தமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் "செம்மீன்".
தகழி சிவசங்கரம்பிள்ளை, மலையாள இலக்கிய உலகில் நல்ல பல படைப்புக்களை அளித்தவர், 1929 இல் சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு இவர் அறிமுகமாகிப் பின்னர் நாவல்கள் பலவற்றையும் அளித்தவர். அதில் ஒன்று தான் செம்மீன் என்ற 1956 ஆம் ஆண்டில் இவர் எழுதிய நாவல். இந்நாவல் பின்னர் ராமு கரியத் இன் இயக்கத்தில் 1965 இல் வெளிவந்தது. ஜனாதிபதியின் தங்கப்பதக்கததைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்ற சிறப்பையும் இப்படம் தட்டிக்கொண்டது.
கதை இதுதான், செம்மங்குஞ்சு என்ற எழை முதியவனுக்கு உள்ள ஆசை சொந்தமாக ஒரு படகும் வலையும் வைத்திருக்க வேண்டும் என்று. அவனின் அந்த ஆசைக்கு உதவுகிறான் பரிக்குட்டி என்ற இளம் முஸ்லிம் வியாபாரி, ஆனால் செம்மங்குஞ்சு பிடிக்கும் மீன்களைத் தனக்கே விற்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு, செம்மங்குஞ்சுவும் அதற்கு உடன்படுகின்றான்.
இதற்கிடையில் செம்மங்குஞ்சுவின் மகள் கருத்தம்மாவிற்கும் பரிக்குட்டி என்ற அந்த இளைஞனுக்கும் காதல் வருகின்றது. கருத்தம்மாவின் தாய்க்கு இது தெரிந்தும் தமது வாழ்க்கைச் சூழல் அதற்கு இடம் கொடுக்காது என்று எச்சரிக்கின்றாள். அதுபோலவே நிகழ்வுகளும் நடக்கின்றன. செம்மங்குஞ்சு தான் உறுதியளித்தது போல் நடவாமல் தான் பிடித்த மீன்களை பரிக்குட்டிக்கு விற்காமல் வேறு ஆட்களுக்கு விற்கின்றான். பரிக்குட்டி இதனால் நஷ்டமடைகின்றான். பரிக்குட்டி கருத்தம்மா காதல் பல சோதனைகளைச் சந்திக்கின்றது. செம்மங்குஞ்சு ஊருக்குப் புதிய வருகையான அனாதை பழனியை கருத்தம்மாவிற்கு மணம் முடித்து வைக்கிறார்கள். தன் காதலியை இழந்த துயரமும், வியாபாரத்தில் பணமுடையும் கொள்ளும் பரிக்குட்டி நலிந்து போகின்றான்.
கருத்தம்மாவின் தாய் நோயில் விழுந்து மரணத்தைத் தழுவுகின்றாள். தனிக்குடித்தனம் போன கருத்தம்மா தன் கணவனோடே இருந்து நல்ல மனைவியாகப் பணிவிடை செய்கின்றாள். இதனால் தன் பிறந்தகத்தை விட்டு நிரந்தரமாக விலகி வாழ வேண்டிய நிலை அவளுக்கு.
இருந்தாலும் பரிக்குட்டி-கருத்தம்மாவின் காதலைப் பற்றி மீண்டும் பேசிக் கருத்தம்மாவின் கணவன் பழனியை வம்பிழுக்கின்றது அந்த மீனவ சமுதாயம். ஊர் என்ன சொன்னாலும் தன் மனைவி மீது சந்தேகம் கொள்ளாது அன்பாக இருக்கும் பழனி ஒரு சந்தர்ப்பத்தில் நிலை தவறி கருத்தம்மா மீது தன் சந்தேகப் பார்வையைக் கொள்கின்றான். தன் காதலையும் பிறந்தகத்தையும் இழந்து தன் கணவனே எதிர்காலம் என்றிருந்த கருத்தம்மா இதனால் துவண்டு விடுகின்றாள்.
நீண்ட நாளின் பின் வந்த எதிர்பாராத பரிக்குட்டி கருத்தம்மா சந்திப்பு மீண்டும் அவர்களின் காதலைப் புதுப்பித்து, அந்தச் சந்தோஷ தருணம் அவர்களின் மரணமாக விடைகொடுக்கின்றது. இறப்பில் ஒன்று சேர்கிறார்கள் அவர்கள். அதே தருணம் கடலுக்குச் சென்ற பழனி சுறா மீனுக்குத் தன்னைக் காவு கொடுக்கின்றான்.
பரிக்குட்டியாக மது (தர்மதுரை படத்தில் ரஜனியின் தந்தையாக வந்தவர்), பழனியாகச் சத்யன் (மிகவும் பிரபலமான நடிகர் விபத்தில் இறந்துவிட்டார்), கருத்தம்மாவாக ஷீலா ( சந்திரமுகி பட வில்லி.. ஹிம் எப்படியிருந்த ஷீலா) என்று தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் குழு. இப்படம் விருதுக்குப் பொருத்தமானது என்பதோடு மட்டும் நின்று விடாது மலையாளம் கடந்து மற்றய மொழி ரசிகர்களையும் கவர்ந்ததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.முக்கியமாக ஒரு நல்ல கதையும் அதன் இயல்பு கெடாமல் எடுக்கத் தெரிந்த தொழில்நுட்பக் குழுவும் இதன் முதற்படி. தகுந்த நடிகர் தேர்வு அடுத்தது.
காதலின் வீழ்ந்து கருத்தமாவைத் தேடுவதாகட்டும், இழந்த காதலை நினைத்து மருகுவதாகட்டும், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சஞ்சலப்படுவதாகட்டும் பரிக்குட்டி பாத்திரமான மது இந்தப் பாத்திரப்படைப்பை இயல்பாகவே செய்திருக்கிறார்.
ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து தன் எல்லைக்குட்பட்ட விதத்தில் காதல் பருவத்தில் நடப்பதும், தன் ஆசைகளை அடகு வைத்துவிட்டு முன்பின் முகம் தெரியாதவனைக்கரம் பிடித்து அவன் மனம் கோணாமல் நடப்பதும், ஒரு கட்டததில் தான் இவ்வளவு தியாகம் செய்தும் கணவன் புரிந்துகொள்ளவில்லையே என்று புழுங்கி " நான் இன்னும் பரிக்குட்டியைத் தான் நேசிக்கிறேன் " என்று ஆற்றாமையோடு வெடிப்பதும் என்று ஷீலாவும் தன் பங்கை விடவில்லை.
கடலோரக்கிராமியப் பின்னணியில் யதார்த்தமான கதைகளத்திற்கு மார்க்கஸ் பாட்லி, யூ.ராஜகோபாலின் ஒளிப்பதிவும் துணைபுரிந்திருக்கிறது.
"கடலினக்கரை போனோரே", "மானச மயிலே வரு" போன்ற பாடல்காட்சிகளில் சூரியன் விழுங்கிய மாலைக் காட்சியும், நிலாவொளி பரப்பும் பின்னிரவுக் காட்சிகளும் கூடைகளில் நிறைந்திருக்கும் மீன் குவியல்களும், கடற் குருமன் மேடுகளும் நல்ல எடுத்துக்காட்டு.
ஒரு நல்ல நாவலை எடுக்கும் போது எழுத்தில் வடிக்கும் நுட்பமான மனித உணர்வுகளையெல்லாம் காட்சியாகக்காட்டமுடியாது என்பதற்கு இப்படமும் ஒரு சான்று. தகழி சிவசங்கர பிள்ளையின் நாவலைப் படிக்காவிட்டாலும் எழுத்தில் பலமடங்கு உணர்வு பூர்வமான நிகழ்வுகள் இருந்திருக்கும் என்பதைப் படம் பார்க்கும் போது உணரமுடிகின்றது. சில காட்சிகள் அதன் யதார்த்த நிலையை இழந்து எனோ தானோ என்று வரும் போது தான் இப்படி எண்ண முடிகின்றது.
செம்மீன் படத்தின் பெரிய பலம் அல்லது அசுரபலம் இசையமைப்பு. சலீல் சவுத்ரியின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் வெகு நேர்த்தி. இப்படத்தை நான் பார்த்து மூன்று மாதங்களுக்கு மேல், ஆனாலும் "மானச மயிலே வரு" என்ற பாடல் இன்னும் என் காதை விட்டுப் போகமாட்டேன் என்கின்றது.
சங்கராபரணம் போல செம்மீன் திரைப்படமும் திரும்பத் திரும்பப் பார்க்கும் ரசிக வலைக்குள் விழுந்ததிற்கு வயலார் ராமவர்மாவின் பாடல் வரிகளில் " கடலினக்கரை போனோரே" என்ற பாடலும் ஒரு காரணம் என்று நினைக்கின்றேன். இன்று தனியார் தொலைக்காட்சிகளில் நல்ல பாடல் ஒன்றைத் திரும்பத் திரும்பப் போட்டுச் சாவடிப்பதும், நாம் விரும்பியபோது வீசீடி, டீவீடியிலும் பார்க்கமுடியாத நிலை அன்றைய காலத்து ரசிகருக்கு இல்லாத நிலையில் அவன் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கே சென்று பாடலைக் கேட்பதற்காகவே படம் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
யாழ்ப்பாணத்திலும் இப்படம் திரையிடப்பட்டு வெற்றி கண்டது.
நடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் " கடலினக்கரை போனோரே" என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள் அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர் கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.
அடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் "கடலினக்கரை போனோரே.... காணாப் பொன்னினு போனோரே..."
செம்மீனையும், கடற்புரத்தையும், "கடலினக்கரை போனோரே" பாடலைப் பற்றியும் எழுதிக்கொண்டிருக்கும் போது விடமுடியாத இன்னொரு நினைவும் ஒண்டும் இருக்குது. தொண்ணூறாம் ஆண்டுகளின் ஆரம்பகாலத்தில நமது தமிழீழ இசைக்கலைஞர்களின் பாடற்தொகுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த காலமது. இசையருவி எண்ட ஒலிப்பதிவுக்கூடமும் கஸ்தூரியார் றேட்டில நிறுவப்பட்டு பாடல் ஒலிப்பதிவுகளும் நடந்தன.
அப்பிடி வந்த ஒரு பாடற் தொகுப்புத்தான் ' நெய்தல்".
இசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்" என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள்,
இண்டைக்கும் நினைவிருக்கு தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து "நெய்தல்" கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் "நெய்தல்" பாடல்கள் தான் இடம்பிடித்தன.
என்னைப் பொறுத்தவரை " கடலினக்கரை போனோரே" என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய " கடலலையே கொஞ்சம் நில்லு" பாடலையும் சாந்தன் பாடிய "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்" பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.
Friday, March 31, 2006
Wednesday, March 15, 2006
சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்
நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமாபரடைசோ” (Cinema Paradiso).
இத்தாலி நாட்டுத் திரைப்படமான இப்படம் இத்தாலிய மொழியில் Nuovo Cinema Paradiso ஆக 1989 ஆம் ஆண்டில் வெளியானது. இதன் இயக்குனர் Giuseppe Tornatore. 1990 ஆம் ஆண்டு சிறந்த வேற்றுமொழியில் வெளிவந்த படமாக ஒஸ்கார் விருதும், 11 ஒஸ்கார் விருதுப் பரிந்துரைகளுக்கும் அதே ஆண்டு தெரிவானது.தவிர ஜப்பானிய அக்கடமி விருது, கேன்ஸ் திரைப்படவிருது. ஐரோப்பியத்திரைப்பட விருது உட்படப் பல தொகை விருதுகளை அள்ளிக் குவித்தது இப்படம். பொதுவாகவே இப்படியான விருதை அள்ளிக் குவிக்கும் படங்கள் முழுமையான ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெறுவது கடினம். ஆனால் இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இன்னொருமுறை பார்க்கத்தூண்டுவதும் அப்படி மீண்டும் பார்க்கும் போதும் முதல் முறை பார்க்கும் போது கிடைக்கும் அதே அனுபவத்தை ஏற்படுத்துவதும் தான் இப்பட இயக்குனருக்குக் கிடைக்கும் பெரிய விருது.
கதை இதுதான், ஒரு பிரபல சினிமா இயக்குனராக ரோம் நகரில் இருக்கும் சல்வடோர் (Salvatore) தான் முப்பது வருடங்களுக்கு முன் தான் வாழ்ந்த இத்தாலிக்கிராமமான சிசிலி(Sicily)யில் சிறு பையனாக இருந்தபோது தன் நண்பனாக வழிகாட்டியாக இருந்தவரின் மரணச் செய்தி கிடைக்கின்றது. முப்பது வருடமாகத் தன் சொந்தக்கிராமத்தையே எட்டிப்பார்க்காத அவர் இந்த மரணச்சடங்கிற்காகச் செல்ல முடிவெடுக்கின்றார். தொடர்ந்துவரும் அவரின் நினைவுச் சுழல்கள் முப்பது வருடங்கள் பின்னோக்கியதாகப் பயணிகின்றது.
இத்தாலிய நாட்டின் நவீனம் புகாத ஒருகிராமம் அது. அங்கே உள்ள "சினிமா பரடைசோ" என்ற ஒரேயொரு தியேட்டர் தான் அவ்வூர் மக்களுக்கு இருக்கும் ஒரே களியாட்டக்களம். ஆடலும் பாடலும் சேட்டைகளும் சில்மிஷங்களுமாகப் படங்களைப் பார்த்து இரசிப்பதற்கும், தங்கள் கனவு நாயகர்கள் திரையில் தோன்றும் போது ஆரவாரிப்பதுக்குமான நிலைக்களன் தான் அந்தத் தியேட்டர்.
அந்த ஊரில் தன் தந்தையைப் போரில் பறிகொடுத்துவிட்டு இளம் தாயுடனும் தன் தங்கையுடனும் இருப்பவன் டோட்டொ என்ற சிறுவன். தன்னுடைய சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களுடன் வளர்கிறான் டோட்டோ. தாய்க்குத் தெரியாமல் கள்ளமாகத் தியேட்டரில் படம் பார்ப்பதும், திருட்டு தம் அடிப்பதும், ஏன் அந்தத் தியேட்டரே அவன் உலகமாகவும் எண்ணிக்கொள்கின்றான். சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டரில் படம் போடுபவராக (projectionist) இருப்பவர் அல்பிரடோ என்ற முதியவர்.
டோட்டோ தன் குறும்புத்தனங்களையும் படம் பார்க்கும் அவாவயும் தியேட்டருக்குள் மட்டும் நிறுத்திக்கொள்வதில்லை. நேராகப் படம் போடும் அறைக்குள் நுளைவதும் அல்பிரடோவின் ஏச்சுக்களை வாங்கிகட்டுவதும், படக்காட்சி பொருந்திய துண்டுகளை அடம்பிடித்து வாங்குவதும் அவன் வழக்கம். தன் பிள்ளை ஒரேயடியாக இப்படியாகத் தியேட்டரில் இருப்பதற்கு அல்பிரடோ தான் காரணம் என்று நினைத்து அவரைக் காணும் போது தன் வயிற்றெரிச்சலைக் கொட்டுவாள் டோட்டோவின் தாய்.
இதனால் மனவருத்தமடையும் அல்பிரடோ, டோட்டோ தன் தியேட்டருக்கு வரும் போதெல்லாம் அவனைத் துரத்துவார். ஆனால் அவனோ இவருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவது போலவும், பரீட்சையில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி உதவியும் ( அல்பிரடோ தான் வயதாகியும் படிக்க ஆசைப்படுபவர்) தான் நினைப்பதைச் சாதித்துவிடுவான்.
இப்படித் தியேட்டரே தன் உலகமாக இருக்கும் டோட்டோ ஒருமுறை தியேட்டரில் ஏற்படும் தீவிபத்தில் அல்பிரடோவை காப்பற்றுகின்றான். அந்தவிபத்தில் இருந்து அல்பிரடோ இயங்கமுடியாது போனதும் டோட்டோ படம் போடுபவராக (projectionist)த் தேர்ந்தெடுக்கப்படுகின்றான். அல்பிரடோவே இவனின் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் மாறுகின்றார். மிகச்சிறுவயதிலேயே ஆக அமரும் டோட்டோ தன் வாலிபப் பருவத்தைத் தொட்டதும் ஒரு இளம் பெண்ணின் காதலில் வீழ்கின்றான். அந்தக் காதலிலிலும் தடைகள் வருகின்றன. கடமையா? காதலா? என்ற நிலை வரும் போது அவனின் வழிகாட்டி அல்பிரடோ சொல்கின்றார். " நீ இந்த ஊரில் இனி இருக்ககூடாது, திரும்பிப்பார்க்காது முன்னேறிக்கொண்டே போ".
டோட்டோ ரோம் நகருக்குப் பயணமாகின்றான். சல்வடோர் என்ற பிரபல இயக்குனராக மாறுகின்றான். முப்பது வருடங்கள் கழித்துத் தன் வழிகாட்டி அல்பிரடோவின் மரணச்சடங்கிற்கு வருகின்றான்.
சிறுவன் டோட்டோவின் குறும்புச் செயல்கள், அவன் இளைஞனாகும் போது வரும் காதல் உணர்வுகள், முப்பது வருடங்களுக்குப் பின் தன் கிராமத்திற்கு வரும் போது எழும் ஏக்கங்கள் எல்லாமே நம் ஈழத்து, இந்திய சமூகத்திலும் பொருந்திவரக்கூடிய நிகழ்வுகள். சிறுவனாக Salvator Cascio நடித்திருக்கும் தன் பங்கைத் திறம்படவே செய்திருக்கின்றான்.
தன் கிராமத்தின் அடையாளமாக இருந்த சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டர் காலமாற்றத்தில் உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு வெம்புவதும், தன் பழைய காதலியைத் தேடியலைவதும், முன்பு கமராவில் எடுத்த அவளின் காட்சிகளைத் திரும்பப்போட்டுப் பார்ப்பதுமாக இருப்பதுமாக நிறைவான ஒரு பாத்திரத்தில் Jacques Perrin நடித்திருக்கிறார்.
அந்த ஊரில் வரும் முக்கிய கதைமாந்தர்கள், குறிப்பாக முத்தக் காட்சிகளையே தணிக்கை செய்து படம் பார்க்கவைக்கும் பாதிரியார், ஊர்ச் சதுக்கத்தில் நின்று ஆட்களை விரட்டும் பைத்தியக்காரன், படம் போடுபவராக (projectionist) வந்து நிறைவான நடிப்பை வழங்கியிருக்கும் Philippe Noiret என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
டோட்டோவின் வழிகாட்டியாக வரும் அல்பிரடோ சொல்லும் ஒரு பொய்யால் தான் இப்படி முன்னேறியிருக்கிறேன் என்று முப்பது வருடங்கள் கழித்து அவனுக்குத் தெரியவரும் போது எமக்கும் அது சுவாரிஸ்யமான எதிர்பாராத காட்சியாக இருக்கின்றது. அது என்ன என்பதைப் படத்தைப் பார்க்காதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி நான் சொல்லாத நல்ல நிறைவான காட்சிகள் ஏராளம்.
அந்த ஊரில் வரும் முக்கிய கதைமாந்தர்கள், குறிப்பாக முத்தக் காட்சிகளையே தணிக்கை செய்து படம் பார்க்கவைக்கும் பாதிரியார், ஊர்ச் சதுக்கத்தில் நின்று ஆட்களை விரட்டும் பைத்தியக்காரன், படம் போடுபவராக (projectionist) வந்து நிறைவான நடிப்பை வழங்கியிருக்கும் Philippe Noiret என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
டோட்டோவின் வழிகாட்டியாக வரும் அல்பிரடோ சொல்லும் ஒரு பொய்யால் தான் இப்படி முன்னேறியிருக்கிறேன் என்று முப்பது வருடங்கள் கழித்து அவனுக்குத் தெரியவரும் போது எமக்கும் அது சுவாரிஸ்யமான எதிர்பாராத காட்சியாக இருக்கின்றது. அது என்ன என்பதைப் படத்தைப் பார்க்காதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி நான் சொல்லாத நல்ல நிறைவான காட்சிகள் ஏராளம்.
எல்லா மனிதருமே சராசரி வாழ்வியலோடு ஓடிக்கொண்டு போகும் போது தம்வாழ்க்கைப் பாதையில் மாறுபட்ட அனுபவங்களோ அல்லது நிகழ்வுகளோ வந்து சந்திக்கின்றன. நின்று நிதானித்து அந்த அனுபவங்களை உள்வாங்கி நடப்பவர்கள் தம் சராசரி வாழ்விலிருந்து விலகி முன்னேற்றப்பாதையில் செல்லத்தலைப்படுகின்றார்கள், அதோடு தமக்குரிய வழிகாட்டியையும் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றார்கள். முன்னேறிய மனிதர்கள் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. இப்படத்தைப் பார்க்கும் போதும் அதே உணர்வுதான் எனக்கு எற்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் தான் எமது நீண்ட வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பாவீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம்.
படம் பார்க்கிறதில விண்ணர் விஷ்ணு அண்ணா தான். அப்போது அவருக்கு பதினேழு பதினெட்டுவயசு அப்பிடித்தான் இருக்கும், கமல் ரஜனி காலத்து மனுஷனுக்கு மாறாக எம்.ஜி.ஆர் படங்கள் எண்டால் தான் உயிர். டீவி, வீடியோ பெரிசா வராத காலம் அது. அவர் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் படங்களைப் பார்த்துவிட்டு வரும் வரைக்கும் அவையின்ர முற்றத்தில நான் நிற்பன். அவரின்ர ஏஷியாச்சைக்கிளைக் கண்டதும் தான் தாமதம் துள்ளிக்குதித்து சைக்கிள் முன் பாறிலை ஏறி "படக் கதை சொல்லுங்கோ விஷ்ணு அண்ணா" எண்டு ஆவலா நான் அவரின்ர வாயைப் பார்ப்பேன். ரவுணில இருந்து சைக்கிளில வந்த களைப்பைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு படக்கதை சொல்ல ஆரம்பிப்பார்.
என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பாவீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம்.
படம் பார்க்கிறதில விண்ணர் விஷ்ணு அண்ணா தான். அப்போது அவருக்கு பதினேழு பதினெட்டுவயசு அப்பிடித்தான் இருக்கும், கமல் ரஜனி காலத்து மனுஷனுக்கு மாறாக எம்.ஜி.ஆர் படங்கள் எண்டால் தான் உயிர். டீவி, வீடியோ பெரிசா வராத காலம் அது. அவர் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் படங்களைப் பார்த்துவிட்டு வரும் வரைக்கும் அவையின்ர முற்றத்தில நான் நிற்பன். அவரின்ர ஏஷியாச்சைக்கிளைக் கண்டதும் தான் தாமதம் துள்ளிக்குதித்து சைக்கிள் முன் பாறிலை ஏறி "படக் கதை சொல்லுங்கோ விஷ்ணு அண்ணா" எண்டு ஆவலா நான் அவரின்ர வாயைப் பார்ப்பேன். ரவுணில இருந்து சைக்கிளில வந்த களைப்பைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு படக்கதை சொல்ல ஆரம்பிப்பார்.
தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றால் எழுத்தோட்டத்திற்கு (titles) முதல் வரும் தேவர் பிலிம்ஸ் யானையின் பிளிறலையும் செய்து விட்டு " டண்டான் டாங், டண்டான் டாங்" என்று சங்கர் கணேஷின்ர இசையமைப்பையும் செய்துகொண்டே கதை சொல்ல ஆரம்பிப்பார். நான் ஆவெண்டு வாயைப் பிளந்த வண்ணம் அவர் சொல்லும் கதையக்கேட்டுக்கொண்டே இருப்பன்.
அவர் இன்னொரு விளையாட்டையும் செய்வார், இணுவில் காலிங்கன் தியேட்டர் பக்கம் போய் அறுந்து போய் எறிப்பட்டிருக்கும் படச்சுருள்களை எடுதுது வந்து கையால இயக்கக்கூடிய ஒரு மரப்பலகை மெஷினைச் செய்து பூதக்கண்ணாடி பொருத்தி அந்தப் படச்சுருளை இணைத்து விடுவார். எங்கள மாதிரிச் சின்னப் பெடியளைக் கொண்டு போய் ஒரு அறைக்குள் கொண்டுபோய் இருத்திவிட்டு அறைச்சுவரில வெள்ளை வேட்டியைக் கட்டிவிட்டு அறையை இருட்டாக்கி விடுவார். பிறகு அந்த மெஷினுக்கு ஒராள் டோச்லைற் அடிக்க இவர் லாவகமா அந்தப் படச்சுருள் வளையத்தைச் சுற்றுவார். சுவரில இருக்கிற வெள்ளை வேட்டியில படச்சுருள் ஓடும். சப்பாணி கட்டிக்கொண்டு திரையைப் பார்க்கும் நாங்கள் " உங்க பாரடா சிவாஜி கதைக்கிறான், ஆனா வடிவாக் கேட்குதில்லை" என்போம். அந்தச் சத்தம் எமது யாழ்ப்பாணத்துத் தோமஸ் அல்வா எடிசன் விஷ்ணு அண்ணரின் அந்தச் சினிமா மெஷின் எழுப்பும் ஈனஒலி எண்டது இப்பதான் விளங்குது.
ரமணா அண்ணாவும் சளைத்தவரில்லை. சினிமாப் போட்டி வைக்கிறேன் பேர்வழி எண்டு, ஒரு கொப்பியில சினிமாப் படம் ஒண்டின்ர முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதிவிட்டு இடையில இருக்கிற எழுத்துக்களின்ர எண்ணிக்கைக்கு ஏற்பப் புள்ளட்டி போடுவார். நாங்கள் என்ன படம் அது எண்டு கண்டுபிடிக்கவேணும். ( உதாரணம்: அன்பே சிவம் எண்டால் அXX XXம்). கனகாலமாக் அவர் எழுதி நாங்கள் கண்டுபிடிக்காத படம் " புதுச்செருப்புக் கடிக்கும்".
நீயா படம் வின்ஸர் தியேட்டரில முந்தி ஓடேக்க நான், சித்தியாக்களோட போனனான். இந்தப்படம் " வயது வந்தவர்களுக்கு மட்டும்" (பாம்புக் காட்சி உள்ளதால்) நான் சின்னப் பெடியன் எண்டு உள்ள போகவிடயில்ல. பிறகு ஒரு மாதிரி படம் பார்த்தோம், இல்லாவிட்டால் நான் தனியே வெளியே நிண்டிருக்க வேணும்.
தொண்ணூறாம் ஆண்டு நான் ஓ எல் படிக்கேக்க கூட்டளிமார் குமரேந்திரனும், ராஜசேகரும் களவா பள்ளிக்கூடக் கிறவுண்ட் மதில் பாய்ஞ்சு போய் மனோகராத்தியேட்டரில "அக்னி நட்சத்திரம்" படம் பார்த்துவிட்டு வந்து கிறவுண்டுக்குள்ள நிண்டு அந்தப் படத்தில நீச்சல் உடையில வந்த நிரோஷாவைப் பற்றிக் கதைச்சது ஞாபகம் இருக்கு.
பிறகு ஓ எல் எக்ஸாம் எடுத்துவிட்டு ராஜாத் தியேட்டரில " ராஜாதி ராஜா"வும், லிடோவில " பூப்ப்பூவாப் பூத்திருக்கு" படமும், வெலிங்டனில "வருஷம் 16 " படமும் பார்த்து எங்கட ஆசையை நிறைவேற்றிக்கொண்டோம், பரமகதி அடைந்தோம்.
வருஷம் 16 படம் இறுதிக்காட்சியில நாயகி குஷ்பு சாவதைக் கண்டு, கூடவே வந்த நண்பன் காந்தன் மூட்டைப் பூச்சியையும் பொருட்படுத்தாது அதிர்ச்சியில் கதிரையை விட்டு எழும்பவேயில்லை. பின்னால இருந்த தாய்க்குலங்கள் விசும்பி அழுவதும் கேட்டது.
ராஜாதி ராஜா படம் பார்த்து விட்டு வரேக்க மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி கோட்டைப்பக்கம் பங்கர் வெட்ட இளைஞர்கள் அப்படியே அழைத்துபோனார்கள்.
வருஷம் 16 படத்தைத் திரும்பவும் பார்ப்பமெண்டால் அடுத்த படமாக சம்சாரம் அது மின்சாரம் போடுவதற்கு வெலிங்டன் தியேட்டரில் நோட்டீஸ் ஒட்டிகொண்டிருந்தினம். ஆனால் போர் தொடங்கி மின்சாரம் போய், வெலிங்டன் தியேட்டரில "சம்சாரம் அது மின்சாரம்" ஒரு காட்சி கூட ஓடவில்லை.
ராஜாதி ராஜா படம் பார்த்து விட்டு வரேக்க மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி கோட்டைப்பக்கம் பங்கர் வெட்ட இளைஞர்கள் அப்படியே அழைத்துபோனார்கள்.
வருஷம் 16 படத்தைத் திரும்பவும் பார்ப்பமெண்டால் அடுத்த படமாக சம்சாரம் அது மின்சாரம் போடுவதற்கு வெலிங்டன் தியேட்டரில் நோட்டீஸ் ஒட்டிகொண்டிருந்தினம். ஆனால் போர் தொடங்கி மின்சாரம் போய், வெலிங்டன் தியேட்டரில "சம்சாரம் அது மின்சாரம்" ஒரு காட்சி கூட ஓடவில்லை.
யுத்தகாலங்களில மின்சாரமும் இல்லை. யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டரைத் திருத்தி விடுதலைப் புலிகள் ஜெனறேற்றர் மூலம் போர் சம்பந்தப்பட்ட ஆங்கிலப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து போட்டார்கள். என்.ஜி ஆரின் படங்களும் வருவதுண்டு. அப்பிடி " மதுரை வீரன்" என்ற படத்தைப் போய்ப் பார்த்தேன்.
யாழ்ப்பாணத்தின் அழகான பெரிய தியேட்டர் வின்ஸர் தியேட்டர் 87 இல இந்தியன் ஆமி வந்த போதே இயக்கத்தை நிறுத்தியிருந்தது. கடைசியாக " இது நம்ம ஆளு" படம் அதில வந்தது.
போனவருஷம் ஊருக்குப் போனபோது பார்த்தேன்.
சிறீதர் தியேட்டர் ஈபிடீபி கட்சியின் அலுவலகமாக மண்மூட்டை அரணுடன் இருக்குது. முந்தி அகதி முகாமா இருந்த காலிங்கன் தியேட்டரும், களஞ்சியமாக இருந்த மனோகராத் தியேட்டரும் வெள்ளையடிக்கப்பட்டுப் படம் போடுகினம்(புகைப்படம் பக்கத்தில்). ராஜாத்தியேட்டரும் மீண்டும் உயிர்த்திருக்கிறது. வின்ஸர் தியேட்டர் இப்ப கூட்டுறவுப் பண்டகசாலைக் களஞ்சியமாக இருக்குது. சாந்தித்தியேட்டர் இப்ப நாதன்ஸ் தியேட்டரா மாறியிருக்குது. வெலிங்டன் தியேட்டர் வெல்டிங் பட்டறை போல உருக்குலைந்து அதியுயர் இராணுவக் கட்டுப்பாட்டு முள்வேலிக்குள் சிறைப்பட்டிருக்கின்றது. லிடோ சினிமா தான் தியேட்டராகவே இருந்ததில்லை என்பதுபோல அமைதியாக நிற்கின்றது.ராணித்தியேட்டர் இப்ப சைக்கிள் பார்க்.
சிறீதர் தியேட்டர் ஈபிடீபி கட்சியின் அலுவலகமாக மண்மூட்டை அரணுடன் இருக்குது. முந்தி அகதி முகாமா இருந்த காலிங்கன் தியேட்டரும், களஞ்சியமாக இருந்த மனோகராத் தியேட்டரும் வெள்ளையடிக்கப்பட்டுப் படம் போடுகினம்(புகைப்படம் பக்கத்தில்). ராஜாத்தியேட்டரும் மீண்டும் உயிர்த்திருக்கிறது. வின்ஸர் தியேட்டர் இப்ப கூட்டுறவுப் பண்டகசாலைக் களஞ்சியமாக இருக்குது. சாந்தித்தியேட்டர் இப்ப நாதன்ஸ் தியேட்டரா மாறியிருக்குது. வெலிங்டன் தியேட்டர் வெல்டிங் பட்டறை போல உருக்குலைந்து அதியுயர் இராணுவக் கட்டுப்பாட்டு முள்வேலிக்குள் சிறைப்பட்டிருக்கின்றது. லிடோ சினிமா தான் தியேட்டராகவே இருந்ததில்லை என்பதுபோல அமைதியாக நிற்கின்றது.ராணித்தியேட்டர் இப்ப சைக்கிள் பார்க்.
ரீகல் தியேட்டர் இருபது வருஷத்துக்கு முந்திப் போட்ட இங்கிலீஸ் படத்தின்ர சாயம் போன போஸ்டரோட, புதர் மண்டிய காட்டுக்குள்ள இருக்குது.