ஈழத்து இலக்கியப் பரப்பில் பத்ம நாப ஐயர் அவர்களின் செயற்பாட்டை விலத்தி நின்று பேச முடியாத அளவுக்கு அவர் முன்னெடுத்த இலக்கிய முயற்சிகள் மற்றும் ஆவணத் தொகுப்புகள் போன்றவற்றோடு புகலிட இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களின் மையப் புள்ளியாக அமைந்து விளம்பர முலாம் பூசாமல் பல செயற்கரிய காரியங்களைச் செய்யிருப்பதை அவரை நன்கறிந்தவர்கள் போற்றுவர்.
பத்தாண்டுகளுக்கு முன் நான் நான் உலகில் தீவிரமாக எழுத இறங்கிய போது மதி கந்தசாமி அவர்கள் வழியாக பத்மநாப ஐயரின் அறிமுகம் கிட்டியது. ஆனால் நான் பள்ளி மாணவனாக இருந்த போது எங்கள் ஓவிய ஆசியர் மாற்கு மாஸ்டர் அவர்களின் சிறப்பு மலராக ஈழத்து ஓவியப் படைப்பாளிகளின் ஆவணப் பதிவாக அமைந்த "தேடலும் படைப்புலகமும்" என்ற அரியதொரு நூலின் வெளியீட்டிலும் தொகுப்பாளராக ஐயரின் பங்களிப்பு இருந்ததைப் பின்னாளில் தான் தெரிந்து கொண்டேன். பள்ளிப் பராயத்திலே எங்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் விழா எடுத்து வெளியான அந்த நூலின் சிறப்புப் பிரதிகளை மாணவர்களே வாங்கும் வகை செய்த போது அதில் நானும் ஒருவனாக மேடையேறியது நினைவுக்கு வருகிறது.
பத்ம நாப ஐயர் தமிழ் இணைய உலகின் ஆரம்பம் தொட்டு, அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளை தேடிச் சுமப்பவர். அவரின் வீட்டு நூலகத்தில் திரண்ட சேமிப்புகள் பல அரிய இலக்கியச் சொத்துகள் என்று அதைத் தரிசித்த நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஊடகர் பொ.ஐங்கர நேசன் தினக்குரல் (2003) கண்ட நேர்காணல் வழியாக திரு.பத்மநாப ஐயர் பேசிய கருத்துகள் அவரைப் பிரதிபிம்பப்படுத்தும் வகையில் முக்கியமானது. இதோ அந்தப் பகிர்வுகள்.
நன்றி : வணக்கம் லண்டன் இணையம் வழி தினக்குரல்