யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் நிறுவனர் சக உரிமையாளர் STR என்ற தியாகராஜா அவர்கள் மறைந்த செய்தி வந்திருக்கிறது.
90 களில் ஒருநாள் ராஜாதி ராஜா படத்தை என் நண்பர்களுடன் இங்கு பார்த்து விட்டு வெளியே வரும் போது கோட்டை இராணுவ முகாம் மீது புலிகளின் முற்றுகை தொடங்கி விட்டது.
ராஜா என்று படத் தலைப்பு வந்தால் இங்கு தான் ஓட வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
தியேட்டர் முதலாளி S.T.R தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்.
அதனால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுக்கும் மறக்காமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜா தியேட்டரை உருவாக்கிய போது சக தியேட்டர் முதலாளிகளின் புறக்கணிப்பு, தொழிற் போட்டி, அதனால் படங்களை இறக்குமதி செய்ய முடியாத இக்கட்டான சூழலில் தமிழரசுக் கட்சியின் கை கொடுப்பு,
எம்ஜிஆரின் “காவல்காரன்” படத்தைத் திரையிடும் சூழலில் அவர் குண்டடிபட்டுப் படுக்கையில் இருந்த சூழலில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி யாழ்ப்பாணம் வந்த கதையை எல்லாம் IBC தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
https://youtu.be/9cDQhjBYUDk
நாட்டின் பிற தமிழ்ப் பகுதிகளில் தமிழ் சினிமா அரங்குகள் சிலவற்றையும் தம் நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ராஜா தியேட்டரில் எம்.ஜி.ஆர் படமும் அதற்கு நேர் முன்னே இருந்த வின்சர் தியேட்டரில் சிவாஜி கணேசன் படமுமாகப் போட்டி போடுமாம். ரசிகர்களுக்குள் கத்திக் குத்துச் சண்டை வரை போய், அந்த நேரம் தான் ஒரு மல்யுத்த வீரனைப் போலக் களத்தில் இறங்கி அவர்களை விரட்டிய கதையை வின்சர் தியேட்டரில் முகாமையாளராக இருந்த மூத்த குடிமகன் ஒருவர் எனது வானொலி நிகழ்ச்சியில் பகிர்ந்திருக்கிறார்.
இன்று யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதியில் தனி தியேட்டர் என்ற வகையில் ராஜா தவிர செல்லா ( முன்பு சாந்தி) தியேட்டர் இருந்தாலும் ராஜாவின் பழைய செல்வாக்கை இன்னும் தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
STR இற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ராஜா தியேட்டர் படங்கள் 2019 இல் என் தாயக உலாத்தலில் எடுக்கப்பட்டவை.