Wednesday, May 28, 2014
சுந்தரப்பா
எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் கொடியேறித் திருவிழா நடக்கிறது. இம்முறை ஊருக்குப் போய் திருவிழா பார்க்கமுடியாத சூழ்நிலை எனக்கு. பேஸ்புக் வழியாக எங்களூரில் இருந்து சுடச் சுடப் பகிரப்படும் திருவிழாப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்கும் போது ஊர்த்திருவிழாவைக் காணமுடியாத ஏக்கம் இன்னும் அதிகப்படியாக என்னுள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
ஊர்த்திருவிழா என்பது எனக்கு வருஷம் 16 படத்தைத் தான் நினைவுபடுத்தும். எங்களூரில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் மூலை முடுக்கில் இருப்பவர்களெல்லாம் வருடத்தில் ஒருமுறை ஊருக்கு வரவேண்டும் என்று தீர்மானித்தால் அது பெரும்பாலும் பிள்ளையாரடித் திருவிழாவை முன்னுறுத்தியதாகத் தான் இருக்கும். இன்றைய சூழலில் இருபது முப்பது வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் எங்களூருக்கு வரும் போது அடுத்த சந்ததி இளைஞர்களால் மட்டுக்கட்ட முடியாதவர்களாக இருக்குமளவுக்கு அவர்கள் புலம் பெயர்ந்து பல ஆண்டுகளாகியிருக்கும். ஆனால் இந்தக் கோயில் திருவிழாதான் அவர்களுக்கெல்லாம் மறு அறிமுகமாகவும் இருக்கும். ஆனால் இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்னரே ஊரை விட்டுப் போனவர்கள் மீண்டும் ஊருக்குத் திரும்பும் போது, ஊரே மாறியிருக்கும், கோயிலின் நிறமும் மாறியிருக்கும். ஆனால் சாயம் போகாத அந்தப் பழைய நினைவுகளோடு வந்து திருவிழாக் காலக் கோயிலின் வீதியை அளந்து போகும் போது மீண்டும் இரைமீட்டிப் பார்ப்பார்கள். அந்தக் காலத்துப் பிள்ளையார் கோயில் ஆட்கள் என்ற ஒரு நினைவுச்சுழலும் வந்து போகும். அந்த நினைவுச் சுழலில் கட்டாயம் இடம்பிடிப்பார் சுந்தரப்பா.
பழுத்த பழம் என்பார்களே அதற்கு உதாரணமாக எழுபது வயதைக் கடந்த சுந்தரப்பாவைச் சொல்லலாம். திருவருட்செல்வர் திரைப்படத்தில் அப்பர் சுவாமிகளாக வந்த சிவாஜி கணேசனின் அந்த உருவ அமைப்புக்கு நிகரானது சுந்தரப்பாவின் தோற்றம். அதே எளிமையும் அவர் முகத்தில் இருக்கும்.
எங்கள் பிள்ளையார் கோயிலின் மூல மூர்த்திக்கான மிகப்பெரிய தேர் தங்கும் கூடம் தேர்முட்டியடி என்று அழைக்கப்படும். நண்பர்கள் யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால் "பிள்ளையாரடித் தேர்முட்டியடிக்கு வாடாப்பா" என்று சொல்லுமளவுக்கு அது கேந்திர முக்கியத்துவம் பெற்ற பகுதி.
ஒரு பென்னம்பெரிய தகரக்கொட்டகையோடு சேர்ந்த சீமெந்துச் சுவர்ப்படி கொண்ட கட்டடம் அது. அந்தத் தேர்முட்டியோடு சேர்ந்து தேரடி வைரவருக்கும் ஒரு சிறு ஆலயம் இருக்கும். கிணற்றடியில் கால் கழுவி வருவோர் முதலில் வைரவரைக் கண்டு தான் பிள்ளையாரைச் சந்திப்பர். அந்தத் தேர்முட்டியோடு சேர்ந்த சிறு அறை ஒன்றும் இருந்தது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சுந்தரப்பாவின் உறைவிடம் அந்தத் தேர்முட்டியடி என்றே பதியம் போட்டு வைத்திருக்கிறது மனது.
சுந்தரப்பா கண்டிப்புக்கு மிகவும் பேர் போனவர். அவருடைய கண்டிப்புக்கு வயது வேறுபாடு கிடையாது. "பரம்பொருளைத் தரிசித்தலன்றி வீண் வார்த்தை யாதொன்றும் பேசற்க" என்று வைரவரடியில் மில்க்வைற் நிறுவனத்தால் எழுதி வைத்த தகரப்பட்டயத்தில் சொன்னதைத் தான் சுந்தரப்பா தாரக மந்திரமாகக் கொண்டிருப்பார். அப்பர் சுவாமிகள் போன்ற உருவத்திற்குச் சம்பந்தமில்லாத கண்டிப்பு இருக்கும் அவர் செய்கையில். கோயிலிக்கு வருபவர் ஆண்டவனைத் தரிசித்தலன்றி வேறு எதுவும் பேசக்கூடாது என்ற கண்டிப்பிலும், சுவாமியைக் கும்பிடும் போது ஒரு நேர்த்தியான ஒழுங்கில் நின்று தரிசிக்க வேண்டும் என்ற ஒழுக்கத்திலும் நேர்மை கொண்ட மனுஷர். பக்தர்கள் யாரும் அதில் பங்கம் விளைவித்தால் போச்சு. சுவாமியை வசந்த மண்டபத்தில் ஆற்றுப்படுத்திய பின்னர், பிரசாதம் வழங்கப்படும் போது சின்னஞ்சிறுசுகள் விழுந்தடித்துக் குமிந்து நின்று பிரசாதம் கொடுப்பவரோடு மல்லுக் கட்டினால் சுந்தரப்பா உக்கிர தாண்டவம் ஆடிவிடுவார். காற்சட்டையைத் தாண்டி ஒரு கிள்ளு அல்லது அடி விழும். ஒருத்தனுக்கு விழும் அடியால் ஒட்டுமொத்தக் கூட்டமே படார் என்று நிலத்தில் ஒழுங்காக அமர்ந்து கொள்ளும். அது எந்தப் பெரிய திருவிழாவாக இருந்தாலும் சுந்தரப்பா வந்தால் ஒரு இராணுவக் கண்டிப்புத் தான் அந்த இடத்தில் நிலவும்.
இவ்வளவுக்கும் சுந்தரப்பாவின் தேவை கவன ஈர்ப்பாக இருக்காது, தன்னுடைய வேலை கோயிலுக்கு வந்தவனை ஒழுங்குபடுத்திவிட்டு அப்பால் போவது என்ற போக்கே அவரிடம் இருக்கும்.
"டேய் சுந்தரப்பா வாறார்டா ஒழுங்கா இர்ரா" என்று சொல்லுமளவுக்கு அவருடைய கண்டிப்பைப் பெரியவர்களும் அதிகாரத் துஷ்பிரயோகம் பண்ணிவிடுவார்கள்.
2006 ஆம் ஆண்டில் நான் முதன் முதலாகக் கேரளாவுக்குப் பயணம் மேற்கொண்டு ஶ்ரீபத்மநாப சுவாமி ஆலயத்துக்குப் போகிறேன். கோயிலுக்குள் போக முன்னரேயே அருகில் இருந்த கருமபீடத்தில் வாடகைக்கு வேட்டி வாங்கி உடம்பில் சுற்றி, வெற்று மேலுடன் தான் போகலாம் என்று சொல்கிறார்கள். எனக்கு எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலடிதான் ஞாபகம் வந்தது.
சுந்தரப்பாவின் கண்டிப்பான ஒழுக்க நடைமுறை அவர் இல்லாத கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்தப் பெரிய கொம்பன் என்றாலும் பிள்ளையாரைத் தரிசிக்க வேண்டுமென்றால் மேற் சட்டை இல்லாமல் தான் போக முடியும். அதுவே ஊர்க்காரன் என்றால் பரிவே கிடையாது அர்ச்சனை தான் மிஞ்சும்.
"ஏன்ராப்பா ஒரு நாலு முழ வேட்டியைச் சுத்திக் கொண்டு வந்திருக்கலாமே பிள்ளையாரைப் பார்க்க" என்று ஜீன்ஸ் போட்டவரைப் பார்த்து கேள்வி ஒன்று வரும்.
கடந்த தடவை கோயில் திருவிழாவுக்குப் போய், தீர்த்தத் திருவிழா காணக் கோயிலின் முற்றத்து மணலில் எல்லோரும் குழுமி நிற்கின்றோம்.தொலைவில், கிணற்றடியில் சுவாமி தீர்த்தமாடுகிறார். தரையில் சம்மணமிட்டுச் சுவாமியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைத் திடீரென்று மறைக்குமாற்போல ஒரு கும்பல் முன்னால் வந்து நிற்கின்றது. வெள்ளை வேட்டி, சால்வையுடன் எங்கிருந்தோ இருந்து வந்த ஒரு முதியவர் அந்தக் கும்பலைக் கலைத்து இருக்க வைத்துவிட்டு
"தம்பியவை சுவாமி இப்ப தெரியுதோ" என்று கேட்டுவிட்டு இன்னொரு பக்கம் போகிறார் ஒழுங்குபடுத்த.
எனக்குப் பக்கத்தில் இருந்த அண்ணர் என்னைப் பார்த்து," இவையெல்லாம் தான் அந்த நாளில் இருந்து பிள்ளையார் கோயிலை ஒழுங்குமுறையாகப் பார்க்கிறவை" என்று சொல்லிவிட்டுப் பெருமிதமாகச் சிரிக்கிறார்.
சந்தததி சந்ததியாக அந்த மண்ணில் மக்கள் முளைத்தாலும், அந்தப் பிள்ளையாரடியைப் பராமரிக்கக் காலாகாலமாக ஒரு கூட்டம் வந்து கொண்டே இருக்கும். கோயிலோடு வாழ்ந்து அந்தக் கோயிலின் சுற்றுப்புறம் மட்டுமல்ல கோயிலுக்குள் வரும் அடியவர் அகமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கோடு இயங்கும் தொண்டர் பரம்பரை இது.
நாம் பிறந்த காலம் தொட்டு இளமைக்காலம் வரை எம் கண் முன்னே நடமாடிய முந்திய சந்ததி என்ற அந்த ஆலமரங்கள் சாயும்போது எழும் கவலை ஒட்டிக் கொண்டே வரும் போல.