயர் பவன் (மாஸ்டர் யஷ்), ஜனவரி 26, 2001 குஜராத் பூகம்பத்தில் தன் உறவுகளைத் தொலைத்து, பிச்சைக்காரர்களால் கேரளாவிற்குக் கடத்திக்கொண்டு வரப்பட்டவன். இந்தச் சிறுவனின் பூர்வீகமும்,மொழியும் தெரியாமலும், இவன் படும் அல்லல்களைக் கண்ட மாதவன் தன் குடும்பத்தில் ஒருவராக வைத்து அன்பாக வளர்க்கின்றார். அந்தச் சிறுவனின் பின்புலம் தெரியவரும் போது தொடர்ந்தும் மாதவனால் பவனைத் தன் குடும்பத்தில் வைத்திருக்கமுடியாதபடி சட்டச் சிக்கல்கள் வருகின்றன. பவனின் உறவுகளைத் தேடி மாதவனும் பவனும் குஜராத்துக்குப் பயணிக்கின்றார்கள். முடிவு என்ன என்பதுதான் இப்படத்தின் பூகம்பம் தரும் அதிர்ச்சி.
இந்தப் படத்தைப் பார்த்தபோது ஈழத்து எழுத்தாளர் சுதாராஜ்ஜின் அடைக்கலம் என்ற சிறுகதை தான் ஞாபகத்துக்கு வந்தது, அதைத் தான் என் முன்னைய பதிவின் இட்டிருக்கின்றேன்.
பொதுவாக இப்படியான வித்தியாசமான கதைகள், தேர்ந்த இயக்குனர், கதைக்களம் என்று அமையும் நல்ல மலையாளப் படங்கள் தரும் உணர்வையே இப்படம் தருகின்றது. ஆற்றுப்படுக்கை தழுவிய கிராமமான காயல் என்ற கேரளப்பகுதியைத் தேர்ந்தெடுத்திருத்துப் படகு வீடுகளும், நாளாந்தப் போக்குவரத்துக்குப் பயணிக்கும் படகுச்சேவையும், இவ்வூர் வாசிகள் தம் வேலைக் களைப்பை மறக்கக் கள் அருந்தி சீட்டு (கார்ட்ஸ்) அடிப்பதும், திறந்த வெளி ஆற்றுமணற் பரப்பில் இருந்து இரவில் படம் பார்ப்பதும், ஆடிப்பாடுவதுமாக ஒரு வழக்கமான இக்கதைகளம் அமைந்திருக்கின்றது. இதனால் ஒரு சராசரிக்கலைப்படத்தின் தொய்வு தவிர்க்கப்பட்டிருப்பது இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி.
ஒளிப்பதிவும், இசையும் கூடவே இவருக்குக் கைகொடுக்கின்றன. சிறுவன் பவன், மாதவன் வீட்டுக்கு வரும் பபோது மாதவன் வீட்டு நாய் ஒரு அந்நியனைக் கண்ட தொனியில் குலைத்துத் தீர்ப்பது, இறுதிக் காட்சியில் அதே நாய் பவனைத் தேடிக்கொண்டே வருவது என்று இயக்குனரின் நுட்பமான பார்வைக்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.
இப்படத்தின் இன்னொரு நல்ல விடயம் பொருத்தமான நடிகர் தேர்வு, அந்த வகையில், மம்முட்டியின் நடிப்பைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். ஹீரோயிசத்தை ஒதுக்கிவைத்த பாத்திரப் படைப்பான, படம் காட்டும் தொழில் செய்பவராக இவர் வந்து நடிப்பில் செய்யும் பரிமாணங்கள், நடிப்பா இயல்பா என்று பாகுபடுத்தமுடியா அளவிற்கு இருக்கின்றன. படம் போட்டுக் காட்டிக்கொண்டே, இடையில் சகபாடிகளுடன் சாராயம் குடிப்பதற்காகப் போகும் போது, படம் பார்த்துக்கொண்டிருக்கும் கிழவியிடம் கவனிக்குமாறு சொல்லிவிட்டு போய், தண்ணியடித்துவிட்டு, "நாற்று நட்டாயா, களை பிடுங்கினாயா" என்று வீரபாண்டிய கட்டப்பொம்மன் பாணியில் ஏகவசனத்தில் போதை மப்பில் பேசுவது, அநாதைச் சிறுவனின் குஜராத்தி மொழி தெரியாமல் திணறிச் சமாளிப்பது, சிறுவன் பவன் தன் மகளோடு சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவதைப் பார்த்துக் குதூகலிப்பது, ஒரு கட்டத்தில் ஆற்றில் தன் மகளும் பவனும் மூழ்கும் போது மகளைத் தன் வீட்டார் அரவணைக்கும் போது ஓரமாய் நீர் சொட்டச் சொட்ட நிற்கும் சிறுவன் பவனைக் கரிசனையோடு பார்த்து வாரிஅணைத்து உச்சிமுகர்வது எனப் பல உதாரணங்கள்.
சிறுவன் பவனைத் தொடர்ந்தும் தன் குடும்பத்தில் வைத்திருக்க விரும்பினாலும் அரச இயந்திரத்தின் கையாலாகாத தனத்தால் அது நிறைவேறாமல் போகும் போது அசட்டுச் சிரிப்புமாக அதிகாரிகளுக்குக் கை கட்டி நிற்பது என்று படத்தின் சோககாட்சிகளை ரசிகன் மேற் பாரமேற்றுகிறார். கக்கத்துள் குடையும், மடித்துக்கட்டிய வெள்ளை வேஷ்டியும், அடிக்கடி அறுந்து போகும் செருப்புமாகத் தோன்றி வாழ்ந்திருக்கும் இவர், எந்தவொரு காட்சியிலும் மிதமிஞ்சிய ஹீரோயிசத்தைக் காட்டவில்லை.
ஊர்ப்பாதிரியாராக வரும் நகைச்சுவை நடிகர் இன்னசெண்ட், மம்முட்டியின் நண்பராகவும் படகோட்டியாகவும் வரும் மனோஜ்.கே.ஜெயன் இவர்களும் தம் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
அழகப்பனின் ஒளிப்பதிவு, ஆற்றோரக் கிராமத்தின் கொள்ளை அழகையும், இரவின் காட்சிகளையும், நாளாந்தப் படகுப் பயணங்களையும் எனச் சிறப்பாகக் களஞ்சியப்படுத்துகின்றது.
தங்களின் வீட்டுக்கு வந்து தம் கைவினைப் பொருட்களைப் பார்க்கவரும் வெள்ளைக்காரரைப் பார்த்து வெள்ளாந்தியாக, வாயெல்லாம் பல்லாகச் சிரிப்பது, அம்பிலி (மம்முட்டி மகள்)க்கும், பவனுக்கும் ஆற்றில் நீச்சல் பழக்கிவிட்டுப் பின் தன் மகளிடமிருந்து தப்புவதற்காக ஒளிப்பது, இறுதிக்காட்சியில் பவன் குஜராஜ் போகும் போது திருநீறு தடவி வழியனுப்புவது, அவன் போவதைத் தாங்கமாட்டாது பவனை வழியனுப்ப வரமாட்டேன் என்று தயங்குவது என்று அந்தக் கிழவர் பாத்திரம் நன்றாகவே தன் பங்கைச் செய்திருக்கிறது.
பத்மப்பிரியா லட்சுமி என்ற பாத்திரத்தில் மம்முட்டியில் மனைவியாக வந்து, இயல்பானதொரு குடும்பத்தலைவியாகவும், எடுத்து வளர்க்கும் பவன் மேல் தன் அளவில்லா அன்பை மனசுக்குள்ளே புதைத்து அடக்கமாக அதை வெளிப்படுத்தவும் செய்கின்றார். பட்டியல் படப்பாணிக் குத்துப் பாட்டும் கிடையாது.
மம்முட்டியின் மகளாக அம்பிலி என்ற பாத்திரத்தில் வரும் ஷனுஷா என்ற சிறுமி ஓர் அழகான தேர்வு. குறிப்பாக, பவனைக் காணாது அழுதுகொண்டே தேடுவது, கோழி அடைக்கும் கூட்டில் அவனைக் கண்டு சிரித்துக் கொண்டே கட்டியணைப்பது.
இந்தப் படத்தின் பெரிய பலமே பவன் என்ற சிறுவன் பாத்திரம். பவனை மைய்யப்படுத்தியே முழுக்கதையும் நகர்வதும், காட்சிக்குக் காட்சி இவனின் தேவையும் இப்படத்தில் இருக்கிறது. இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் யாஷ்.
பேபி ஷாலினித்தனமான அதிமேதவிக் குழந்தைகளைப் முந்திய படங்களில் பார்த்துவிட்டு இச்சிறுவனின் நடிப்பைப் பார்க்கும் போது பவன் ஒருபடி உயர்கின்றான்.
மம்முட்டி போடும் படங்களில் குடும்பக் காட்சி வரும் போது தொலைந்த தன் குடும்பத்தை நினைத்து விக்கி விக்கி அழுவது, கேரளச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் எல்லோரிடமும் குஜராத்தியில் பேசிச்த் திரிவது, பின்னர் மலையாளக் குடும்ப வளர்ப்பில் வளரும்போது "மனசிலாயி" என்று அடிக்கடி சொல்லிக்கொள்வது என்று உதாரணங்களைக் காட்டிக்கொண்டே போகலாம்.
இறுதிக்காட்சியில் இடிபாடுகளுக்குள் நசிந்து கிடக்கும் சைக்கிள் பொம்மையைப் பார்த்து ஏங்கியவாறே, தொடர்ந்து அந்த உடைபாடுகளுக்குள்ளேயே தன் தாய் தந்தையரைத் தேடிப்போகும் சிறுவன் பவன் ஓரிடத்தில் நின்று, மம்முட்டி மகள் தனக்குத் தந்த மாலையைத் தன் பெற்றோருக்குக் காட்டும் பாவனையில் கொங்கிறீற் உடைபாடுகளுக்கு முன் தன்கையிரண்டில் மாலையை நீட்டிக் காட்டியவாறே அவன் விம்மலெடுக்கும் அழுகையுடன் பேசும் போது பார்க்கும் எமக்கு மனசு வலிக்கிறது, கண்ணீர் உடைப்பெடுக்கின்றது.
அரசு மருத்துவமனைக்குள் கிழித்த நார் போல் வெறுந்தரையில் அநாதையாய் சிறுவன் பவன் கிடப்பதும், மம்முட்டி தம்பதி பதபதைத்தவாறே தேடிக்கொண்டுவரும் காட்சிகள் கண்ணீரை வரவழைப்பவை.
காயல் கிராமத்தான்களின் குத்தனாடன் குதூகலப் பாடலாகட்டும், சிறுவர் ஆடிப்பாடும் டப்பு டப்பு பாடலாகட்டும், குஜராத்திப் பயணத்தில் கலக்கும் ஜுகுனூரே ஜுகுனூரே பாடலாகட்டும் இப்படத்துக்கு இன்னுமொரு பொருத்தத் தேர்வான மோகன் சித்தாராவை அடையாளம் காட்டுகின்றது. குறிப்பாக ஜுகுனூரே, ஜுகுனூரே பாடல் வரும் குஜராத்திக் களம் அக்காட்சியின் வலிமையை ஒருபடி மேல் நிறுத்தி கண்களை வேறுபக்கம் நகராமல் வைத்திருக்கிறது.அப்பாடற் காட்சியின் வலிமை நெஞ்சில் வலியாகப் பாரமேற்றுகின்றது. பாடல்களைக் கேட்க இங்கே அழுத்தவும்: காழ்ச்சா
சோகக் காட்சிகளில் வெறும் மெளத் ஆர்கனை வைத்து வழங்கியிருக்கும் பின்னணி இசை இன்னொரு சான்று.
போரோ, இயற்கை அநர்த்தங்களோ வரும் போது பாதிக்கப்பட்டவனைப் பார்த்து அனுதாபப்படவும் காப்பாற்றிவைத்திருக்கவும் கூட சில வெள்ளாந்தி உள்ளங்கள் இருக்கின்றன. ஆனால் கொடுமை என்னவென்றால் நாட்டு மக்களைக் காப்பாற்றவும் ஆதரவளிக்கவும்,அதே நேரத்தில் குறித்த சில சூழ்நிலைகளுக்கேற்ப எப்படித் தன் நெறிமுறைகளில் நெகிழ்வுத் தன்மையையும் இந்த அரசு இயந்திரம் கொண்டிருக்கவேண்டுமோ அதைப் பல இடங்களில் செய்யத்தவறி விடுகின்றது. இந்தப் படத்தின் மையக்கருவும் அதுதான். மம்முட்டி அரச இயந்திரத்தோடு அப்பாவியாக மல்லுகட்டும் போது பார்த்துக்கொண்டிருக்கும் எமக்குக் கோபம் வருகின்றது அரசு இயந்திரம் மீது, இயலாமை மேலோங்குகின்றது.
பவன் என்ற அநாதைக்கு வாழ்வளிக்க ஒரு குடும்பம் தயாராக இருந்தும், அரசின் இந்தச்சிவப்பு நாடாமுறை (Red tapism) இந்த அன்புப் பாலத்திற்குக் கத்தரி போடுகின்றது. மம்முட்டி மறுவாழ்வு முகாமில் வைத்து பவனுக்கு பிற்ஸ் வரும் என்று கரிசனையோடு சொல்லிவிட்டு, தன் விலாசத்தைக் கொடுத்து " பவனின் உறவுகள் கிடைக்காத பட்சத்தில் அவனை அனுப்புங்கள்" என்று இரந்து கேட்டுவிட்டு நம்பிக்கையோடு நகர்வதும்,பவன் கைகாட்டி வழியனுப்புவதும், சம காலத்தில் மம்முட்டியின் கோரிக்கை அந்தப் புனர்வாழ்வு முகாம் அரச ஊழியரால் குப்பைக் கூடைக்குள் போவதுமாக காழ்ச்சா, ஒரு வலிக்கும் ஹைக்கு.
ஜனவரி 26, 2001 குஜராத் பூகம்பத்தின் போது காணாமற் போனோர் எண்ணிக்கை 247 என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அறிக்கை சொல்கின்றது.
இவர்களில் இன்னும் எத்தனை பவன்கள் இருக்கிறார்களோ?????
18 comments:
பிரபா, உங்கள் சினிமா விமரிசனம் வருஷத்துக்கொரு படம் பார்க்கும் எனக்கு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
//சம காலத்தில் மம்முட்டியின் கோரிக்கை அந்த அரச ஊழியரால் குப்பைக் கூடைக்குள் போவதுமாக காழ்ச்சா, ஒரு வலிக்கும் ஹைக்கு.// !!!
நெஞ்சைத்தொடும் விமரிசனம். உங்கள் இவ்வாரப் பதிவுகள் அனைத்துமே நட்சத்திரப்பதிவுகள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. வாழ்த்துக்கள்.
//Kanags said...
நெஞ்சைத்தொடும் விமரிசனம். உங்கள் இவ்வாரப் பதிவுகள் அனைத்துமே நட்சத்திரப்பதிவுகள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. வாழ்த்துக்கள். //
தங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும், ஊக்குவிப்பிற்கும் என் நன்றிகள் சிறீ அண்ணா
சமீபத்தில் பார்த்த மலையாளப்படங்களில் மனதைத் தொட்ட படமிது பிரபா. உங்களின் இடுகையின்மூலம் படத்தை மீண்டும் பார்த்த உணர்வு. மிக விரிவாக எழுதி, படத்தை நீங்கள் எப்படி இரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்று காட்டியிருக்கிறீர்கள்.
என் நண்பர்கள் எல்லோரிடமும் கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைத்த படம்.
நன்றி பிரபா.
நல்லதொரு விமர்சன பதிவு பிரபா...........
திரைப்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.
"அடைக்கலம்" சிறுகதையை இப்போதுதான் உங்கள் தயவில் படித்தேன்.
"அடைக்கல(ம்)"த்துக்கும் "காழ்ச்சா" திரைப்படத்துக்கும் இடையே நிறையவே ஒன்றித்த மன இணக்கம் இருக்கிறது.
இரண்டுமே சரணாலயம் பற்றிய படைப்புகள்.........
மசாலா பட வரிசை தவிர்ந்த மலையாளத் திரைப்படங்கள்
உண்மையிலேயே யதார்த்தத்தை கொண்டதாக இருப்பதால்
காலம் கடந்தாலும் அவை நமக்குள் ஒரு பதிவாகவே
நம்மோடு வாழ்ந்து விடுகிறது.
மிக்க நன்றி!
//மதி கந்தசாமி (Mathy) said...
சமீபத்தில் பார்த்த மலையாளப்படங்களில் மனதைத் தொட்ட படமிது பிரபா. உங்களின் இடுகையின்மூலம் படத்தை மீண்டும் பார்த்த உணர்வு. மிக விரிவாக எழுதி, படத்தை நீங்கள் எப்படி இரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்று காட்டியிருக்கிறீர்கள். //
வணக்கம் மதி
இப்படத்தைப் பார்த்ததன் மூலம் நீங்களும் காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்திருப்பீர்கள்.
மிகவும் நன்றி
//AJeevan said...
நல்லதொரு விமர்சன பதிவு பிரபா...........
திரைப்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.
"அடைக்கலம்" சிறுகதையை இப்போதுதான் உங்கள் தயவில் படித்தேன்.
"அடைக்கல(ம்)"த்துக்கும் "காழ்ச்சா" திரைப்படத்துக்கும் இடையே நிறையவே ஒன்றித்த மன இணக்கம் இருக்கிறது.//
உண்மை அஜீவன்
அதனால் தான் அடைக்கலம் சிறுகதையை முன்னதாகவே இட்டு, இப்பதிவை படிப்பவர்களைத் தயார்படுத்தி வைத்தேன். தங்கள் கருத்துக்களுக்கு என் நன்றிகள்
Kannathil Mutthamittal and Kaitcha:-
What a difference, may be because, I have seen both the movies within a span of two days in Dubai Film Festival, that’s why it seems to me that both are similar subject, both deals with adoption, love for the kids, etc., .One is like a fairy tale, while the other looks at only the empty glass. I am talking about Katiza ( Malayalam ) and kannathil Muthamittal, ( Tamil) when I saw the Kannathil mutthamittal for the first time, I didn’t notice any cinematic story line, it left a nice feeling, good songs, nice story telling etc ., however after seeing Kaitza quite a few questions on Kannathil mutthamittal, there are far more co-incidence in the story, like the hero pens the story of the kid, and he becomes famous after that, the heroine falls for the story ( and the hero), and their visits to Ceylon, and come across the brother of the kid’s mother, …incidence after incidence is a co-incidence…the whole world is nice, even the hero’s sister. Where as in Katiza, the theme is same, but the hard realities, strikes the hero …there are far too many bad people in hero’s life, ( except the magistrate) , wherein it is just not possible for hero to keep the boy with his family . In real life, a person who is accustomed to Indian way of things, would have managed to retain the boy. It is just question of knocking the right door and right people. Any way, both the movie are wonderful for the emotions they bring out in the audience,
Sundar - Dubai
வணக்கம் சுந்தர்
தங்களின் கன்னத்தில் முத்தமிட்டால் - காழ்ச்சா ஓப்பிடுகையைத் தந்மைக்கு என் நன்றிகள். காழ்ச்சாவிலும் நாயகனைச் சுற்றிப் பல நல்லவர்கள் இருந்தார்கள் தானே?
இரு படங்களிலும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், எடுத்து கொண்ட கதையைக் கையாண்ட விதத்தில் நீங்கள் சொன்னதுபோல் வித்தியாசமான அனுபவங்கள்.
இது போன்ற ஒரு நீண்ட அருமையான விமரிசனத்தை இதற்கு முன் படித்ததில்லை. இதை படித்த மாத்திரத்தில் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.
இங்கே (துபாயில்)நண்பர்கள் சொல்வார்கள், தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு எடுக்க ஆகும் செலவில் மலயாளத்தில் ஒரு படமே எடுத்து விடலாம் என்று. நல்ல கதையுள்ள படங்கள் எடுப்பவர்கள் மலையாளிகள் என்பது இதன் மூலம் தெரிகிறது. இதுவரை கேரள மொழி படல் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை. வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி.
அன்புடன்
தம்பி
வணக்கம் தம்பி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
//இங்கே (துபாயில்)நண்பர்கள் சொல்வார்கள், தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு எடுக்க ஆகும் செலவில் மலயாளத்தில் ஒரு படமே எடுத்து விடலாம் என்று.//
உண்மை, ஒரு சில வர்த்தகப் படங்கள் தவிரப் பெரும்பாலான மலையாளப் படங்கள் இந்திய நாட்டின் இயற்கை வனப்பைத் தம் பாடல்களில் களஞ்சியப்படுத்துகின்றன. அவர்கள் ஒரு பாட்டுக்காக சுவிற்சர்லாந்து ஓடுவதில்லை.
நீங்கள் இருக்கும் நாட்டில் (துபாய்) நல்ல பிரதிகளில் மலையாளப் படங்கள் தாராளமாக எடுக்கலாம் தானே, பார்த்துவிடுங்கள் ஒரு கை:-)
பிரபா படத்தின் கதையேசொல்லி விட்டீர்கள். சில மாதங்களுக்கு முன்பு
இந்த படத்தைபார்த்த விட்டேன் மம்முட்டியின் நடிப்பு மிகப்பிரமாதமாக
ரசிக்கக்கூடியதாக இருந்தது.
நீங்கள் ஒரு சினிமா ரசனையுள்ளவர் என்பதால் நான் பார்த்து ரசித்த
சில படங்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
அண்மையில் பார்த்த samsara திபொத்தியா
the opium war CHINA
the soldier (அமெரிக்கா யுகோஸ்லாவாகியா கூட்டுதயாரிப்பு)
ஒரு ராணுவவீரன் ஒரு குழந்தையை காப்பாற்றி கொண்டு வந்து red crosse
கொண்டு வந்து சேர்க்கும் கதை மிக அருமையான கதை
welcom to sarajevu (பழைய படம்தான்)
the road to home (china )
Gong Li நடிப்புக்காக பார்க்காலாம் மிக அருமையான கதை
jeu do story (china Gong li நடிப்பு)
வறுமைகாரணமாக ஒரு ஏழைப் பெண்ணை வயதான பணக்காரணுக்கு
விற்கப்படுகிறாள் அங்கு வேலைக்காரணுக்கும் அவளுக்கும் காதல்
வயப்பட்டு ஒரு குழந்தையும் பிறக்கிறது பணக்காரன் இறந்து போக
மகன் எஜமானன் ஆகிறான் வேலைக்காரன்தான் தன் தந்தை என்பதை
அறியாத மகன் அவனை ஒரு கட்டத்தில் அடித்துகொலை செய்து விடுகிறான். மனதை நெகிழவைக்கும் மிகச்சிறப்பான திரைக்கதை.
the spring somer winter (china )
இதுவும் மிகவும் நல்ல படம் மனிதனது விதி எப்படி தொடர்கிறது
என்பதை ஒரு புத்த பிட்சுவிடமிருந்து தொடங்குகிறது.
SAMSARA இந்த திபெத்திய படம் துறவரத்திலிருந்து இல்லற வாழ்வுக்குள்
செல்லும் ஒரு துறவி பின் இல்லற வாழ்வு கசந்து வேறு சந்தர்ப்பவசத்தால் மீண்டும் துறவரத்துக்கு வருகிறார். நடு இரவில்
வீட்டை விட்டு வரும்வழியில் எதிரே அவரது மனைவி நிற்கிறாள்
அவள் கேட்கிறாள் உன்னைப்போல்தானே சித்தார்தனும் தன் குடும்பத்தை
விட்டு நடுஇரவில் ஓடுப்போனான் அவனது மனைவியை யாரவாது
நினைத்து பார்த்ததுண்டா. நமது கன்னங்களில் யாரோ அறைவது மாதிரியிருக்கும் இந்த வசனங்கள் மிக அருமையான படம்.
செல்வா
வணக்கம் செல்வா
தங்களின் சுவையான பதில் கண்டு மகிழ்கின்றேன். நம் ரசனை ஒத்த இன்னொருவரைச் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும். நல்ல தெரிவுகளை அளித்தமைக்கும் என் நன்றிகள், என் அடுத்த வேலையே அவற்றைப் பார்ப்பது தான்:-)
பிரபா!
நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்றால் ஏதோ இருக்கும்! எனவே நான் படத்தைப் பார்க்க முயர்ச்சிக்கிறேன்.மம்முட்டி படம் சோடை போகாது.
யோகன் பாரிஸ்
படத்தைப் பார்த்தபின் நெகிழ்ந்துபோவீர்கள் யோகன் அண்ணா
கீதா ராஜனுக்கு நன்றி சொல்லணும். என் பதிவைப் பார்த்தவர் இப்பதிவினை எனக்குக் காட்டியுள்ளார்.
ஒரு நல்ல படத்திற்கு எப்படி ஒருவர் நல்ல விமர்சனம் செய்ய முடியும் என்பதற்கு உங்கள் பதிவு ஒரு நல்ல உதாரணம். என்னைப் போலன்றி படத்தோடு ஒன்ற வைக்கும் உங்கள் பார்வைக்கு வாழ்த்துக்கள்.
வணக்கம் தருமி சார்
இப்பதிவுகளைப் பரிந்துரைத்த நண்பர் பாலராஜன் கீதாவுக்கும், வாசித்துக் கருத்தளித்த உங்களுக்கும் என் மேலான நன்றிகள்.
நல்லதொரு படைப்பு, மொழி கடந்து காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்பதற்கு இப்படமும் ஓர் சான்று. பல காட்சிகள் என் நினைவில் இப்போதும் வந்து அலைக்கழிக்கின்றன.
பிரபா,
இப்பத்தான் படத்தைப் பார்த்து முடிச்சுட்டுச் சுடச்சுட உங்கள் விமரிசனம் படித்தேன்.
ஒரே வார்த்தையில் சொல்லணுமுன்னா
'அருமை'
பின்னணி இசையில் 'மெய்ன் க்யா கரூ ராம், முஜே புட்டா மில்கயா' ன்ற பாட்டு வந்துகொண்டே இருந்ததைக்
கவனிச்சீங்களா? :-)))))
வணக்கம் துளசிம்மா
நல்ல மலையாளப்படங்களாகத் தேர்ந்தெடுத்துப் பார்க்கின்றீர்கள் போல.
காழ்ச்சா ஒரு காவியம், அதில் வரும் மோகன் சித்தாராவின் பின்னணி இசை இன்னும் உருக வைக்கும்.
காழ்ச்சா, தன்மத்ரா என்று பொக்கிஷங்களைத் தந்த பிளெஸ்ஸி அடுத்துக் கொடுத்த பலுங்கு படம் ஏமாற்றத்தையே கொடுத்தது.
தங்கள் வருகைக்கு நன்றி துளசிம்மா
Post a Comment