உன்
சந்தங்கையின் நாதம் நான் கேட்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி...
மாமயில் நீ எம் தேவியடி....
பாட்டுக்கு ஆடிடும் பாவையாள்
அவள்
பாவமெல்லாம் புதுமை ராகம் தான்....
மானுடத்தின் குரல் ஒன்று தான்
அவள்
மனதை மயக்கியது உண்மை தான்
கானத்தில் கனிந்தவள் வந்திடுவாள்
இங்கே
கண்டறியா இன்பம் தந்திடுவாள்
வானத்திலே ஒளிரும் நட்சத்ரமாய்
எங்கள்
வாழ்வுக்கு வழிகாட்டி நின்றிடுவாள்
பொன்னுலகின் புதிய கீதங்களே!
பூமியின் செளந்தர்ய கோலங்களே!
மின்னி வரும் நாளை மேன்மைகளே!
மானுடத்தின் வெற்றி நாதங்களே!
ஐந்து வருடங்களுக்கு முன் நான் படைத்த வானொலி நிகழ்ச்சி ஒன்றில் சினிமாப் பாடல்களை ஒலிபரப்பி அலுத்த கணமொன்றில், கையில் சிக்கிய ஈழத்து மெல்லிசைப் பாடல்களில் இருந்து மேற்கண்ட பாடலை ஒலிபரப்பி விட்டு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டே கேட்க ஆரம்பிக்கின்றேன். ஏதோ இனம்புரியாத இனிய இசை இன்பத்தை என். சண்முகலிங்கன் வரிகளில், எஸ்.கே.பரராஜசிங்கம், மற்றும் எம்.ஏ.குலசீலநாதனின் குரலினிமை கொடுப்பதை உணர்கின்றேன். அன்று தொடங்கியது என் மெல்லிசைப் பாடல்களைத் தேடிக் கேட்கும் ஆவல், அது இன்றும் தணியவில்லை.
என் பதின்ம வயதுகளில் இலங்கை வானொலி தீண்டப்படாத சக்திகளின் கைகளில் வந்தபோது என் மனசு வெளிநடப்புச் செய்து இந்திய வானொலியையே நேசிக்க வைத்தது. அதற்கு முற்பட்ட காலங்களில் என் சிறுபிராயத்தின் நினைவுகளில் எஞ்சியிருப்பது பள்ளிக்குப் போகும் பரபரப்பில் அம்மா தந்த பிட்டுச் சாப்பாட்டை வாயில் முழுங்கிக் கொண்டே, மற்றைய அறையில் றேடியோ சிலோனின் காலை ஒலிபரப்பை அப்பா கேட்கும் போது, காலை ஆறு மணி நாப்பத்தைந்து நிமிசம் மரண அறிவித்தலைத் தொடர்ந்து பொங்கும் பூம்புனலுக்குமுன் வரும் ஒரு சில மெல்லிசைப் பாட்டுக்களில் ஒன்றிரண்டு இலேசாக நினைவில் இருக்கின்றது. அவ்வளவே
ஈழத்து மெல்லிசையில் அப்போது எனக்கிருந்த ஞானம்.
ஐந்து வருடங்களாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களோடு "முற்றத்து மல்லிகை" என்றும் பின்னர் இப்போது படைக்கும் "ஈழத்து முற்றம்" போன்ற என் வானொலிப் படைப்புக்களுக்கும் பிள்ளையார் சுழி கூட இந்தப் பாடலில் இருந்தே ஆரம்பித்தது. இந்த நன்றிக் கடனைத் தீர்க்க எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் பதிவாக இதனைத் தருகின்றேன்.
பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் "பரா" என்னும் எஸ்.கே.பரராஜசிங்கத்தைப் பற்றிச் சொல்லும் போது:
வானொலியில் நவ நவமாய்
வளமான நிகழ்ச்சிகளை
வனைந்தளிப்பான்!
தேனொலிக்கும் தண் குரலால்
இசை பிழிந்து வார்த்திடுவான்!
தெவிட்டாதென்றும்!
தான் ஒத்த கலைஞர்களும்
தலை நிமிர வழி காட்டித்
தலைமை செய்வான்!
பா நோய்க்காவாறு "கங்கை
யாளை" ஒலித் தட்டமைத்த
பணியே சான்று!
மெல்லிசைக்கும் நம் நாட்டின்
மூல பிதா! அரங்கேற்றம்
மேடை தோறும்
மெல்லியர்கள் பரதத்தில்
நடத்துகையில் பாட இன்று
வேறார் உள்ளார்?
துல்லியமாய்த் தமிழினிலே
விளம்பரங்கள் எழுதி ஒலி
கூட்டிச் சீராய்ச்
சொல்லுகையில் கூட அதில்
கலை அழகு குன்றாமல்
கோக்கும் வல்லோன்!
என்று தொடர்கின்றார் சில்லையூரார்.
இலக்கியம், கலை ஆகியவற்றின் பெயரால் தம்மை வளர்த்துக் கொள்ளும் கலைக்கழுகுகளின் மத்தியிலே தன்னை மறைத்து இசையையும் வளர்த்த அபூர்வ மனிதர் இவர் சர்வதேச "உண்டா" விருதினையும் தம் வானொலிப் பணிக்காகப் பெற்றுக் கொண்டவர்.
விஞ்ஞானப் பட்டதாரியாகி ஆசிரியத் தொழிலை மேற்கொண்ட "பரா" ஒலிபரப்புத் துறையில் நுழைந்தமை தன்னை வளர்த்துக் கொள்வதற்காகவல்ல என்பதைச் சுமார் கால் நூற்றாண்டு காலமாக அவரோடு பழகியவர்களும் பணியாற்றியவர்களும் அறிவர். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கண்ணியத்தையும் தம் சொந்த நேர்மையையும் பேணிக்காத்த மிகச்சிலரில் பரா ஒருவர், இப்படியாகச் சொல்கின்றார் காவலூர் இராசதுரை அவர்கள்.
ஒலி அரசு வீ.ஏ. திருஞானசுந்தரம் அவர்கள், பரா பற்றிச் சொல்லும் போது:
இசைஞானம், இனிய குரல் வளம், கலை இலக்கியப் பின்னணி, சினிமா, நாடகத்தில் பரிச்சயம், புலமைப் பயிற்சி இத்தியாதிகளும் ஒருங்கே அமையப் பெற்ற இவர் பிறந்தது மலேசியாவில். வளர்ந்தது இலங்கையில்.
அக்காலக் கல்வி ஒலிபரப்பில் இடம்பெற்று வந்த வெண்பா வாசிப்புப் போட்டிகளில் பெரும்பாலும் பெண்களேபரிசுகளைத் தட்டிக்கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்தனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவன் அந்த மரபை மாற்றியமைக்கக் காரணம், "குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்" என்ற வெண்பாவை பொருள் தெளிவுற இனிய குரலில் அமைவாக அதிக ஆலாபனையின்றிப் பாடியதே. பாடிய அம்மாணவர் பராவே தான், என்கின்றார்.
இளமையிலேயே இசையில் தேர்ச்சிபெற்றதுடன், விஞ்ஞானப் பட்டதாரியாகி ஹற்றனில் உள்ள கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியை மேற்கொண்டிருந்த போது , 1961 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பரராஜசிங்கம் வானொலியில் சேர்கின்றார். வர்த்தக சேவையில் தன் பணியை ஆரம்பித்த போது வெறும் சினிமாப்பாடல்களையே ஒலிபரப்பும் ஒரு சேவை தானே என்று இளக்காரமாக இருந்த போது "திரை தந்த இசை", ஒலி மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார்.
எஸ்.கே பரராஜசிங்கம், ஏ.சி.கருணாகரனுடன் இணைந்து வழங்கிய கர்னாடக இசைச் சித்திரம்
நிகழ்ந்த மெல்லிசை அரங்கங்கள் முன்னோடியாகக் குறிப்பிடப்படும். இலங்கை வானொலியின் வர்த்தக நிகழ்ச்சிகளிடை முதன்முதலாக ஒலித்தது மலிபன் கவிக்குரல். பின்னாலே ஈழத்துப் பாடல்கள் என்ற நிகழ்ச்சிக்கான மூலதனம் என்று சொல்லக்கூடிய குறிப்பிடத்தக்க சில பாடல்கள் இந்நிகழ்ச்சிகளிடை உருப்பெற்றவை தான். பரராஜசிங்கம், காவலூர் இராசதுரை, ரொக்சாமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள், என்று "ஈழத்து மெல்லிசை இயக்கம்" என்ற தனது கட்டுரையில் நாகலிங்கம் சண்முகலிங்கன் (யாழ் பல்லைக் கழகம்)
இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
திரு.எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களது மெல்லிசைப் பாடல்கள் காற்றோடு கலந்து போகாவண்ணம் பாதுகாத்து அவற்றை முதன்முதலில் ஒலிப்பேழையாகக் கொணர்ந்தவர் கலைஞர் திரு கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள். 1994 ஆம் ஆண்டு இவ்வொலி நாடா "ஒலி ஓவியம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கனடாவில் இதனை இறுவட்டாக "அருவி வெளியீட்டகம்" வெளியிட்டது.
கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள், தான் நேசிக்கும் பரா அண்ணர் குறித்து இப்பதிவில் சொல்லுகின்றார்.
இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
திரு.எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களது மெல்லிசைப் பாடல்கள் காற்றோடு கலந்து போகாவண்ணம் பாதுகாத்து அவற்றை முதன்முதலில் ஒலிப்பேழையாகக் கொணர்ந்தவர் கலைஞர் திரு கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள். 1994 ஆம் ஆண்டு இவ்வொலி நாடா "ஒலி ஓவியம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கனடாவில் இதனை இறுவட்டாக "அருவி வெளியீட்டகம்" வெளியிட்டது.
கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள், தான் நேசிக்கும் பரா அண்ணர் குறித்து இப்பதிவில் சொல்லுகின்றார்.
"அவருடன் நான் இணைந்து செய்த நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு பாடப்புத்தகமாக்கப்பட்டது. அவர் செய்த ஒவ்வொரு வானொலி நிகழ்ச்சியையும் கேட்கும் போது பல்கலைக்கழக விரிவுரை போன்ற உணர்வை ஏற்படுத்தியது" என்று கூறிச் செல்கின்றார் ஒலிபரப்பாளர் சி.நடராஜசிவம்.
திருமணமே செய்யாது வானொலியையே தன் துணையாக வரித்துக் கொண்டு வாழ்ந்த பரா அவர்கள் எதிர்பாராத சில முரண்பாடுகளால் வானொலியை விட்டு விலகிச் சிறிது காலம் தமிழகத்தில் அஞ்ஞாத வாசத்தை மேற்கொண்டார்.
இந்தப் பதிவுக்காக நான் எஸ்.கே.பரராஜசிங்கம் குறித்த உசாத்துணை நூல்களைத் தேடியபோது அதிஷ்டவசமாகக் கண்ணிற்பட்டது "இதய ரஞ்சனி" சமூக பண்பாட்டுக் கோலங்கள் என்ற எஸ்.கே.பரராஜசிங்கம், என் சண்முகலிங்கன் எழுதி வெளியிட்ட நூல். இந்த நூலை எடுத்து விரித்துப் படிக்கும் போது ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிகின்றன.
இன்று உலகமயப்படுத்தப்பட்ட தமிழ் வானொலிச் சேவையில், அலைவரிசையைக் குத்தகைக்கு எடுத்த யாரும் வானொலி
நிலையம் ஒன்றை உருவாக்கலாம், பாட்டுப் போடத் தெரிந்த எவரும் அறிவிப்பாளராகலாம் என்னும் யதார்த்த உலகில் ஆயிரம் ஆச்சரியக் குறிகளை விதைக்கின்றது இந்த நூல். ஒரு நேர்மையான வானொலியாளனால் வானொலியில் இடம்பெறும் ஆக்கம் எப்படியெல்லாம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதற்கு
இதயரஞ்சனி ஓர் உதாரணம்.
நாம் காண விழையும் நாளையின் நாயகி, வானொலியூடாக அறிமுகமான ஆளுமை தான், நூல் வடிவில் இப்பொழுது தரிசனமாகின்றாள்.
வெகுஜனத்தொடர்பு சாதனங்களின் சமூகச் செல்வாக்கு இன்று பெரிதும் உணரப்படும் இந்த ஊடகங்களைச் சமூகமேன்மைக்குப் பயன்படுத்தலின் இன்றியமையாமையும், இன்றைய சமூக அபிவிருத்தித் திட்டமிடல்களில் முதன்மை பெறும். இந்த வழியில், சக்தி வாய்ந்த தொடர்பூடகமான வானொலியூடாக ஒலித்த இதயரஞ்சனி என்ர கலை இலக்கிய மஞ்சரியின் பண்பாட்டுக் கோலங்கள் என்ற அம்சத்திலிருந்து, இருபத்தைந்து கீற்றுக்கள் இங்கு எழுமாற்றாகத் தரப்படுகின்றன. எழுமாற்றாகத் தேர்ந்தெடுத்த போதிலும் பரந்த நம் பண்பாட்டின் விழாக்கள், வழிபாட்டு மரபுகள், கிராமியக் கலைகள், சடங்குகள், நம்பிக்கைகள், மனவெழுச்சிகள், தொடர்பு சாதனங்கள், ஆளுமைகள் என வகைகளையும் ஒருவித ஒழுங்கினையும் இங்கே காணமுடியும் என்று நூலாசிரியர்கள் தம் முகப்புரையில் சொல்கின்றார்கள்.
ஒரு வானொலிப் பிரதி எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு அணிகலனாகத் திகழ்கின்றது இந்த "இதய ரஞ்சனி". எப்படி ஒரு வானொலிப் படைப்புக்கான அறிமுகம் இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இசை வருமிடம், குரல், பாடல், இடையிசை, நிறைவுக்குறிப்பு எனப் பிரிவாக்கி ஒவ்வொரு நிகழ்ச்சிப்படைப்பும் இருக்கின்றது.
இப்பிரதியில் இருந்து உதாரணத்துக்கு ஒன்றைக் காட்டுகின்றேன். "வசந்தன்" என்ற தலைப்பிலான ஆக்கம். இதில் எமது பாரம்பரியக் கலைகள் குறித்த சுருக்கமான அறிமுகம் அமைகின்றது. அடுத்து குரல், என்ற வகைப்படுத்தலில் தமிழகத்திலே இடம்பெறும் வசந்தன் கோலாட்டத்தை ஈழத்துமரபோடு ஒப்பீடு செய்து, தொடர்ந்து கேரள, சிங்கள மக்களின் பண்பாட்டுக் கோலங்களயும் தொட்டுச் சென்று, அலவத்தை வீரபத்திரர் வசந்தன் ஒலிப்பதிவைப் போடும் இடம் சுட்டிக்காட்டப்படுகின்றது, தொடர்ந்து நிறைவுரை.
பார்த்தீர்களா? ஒரு வானொலிப்படைப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதை இன்றைய வானொலியாளர்களுக்கும், நேயர்களின் ரசனை குறித்த மாற்றத்தையும் வேண்டி நிற்கின்றது இப்படைப்பு.
பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீதின் வானொலித்துறை ஆசான்களில் ஒருவராக வாய்த்த பரராஜசிஙம் பற்றிக் குறிப்பிடும் போது, நாம் விடும் சிறு தவறுகளையும் நாகரீகமாகச் சுட்டிக் காட்டி, சிக்கனமாகப் பேசி, எம்மைத் திருந்தச் செய்யும் பண்புள்ளவராகத் திகழ்ந்தார். ஒலிபரப்பில் எதனையும் முன் கூட்டியே எழுதி ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்து நிச்சயப்படுத்திய பின்பே ஒலிபரப்ப வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்.
ஏடுகள் சுமக்காத பாடல் வரிகளாக, கிராமிய இசையாக, மக்கள் நினைவில் மட்டுமே நிலைத்திருந்த நாட்டுப்பாடல்களுக்கு மறைந்த இசையமைப்பாளர்
எம்.கே றொக்சாமியின் துணையோடு, புது இசை வடிவம் கொடுத்து அவர் உருவாக்கிய பாடல்களே பின்னாளில் மெல்லிசைப் பாடல்கள் உருவாகுவதற்கு அடிப்படையாக விளங்கின. உதாரணத்திற்கு கீழ்க்காணும் நாட்டார் பாடல், பின்னர் மெல்லிசையாக எம்.கே.றொக்சாமி இசையில், பரா பாடுவதைக் கேளுங்கள்
கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா....
கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா....
சிட்டுப் போல் நடையழகி
சிறுகுருவி தலையழகி......
பட்டுப் போல் மேனியாளை
பாதையிலே பார்த்தீங்களா.....
கோரைப்புல் மயிரழகி
குருவிரத்த பொட்டழகி
பவளம் போல் பல்லழகி
பாதையிலே பார்த்தீங்களா....
கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா....
பட்டம் போல் நுதலழகி
பவளம் போல் வாயழகி
முத்துப் போல் பல்லழகி
முன்னே போகக் கண்டீரோ
முன்னே போகக் கண்டீரோ....
கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா....
மெல்லிசையில் நாட்டார் பாடல்களைப் புகுத்தியது மட்டுமன்றி இவர் செய்த இன்னொரு புதுமையைச் செயல் முறையில் தருகின்றேன்.
இந்திய இசை மேதை சிட்டிபாபு தந்த வீணை இசையை எடுத்து அதை அங்கையன் கைலாசநாதனைக் கொண்டு வீணை இசையோடு இயைந்து வரக்கூடிய பாடல் வரிகளை எழுதிப் பின் தன் பாட்டினை இந்த இசையோடு இணைத்தார். நவீன தொழில்நுடபம் எட்டிப் பார்க்காத முப்பது வருஷங்களுக்கு முன் இந்தப் புதுமையைத் தன் மெல்லிசையில் படைத்தார் பரா.
சிட்டிபாபுவின் மூல இசை
"மணிக்குரல் இசைத்தது" பாடலை இணைத்துக் கொடுத்த பின்
பாகிஸ்தானிய இசைவல்லுனர் சொஹைல் ரானா, இசைக்கருவிகளைக் கொண்டு சொல்ல விழைந்ததை, சண்முகலிங்கனைக் கொண்டு "குளிரும் நிலவின் இரவு" என்ற சோக கானமாக வடித்தார்.
ஒலி ஓவியம் என்னும் இசைப்பேழையில் பேராசிரியர் சிவத்தம்பியின்
சிலாகிப்பு இப்படிச் சொல்கின்றது:
"Para, a carnatic musician and musicologist is also known from his contribution to light music in tamil. The songs in this cassettes are his pioneering effort in the field of light music in Sri Lanka. They were recorded with minimum instruments on a single track, when electronic technology was unheard of.
The lyrics notable for their poetic quality and melodic content, have been rendered with emotional meaning that lingers forever - the true stamp of any creative music and its musician".
பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றை இந்த மெல்லிசைப் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.
கருத்து செறிவையும், குரல்வளத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து
இப்பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சான்றாக, எனக்கு மிகவும் பிடித்த
பராவின் மெல்லிசைப் பாடல் இரண்டின் வரிகளையும் பாடல்களையும் கீழே தருகின்றேன்.
பாடல் வரிகள்: கவிஞர் முருகையன்
பாடியவர்கள்: எஸ்.கே பரா மற்றும் கோகிலா சிவராஜா
இசை: எம்.கே.ரொக்சாமி
கங்கையாளே... கங்கையாளே...
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!
நுவரெலியா முதலான உயரமலை
பயிலும் கங்கையாளே...!
தவறாத வளமுடைய....
தன்மை பொழியும் எங்கள் கங்கையாளே...!
கங்கையாளே... கங்கையாளே......
கந்தளாயும்....மூதூரும்....
காத்து வரவேற்கின்ற கங்கையாளே....
வந்து சேர்வாய் திருமலைக்கே..
மாகடலில் போயிறங்கும் கங்கையாளே...!
கங்கையாளே... கங்கையாளே...
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!
இந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் பெருமைக்குரியவன், பெறுமதியானவன் என்பதற்க்குச் சான்றாக அதே வானொலித் துறையில் சகாவாக இருந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தமது "மன ஓசை" என்னும் வானொலி நனவிடை தோய்தலை பரராஜசிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றார்கள்.
"பரா" என்கிற பரராஜசிங்கத்திற்கு....
நண்பர்களுக்குக் கலைகளின்
சுவையைக் காட்டிய நீ
வாழ்க்கையின் சுகங்களை
அநுபவிக்காமலே
போய்விட்டாயே!
இறைவா சங்கீத "சதஸ்" ஒன்றை - உன்
திருவடிகளுக்கு அழைத்து விட்டாய்!
அதன்
சுநாத நினைவுகளை
எங்களிடமிருந்து பிடுங்கிவிடாதே!
என்று சுந்தாவும் நண்பர்களும் கரைகின்றார்கள்.
மேலும் வானொலிப் படைப்பாளி சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தனது நண்பன் பரராஜசிங்கம் பற்றி இப்படிச் சொல்கின்றார்:
பரா என்றதுமே அவனது தம்புராவுடன் இசைந்த உயிரின் குரல் என் நரம்பு நாளங்களையெல்லாம் மீட்டி நிற்கும்.அவனோடும் நண்பன் சிவானந்தத்தோடும் சேர்ந்து சென்னை இசைவிழாக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் நயந்திடத் திரிந்த பொழுதுகள் மீண்டும் வருமா என்ற ஏக்கம் மேலிடும். சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து பாடும் பராவின் இசை நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்புச் செய்வதே ஒரு உயிர்ப்பான அனுபவம் தான்.(சேக்கிழார் அடிச்சுவட்டின் போது - (இடமிருந்து வலம்) சுந்தா சுந்தரலிங்கம், சிட்டி சுந்தரராஜன், வேணு, எஸ்.கே.பரராஜசிங்கம், படம்: சோ.சிவபாதசுந்தரம்)
நாங்கள் நாங்கள் இணைந்து வழங்கிய ஆக்கங்கள் பல. "சக்திக்கனல்" இன்னமும் என் நெஞ்சை நிறைத்து நிற்கிறது. தம்புரா சுருதியில் என் அறிமுகக்குறிப்பும் அதனைத் தொடரும் பராவின் அபிராமி அந்தாதியும் மறக்க முடியாதவை. மீனாட்சி கல்யாண இசையமைப்பு வேலைகளிலும் பராவின் நுண்ணிய இசைத்திறனை வியந்த சந்தர்ப்பங்கள் பல. ஈழத்து மெல்லிசையின் மூலவர்களில் முக்கியமானவராக புகழபெறும் பராவின் வானொலி அனுபவங்கள் மிக மிகப் பெறுமதியானவை. பராவின் இசை சார்ந்த வானொலிப்படைப்புக்கள் தமிழக, வானொலி தொலைக்காட்சிகளுக்கும் கூட முன்னோடியானவை. அந்தச் சம்பவம் இன்னமும் என் மனதில் உள்ளது.
எனது மகள் சுபா சென்னையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலம். கல்லூரிக்குச் செல்கையில் பஸ்ஸுக்குள், முன் ஆசனத்தில் இருந்த இரண்டு பேர் இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்களாம். பேச்சிடை ரேடியோ சிலோன் பரராஜசிங்கம் என்ற சொற்களைக் கேட்டதும் சுபா தன் காதுகளைத் தீட்டிக் கவனமாகக் கேட்டிருக்கிறாள்.
"இப்பதான் நம்ம வானொலிக்காரங்கள், ரி.வி.காரங்கள், திரை இசைக்குள் சாஸ்திரிய இசைக் கண்டுபிடிப்புக்கள், நிகழ்ச்சிகள்னு செய்யிறாங்க ஆனா எவ்வளவோ நாளைக்கு முன்னாடியே சிலோன் ரேடியோவிலே எஸ்.கே.பரராஜசிங்கம் திரை தந்த இசை என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் ஆக்க இசை பற்றி அருமையான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்" என்பது அவர்கள் பேச்சிடை மிதந்த சாரம். சுபா உடனடியாகவே இதனைப் பராவுக்கு எழுதியிருந்தாள்.
இலங்கையின் முதல் தமிழ் மெல்லிசை இசைத்தட்டான "கங்கையாளே", பராவின் மெல்லிசைப் பாடல்களிலான ஒலி ஓவியம், கட்டுவன் வீரபத்திர வசந்தன் பாடல்களை மெருகேற்றித் தயாரித்த ஒருமணி நேர கிராமிய இசையாக்கம், எழுபதுகளில் யுனெஸ்கோ வேண்டுதலில் எம்.ஏ.குலசீலநாதன், சி. மெளனகுரு, எஸ்.கே.மகேஸ்வரன், என்.சண்முகலிங்கன் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டு பரிசும் பெற்ற வடமோடிப் பாடலும், வசந்தன் பாடல்களுமென பராவின் ஆக்கங்கள் பல.
ஆக்க இசைக்கலைஞனான பராவின் வானொலி ஆரம்பம் உண்மையில் வர்த்தக ஒலிபரப்பிலேயே தொடங்கியது. மலைநாட்டில் ஆசிரியப் பணியில் இருந்த பரா, கொழும்பில் வானொலி அறிவிப்பாளர் பதவிக்கு விளம்பரப்படுத்திய வேளை, ஆசிரியப் பணியிலே தொடரவா அல்லது வானொலி அறிவிப்பாளனாக வரவா என்று என்னிடம் கேட்டபொழுது, வானொலிக்கு வரும்படி தயங்காமல் கூறி விட்டேன். வானொலி விளம்பரக்கலையில் என்னோடு பரா இணைந்து செய்த Jingles பல. எனது Jingles இன் வெற்றிக்குப் பராவின் இசை முக்கியமானது. முழுத் திருப்தி வரும் வரை றெக்கோடிங்கை முடிக்க மாட்டான். அப்படி ஒரு Perfectionist.
பரா வர்த்தக ஒலிபரப்பிலேயே தம்பி சண்முகலிங்கனுடன் சேர்ந்து கலை, இலக்கியம் படைத்தவன். சண்முகலிங்கமும் பராவும் இணைந்து எத்தனை ஆக்கங்களைத் தான் படைத்தார்கள்! இத்தனைக்கும் பராவின் திறமைகளை எங்கள் சமூகம் உரியவாறு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது மிக மிகத் துயரமானது.
படத்தில் (இடமிருந்து வலம்): திரு. குஞ்சிதபாதம், திரு. சிட்டி சுந்தரராஜன், திரு. சுந்தா சுந்தரலிங்கம், திரு எஸ்.கே.பரராஜசிங்கம்
பராவிடம் உள்ள இசை சார்ந்த வானொலி சார்ந்த அறிவு அனுபவங்களை இனியேனும் எதிர்கால சந்ததியினர் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். பராவும் எழுத்து வடிவில் அவற்றை எதிர்காலத்துக்குத் தர வேண்டும் என்று தமது மன ஓசையில் குறிப்பிடுகின்றார் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள். என்னே துரதிஷ்டம், மன ஓசை எழுதி அச்சில் வரும் போது சுந்தாவின் கனவு மெய்ப்படாது பரா என்ற இசை நாதம் நிரந்தர மெளனம்
கொள்கின்றது, பராவின் வானொலி சார்ந்த ஆளுமை உரியவகையில் எம் அடுத்த ஊடகத்துறைச் சந்ததிக்குக் கைவராமல் போயிற்று.
இன்று இந்தப் பதிவுக்கான ஆயத்தங்களைச் செய்யும் போது, Google chat இல் வருகின்றார், உடன்பிறவாச் சகோதரன், வானொலிப் படைப்பாளி இளையதம்பி தயானந்தா. அவரிடம் நான் எழுதப் போகும் பரா என்னும் பரராஜசிங்கம் குறித்த ஆக்கம் பற்றிச் சொல்கின்றேன். இந்த முயற்சிக்குப் பாராட்டைத் தந்து விட்டு ஒரு சேதியையும் சொல்லி விட்டுப் போகின்றார் அவர். பரராஜசிங்கம் அவரது இறுதிச் சடங்கு நடந்த அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையகத்தில் இருந்து இரவு "மணிக்குரல் ஓய்ந்தது' என்ற 1 மணி நேர அஞ்சலி நிகழ்ச்சியை செய்த பெருமையைச் சொல்லிச் சிலாகித்தார்.
அப்போது தான் எனக்கு பழைய நினைவுகள் மீளக் கிளறுகின்றன. எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள் இறந்த நாள் இரவு அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு வானொலியில் இலங்கையில் இருந்து சிட்னி வந்து தற்காலிக வானொலிப்பணியில் ஈடுபட்டிருந்த சக்தி எப்.எம் வானொலியின் அப்போதய நிர்வாகி எஸ்.எழில்வேந்தன், பராவின் நினைவுப் பகிர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அப்போது தொலைபேசியூடாக இணைந்து கொண்ட அறிவிப்பாளர் பி.எஸ்.அப்துல்-ஹமீதும்இணைந்து பரராஜசிங்கம் அவர்களின் பெருமைகளைப் பேசிக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் உடைந்து போய் விம்மி விம்மி அழுகின்றார். அதுவும் வானொலியின் அஞ்சலியில் கலந்து வந்து எம் நெஞ்சைக் கனக்க வைக்கின்றது. ஒரு உண்மையான கலைஞன் தன் சாவின் பின்னும் நீண்ட நெடு நாட்கள் நினைவில் வைத்திருக்கப்படுவான் என்பதற்குப் பரா ஒரு சான்று.
பரா என்னும் பரராஜசிங்கத்தின் கலைப்பயணத்தில் கூடவே பயணித்த என்.சண்முக லிங்கன் இப்படிச் சொல்கின்றார்.
என் ஞானக்குயிலே!
"எல்லையற்ற ஞானத்துடன்
இதயம் கனக்க
நீ காத்திருந்தாய்
உன்னை முழுதாய்ப் பருகும் பாக்கியமின்றி
அவசர உலகில்
அலைந்து தொலைந்தோம்.
உசாத்துணை:
மன ஓசை - வீ.சுந்தரலிங்கம், மார்ச் 1999
"பரா"வுக்குப் பாராட்டு - விழா மலர் நவம்பர் 7, 1992
ஈழத்து மெல்லிசை இயக்கம் - நாகலிங்கம் சண்முகலிங்கன், யாழ் பல்கலைக் கழகம்
இதயரஞ்சனி - எஸ்கே.பரராஜசிங்கம், என்.சண்முகலிங்கன், காந்தளகம், ஜனவரி, 1998