உயர் படிப்புக்காக என்னோடு கூட வந்த நான்கு சிங்கள மாணவர்களும் தங்கள் மொழியில் தமக்குள் மட்டும் பேசிச் சிரிக்க ஆரம்பித்த கணமே நான் மெல்ல மெல்ல தனிமைச் சிறைக்கு இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன் பின்னர் வந்த நாட்டில் வகுப்பறையில் வெள்ளைக்கார ஆசிரியருக்கு முன்னால் சக சிங்கள மாணவன் ( என்னுடன் ஒரே விமானத்தில் கூட வந்தவன் தான்) என்னைக் காட்டி "இவர்கள் பயங்கரவாதிகள்" என்று அடையாளப்படுத்திய கதையெல்லாம் முன்னர் எழுதியிருக்கிறேன். என்னுடைய புலப் பெயர்வு வாழ்வில் முதல் பத்து ஆண்டுகள் கிட்டிய அந்தச் சவால் நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தை மீளவும் நினைத்துப் பார்க்க வைத்தது நேற்று வாசித்து முடித்த "எழுதித் தீராப் பக்கங்கள்".
எழுத்தாளர் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) அவர்கள் எண்பதுகளின் முற்பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்குக் குடி பெயர்ந்த பின், பாரீஸ் நகரத்தில் தன்னுடைய புலம்பெயர் வாழ்வியலின் பழைய நாட்குறிப்புகளாகத் தான் இந்த "எழுதித் தீராப் பக்கங்கள்". சாறக் கட்டுடன் ஒருவர் புற முதுகு காட்டிப் பயணப் பை சுமக்க, வானளாவிய கட்டடத் தொகுதிகள் பரந்து வியாபித்திருக்கும் அட்டைப் படத்தைக் கொண்டு சில மாதங்களுக்கு முன் இந்த நூல் வருகிறது என்ற அறிமுகம் தான் இதை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற அதீத ஆர்வத்தை என்னுள் கிளப்பியது. அவ்வளவுக்கு அந்த அட்டைப் படமே புலம்பெயரும் ஈழத்தவரைக் குறியீடாகக் காட்டியிருந்தது. பின்னர் அந்த அட்டைப் படமில்லாது வேறொரு ஓவியக் கீற்றோடு இந்த நூல் என் கைக்கெட்டியபோது இலேசான கோபமும் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கடந்த ஐந்து நாட்கள் பிடித்தது இந்த நூலை வாசித்து முடிக்க. செல்வம் அருளானந்தம்
அவர்கள் தன்னுடன் வாழ்ந்த, தான் சந்தித்த "எங்கட சனத்தை" நான் மனத்திரையில் ஒரு படமாக ஓட விட்டுப் பார்த்தேன். இந்த நூலை வாசித்து முடித்த தறுவாயில் எண்பதுகளின் பாரீஸ் தமிழனின் அறையில் இருந்து வெளியேறிய உணர்வு.
"குந்தியிருக்கவோர் நிலம்
குறித்துக் காட்டவோர் பூமி
அள்ளியணைக்கும் உறவு
இழந்தவர் இங்கே
காற்சட்டை மேற்சட்டை போட்டு
நிர்வாணமாகத் திரிகிறோம்
அந்நியர் பூமியிலே"
என்று செல்வம் அருளானந்தம் அவர்கள் எழுதிய கவிதையை (கட்டடக்காடு) தாய் வீடு பத்திரிகை ஆசிரியர் டிலிப்குமார் மேற்கோள் காட்டுகிறார்.
இந்தக் கவிதையின் பிரதிபலிப்பாகவே "எழுதித் தீராப் பக்கங்கள்"வாழ்வியல் அனுபவப் பக்கங்களைப் படிக்க நேர்கிறது.
ஈழத் தமிழரின் புலப் பெயர் வாழ்வின் ஆரம்ப நாட்களின் வாழ்வியல் ஆவணப் பதிவுகளில் ஒன்றாகக் கொள்ளக் கூடிய தகுதியை நிரம்பக் கொண்டது இது. இந்த ஆவணத் தொடர் தாய் வீடு (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து தமிழினி வெளியீடாக நூலுருப் பெற்றிருக்கிறது.
"யானை வந்தால் கொல்லும் மயிரையா பிடிங்கும்?" என்ற கேரள நாட்டார் சொலவாடை தான் கடந்த சில நாட்களாக என் மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கும் சொல்லாடல். "எழுதித் தீராப் பக்கங்கள்" நூலுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் இந்தச் சொலவாடையை அறிமுகப்படுத்திக் கொடுத்த முன்னுரை வெகு சிறப்பானது. இந்த நூலின் அடிப்படையை ஒப்பீட்டு நோக்கிலும், உதாரணங்களூடும் ஜெயமோகன் அவர்கள் கொடுத்திருக்கும் பகிர்வு வெகு சிறப்பாக அணி சேர்க்கிறது. "யானை வந்தால் கொல்லும்" போலவே ஊரில் இருந்த காலத்தில் என்னுடைய சக நண்பன் ஒருவன் சொல்லும் "அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன" என்ற பழமொழி தான் பின்னாளில் புலம் பெயர் வாழ்வில் போராடத் துணை நின்றிருக்கிறது எனக்கு. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதும் அதுவே.
"ஒரு வடை இரண்டு டொலர் வித்த காலத்தில வந்தனாங்கள்" என்று பெருமை பேசிய நம்மவரைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் என் புலப்பெயர்வின் ஆரம்ப காலத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால் "பனியும் பனையும்" போன்ற புலம்பெயர் சமூகத்தின் முன்னோடிச் சிறுகதைத் தொகுதி போன்ற படைப்புகளைத் தவிர்த்து எண்பதுகளின் ஆரம்ப காலத்தில் அங்குமிங்குமாகச் சில நூறாக வாழ்ந்த் நம்மவர் யாரேனும் தமது அந்தக் காலகட்டத்து வாழ்வியலை உள்ளதை உள்ளவாறு எழுதத் தலைப்பட்டார்களா என்ற கேள்வி எழும் போது (அப்போது ஈழமுரசு பத்திரிகை ஏஜென்சிக்காரால் ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகளின் வலி நிறைந்த உண்மை நிகழ்வைத் தொடராகவும் கொண்டு வந்தது.) எனக்கு முன்னால் "எழுதித் தீராப் பக்கங்கள்" தான் முன் நிற்கின்றது.
இது ஒரு சவால் மிகுந்த முயற்சி, நம்மோடு கூட வாழ்ந்தவர்கள் (பவர்கள்), புலம் பெயர்ந்தும் நாம் தூக்கிக் கொண்டு வரும் நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியம், இன்ன பிற பழக்க வழக்கங்களைப் பற்றிய யதார்த்த வெளிப்பாட்டைக் கொண்டு வரும் போது அந்தச் சமூகத்தையோ அல்லது கூடப் பழகிய அந்த மனிதர்களையோ பகைக்க வேண்டி வரும். ஆனால் இதையெல்லாம் இலகுவாகக் கடந்து விடுகிறார் செல்வம் அருளானந்தம். அதற்குப் பெரிதும் கை கொடுத்திருக்கிறது அவர் கைக்கொண்ட மொழியாடல்.
தன் வாழ்நாளில் வெளியூர் வாசமே கண்டிராத யாழ்ப்பாணத்துக் கிழவி, தன் பேரன் சிவராசா பேத்தி செல்வியோடு கதிர்காமத்தான் தரிசனம் காண முதன் முதலில் றயில் ஏறுகிறாள். ஆச்சி சந்திக்கும் புதினங்களை, விண்ணாணங்களை அப்படியே அவள் பார்வையில் "ஆச்சி பயணம் போகிறாள்" என்ற அற்புதமான நகைச்சுவை நவீனம் வழி எழுதியிருப்பார் எங்கள் செங்கை ஆழியான்.
தன்னுடைய அறியாமையை, பலவீனத்தை சரணாகதித் தத்துவம் மூலம் வெளிப்படுத்தி விட்டு தன்னைச் சுற்றிய சமூகத்தை விமர்சிக்கும் அங்கத நடை வெகு சிறப்பாக இந்த எழுதித் தீராப் பக்கங்களில் வெளிக்காட்டப்படுகிறது. இதனால் இந்தப் படைப்பின் வழியே அடையாளப்படுத்தப்படுகின்ற செல்வம் அவர்களின் நண்பர்கள் இதை வாசித்தாலும் வயிறு குலுங்கிச் சிரித்துக் கொண்டே கடந்து விடுவர். வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் சில இடங்களில் குத்திட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்ததைக் கண்டு என் மனைவி விநோதமாகப் பார்த்துவிட்டுப் போனார் :-)
என்னுடைய ஒன்று விட்ட தம்பி சுதா ஐரோப்பிய நாடொன்றுக்குப் பயணிக்கும் போது ஏஜென்சிக்காறரால் ஏமாற்றப்பட்டு ரஷ்யாவின் ஏதோவொரு பனி சூழ் வனாந்தரத்தில் விடப்பட்ட போது நான் அப்போது அவுஸ்திரேலியாவுக்கு வந்து இரண்டே ஆண்டுகள். சொல்லி அழ ஆருமில்லாது எனக்குள் அழுது வெடித்தேன்.
அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன் தினம் கூட அம்மா தான் சோற்றைக் குழைத்துத் தீத்தி விட்டார். மெல்பர்னுக்கு வந்து படித்துக் கொண்டே பகுதி நேர வேலை செய்த போது அதிகாலை மூன்று மணிக் குளிருக்குள் பெற்றோல் சைட்டின் 22 பம்புகளின் எண்ணெய் போகத் துடைத்துக் கழுவது, மலசல கூடத்தில் அப்பியிருக்கும் மலக் கழிவுகள், மாத விடாய் ஈரத்தை எல்லாம் துடைக்கும் அளவுக்கு வாழ்க்கை மாறியது. இங்கிருக்கும் என் சக நண்பர் ஐரோப்பாவுக்குப் போன காலம் முள்ளுக்கம்பி வேலி போர்டர் தாண்ட இரவிரவாகத் தன்னோடு வந்த ஆண், பெண் எல்லோருமாக நிலத்தில் அரைந்து அரைந்து எல்லையைக் கடந்ததைக் கதை கதையாகச் சொல்லுவார்.
இதெல்லாம் அனுபவப்பட்ட போது இருந்த அதே மனச் சுமை அல்லது அதையும் தாண்டிய பெருஞ் சவால்களை எண்பதுகளின் முற்பகுதியில் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதியாக செல்வம் அவர்கள் இந்த நூலின் வழியே நகைச்சுவை இழையோட எழுதி அதை வாசகன் மனதில் காட்சி வடிவம் போலச் சுமத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
"எழுதி தீராப் பக்கங்கள்" நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு ஒழுங்கில் தனித்தனியாகப் படித்தாலும் குழப்பாத வகையில் பகிரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றுமே சிறுகதைக்குரிய படைப்பிலக்கணம் பொருந்தியவை. ஒவ்வொன்றின் இறந்த காலத்தில் இருந்து இறுதியில் கொடுக்கும் நிகழ்காலத்துத் தரிசனம், குறித்த பகுதியில் வரும் நபருக்கு என்ன நடந்தது, அதன் படிப்பினை போன்றவற்றை நாடகத்தன்மை இல்லாது வெளிப்படுத்துவது தான் அனுபவ வெளிப்பாட்டின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.
யாழ்ப்பாணம், சில்லாலையில் கத்தோலிக்கப் பின்னணியில் வளர்ந்து, புலம்பெயர்ந்த செல்வம் பிரான்சுக்குக் குடி பெயர்ந்த பின் அங்கு தான் சந்திக்கும் மொழிச் சிக்கல், புதிதாகச் சந்திக்கும் நண்பர்களின் குணாதிசியங்கள், "இந்த நாட்டையும் கெடுக்க வந்திட்டாங்களோ" என்ற ரீதியில் புலம் பெயர்ந்த மண்ணிலும் எதிர்கொள்ளும் சாதிய வெறி என்று ஒவ்வொரு பகிர்வின் வழியே அந்நிய மண்ணில் நம்மவரின் போக்கு வெளிக்காட்டப்படுகிறது.
ரஷ்யா வழியாகப் பயணப்படும் போது ஒரு சிக்கல் நேரும் கட்டத்தில்இந்திரா காந்தி என்றால் இவர்களுக்குப் பிடிக்கும் என்ற தோரணையில் "இந்திரா காந்தி" "இந்திரா காந்தி" என்று கத்திய நண்பரின் கதை. அருள் நாதர், தட்சூண், அங்கிள் போன்ற நண்பர்களோடு பயணிக்கும் சிரிப்பு மூட்டும் நினைவுகள், இன்னும் அமுதன், ஆசைத்துரை, விமலதாஸ், ஞானசீலன், துரையண்ணன், மாஸ்ரர், பாதர் போன்றோர் வழியாகவும் தொடர
அகதி அந்தஸ்துக் கோரிக்கைக்காக
ஒரே கேஸ் ஐ ஏகப்பட்டோருக்கு எழுதும் கூத்து (உங்கட ஆட்கள் கிட்டத்தட்ட ஐநூறு பேர் வரை அல்பிரட் துரையப்பாவைச் சுட்டிருக்கினம் அல்லது அதோட சம்பந்தப்பட்டிருக்கினம்), இரண்டு அறையில் பத்துப் பேர் பங்கு போட்டு வாழும் குடித்தனம், எண்பத்து மூன்று கலவரத்தின் பிரதிபலிப்புகள் புலம் பெயர்ந்த சமூகத்தை அப்போது ஏற்படுத்திய தாக்கம் என்று விரிவாகப் பயணிக்கிறது.
தமிழரோ என்ற சந்தேகத்தில் ஒருவரிடம் "தமிழ் தெரியுமோ அண்ணை?" என்று கேட்க
"தமிழும் தெரியாட்டா நான் என்ன தம்பி செய்யுறது" என்ற அந்தச் சம்பவத்தை உணர்ந்து சிரித்தேன்.
பல இடங்களில் ஓப்பிட்டுப் பார்க்க முடிந்த அனுபவங்கள். காரணம் நானும் இதே போல் இளைஞர் கூட்டத்தோடு இருந்தவன் தான்.
தாயகத்தில் சொந்த, பந்தம்இறந்து பல நாட்களுக்குப் பின் புலம்பெயர் சூழலுக்குத் தெரிவது கூட அந்த நாளில் அனுபவித்தது.
ரமணி, கருணா, ஜீவா, கே.கிருஷ்ணராஜா, செந்தில் ஆகியோரின் ஓவியங்கள் ஒவ்வொரு சம்பவப் பகிர்வுக்கும் பொருத்தமாக அமைகின்றன.
"எழுதித் தீராப் பக்கங்கள்" செல்வம் அருளானந்தம் என்ற தனி மனிதனின் சுயசரிதமல்ல, பாரீஸ் தமிழ்ச் சமூகத்தின் வழியே ஒப்பு நோக்கிப் பார்க்கப்படும் எண்பதுகளின் புலம்பெயர் தமிழரது வாழ்வியல் சரிதம். இது கட்டாயம் வாசிக்க வேண்டிய பெறுமதியான ஆவணம்.