வீடியோஸ்பதி எனும் கலை, இலக்கிய, திரை இலக்கிய, நடப்பு வாழ்வியல் சார்ந்த காணொளித் தளத்தை ஆரம்பிக்கிறேன்.
இதன் வெள்ளோட்டக் காணொளிப் பகிர்வாக 2020 ஆம் ஆண்டு முதல் ஆஸி நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலப் பாடசாலைகளில் தமிழ்ப் பாட நெறி அறிமுகமாகும் சூழல் குறித்த பின்னணி குறித்து கல்வியாளர் திரு. திரு நந்தகுமார் அவர்களுடன் சிறப்புப் பேட்டி வெளியாகிறது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசின் அங்கீகாரத்தோடு இனிமேல் இந்த நாட்டு மாநிலப் பாடசாலைகளில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கக் கூடிய ஒரு பெரிய வரப் பிரசாதம் கிட்டியுள்ள சூழலில் இந்த முயற்சியின் பின்னால் இருந்த உழைப்பு, எதிர்கால சவால்களும், வாய்ப்புகளும் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தப் பேட்டி அமைகின்றது.
பேட்டியைக் காண
https://youtu.be/F4ltIEIZ7Aw
Friday, December 27, 2019
Thursday, December 05, 2019
வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் 🌷🥁
“ ஏன் இந்த மாதம் பதிவு ஒன்றும் வரவில்லை”
இப்படி ஒரு பின்னூட்டம் என்னுடைய மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பதிவில் கடந்த செப்டெம்பர் மாதம் வந்திருந்தது.
அப்பாவின் பிரிவில் பதிவுலகில் அதிக நாட்டம் இல்லாது ஒதுங்கியிருந்த மாதம் அது. தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் வலைப்பதிவில் இருந்த என்னை ஆட்டம் காண வைத்த அந்த செப்டெம்பரோடு இனிமேல் இணைய உலகில் ஒதுங்கி விடுவோம் என்று கூட நினைத்ததுண்டு. ஆனாலும் மெல்ல மெல்ல மீண்டும் பழைய நிலைக்கு வந்தாலும் அப்பாவின் நினைவு இன்னும் ஒட்டியிருக்கிறது. அடிக்கடி கனவிலும் வந்து பேசுவார்.
இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு 14 ஆண்டுகளை நிறைவு செய்து 15 வது ஆண்டில் காலடி வைக்கிறேன்.
இத்தனை ஆண்டு கால என் வலைப்பதிவு வாழ்வில் ஆத்ம திருப்தி தந்தவை என்று எண்ணிப் பார்த்தால்
- மேலே சொன்னது மாதிரி தொடர்ச்சியாக ஒரு வாசகர் வட்டத்தோடு இணைந்திருப்பது
- என்னுடைய ஈழத்து வாழ்வியல், கலை இலக்கியப் பதிவுகளை வைத்து இதுவரை இரண்டு ஆராய்ச்சி மாணவியர் தம் பட்ட மேற்படிப்பைச் செய்ததை என்னிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டது
இவை தவிர இன்னும் பலருக்கு என் சேகரங்களும், நினைவுப் பதிவுகளும் உசாத்துணையாக இருந்ததைக் காலம் கடந்தும் அறிந்து மகிழ்வுறுகிறேன்.
அண்மையில் அப்பாவின் பிரிவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்த எதிர்பாராத அழைப்பாக நான் பெரிதும் மதிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள் என்னுடைய மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பதிவை வாசிப்பதாகவும், ஈழத்து மெல்லிசை உலகின் மூத்த குடியாகக் கொள்ளும் கலைஞர் எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களது கட்டுரையைத் தம் விழா மலருக்குப் பயன்படுத்திக் கொண்டதையும் அறிந்து பெரும் திருப்தி கொண்டேன். அத்தோடு சமீபத்தில் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் குறித்து நான் வலைப்பதிவில் எழுதியதைச் செப்பனிட்டு நூலுக்கேற்ப எழுதித் தருமாறு அவர் கேட்டதையும் மகிழ்வோடு செய்து கொடுத்தேன். இந்தக் கட்டுரைகள் எல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பே என் வலைப்பதிவில் எழுதி வைத்தவை. இப்போதும் அவை தேடு பொறிகளுக்குள் சிக்குவது தான் தொழில் நுட்பம் நமக்குக் கொடுத்த பெரிய கொடை.
பால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென்ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.
ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்டு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போது வே.வரதசுந்தரம் அருச்சுனா இதழின் ஆசிரியராக இருந்தார். என்னுடைய முதல் சிறுவர் நாவல் “ஆனந்தன்” ஐ அருச்சுனாவின் தொடராகக் கொண்டு வர இருந்த சமயம் உதயன் பத்திரிகைக் காரியாலயம் மீது விமானக் குண்டு வீச்சு பாய்ச்சப்பட்ட போது அருச்சுனாவின் ஓட்டமும் நின்று போனது. அதோடு என் எழுத்துப் பயணமும் ஒரு தற்கால விடுமுறை எடுத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி வாசிப்பது மட்டும் ஓயவில்லை.
அவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.
இந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித்தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.
எப்பேர்ப்பட்ட வரம் இது.
இறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.
இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.
ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.
இதுவரை "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி", மற்றும் "பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.
தமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள், படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன்.
எனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக
மடத்துவாசல் பிள்ளையாரடி
http://kanapraba.blogspot.com/
அல்லது
www.madathuvaasal.com
என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி
http://www.radiospathy.com/
எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்
http://ulaathal.com
இவை தவிர
காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி
http://videospathy.blogspot.com.au/
ஈழத்து முற்றம்
http://eelamlife.blogspot.com.au/
என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்
http://eelamlife.blogspot.com.au/
அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/
என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.
ஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற "அனுமதி பெறாது பிரசுரிக்கும்" புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.
இதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.
அடுத்த முயற்சியாக வீடியோஸ்பதி காணொளித் தளத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்னொரு பரிமாணத்தைத் தேட விழைகிறேன்.
தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.
நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
05.12.2019
Tuesday, December 03, 2019
“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்

துயர் தோய்ந்த ஈழ வரலாற்றுப் பக்கங்களில் “லங்கா ராணி” நாவல் இன்று வரை தனித்துவமாக நோக்கக் கூடியதொன்று.
பின்னாளில் ஈழத்தில் இனப் பிரச்சனை கொழுந்து விட்டெரிந்த காலத்திலும் எமது அவலத்தை இம்மாதிரியானதொரு நிகழ் நடப்புகளோடு ஒட்டி எழுதவில்லையே என்றதொரு ஏக்கம் எழுந்தது இரண்டு படைப்புகளைப் படித்ததன் அனுபவ வெளிப்பாடாக.
ஒன்று செங்கை ஆழியானின் “தீம் தரிகிட தித்தோம்” என்ற நாவல், இன்னொன்று அருளரின் “லங்கா ராணி”. பின்னாளில் ஈரோஸ் இயக்கத்தினர் இந்த நூலைத் தாமே மறு பதிப்புச் செய்யுமளவுக்கு மதிப்பு மிக்க பெறுமதியான ஆவணம் இது.
1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்துக்கு முன்பே நம் தமிழினம் சிறிதும் பெரிதுமாகப் பல இனக் கலவரங்களுக்கு முகம் கொடுத்தது. அப்படி ஒன்று தான் 1977 ஆவணி மாதத்தில் ந்ழுந்த இனக் கலவரம். அப்போது கொழும்பிலிருந்து இனவெறிக் கோரத்தாண்டவத்தில் இருந்து எஞ்சிப் போன அபலைகள் லங்கா ராணி என்ற கப்பலில் ஏறித் தம் தாய் மண் நோக்கிப் பயணப்படும் அவல வாழ்வியலின் பக்கங்கள் லங்கா ராணியில் சாட்சியம் பறைகின்றன. இது புனை கதை அல்ல என்ற உண்மையை இன்றும் அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழர் இயல்பாய் உணர்வர்.
நான் சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்று நெடு நாள் கனவு கண்ட “லங்கா ராணி” எழுதிய அருளர் என்ற அருளர் தன் சொந்த மண்ணிலேயே விடை பெற்று விட்டார். லங்கா ராணி இறக்கிய இடத்திலேயே முற்றுப் புள்ளி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.
எம் ஆதர்ச எழுத்தாளர், போராளி அருளரின் பிரிவால் வாடும் மகள்கள் என் பேஸ்புக் நட்பு சகோதரி Kali Arulpragasam கலி அருள்பிரகாசம் மற்றும் நம் இனத்தின் விடுதலை வேண்டி உலக அரங்கில் குரல் கொடுக்கும் பாடகி மாயா அருள்பிரகாசத்துக்கும் அன்னாரின் பிரிவில் எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கிறேன்.
எம் ஆதர்ச எழுத்தாளர், போராளி அருளரின் பிரிவால் வாடும் மகள்கள் என் பேஸ்புக் நட்பு சகோதரி Kali Arulpragasam கலி அருள்பிரகாசம் மற்றும் நம் இனத்தின் விடுதலை வேண்டி உலக அரங்கில் குரல் கொடுக்கும் பாடகி மாயா அருள்பிரகாசத்துக்கும் அன்னாரின் பிரிவில் எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கிறேன்.
லங்கா ராணியை ஈழத்து நூலகத்தில் படிக்க
அகிலனின் பார்வையில் "லங்கா ராணி"
(இது அகிலன் அவர்களால் 1981-இல் எழுதப்பட்டது என்பதை நினைவில் நிறுத்தவும்) பகிர்வுக்கு நனறி கனக்ஸ் இன் தமிழ் வலையின் மினி நூலகம்
1977 ஆகஸ்டில் இலங்கையில் இனக்கலவரம் நடந்ததல்லவா? அதில் பாதிக்கப்பட்ட 1200 தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு 'லங்கா ராணி' என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு நோக்கி வந்து, இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டு, வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறைத் துறைமுகத்துக்குச் செல்கிறது. கப்பல் கொழும்பில் புறப்படுவதுடன் தொடங்கும் கதை, இரண்டு நாட்களில் பருத்தித்துறையைச் சென்றடைவதோடு முடிகிறது.
இது கற்பனைக் கதையல்ல. முற்றிலும் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட உயிர்த் துடிப்புமிக்க கதை. இரண்டே நாட்களில் நடக்கும் கதையைப் போலத் தோன்றினாலும், இதில் அங்கங்கே 2500 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இலங்கை எப்படி இருந்தது? விடுதலை பெற்ற பிறகு - ஏன் 1958ல் ஒரு பயங்கரமான இனக் கலவரமும், பிறகு 1977 ஆகஸ்டில் ஓர் இனக்கலவரமும் அங்கே ஏற்பட்டன. கலவரங்களின் விளைவுகளை மறந்து, தமிழர்களும், சிங்களவர்களும் இனி எதிர்காலத்தில் அங்கு இணைந்து வாழ முடியுமா? இவை போன்ற பல அடிப்படைப் பிரச்சனைகள் இந்த நாவலில் அலசி ஆராயப்படுகின்றன.
இந்த நூலின் ஆசிரியர் அருளர், வெறும் உணர்ச்சித் துடிப்புமிக்க இளைஞராகத் தோன்றவில்லை. காரிய காரணங்களை மிகவும் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். நாட்டு நடப்பைக் கூர்ந்து நோக்கியிருக்கிறார். வகுப்புக் கலவரங்களுக்குள்ள அடிப்படைக் காரணம், இந்த அரசியல் அமைப்பு - இதன் அரசியல் கட்சிகள் - தேர்தலில் இனவெறியைத் தூண்டிவிட்டு, மறு இனத்தைப் பகைக்கச் செய்து ஓட்டு வாங்கும் முறை என அவர் சான்றுகளுடன் கூறும் போது, நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
சரவணன், குமார், தவன் மூவரும் கொழும்பு இந்துக் கல்லூரி அகதிகள் முகாமில் தொண்டர்களாகப் பணியாற்றிய இளைஞர்கள். அவர்களுடன் கப்பலில் ஒரு வெள்ளை வேட்டி இளைஞனும் சேர்ந்து கொள்ளுகிறான். இவர்களோடு பலதரப்பட்ட வாழ்க்கை நிலையில் உள்ள தமிழ் அகதிகளும் கப்பலில் வருகிறார்கள். கலவரங்கள் எங்கெங்கே எவ்வளவு கொடூரமாக நடைபெற்றன எனும் சோகக் காட்சிகள் கண்முன்னே நடைபெறுபவைபோல் வருணிக்கப்படுகின்றன.
இளைஞர்களின் உரையாடல்களின் வாயிலாகவே காரிய காரணங்கள் நமக்கு விளக்கப்படுகின்றன.
1958-ல் நடந்த முதல் கலவரத்தை அடுத்து 1961-ல் நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். அதற்கு முன்பாக யாழ்ப்பாணத்துத் தமிழர்கள், தோட்டங்களிலே வேலை செய்த இந்தியத் தமிழர்களிடமிருந்து பிரிந்து, உயர்ந்தும் ஒதுங்கியும் வாழத் தலைப்பட்டது மல்லாமல் தொழிலாளர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் காரணமாக இருந்தார்கள் எனக் கேள்வியுற்றேன். இந்தப் போக்கு அவர்களையே மிகச் சிறுபான்மையோராக மாற்றி விட்டது. இப்போது தமிழர்களுக்கிடையே வேற்றுமை குறைந்து வருவதாகத் தெரிகிறது. இலட்சிய ஆவேசங் கொண்ட புதிய தலைமுறை இளைஞர்கள் அங்கே தோன்றியிருக்கிறார்கள்.
அண்மைய வரலாற்று நிகழ்ச்சிகள் நிறைந்த ஓர் அற்புதப் படைப்பு இது. ஈழத்து விடுதலைப் புரட்சியாளர்களின் சிந்தனையும் செயலும் சரியானவைதாமா என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை அப்படி உருவாக்கி விட்ட பின்னணி நிகழ்ச்சிகளை நம்மால் மறந்துவிட முடியாது.
படித்து முடித்தபின் நம்மை உணர்ச்சி வயப்படுத்தும் நாவல் இது, சிந்திக்கச் செய்யும் நாவல் இது; செயல்படத் தூண்டி ஒரு நல்ல முடிவு காணும் உந்துதலை ஏற்படுத்தத் தூண்டும் நாவல் இது.
கானா பிரபா
03.12.2019
03.12.2019