Saturday, April 21, 2007
உயரப் பறக்கும் ஊர்க்குருவிகள்
மலையாளத் திரைப்படத்தைத் தியேட்டர் சென்று பார்க்கும் அனுபவம் எனக்கு மூன்றாவது முறையாகப் போன வாரம் வாய்த்தது. முன்னர் கேரள நகரான ஆலப்புழாவில் "ரசதந்திரம்", பின்னர் பெங்களூரில் "வடக்கும் நாதன்" இம்முறை சிட்னியில் "பலுங்கு". இங்கே இருக்ககூடிய மலையாளிகளின் எண்ணிக்கைக்கெல்லாம் தியேட்டர் வைத்துப் படம் போடமுடியாது. அவர்களின் வசதிக்கேற்ப திரையிடும் தமிழ், ஹிந்திப் படங்களைப் பார்த்தால் ஒழிய. என் ஞாபகத்தில் சிட்னியில் திரையிடும் மூன்றாவது மலையாளத் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். எனவே ஒரு புது அனுபவத்தைப் பெறவேண்டி தியேட்டருக்குப் போனேன். முதல் நாள் மாயக்கண்ணாடி ரிலீஸ் ஆகியிருந்தது. ஏற்கனவே சேரனின் புது கெட்டப்பை ஸ்டில்ஸில் பார்த்து "இது நமக்கு ஆவறதில்லை, இவர் போக்கே சரியில்லை" என்று நினைத்துப் (வரவனை அகராதிப்படி சொந்த செலவில் சூனியம் வைக்காமல்) போகாமல் இருந்தேன். நினைத்தது போல் மாயக்கண்ணாடி குறித்து வரும் விமர்சனங்கள் மெய்ப்பிக்கின்றன.
நூற்றுச் சொச்சம் மலையாளிகள், ஒரு ஈழத்தமிழனுடன் திரைப்படம் ஆரம்பமாகியது. பலுங்கு திரைப்படம் ஏற்கனவே "மம்முட்டியின் "காழ்ச்சா" (இங்கே என் விமர்சனம்), மோகன்லாலின் "தன்மத்ரா" போன்ற அழுத்தமான படங்களைக் கொடுத்து மலையாள சினிமாவில் திறமையான இளம் இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்று மெய்ப்பித்த பிளெஸ்ஸியின் இயக்கத்தில் வந்திருந்தது. தியேட்டருக்கு என்னை இழுத்துப் போக அதுவும் ஒரு காரணம். பிளஸ்ஸிக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை, இவரின் காழ்ச்சா திரைப்படம் , அநாதைப் பிள்ளையை எடுத்து வளர்க்கும் கதைப்பின்னணியில் வந்தபோது சமகாலத்தில் தமிழில் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம் வந்திருந்தது. இப்போது "இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது" என்ற மையப் பொருளில் வந்திருக்கும் பலுங்கு வந்தபோது தமிழில் சேரனின் "மாயக்கண்ணாடி" வந்திருக்கிறது.
பலுங்கு என்றால் ஆங்கிலத்தில் crystal. தற்போது வேகமாக அதிகரித்து வரும் நுகர்வுப் போக்கு, அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் மத்திய தர அல்லது கீழ்த்தட்டு மக்களின் இயல்பு வாழ்வை எப்படிச் சீரழிக்கின்றது என்பதே இந்தத் திரைப்படம் சொல்லும் சேதி. அதாவது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்ற அடிப்படைத் தேவை, ஒரு கட்டத்தில் உண்ண இன்னென்ன உணவு, உடை, இருப்பிடம் தான் வேண்டும், வாழ்க்கை இப்படித்தான் அமையவேண்டும் என்று ஆசைப்படும் போது இயல்பை மீறி அமைக்கப்படும் வாழ்க்கை, அது கொண்டுவரும் தேடல்களும், தேவைகளும் தொடர்ந்த முறையற்ற வாழ்வியல் அமைப்புமே இப்படத்தில் தொட்டுச் செல்லும் களங்கள்.
மம்முட்டி, பிளெளஸ்ஸியோடு காழ்ச்சாவிற்குப் பின் இரண்டாவதாக இணைகின்றனார். சொல்லப் போனால் மம்முட்டி ஏற்ற பாத்திரத்திற்க்கு இவர் தான் அளவான சட்டை. கன்னட உலகத்திலிருந்து லக்ஷ்மி சர்மா, காழ்ச்சாவில் கலக்கிய குட்டிப்பெண் நிவேதிதா, மற்றும் ஜெகதி, நெடுமுடி வேணுவும் இருக்கிறார்கள்.
ரப்பர் தோட்டத்தில் உழைத்துப் பிழைக்கும் சாதாரண தொழிலாளி மொனிச்சன் (மம்முட்டி), அவனுடைய தாய், மனைவி, இரண்டு குட்டிப் பெண்களாக இனிமையான குட்டி உலகம் அவர்களுடையது. தான் வாழும் கிராமத்தில் இங்கிலீஷ் மீடியத்தில் கற்றுக்கொடுக்க எந்தப் பாடசாலையும் இல்லையே என்ற ஆதங்கத்தில் நகரத்து ஆங்கிலப் பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்க்கின்றான். ஒவ்வொரு நாளும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு கொண்டுபோய், மீண்டும் கொண்டுவரும் பொறுப்பும் அவனுக்கு. நகரத்து தொடர்பில் அவனுக்கு கிடைக்கின்றது லாட்டரி தொழில் செய்து நடாத்தும் சோமன் பிள்ளையின் (ஜெகதி) நட்பு. சோமன் பிள்ளையின் தவறான வழி நடத்தலால் கிராம வாழ்வைத் தொலைத்து முழுமையாக நகரத்து வாழ்வில் குடியேறுகின்றது மொனிச்சன் குடும்பம்.
நகர வாழ்க்கை, சொல்லவா வேண்டும். ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் ஆரம்பித்து வாஷிங் மெஷின் வரை அத்தியாவசியமான ஆடம்பரத்தேவைகள் ஒவ்வொன்றாக எழும்புகின்றன. இருக்கவே இருக்கின்றார் சோமன் பிள்ளை (கெட்ட) வழிகாட்ட. கட்டைப் பஞ்சாயத்து, கள்ள நோட்டு புழக்கம் என்று மொனிச்சனின் நடத்தை மாறுகின்றது. இறுதியில் எந்த மகளின் ஆங்கிலப் படிப்புக்காக நகரம் தேடி வந்தார்களோ, அவளையும் தொலைத்து தம் வாழ்வையும் தொலைத்துப் போகின்றது மொனிச்சன் குடும்பம். பளிங்குக் கண்ணாடி பாதரசம் தொலைத்து நிற்கின்றது.
தமிழ் சினிமா இயக்குனர் வி.சேகர் போன்றோர் "வரவு எட்டணா, செலவு எட்டணா" பாணியில் எடுக்கும் படங்களுக்கு மிக அருகில் இந்தக் கதைக்களம் இருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தை வித்தியாசமாகச் சொல்லமுற்பட்டிருக்கிறார் பிளெஸ்ஸி. ஆனால் ஏற்கனவே நடுத்தர மக்களின் நாகரீக மோகம் பற்றி விலாவாரியாக ஆளுக்கொரு இயக்குனர்கள் பிரித்து மேய்ந்திருப்பதால், இயக்குனர் பிளெஸ்ஸி படத்தில் சொல்லும் விஷயங்கள் அதிகம் ஆட்கொள்ளவில்லை. ஏற்கனவே இப்படியான கதைக்கருவை மிகைப்படுத்தல்களோடு பார்த்துப் பழகிய கண்களுக்கு, இயல்பாகச் சொல்ல முற்படும் விடயங்களும் எடுபடமுடியாமல் போகும் அபாயம் இப்படத்தில் இருக்கிறது.
சுமாராகப் போய்க்கொண்டிருக்கும் இப்படத்தில் அவ்வப்போது வந்து விழும் காட்சித் துளிகள் தான் ஒத்தடம். உதாரணமாக மொனிச்சனின் அப்பாவித்தனமான வாழ்க்கையும், குடும்பத்தினரின் நேசமும்.அடிப்படை வசதியற்ற தன் கிராமத்தில் இருந்தபோது மனைவியின் அருகாமை உணர்வு, பட்டணத்து வாழ்வில் சின்னத்திரையோடு தொலைந்த விதம் காட்டிய விதம், மம்முட்டி எழுத வாசிக்கத் தெரியும் முறை போன்ற காட்சிப்படுத்தல்கள் அழகு.
ரப்பர் மரத்தொழிலாளியாக வாழ்ந்துகாட்டுவதிலும் சரி, விபச்சார விடுதி ஏறி, கள்ள நோட்டடித்து என்று ஒவ்வொரு தப்பாகச் செய்யும் போது மனம் புழுங்குவதிலும் சரி மம்முட்டிக்கு நிகர் எவருமில்லைப் போல. ஆனால் குளேசப்பில் அவரின் முகத்தைக் காட்டும் போது போது வெளிப்படும் தோற்ற முதிர்ச்சி, இந்தக்கலைஞனின் எதிர்காலப் பாத்திரத் தேர்வுகளுக்கு எல்லை போட்டுவிடுமோ என்ற கவலையும் பிறக்கின்றது. இவரின் மனைவியாக வரும் லக்ஷ்மி சர்மாவின் நடிப்பும் அளவு சாப்பாடு.
காழ்ச்சாவில் வந்த பேபி நிவேதிதா, மம்முட்டியின் இரண்டாவது பெண்ணாக வந்து வயதுக்கேற்ற குறும்புத்தனம் செய்வதும் இயல்பு. தன் சகோதரியைத் தொலைத்து அழும் இரவில் சாப்பிடக் கூப்பிடும் போது, "என் அக்காவோடு சேர்ந்து தானே சாப்பிடுவேன்" என்று குமுறும் போது நமக்கும் குமுறல் வருகிறது.
வில்லத்தனமான நகைச்சுவைக்கு ஜெகதியும் பொருத்தமான தேர்வு. ஒரு கட்டம் வரை " நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று வாய்விட்டுக் கேட்க வேண்டும் போல, பார்ப்பவர் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணும் பாத்திரத்தை உணர்ந்தே செய்திருகிறார். நகைச்சுவை தனி ட்ராக்கில் பயணிக்காமல் படத்தின் மையவோட்டத்தோடே பயணிக்கிறது.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு மம்முட்டி தானும் முதியோர் கல்வியில் சேரும் காட்சிப்படுத்தல் புதுசு. பசு என்ன தரும்? பால் தரும் என்கிறது ஒரு வயசாளி, இன்னொருவர் சொல்கிறார் பசு சாணி தரும்.
இந்தப் படத்தில் இயக்குனரின் எண்ணவோட்டத்திற்குச் சமானமாக உழைத்திருக்கவேண்டியவை ஒளிப்பதிவும் இசையும். ஆனால் படம் பார்த்த அனுபவத்தில் ஒளிப்பதிவாளர் நடுத்தர உழைப்பையே இதில் கொடுத்திருக்கிறார். பல காட்சிகளில் ஒளியமைப்பு ராமநாராயணன் படங்களைப் பார்த்த உணர்வு வருகின்றது.
காழ்ச்சாவிலிருந்து இயக்குனர் பிளெஸ்ஸியின் கூட்டணி இசையமைப்பாளர் மோகன் சித்தாராவும் மூன்று பாடல்களோடு படத்தின் டைட்டிலில் இருந்து ஒரே பின்னணி இசைக்கலவையை மட்டும் கொடுத்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகளுக்கு ஒரே மாதிரியான இசை வந்து விழுகின்றது. இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் , பல முக்கிய காட்சிகளைப் பேசவைத்திருப்பார் தன் இசையால்.
சில இயக்குனர்களுக்கு ஒரு வியாதி இருக்கும், காட்சிப்படுத்தல்களுக்கான பின்னணி இசையோ, அல்லது பாடல்களோ ஒரே பாணியில் இருக்கவேண்டும் என்பதே அது. பிளெஸ்ஸியும் விதிவிலக்கல்ல. முன்னய படங்களின் சாயலில் பாடல் தெரிவு இருக்கின்றது. ஆனாலும் "பொட்டு தொட்ட சுந்தரி" பாடலின் அமைப்பு ரசிக்க வைக்கின்றது. லாட்டரி வண்டியில் ஆரம்பிக்கும் அந்தப் பாடல் மெல்ல மொனிச்சன் குடும்பத்துப் பாடலாக மாறுவது இனிமை. பாடலைக் கேட்க
சுய புத்தியுள்ள, ஒரு நேர்மையான குடியானவனான மொனிச்சன் தான் தவறு செய்கின்ற சந்தர்ப்பங்களை விட்டு விலகிப் போக ஏன் முடியவில்லை என்பதற்கும், ஆரம்பத்தில் அவனுடைய தாயாக வந்த மூதாட்டிக்கு என்ன நடந்தது என்பதற்கும் படத்தில் நேர்மையான விளக்கமில்லை. மூன்று பாட்டு மட்டும் போதும் என்று அடம்பிடித்த இயக்குனர், படத்தின் காட்சியமைப்பிலும் கத்திரி வைத்திருந்தால் பலுங்கு உண்மையில் பளிங்காயிருக்கும். எடுத்துக்கொண்ட கதைக்கருவை இரண்டு மணி நேரம் சுமாராக எடுத்துவிட்டு இறுதியில் அந்தக் குடும்பத்தில் பலி ஒன்றை கொடுத்து ரசிகர்களிடம் அனுதாபம் தேடும் இயக்குனராக பிளெஸ்ஸி இனியும் இருக்கக் கூடாது. காழ்ச்சா போன்ற படைப்பை எடுத்த எடுப்பில் தந்த உங்களால் முடியும். அடுத்த படம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
கடந்த 2006 என் தாயகப் பயணத்தில், ஒருநாள் பேச்சுவாக்கில் என் சினேகிதன் சொன்னான், "மச்சான் வெளிநாட்டுக் காசு கிடைத்த சுகம், நிறையச் சனம் இப்ப தோட்டம் செய்யிறதில்லை. முந்தியெல்லாம் தோட்டம் செய்யேக்கை, உரம், எரிபொருள் தட்டுப்பாடு எண்டு ஆயிரம் பிரச்சனை, இப்ப அதெல்லாம் கிடைச்சாலும் தோட்டத்திலை இறங்கி வேலை செய்ய ஆளில்லை" என்று தன் உள்ளக்கிடக்கையைச் சொன்னான்.
புலம்பெயர்ந்து வந்து விட்டு தாயத்தில் இருக்கும் நம்மவரின் போக்கு மீதான விமர்சனம் எவ்வளவு தூரம் எமக்குப் பொருந்தும் என்ற கேள்வி எழுந்தாலும், சில விஷயங்களைப் பேசாமல் இருக்கவும் முடியவில்லை. தம் பிள்ளைகள் இராணுவத்தின் சங்காரத்தில் இருந்து தப்பிப் பிழைக்கவேண்டும் என்ற முனைப்பில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பெற்றோரில் ஒரு சாரார் முழுமையாகவே அந்த இளைஞனின் சம்பாத்தியத்தில் சார்ந்து போய் சோம்பல் முறிக்கும் சமுதாயம் ஒன்றும் உருவானதைப் பார்க்க முடிகின்றது.
புலம் பெயரும் வரை பயிர்ச்செய்கை பார்த்த தோட்டக்காணி இப்போது தரிசாய் (2006 இல் எடுத்தது)
எனக்குத் தெரிந்த சிலரின் குடும்பத்தில் உடலில் வலுவும், ஆட்களை வைத்து தோட்ட வேலை செய்யக்கூடிய வல்லமையும் இருந்தும் வெளிநாட்டு உண்டியல் பணத்தில் சார்ந்திருக்கும் நிலை. மகன் குளிரில் விறைத்து வெயிலில் வதங்கி, காருக்குள் தூங்கி Drive through வில் சாப்பிட்டு இரண்டு ஷிப்ட் வேலையில் இளமை தொலைக்க, நம் தாயகத்தில் இடம்பெறும் சில தேவையற்ற களியாட்டத்தில் டொலரும் , யூரோவும் கரைகின்றது. போன வார வீரகேசரியில் "அக்சய திருதைக்கு நகை வாங்கலாம்" என்ற ஒரு பக்க விளம்பரம் வந்திருந்தது என் தாயக வாழ்வியல் அனுபவத்தில் முன்னர் அறிந்திராத புதுமையாக இருந்தது இந்த நவீன சடங்கு. வெளிநாட்டுப் பணப்புழக்கம் அதிகரிக்க அதிகரிக்கத் தேவையற்ற சடங்குகளும் நம்மவர்களிடம் ஒட்டிக் கொள்கின்றன.
"யாழ்ப்பாணத்தில் பயிர்ச்செய்கை செய்யப்படாத காணிகளில் கவனமெடுத்து ஏதாவது பயிரை நட்டிருந்தால் இப்போது எதிர் நோக்கும் உணவுத்தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்திருக்க முடியும்" என்று சொல்லி வைத்தார் நண்பர் ஒருவர்.
Palunku படங்கள் உதவி: Musicindiaonline.com
Saturday, April 14, 2007
புத்தாண்டில் என் புதுத்தளம்
அன்பின் வலையுலக நண்பர்களுக்கு இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இணையப் பரப்பில் தனி நபர் பக்கங்கள் வர ஆரம்பித்த காலகட்டத்தில், நானும் ஒப்புக்கு நம்தமிழ்.கொம் என்ற இணையப்பக்கம் ஆரம்பித்ததோடு சரி உருப்படியாக ஒன்றும் செய்யாமல் அந்தப்பக்கம் வீணாகப் போனது தான் மிச்சம். கடந்த ஒருவருட கால வலைப்பதிவுலகின் என் பங்கிற்கு நானும் ஏதோ செய்யமுடிந்தது என்ற தெம்பில் மீண்டும் தனியான இணையப்பக்கம் தேடிப் போய்விட்டேன்.
கொஞ்சக்காலத்துக்கு என் புளக்கர் பதிவிலும் தனித்தளத்திலும் சமகாலத்தில் பதிவுகளைக் கொடுக்கவிருக்கிறேன்.
பின்னர் முழுமையாக என் தனித்தளங்களில் பதிவுகள் வர ஆரம்பிக்கும். எத்தனை நாள் தான் புளக்கரின் முதுகில் சவாரி செய்வது?
சித்திரைப் புதுவருடப் பிறப்புக்கு என் தளத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற என்ற முனைப்பு மட்டுமே என்னிடமிருந்தது. ஆனால் அதற்கு முழுமையான செயல்வடிவம் கொடுத்துப் பேருதவி புரிந்த மதியின் செயற்பாட்டுக்கு பெரும் நன்றியறிதலை இந்த வேளை சொல்லிக்கொள்கின்றேன்.
புதுத் தளத்தின் கட்டிடவேலைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும் வீடு கட்டும் போதே ஓவ்வொரு கல்லாகத் தொட்டுப் பார்க்கும் பரவசம் இதிலும் இருக்கிறது.
இதோ என் தளங்கள்.
மூலப்பதிவுத்தளம்
மடத்துவாசல் பிள்ளையாரடி
உலாத்தல்
றேடியோஸ்பதி
நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா
யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு நினைவில்
போன வருஷம் 2006 தமிழ்ப் புதுவருசம் பிறக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில். யுத்த நிறுத்தம் குற்றுயிராக இருந்த, நெருக்கடி நிலை மெல்ல மெல்லத் தன் கரங்களை அகல விரித்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு வருசம் ஆகிய இன்றைய புத்தாண்டுப் பொழுதில் முழுமையாகவே சீர் கெட்ட நிலையில் எம் தேசம். பாதை துண்டிக்கப்பட்டு பாலைவன வாழ்க்கையில் எம்மக்கள்.
கடந்த வருசத்து நினைவுகள் பனிக்கின்றன. இந்த மீள் பதிவின் இறுதி வரிகள் நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வு பயமாகவும் சோகமாகவும் மனசை அப்பிக்கொள்கின்றது.
இறைவா! என் இனத்துக்கு நிரந்தரமான விடிவைக் கொடு, பலி எடுத்தது போதும்.....
யாழ்ப்பாணத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயிலுக்கு முன் உள்ள இணையச் சேவை நிலையத்தில் (Internet Browsing centre)இருந்து தட்டச்சிய பதிவு மீள் இடுகையாக இதோ.
யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு
தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். முதல் நாள் ஊர்க்கோயில் வளவுகுள்ள இருக்கிற ஐயர் வீட்ட போய் கண்ணாடிப்போத்தலுக்க மருத்து நீர் வாங்கி வந்து வச்சிட்டு இருப்பம். அடுத்த நாள் வெள்ளன எழும்பி மூலிகைக் கலவையான மருத்து நீரைத் தலையில் தடவி விட்டு கிணத்தடிக்குப் போய் கண் எரிச்சல் தீர அள்ளித் தோய்ந்து விட்டுப் புதுச் சட்டையை மாட்டிக்கொள்வோம்.
வருசம் பிறக்கும் நேரத்துக்கு முன்னமே மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போய்க் காத்திருந்து வருசப்பிறப்புப் பூசையையும் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டுவோம்.
வீடும் முதல் தினங்கள் மச்சச் சாப்பாடு காய்ச்சின தீட்டுப் போக முதல் நாளே குளித்துத் துப்பரவாக இருக்கும்.
எங்கட வீட்டுச் சுவாமி அறைக்குள் பயபக்தியாக நுளைஞ்சால் அப்பாவிட்ட இருந்து புதுக் காசு நோட்டுக்கள் வெற்றிலையில் சுற்றிக் கைவியளமாக் கிடைக்கும். அடுத்தது நல்ல நேரம் பார்த்து இனசனங்கள் வீட்டை நோக்கிய படையெடுப்பு.
அவர்கள் வீட்டிலும் அரியதரம், சிப்பிப் பலகாரம், வடை,முறுக்கு, பயற்றம் உருண்டை என்று விதவிதமான பலகாரங்களுடன் நல்ல தேத்தண்ணியும் கைவியளமும் கிடைக்கும். காற்சட்டைப் பொக்கற்றுக்குள் காசைத் திணித்துவிட்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டுவோம். வீட்டை வந்ததும் காற்சட்டையைத்துளாவித், திணித்திருக்கும் நாணயக்குற்றிகளையும், ரூபா நோட்டுக்களையும் மேசையில் பரப்பிவைத்து எண்ணத்தொடங்குவேன். ராசா பராக்கிரமபாகுவின்ர படம் போட்ட அஞ்சு ரூபா, பத்து ரூபாப் புதுநோட்டுக்களும் ஒரு ரூபாய், ரண்டு ரூபாய்க் குற்றிகளும் என்னைப் பார்த்த புளுகத்தில இருப்பது போல ஒரு பிரமை, சந்தோசத்தோட அவற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பன்.
எங்கட சொந்த ஊரில இப்பிடி அனுபவிச்சுக் கொண்டாடக்கூடிய வருசப் பிறப்பு பன்னண்டு வருசத்துக்குப் பிறகு இந்த ஆண்டு கிடைச்சது.
வருசப்பிறப்புக்கு முதல் நாள் வெறுமையான குடி தண்ணீர்ப் போத்தலும் கொண்டு பிள்ளையாரடி ஐயர் வீட்ட போனன். ஐயரின் பேத்தி முறையான சின்னன்சிறுசுகள் (எதிர்கால ஐயர் அம்மா!)பெரிய கிடாரத்தில இறைக்கப் பட்டிருந்த மருத்து நீரை அள்ளி வருபவர்களுக்கு அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தனர். இருபது ரூபாய் நோட்டை நீட்டி வீட்டுப் போத்தலை நிரப்பிக்கொண்டேன்.
" அம்மா ! இவ்வளவு நேரமும் அள்ளியள்ளி இடுப்பு விட்டுப் போச்சுது" என்று செல்லமாக முனகியவாறு அந்தச்சிறுமி என் போத்தலை மருத்து நீரால் நிரப்பினாள்.
அடுத்த நாள் வருசப்பிறப்பு நாள். அதிகாலை 4.31க்கு இலங்கை நேரப்படி வருசம் பிறக்கப் போகுது, வெள்ளன எழும்ப வேணும் எண்டு மொபைல் போனில அலாரம் வைத்தேன். அதிகாலை நான் வைத்த அலாரம் எழும்ப முன்னமே ப்க்கத்து ஊர்க்கோயில் ஒலி பெருக்கிகளில் சீர்காழி கோவிந்தராஜனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பலமாகப் பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.
நானும் எழும்பிக் குளித்து முடித்துவிட்டு மடத்துவாசல் பிள்ளையாரக்குப் போனால், நேரம் அதிகாலை 3.45. அப்போதே சனக்கூட்டம் இருந்தது.சின்னஞ்சிறுசிகளிலிருந்து வயதானாவர்கள் வரை அதிகாலை வேளையில் திரண்டிருந்தனர். உள்வீதி சுற்றிச் சுவாமி தரிசனம் முடித்து விட்டு வருசம் பிறக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தேன். சரியாக 4.31க்கு ஆலயத்தின் காண்டாமணி ஓங்கி ஒலித்தது.
காண்டாமணி ஓசையைத் தொடர்ந்து கோயில் பேரிகை முழங்க நாதஸ்வர மேளக் கச்சேரியும் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. அவற்றை அமுக்குமாற்போலப் பக்தர்களின் பக்திப் பரவசம் அவர் தம் வாய்வழியே " அப்பூ பிள்ளையாரப்பா" என்று ஓங்கி ஒலித்தது.தன் குமர் கரை சேர ஒரு பிரார்த்தனை, வெளிநாடு போக வழி ஏற்படுத்த ஒரு பிரார்த்தனை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற இன்னொரு பிரார்த்தனை, இப்படியாக அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் பிரார்த்தனைகளாக வெளிப்பட்டன. தலைக்கு மேல் கை கூப்பி அனைவரும் ஒரு சேர அந்த ஆண்டவனின் பூசையில் ஒருமுகப்பட்டு நின்றனர்.
திரைச்சீலை மறைப்பு விலகிச் சுவாமி தரிசனமும், தீபாராதனைகளும் தொடர்ந்து சுவாமி வெளிவீதி வலமும் இடம்பெற்றது.
விபூதி சந்தனப் பிரசாதம் பெற்று விட்டுப் பக்கத்துக்கோயிலான கந்தசாமி கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தேன்.
அடுத்தது நல்லூர்க் கந்தசாமி கோயில். நான் கோயிலுக்குப் போனபோது சுவாமி உள்வீதி சுற்றி வெளிவீதிக்கு வரும் வேளை அது. " சுவாமி வெளியில வரப்போகுது, உங்கட வாகனங்களை அப்புறப்படுத்துங்கோ" எண்டு ஒருவர் ஒலி பெருக்கியில் முழங்கிக்கொண்டிருந்தார். சனத்திரள் இன்னொரு நல்லூர் மகோற்சவத்தை ஞாபகப்படுத்தியது.
தாவடி பிள்ளையாரடியிலும் அன்று தேர்த்திருவிழா. அப்பாவின் ஊர்க்கோயில் என்பதால் சென்று பார்த்தேன்.
காலை பத்து மணியாகிவிட்ட பொழுதில் யாழ் நகரவீதிக்குப் போனேன். மனோகராத்தியேட்டர் புது வருச ரிலீஸ் " திருப்பதி" பட போஸ்டர்களும் ஹீரோ கொண்டா மோட்டார் சைக்கிள் இளைஞர் கூட்டத்துடன் மொய்த்திருந்தது.
காக்காய் கூட்டத்திலும் குறைவான சனம் தான் நின்றிருந்தது. சில கடைகள் தன் படிக்கால்களைக் கழுவி " பெண் பார்க்கப்போகும் போது ஒளித்திருந்து பார்க்கும் புது மணப் பெண் போல ஒற்றைக் கதவு திறந்திருக்க நாட்கடை வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தன. முதல் நாள் நான் நகரப் பகுதிக்கு வந்தபோது எள் போட்டாலும் விழ முடியாச் சனக்கூட்டம் இருந்திருந்தது. "நூறு ரூபாய்க்கு வருசப்பிறப்பு" என்று தான் விற்கும் ரீசேட்டை விளம்பரப்படுத்திய பாதையோரக் கடைக்காரர்களையும் காணோம்.
தொண்ணூற்று மூண்டாம் ஆண்டு ஏசியாச்சைக்கிளிளில் கூட்டாளிமாரோடை கூட்டாளிமாரோட கோயில்களுக்குப் போய்ப் பிறகு ரவுணுக்கு வந்து சுற்றிப் போனது ஞாபகத்துக்கு வந்தது.இப்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில இருக்கினம்.
வருசப்பிறப்பு நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிக் கொண்டு இணுவிலுக்குத்திரும்பினேன்.
புதிதாய்ப் பிறந்த வருடத்திலாவது நிரந்தர நிம்மதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு நிற்குமாற்போலக் காங்கேசன் துறை வீதி அமைதியாகக் குப்புறப் படுத்துக்கிடந்தது. பாதை நீண்ட தூரம் போல எனக்குப் பட்டது.
Thursday, April 05, 2007
மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்
தொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூரத்திலிருந்து எரிபொருட்கள், உணவுப் பொருட்கள் மீதான தடையை விதித்த காலமது. பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாழடைந்த , சந்திரமுகிக்கள் குடியிருக்கும் பங்களாக்களாக
மாறிவிடவும், சந்திக்குச் சந்தி கிடுகால் வேயப்பட்ட தற்காலிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைந்துவிட்டன.
வெளிர் சிவப்பு கலரில் இருக்கும் பெற்றோல் போத்தல்கள் ஒப்புக்கு இரண்டு போத்தல்களாகவும் மற்றயவை நீலக்கலர் தாங்கிய மண்ணெண்ணைப் (kerosene) போத்தல்களாகவும் இருக்கும். போத்தலொன்று ஐநூறு ரூபாவுக்கு மேல் விற்கும் பெற்றோல் எல்லாம் வாங்கக் கட்டுப்படியாகாது வாகனங்கள் மரக்கறி எண்ணெய்யில் ஓடிக்கொண்டிருந்தன. வாகன இயந்திர எரிபொருள் தாங்கிக்கு மரக்கறி எண்ணையை நிரப்பி ஸ்ராட் பண்ணுவதற்கு பெற்றோலின் சில துளிகள் முகர்ந்து பார்க்க மட்டும் காட்டி அல்லது ஏமாற்றி நம்மவர்கள் வாகனமோட்டிக் கொண்டிருந்தார்கள்.
தொண்ணூறாம் ஆண்டு ஆரம்பம் வரை மின்சார வசதியோடு பொழுது போக்கிக் கொண்டிருந்த சனங்களுக்கு திடீர் மின்சார வசதி இழப்பும், பெற்றோலியப் பொருட்களின் கொள்ளை விலையும் படம் பார்க்கும் பொழுதுபோக்கிற்கும் ஆப்பு வைத்தது. தியேட்டர்களும் ஓய்ந்துவிட்டன. அப்போது தான் மின்சாரம் தரும் மாற்றீடுகள் மெல்ல மெல்ல நம்மவர் கண்டு பிடிப்பில் வந்தன. ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு ஜெனரேற்றர்களும் வீடியோ படப்பிடிப்புக்காரர் பிழைப்பு நடத்த ஓரளவு கை கொடுத்தது.
சனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷின்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள், ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளாக அமைந்தன. மண்ணெண்ணை பாவித்து இவற்றை இயக்கமுடியும் என்பதால் செலவும் ஒப்பீட்டளவில் குறைவானதாகப்பட்டது. இவ்வளவு முன்னுரையும் போதுமென்று நினைக்கிறேன்.
அப்போது க.பொ.த சாதாரண தர வகுப்பு படித்து ஓய்ந்த இடைவெளிக் காலங்கள். வேறு பெரிதாக வேலை என்றும் இல்லை. நண்பன் கிரி, சந்திரகுமார் போன்றவர்கள் தகப்பனுக்குத் துணையாக மண்வெட்டி பிடித்துக் தோட்டத்தில் இறங்கிவிட்டார்கள். எனக்கும் எஞ்சியிருந்த சில நண்பர்களுக்கும் டைனமோவில் சுத்திப் பாட்டுக் கேட்பதும் அரட்டை அடிப்பதுமாகக் காலம் கழிந்தது. அப்போது தான் வந்தது "சின்னத்தம்பி" படப்பாடல்கள். யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் ஒரு றேக்கோடிங் பாரில் பதிவு செய்த சின்னத்தம்பி பாடல்களை கசற்றின் ஒலிநாடாவும், டைனமோவும் தேயத் தேயக் கேட்டோம். சின்னனுகளுக்கும் " போவோமா ஊர்கோலம்" பாட்டு பாடமாக்கிவிட்டது. கோயில் திருவிழா நாதஸ்வரக்காரர்களும் தொடர்ந்து "ராசாத்தி மனசிலே" பாட்டு வாசித்து ஓய்ந்து சின்னத்தம்பி படப்பாடல்களுக்கும் தாவிவிட்டார்கள்.
சின்னத்தம்பி பாட்டுக் கேட்ட மயக்கம் படத்தையும் பார்க்கவேண்டும் என்று தூண்டியது அப்போது. ஆளுக்கு ஐம்பது ரூபா போட்டு சேர்த்த பணத்தில் ஒரு வீடியோக் கடைக்காரரிடம் ஜெனறேற்றரை வாடகைக்கு வாங்கி, சின்னத்தம்பி படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு கட்டினோம். சின்னத்தம்பி பட வீடியோ கசற்றுக்கும் அப்போது ஏக கிராக்கி. ஆமிக்காரனைத் தாண்டிக்குளத்தில் தாண்டி ஒரு சில பிரதிகள் தான் வந்திருந்தன.
எங்கள் சகபாடி சுதா துப்பறிந்ததில் சாவகச்சேரியில் ஒரு வீடியோக்கடைக்காரரிடம் சின்னத்தம்பி படம் இருப்பதாகத் தெரிய வந்தது. முதலில் ஜெனறேற்றருக்கான வாடகைப் பணத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டு இணுவிலிலிருந்து சாவகச்சேரி நோக்கி சைக்கிள் வலித்தோம். ஒரு மாதிரி வீடியோக்கடைக்காரரின் வீடும் கண்டுபிடித்தாயிற்று. ஆனால் மனுஷனோ ஏகத்துக்குப் பிகு பண்ணினார். "தம்பியவை ! நான் அயலட்டையில் இருக்கிற சனத்துக்குத் தான் வாடகைக்கு கசற் குடுக்கிறது, உங்களை நம்பி எப்பிடித் தருவது " என்று அவர் சொல்லவும் சினிமா சான்ஸ் இழந்த புதுமுகத்தின் மனநிலையில் நான். கூடவந்த சகபாடி ஒருவனோ, " அண்ணை நம்பிக்கை இல்லையெண்டால், இந்தாங்கோ என்ரை வொச்சை வச்சிருங்கோ" என்று (உணர்ச்சிவசப்பட்டு ) தன் கைக்கடிகாரத்தைக் கழற்ற வெளிக்கிடவும்,வந்தவர்களில் யாரிடமாவது அடையாள அட்டை இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு நாளை திரும்ப படக்கசற்றுடன் வரும் போது பெற்றுக்கொள்ளலாம் என்று வீடியோக்கடைக்காரர் கொஞ்சம் இறங்கிவந்தார். மணிக்கூடு கழற்றின நண்பனே தன் அடையாள அட்டையைப் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு பெரிய சாதனை ஒன்றை சாதித்த திருப்தியில் சின்னத்தம்பியுடன் சாவகச்சேரியில் இருந்து இணுவில் நோக்கிய பயணம்.
ஜெனேறேற்றர் குடிக்க இரண்டு போத்தல் மண்ணெண்ணை நானூறு ரூபாய் கொடுத்து வழியில் வாங்கி வந்தோம். அண்டை அயல் சனங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு படம் போட சுதா வீட்டில் ஒரு மணி நேரம் முன்பே டோரா போட்டிருந்தது.படம் போடும் இளைஞர்கள் ஏதோ பெரிய பந்தா காட்டிக்கொண்டு ஆறுதலாகக் கதை பேசி ஒவ்வொன்றாக ஆயத்தப்படுத்தினோம்.
இரவானது, ஜெனறேற்றை சுதா இயக்க, படம் போடும் முனைப்பில் சுரேஷ் இறங்கி ஒருவாறு எழுத்தோட்டம் முடிஞ்சு கதாநாயகன் பிரபு எட்டிப்பார்க்க பொக்கொன்று ஜெனறேற்றர் அணைந்தது. சுதா ஜெனறேற்றை மீண்டும் இயக்க சுரேஷ் மீண்டும் படத்தை இயக்க, தொடந்து 15 நிமிஷம் ஓடியிருக்கும், மீண்டும் குறட்டை விட ஆரம்பித்தது ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். படத்துக்கு வழமையாக ஒரு இடைவேளை தான், ஆனால் நாங்கள் போட்ட சின்னத்தம்பிக்கு இடைவேளை வரமுன்பே ஏழெட்டு இடைவேளைகள்.
வாங்கி வந்த மண்ணெண்ணையில் கலப்படம் என்று புகார் சொன்னது ஒரு சகபாடி, இன்னொன்றோ "இல்லையில்லை, உந்தக் கோதாரி மிஷின் ஒயில் ராங்கில (oil tank) தான் எதோ பிழை" என்றது. ஜெனறேற்றரும் வஞ்சகமில்லாமல் நாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்த இரண்டு போத்தல் மண்ணெண்ணையையும் குடித்துவிட்டு ஓப்புக்கு ஒரு சில மணித்துளிகள் வேலைசெய்துவிட்டு வஞ்சகமில்லாமல் ஓய்ந்தது.
பாதிப் படம் தான் பார்த்திருப்போம். மீதிப் படம் பார்க்க ஜெனறேற்றருக்கு மண்ணெண்ணை இல்லை. நண்பர்கள் எல்லோரும் பக்கத்தில் நின்ற நண்பன் கிரியின் முகத்தைப் பார்த்துக் கண்களால் யாசித்தோம்.
"நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டு தெரியுமடா, சும்மா விளையாடாதேங்கோ, நாளைக்கு இறைப்புக்குத் தான் ரண்டு போத்தில் மண்ணெண்ணை வீட்டில இருக்குது"
என்று முரண்டு பிடித்தான் கிரி. முடிவில் நட்பு வென்றது. இறைப்புக்கு வைத்திருந்த மண்ணெண்ணை சின்னத்தம்பி படத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.
தொடர்ந்து படம் பார்க்கும் ருசி பல்கிப் பெருகியது. கொழும்பிலிருந்து ஜெமினி சினிமா, பொம்மை போன்ற சினிமாப் புத்தகங்கள் தடைசெய்யப்படமுன் வரக்கூடியதாக இருந்தன. அதிலிருந்து பொறுக்கிய துணுக்குகள் மூலம் நானே என்ன படத்தைப் பார்க்கலாம் என்று முடிவு செய்வேன். ராஜ்கிரண் நாயகனாக அறிமுகமான "என் ராசாவின் மனசிலே", அண்ணாமலை, தேவர் மகன், என்றும் அன்புடன், சுந்தர காண்டம் என்று படங்களைத் தெரிவு செய்து கொடுப்பேன். நண்பர்களின் கூட்டு முதலீட்டில் வாடகைக் கசற்றும் ஜெனறேற்றருமாக படம் பார்த்த காலங்கள் அவை. ராஜ்கிரனின் நடிப்பு, ராஜாவின் இசை இவைதான் படம் போடும் நேரம் தவிர்ந்த நம் பேச்சுக்கச்சேரியின் தலைப்புக்கள். சுதா நிரந்தரமாகவே ஊசிலி மெஷின் ஒன்றை ஜெனறேற்றராக மாற்றி அடிக்கடி படம்போடும் திட்டம் கொண்டுவரவும், அவர்கள் வீடு மினி சினிமா போல மாறியது.
பெரும்பாலும் படத்தை இரசித்துப் பார்க்கும் ஆவலை விட, அந்த நெருக்கடியான காலத்திலும் படம் போட்டுக்காட்டி ஏதோ சாதனை செய்த திருப்தி தான் முனைப்பில் இருக்கும். எமது வாலிபப்பருவத்தில் இருந்த ஒரே பொழுதுபோக்கு அல்லது நடத்தை அதுவாகத் தான் இருந்தது.
என் படத் தெரிவுகள் சில சொதப்பியதும் உண்டு. விக்ரம் நடிக்க அப்போது பிரபலமாக இருந்த பி.சி. சிறீராம் இயக்க "மீரா" படம் வருகுது என்று ஆவலைத் தூண்ட, மீராவையும் எடுத்துப் போட்டோம்.
படம் தொடங்கி முடியும் வரை, கதாநாயகனும் நாயகியும் வில்லனுக்கு பயந்து ஒடுகினம் , ஒடுகினம், ஓடிக்கொண்டே இருக்கினம். படம் முடிஞ்சாப் பிறகும் கூட்டாளி அப்புவால் நம்பமுடியவில்லை. இன்னும் ஏதேனும் படம் இருக்கும் என்ற நப்பாசையில் எழும்பவேயில்லை. மற்றவர்கள் தங்கள் மேசம் போனது போல் என்னை முறைத்துப் பார்த்தார்கள். ஆனாலும் என்னுடைய முந்திய தெரிவுகள் சில நல்லதாக இருந்ததால் நானே அவர்களுக்கு நிரந்த ஆலோசகர்.
தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட ஜெனறேற்றர்கள் அடிக்கடி கோளாறு பண்ணும் , மண்ணெண்ணையும் சுத்தமாக இராது, மெஷினுக்குள் கல்மண் எல்லாம் சங்கமமாகி சேடம் இழுக்கும். ஒரு இரண்டரை மணி நேரப்படம் ஐந்து மணித்தியாலத்தையும் எடுத்துப் பார்க்கக் கூடியதாக இந்த ஜெனறேற்றரின் திருவிளையாடல் இருக்கும். அந்த இரவுப் பொழுதுகளில் எல்லா அயல்வீடுகளையும் எழுப்பிவிடும் இந்த ஜெனறேற்றரின் ஒப்பாரிச் சத்தம். இடைக்கிடை அது கோளாறுபண்ணி நிற்கும் போது ஒரு ஆள் பாரமான அந்த இயந்திரத்தைப் புரட்டிக் குலுக்க இன்னொருவர் கை வலிக்குமட்டும் ஜெனறேற்றரின் கயிற்றைச் சுழற்றி இழுக்கவேண்டும். பகீரதப் பிரயத்தன முயற்சியின் பின் தான், பட படவென வெடித்து விட்டு அது இயங்கத் தொடங்கும்.
அப்பிடியும் ஜெனறேற்றர் கை கொடுத்தாலும் இன்னொரு பிரச்சனையும் வானத்தில் வட்டமிடும் ஹெலிகொப்ரர் ரூபத்தில் வரும். ஹெலிச் சத்தம் கேட்டால், " தம்பியவை, படத்தை நிப்பாட்டூங்கோடா, வெளிச்சம் தெரிஞ்சால் சுடுவாங்கள்" என்று பெருசுகள் புலம்பத் தொடங்கும். ஹெலிக்குப் பயந்து ஜெனறேற்றர் ஓயும், ஹெலி அந்தப் பக்கம் போனதும் மீண்டும் அதை இயங்க வைக்க இன்னொரு போராட்டம்.
அந்தக் காலகட்டத்தில் ஒரு வேடிக்கையான சம்பவமும் நடந்தது எங்களூரில். ஒரு வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெனறேற்றர் பக்கத்து வீட்டை அண்டிய வேலிப்புறமாக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரருக்கும் இவர்களுக்கும் நீண்டகாலமாகவே பகை. அதனால் தான் விஷமத்துக்காக வேலியை அண்டிச் சத்தமாக வேலை செய்யும் ஜெனறேற்றரை வைத்திருக்கவேண்டும். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வீட்டில் திடீரென்று மயான அமைதி. ஜெனறேற்றர் ஓய்ந்து, ஏதோ விழுவது போல் சத்தம் கேட்கிறது. வெளியே ஒடிவந்து பார்த்தால் ஜெனறேற்றர் அவர்கள் வீட்டு கிணற்றுக்குள் நீந்தி விளையாடுகிறது. யார் செய்திருப்பினம் எண்டு நினைக்கிறியள்?
ஒரு சில மாதங்களில் திரைப்படத்தணிக்கை அமுலுக்கு வருகிறது. ஆபாசக்காட்சிகள் கொண்ட படங்கள் மீளவும் தணிக்கை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வீடியோக்கடைக்காரகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. அப்போது மானிப்பாய் வீதியில் உள்ள வீடியோ விமல் என்ற வீடியோக்கடையில் வைத்துத் தான் திரைப்படத்தணிக்கைக் குழு இந்தப்பணியைச் செய்து வந்தது. அப்போது பிரபு தேவா நடித்து வெளிவந்த "இந்து" படம் ஒன்றேகால் மணி நேரப்படமாகத் தான் தேறியது. ஆபாசப்பாடல்கள், காட்சிகள் நீக்கப்பட்டதால் வந்த கைங்கர்யம் அது. இப்படிச் சில படங்கள். பேசாமல் தணிக்கைக்குழுவில் இருந்தால் நல்லது என்று ஒரு சகா சப்புக்கொட்டியது.
இன்று நினைத்த நேரத்தில் செய்மதித் தொலைக்காட்சி, டீவிடி, வீ,சீடி என்று படம் பார்க்கவும் பொழுதுபோக்கவும் ஆயிரம்வசதிகள்.ஆனால் அன்று சகாக்களோடு எமது எல்லைக்குட்பட்ட ஆசைகளோடு படம்பார்த்துப் பொழுது போக்கிய நினைவுகள் சுகமானவை, அந்தச் சின்னச் சின்னச் சந்தோஷங்களை இழந்த வாலிப வயசு நினைப்புக்கள் வலி நிறைந்தவை.
ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.
படங்கள் நன்றி: தமிழ் நெட் (தாயக ஒளிப்படங்கள்)
மற்றும் பல்வேறு சினிமாத் தளங்கள்
Posted by
கானா பிரபா
at
10:51 PM
44
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook