ஏராளம் கதைகளினூடாகவும், திரைப்படங்களினூடாகவுமே தரிசித்த கனவுலகத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? என் பால்ய காலத்தில் எங்கள் அம்மம்மா வீட்டில் தமிழகத்தில் வெளியாகும் வார சஞ்சிகைகளில் இருந்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளின் வாரப்பத்திரிகைகளும் வந்தபோது அவற்றையெல்லாம் புதினம் பார்க்கும் பிரியத்தில் தேடிப்படித்து வளர்ந்தவன். சில தமிழக நண்பர்களைப் புலம்பெயர் வாழ்வில் சந்திக்கும்போது அங்குள்ள் நிலவரங்களை விசாரிக்கும் போது "என்னங்க நம்மூர்க்காரர் மாதிரி இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க" என்று வாயை அகல விரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தமான வாழ்வியல் சூழலை உருவாக்க இந்தக் கற்பனாலோகம் வழிவகுத்தது. சென்னை வானொலி நிலையமும், விவித்பாரதியும் என் பால்யம் கடந்த பதின்ம வயதுக்காலங்களில் வழித்துணையாய் வந்தன.
தாயகத்தில் கடும் யுத்தம் நடந்த சூழலில் ஏழு ஆண்டுகள் ஊர்ப்பக்கமும் தலைகாட்ட முடியவில்லை. என்னைப் போல புலம்பெயர் தமிழர்களுக்கு அப்போது ஊருக்குப் போகவேண்டும் என்ற நினைப்பு வந்தால் சென்னைக்கு ஒரு எட்டு போய் நாலு படமும், தி.நகரில் உடுப்பும் வாங்கி வந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததையும் சொல்லிவைக்கவேண்டும்.
அதுநாள் வரை தமிழக வார சஞ்சிகைகளின் வழியாகவும், பல்வேறு கதைகளினூடாகவும் கற்பனையில் சிருஷ்டித்திருந்த சென்னை மாநகருக்குச் செல்லும் வாய்ப்பு, என் புலம்பெயர் வாழ்வில் ஏழு ஆண்டுகள் கழித்துக் கிட்டியது. 2002 ஆம் ஆண்டு அப்போது நான் பணிபுரிந்த Oracle நிறுவனத்தின் பணி நிமித்தம் பெங்களூர் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதெல்லாம் இன்றைய சூழல் போல வலைப்பதிவு நண்பர்களோ அல்லது ட்விட்டர், ஃபேஸ்புக் சமூக வட்டங்களோ அவ்வளவு இல்லாத காலம். சென்னையில் யாரைத் தெரியும் என்று கேட்டால் முதற்பந்தியில் சொன்ன, தமிழக வார சஞ்சிகைகளில் வந்த முகம் தெரியாத எழுத்தாளர்களைத் தான் சொல்லலாம், அவர்களுக்கு என்னைத் தெரியாதது வேறு விஷயம் ;-)
ஒரு வார இறுதியை சென்னைக்குச் சென்று பார்த்து வரலாமே என்று நினைத்து, பெங்களூரில் பணிபுரிந்த சக நண்பர்களிடம் விசாரித்து சதாப்தி எக்ஸ்பிரஸில் போகலாம் என்று ஏற்பாடுகளைச் செய்தேன்.
அந்தநாளும் வந்தது. டாக்ஸி மூலம் ரயில் நிலையம் வந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் வரும் மேடையைத் தேடிப் பிடித்து நிற்கிறேன். பக்கமெல்லாம் தமிழ் வாடை. எல்லாம் பார்த்து வந்தாலும் உள்ளூரப் பயம் இந்த மேடையில் தான் சதாப்தி வருமா அல்லது சொதப்பி விடுமா என்று நினைத்து அருகில் தன் குடும்பத்தோடு அளவளாவிக் கொண்டிருந்த ஒரு ஐம்பதைத் தொடும் குடும்பஸ்தரிடம் சென்று தமிழில் கேட்கிறேன்
"இந்த ப்ளாட்பாரத்தில் தான் சென்னை ரெயில் நிக்குமாங்க?"
"ஆமாங்க" என்றவர் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு "ஐ கேன் ஸ்பீக் இங்கிலீஷ் டூ"
என்றார். (என்னை வேற்றுலகவாசியாக எண்ணியிருப்பாரோ)
சதாப்தியும் வந்தது. இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரயில் பயணம். ஏற்கனவே தமிழக சஞ்சிகைகளில் ரயில்களில் நிலவும் குளறுபடிகளை எழுதியதால் உள்ளூரப் பயத்துடன் ஏறினால், முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. சாப்பாடு எல்லாம் கொடுத்து உபசரித்தது புதுமையாக இருந்தது. எனக்குப்பக்கத்தில் ஒரு சிங்களவர். புட்டபர்த்தி போய்விட்டுச் சென்னைக்குப் போகிறாராம். இரவு எட்டுமணி என்று நினைக்கிறேன் சென்னை சென்ட்ரலை ரயில் இன்னும் சில நிமிடங்களில் தொட்டுவிடும் என்று ஒரு அறிவிப்பு ஒலிக்கிறது. யன்னல் கதவு வழியே வெளியே பார்க்கிறேன். வெளியே தமிழ்ப்பெயர்ப் பலகைகளில் கடைகளின் பெயர்களை அடுக்காகக் காட்டிக் கொண்டே நிதானமாகப் போகிறது ரயில். ஒரு குழந்தை போல எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நான். ஆகா கனவுலகம் வந்தாச்சு என்று உள்ளூரப் பேசிக்கொள்கிறேன். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகா, உன்னை எத்தனை எத்தனை கதைகளில் படித்திருப்பேன். கூட்டமும், இரைச்சலுமான ஜனசமுத்திரத்தில் நானோ சந்தோஷத்தின் உச்சியில்.
சென்டல் ஸ்டேஷனில் இருந்து ஒரு வாடகை டாக்சி மூலம் மாரிஸ் ஓட்டலுக்குப் போகிறேன். "சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலுக்குப் போ" என்று என் அண்ணன் முன்னரேயே சொல்லிவைத்தார். மாரிஸ் ஓட்டல் உரிமையாளர் முன்னர் இலங்கையில் தான் தொழில்பார்த்தவர். எங்கள் அப்பப்பாவுக்கு அந்தக் காலத்தில் நன்கு தெரிந்தவர். அந்தப் பழக்கத்தில் எங்கள் ஊரவர்கள் சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலில் தான் தங்குவார்கள். சிலர் மாதக் கணக்கில் அறைகளை வாடகைக்கு எடுப்பதும் உண்டு.
அடுத்த இரண்டு நாட்கள் சென்னை உலாத்தல். இந்த உலாத்தலில் அதுநாள் வரை கற்பனையில் உலாவிய இடங்களின் பெயர்களை ஞாபகம் வைத்து தியேட்டர்களையும் விகடன், குமுதம், அலுவலகங்கள் அமைந்த இடங்களையும் சரவணபவன் உள்ளிட்ட உணவகங்களையும், ஹிக்கின் பாதம்ஸ் போன்ற புத்தகசாலைகளையும், தி.நகர் போன்ற சனத்திரள் மிகு கடை வீதிகளையும், சந்து பொந்துக்களில் இருந்த சிறுபுத்தக நிலையங்கள் என்று ஒவ்வொன்றாத் தேடித் தேடிப் பார்த்துக் கண்களில் பதிந்து கொண்டேன். மெரீனா சென்று காலாற நடந்தேன். கபாலீஸ்வரரைத் தரிசித்தேன். தி.நகர் முருகேசன் தெருவுக்குப் போய் இசைஞானி இளையராஜாவின் வீட்டுக்கு முன் பழியாய்க் கிடந்து அவரைப் பார்க்க ஆசைப்பட்டு, பின் காவலாளிகளால் வஞ்சிக்கப்பட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். சுள்ளென்ற வெய்யில் என்னைப் பதம் பார்த்தாலும் கிடைத்த இரண்டு நாட்களையும் பரிபூரணமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற வெறியில் ஒவ்வொரு இடமாக ஆட்டோவில் அலைந்தேன், தயார் செய்து அடுக்கிவைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் உருசிக்கும் ஆவல் போல். பழக்கப்பட்ட தெருக்கள் போல அளைந்தேன், எல்லாமே புத்தகங்களில் படித்த அனுபவங்கள் இப்போது கண்ணுக்கு முன்னால்.
தேவி தியேட்டரில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஓடிக்கொண்டிருந்தது. சரி தியேட்டர் அனுபவத்தையும் சந்திப்போம் என்று நினைத்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி எல்லாம் தமிழ் முகங்கள் ஆனால் நானோ அந்நியன், தமிழால் உறவினன் என்று அப்போது நினைத்தது இப்போதும் நினைப்பில்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் உருக்கமான அந்தக் கடைசிக் காட்சி. எனக்கு முன்னால் சீட்டில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணிகள் சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே பார்க்கின்றார்கள். பக்கத்தில் ஒரு விசும்பல் கேட்கிறது, எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்மகனும் அந்தக் காட்சியோடு ஒன்றித்ததன் வெளிப்பாடு அது. உண்மையில் அந்தக் கணநேரம் படம் தந்த உணர்வை விட, எங்கள் நாட்டின் அவலக் கதை பேசும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கியதை நேரே கண்டு நெகிழ்ந்தேன். ஒரு சாதாரண படம் தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியும் ஆனால் இந்த உணர்வின் சாட்சியாகத் தமிழகத்தவர் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக இயங்கிவருகிறார்கள் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் அது. தமிழகத்தவர் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு பூர்வமாக இயங்கும் அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து.
சாந்தி தியேட்டர் பக்கமாக ஒரு குளிர்பானக் கடை. ஒரு கொக்கோ கோலா போத்தலை வாங்கிவிட்டு அந்த இடத்தில் கொஞ்சம் குடித்துவிட்டு, நான் சவாரி செய்த அதே ஆட்டோவில் ஏறி சில எட்டுப் பயணித்திருப்போம். பின்னால் ஒருவர் ஓடிவந்தார் "யோவ் யோவ்" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. என்னதான் துணிந்து தனியனாக ஊர் சுற்ற வந்தாலும் யாராவது ஏமாற்றுக்காரரிடம் வசமாக மாட்டிவிடுவேனோ, அது இந்த ஆளோ என்று பயம் கவ்வ, "ஆட்டோவ நிறுத்துங்க, யாரோ கூப்பிடுறாங்க" என்றேன்.
துரத்தி வந்தவர் "போத்தலைக் குடுத்துட்டுப் போங்க தம்பி" என்றார்.
அப்போது தான் சோடாப்போத்தலைத் திருப்பிக் கொடுக்கும் நடைமுறை ஞாபகத்தில் வந்து அசட்டுச் சிரிப்புடன்
"இந்தாங்கோ" என்றேன்
"குடிச்சுட்டுக் குடுங்க தம்பி, சிலோனா?"
"ஆமாங்க"
பின்னாளில் இரண்டு முறை நீண்ட விடுமுறையில் சென்னைக்குப் பயணப்பட்டாலும் இனிப் பயணப்படப்போகும் காலத்தையும் சேர்த்தே சொல்கிறேன் சென்னைக்கு வரும் போது என் தாய்வீட்டுக்கு வரும் உணர்வு எப்போதும்.
சென்னை தின வாழ்த்துக்கள்
2004 ஆம் ஆண்டில் நான் சென்னை வந்தபோது எடுத்த சில படங்கள்
தாஜ் கன்னிமாராவில் தங்கியிருந்த போது எதிர்பாராதவிதமாக நடிகர் நாகேஷ் ஐச் சந்தித்தேன். ரோட்டரி க்ளப் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய நிகழ்வு அங்கு நடைபெற்றிருந்தது.
ஏவிஎம் ஸ்டூடியோ சென்றபோது பேரழகன் படப்பூஜையில் கலந்து கொண்டேன். படத்தில் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு
கவிஞர் அறிவுமதி அவர்களின் அலுவலகத்தில்
கவிஞர் அறிவுமதி அவர்களை அவர் அலுவலகத்தில் சந்தித்த போது
பிரபலமான கல்யாண மண்டபம் ஒன்று (பெயர் சட்டென்று மறந்து விட்டது) எட்டிப்பார்த்தேன், திருமணம் ஒன்று