பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எனக்கு ஒரு கடகம் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் தந்தால் போதும்" இப்படியாக நான் சின்னப்பிள்ளையாக இருந்த காலத்தில் நினைப்பதுண்டு. அவ்வளவுக்கு மாம்பழத்தின் மேல் அலாதிப்பிரியம் எனக்கு. முக்கனிகளிலேயே முதல்வன் அல்லவா என் இனிய மாம்பழம்.
எங்கட அம்மா ஒரு ஆசிரியை என்பதால் , விடிகாலை நான்கு மணிக்கே எழும்பி காலைச் சாப்பாட்டையும் மத்தியானச் சாப்பாட்டையும் செய்யவேணும். அவருக்கு குழல் பிட்டு செய்தெல்லாம் மினக்கட இயலாது. மாவைக் குழைத்து, ரின் பால் பேணியால் கொத்திய மாத்துண்டங்களை நீற்றுப்பெட்டியில் நிரப்பி அவித்த பிட்டுத் தான் பெரும்பாலான நாட்களின் எமக்கு காலை உணவு, சிலவேளை அதுவே மதிய உணவும் கூட.
படபட வென்று பம்பரமாகப் பிட்டை அவித்து முடித்து விட்டு செய்யும் அடுத்த வேலை மாம்பழத்துண்டங்களை நறுக்கி பிட்டோடு சாப்பிட ஒப்பேற்றுவது தான் அடுத்த வேலை அவருக்கு. பள்ளிக்கூடம் போய் தந்துவிட்ட எவர்சில்வர் சாப்பாட்டுப் பெட்டியைத்திறந்தால் பிட்டை மறைத்து காட்சிதரும் அழகழகான மாம்பழத்துண்டங்கள். மாம்பழத்துண்டில் ஒரு கடி, அடுத்து தேங்காய்ப்பூ கலந்த பிட்டில் ஒரு விள்ளல் என்று மாறி மாறிச் சாப்பிடுவதே தனியின்பம். பிட்டும் மாம்பழமும் எனக்கு எப்போதுமே மாற்றீடை விரும்பாத நிரந்த ஜோடிகள்.
கறுத்தக்கொழும்பான் மாம்பழங்கள்
பட உதவி: கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்.
எங்கள் வீட்டிலேயே விலாட்டு, அம்பலவி, செம்பாட்டான், சேலம் மாமரங்கள் முன் முற்றத்தை நிறைத்திருப்பதால் அடுத்தவனிடம் கையேந்த வேண்டிய அவசியம் இருந்ததில்லை. ஆனால் கறுத்தக் கொழும்பான் மட்டும் விதிவிலக்கு. கோபால் மாமா கடையில எப்போதும் கறுத்தக் கொழும்பானுக்கு பெரும்பாலும் சபாநாயகர் அந்தஸ்து தான்.மாம்பழங்களில் சற்றும் பெரிதாகவும் மேற்பாகம் கொஞ்சம் செம்மஞ்சள் பெரும்பாகம் கடும்பச்சையானதான மிக இனிப்பான பழம் இந்தக் கறுத்தக்கொழும்பான். கொழும்பில் குடியிருந்து அவ்வப்போது யாழ்பாணத்துக்கு வருபவர்களை நாங்கள் அப்போது எதோ வானத்தில இருந்து குதிச்சவை போலப் புதினமாப் பார்த்த காலம் அது. கொழும்பாரும் கொஞ்சம் நடப்பு காட்டுவினம். கறுத்தக்கொழும்பானும் விலையும் மவுசும் உள்ள பழம் என்பதால் கொழும்பான் என்ற பெயர் ஒட்டியதோ என்னவோ?
வெள்ளைக்கொழும்பான் என்றொரு வகையுண்டு. பழுத்தாலும் தன் சட்டையின் நிறத்தை மாற்றாமல் அதே குருத்துப்பச்சை நிறத்தில் இருக்கும். சாப்பிட்டால் தேவாமிர்தம் தான்.இந்தப்பழத்தைக் கசக்கி விட்டு, மேல் முனையில் ஒரு துளைட்டு உள்ளே தேங்க்கிக்கிடக்கும் பழ ரசத்தை உறிஞ்சி ரசிப்பது வழக்கம். தான் எவ்வளவு உயர்ந்தாலும் வெளித்தோற்றத்தை மாற்றாத மனிதருக்கு ஓர் உதாரணம் வெள்ளைக்கொழும்பான்.
அப்பா எமது வீடு ஆட்டுக்கு கஞ்சித்தண்ணி வைக்கும் போது மாம்பழத்தின் தோலும் கலந்து வைப்பார். பிடுங்கப்பட்ட காய்பதத்திலுள்ள மாங்காய்கள் அறையில் ஒரு மூலையில் வைக்கோலுக்குள் பழுப்பதற்காக ஐக்கியமாகியிருக்கும் தீட்டுப்பட்ட பெண்கள் நகராது ஒரு இடத்தில் இருப்பது போல.
விலாட்டு கொஞ்சம் தன்னடக்கமானது போல அளவில் சிறிதான,
மேற்பாகம் ஊதா கலந்த குங்கும நிறம் தடவிய உருண்டைப்பழம். காய்ப் பதத்திலே சாப்பிடலாம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். விலாட்டு மரத்தில் பெரிய பிரச்சனை என்னவென்றால் இதன் மாவிலை அளவில் சிறிதாக ஒப்பீட்டளவில் இருப்பதால் மங்கல காரியங்களுக்கு ஆள் அதிகம் தலை காட்டமாட்டார்.
செம்பாட்டான் பழம் யாழ்பாணத்தில் அதிகம் புழங்கும் பழம். நார்த்தன்மை குறைந்த சப்பையான நீட்டும் பழம். செம்பாட்டான் பழத்தில் ஒரு பிரச்சனை, மாம்பழத்தை மிகவும் சீரியசாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது வாயில் ஏதோ நரிபடும், பார்த்தால் கறுப்பான சின்னச்சின்ன துகழ்கள் சூழ இந்த மாம்பழத்தில் எற்கனவே துளை போடப்பட்டு, கூட இருந்து குழி பறிக்கும் எட்டப்பன் வண்டோ புழுவோ டோரா அடித்திருக்கும். வேண்டா வெறுப்பாகப் பழத்தை எறிந்து விட்டு அடுத்த பழத்தில் கை வைக்கவேண்டியது தான்.
செம்பாட்டான் மாங்கொட்டை நீண்டு சப்பையானதாக இருக்கும். ஆரம்ப பள்ளியில் படிக்கிற காலத்தில ( ஏழு எட்டு வயசிருக்கும்) ஒடுக்கமான முகம் கொண்ட என் வகுப்பு பெண்ணைப் பார்த்து கோபமாக செம்பாட்டான் மாங்காய் என்று திட்டியது ஏன் இப்ப ஞாபகத்தில வந்து தொலைக்குது?
புழுக்கோதிய மாம்பழத்தைப் பற்றிச் சொல்லும் போது எனக்கு செங்கை ஆழியான் எழுதிய குறுங்கதைகளில் ஒன்று நினைப்புக்கு வருகிறது. பழத்தில் நல்ல பக்கத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு கெட்ட பக்கத்தை ஒதுக்குவது போலத்தான் வாழ்க்கையும். கொஞ்சம் பழுதாக இருக்கின்றதே என்று ஒட்டுமொத்தமாக நிராகரிக்காமல் மாம்பழத்தின் சுவையை எப்படி அனுபவிக்கின்றோமோ அது போல நம்மால் சாதிக்கமுடிந்தவை, சாதித்தவை பற்றி மட்டும் திருப்திப்பட்டால் வாழ்க்கையை நல்லவிதமாக அனுபவிக்கமுடியும் என்ற சாரத்தில் அமைந்த கதை அது.
பாண்டி என்றொரு வகை மாம்பழம் இருக்கின்றது. அதை ஏழைகளின் தோழன் என்று தான் சொல்ல வேண்டும். சந்தையில் இருக்கும் மாம்பழங்களில் விலை மலிவானது அது தான். காரணம் சிறுத்த உருண்டையான , சீக்கிரமே பழுத்து அழுகும் வகை அது.
மாங்கொட்டைத் தாளம் என்ற ஒரு விளையாட்டு எங்களூரில் நாம் சின்னனாக இருக்கும் போது விளையாடுவது உண்டு. நாலு பெட்டி கீறி மாங்கொட்டையை முதல் பெட்டியில் எறிந்துவிட்டு கெந்திக் கெந்தி, கோட்டில் கால் படாமல் நான்கு பெட்டியையும் கடக்கவேண்டும், உந்த விளையாட்டுக்கு ஏற்றது இப்படியான சப்பையான மாங்கொட்டைகள் தான்.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த முத்துலிங்க மாமாவின் முழு நேரத் தொழிலே மாங்கன்று வளர்த்து வியாபாரம் செய்வது. பொலித்தீன் பைகளில் நிரையாக அடுக்கிவைக்கப்பட்ட மாங்கன்றுகளை நிதமும் பராமரித்துப் பசுமைப் புரட்சியைச் சத்தமில்லாமல் செய்துவந்தார். ஒட்டுமாங்கன்றுகள் பலவும் அவரின் கைவண்ணத்தில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிக்கனி பறிக்கப்பட்டன. ஒட்டுமாங்காய் ருசி அதிகம் என்பார்கள். ஈழத்தி எழுத்தாளர் சாந்தன் தமிழ் சிங்களக் காதலைப் பின்னணியாகக் கொண்டு சிரித்திரன் வெளியீடாக "ஒட்டுமா" என்ற நாவலையும் முன்னர் வெளிட்டவர்.
பச்சைத்தண்ணி (பச்சை தின்னி) மாங்காய் என்று ஒன்றிருக்கிறது அம்மியில் அரைத்த உப்பு மிளகாய்த்தூளைச் தேங்காய்ச் சிரட்டையில் வைத்துக் கொண்டு, காய்ப்பதமான இதை உப்புத்தூளைத் தடவிச் சாப்பிடுவதை நினைக்கும் போது இப்பவே எச்சில் தயாராக வரிந்துகட்டிக்கொண்டு வாய்க்குள் இருந்து எட்டிப்பார்க்கின்றது.
பச்சத்தண்ணி, சேலன்(ம்) மாங்காய்களைப் பிளக்கப் பயன்படுவது யாரோ ஒருவர் வீட்டு சீமெந்து மதில்களின் முனைகள். மாங்காய் அடித்த கன்றல்கள் இன்னும் அடையாளமாக மதிற்சுவரில் எஞ்சி நிற்கும்.
உலகின் 16% வீத மாம்பழ ஏற்றுமதி இந்தியாவிலிருந்து மட்டும் தான் போகின்றதாம். கடந்த மே மாதம் ஆந்திரா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்துக்கு நான் போன போது ஒரு முக்கியமான பெரிய பூங்கா ஒன்றில் 300 இற்கும் அதிகமான மாம்பழங்களின் கண்காட்சி வாரம் அப்போது நடந்துகொன்டிருப்பதாக விளம்பர அட்டைகள் தொங்கின. அந்த அரிய வாய்ப்பை நேரப்பற்றாக்குறையால் நழுவவிட்டேன்.
இந்திய மாம்பழங்களைப் பற்றிச்சொல்லும் போது விடமுடியாத ஒரு அம்சம் அமரர் கல்கி எழுதிய " ஓ மாம்பழமே" என்ற கட்டுரைத் தொகுதி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் துணிந்து நின்று அவர்களின் ஆட்சியை நையாண்டி பண்ணியும், அன்றைய காலகட்ட சமூகத்தின் மீதான விமர்சனப்பார்வையையும் தன் எழுத்தில் வடித்திருக்கின்றார் கல்கி இந்நூலில். கல்கி பிரசுரம் மீள் பதிப்பாக இப்போது விற்பனையில் அந்நூலை வெளியிட்டிருப்பதால் அந்த நூலில் உள்ள எல்லாவற்றையும் சொல்லமுடியாது. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளில் "ஓ மாம்பழமே" என்ற கட்டுரையே நூலின் தலைப்பாகவும் அமைந்துவிட்டது. கீழைத்தேய நாடுகளில் இருந்து தான் மாம்பழத்தின் பெருமை மேலை நாடுகளுக்குச் சென்றது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதை வைத்தே தன் ஹாஸ்ய மற்றும் சமூகப் பார்வையை இக்கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.
அதில் " பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் பெருமைக்கு அழியாத அவமானம் உண்டாகிவிட்டது. கேவலம், இந்தியாவிலிருந்து மாம்பழம் சாப்பிடும் நிலைக்கு ஆளாகிவிட்டோம் " என்றும் மிஸ்டர் வின்ஸ்டன் சர்ச்சில் எழுதியதாகவும் கிண்டலடித்து " பிரிட்டிஷார் இந்தியா தேசத்தை ஏன் இழந்துவிடக்கூடாது என்பதற்கு ஒரு புதிய காரணம் ஏற்பட்டிருக்கின்றது. அதுதான் இந்திய மாம்பழம். இவ்வளவு ருசியுள்ள பழத்தைக் கொடுக்கும் தேசத்தையா சில மூட மந்திரிகளின் முழு மூடத்தினால் நாம் இழந்து விடுவது? என்று ராதர்மியர் எழுதியதாகவும் தொடரும் இக்கட்டுரையில் சேலம் ஒட்டுமாம்பழத்தின் ருசியால் மகாத்மா காந்தியே சலனப்பட்டதாகவும் தொடர்கின்றார். ஆழ்ந்து படிப்பவர்களுக்கு இக்கட்டுரையினூடே சொல்லப்படும் அன்றைய சமூக விமர்சனம் அழகாகப் புரியும்.
மாங்காய் பிடுங்குவதற்கு ஒரு இலாவகமான கையாளல் வேண்டும், அவசரப்பட்டுப் பிடுங்கி அது நிலத்தில் மொத்துப்பட்டால் ஒன்றுக்கும் உதவாத வெம்பல் மாங்காய் தான். நீண்ட தடி அல்லது மூங்கில் கழியை எடுத்து முனையில் கொக்கச்சத்தகம் (கேள்விக்குறி போன்ற ஆயுதம்) பூட்டி சின்னச் சாக்கு (சீனி இறக்குமதியாகும் சாக்கு) போட்டு, மாங்குலைகளை கொக்கச்சத்தகத்தால் சுற்றிவளைத்தால் பேசாலைக் கடலில மாட்டுப்பட்ட நேவிக்காறன்கள் மாதிரி சேதாரமின்றி மாங்காய்கள் கிடைக்கும். எங்கள் அம்மம்மா வீட்டின் காணியில் மாமரங்களின் சோலையே உண்டு, அவர்கள் மாங்காய் பிடுங்க ஆள் வைத்து வேலை செய்வார்கள். அவர்கள் சாக்கிற்குப் பதில் கடகம், கொக்கச்சத்தகம் பூட்டிய நீண்ட மூங்கில் கழியைப் பயன்படுத்துவார்கள். ஒருமுறை அந்தக் கொக்கத்தடியைத் தூக்கிப் பார்க்க ஆசை வந்து, பார்மான அந்தத் தடியை கஷ்டப்பட்டு நிமிர்த்த முயற்சிசெய்யும் போது பாரந்தாங்காமல் சமநிலை தவறி தடியோடு நிலத்தில் விழுந்ததற்குப் பிறகு அப்படியான முயற்சிகளின் நான் மீண்டும் இறங்கவில்லை.
கந்தசஷ்டி கடைசி நாள் சூரன்போர் அன்று எங்களூர் இணுவில் கந்தசுவாமி கோயில் களை கட்டும். சூரன் ஒவ்வொரு வேஷமாக தலை மாற்றி வருவது சூரன் போர் நிகழ்வில் தனித்துவமான காட்சி. ஓவ்வொன்றாக மாறும் சூரனில் வடிவம், ஒரு சமயம் சூரன் மரமாக மாறுவதைக் காட்டுவதற்கு சூரன் சிலையின் பின்னால் இருந்தவருக்கு மாங்கொப்பு குலைகளுடன் கையளிக்கப்படும். அந்த நிகழ்வும் தோற்கடிக்கப்பட்டு சூரன் நிர்க்கதியாக நிற்க, வீரபாகு தேவர் வெற்றிப்பெருமிதத்தில் சூரனைச் சுற்றி ஒரு வட்டமடிக்க , அந்த சமயம் பார்த்து தயாராக இருந்த கோயில் பொடியள் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, மடப்பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மாம்பழக்கடகங்களை எடுத்துவந்து சூழ்ந்திருந்த சன சமுத்திரத்துக்குள் நாலாபக்கமும் எறிவார்கள். சனமும் இளைஞர்களை ஆவென்று பார்த்திருந்து பழங்களை எறியும் தருணம் ஒவ்வொன்றிலும், தூக்கியெறியப்படும் மாம்பழங்களைப் போல ஓடியோடி மாம்பழம் எடுப்பதில் முனைப்பாக இருப்பார்கள். என்னதான் மாம்பழம் வாங்குமளவிற்கு வசதியிருந்தாலும் இப்படிக் கோயில் பழங்களை எடுத்துக் கொண்டுபோவது அவர்களுக்கு ஒருஆத்ம திருப்தி தரும் விசயம்.
மாம்பழத்தைக் கத்தியால் தோல் சீவிப் பின் பழங்களை நறுக்கிச் சாப்பிடுவது எனக்குப் பிடிக்காத விசயம். புலம்பெயர்ந்து வந்த பின் கை நழுவிப் போன சுதந்திரங்களில் அதுவும் ஒன்று. கறுத்தக்கொழும்பானின் மேல் முனையைக் கடித்துத் துப்பிவிட்டுத் தோலைப் பல்லால் இழுத்து துயிலுருவிப் பின் அந்தத் தோற்பாகத்திலிருக்கும் எச்சமான பழச்சுவையப் பல்லல் காந்தி எடுத்து நாக்கில் அந்தப் பழ எச்சத்தைப் போட்டுச் சுவை மீட்டுவிட்டு பின்னர் எஞ்சிய பழத்தின் பெரும் பாகத்தினைச் சாப்பிட்டுப் மாம்பழக்கொட்டையை உருசிபார்த்து சுவைப்பது ஒரு அலாதி இன்பம். மாம்பழச் சுவையின் பெருமையை உணர இதுவே தலைசிறந்த வழி. அம்புலிமாமாவில் தொடங்கி ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ஆனந்தவிகடன், செங்கை ஆழியான் என்று என் வாசிப்புப் பயணம் தாவியபோது வெறும் கல்லூரி நூலகங்களையும் வாசிகசாலைகளையும் மட்டும் நம்பியிருக்கமுடியாமல் என் வாசிப்பு வேகம் அந்தப் புத்தகங்களை வாங்கி வாசித்துப் பத்திரப்படுத்துவதிலும் முனைந்தது. ஒரு ஆசிரியக்குடும்பத்தில் இது சற்றே அதிகமான ஆசை, காரணம் வாங்கிக்குவிக்கும் புத்தகத்தில் எண்ணிக்கையும், அவற்றின் விலையும். அதற்கு கை கொடுக்குமாற் போல எனக்கு ஒரு யுக்தியைக் காட்டியவர் என் அம்மம்மா.
எங்களூரில் "தெரு" என்ற குறிப்பெயரோடு ஒரு சிறு சந்தை இருந்தது. தெருமுனையில் இருந்ததால் அந்தப் பெயர் வந்தது. மருதனாமடத்திலிருந்தும், சுன்னாகத்திலிருந்தும் மரக்கறிச் சாமான்களைத் தொகையாக வாங்கி வந்து சிறு இலாபம் வைத்து இந்தச் சந்தையில் விற்கப்படுவதுண்டு. என் அம்மம்மா சொன்ன யுக்தி இதுதான். எங்கள் வீட்டின் முன் இருந்த சேலன் (சேலம்) மாமரத்தின் காய்களைப் பறித்துக் கொண்டுவந்தால் தான் இந்த தெருவில் இருக்கும் வியாபாரிகளிடம் விற்றுத் தருவதாக.
நான் அப்போது இளங்கன்று தானே, சர சரவென்று சேலம் மாமரத்தில் ஏறி நான் காய்களைப் பறித்து எறியக் கீழே சாக்குப் பையுடன் காத்து நிற்கும் அம்மம்மா இலாவகமாக எறிப்படும் மாங்காய்களைத் தாங்கிப் பத்திரப்படுத்துவார். சேலம் மாங்காய் சொதி செய்வதற்கு மிகவும் நல்லதொரு காய்.இருபதில் ஆரம்பித்து ஐம்பது, நூறாக மற்றைய மாமரங்களிலும் பறித்து வளர்ச்சிகண்டது என் மாங்காய் வியாபாரம். சைக்கிளில் உரப்பையில் நிறைத்த மாங்காயுடன் தெருவுக்குப் போய் அம்மம்மாவின் பேரம் பேசலில் ஒரு காய் 1 ரூபாவிலிருந்து இலாபம் வைத்து நடந்த மாங்காய் வியாபாரத்தின் முதலீடுகள் ராணி காமிக்ஸ், மல்லிகை, கமலம் பிரசுரம், யாழ் இலக்கிய வட்ட வெளியீடுகளாக மாறின.
மாங்காய் விற்ற காலத்தில் பார்த்த முகம் தான் என் அம்மம்மாவின் நினைவில் இறுதியாகப் பதிந்திருந்த என் முகம். புலம் பெயர்ந்து வந்து நான் ஒரு ஆளாகித் திரும்பித் தாயகம் போக முன்பே அம்மம்மாவும் இறந்து போய்விட்டார். இன்றைக்கு நான் ஓவ்வொரு டொலரையும் இயன்றவரை அதன் பயன் உணர்ந்து செலவழிப்பதற்கு என் பால்ய கால மாங்காய் வியாபாரம் தான் அடிப்படை.
புலம்பெயர்ந்து நான் வாழும் நாட்டில் இப்போது வசந்தகாலப் பருவம். வசந்தகாலத்தை வரவேற்கும் அறிகுறிகளில் மாம்பழங்களின் வருகையும் ஒன்று. தலைகுனிந்து பவ்யமாக ஒரு அணியில் நின்று கூட்டுப்பிரார்த்தனையில் நிற்கும் மாணவர் கூட்டம் போல ரோட்டோரப் பழக்கடைகளில் மாம்பழங்களின் அணிவகுப்பு. பழமொன்றை வாங்கி வந்து , வீட்டில் வைத்து வெட்டப்பட்டு வாய்க்குள் போய் ருசி பார்க்கப்படுகின்றது.
"என்ன இருந்தாலும் எஙகட ஊர் மாம்பழம் போல வராது " மெளனமாகச் சொல்லிப்பார்க்கின்றேன்.
உயரே மாமரக் கொப்புக்களூடே கடந்து நிலத்தில் தெறித்துத் திசைக்கொன்றாயச் சிதறியோடும் வெம்பல் மாங்காய்களாய் எம் சமூகம்.
(மாம்பழ வியாபாரப்படங்கள் Paddy's Market Flemington, Sydney இல் இக்கட்டுரைக்காகப் பிரத்தியோகமாக எடுக்கப்பட்டவை)
79 comments:
அருமையாக எழுதியிருக்கிறீங்க பிரபா.
எங்கட வீட்டில ரெண்டு கறுத்தக் கொழும்பான் மரம் இருந்தது. முன்னுக்கு ஒண்டு. பின்னுக்கு ஒண்டு. பின்பக்கம் இருக்கிற மரந்தான் எனக்குப் பிடிச்ச மரம். அதில, ஓரளவு உயரம் வரைக்கும் வளந்திட்டுப் பிறகு மூண்டு கிளை பிரியும். அந்தக் கிளைகள் பிரியிற இடத்தில ஒரு ஆள் உக்காரலாம். சின்ன வயசில, அதுதான் எனக்குப் புத்தகம் படிக்கிற இடம். மாங்காய் காலத்தில, ஒரு தட்டில உப்பு, மிளகாய்த்தூளும் மாங்காயும் என்னோட வரும். ;)
மாங்காய் நல்லா முத்தினபிறகு, அம்மம்மா கொக்கத்தடியால மாங்காய்களைப் பறிப்பா. கீழ சாக்குப்பிடிச்சண்டு நிக்கிறது எங்கட வேலை. எல்லா மாங்காய்களையும் பறிச்சபிறகு, மாங்காய்களைப் பாகம் பிரிப்பம். ஆளுக்கொரு சாக்கு குடுபடும். சாக்குக்குள்ள வைக்கல் வைச்சு, மாங்காயும் வச்சுத் தருவா அம்மம்மா. ஒவ்வொரு நாளும் காலமைல போய் மாம்பழம் பழுத்திட்டுதா எண்டு பாப்பம். இதை எழுதேக்க, ஒரு நாள் சாக்கைத் திறந்தோடன வாற மாம்பழ வாசம், இப்பவும் வருகுது!
மரத்தில சில மாங்காய்களை விட்டுவைச்சிருப்பம். அந்தப் பழங்கள் பழுத்தபிறகு, கிளி கோதி வைச்சிருக்கும். கிளி கோதேல்லையெண்டா அணில் றாவி வைச்சிருக்கும். அதுகள் சாப்பிட்டுப்போன பக்கத்தை விட்டுட்டு மற்றப்பக்கத்தை அம்மாவுக்குத் தெரியாம சாப்பிட்டிருக்கிறம். ருசியெண்டா அப்பிடியொரு ருசி.
வீட்டில கறுத்தக்கொழும்பான் இருந்தபடியாவோ என்னமோ, மற்றப்பழங்கள் சாப்பிடேல்ல. இந்தியாவுக்குப் போனபிறகு தொடக்கத்தில இந்தக் கறுத்தக்கொழும்பான்களை நினைச்சுப் பாத்திருக்கிறம். ஆனா, போகப்போக மாம்பழத்தில அப்பிடியொன்றும் பெரிதாக விருப்பமில்லாமல் போய்விட்டது. இந்த வரு்ஷத் தொடக்கத்தில் வசந்தகாலத்தில், எங்களூர் சந்தைக்கு வந்திருந்த மாம்பழப்பெட்டிகளைப் படமெடுத்துப் போட்டிருந்தேன். அதைப்பார்த்து நம்மட 'மழை' ஷ்ரேயா ஆசைப்பட்டிருந்தா. அதுக்குப்பிறகு பெட்டிபெட்டியா மாம்பழங்களைப்பார்த்தா அவட நினைவுதான் வரும். இனி உங்கட நினைவும் வரும். :)
Praba....Mambazahai Vechhu Super Article...I really Njoyed !!! I want to Eat Mambazam Now :))))
(மீண்டும்) நல்ல நினைவிடை தோயல். நிங்கள் பாவிக்கும் பெயர்களுக்கு தமிழகத்தில் வேறு பெயர் இருக்க வேண்டும்,நீலம் என்று சொல்லப்படும் தினுசில் எப்பொழுதும் வண்டு இருக்கும். படிக்க, படிக்க அதே பழைய நினைவுகள், சோகத்தை கொண்டு வந்துவிட்டது.எங்கள் வீட்டின் முன் பக்கம் மல்கோவா மரமும், பின் பக்கம் ரூமானி வகை. ரூமானி வடுமாங்காய் போடவும், ஊறுகாய்க்கும் உதவும்.இப்பொழுது வீடும் இல்லை, நினைவுகள் மட்டும் நெஞ்சில் நீங்காமல்!
என் அம்மாவுக்கு மாழ்பழம் என்றால் உயிர். சென்னைக்கு ஆந்திரா பக்கம் என்பதால் சீசனில் பங்கனபள்ளி குவிந்துகிடக்கும். நீங்கள் பழவியாபாரம் என்றால் நான் டிசம்பர் பூவை நூறு பூ பத்துபைசா என்று விற்பேன். முதல் நாளே அறும்பை பறித்து பனியில் போட்டுவிட்டால், காலையில் பூத்துவிடும். உதவி- பாட்டி எனக்கும் :-)
கறுத்தக் கொழும்பான் எண்டால் எனக்கு உயிர். சின்னதா காய்க்க தொடங்கின உடனேயே அதை எண்ணி குறிச்சுக் கொள்ளுவன்.
போன வருசம் யாழ்ப்பாணத்தாலை வரேக்கை வீட்டு கறுத்தக்கொழும்பான் கொண்டு வந்தன். காலிப்பாலத்தில ஆமிக்காரன் மறிச்சு முழு மாம்பழத்தையும் ஒவ்வொண்டா செக் பண்ணினான். பிறகு வீட்டை வந்து பாத்தால் 3 மாம்பழம் மிஸ்ஸிங்.. யாழ்ப்பாணத்தில வேலை பாத்த ஆமியெண்டு அப்பவும் சொன்னவன்..
பிரபா!
அருமையான மீள்நினைவு. அம்மம்மா உங்களையும் மாம்பழம் என்றுதான் அழைப்பாவோ? :) அதுசரி, சின்னத்துரையரின்ர மதிலெல்லாம் பாழாக்கின ஆள் நீர்தானோ? :))
உஷா!
தமிழகத்தில் இவற்றிற்கு வேறு பெயர்கள் இருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் நான் தேடிப்பார்த்தளவில், இதுவரையில் கறுத்தக்கொழும்பான் அங்கிருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் ஆபிரிக்க நாடொன்றிலிருந்து அதேவகை இறக்குமதி செய்யப்பட்டிருப்பதை இங்கே கண்டேன். ஆனால் அந்தச் சுவை இல்லை.
//மதி கந்தசாமி (Mathy) said...
அருமையாக எழுதியிருக்கிறீங்க பிரபா.//
வணக்கம் மதி,
நீங்கள் முன்னர் வினோதரசமஞ்சரி கொணர்ந்த நினைவலைகள் என்ற பதிவில் உங்கள் வீட்டு மாமரங்களைப் பற்றி அழகாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அணிகடிச்ச மாங்காய் அரைப்பதப் பழுத்ததாக நல்ல சுவையாக இருக்கும் அல்லவா?
இந்தப்பதிவை எழுத எடுத்த நேரத்தை விடப் பொருத்தமான தலைப்பை வைப்பதில் தான் படுத்திவிட்டது:-) முன்னர் பரிசீலித்த தலைப்புகள்
மாமரங்கள்.... மாம்பழங்கள்...!
மாம்பழம் - ஒரு சுவை மீட்பு
முற்றத்து மாமரங்கள்.
தங்களின் இதமான மீள் நினவுகளைத் தந்தமைக்கு என் நன்றிகள்:-)
//chinnathambi said...
nice post. we call your 'salem maangai' as 'bangaloora maanga'(good for chennai's beach maanga.i.e. salt+ chilli powder) in tamilnadu.
you didn't mention about the very famous "malgova"
you know the kids song about mango? //
வணக்கம் சின்னத்தம்பி
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள். எங்களூரில் மல்கோவா மாம்பழத்தின் பயன்பாடு அதிகம் இல்லை அல்லது வேறு பெயரில் அழைத்தார்களோ தெரியவில்லை. மலைநாடானோ யோகன் அண்ணாவோ தெளிவுபடுத்தினால் நல்லது.
நீங்கள் சொல்லும் சிறுவர் பாடல் "அணில் கோதா மாம்பழமே" என்ற தாலாட்டுப்பாடல் என்று நினைக்கிறேன்.
பழங்களைக் காட்டி
படிப்பவர்களை எல்லோரையும்
பழய உலகுக்கு அழைத்துச்
சென்று விட்டீர்கள்
கானா பிரபா.
//செந்தழல் ரவி said...
Praba....Mambazahai Vechhu Super Article...I really Njoyed !!! I want to Eat Mambazam Now :))))//
வணக்கம் ரவி, பாராட்டும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மாம்பழங்கள் விதவிதமா உங்க ஊரில நிறைஞ்சிருக்கே,
ஒரு கை பாத்திடுங்க:-)))
//பச்சைத்தண்ணி (பச்சை தின்னி) மாங்காய் என்று ஒன்றிருக்கிறது அம்மியில் அரைத்த உப்பு மிளகாய்த்தூளைச்.... தயாராக வரிந்துகட்டிக்கொண்டு வாய்க்குள் இருந்து எட்டிப்பார்க்கின்றது.//
இதுக்கு இணையா எதுவும் இல்லை... கையில் உப்பு மிளகாய்த்தூள் வைத்து தொட்டு சாப்பிடும் சுகம்...ஹ்ம்ம்ம்... இதே போல் நெல்லியும்...
மாங்கொட்டை தாளம் விளையாட்டை இங்க பாண்டி ஆட்டம் என்று சொல்றது உண்டு..
அம்மாவின் சமையலில், ஆரம்பித்து மாம்பழத்தின் வகைகள், செங்கை ஆழியானின் கதை, அமரர் கல்கியின் படைப்பு, அம்மமாவின் வியாபாரத்திறன், என எல்லாவற்றையும் உணர்ந்து எழுதி இருக்கீறீர்கள்...
நல்ல பதிவு
கானா
நீங்க காட்டின மாம்பழங்களில எங்கையாவது கறுத்த கொழுந்து மாம்பழம் தெரியுதோ எண்டு பாத்தன். ம்ம்கூ.... நினைத்தாலே இனிக்கும் அந்தப் பழம் சாப்பிட்டா எப்பிடியிருக்கும்?...அதெல்லோ மாம்பழம்.
அடுத்து, உப்பும் உiறைப்பும்சேத்த பச்சை மாங்காயை வாசிக்கவே வாய் ஊறுதெண்டா திண்டா எப்பிடி இருக்கும்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
கதிரவேல் மாமரத்துக்கு
கல்லாலெறிந்து களவாய்
மாங்காய் திண்டது எல்லாம்...(ஞாபகம்)
பழசுகளைநினைக்கும்படி நல்லா எழுதுங்கோ
சுந்தரி
//ramachandranusha said...
(மீண்டும்) நல்ல நினைவிடை தோயல். நிங்கள் பாவிக்கும் பெயர்களுக்கு தமிழகத்தில் வேறு பெயர் இருக்க வேண்டும்//
வணக்கம் உஷா
வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். நீங்கள் சொல்லுமாற் போல மாம்பழங்கள் ஏராளமான வகையிருந்தாலும் அவற்றில் பல, இடத்துக்கு இடம் வேறு பெயர் கொண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றன. நம்மோடு வாழ்ந்த மரங்களையும் சூழலையும் பிரிந்து வாழ்வது உண்மையிலேயே மனதைக் கனக்க வைக்கும்.
சிறுவயதில் இப்படி நாம் செய்த வியாபாரம் பணத்தின் அருமையை உணரச்செய்யும் என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
//சயந்தன் said ... (November 19, 2006 6:56 PM) :
கறுத்தக் கொழும்பான் எண்டால் எனக்கு உயிர். சின்னதா காய்க்க தொடங்கின உடனேயே அதை எண்ணி குறிச்சுக் கொள்ளுவன்.//
வணக்கம் சயந்தன்
கறுத்தக்கொழும்பானின் விசேசம் நீண்ட பெரிய பழமாகவும், அதித சுவையும் முன் நிற்கும்.
கோயிலில் பழங்களின் படையல் இருக்கும் போது பூசை முடிந்து உபயகாரர் பங்கு பிரிக்கும் போது கறுத்தக்கொழும்பானில் அதிக கவனம் இருக்கும்.
உமக்கு மட்டும் இப்படி அடிக்கடி சோதனை வருவது குறித்து மனம் வருந்துகின்றேன்:-))
மாம்பழம்...ஆகா..நினைக்க நினைக்க இனிக்கும் முக்கனிகளில் முதற்கனி.
நீங்கள் சாப்பிடுவது போலச் சாப்பிடுவது எனக்கும் பிடிக்கும். நன்றாக உள்ளங்கையில் வைத்துக் கசக்கிக் கொண்டு ஒரு முனையில் கடித்துச் சுர்ரென்று உறிஞ்சி...பிறகு மாங்கொட்டையை வெளியே எடுத்து...அடடா! சுகமோ சுகம்.
நீங்கள் சொல்லும் கருத்தக் கொழும்பாம் இந்தியாவில் எப்படி அழைக்கப்படுகிறதென்று தெரியவில்லை. சப்பட்டைதான் நீங்கள் சொல்லும் வண்டு துழைக்கும் பழம். மல்கோவா என்ற பச்சைத்தொலிப் பழமும் சுவையானது. இனிப்புக் குறைவான கிளிமூக்கு. சின்னஞ்சிரிதான பச்சரிசி. இன்னும் கொஞ்சம் இருக்கின்றன. பெயர்கள் நினைவில்லை.
மாங்காய் என்றால் அதைக் கீறித் துண்டாக்கி உப்பும் மிளகாய்ப் பொடியும் கலந்து தொட்டுக்கொண்டு நரிச்நரிச்சென்று பல்கூசத் தின்பதும் சுகம்.
மாங்காய்த் துவையல், மாங்காய்க் குழம்பு, மாங்காய் ரசம், மாங்காய்ச் சோறு, மாங்காய்ப் பச்சடி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நீங்கள் சொன்ன பிறகு மாம்பழப் பிட்டும் உண்ண ஆசை பெருகுகிறது.
பிரபா, அமீரகத்தில் உலகில் உள்ள அனைத்துபொருள்களும் கிடைக்கும். ஸ்ரீலங்காவினர் நிறைய இருப்பதால் இப்பழமும் கிடைக்கலாம். கடைகளில் ஒவ்வொருபழமும் பல்வேறு தினுசுகள் கிடைக்கும். வருடம் முழுவதும் எல்லா பழங்களும் கிடைக்கும், தேடிப் பார்த்துவிடுகிறேன், முடிந்தால் படம் கிடைத்தால் எடுத்துப் போடவும், இப்படி நாக்கு ஊற வைத்து விட்டீர்களே :-)
கிளீமூக்கு மாங்காய், உப்பு, மிளகாய்பொடி தொட்டு தின்பது, கட்டம் தாண்டும் ஆட்டம்,பாண்டி (ரைட்டா கொய்ட்டா)
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாழ்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்குப் போட்டு திங்கலாம்.
இதைப் படிக்காமல் ஒண்ணாங்கிளாசில் இருந்து இரண்டாவதுக்கு பிரமோஷன் கிடைக்காது :-)
பணத்தின் அருமை அன்றே தெரிந்துக் கொண்டதால், ஒரு பொருளை வாங்க ஒன்பது முறை யோசிப்பது போன்ற
'கெட்ட பழக்கங்கள்' ஏற்பட்டுவிட்டன.
அருமையான நினைவூட்டல். மாமரங்க இருந்ததில்லை என்றாலும், மாம்பழச்சோலை எனும் இடத்தில் இருந்து மாம்பழங்கள் நிறைய வீட்டிற்கு அனுப்புவார் அப்பாவின் நண்பர் ஒருவர். என் மகனுக்கும் மிகவும் பிடித்த பழம் என்பதால் இப்போதும் நிறைய மாம்பழங்கள் வாங்குவதுண்டு. இந்தியாவில் நிறைய வகைகள் உண்டு. நீங்கள் சொன்ன வகைகள் கேட்டதில்லை. அழகான புகைப்படங்களுடன் அருமையான பதிவு
சிறு பருவத்தை மீளவும் நினைவில் கொண்டுவந்த பதிவு பிரபா.
அம்மம்மா வீட்டில் சுற்றிவர மாமரங்கள் தான்.ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு சுவையுள்ள மாம்பழங்கள். மாம்பழங்கள் விழுகின்ற காலத்தில் இரவில் விழுகின்ற மாம்பழங்களின் சத்தத்தையே செவிகள் உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கும்.சத்தைக் வைத்து எந்தெந்த மரங்களில் பழங்கள் விழுந்திருக்கும் என்பதை துல்லியமாக எடை போட்டு வைத்திருப்பேன்.அம்மம்மா கதவு திறக்கும் வரை காத்திருந்து (அல்லது அம்மம்மாவை இழுத்துக் கொண்டு)முற்றத்தில் உள்ள எல்லா மின்விளக்குகளையும் போட்டுக் கொண்டு ஒவ்வொரு பழமாக சேகரிப்பேன்.(மாம்பழ வெளவால்கள் சடசடத்துப் பறக்கும்.அந்தப் பயத்தினால் இரவில் தனியே முற்றத்துக்கு வருவதில்லை)
பயம் அதிகமான நாட்களில் விழுகின்ற மாம்பழங்களை எண்ணியவாறே தூங்கிவிடுவேன்.கூரையிலும் பழங்கள் விழுந்து உருளும்.காலையில் எழும் போது அம்மம்மா பழங்களைச் சேகரித்து வைத்திருப்பா.
கறுத்தக் கொழும்பானை சாக்கினால் மூடித்தான் அம்மம்மா பழுக்க வைப்பா.பெரிய பழங்களை எல்லாம் நான் எடுத்துக் கொள்வேன்.
நான் ஊரப் பிரிந்து சென்றேன்.எனது அம்மம்மா என்னைப் பிரிந்த துயரத்தில் வாழ்ந்து என்னைக் காணும் ஆவலில் காத்திருந்து என்னைக் காணாமலே இறந்தும் போனா.
அம்மம்மாவுடன் அந்த மாம்பழக் காலங்களும் விடைபெற்றுப் போயின.
நல்ல நினைவு மீட்டல் பதிவு... பிரபா நன்றிகள்.............உந்த கறுத்த கொழும்பு மாம்பழம் மரங்களை சிங்கப்பூர் மலேசிய பென்சனியர்கள் வீட்டிலை தான் .......யாழிலை அதிகம் கண்டிருக்கிறன். எதாவது சம்பந்தம் இருக்கோ தெரியாது
உந்த புரமோசன் பந்தம் பிடிக்கிறது எல்லாத்துக்கும்...சிங்கள பகுதிகளில் கறுத்த கொழும்பான் மாம்பழம் தான்.. கை கொடுத்திருக்கிறது.... அந்த காலம்
அந்த காலம்...சின்னனில் என்னோடு படிச்ச வசதி படைச்ச ஒண்டு கறுத்த கொழும்பானிலும் பார்க்க மல்கோவா மாம்பழம் தான் ருசியானது .... என்று என்னோடை வாதிடும்.... ... எனக்கென்ன தெரியும்.. அதை பற்றி..
//மலைநாடான் said...
பிரபா!
அருமையான மீள்நினைவு. அம்மம்மா உங்களையும் மாம்பழம் என்றுதான் அழைப்பாவோ? :) அதுசரி, சின்னத்துரையரின்ர மதிலெல்லாம் பாழாக்கின ஆள் நீர்தானோ? :))//
வணக்கம் மலைநாடான்
நான் கடைக்குட்டி என்பதால் மாம்பழம் தவிர இன்னும் பல பட்டப்பெயர் உண்டு:-)
ஊர்ச்சுவர் முழுக்க எங்கட பெடியளின்ர கைவண்ணம் தான், ஒரு சில மதில்கள் புகையிலை மறைத்துத் தப்பிவிடும்:-))
நீங்கள் சொல்வது போல் கறுத்தக்கொழும்பான் போல ஒரு வகை மாம்பழத்தை உருசித்தேன், பச்சத்தண்ணி போல இனிப்பேயில்லை:-(
//Anonymous said...
பழங்களைக் காட்டி
படிப்பவர்களை எல்லோரையும்
பழய உலகுக்கு அழைத்துச்
சென்று விட்டீர்கள்
கானா பிரபா.//
வாசித்துக் கருத்தைத் தந்தமைக்கு என் நன்றிகள் நண்பரே
என் பதிவில் வந்து பின்னூட்டம் இட்டு என்ன உற்சாகப்படுத்தியதற்கு நன்றி கானா பிரபா...
முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பற்றி இப்படி ஒரு பதிவா.. படித்ததிலே சுவைத்தது மாதிரி ஆகிவிட்டது
பிரபா,
உங்களைமாதிரியே மாம்பழம் பற்றிய அனேக நினைவுகள் எனக்கும் இருந்திருக்கின்றது. எங்கள் வீட்டுச்சூழலில் கறுத்தக்கொழும்பான் மாமரங்கள் பத்துக்கு மேலே நின்றதாய் நினைவு. நீங்கள் சொன்னமாதிரி தோலைக் கத்தியால் சீவாமால் அப்படியே கடித்துச் சாப்பிடுவதில் இருக்கும் சுவைக்கு எதுவும் நிகராகாது. எங்கள் வீட்டில் ஒரு செம்பட்டான் மரம் இருந்து நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒரே வண்டு/புழுவாய்த்தானிருக்க்ம் இரண்டு கடி கடிக்கமுன்னரே. அப்போதெல்லாம் அது அந்த மரத்தின் பிழை என்றுதான் நினைத்தேன். இப்போது உங்கள் பதிவைப்பார்த்தால் செம்பட்டான் மாமரங்களுக்குரிய ஒரு பொதுவான பிரச்சினை அது என்று நினைக்கத் தோன்றுகின்றது. செம்பழத்தில் இருக்கும் சேலம் மாங்காயின் சுவைக்கு -உப்பு உறைப்போடு சாப்பிட- எதுவும் நிகராகாதுதான் என்ன?
....
ஊருக்குப் போகமுடியாது என்பதால் அங்கே வீடிருக்கா இல்லை மாமரங்கள் இப்போதும் இருக்கா என்று தெரியவில்லை. ஆனால் 2004ல் திருநெல்வேலிச் சந்தையிலும், முருகண்டியிலும், கிளிநொச்சியிலும் நிறைய மாம்பழங்கள் வாங்கிச் சாப்பிட்டிருக்கின்றேன்.
....
நல்லதொரு பதிவு, பிரபா!
//மங்கை said...
இதுக்கு இணையா எதுவும் இல்லை... கையில் உப்பு மிளகாய்த்தூள் வைத்து தொட்டு சாப்பிடும் சுகம்...ஹ்ம்ம்ம்... இதே போல் நெல்லியும்...
மாங்கொட்டை தாளம் விளையாட்டை இங்க பாண்டி ஆட்டம் என்று சொல்றது உண்டு..//
வணக்கம் மங்கை
தங்களின் கருத்துக்கு என் நன்றிகள்.
மிளகாய்த்தூள் உப்புக்கு மாங்காய், நெல்லி சரியான ஜோடி, சொல்லவே வாயூறுது:-)
இப்படியான பதிவுகள் மூலம் ஈழத்திலும் தமிழகத்திலும் பயன்படுத்தப்படும் ஒத்த சொற்களை இனம் காணுவது மிகவும் மகிழ்ச்சி தருகின்றது.
//சுந்தரி said...
கானா
நீங்க காட்டின மாம்பழங்களில எங்கையாவது கறுத்த கொழுந்து மாம்பழம் தெரியுதோ எண்டு பாத்தன். ம்ம்கூ.... நினைத்தாலே இனிக்கும் அந்தப் பழம் சாப்பிட்டா எப்பிடியிருக்கும்?...அதெல்லோ மாம்பழம்.//
வணக்கம் சுந்தரி
கறுத்தக்கொழும்பானின் படம் தேடி நானும் அலுத்துவிட்டேன். யாராவது தந்தால் பதிவில் போடுவேன். கறுத்தக்கொழும்பானைப் புட்டோட குழைச்சுச் சாப்பிட்டா அந்த மாதிரி:-)
கதிரவேல் இன்னும் இருக்கிறாரே?
கானா பிரபா
சுவையான மாம்பழப் பதிவு எழுதியிருக்கிறீர்கள். ஆஹா படிக்கும் போதே இனிக்கிறதே! நீங்கள் ரசித்து எழுதி எங்களையும் ருசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
//G.Ragavan said...
மாம்பழம்...ஆகா..நினைக்க நினைக்க இனிக்கும் முக்கனிகளில் முதற்கனி.//
வணக்கம் ராகவன்
இப்படியான சமாச்சரங்களைப் பற்றி நிறையவே சிலாகித்துச் சொல்லக்கூடியவர்களில் நீங்களும் ஒருவர். கறுத்தக்கொழும்பானைத் தமிழ் நாட்டில் எப்படி அழைப்பார்களோ தெரியவில்லை.
//மாங்காய்த் துவையல், மாங்காய்க் குழம்பு, மாங்காய் ரசம், மாங்காய்ச் சோறு, மாங்காய்ப் பச்சடி//
நீங்கள் சொன்ன சமாச்சாரங்களில் பல இங்கு வெளிநாட்டின் பாட்டிலில் தான் கிடைக்கின்றன:-(
கலக்கிவிட்டீங்கள் பிரபா.
கள்ளமாங்காய் அடித்து சுவரில் குத்தி சாப்பிடும் ருசியே தனி அந்தக்காலம் இனி திரும்ப வராது. கறுத்தகொழும்பான் மாம்பழம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் ஒருதரும் அதனை இது வரை படம் பிடிக்கவில்லை என்பது கவலைதான். முடிந்தால் படம் எடுத்து அனுப்புகிறேன் யாழில் இருந்து மக்கள் வர வழியில்லை மாம்பழம் எப்படி வருவது.
//மாங்காய் காலத்தில, ஒரு தட்டில உப்பு, மிளகாய்த்தூளும் மாங்காயும் என்னோட வரும். ;)//
மதியின் கருத்துக்கள் வாயில் எச்சில் உறவைக்கிறது.
கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்
வணக்கம் உஷா
மாம்பழத்தைப் பற்றி நீங்களும் சுவையாக சொல்லிக்கொண்டே போகின்றீர்கள். தங்கள் பகிர்வுக்கு நன்றிகள். அமீரகத்தில் இப்படியான பல நம் நாட்டுப் பொருட்கள் அதிகம் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
உங்களைப் போலவே நூறு முறை யோசித்து கடை கடையா சுற்றி கடைசியில் பழைய கடைக்கே வந்து பொருளை வாங்கும் பண்பு எனக்கும் வந்துவிட்டது:-)
//பத்மா அர்விந்த் said ... (November 20, 2006 1:44 AM) :
அருமையான நினைவூட்டல். //
வணக்கம் பத்மா அர்விந்த்
செயற்கையான இனிப்புப்பண்டத்தை விடப் பலருக்கு மாம்பழம் உயிர் என்று தெரிகிறது, உங்களைப் போன்றவர்களின் பதிவுகளைப் பார்த்தால்.
இந்தியாவில் தானே விதம் விதமாகக் கிடைக்கின்றது, கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்.
தங்கள் வருகைக்கு என் நன்றிகள்
தமிழில் எழுதமுடியாமைக்கு மன்னிக்க,நீண்ட விடுமுறைக்கு பின் இப்போது தான் அலுவலகம்...
மாம்பழத்துக்கு இப்படி ஒரு ரசிகர் இருப்பது தெரிந்தால் மாம்பழமே சந்தோசப்படும் :)))
பட்டாசாக உள்ளது உங்கள் மாம்பழ நினைவுகள்...
:))))))))))))
//பஹீமா ஜகான் said...
நான் ஊரப் பிரிந்து சென்றேன்.எனது அம்மம்மா என்னைப் பிரிந்த துயரத்தில் வாழ்ந்து என்னைக் காணும் ஆவலில் காத்திருந்து என்னைக் காணாமலே இறந்தும் போனா.
அம்மம்மாவுடன் அந்த மாம்பழக் காலங்களும் விடைபெற்றுப் போயின//
வணக்கம் பஹீமா ஜகான்
தங்கள் வருகையையும் கருத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைந்த அதே வேளை, உங்கள் கருத்து என் மனதைக் கனக்க வைத்துவிட்டது. போர்ச்சூழல் என்ற ஒன்று நம் சின்னச்சின்ன ஆசைகளுக்குக் கூட விலங்கு போட்டுவிட்டது.
மாம்பழ சீஸன் இல்லாத சமயத்தில் இப்படி ஒரு பதிவை எழுதி மாம்பழம் சாப்பிடும் ஆசையை உண்டாக்கிய உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் :-))) நன்றாக எழுதியுள்ளீர்கள் உங்களின் மாம்பழ நினைவுகளை.
//சின்னக்குட்டி said...
நல்ல நினைவு மீட்டல் பதிவு... பிரபா நன்றிகள்.............உந்த கறுத்த கொழும்பு மாம்பழம் மரங்களை சிங்கப்பூர் மலேசிய பென்சனியர்கள் வீட்டிலை தான் .......//
சின்னக்குட்டியர்
புரமோஷனுக்கும், பெரியாட்களைப் பார்க்கப்போகேக்கையும் கறுத்தக்கொழும்பானும் போவார் என்று நானும் அறிகிறேன்.
என் பதிவை வாசித்த ஒருவர் சொன்னார் கறுத்தக்கொழும்பான் தான் மல்கோவாவை விட உருசி என்று. உங்கள் ரசனை வித்தியாசமாக இருக்கிறது, மல்கோவா மாம்பழம் சாப்பிட்ட அனுபவம் எனக்கு கிடையாது. கருத்துக்கு என் நன்றிகள்.
மாங்காயிலும் தெருவோரம் வண்டிகளில் விற்கும் உப்பிட்ட மாங்காய்களாஇ (ஒன்று 3 ரூபாய்) விட கள்ள மாங்காயில் இருக்கும் ருசி அதிகம்...... மாங்காய் களவெடுத்து அந்த வீட்டு நாய் துரத்த துரத்த ஓடும் அனுபவமே ஒரு தனி அனுபவம்
//மு.கார்த்திகேயன் said ... (November 20, 2006 12:32 PM) :
முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பற்றி இப்படி ஒரு பதிவா.. படித்ததிலே சுவைத்தது மாதிரி ஆகிவிட்டது//
பதிவை வாசித்துக் கருத்துச் சொன்னமைக்கு என் நன்றிகள் கார்த்திகேயன்.
தங்கள் பதிவுகள் சுவாரஸ்யமாக இருப்பதனால் தான் பின்னூட்டமிட என்னைத் தூண்டுகின்றது.
//டிசே தமிழன் said ... (November 20, 2006 1:46 PM) :
பிரபா,
உங்களைமாதிரியே மாம்பழம் பற்றிய அனேக நினைவுகள் எனக்கும் இருந்திருக்கின்றது.//
வணக்கம் டி சே
அந்தக் காலகட்டங்களில் இருந்தோருக்கு நம்மை மாதிரியே ஒத்த அனுபவங்கள் வாய்க்குமல்லவா?
மாம்பழங்களின் அளவு பார்த்து அண்ணனோடு பங்குபோட்ட நினைவும் இப்போது வருங்கின்றது. முறிகண்டியில் கச்சானுக்குப் பக்கத்தில் மாம்பழங்கள் நிரையாகக் குந்தியிருக்குமல்லவா?
//கடல்கணேசன் said...
கானா பிரபா
சுவையான மாம்பழப் பதிவு எழுதியிருக்கிறீர்கள். ஆஹா படிக்கும் போதே இனிக்கிறதே! நீங்கள் ரசித்து எழுதி எங்களையும் ருசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்//
வணக்கம் கடல்கணேசன்
வலைப்பதிவாளர்களில் நன்றாக எழுதக்கூடிய வல்லமை பெற்றவர்களில் ஒருவராக இருக்கும் தங்களின் பாராட்டு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கின்றது. மிக்க நன்றிகள்.
//தமிழன் said...
கலக்கிவிட்டீங்கள் பிரபா.
கள்ளமாங்காய் அடித்து சுவரில் குத்தி சாப்பிடும் ருசியே தனி அந்தக்காலம் இனி திரும்ப வராது.//
வணக்கம் வந்தியத்தேவன்
நம் நாட்டிலிருந்து பதியும் உங்களைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. வெள்ளவத்தை மார்க்கற்றில கறுத்தக்கொழும்பான் இருந்தால் படமெடுத்து அனுப்புங்கோ:-)
பிரபா, சிட்னியில இப்ப மாம்பழ சீசன் எண்டது பலருக்குத் தெரியாது போல. ஃபிளமிங்டன் சந்தைப் படங்கள் நல்லாயிருக்கு (போன சனிக்கிழம எடுத்திருக்கிறியள் போல இருக்கு). மாம்பழத்தைப் பற்றி பெரிய ஆராய்ச்சி தான் செய்திருக்கிறியள். தெரியாத பல விஷயங்களைத் தந்தமைக்கு நன்றி.
//கறுத்தக்கொழும்பான் தான் மல்கோவாவை விட உருசி என்று. உங்கள் ரசனை வித்தியாசமாக இருக்கிறது/#
நான் எங்கை சொன்னன் மல்கோவா ருசி எண்டு....எனக்கு மல்கோவா.. என்ன நிறம் எண்டே தெரியாது..
என்னோடை படிச்சது ஒண்டு மல்கோவா திறம் எண்டு அடிபடும் என்று தான் சொல்லியிருக்கிறன்...
எங்கள் ஓட்டு எப்பவும்...ககொ..மாம்பழத்துக்கே..
ஹூம்................
கடைசியாத் தின்னது உங்கட சிட்னியிலேதான்.
வத்தலகுண்டுலே இருந்தப்ப ஒரு ச்சின்ன மாம்பழம் (பேர் நினைவில்லை)
கிடைக்கும், ஒரு ச்சின்ன எலுமிச்சம்பழம் சைஸில்.
ஹைய்யோ............. இனிப்புன்னா அப்படி ஒரு இனிப்பு.
//செந்தழல் ரவி said...
மாம்பழத்துக்கு இப்படி ஒரு ரசிகர் இருப்பது தெரிந்தால் மாம்பழமே சந்தோசப்படும் :)))//
மீண்டும் வருகை தந்து கருத்துக்களைத் தந்தமைக்கு நன்றிகள் தலைவா:-))
//செந்தில் குமரன் said...
மாம்பழ சீஸன் இல்லாத சமயத்தில் இப்படி ஒரு பதிவை எழுதி மாம்பழம் சாப்பிடும் ஆசையை உண்டாக்கிய உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் :-))) நன்றாக எழுதியுள்ளீர்கள் உங்களின் மாம்பழ நினைவுகளை. //
வணக்கம் குமரன்
மாம்பழ சீசன் இல்லாவிட்டாலும், வரப்போகும் சீசனில் சாப்பிடுவதற்கான முன்னோட்டம் இது:-))
கிளிச்சொண்டு பற்றியும் ரெண்டு வசனம் எழுதியிருக்கலாம்.
விலாட்டு மா சின்னதாயிருக்கேக்கயே காய்க்கிறதும் அதின்ர நிறம், வடிவம் எல்லாம் புதுசா இருக்கிறதாலயும் பாக்கிறதுக்குப் பிடிக்கும். என்றுமே விலாட் சாப்பிடுவதற்குப் பிடித்ததில்லை.
எங்கட வீட்டில நிண்ட 3 மாமரங்களும் கறுத்த கொழும்பான்கள்தாம். வேறெந்த மாவினமும் இல்லை. எங்கள் சுற்றாடலிலும் இருந்த ஞாபகமில்லை.
இடியப்பமும் சொதியும் போல புட்டும் மாம்பழமும் நல்ல சோடிகள்.
அருண்மொழி சொன்னதுபோல வீதியோரங்களில் வைத்து விற்கப்படும் வெட்டி உப்பு, தூள் போட்ட மாங்காய்களில் அதிக விருப்பம். யாழ்ப்பாணத்தில் விளையாட்டுப் போட்டிகள், நிகழ்வுகள் என்றால் அதுவே முழுநேரத் தீனியாகிவிடும்.
கொழும்பிலிருந்து சில நாட்களில், தொலைக்காட்சியில் யாழ்ப்பாண கறுத்தகொழும்பான் மாம்பழத்துக்கு சிங்களத்தில் விளம்பரம் செய்ததைப் பார்த்தேன்.
//அருண்மொழி said...
மாங்காயிலும் தெருவோரம் வண்டிகளில் விற்கும் உப்பிட்ட மாங்காய் (ஒன்று 3 ரூபாய்) விட கள்ள மாங்காயில் இருக்கும் ருசி அதிகம்//
வணக்கம் அருண்மொழி
யாழ்பாணத்தில் அதிகம் தெருக்கடைகளின் தானே உப்பிட்ட மாங்காய் விற்கப்படும். வண்டி விற்பனை குறைவு இல்லையா? நாய் துரத்தப் பழம் பறித்த அனுபவம் எனக்கு வேறி நிகழ்வில் நடந்தது. சமயம் வரும் போது சொல்லுறன்
//kanags said...
பிரபா, சிட்னியில இப்ப மாம்பழ சீசன் எண்டது பலருக்குத் தெரியாது போல. ஃபிளமிங்டன் சந்தைப் படங்கள் நல்லாயிருக்கு//
வணக்கம் சிறீ அண்ணா
போன சனிக்கிழமை படம் எடுக்கப் போய், ஒரு இளம் வியாபாரி படம் எதுக்கு எடுத்தனி என்று கத்தப் பூனை மாதிரி நழுவிவிட்டேன். இப்ப சிட்னியில திரும்பின பக்கமெல்லாம் மாம்பழம்தானே.
//சின்னக்குட்டி said ... (November 20, 2006 9:49 PM) :
என்னோடை படிச்சது ஒண்டு மல்கோவா திறம் எண்டு அடிபடும் என்று தான் சொல்லியிருக்கிறன்...
எங்கள் ஓட்டு எப்பவும்...ககொ..மாம்பழத்துக்கே..//
சின்னக்குட்டியர்
கருத்துக்குழப்பத்துக்கு மன்னிக்கவேண்டுகிறேன், பரிகாரமாக ஒரு பெட்டி கறுத்தக்கொழும்பான் (கிடைத்தால்) அனுப்புகிறேன்.
//கலாநிதி said...
அருமையாக எழுதியிருக்கிறீங்க பிரபா அண்ன உம்மட கட்டுரை வாசிக்க மாம்பழம் போல சுவையா இருக்கு.பச்ச மாங்காய உப்பு,மிளகா தூளும் கலந்து தின்னிற மெதட் இருக்கே உத அடிக்க எதலாயும் முடியாது.. //
கலாநிதி
நூற்றில ஒரு வார்த்தை சொன்னீங்கள், உப்புக்கட்டியை மாங்காயில தேய்ச்சுப் போட்டு சாப்பிட்டா சொல்லி வேலை இல்லை.
ஆகா ஆகா மாம்பழம் !!!!!!
வாயுருது.......;(
வாசித்துவிடு மிச்சம் சொலுரன்....
திலகன்
//நம் நாட்டிலிருந்து பதியும் உங்களைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. வெள்ளவத்தை மார்க்கற்றில கறுத்தக்கொழும்பான் இருந்தால் படமெடுத்து அனுப்புங்கோ:-) //
வெள்ளவத்தை மார்க்கெட்டில் யாழ்ப்பாண அம்பே என்று விக்கிறார்கள் அது கறுத்தகொழும்பான் அல்ல. நிச்சயம் கறுத்தகொழும்பான் படம் கிடைத்தால் அனுப்புகிறேன். வாழ்க்கையில் சும்மா கண்ட கண்ட விடயங்களை படம் எடுக்கும் நாம் எமது சொத்துக்களை படம் எடுத்து வைக்கவில்லை . உதாரணம் கொம்படி கிளாலிப் பாதை.
மாங்காய்ச் சம்பலும் ரேஸ்ட் தான் பாடசாலை நாட்களில் அடிக்கடி தின்னும் ஒரு உணவு.
கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்
//துளசி கோபால் said...
ஹூம்................
கடைசியாத் தின்னது உங்கட சிட்னியிலேதான்.//
வணக்கம் துளசிம்மா
சிட்னியில் மாம்பழ சீசனில் வந்ததால ஞானப்பழம் கிடைச்சிருக்கு உங்களுக்கு.
நீங்க சொல்லும் எலுமிச்சை சைஸ் மாங்காய் நம்மூரிலும் கிடைக்கும்.
வணக்கம் கானா
கதிரவேலு செத்து கால் நூற்றாண்டாச்சு ஆனா நல்ல மனுசன் உதுகளெல்லாம் வயசுகுக்ழப்படியெண்டு மன்னிச்சுப்போடும்.அந்தக்காலத்தில அங்கெயெல்லாம் உதுகளெல்லாம் சகஜசப்பா.
எத்தனை விதமான மாம்பழங்கள்! அம்பலவி, செம்பாட்டான், விலாட்டு என்ற மாம்பழங்கள் மத்தியில் கறுத்தகொழும்பான் தாரகை நடுவில தண்மதி மாதிரியல்லோ! அதுக்;கு சரியான கிராக்கி
நன்றி.
//வசந்தன்(Vasanthan) said...
கிளிச்சொண்டு பற்றியும் ரெண்டு வசனம் எழுதியிருக்கலாம்.//
வணக்கம் வசந்தன்
கிளிச்சொண்டு மாம்பழம் பற்றி நான் அறியவில்லை அல்லது வேறு பெயரில் அது எம் ஊரில் புழங்கியிருக்கலாம். பாண்டி மாம்பழம் பற்றித் தற்போது சேர்த்திருக்கிறேன்.
விளையாட்டுப்போட்டிகளிலிலை மதில் பக்கம் இருக்கிற வீடுகளில் மாங்காய் அடித்துச் சாப்பிட்டுப் பள்ளிக்கூடத் தண்ணீர்ப் பைப்பில தண்ணீர் குடிச்சது இப்ப நினைவுக்கு வருகுது.
//Anonymous said...
ஆகா ஆகா மாம்பழம் !!!!!!
வாயுருது.......;(
வாசித்துவிடு மிச்சம் சொலுரன்....
திலகன்//
வணக்கம் திலகன்
படத்தைப் பார்த்து வாயூறுரதை விட்டிட்டு ஒரு மாம்பழம் சாப்பிட்டிட்டு வந்து பதிவைப் படியுங்கோ:-))
வணக்கம் பிரபா
சற்று வித்தியாசமாக இருந்தது உங்கள் பதிவு.
பாடசாலை வகுப்பு நேரத்தில் உப்பு, தூள் போட்ட மாங்காய் சாப்பிடுவது நம் வழமை. ஒரு மாங்காய் வகுப்பிலுள்ள என் தோழியரின் மேசைக்கு கீழாக அனுப்பப்பட்டு ஓவ்வொருவரும் ஒரு கடி கடித்து மற்றவருக்கு அனுப்பப்படும். என் மகளிடம் இப்போது இதைச் சொன்னேன், அவளால் சகிக்கமுடியவில்லை:-)
//சுந்தரி said...
வணக்கம் கானா
கதிரவேலு செத்து கால் நூற்றாண்டாச்சு ஆனா நல்ல மனுசன் உதுகளெல்லாம் வயசுகுக்ழப்படியெண்டு மன்னிச்சுப்போடும்.அந்தக்காலத்தில அங்கெயெல்லாம் உதுகளெல்லாம் சகஜசப்பா.//
வணக்கம் சுந்தரி,
நீங்கள் சொல்லும் கதிரவேலர் போல பல நல்ல இதயங்களை நம்மூரில் பார்க்கலாம் இல்லையா? மீண்டும் வந்து பதிலளித்தமைக்கு என் நன்றிகள்.
நீங்கள் கேட்ட கறுத்தக்கொழும்பானின் படம் நண்பர் வந்தியத்தேவன் புண்ணியத்தில் கிடைத்திருக்கிறது. இதோ என் பதிவில் போடுகின்றேன்.
//தமிழன் said ... (November 21, 2006 2:44 PM) :
வெள்ளவத்தை மார்க்கெட்டில் யாழ்ப்பாண அம்பே என்று விக்கிறார்கள் அது கறுத்தகொழும்பான் அல்ல. நிச்சயம் கறுத்தகொழும்பான் படம் கிடைத்தால் அனுப்புகிறேன். வாழ்க்கையில் சும்மா கண்ட கண்ட விடயங்களை படம் எடுக்கும் நாம் எமது சொத்துக்களை படம் எடுத்து வைக்கவில்லை . உதாரணம் கொம்படி கிளாலிப் பாதை.
மாங்காய்ச் சம்பலும் ரேஸ்ட் தான் பாடசாலை நாட்களில் அடிக்கடி தின்னும் ஒரு உணவு.
கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்//
உங்களின் ஆதங்கம் தான் எனக்கும், ஆனாலும் இந்த வருட முற்பகுதியில் ஊருக்குப் போன போது இயன்றவரை அங்கேயிருக்கும் முக்கிய நினைவிடங்களைப் படம் பிடித்துக்கொண்டேன்.
கறுத்தக்கொழும்பானின் படம் தருவதாகச் சொல்லி ஒரே நாளில் அதைச் சாதித்தும் காட்டியிருக்கிறீர்கள்.
இதோ படத்தைப் பதிவில் சேர்த்திருக்கிறேன்.
உங்களைப் போன்ற வலையுலக நண்பர்களைக் காணும் போது உண்மையில் மகிழ்ச்சியும் பெருமிதமும் வருகின்றது. மிக்க நன்றிகள் உங்கள் உதவிக்கு.
வணக்கம் கானா
படத்துக்கு நன்றி.
இந்த கொழும்பு கறுத்த கொழும்பானுக்கும் யாழ்ப்பாண கறுத்த கொழும்பானுக்கும பருமனிலும், சுவையிலும் சரியான வித்தியாசமிருக்கு.. யாழ்ப்பாண கறுத்த கொழும்பு மாம்பழம்நீணட பெரிய பழம் சரியான இனிப்பப்பழம். அதுக்கு காரணம் யாழ்பாண தட்ப வெப்ப காலநிலைதான்.
ஆவையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கih எண்டது மாதிரித்தான் கொழும்பு கறுத்த கொழும்பு மாம்பழம்.
உங்கள் பதில்களுக்கும் என் நன்றிகள.;
பிரபா!
மிக இனிய பதிவு!
தாங்கள் ஊருக்குப் போன போது ;ஓர் மாம்பழப் பதிவு போடுவதேன முடிவெடுத்தது போல் உள்ளது.
உங்கள் படங்கள்!
கடைசிப் படத்தில் மண்ணின் செழுமை தெரிகிறது.
நிற்க! என் நண்பர் ஒருவர் இங்கே ; தன் மகளை "என்ர மாம்பழம்" எனத் தான் கொஞ்சுவார்; அது மாத்திரமன்றி என் மகள் முறையானவள்;தன் சற்று நிறம் குறைந்த மகளை "கருத்தக் கொழும்பான்" எனவும்;நிறமானவளை "வெள்ளைக் கொழும்பான் "எனவும் செல்லமாக அழைப்பாள். எந்தப் பழத்துக்குமே இல்லாத ஓர் ஈர்ப்பு எம் மக்களுக்கு இந்த மாம்பழத்துடன் இருந்ததால் தான் ; ஏதேச்சையாக இவை நடந்துள்ளன.
பிட்டும் மாப்பழமும் ஈழத்தில் தேசிய காலையுணவு என்றாலும் மிகையில்லை.
எனது மண்ணின் வகைகளாக "கருத்தக் கொழும்பான்;வெள்ளைக் கொழும்பான்;அம்பலவி;செம்பாட்டான்; கிளிச்சொண்டான்" இருந்துள்ளன ; விளாட்;சேலம் பின்பு வந்த இனங்களேன்பதே!! என் அபிப்பிராயம்.
அன்றைய நாட்களில் கோவில்;பாடசாலை; வைத்தியசாலை;அரச காரியாலயங்களில் நிழலுக்காகவும் பயனுக்காகவும்; நட்ட மாமரங்களில் விலாட் மரமில்லை;இதைக் நீங்களும் கவனித்திருக்கலாம்.
அடுத்து இவ்வினம் ஒட்டு மாங்கன்று காலத்துக்கு பின் பிரபலமானது.இவ்வினத்தில் மிக உயர்ந்த மரம் காண்பது அரிது.
அடுத்து இங்கே பிரேசிலில் இருந்து வரும் மாம்பழங்கள் சுவை; உருவம்;நிறம்;வாசம் யாவும் விளாட் போல் உள்ளதால், இங்கிருந்து தான் எமக்கு வந்துதோ!!! எனும் ஐயம் எனக்குண்டு.
தற்போது;இந்தியாப் பழங்களும் சாப்பிடக் கிடைப்பதால்;சிங்கப்பூர் சென்றபோது தாய்லாந்து,மலேசியப் பழங்களும் சாப்பிடக் கிடைத்தன. அத்தனையிலும் எங்கள் கறுத்தக் கொழும்பானே!!!!சுவை ;மணத்தில் சிறந்த தென்பது என் அபிப்பிராயம்.
உங்களைப் போல் வெள்ளைக் கொழும்பானைக் கசக்கிச் சாறு குடிக்கும் பழக்கம் எனக்குமுண்டு.
எனக்குப் புளிப்புச் சுவையில் நாட்டமில்லாததால்; பச்சை மாங்காய் சாப்பிட்டது குறைவு; ஆனால் தூள்; உப்பு போட்டு சாப்பிட்டுள்ளேன்.
வன்னி மக்கள் மான்;மரை இறைச்சிக்கு மாங்காய் போட்டுச் சமைப்பர். நாம் தேசிக்காய் விடுவது போல்.மாங்காய் கிடைத்தாலே!!! இங்கே மான் ;மரை இறைச்சி வாங்குவார்கள்.
ஊரில் புளித் தட்டுப்பாடான காலங்களில்; இந்த மாவடு மிகப் கை கொடுக்கும் சமையலுக்கு...
மாங்காய் காயில் எவ்வளவு புளிக்கிறதோ!! அந்த அளவு பழுத்தால் இனிக்குமாமே!!!
இப்போ ஊரிலும் எவருமே!!நீங்கள் குறிப்பிட்ட வகையில் மாங்காய் பழுக்க வைப்பதில்லை. இந்தியா போல் முற்றுமுன் காயகவே பிடுங்கி!!! ஓர் அறையில் இட்டு; ஏதோ ஓர் இரசாயனத் திரவத்தையும் தெளித்து விடுகிறார்களாம்; மாங்காய் சதை மஞ்சள் நிறத்துக்கு வருமாம்.
"பிஞ்சில் பழுத்தல் தான்";;;; வியாபாரிகளிடம் வாங்கும் பழங்களின் நிலை அப்படியே!!!!
தமக்கென எடுப்பவர்களே!!!சற்று வினைக்கெட்டு பழைய முறைகளைக் கைக்கொள்ளுகிறார்கள்.
வெற்றிலை போட்டால் வாய் சிவக்கும்; எங்கள் கறுத்தக் கொழும்பான் சாப்பட்டால் கை மணக்கும்.
நான் மலையகத்தில் வேலை செய்யும் போது;உடன் வேலை செய்த சிங்கள நண்பர்கள் பழம் கொண்டுவரச் சொல்வார்கள்; ஒருவர் ஓர் கறுத்தக் கொழும்பான் ஒட்டு மாங்கன்று கொண்டு வரச் சொல்லிவிட்டார்.அந்த அளவு எங்கள் மண்ணின் அடையாளம்.
எங்கள் வாழ்வுடன் கலந்த பழம்.
எல்லாவற்றையும் தொலைத்து விட்டோம்.
யோகன் பாரிஸ்
என் புளக்கர் பிரச்சனையால் மின்னஞ்சலிடுகிறேன்.
//யாழில் ஒரு காலத்தில் பல இடதுசாரிகளின் திருமணங்கள் தமிழில்தான் தான் நடந்தன. சில கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்கிறார்கள். //
இதற்கெல்லாம் நன்றிகள் சொல்லி எங்களைப்பிரிக்காதீர்கள். உங்களைப்போன்ற ஒரு ஈழத்தமிழர் வலைப்பதிவில் இல்லையே என்ற கவலையைபோக்க வந்தவர் நீங்கள் உங்கள் எழுத்துக்களால் கவரப்பட்டு நான் அடுத்த நாள் வெள்ளவத்தை மார்க்கெட்டில் வாங்கிய மாம்பழங்கள் அவை ஆனாலும் சுவை யாழ்ப்பாண மாம்பழம் மாதிரி இல்லை.
சில கொஞ்சம் நிறம் குறைந்த த்ங்கள் மகள்களைஇ கறுத்தகொழும்பான் எனக்கூப்பிடிவார்கள்,. காரணம் அவர்களில் கலரும் அவர்கள் கறுத்தகொழும்பு மாம்ப்ழம் மாதிரி இனிமையானவர்கள் என்பதாலும்.
கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்
அறிமுக நண்பன் பிரபா அவர்களுக்கு!
புலம்பெயர்ந்தாலும் மாம்பழ சுவைபெயராமல் ஆக்கம் தந்தீர். யாழ்ப்பாணத்தில் இருக்கிற கெபஞச அசௌகரிய சூழ்நிலையால நிறைய மாம்பழங்கள் கொழும்புக்கு அனுப்பமுடியாமல் யாழ்ப்பாணத்திலேயே தேங்கிக் கிடக்கிற தவம் கிடக்கிற கதை நீங்க அறிஞ்சிருக்கலாம். அதனாலோ என்னவோ எல்லா மாம்பழங்களையும் கொஞ்சம் அசைபோட சந்தர்ப்பம் கிடச்சுது. அதப்போலவே உங்களின்ர ஆக்கமும் இனிப்பாய் இருந்திச்சு. வாழ்த்துக்கள். அதோட உங்களிடம் சிறிய வேண்டுகோள், இந்த நண்பர்கள் வலைப்பிரிவு வட்டத்தில இப்ப புதுசாப் பிறந்து தவழ்ந்துகொண்டிருக்கும் என்னையும் கொஞ்சம் எங்கட நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி விட்டால் எனது பயணமும் நன்றாக அமையும் என நினைக்கிறேன். வானம்பாடி என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள எனது பதிவின் முகவரி உங்களுக்கும் ஊரோடி பகீ மூலமாத் தெரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன்.
நன்றி.
வானம்பாடி - கலீஸ் -
//யோகன் பாரிஸ் said...
பிரபா!
மிக இனிய பதிவு!
தாங்கள் ஊருக்குப் போன போது ;ஓர் மாம்பழப் பதிவு போடுவதேன முடிவெடுத்தது போல் உள்ளது.//
வணக்கம் யோகன் அண்ணா
மாம்பழப் பதிவு போட்டவுடன் எதிர்பார்த்த ஆட்களில் நீங்களும் ஒருவர். ஏனெனில் இப்படி அள்ள அள்ளக்குறையாத தகவல்களைச் சுவைபடப் பின்னூட்டமிடுவீர்கள். மாம்பழத்தைப்பற்றி இவ்வளவு சேதிகளைச் சொல்லி மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றிகள்.
கானா பிரபா said...
//சுந்தரி said...
வணக்கம் கானா
படத்துக்கு நன்றி.
இந்த கொழும்பு கறுத்த கொழும்பானுக்கும் யாழ்ப்பாண கறுத்த கொழும்பானுக்கும பருமனிலும், சுவையிலும் சரியான வித்தியாசமிருக்கு.. //
//தமிழன் said...
வெள்ளவத்தை மார்க்கெட்டில் வாங்கிய மாம்பழங்கள் அவை ஆனாலும் சுவை யாழ்ப்பாண மாம்பழம் மாதிரி இல்லை.//
உண்மை தான் சுந்தரி மற்றும் வந்தியத்தேவன்,
செம்பாட்டு மண்ணின் கைங்கரியமோ என்னவோ யாழ்ப்பாணத்து மாம்பழச்சுவை ஈடிணையற்றது. வந்தியத்தேவன் நன்றியை வாபஸ் வாங்குகிறேன் :-))
//pxcalis said...
அறிமுக நண்பன் பிரபா அவர்களுக்கு!
புலம்பெயர்ந்தாலும் மாம்பழ சுவைபெயராமல் ஆக்கம் தந்தீர்.//
வணக்கம் கலீஸ்
யாழ்ப்பாணத்திலிருந்து உங்கள் மடல் வருவதையிட்டு மகிழ்ச்சி, இதமான இந்த நினைவுகள் போல உங்கள் வாழ்வும் சுபீட்சமடைந்து அமைதி நிலவ இறைஞ்சுகின்றேன். தங்கள் வலைப்பதிவு பற்றி என் நண்பர்வட்டத்துக்கு அறிவித்திருக்கிறேன், நீங்களும் இப்போது இணைந்துவிட்டீர்கள்:-)
/// //Anonymous said...
ஆகா ஆகா மாம்பழம் !!!!!!
வாயுருது.......;(
வாசித்துவிடு மிச்சம் சொலுரன்....
திலகன்//
வணக்கம் திலகன்
படத்தைப் பார்த்து வாயூறுரதை விட்டிட்டு ஒரு மாம்பழம் சாப்பிட்டிட்டு வந்து பதிவைப் படியுங்கோ:-)) //
வணக்கம் அண்ணெ (ஐயாவோ தெரியெல :)) )
அருமை ஆன பதிவு,
நாம் நாட்டுகாரருக்கு சின்ன வயதில் இதுதானெ தொழில்
வணக்கம் திலகன்
நீங்கள் அண்ணா என்றாலும் ஐயா என்றாலும் பரவாயில்லை கருத்து தான் முக்கியம்:-))
நீங்கள் கருத்து எழுதிவிட்டு உடனேயே தேடியிருக்கிறியள் போல இருக்கு. ஆனால் தமிழ்மணப்பதிவுகள் மறுமொழி மட்டுறுத்தல் செய்தே வரும். எனவே புளக்கரில் பிரச்சனையில்லை.
வாசித்துக் கருத்தைத் தந்தமைக்கு என் நன்றிகள். நீங்க சொல்வது சரி எமது ஊரில் கிடைக்ககூடிய வளங்களைப் பயன்படுத்திச் சிறுவயதிலேயே தொழில் செய்வது நம் வழமை அல்லவா.
ம்... வாய் ஊறுகிறது. கறுத்தக் கொழும்பானுக்கு ஈடான மாம்பழம் இல்லையென்றே என் சுவை உணர்வும் சொல்கிறது. இங்கு ஜேர்மனியில் எனது வீட்டுக்குக் கிட்ட தமிழ்க்கடைகள் இல்லை. அதனால் இப்போது உங்கள் பதிவை வாசித்து விட்டு நினைவுகளில் மட்டுமே மாம்பழத்தை ருசிக்க முடிகிறது.
வசந்தன் விலாட் உங்களுக்குப் பிடிக்காதா? காயாகச் சாப்பிடும் போது சுவை தருபவைகளில் விலாட் வகையும் ஒன்று. சுவரில் அடித்து உடைத்துச் சாப்பிடும் போது அதன் ருசியே தனி.
உங்களது கேரளப் பயணக்கட்டுரைகளைப் போலவே மாம்பழக் கட்டுரையும் சுவையாக இருந்தது.[ கேரளக்கட்டுரைகள் குறித்து ஃபயர்பாக்ஸ் உலாவியிலிருந்து பின்னூட்டம் செய்ய முயன்று முடியவில்லை, பின் மறந்து போனேன். தற்போதும் ஃபயர் பாக்ஸ் லிருந்து முடியவில்லை, எக்ஸ்ப்லொரரை பாவித்து முயலுகிறேன் ]
மாம்பழங்களில் மல்கோவாவிலிருந்து மஞ்சநாரி வரைக்கும் தின்று குவித்தவன் என்ற முறையில் சில மாங்காய் தகவல்கள் ;)
பெரிதாக பெயர் பெற்ற மாங்காய இல்லை என்றாலும் மோர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏதுமில்லை என்றால் உடனே அம்மா செய்து போட்டது, ஒட்டு மாங்காய் ஊறுகாய். இதை ஊறுகாய் என்று சொல்லலாமா எனத் தெரியவில்லை. அகல வாக்கில் நீண்ட பற்களாக வெட்டி. பச்சை மிளகாய் சேர்த்து உப்பு தூவி குலுக்கி தொட்டு சாப்பிடலாம். உப்பு நீரில் மாங்காயுடன் ஊறிய பச்சை மிளகாய் இரு நாட்கள் கழித்து ரொம்பவும் திவ்யமாய் இருக்கும். பச்சை மிளகாய்க்கு சாதத்தை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் !
ஆவக்காய் ஊறுகாய் போட சிறந்தது நீலம். 30 வருடங்களுக்கு முன்பு எமது வீட்டில் களேபரமாக, விழாவாக ஆவக்காய் ஆயத்தங்கள் நடக்கும். கத்தி பயன்படுத்தி பழக்கமில்லாமல், மொன்னையான அறுவாளை வைத்து நீல மாங்காய்களை வெட்டுவார் அப்பா. பணிப்பெண் மிளகாய் சாந்தை குழைவாக இல்லாமல் அரைத்து தர,நிறைய நல்லெண்ணை ஊற்றி, தலைக்கு மேல் உப்புத் தூவி, பின் வெந்தயத்தை அரைத்து போட்டு 2 1/2 அடி உயரை ஜாடியில் ஊற வைக்கப்படும் மாங்காய்கள். சில மாதங்கள் கழித்து ஊறுகாய் தீர்ந்த பின் படிந்து போயிருக்கும் சாந்துடன் சாததத்தை கலந்து சாப்பிட்டுவது அற்புதமான விஷயம்..
நன்றி.
Suvaiyaana Pathivu..Suvaiyana Pinnootangal! Mikka Nanri
//Jega said ... (November 23, 2006 1:36 PM) :
வணக்கம் பிரபா
சற்று வித்தியாசமாக இருந்தது உங்கள் பதிவு.
பாடசாலை வகுப்பு நேரத்தில் உப்பு, தூள் போட்ட மாங்காய் சாப்பிடுவது நம் வழமை. ஒரு மாங்காய் வகுப்பிலுள்ள என் தோழியரின் மேசைக்கு கீழாக அனுப்பப்பட்டு ஓவ்வொருவரும் ஒரு கடி கடித்து மற்றவருக்கு அனுப்பப்படும். என் மகளிடம் இப்போது இதைச் சொன்னேன், அவளால் சகிக்கமுடியவில்லை:-)//
வணக்கம் ஜெகா
மாங்காயைப் பங்குபோட்டுக் கடித்துச் சாப்பிடுவதும் மறக்கமுடியாத ஒருவிசயம். புலம் பெயர்ந்து வந்தபின் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் ஊரில் செய்த இப்படியான காரியங்கள் வேடிக்கையாகத் தான் இருக்கும் இல்லையா?:-))
// Chandravathanaa said...
ம்... வாய் ஊறுகிறது. கறுத்தக் கொழும்பானுக்கு ஈடான மாம்பழம் இல்லையென்றே என் சுவை உணர்வும் சொல்கிறது. இங்கு ஜேர்மனியில் எனது வீட்டுக்குக் கிட்ட தமிழ்க்கடைகள் இல்லை.//
வணக்கம் சந்திரவதனா அக்கா
தமிழ்க்கடைகளிலும் நம்மூர் பழவகை எடுப்பது கடினம் தானே. நீங்கள் குறிப்பிட்டது போன்று விலாட்டு மாங்காயின் சுவையே தனி இல்லையா,
// ஜோ / Joe said...
Suvaiyaana Pathivu..Suvaiyana Pinnootangal! Mikka Nanri//
வணக்கம் ஜோ
பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.
//வாசன் said...
உங்களது கேரளப் பயணக்கட்டுரைகளைப் போலவே மாம்பழக் கட்டுரையும் சுவையாக இருந்தது.//
வணக்கம் வாசன்
என் பதிவை வாசித்ததோடு மட்டுமல்லாது சுவையான உங்களூர் மாங்காய் நினைவுகளைத் தந்து கலக்கியிருக்கிறீர்கள், அற்புதம்.
தூண்டில் போட்டு உங்களுடமிருந்து நல்ல விசயங்களை எடுத்திருக்கின்றேன்:-)
பயர் பாக்ஸ் இல் என் கேரளக்கட்டுரைக்குப் பின்னூட்டம் இடமுடியாமை குறித்து என் டெம்ப்லேட்டைக் கவனிக்கின்றேன்.
பயர் பாக்ஸ் இல் என் கேரளக்கட்டுரைக்குப் பின்னூட்டம் இடமுடியாமை குறித்து என் டெம்ப்லேட்டைக் கவனிக்கின்றேன்.
//நீங்க சொல்வது சரி எமது ஊரில் கிடைக்ககூடிய வளங்களைப் பயன்படுத்திச் சிறுவயதிலேயே தொழில் செய்வது நம் வழமை அல்லவா.//
உண்மை!!!
நான் சொன்ன தொழில் வேறு ::
நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து
யாருடை வளவில் மாங்காய் புடுங்கி யாற்றையோ மதிலில் மாங்காய் குத்துறது,
இரவில் மரவள்ளி கிழங்கு பிடுகிறது,
//thillakan said...
உண்மை!!!
நான் சொன்ன தொழில் வேறு ::
நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து
யாருடை வளவில் மாங்காய் புடுங்கி யாற்றையோ மதிலில் மாங்காய் குத்துறது,
இரவில் மரவள்ளி கிழங்கு பிடுகிறது,//
திலகன்,
அந்த விசயம் பற்றியும் ஒரு பதிவு போட இருக்கிறன்:-)
ஆகா மாம்பழம் மாம்பழம்... எங்கே எங்கே... எனக்கு இப்பயே வேணும்!!!
இங்கே இன்னும் மாம்பழக் காலம் வர நாலைந்து மாதங்கள் ஆகுமே... அதுக்குள்ள நினைவு படுத்திட்டீங்களே ஐயா! இது அடுக்குமா?
arumayaana post prabha.. ennangal engayo pogindrana -
வணக்கம் ரேவதி
என் பதிவை வாசித்து உங்கள் கருத்தை அளித்தமைக்கு என் நன்றிகள் உரித்தாகுக
மனது வலிக்கிறது, பொறாமையில் மற்றும் இழந்தவற்றை நினைத்து.
Post a Comment