"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி
வாடும் வயிற்றை என்ன செய்ய
காற்றையள்ளித் தின்று விட்டு
கையலம்பத் தண்ணீர் தேட......
பக்கத்திலே குழந்தை வந்து
பசித்து நிற்குமே...- அதன்
பால்வடியும் முகம் அதிலும்
நீர் நிறையுமே..........
அதன் பால்வடியும் முகம்
அதிலும் நீர் நிறையுமே.........."
நிர்க்கதியான நிலையில் ஆண்டவனைக் கதியென்று பற்றித் தேவார திருவாசகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்போமே, அப்படியானதொரு வேளையில் எம்மக்களுக்கான ஊட்டமாக எழுந்தவை இந்த ஈழத்து எழுச்சிப்பாடல்கள். எண்பதுகளில் விடுதலைப் போராட்ட களத்தில் எல்.வைத்யநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய இந்த எழுச்சிப்பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் எழுச்சியோடு வெளிவரத் தொடங்கின. நம் கவிஞர்கள், நம் பாடகர்கள், நம் இசையமைப்பாளர்கள் என்று முற்று முழுதான ஈழத்துப் பரிமாணத்தோடு வெளிவரத் தொடங்கின. இது குறித்த விரிவான பதிவைப் பின்னர் தருகின்றேன்.
அப்போது தோன்றிய ஈழத்துப் பாடகர்களில் ஒருவர் தான், "ஈழத்து இசைவாரிதி" வர்ணராமேஸ்வரன் அவர்கள். தொண்ணூறுகளில் இளையோராக இருந்த எம்மை ஈர்த்த வர்ணராமேஸ்வரன் அவர்களை, ஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை ஒலி ஆவணப்படுத்தும் முயற்சி வாயிலாகச் சந்தித்தேன். இதோ அவர் தொடர்ந்து பேசுகின்றார்.
ஒலிவடிவம்
பாகம் ஒன்று (27:43 நிமிடங்கள்)
பாகம் இரண்டு ( 23:18 நிமிடங்கள்)
ஈழத்திலே பிறந்து வளர்ந்து, இன்று ஈழத்தமிழகம் பெயர் சொல்லக்கூடிய ஒரு கலைஞனாக விளங்கி வருகின்றீர்கள், இசையுலகிற்கு நீங்கள் வந்ததன் ஆரம்பம் குறித்துச் சொல்லுங்களேன்.
ஈழத்தமிழர்களின் கலை வரலாற்றில் முக்கிய இடமாகக் கருதப்படுகின்ற அளவெட்டி என்ற கிராமத்தில் தான் நான் பிறந்தேன். இந்த இடத்தில் தான் ஈழத்தில் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், பாரம்பரிய கூத்து, கரகம், காவடி, இசை நாடகக் கலைஞர்கள் என அனைத்துக் கலைகளையும் வாழவைத்தவர்கள் மண்ணில் நானும் பிறந்தேன் என்பது எனக்கொரு பெருமையான விஷயமாகத் தான் நான் கருதுகிறேன்.
நீங்கள் ஒரு இசைக்கலைஞராக வரவேண்டும் என்ற சிந்தனை எப்படித் தோன்றியது? உங்களுடைய சூழ்நிலை ஒரு காரணியாக இருந்திருக்கும். அதே போல நீங்கள் இந்தத் துறையில் தான் உங்களை வளப்படுத்த வேண்டும் என்று யார் உங்களுக்கு முன்னோடியாக இருந்தார்கள்?
உண்மையில் என்னுடைய தந்தையார் கலாபூஷணம், சங்கீத ரத்தினம் மு.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஒரு சிறந்த இசைப்பாரம்பரியத்திலே தோன்றியவர். அதே போல எனது தந்தையார் வழிப்பேரனார் மற்றும் தாயார் வழிப்பேரனார் கூட இசை நாடகக் கலைஞர்கள். எனவே அவர்கள் எங்கள் வீட்டிலேயே இருந்து நிறையப் பாடிக்கொண்டிருப்பார்கள். மற்ற வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருப்பார்கள். எங்களுடைய வீட்டிலே வகுப்புக்கள் நடைபெறும். அப்படியெல்லாம் இருக்கின்ற எங்கள் வீட்டுச் சூழ்நிலை, மற்றும் எங்களுடைய ஊர். ஊரிலே பார்த்தால் எப்பொழுதுமே நாதஸ்வர தவில் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அப்படியான சூழ்நிலையே வாழ்ந்ததனால், நான் நினைக்கின்றேன் இசை நான் அறியாமலேயே எனக்குள்ளே புகுந்துகொண்டதாகவே நான் சொல்லக் கூடியதாக இருக்கும்.
அதன் வெளிப்பாடாக ஆரம்பத்திலே பண்ணிசை மூலமே நான் ஆரம்பத்தில் இசையில் புகுந்துகொண்டேன். பின்னர் பாடசாலையில் இடம்பெற்ற போட்டிகள். எங்களுடைய பாடசாலையான அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையே ஆரம்பக் கல்வியைக் கற்று அதன் பின்பு மகாஜனாக் கல்லூரியிலே எனது மேற்படிப்பை மேற்கொண்டேன். அப்போது எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் சிறந்த இசை நுட்பங்களை அறிந்த ஆசிரியர்களாக வந்து வாய்த்தார்கள். அதுவும் ஒரு சிறந்த விடயமாகக் கூறவேண்டும். வீட்டில் எனது தந்தையாரும் ஒவ்வொரு விடயங்களையும் நுணுகி நுணுகி ஆராய்ந்து தான் கற்பிப்பார். அப்போது அவருடைய பயிற்சியோடு, பாடசாலையில் நான் கற்ற பயிற்சியும் கூட எனக்கு ஒரு நல்ல அத்திவாரத்தை இட்டதென்றே நான் இங்கே சொல்லவேண்டும்.
அதே வேளை இப்போது என்னை எல்லோருக்கும் தெரியும் ஒரு பாடகனாக. எங்களூரில் அப்போது வர்ணராமேஸ்வரன் இப்படிப் பாட்டுப் பாடுவார் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஏனென்றால் எனது ஆரம்பம், மிருதங்கம் வாசிப்பது மற்றும் கீபோர்ட், ஆர்மோனியம் வாசிப்பது என்று தான் தொடங்கியது. அதன் பின்புதான் நான் பாடுவதற்காக வந்தேன்.
பின்னர் முறையாக எப்போது நீங்கள் சங்கீதத்தைப் பயின்று கொண்டீர்கள்? உங்கள் மேற்படிப்பு எல்லாம் எப்படி அமைந்தது?
உண்மையிலேயே எனது தந்தையாரிடமே என்னுடைய பயிற்சியை மேற்கொண்டு வந்தேன். என்னுடைய தாயார், சகோதரி ஆகியோர் கூடப் பாடுவார்கள். அப்படி அவர்களிடமேயே அந்தப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு யாழ் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைப் பிரிவில் நான் மாணவனாக இணைந்து கொண்டேன். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்னும் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு அங்கேயே தொடர்ந்து நாலைந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
உங்களின் இசைக்கல்லூரிப் படிப்பு, மற்றும் விரிவுரையாளராக இருந்த காலப்பகுதி எது?
1987 ஆம் ஆண்டு காலத்தில் தான் நான் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவிலே இணைந்து கொண்டேன். இந்திய இராணுவம் வந்த காலப்பகுதி அது. அந்த யுத்த காலப்பகுதியில் எனது படிப்புக்களில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்பு 91 ஆம் ஆண்டிலிருந்து 95 ஆம் ஆண்டு இடப்பெயர்வு நான் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளராகக் கடமையாற்றியிருந்தேன். அதன் பின்பு இடம்பெயர்ந்து எங்களுடைய நிலம் சிதறடிக்கப்பட்ட பின் நான் புலம்பெயர்ந்தேன்.
நீங்கள் ஈழத்திலே இருந்த காலப்பகுதியிலே எம் வயதையொத்த இளையோருக்கு அந்தப் போராட்ட காலப்பகுதியிலே பெரும் பாடகர்களாக எம் முன் இருந்தவர்கள். உஙகளுடைய பாடல்களை கேட்பதென்பதே அப்போது எமது வாழ்வின் கடமையாக இருந்தது. அந்தக் காலப்பகுதியிலே நீங்கள் எந்தெந்த வாய்ப்புக்கள் மூலம் உங்களை இனங்காட்டிக் கொண்டீர்கள்?
நடனத்திற்குப் பாடுவதில் நான் பயிற்சி பெற்று விளங்கினேன். காரணம் நான் மிருதங்கம் வாசிப்பதிலும் எனக்குப் பயிற்சி இருந்தபடியால் நடனத்திற்குப் பாடுவது என்பது எனக்குச் சுலபமாக அமைந்தது. அந்த வகையில் நான் நடனம், நாட்டிய நாடகங்களுக்குப் பாடுவதில் சிறந்து விளங்கினேன். அத்தோடு மெல்லிசைப் பாடல்கள் பாடுவது, இசையமைப்பது போன்றவற்றிலும் எனக்கு ஈடுபாடு மிகவும் இருந்ததனால் என்னுடைய பாடல்கள் வந்து வித்தியாசமாக இருக்கும். அதே வேளை நான் என் மண்ணையும் நேசித்து வந்ததனால் எங்களுடைய சமகால நிகழ்வுகளை ஒட்டியதாகவும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்ததாலும் எல்லாராலும் விரும்பி ரசிக்கப்பட்டது என்று சொல்லலாம். அதே வேளை நாம் கல்வி கற்ற சூழலையும் இப்போது எனக்கு ஞாபகப்படுத்தி விட்டீர்கள். நாம் படித்தது ஒரு இக்கட்டான காலகட்டத்தில் அப்போது எமக்கு மின்சாரம் இல்லை, பற்றறி கூட வாங்க முடியாது. சைக்கிளைக் கவிழ்த்து அதில் உள்ள டைனமோவைச் சுற்றித் தான் பாட்டுக் கேட்டுப் படித்து வந்தோம். ஆனால் இப்போது நான் அதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது. எங்களுக்கு முன்பு படித்தவர்கள் எல்லாம் வசதியான சூழ்நிலையில் இந்தியாவுக்குச் சென்று படித்து வந்திருக்கின்றார்கள். அது போல் இப்போது உள்ளவர்களுக்கும் இந்தியா சென்று படிக்கும் வாய்ப்பு எட்டியிருக்கின்றது. எங்களுடைய இடைப்பட்ட காலப்பகுதியில் என்னோடு படித்த கோபிதாஸ், கண்ணதாசன், துரைராஜா போன்ற பலர் இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தான் கற்று வந்தோம். அதெல்லாம் எனக்கு ஒரு பெருமையாக இருக்கின்றது. காரணம் எங்கட மண்ணில் இருந்து, வசதியற்ற சூழ்நிலையிலே எங்கள் மண்ணில் இருந்து கொண்டே எங்களை உலகத்துக் காட்டக் கூடியதாக இருந்தது சாதனை என்று தான் கூறவேண்டும்.
நிச்சயமாக, அதாவது இருக்கக்கூடிய அந்த வளங்களையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தன்னை அடையாளப்படுத்தக் கூடிய ஒரு கலைஞனாக உயரலாம் என்பதற்கு உங்களைப் போன்றவர்கள் ஓர் உதாரணம். 80 களில் ஆரம்பித்த தாயக எழுச்சிப் பாடல்கள், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவற்றின் எழுச்சியும், வேகமும் மிக மிக அதிகமாக இருந்தது. அன்றைய காலகட்டத்துப் பாடகர்களிலே முன்னணிப்பாடகராக நீங்கள் தடம்பதித்திருக்கின்றீர்கள். நமது தாயகத்தின் எழுத்து வன்மை கொண்ட புகழ்பூத்த கவிஞர்கள் பலரது தொடர்பும் அப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. குறிப்பாக காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, நா.வீரமணி ஐயர் போன்ற பல கவிஞர்களின் பாடல்களுக்கு உயிர்கொடுத்த ஒரு பெருமையும் உங்களைச் சாரும். இப்படியான கவிஞர்களோடு பழகிய அந்த நாட்களை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்க முடியுமா?
நிச்சயமாக. வீரமணி ஐயா அவர்கள், எனது தந்தையாருடைய நண்பர். சிறுவயதில் இருந்தே என்னை நன்றாகத் தெரியும். எங்கு சென்றாலும் "கண்ணா" என்று அழைத்து என்னை உற்சாகப்படுத்தி வந்த ஆசான்களில் அவரும் ஒருவர் என்றே சொல்வேன். பாடல்களை இயற்றி விட்டு "எடே! இஞ்சை வாடா வாடா" என்று அழைத்துச் சொல்லித் தருவார். நல்ல ஒரு கற்பனை வளம் வாய்ந்தவர். அவர் பாடல்கள் எழுதும் தன்மை வித்தியாசமானது. அவருடைய பாடல்கள் பலவற்றை நான் பாடியிருக்கின்றேன். அதே போல் எங்களுக்குத் தேவையானவற்றைக் கூட "ஐயா! இப்படியொரு பாட்டு தேவை" என்று கேட்டால் "எடே! உனகென்னடா ராகத்திலே வேணும்" என்று கேட்பார். அப்போது நாங்கள் ராகத்தை சொன்னால் உடனே பாடலை எழுதுவார். அதற்கு சில சில உதாரணங்களைச் சொல்லலாம்.
ஒரு முறை நான் போய்க் கேட்டேன். "ஐயா! எனக்கு ரேவதி ராகத்தில பாட்டு வேண்டும்" என்று கேட்டேன். "சரி ரேவதி ராகத்தை உடனே ஹம் பண்ணடா" என்றார். நானும் உடனே வந்து ரேவதி ராகத்தின் ஆரோகண அவரோகணத்தை ஹம் பண்ண ஆரம்பித்தேன்.
( ஹம் பண்ணிக் காட்டுகின்றார்)
நான் ஹம் பண்ணிக் கொண்டிருக்க அவர் பேனை எழுதிக் கொண்டேயிருக்கின்றது. எப்படி எழுதினார் என்றால்,
"அவரே வதியும் நல்லை அழகுத்தலம் செல்வாய்"
இந்தக் கற்பனையைப் பாருங்கள். ரேவதி என்ற ராகத்தின் பெயரை அந்த வார்த்தைகளுக்குள் "அவ ரேவதியும் நல்லை அழகுத் தலம் செல்வாய்" என்று அடக்கி விட்டார். அப்படியாக அவர் பாடல்களை எழுதுகின்ர விதம் சற்று வித்தியாசமானது.
ஒருமுறை நான் அவரிடம் சென்ற போது "எடேய் எடேய் இஞ்ச வா" என்று கூட்டிக் கொண்டு போனார். பார்த்தால் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் வீதியிலே நாலைந்து சிறுவர்கள் சைக்கிளைக் கவிழ்த்து வைத்து டைனமோவை சுற்றி பாட்டுப் போகுது. இவர்களும் ஆட்டம் போடுகின்றார்கள். "கேளடா அதை" என்று அவர் சொல்ல "அப்புஹாமி பெற்றெடுத்த லொகு பண்டாமல்லி" என்ற உன்ர பாட்டுத் தான்ரா போகுது" என்று சொல்லி மகிழ்கின்றார். உண்மையில் அவர் எல்லாவற்றையும் ரசிப்பார். "உங்கை பாற்றா..பாற்றா" என்று அவர் சொல்ல, ஒருவர் சைக்கிளைச் சுற்ற மற்ற நாலு பேர் ஆடுவார்கள். பிறகு ஆடின மற்றவர் சைக்கிளைச் சுற்ற, அதுவரை சுற்றிய இவர் போய் ஆடுவார். இப்படியாக சிறுவர் முதல் பெரியோர் வரை அவர்களை ரசித்துப் பார்ப்பார். உண்மையில் அவரோடு பழகி நாட்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தின. நாங்கள் எல்லோரும் நன்றாக வரவேண்டும் என்ற அவரின் மனப்பூர்வமான ஆசீர்வாதமும், நாங்கள் சாதிக்கவேண்டும் என்று அவர் விரும்பியதும் எமக்கு மிகுந்த உத்வேகத்தைக் கொடுத்தது.
இந்த நேரத்தில் இவ்வளவற்றையும் நாங்கள் அங்கு செய்தோம், அவற்றை வெளியுலகிற்குக் கொண்டு போவதற்கு எமது தேசிய விடுதலைப் போராட்டம் உறுதுணையாக இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அடுத்து புதுவை இரத்தினதுரை அண்ணா.
"நல்லை முருகன் பாடல்கள்" இப்போது புலம்பெயர்ந்த நாடுகளில் மிகவும் பிரபல்யமாக இருக்கின்றது. நல்லை முருகன் பாடல்கள் எப்படி உருவாகின என்று சொன்னால் நல்லூரின் 25 நாட் திருவிழா நடக்கும் காலத்தில் புதுவை அண்ணாவும், நானும், மற்றும் சில நண்பர்களும் நல்லூரின் வீதியிலே திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு அருகாமையிலே, மனோன்மணி அம்மன் கோயிலுக்கு முன்பாக நாங்கள் அந்த மணலிலே அமர்ந்திருப்போம். அப்போது இசை விழாவில் படிக்கும் பாடல்கள் ஸ்பீக்கரிலே போய்க்கொண்டிருக்கும். அப்போது புதுவை அண்ணா மிகுந்த ஆதங்கத்தோடு சொன்னார். "எடேய் இஞ்ச பார்ரா, இஞ்சை வந்து குண்டு விழுகுது, ஷெல் விழுகுது, இவங்கள் ஒருத்தருக்கும் இதைப் பற்றி ஒரு அக்கறையும் இல்லை, இருந்து தெலுங்கிலை பாடிக்கொண்டிருக்கின்றாங்கள், உதெல்லாம் ஆருக்கு விளங்கும்? உதுகளும் இருந்து தலையாட்டிக் கொண்டிருக்குதுகள்" என்று சொல்லி ஆதங்கப்பட்டார். அப்போது இசைவிழாவில் நான் கச்சேரி செய்கின்ற நாள் வருகின்றது. அப்போது நான் சொன்னேன் "புதுவை அண்ணா! நாங்கள் இதை வித்தியாசமாகச் செய்வோம்" என்ற போது அவர் சொன்னார், எங்களுடைய தேவார திருவாசகங்களிலே கூட எத்தனையோ விடுதலை உணர்வை வெளிப்படுத்தக் கூடிய பாடல்கள் இருக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்" அப்படிப் பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றைக் கூட இவர்கள் எடுத்துப் பாடியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார். அப்போது நான் சொன்னேன், "நீங்களே எழுதுங்களேன், நாங்கள் அவற்றை படிப்போம்" என்று. எங்களுடைய இசைக் கலைஞர்களிடம் போய்க் கேட்டபோது "இல்லையில்லை சங்கீதம் என்றால் இப்படித்தான் பாடவேணும், இப்படியெல்லாம் செய்யமுடியாது" என்ற போது நாங்கள் சவாலாக எடுத்து புதுவை அண்ணா பாடல்கள் எழுத நான் எனது கச்சேரியில் பாடினேன். பின்பு எங்கள் ஆசிரியர் என்.வி.என்.நவரட்ணம் அவர்கள் கூட இவற்றை எடுத்துப் பாடினார். அதன் பின்னர் அதே இசைவிழாவின் இறுதி நாள் நிகழ்வென்று நினைக்கின்றேன். எங்களுடைய பொன்.சுந்தரலிங்கம் அண்ணா அவர்கள் கூட சில பாடல்களை எடுத்துப் பாடியிருந்தார். அதன் பின் புதுவை அண்ணாவின் "நினைவழியா நாட்கள்" நூலின் வெளியீட்டு விழாவில் இந்தப் பாடல்கள் பன்னிரண்டைச் சேர்த்து என்.வி.என்.நவரட்ணம் ஆசிரியர் அவர்களும் நானும் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தோம். அதன் பின்பு தான் இந்தப் பாடல்களை ஒரு ஒலித்தட்டாகப் போட எண்ணி கண்ணன் மாஸ்டரைக் கூப்பிட்டு, ஏற்கனவே மெட்டுப் போட்டுப் பாடிய பாடல்களை இடையிசை, முன்னிசை எல்லாம் சேர்த்து ஒரு ஒலித்தட்டாக வந்தது. ஆனால் நாங்கள் செய்யும் போது இந்தப் பாடல்கள் வெளிநாடுகளுக்கும் பரவி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்துச் செய்யவில்லை. இப்போது ஒவ்வொரு நல்லூர் திருவிழாக்காலங்களிலும் ஒலிக்கின்ற பாடல்களாக இவை மாறி விட்டன. அதன் பின்பு நாங்கள் "திசையெங்கும் இசை வெள்ளம்" என்னும் இசைத் தட்டையும் வெளியிட்டோம். அது ஓவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பாடல்களாக வந்தது.
நல்லை முருகன் பாடல்கள் இறுவட்டிலிருந்து "செந்தமிழால் உந்தனுக்கு"
கவிஞர் காசி ஆனந்தன் பாடல்களுக்கு நீங்கள் குரல் கொடுத்த அனுபவம் குறித்து?
எப்படியென்று சொன்னால், எமது இடப்பெயர்வின் பின்பு நான் மேற்படிப்புக்காகத் தமிழகம் சென்று ஒரு இரண்டரை ஆண்டுகள் அங்கே தங்கியிருந்தேன். அப்போது அடிக்கடி நான் காசி ஆனந்தன் அண்ணாவின் வீட்டுக்குப் போவேன். அப்போது நான் மாமிசம் எல்லாம் சாப்பிடுவதில்லை. அப்ப என்ன செய்வாரென்றால் எனக்காக தானே தன் கையால் உருளைக்கிழங்கு பிரட்டல் கறி வைப்பார். அருமையாக இருக்கும், மறக்கமுடியாது அதை. ஏனென்றால் அப்போது அவருடைய துணைவியார் வேலைக்குப் போய் விடுவார். அப்போது எமது நாட்டு விடயங்களையெல்லாம் கேட்டு, தன் அனுபவங்களையும் சொல்லி வைப்பார். "தம்பி உனக்காக வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும்" என்று அவர் சொல்ல மெட்டு ஒன்றைக் கொடுத்தேன். அப்போது முதல் தடவையாக மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என்பதே என்னுடைய பாட்டுக்குத் தான் செய்தார். போர்க்களத்திலே வெற்றி பெற்று எங்களுடைய வீரர்கள் காடுகளுக்குள்ளால் வருவது போன்ற கற்பனை அது. எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் அப்போது நான் மாயாமாளவ கெளளை ராகத்தில் , அதாவது எங்களுடைய சங்கீதத்தைப் பயில நாம் ஆரம்பித்தில் கையாளும் ராகம் அது, அதில்
"தானனன்ன..... தானனன்ன....தானனன்ன....தானனன்ன.....தானனன்னன்னா......" (தொடர்ந்து மெட்டைப் பாடுகின்றார்)
இது பல்லவியாக வந்தது. தம்பி நாலைந்து முறை இதை பாடும் என்று அவர் சொல்ல நான் பாட
"பொங்கியெழும் கடலலையை எதிர்த்து நின்று இங்கு களம் தனிலே
வெறியர் படை தாக்க வருமா?" இது பல்லவி.
பிறகு லாலலல்ல.....லாலலல்ல.......லாலலல்ல...லாலல்லலா என்று நான் கொடுக்க
"எங்கள் தமிழ்த் தாயகத்தை மீட்கும் வரை
எங்கள் இரு கண்களிலே தூக்கம் வருமா?" இப்படி உடனே எழுதினார், அவருடைய கற்பனைக்குள் வார்த்தைகளைப் பாவித்த விதம் பிரமிக்க வைத்தது. உண்மையில் அவர்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம், வாழ்கின்றோம் என்பது ஒரு பெரும் பேறென்று தான் சொல்லவேண்டும்.
நீங்கள் தாயகத்திலே இருந்த காலப்பகுதியில் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைவாணர் கண்ணன் அவர்கள். அவர் குறித்த உங்கள் உள்வாங்கல் எப்படியிருக்கின்றது?
கண்ணன் மாஸ்டரிடம் கற்றுக் கொண்ட விடயங்கள் நிறையவே இருக்கின்றன. அவருடை சிறந்த குணம் என்னவென்றால் ஒருத்தரையும் வந்து உதாசீனப்படுத்தமாட்டார். அவரோடு பழகும் போது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். எல்லோருடனும் பகிடி விட்டுத் தான் கதைப்பார். ஒலிப்பதிவு வேளையில் அவரோடு கலந்து கொண்ட அனுபவங்களை நினைக்கையில் சந்தோஷமாக இருக்கும்.
"அண்ணை, இப்படியொருத்தர் தபேலா வாசிப்பார்" என்று சொன்னால் "ஆ! தபேலா வாசிப்பாரா" என்று கேட்டு விட்டு அவரின் வாசிப்பைக் கேட்டு, ஒலிப்பதிவு வேளையில் அந்தக் கலைஞரை எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படிப் பயன்படுத்துவார். மனம் நோகடிக்க மாட்டார். "தம்பி! இப்படியெல்லாம் வாசிப்பது சரிவராது நீ போ" என்று யாரையும் அவர் திருப்பி அனுப்பியதாக வரலாறு இல்லை என்பே சொல்வேன்.
நாங்கள் இப்போது சில வேலைகளைச் செய்யும் போது அவரை நினைக்கின்றோம் இல்லையா? எங்களிடமிருந்தும், மற்றவர்களிடம் இருந்தும் எப்படியெல்லாம் வேலை வாங்கினார் என்பதை நினைக்கும் போது அந்த அனுபவங்கள் எங்களுக்கூடாகவும் வருகின்றது. அந்த அனுபவத்தைக் கற்றுத் தந்தவர் கண்ணன் மாஸ்டர். அதை விட எல்லா வாத்தியங்களையும் வாசிக்கக் கூடிய தன்மை வாய்ந்தவர் இவர். பாடுவார். வாத்தியக்கருவிகளில் சித்தார் என்றாலும் சரி, சாய்வாயா என்று ஒரு வாத்தியத்தை வாசிப்பார். அந்த வாத்தியத்தை கண்ணன் மாஸ்டரைத் தவிர நான் கேட்டு அறியவில்லை. மண்டலின் போன்ற வாத்தியம் அது. மிகவும் அருமையாக வாசிப்பார். இப்படியான கலைஞர்களை எமது சமுதாயத்தின் வறுமை காரணமாக, பொருளாதார ரீதியான வறுமையை நான் சொல்லவில்லை, இவர்களை நாம் சரியாக இனங்காட்டவில்லை என்றே நான் சொல்வேன். ஒரு அற்புதமான கலைஞர்.
அவருடைய திறமையை எமது போராட்டக் களமும் நன்கு பயன்படுத்தி இப்படியான பாடல்களைத் தருவித்ததும் நம் காலத்தில் செய்த பெரிய விடயம் இல்லையா?
நிச்சயமாக, ஆனால் கண்ணன் மாஸ்டரின் திறமையை நாம் இன்னும் முற்று முழுதாகக் கொண்டுவரவில்லை என்றும் சொல்லவேண்டும். அதற்கு சில வசதியீனங்களும் எமது நாட்டுக்குள் இருந்ததையும் கூடச் சொல்லலாம். மின்சாரம் இல்லை. ஒலிப்பதிவு செய்வது என்று சொல்வதென்றால் ஸ்பூன் மெஷினில் நாங்கள் ரெக்கோர்டிங் செய்யும் போது ஒரு ரேப்பையே கிட்டத்தட்ட ஏழெட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் உருவாவதற்கு பாவித்திருக்கின்றோம். "கரும்புலிகள்" தொடக்கம் பல இசைத்தட்டுக்கள் தொடங்கிய வரலாறு அப்படித்தான் இருந்தது. ஒரு பாடல் தொகுதி ஒலிப்பதிவு செய்து முடிந்த பின், மாஸ்ரர் கசற்றில் ரெக்கோர்ட் பண்ணிவைத்து விட்டு அதை அழித்து திருப்பி புதுப்பாடல்களை ரெக்கோர்ட் பண்ணுவது. அப்போது தரம் போய் விடும். அப்படியான வசதியீனங்களுக்கு மத்தியில் தான் எமது ஒலிப்பதிவு எல்லாம் நிகழ்ந்தன. அப்படியான சூழ்நிலையிலே பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் நினைவு கூரப்படவேண்டியவர்கள்.
உங்களுடைய இசைப்பயணத்திலே, தாயக எழுச்சிப்பாடல்களில் உங்களால் முதன் முதலில் பாடப்பட்ட பாடலெது?
முதன் முதலில் பாடிய பாடல் மாவீரர் துயிலும் இல்லப் பாடல். ஆனால் வெளிவந்த பாடல் "தாயக மண்ணின் காற்றே" என்ற பாடல்.
மாவீரர் துயிலும் இல்லப் பாடலை அந்த நாளைத் தவிர வேறு நாளில் நான் பாடுவதில்லை.
தாயக மண்ணின் காற்றே பாடலைப் பாடத் துவங்குகின்றார்.
இதற்கு இசை வடிவம் கொடுத்தவர் யார்?
கண்ணன் மாஸ்டர் தான் இதை இசையமைத்திருந்தார்.
நீங்கள் இப்போது பாடிய பாடல் ஒரு பாணி, நல்லை முருகன் பாடல்கள் இன்னொரு வகை, அப்புஹாமி போன்ற பாடல்கள் வேறோர் வகை
இப்படி எழுச்சிப் பாடல்களிலேயே வித்தியாசத்தைக் காட்டியிருக்கின்றீர்கள். உங்களுக்குச் சவாலாக அமைந்த பாடல் எது?
சவால் என்று எதையும் தனிப்பட்டுக் குறிப்பிடமுடியாது, எல்லாமே சவாலான பாடல்கள் தான். சவாலாக எடுத்தால் தான் அதனுடைய முழுமையைக் கொண்டுவர முடியும். அந்த வகையில் எல்லாப்பாடல்களிலுமே அவற்றின் நுட்பத்தை உணர்ந்து கொண்டு வரவேண்டும்.
சில பாடல்களை நாம் ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட பின்னர் மேடையில் பாடுவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.இடையிலே வந்து பாட முடியாமற் போன பாடல், அப்படியெல்லாம் இருக்கின்றது. ஒலிப்பதிவு என்பது மீளவும் பயிற்சி செய்து கொடுப்பதால் எல்லாப்பாடல்களிலும் அப்படியான தன்மை இருப்பதாகவே நான் கூறிக்கொள்வேன்.
பொதுவாக திரையிசைப்பாடல்களோ, வீடியோ அல்பங்கள் என்று சொல்லும் பாடல்களோ பாடலைக் கேட்பது மட்டுமல்ல கண்ணுக்கு விருந்தாக அவை காட்சி வடிவம் பெறும் போது இன்னும் இன்னும் பலருடைய அபிமானத்தை அவை பெறும். ஆனால் எமது எழுச்சிப் பாடல்கள் ஆரம்ப காலப்பகுதியிலே வெறும் ஒலிப்பேழைகளாக மட்டும் தான் இருந்திருக்கின்றன. ஆனால் பலருடைய உள்ளங்களிலே இப்படியான பாடல்கள் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றன. இன்னும் சொல்லபோனால் திரையிசைப்பாடல்களுக்கும் மேலாக நேசிக்கப்பட்டிருக்கின்றன. உங்களால் இப்படி மறக்கமுடியாத ரசிகர் அல்லது நிகழ்வு என்று இருக்கின்றதா?
நிச்சயமாக, இரண்டு மூன்று பாடல்கள் அப்படி இருக்கின்றன. ஒன்று வந்து நாம் இடம்பெயர்ந்து வந்த போது நண்பர் சடகோபனும்,நானும் இணைந்து எழுதிய பாடல். அது "வேப்ப மரக்காற்றே நில்லு" எனும் பாடல் அது. இடப்பெயர்வை அனுபவித்த அத்தனைபேருக்கும் அதன் வலி புரியும். அதிலே நான் சில வரிகளைப் பாடிக்காட்டலாம். (பாடுகின்றார்)
தந்தானானே தானேனானேனா.......ஓஓ
தந்தானானே தானேனானேனா.....
வேப்ப மரக்காற்றே நில்லு........
வேலியோரப் பூவே சொல்லு.....
தோப்புக்குயில் பாடுவது
ஜீவகானமா....?
இல்லை...வேதனையில் வாடும்
எங்கள் தேசராகமா.....?
வேப்பமரக் காற்றே நில்லு.......
உற்றமும் ஊரும் திரிந்து
ஒற்றை மர நிழலிருந்து
முற்றத்துப் பாயில் போட்ட
முத்தான நெல் மறந்து....
குட்டியாடு கட்டி நிற்க
விட்டு வந்தோமே......நாங்கள்
கோடியிலே நாய் குரைக்க
ஓடி வந்தோமே..........
நாங்கள் கோடியிலே நாய் குரைக்க
ஓடி வந்தோமே....
வேப்ப மரக்காற்றே நில்லு........
வேலியோரப் பூவே சொல்லு.....
நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி
வாடும் வயிற்றை என்ன செய்ய
காற்றையள்ளித் தின்று விட்டு
கையலம்பத் தண்ணீர் தேட......
பக்கத்திலே குழந்தை வந்து
பசித்து நிற்குமே...- அதன்
பால்வடியும் முகம் அதிலும்
நீர் நிறையுமே..........
அதன் பால்வடியும் முகம்
அதிலும் நீர் நிறையுமே..........
வேப்ப மரக்காற்றே நில்லு........
வேலியோரப் பூவே சொல்லு.....
தோப்புக்குயில் பாடுவது
ஜீவகானமா....?
இல்லை...வேதனையில் வாடும்
எங்கள் தேசராகமா.....?
வேப்பமரக் காற்றே நில்லு.......
தந்தானானே தானேனானேனா.......ஓஓ
தந்தானானே தானேனானேனா.....
உண்மையிலேயே இடப்பெயர்வைச் சந்திக்காதவர்களைக் கூட அந்த வலியை வரிகளிலும் பாடும் தொனியிலும் கொடுத்திருக்கின்றீர்கள்,பழைய நினைவுகளும் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. இந்தப் பாடலை அந்தக் களத்தில் இருந்து அந்த வேதனையோடு கொடுத்ததால் தான் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கின்றது இல்லையா?
நிச்சயமாக. நாம் இடப்பெயர்வைச் சந்தித்த வேளை எங்களுடைய நண்பர் ஒருவர் ஒரு மரத்திலே தனது துணைவியாரின் சேலையைக் கட்டித் தொங்க விட்டு விட்டு அதற்குள் பிள்ளையைப் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது தான்
இவை வந்தது. அப்போது காசு இருந்தவர்களுக்குக் கூட பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது. எங்கே போய்த் தங்குவது என்பது யாருக்குமே தெரியாது. எங்கே போகப் போகின்றோம், என்ன நடக்கப் போகின்றது என்பதே தெரியாத சூழ்நிலையில் வந்த அனுபவம்
யாராலும் மறக்கமுடியாத ஒரு கனத்த அனுபவம். பெரியவர்கள் சாப்பிடாமல் பசியோடிருந்து தாங்கமுடியாத வேதனையில் இருந்த போது குழந்தைகள் வந்து "ஐயோ அப்பா பசிக்குது!, அம்மா பசிக்குது!" என்று கேட்கையில் அதை அருகில் இருந்து பார்த்திருக்கின்றேன்.
இந்தப் பாடலைப் பின்னர் மேடையில் பாடும் போது என்னால் பாட முடியாமல் போயிருக்கின்றது. இப்பவும் கூட அந்த நினைவுக்குள் போன பின்னர் என்னால் கதைக்கவே முடியாமல் இருக்கின்றது.
இப்படியான பல பாடல்களைத் தாயகத்தில் இருந்த காலத்தில் கொடுத்திருக்கின்றீர்கள், அது வெறும் முற்றுப்புள்ளியாக இருந்து விடவில்லை. நீங்கள் புலம்பெயர்ந்த பின்னர் கூட நம் தாயகக்களத்தில் இருப்பவர்களுக்கான உற்சாகமூட்டும் பாடல்களோ அல்லது புலம்பெயர்ந்த மக்களுக்கான எழுச்சிப்பாடல்களாக கொடுக்கின்றீர்கள். புலம்பெயர்ந்த களம் இப்படி எந்தெந்த வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது?
எங்களுக்கான சில பணிகள் இருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதையை மறக்க இயலாது, மறக்கவும் கூடாது. நாங்கள் இங்கே வந்துவிட்டோம்.எங்களுடைய உறவுகள் நாளும் அந்தக் கொடு நிகழ்வுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றார்கள். எனவே நாங்கள் இங்கிருந்து நாங்கள்
என்னென்னவெல்லாம் செய்யமுடியுமே அவற்றைச் செய்ய வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம். எனவே என்னால் முடிந்த அளவிற்கு இங்குள்ள நிகழ்வுகளில் எங்களுடைய வலிகளை, வரிகளாக்கிப் பாடுவது தான் என்னுடைய காலத்தின் பணியென்பேன். கலைஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி என்பார்கள். ஏற்கனவே எப்பவோ நடந்த, யாருக்காகவோ எழுதிய பாடல்களை எங்களின் இனம் அழிந்து கொண்டிருக்கும் போதும் பாடிக் கொண்டு இது தான் இசையென்பதை நான் ஏற்கமாட்டேன். சமகாலத்தைப் பிரதிபலிக்காத எந்தக் கலையும், எந்தக் கலைஞனும் மக்கள் மனங்களிலே இடம்பெற்று வாழ முடியாது என்பது என் கருத்து. இந்த வகையில் நான் கனடா தேசத்தில் இருந்தாலும் கூட என்னுடைய நிகழ்வுகளில் நானே பாடல்களை எழுதி குறிப்பாக பாலா அண்ணாவுக்கு முதன் முதலில் பாடல்களை எழுதிப் பாடி வெளியிட்டேன். அதே போல் தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் அப்படியே தான். ஏற்கனவே பழகிய கவிஞர்களுடனான அனுபவங்களும், எழுதும் ஆற்றலும்
இருப்பதனால் இப்பொழுது எனது தேவைக்கு உடனே நானே எழுதிப் பாடுகின்றேன்.
அத்தோடு "இசைக்கு ஏது எல்லை" என்னும் நிகழ்விலும் உங்களை ஈடுபடுத்தி வருகின்றீர்கள் இல்லையா?
ஆமாம், வைரமுத்து சொர்ணலிங்கம் அண்ணாவின் ஒழுங்கமைப்பில் நடந்து வருகின்றன. அந்த நிகழ்வுகள் பலவற்றில் பாடியிருக்கின்றேன். வரும் ஜூன் முதலாம் திகதி கூட ஒரு நிகழ்வு நடக்க இருக்கின்றது. அதை விட இங்கே நடைபெறும் நடன அரங்கேற்றம், இசைக்கச்சேரிகளிலும் பாடி வருகின்றேன்.
அண்மையில் நடனத்துக்காக உருவாக்கியிருக்கும் நான் உருவாக்கியிருக்கும் பாடல் இன்றைய நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றது. இப்பாடலை நடனம் செய்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம். இப்பாடல் ஹம்சானந்தி ராகத்தில் அமைந்தது. அதாவது எமது உறவுகள் படும் இன்னல்களை மறந்து நாம் இன்னும் இருப்பதா என்னும் தொனியில் அமைந்த பாடல்.
இதில் சரணத்தில் வரும்
"தோம் தோம் தோம்....தமிழரென இணைந்தோம் நாம்"
"தா தி தொம் நம் உறவைக் காப்போம் வா.."
அதில் "தா தி தொம் நம்" என்பது மிருதங்கத்திலே வரும் ஆரம்ப சொற்கட்டுக்கள்.
தில்லானாவின் சாயல் உள்ளே வருவது மாதிரி இருக்கும். ஒரு எழுச்சித் தன்மையோடு இப்பாடல் அமைகின்றது.
"ஈழத்தின் அழுகுரல் செவிகளில் கேட்கிறதே......." என்று தொடர்ந்து முழுமையாகப் பாடுகின்றார்.
சிரமம் பாராது இந்த நீண்டதொரு நேர்காணலை அளித்தமைக்கு மிக்க நன்றிகள்
உண்மையில் எங்களுடைய காலகட்டத்து அனுபவங்கள் வித்தியாசமானவை. அவற்றை இந்த ஒரு பேட்டியில் முடிக்கமுடியாது. மற்றக் கலைஞர்கள் பலரைச் சேர்த்து இன்னும் பல பேட்டிகளில் கொடுக்கும் போதே அவை முழுமை பெறும். எமது வரலாறு பெரியது,
அதில் எம் துயரம் சிறியது. தவறவிட்டவற்றை மீண்டும் ஒரு சந்தர்ப்பத்திலே நாம் பேசிக்கொள்வோம்.
ஈழத்து இசைவாரிதி வர்ணராமேஸ்வரன் அவர்களே, உங்கள் இசைப்பயணத்தில் இன்னும் பல அங்கீகாரங்களையும், நம் தாயக தேசத்தின் விடுதலையின் பால் நீங்கள் கொண்ட நேசமும் நிறைவேற வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
Sunday, March 02, 2008
"ஈழமண் தந்த குயில்" வர்ணராமேஸ்வரன்
Posted by
கானா பிரபா
at
10:05 PM
35
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook