Saturday, July 22, 2006
கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு
தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.
இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.
ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.
'தில்லீஸ் குறூப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.
மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.
'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
மாதக் கடைசி. கையில் பணமில்லை.
வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.
அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.
மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.
அந்த 'ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.
எனினும் என்ன பயன்?
எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.
அது திறக்கப்படவில்லை.
மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.
பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.
மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
அவர்களின் பின்னால் 'ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
இராணுவத்தினர் 'ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.
கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.
அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.
அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.
நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.
ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
ஓடினால் 'தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.
நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.
கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.
அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.
சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.
இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
இரவு எட்டு மணியிருக்கும்.
முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.
லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.
பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.
அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.
இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
பசித்தது.
துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."
அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.
யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.
யாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்
Monday, July 10, 2006
நட்சத்திர அனுபவம்
தமிழ் மண நட்சத்திர வாரத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டேன். வழக்கமாக மாதம் இரண்டு பதிவுகள் படி என் ஊர் பற்றிய நினைவுகளோடு மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதிவந்த எனக்கு, நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு பதிவு வீதம் நட்சத்திர வாரம் பூராவும் நிரப்பவேண்டும் என்பது எனக்கு ஒரு வகையில் சவாலாக இருந்தது.
நீண்ட கால அவகாசம் இருந்ததால் என் மனப்பதிவில் சில பதிவுகள் உருக்கொண்டு கருக்கட்டியிருந்தன. ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று என்பது போல் எழுத உட்காரும் போது வந்து குதித்த சில விடயங்கள் என்னை வேறு பாதைக்கு இட்டுச்சென்று புதிய சில பதிவுகளை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திவிட்டன.
நான் தமிழ் மண வாரத்தில் எழுதவேண்டும் என்று நினைத்த பதிவுகளில் எழுத முடிந்தது, "வாடைக்காற்று" மற்றும் "வாழைமரக்காலம்" மட்டுமே.
பரந்தளவிலான வாசகர் வட்டத்திற்குத் தீனி போடவே "ரசதந்திரம்" மற்றும் "திரையில் புகுந்த கதைகள்" பதிவுகள் வந்தன. என் காதலர் கீதங்கள் தொகுப்பின் ஒரு பகுதியைக் கொடுக்கலாம் என்று முதல் நாள் தீர்மானித்துவிட்டு என் வானொலிக்களஞ்சியத் தொகுப்பின் பிரதியை எடுத்து வைத்தேன். மறுநாள் எழுத ஆரம்பித்தபோது மலரக்காவின் நினைவு தான் வந்தது. தீர்மானித்த விடயத்தை ஒதுக்கிவிட்டு மலரக்காவின் நினைவுகளை என் மனது இரைமீட்க, கைவிரல்கள் தானாகவே தட்டச்சிக்கொண்டு போயின.
மடத்துவாசல் பிள்ளையாரடியில் என் ஊர் நினைவுகள் மட்டும் பதியப்பட்டு வந்தவேளை நட்சத்திர வாரத்திற்காக மட்டும் சில சமரசங்களைச் செய்துகொண்டேன். அனுபவம்/நிகழ்வுகள் என்ற ஒரே தெரிவை வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் நான், பதிவர் வட்டம், சினிமா/பொழுதுபோக்கு, நூல்நயம்/இதழியல், ஆன்மீகம்/இலக்கியம், சிறுகதை ஆகிய தெரிவுகளையும் இந்த நட்சத்திரவாரத்தில் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். ஆனால் பிஞ்சுமனம் என்ற குறும்பட அனுபவத்தையும், காழ்ச்சாவையும் சினிமா/பொழுதுபோக்கு என்ற வட்டத்துக்குள் சுருக்கவிரும்பாமல் அனுபவம்/நிகழ்வுகள் ஆக அளித்திருக்கின்றேன்.
என் நீண்ட பதிவுகளை ஒரு வழி பண்ணுமாறு கேட்ட ராமச்சந்திரன் உஷாவின் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற முடியவில்லை:-)
எதையும் எழுதிவைத்து மீண்டும் தட்டச்சும் பழக்கமில்லாத எனக்கு வந்து விழும் வார்த்தைகளுக்கு அணை போட விரும்பவில்லை. இது என் பலவீனமும் கூட. எனக்கு விரும்பிய விஷயத்தைப் பேச ஆரம்பித்தால் ஒரு வழி பண்ணிவிடுவேன். எனவே என் எழுத்துக் குழந்தையைச் சிதைக்க நான் விரும்பவில்லை.
கடந்த வாரத்தில் என் பதிவுகளை வாசித்து, உலகெலாம் பரந்து வாழும் சகோதர சகோதரிகளிடமிருந்து வந்த பின்னூட்டங்கள், தனி மடல்கள் கணக்கிலடங்கா. இவை எனக்கு ஓராண்டில் பெறும் அனுபவங்கள். மலரக்காவின் நினைவில் அழுதவர்களின் மடல்களை என் கண்களில் கண்ணீர் நிரப்ப வாசித்தேன். வெறும் வார்த்தை ஜாலம் அல்ல இது.
உதாரணம் இந்தப் பின்னூட்டம்:
//At July 08, 2006 7:35 PM, aravin சொன்னவர் இப்பிடி...
HI I CANT TYPE STILL IM IN TEARS .WHAT A HUMAN .MANASU VALIKUTHU PAA .U R NARATION IS ALSO NICE//
தமிழ்மணம் எனக்கு வழங்கிய இந்த அனுபவம் என் வாழ்க்கையில் ஒரு மைல்கல், இதற்காகத் தமிழ்மணத்திற்கு நான் நிறையவே அன்புக்கடன் பட்டிருக்கிறேன்.
சரி, நீங்கள் சொல்லுங்களேன், கடந்த என் பதிவுகளில் உங்களைப் பாதித்தவை, பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்ப்பவை, எதிர்பார்ப்பவை இவை பற்றி....
இறுதியாக அன்புச் சகோதரி மங்கை தந்த பின்னூட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்கின்றேன், அவர் குறிப்பிட்ட மனித நேயம் என்பது தான் என் நட்சத்திரவாரத்தில் பெரும்பாலான பதிவுகளில் தொனிப்பொருளாக அமைந்ததும் கூட.
அரவணைப்பு(compassion) நமக்கு ஞானத்தை கொடுக்கும்.
ஞானம் ,அமைதியை கொடுக்கும்.
இந்த அமைதி நாம் இருக்கும் போதும் இறந்த பின்னும்
நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்.
இதற்கு பெரிய தியாகம் செய்ய தேவை இல்லை,
பாதிக்கப்பட்டவர்களை நாம் ஆதரவாக அரவணைத்தால் போதும்.
மீண்டும் சந்திப்போம்
நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா
Sunday, July 09, 2006
காழ்ச்சா - அன்பின் விளிம்பில்
நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த படம், அதுவும் நல்ல பிரதியில் என்ற என் எண்ணம் கைகூடியது கடந்த வாரத்தில் தான். Bangalore, Land Mark இல் வாங்கிய VCD ஆன காழ்ச்சா என்ற படம் தான் அது. காழ்ச்சா என்றால் பார்வை (Vision), தரிசனம் என்று தமிழில் அர்த்தப்படும். மலையாளத்தின் சிறந்த திரைப்படைப்பாளிகளான பத்மராஜன், லோகிதாஸ் ஆகியோரின் உதவி இயக்குனராக இருந்து பின் இந்த "காழ்ச்சா" என்ற முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் பிளெஸ்ஸி. 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் சிறந்த இயக்கத்துக்காக பிளெஸ்ஸியும், சிறந்த நடிப்புக்காக மம்முட்டியும் பிலிம்பேர் விருதையும் எடுத்த படம். திரை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படி இந்தத் திரைப்படத்துக்கு நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. படம் பார்த்து முடித்தபோது உணர்ந்தேன், இவ் எதிர்பார்ப்புக்கள் பொய்யாகவில்லை.
படக்கதைச்சுருக்கம் இதுதான்.மாதவன் (மம்முட்டி) கேரளாவின் வசதி குறைந்த கிராமங்கள் தோறும் தன் 16 எம்.எம் திரைப்படக்கருவி மூலம் படம் காட்டிப் பிழைப்பவன். ஒருநாள் இப்படியாகப் படம் காட்டும் வேளை, ஒரு அநாதைச் சிறுவன் மேல் இவன் கவனம்படுகின்றது. அந்த சிறுவன் பெயர் பவன் (மாஸ்டர் யஷ்), ஜனவரி 26, 2001 குஜராத் பூகம்பத்தில் தன் உறவுகளைத் தொலைத்து, பிச்சைக்காரர்களால் கேரளாவிற்குக் கடத்திக்கொண்டு வரப்பட்டவன். இந்தச் சிறுவனின் பூர்வீகமும்,மொழியும் தெரியாமலும், இவன் படும் அல்லல்களைக் கண்ட மாதவன் தன் குடும்பத்தில் ஒருவராக வைத்து அன்பாக வளர்க்கின்றார். அந்தச் சிறுவனின் பின்புலம் தெரியவரும் போது தொடர்ந்தும் மாதவனால் பவனைத் தன் குடும்பத்தில் வைத்திருக்கமுடியாதபடி சட்டச் சிக்கல்கள் வருகின்றன. பவனின் உறவுகளைத் தேடி மாதவனும் பவனும் குஜராத்துக்குப் பயணிக்கின்றார்கள். முடிவு என்ன என்பதுதான் இப்படத்தின் பூகம்பம் தரும் அதிர்ச்சி.
இந்தப் படத்தைப் பார்த்தபோது ஈழத்து எழுத்தாளர் சுதாராஜ்ஜின் அடைக்கலம் என்ற சிறுகதை தான் ஞாபகத்துக்கு வந்தது, அதைத் தான் என் முன்னைய பதிவின் இட்டிருக்கின்றேன்.
பொதுவாக இப்படியான வித்தியாசமான கதைகள், தேர்ந்த இயக்குனர், கதைக்களம் என்று அமையும் நல்ல மலையாளப் படங்கள் தரும் உணர்வையே இப்படம் தருகின்றது. ஆற்றுப்படுக்கை தழுவிய கிராமமான காயல் என்ற கேரளப்பகுதியைத் தேர்ந்தெடுத்திருத்துப் படகு வீடுகளும், நாளாந்தப் போக்குவரத்துக்குப் பயணிக்கும் படகுச்சேவையும், இவ்வூர் வாசிகள் தம் வேலைக் களைப்பை மறக்கக் கள் அருந்தி சீட்டு (கார்ட்ஸ்) அடிப்பதும், திறந்த வெளி ஆற்றுமணற் பரப்பில் இருந்து இரவில் படம் பார்ப்பதும், ஆடிப்பாடுவதுமாக ஒரு வழக்கமான இக்கதைகளம் அமைந்திருக்கின்றது. இதனால் ஒரு சராசரிக்கலைப்படத்தின் தொய்வு தவிர்க்கப்பட்டிருப்பது இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி.
ஒளிப்பதிவும், இசையும் கூடவே இவருக்குக் கைகொடுக்கின்றன. சிறுவன் பவன், மாதவன் வீட்டுக்கு வரும் பபோது மாதவன் வீட்டு நாய் ஒரு அந்நியனைக் கண்ட தொனியில் குலைத்துத் தீர்ப்பது, இறுதிக் காட்சியில் அதே நாய் பவனைத் தேடிக்கொண்டே வருவது என்று இயக்குனரின் நுட்பமான பார்வைக்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.
இப்படத்தின் இன்னொரு நல்ல விடயம் பொருத்தமான நடிகர் தேர்வு, அந்த வகையில், மம்முட்டியின் நடிப்பைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். ஹீரோயிசத்தை ஒதுக்கிவைத்த பாத்திரப் படைப்பான, படம் காட்டும் தொழில் செய்பவராக இவர் வந்து நடிப்பில் செய்யும் பரிமாணங்கள், நடிப்பா இயல்பா என்று பாகுபடுத்தமுடியா அளவிற்கு இருக்கின்றன. படம் போட்டுக் காட்டிக்கொண்டே, இடையில் சகபாடிகளுடன் சாராயம் குடிப்பதற்காகப் போகும் போது, படம் பார்த்துக்கொண்டிருக்கும் கிழவியிடம் கவனிக்குமாறு சொல்லிவிட்டு போய், தண்ணியடித்துவிட்டு, "நாற்று நட்டாயா, களை பிடுங்கினாயா" என்று வீரபாண்டிய கட்டப்பொம்மன் பாணியில் ஏகவசனத்தில் போதை மப்பில் பேசுவது, அநாதைச் சிறுவனின் குஜராத்தி மொழி தெரியாமல் திணறிச் சமாளிப்பது, சிறுவன் பவன் தன் மகளோடு சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவதைப் பார்த்துக் குதூகலிப்பது, ஒரு கட்டத்தில் ஆற்றில் தன் மகளும் பவனும் மூழ்கும் போது மகளைத் தன் வீட்டார் அரவணைக்கும் போது ஓரமாய் நீர் சொட்டச் சொட்ட நிற்கும் சிறுவன் பவனைக் கரிசனையோடு பார்த்து வாரிஅணைத்து உச்சிமுகர்வது எனப் பல உதாரணங்கள்.
சிறுவன் பவனைத் தொடர்ந்தும் தன் குடும்பத்தில் வைத்திருக்க விரும்பினாலும் அரச இயந்திரத்தின் கையாலாகாத தனத்தால் அது நிறைவேறாமல் போகும் போது அசட்டுச் சிரிப்புமாக அதிகாரிகளுக்குக் கை கட்டி நிற்பது என்று படத்தின் சோககாட்சிகளை ரசிகன் மேற் பாரமேற்றுகிறார். கக்கத்துள் குடையும், மடித்துக்கட்டிய வெள்ளை வேஷ்டியும், அடிக்கடி அறுந்து போகும் செருப்புமாகத் தோன்றி வாழ்ந்திருக்கும் இவர், எந்தவொரு காட்சியிலும் மிதமிஞ்சிய ஹீரோயிசத்தைக் காட்டவில்லை.
ஊர்ப்பாதிரியாராக வரும் நகைச்சுவை நடிகர் இன்னசெண்ட், மம்முட்டியின் நண்பராகவும் படகோட்டியாகவும் வரும் மனோஜ்.கே.ஜெயன் இவர்களும் தம் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
அழகப்பனின் ஒளிப்பதிவு, ஆற்றோரக் கிராமத்தின் கொள்ளை அழகையும், இரவின் காட்சிகளையும், நாளாந்தப் படகுப் பயணங்களையும் எனச் சிறப்பாகக் களஞ்சியப்படுத்துகின்றது.
தங்களின் வீட்டுக்கு வந்து தம் கைவினைப் பொருட்களைப் பார்க்கவரும் வெள்ளைக்காரரைப் பார்த்து வெள்ளாந்தியாக, வாயெல்லாம் பல்லாகச் சிரிப்பது, அம்பிலி (மம்முட்டி மகள்)க்கும், பவனுக்கும் ஆற்றில் நீச்சல் பழக்கிவிட்டுப் பின் தன் மகளிடமிருந்து தப்புவதற்காக ஒளிப்பது, இறுதிக்காட்சியில் பவன் குஜராஜ் போகும் போது திருநீறு தடவி வழியனுப்புவது, அவன் போவதைத் தாங்கமாட்டாது பவனை வழியனுப்ப வரமாட்டேன் என்று தயங்குவது என்று அந்தக் கிழவர் பாத்திரம் நன்றாகவே தன் பங்கைச் செய்திருக்கிறது.
பத்மப்பிரியா லட்சுமி என்ற பாத்திரத்தில் மம்முட்டியில் மனைவியாக வந்து, இயல்பானதொரு குடும்பத்தலைவியாகவும், எடுத்து வளர்க்கும் பவன் மேல் தன் அளவில்லா அன்பை மனசுக்குள்ளே புதைத்து அடக்கமாக அதை வெளிப்படுத்தவும் செய்கின்றார். பட்டியல் படப்பாணிக் குத்துப் பாட்டும் கிடையாது.
மம்முட்டியின் மகளாக அம்பிலி என்ற பாத்திரத்தில் வரும் ஷனுஷா என்ற சிறுமி ஓர் அழகான தேர்வு. குறிப்பாக, பவனைக் காணாது அழுதுகொண்டே தேடுவது, கோழி அடைக்கும் கூட்டில் அவனைக் கண்டு சிரித்துக் கொண்டே கட்டியணைப்பது.
இந்தப் படத்தின் பெரிய பலமே பவன் என்ற சிறுவன் பாத்திரம். பவனை மைய்யப்படுத்தியே முழுக்கதையும் நகர்வதும், காட்சிக்குக் காட்சி இவனின் தேவையும் இப்படத்தில் இருக்கிறது. இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் யாஷ்.
பேபி ஷாலினித்தனமான அதிமேதவிக் குழந்தைகளைப் முந்திய படங்களில் பார்த்துவிட்டு இச்சிறுவனின் நடிப்பைப் பார்க்கும் போது பவன் ஒருபடி உயர்கின்றான்.
மம்முட்டி போடும் படங்களில் குடும்பக் காட்சி வரும் போது தொலைந்த தன் குடும்பத்தை நினைத்து விக்கி விக்கி அழுவது, கேரளச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் எல்லோரிடமும் குஜராத்தியில் பேசிச்த் திரிவது, பின்னர் மலையாளக் குடும்ப வளர்ப்பில் வளரும்போது "மனசிலாயி" என்று அடிக்கடி சொல்லிக்கொள்வது என்று உதாரணங்களைக் காட்டிக்கொண்டே போகலாம்.
இறுதிக்காட்சியில் இடிபாடுகளுக்குள் நசிந்து கிடக்கும் சைக்கிள் பொம்மையைப் பார்த்து ஏங்கியவாறே, தொடர்ந்து அந்த உடைபாடுகளுக்குள்ளேயே தன் தாய் தந்தையரைத் தேடிப்போகும் சிறுவன் பவன் ஓரிடத்தில் நின்று, மம்முட்டி மகள் தனக்குத் தந்த மாலையைத் தன் பெற்றோருக்குக் காட்டும் பாவனையில் கொங்கிறீற் உடைபாடுகளுக்கு முன் தன்கையிரண்டில் மாலையை நீட்டிக் காட்டியவாறே அவன் விம்மலெடுக்கும் அழுகையுடன் பேசும் போது பார்க்கும் எமக்கு மனசு வலிக்கிறது, கண்ணீர் உடைப்பெடுக்கின்றது.
அரசு மருத்துவமனைக்குள் கிழித்த நார் போல் வெறுந்தரையில் அநாதையாய் சிறுவன் பவன் கிடப்பதும், மம்முட்டி தம்பதி பதபதைத்தவாறே தேடிக்கொண்டுவரும் காட்சிகள் கண்ணீரை வரவழைப்பவை.
காயல் கிராமத்தான்களின் குத்தனாடன் குதூகலப் பாடலாகட்டும், சிறுவர் ஆடிப்பாடும் டப்பு டப்பு பாடலாகட்டும், குஜராத்திப் பயணத்தில் கலக்கும் ஜுகுனூரே ஜுகுனூரே பாடலாகட்டும் இப்படத்துக்கு இன்னுமொரு பொருத்தத் தேர்வான மோகன் சித்தாராவை அடையாளம் காட்டுகின்றது. குறிப்பாக ஜுகுனூரே, ஜுகுனூரே பாடல் வரும் குஜராத்திக் களம் அக்காட்சியின் வலிமையை ஒருபடி மேல் நிறுத்தி கண்களை வேறுபக்கம் நகராமல் வைத்திருக்கிறது.அப்பாடற் காட்சியின் வலிமை நெஞ்சில் வலியாகப் பாரமேற்றுகின்றது. பாடல்களைக் கேட்க இங்கே அழுத்தவும்: காழ்ச்சா
சோகக் காட்சிகளில் வெறும் மெளத் ஆர்கனை வைத்து வழங்கியிருக்கும் பின்னணி இசை இன்னொரு சான்று.
போரோ, இயற்கை அநர்த்தங்களோ வரும் போது பாதிக்கப்பட்டவனைப் பார்த்து அனுதாபப்படவும் காப்பாற்றிவைத்திருக்கவும் கூட சில வெள்ளாந்தி உள்ளங்கள் இருக்கின்றன. ஆனால் கொடுமை என்னவென்றால் நாட்டு மக்களைக் காப்பாற்றவும் ஆதரவளிக்கவும்,அதே நேரத்தில் குறித்த சில சூழ்நிலைகளுக்கேற்ப எப்படித் தன் நெறிமுறைகளில் நெகிழ்வுத் தன்மையையும் இந்த அரசு இயந்திரம் கொண்டிருக்கவேண்டுமோ அதைப் பல இடங்களில் செய்யத்தவறி விடுகின்றது. இந்தப் படத்தின் மையக்கருவும் அதுதான். மம்முட்டி அரச இயந்திரத்தோடு அப்பாவியாக மல்லுகட்டும் போது பார்த்துக்கொண்டிருக்கும் எமக்குக் கோபம் வருகின்றது அரசு இயந்திரம் மீது, இயலாமை மேலோங்குகின்றது.
பவன் என்ற அநாதைக்கு வாழ்வளிக்க ஒரு குடும்பம் தயாராக இருந்தும், அரசின் இந்தச்சிவப்பு நாடாமுறை (Red tapism) இந்த அன்புப் பாலத்திற்குக் கத்தரி போடுகின்றது. மம்முட்டி மறுவாழ்வு முகாமில் வைத்து பவனுக்கு பிற்ஸ் வரும் என்று கரிசனையோடு சொல்லிவிட்டு, தன் விலாசத்தைக் கொடுத்து " பவனின் உறவுகள் கிடைக்காத பட்சத்தில் அவனை அனுப்புங்கள்" என்று இரந்து கேட்டுவிட்டு நம்பிக்கையோடு நகர்வதும்,பவன் கைகாட்டி வழியனுப்புவதும், சம காலத்தில் மம்முட்டியின் கோரிக்கை அந்தப் புனர்வாழ்வு முகாம் அரச ஊழியரால் குப்பைக் கூடைக்குள் போவதுமாக காழ்ச்சா, ஒரு வலிக்கும் ஹைக்கு.
ஜனவரி 26, 2001 குஜராத் பூகம்பத்தின் போது காணாமற் போனோர் எண்ணிக்கை 247 என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அறிக்கை சொல்கின்றது.
இவர்களில் இன்னும் எத்தனை பவன்கள் இருக்கிறார்களோ?????
அடைக்கலம்
1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் "இளமைக் கோலங்கள்" என்ற நாவல் தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது. இவர் எழுத்தில் இருந்த வித்தியாசமான நடை, தொடர்ந்தும் என்னைச் செங்கை ஆழியான் தாண்டி சுதாராஜ்ஜின் எழுத்துக்களையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.
வித்தியாசமான களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுப்பது, அல்லது ஒரே களத்தில் வித்தியாசமான கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பது, இவரின் பலங்களில் ஒன்று. இவரின் ஒரு சிறுகதையை வாசித்து முடித்தால் கிடைக்கும் திருப்தி, அகோர வெயிலில் சைக்கிளில் யாழ்ப்பாணம் ரவுண் வந்து லிங்கம் கூல்பாரில் பலூடா சர்பத் குடித்த திருப்திக்கு ஒப்பானது. எளிமையான நடையும், மனித உணர்வுகளைத் தன் எழுத்தில் கொண்டுவரும் பாங்கும் சுதாராஜ்ஜின் தனித்துவங்களில் ஒன்று.
கொடுத்தல், மற்றும் தெரியாத பக்கங்கள் போன்ற இவரின் சிறுகதைத் தொகுதிகள், சுதாராஜ்ஜின் எழுத்தின் பல பரிமாணக்களைக் காட்டும். இவரின் நான்கு புத்தகங்கள் தொடர்பான விபரம் விருபா என்ற தளத்தில் உள்ளன. சுதாராஜ் பற்றிய மேலதிக விபரங்களை என் இந்தப் பதிவின் பின்னூட்டமாக விருபா அளித்திருக்கின்றார்.
1992 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் இவரது "அடைக்கலம்" சிறுகதை முதற்பரிசு பெற்றது.அப்போது நான் ஈழத்தில் இருந்தேன். யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது. ஆனந்த விகடனால் "ஒரு மெளனத்தின் அலறல்" என்ற தொகுப்பிலும் இடம்பிடித்தது இந்தச் சிறுகதை.
இன்றைய பதிவில் நான் இவரின் கொடுத்தல் என்ற சிறுகதையை PDF வடிவில் இணைத்திருக்கின்றேன். சற்றே பெரிய சிறுகதை என்பதால் எழுத்தில் ஏற்றுவதில் சிரமம் இருந்தது. சிரமத்துக்கு மன்னிக்கவும். பிரதியை அச்செடுத்து வாசித்துப் பாருங்கள்.
இங்கே சுட்டவும்: அடைக்கலம்
இந்தச் சிறுகதையைக் கடந்தவாரம் நான் தேடியலைந்ததை இப்போது நினைக்கும் போது சிரிப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. கொடுத்தல் என்ற சிறுகதைத் தொகுப்பை நான் வைத்திருந்தேன் அதிலும் இந்தச் சிறுகதை இருந்தது.ஆனால் இரவல் வாங்கிய நண்பர் தொலைத்துவிட்டார். நான் இருக்கும் உள்ளூர் நூலகத்தில் தேடிப்பார்த்தேன், வாசிப்பில் நாட்டமுள்ள நண்பர்களைக் கேட்டேன், இணையத்தில் நூலகம் தளத்தில் தேடினேன். என் பழைய மல்லிகை இதழ்களைப் புரட்டிப்பார்த்தேன். கடைசியாக ஞாபகம் வந்தது எழுத்தாள நணபர் ஒருவர். அவரிடம் சுதாராஜின் சிறுகதைத் தொகுப்பு இருப்பதாகவும் தேடிப்பார்ப்பதாகவும் சொன்னர். அன்றொரு நாள் மாலை இந்த அடைக்கலம் சிறுகதையைத் தொகுப்பில் கண்டெடுத்துவிட்டதாகச் சொல்லித் தொலை நகலில் அனுப்பிவைத்தார்.
இவ்வளவு சிரமமெடுத்து இந்தச் சிறுகதையை நான் அரங்கேற்ற விழைந்தது, எனக்குக் கிடைத்த இந்த நல் வாசிப்பு அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு காரணம், மற்றயது நான் இந்த நட்சத்திர வாரத்தில் இறுதியாகத் தரப்போகும் பதிவு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட கதைகரு இது. அந்தப் பதிவை இன்னும் சில மணி நேரத்தில் அரங்கேற்றுகின்றேன். அதுவரை இந்தச் சிறுகதையை வாசித்துவிட்டுக் காத்திருங்கள்.
தற்போது இலங்கை, புத்தளத்தில் வாழ்ந்துவரும் சுதாராஜ், இந்த அடைக்கலம் சிறுகதையின் கருவே மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பயன்பட்டது என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றார். இந்தப் படம் வருவதற்கு முன்னர் புத்தளம் வந்து மணிரத்னம் தன்னைச் சந்தித்தபோது லொகேசன் பார்க்கவே வந்ததாகக் கூறிச் சில உதவிகளைப் பெற்றபோதும் தன்னிடம் இச்சிறுகதையைப் படமாக்கும் அனுமதியைப் பெறவில்லை என்றும் சொல்கின்றார்.
Saturday, July 08, 2006
தேரடியில் தேசிகனைக் கண்டேன்!
எனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது " வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட" என்று நக்கலடிப்பார். ரவுண் பக்கம் இருந்து படிக்க வரும் பெடியன்கள் ஒருமாதிரி ஏளனச் சிரிப்பை அள்ளி விடுவர். இந்து மதம் மீதும் தேவாரப் பதிகம் மீதும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இயல்பாகவே இருந்தது என்றாலும், என்னை மிகவும் கவர்ந்தது ஈழத்தில் தோன்றிய சித்தர்களின் குரு சீட மரபு. என் இந்த ஈடுபாடு தோன்றக் காரணம், இன்றுவரை நல்லூர்க்கந்தனையும், சிவதொண்டன் நிலையத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் தரிசித்து வரும் என் தந்தை, என் சிறுவயதில் என்னை நல்லூர்க் கோயிலுக்கு சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போகும் காலத்தில் வழி நெடுக யோகர் சுவாமிகளின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வருவது தான். கோயிலை அண்மிக்கும் போது அவர் வாய், யோகர் சுவாமிகளின் " நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி" என்ற பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடும். நல்லைக் கந்தனைத் தரிசித்துவிட்டு வெளியேறும் போது தேரடியோடு இருக்கும் செல்லப்பா சுவாமிகள் தியானமிருந்த மரத்தை மூன்று முறை சுற்றி "அப்பூ" என்று உளமுருகுவார், பின்னால் அவர் வேட்டியை பிடித்தபடி நான்.
பிறகு தானாகவே அவரின் சைக்கிள் சிவதொண்டன் நிலையத்துக்கு இட்டுச் செல்லும். சிவதொண்டன் நிலையத் தியான மண்டபம் நுழைந்து விட்டால் போதும் மயான அமைதி தவழும். அடியவர்கள் தம் காலை மடித்து நீண்டதொரு நிஷ்டையில் ஈடுபட்டிருப்பர்.
சைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது.
சித்தானைக் குட்டிச்சுவாமியின் வழி கடையிற்சுவாமிகளும், கடையிற்சுவாமி வழி, செல்லப்பாச் சுவாமிகளும், செல்லப்பாச் சுவாமிகள் வழி யோகர் சுவாமிகளுமாகத் தோன்றியதே இந்தச் சித்தர்களின் குருசீடப்பரம்பரை.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார். கடையிற்சுவாமிகள் யாழ்ப்பாண நகர் பெரிய கடை வீதி வழியே செல்லும் போது அக்கடைவீதி வாழ் வணிகர்கள் அவரைப் போற்றித் துதித்திருக்கின்றார்கள். "பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்" என்ற பாடலும் இவரையே குறித்து எழுதப்படிருக்கின்றது.
ஆத்மஜோதி என்ற ஈழத்து பக்தி சஞ்சிகையை முன்னர் நாவலப்பிட்டியிலிருந்து வெளியிட்டவர் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள். என் கல்லூரி நூலகத்தில் அதன் பிரதிகள் பலவற்றைப் படித்த அனுபவமும் உண்டு. இந்த ஆத்மஜோதி சஞ்சிகையில் "ஈழத்துச் சித்தர்கள்" என்ற கட்டுரையைத் தொடராக எழுதிப், பின்னர் நூலுருவில் வெளியிட்டவர் ஆத்மஜோதி முத்தையா. நான் என் சமய வகுப்பில் படித்ததும், இப்படியான கட்டுரைகள் மூலம் படித்ததுமாக என் ஞாபகக் கிடங்கில் வைத்த தகவல்களை வைத்தே இக்கட்டுரையை யாத்திருக்கின்றேன்.
சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள், இது செல்லப்பா சுவாமிகளுக்கு நிரம்பவே பொருந்தும். சாத எந்நேரமும் சிவ சிந்தையுடன் இருந்தாலும், தன்னை விடுப்புப் பார்க்கவரும் அன்பர்களைக் கண்டாற் போதும் கடும் கோபம் வந்துவிடும் இவருக்கு. தூஷணை வார்த்தைகளால் ஏசியவாறே துரத்துவார். இதனால் இவரின் அருமை அறியாத சாதாரணர்கள் இவரை "விசர் செல்லப்பா" என்ற அடைமொழியோடே அழைத்தனர். ஆனால் இந்தத் திட்டல்களையும் மீறி செல்லப்பனே பழி என்று கிடந்தால் ஞானோதய நன்மார்க்கம் கிட்டும். அதற்கு நல் உதாரணம் யோகர் சுவாமிகள்.
கிளிநொச்சி நீர்ப்பாசன இலாக்காவில் களஞ்சியக் காப்பாளராக இருந்த சதாசிவன் ஒருமுறை செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ணுறுகின்றார். செல்லப்பாவின் வழமையான அர்ச்சனைகள் அவருக்கும் கிடைக்கின்றன (யாரடா நீ, தேரடா உள்ளே ) ஆனால் அவரின் வாக்கியத்தில் பொதிந்திருந்த உன்னை நீ அறிந்து கொள் என்ற மகா உண்மையை உணர்ந்து அக்கணமே செல்லப்பாவின் சீடனாகினார். அவர் தான் பின்னாளில் சிவயோக சுவாமிகள் எனவும் யோகர் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர்.
யோகர்சுவாமிகளின் மகா வாக்கியங்களாக "எப்பவோ முடிந்த காரியம்", "ஒரு பொல்லாப்புமில்லை", "யார் அறிவார்" போன்றவை போற்றப்படுகின்றன. யோகர் சுவாமிகளால் சிவதொண்டன் நிலையம் என்ற ஆன்மீக மையமும், சிவதொண்டன் என்ற மாத இதழும் தோற்றம் பெற்று இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவரின் மகா சிந்தனைகள்
"நற்சிந்தனை" ஆக நூலுருப் பெற்றது.
உலகெலாம் பரந்துவாழும் இவர் பக்தர்கள் ஆன்மீக நிலையங்கள் அமைத்துக் குரு பூசைகளையும், நற்பணிகளையும் ஆற்றி வருகின்றார்கள்.
மேலதிக தகவலுக்கு சகோதரர் கனக சிறீதரனின் வலைப்பூவையும் பார்க்க:
http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm
சிவதொண்டன் நிலைய இணையத் தளம்
http://sivathondan.org/index.htm
கடந்த 2005 ஆம் வருடம் நான் யாழ் சென்றபோது, நல்லைக் கந்தன் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வழக்கம் போல் தேரடி வீதியிலுள்ள மரத்தடி சென்று மூன்று முறை சுற்றுகிறேன். பின் குருமணலில் பொத்தெனப் பதியும் என் கால்கள் வெயிற் சூட்டைக் களஞ்சியப்படுத்திய குருமணலின் வெம்மைத் தகிப்பால் சூடுபட்டு வேகமெடுக்கின்றது என் நடை. அப்போது தான் பார்க்கிறேன். இதுவரை ஒருமுறைகூட என் கண்ணில் அகப்படாது போனதொன்று அது.
தேர் முட்டிக்கு எதிர்த்தொலைவில் இருந்த ஒரு குருமடம் தான் அது. தகிக்கமுடியாத ஆவலில் அம்மடத்தின் உள்ளே நுளைந்ததும் தானாகவே என் கரங்கள் கூப்பி நிற்கின்றன.
செல்லப்பாச் சுவாமிகளின் குருமடம் தான் அது.அமைதியும் தவழ, ஊதுபத்தி வாசனை நிறைக்க சிறியதோர் இடத்தில் இருக்கின்றது இந்த ஆன்மீக பீடம். தரிசனை முடிந்து புதியதொரு உத்வேகம் தழுவ வீடு நோக்கிப் புறப்பட்டு, என் அப்பாவிடம் இக்குருமடம் சென்ற சேதியைச் சொல்லுகின்றேன். அவரும் அகமகிழ்கின்றார்.
செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,
"தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து".
இதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.
Friday, July 07, 2006
பிஞ்சுமனம் - குறும்படப்பார்வை
நேற்று "பிஞ்சு மனம்" என்ற மனதை நெகிழ வைக்கும் குறும்படத்தை நான் பார்க்க நேர்ந்தது. இதனை எனக்கு அறிமுகப்படுத்திய, இப்படத்தின் பின்னணியில் இருந்த என் நண்பர் அஜீவனுக்கும் என் நன்றிகள்.
பிஞ்சுமனம் என்ற இந்தக் குறும்படத்தில் பொதிந்துள்ள கருப்பொருள் நம் ஓவ்வொரு குடும்பத்திலும் நாம் சந்திப்பவை, குறிப்பாக ஒரு பிள்ளை பிறந்து அதற்கு மனதளவில் முழு முதிர்ச்சி பெற முன்பே, புதிதாக வந்து சேரும் தம்பியோ தங்கையோ இந்தப்பிள்ளைக்குத் தன் பெற்றோரால் கிடைக்கும் அன்பையும் அரவணைப்பையும் பங்கு போட வந்து விடுகின்றது. ஒரு பிள்ளைக்கு தன் பெற்றோர் தான் முழு உலகமுமே, எந்நேரமும் தன் பெற்றோரின், சிறப்பாகத் தன் தாயின் கவனம் தன்மேல் முழுமையாகப் பதிந்திருப்பதையே அது விரும்புகின்றது. தான் எதிர்பாக்கும் இந்த விஷயம் கிடைக்காத பட்சத்தில் பெரும் உளவியல் தாக்கத்துக்கு அது ஆளாகின்றது. இதுவே தொடர்ந்து கொண்டு போகும் போது ஒரு நிலையில், தன் பெற்றோரை வெறுத்து அது தன் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கும் நிலையும் வந்துவிடுகின்றது. இந்த உளவியற் சிக்கலின் ஆரம்பப படிநிலையை வெகு அழகாகக் காட்டுகின்றது பிஞ்சுமனம்.
குறும்படத்துக்கு அச்சாணி போன்றது நல்ல கமராக்கோணங்களும், திறமையான எடிட்டிங்கும். அதற்குச் சான்று இப்படம். கதையின் முக்கிய பாத்திரத்தையும், அது சொல்லும் சேதிகளையும் மையப்படுத்தி வெகு அழகாக நகர்கின்றது கமரா.
இப்படத்தில் வந்த காட்சிகளின் அழகியல் இப்படியிருக்கின்றது.
இந்தப் பிள்ளையின் சித்திரக்கீறல்களை சலனப்படுத்துகின்றது தன் தாய் தங்கையோடு விளையாடும் விளையாட்டு. பாருங்கள் அந்தக் காட்சியில் கமரா அந்தக் காட்சியை மையப்படுத்தி மெதுவாக நகர்கின்றது. தன் தாயின் கவனம் தன் மேல் பதியாத வேளை தன் அழகான சித்திரவேலையை வேண்டாவெறுப்பாக வட்டமிட்டு ஒதுக்குகின்றது. தாய் தங்கையின் விளையாட்டுக்குள் தானும் நுளைந்து வெறுப்புடன் திரும்புகின்றாள். தன் படுக்கையில் சாய்ந்து ஓரக்கண்ணால் தன் தாயுடன் இருக்கும் படத்தைப் பார்க்கின்றது. தன் தாயின் கவனம் இறுதியாகக் கிடைத்த திருப்தியில் அமைதியாகிறாள் அந்தச் சிறுமி.
சொல்ல வந்த செய்தியை மையப்படுத்தி, வேறெந்த அலட்டலில்லாத காட்சிகள்.அது போல் ஒரு குறும்படத்துக்கு மிக முக்கியமான உறுத்தல் இல்லாத இசை, கஞ்சத்தனமான வசனங்கள் இவையும் இப்படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. இங்கே கமரா தான் நிறையப் பேசியிருக்கிறது. ஒரு படத்தைப் பார்க்கின்றோம் என்ற உணர்வில்லாது, ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைத்திருந்து எடுத்த காட்சிகள் போல், நடித்த கலைஞர்கள் யதார்த்தமாகச் செய்திருக்கிறார்கள். "குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." என்ற கருப்பொருளில் வந்த பிஞ்சுமனம்( Tender heart ) என்ற குறும்படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்:
நடிப்பு: காவ்யா சிவன், சிறீதர் ஐயர், தீபா ராஜகோபால்
திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி,
சங்கரபாண்டி சொர்ணம்,
வெங்கடேஸ் கிருஸ்ணசாமி ,
எம்.பீ.சிவா,
மற்றும் அஜீவன்
எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால்
கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம்.
குறும்படத்தைப் பார்ப்பதற்கு இங்கே சுட்டவும்: பிஞ்சு மனம்
Thursday, July 06, 2006
மறக்கமுடியாத மலரக்கா
நான்கு வருடத்துக்கு முன் நான் செய்த வானொலி நிகழ்ச்சி ஒன்றின் பெயர் " காதலர் கீதங்கள்" வெறுமனே ஒப்புக்குப் பாடியவர் பெயரையும், பாடல் இடம் பெற்ற திரைப்படத்தையும் சொல்லிப் பாடல் ஒலிபரப்புவது எனக்குப் பிடிக்காத அம்சம். எனவே ஒவ்வொரு காதலர் கீதங்கள் நிகழ்ச்சிக்கும் ஓவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்பிட்டு, கவிஞர் மு.மேத்தா, அப்துல் ரகுமான், மற்றும் ஈழத்துக்கவிஞர்கள், அறியப்படாத தமிழ் நாட்டுக் கவிஞர்கள், ஹைக்கூ கவிதைகள் என்று இவர்களின் ஒவ்வொரு கவிதையிலும் நல்லதொரு இரண்டடி மட்டும் எடுத்து அந்த அடிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும், பின்னணியில் மென்மையான இசை வழங்கி நிகழ்ச்சிகளைப் படைத்து வந்தேன். புதிய பாணியில் கிடைத்த
பாடற்சாப்பாடு, நேயர்களைப் பொறுத்தவரை நல்விருந்தாக அமைந்தது.
ஓரு நாள் இதே போல் காதலர் கீதங்கள் நிகழ்ச்சியை நான் செய்து முடித்துவிட்டு வீடு திரும்ப எத்தனிக்கையில் வானொலிக் கலையகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.
" நீர் நல்ல நல்ல பாட்டுப் போடுகிறீர் ஐசே, பெட்டையள் கியூவில உம்மை மாப்பிளை கேக்க வரப்போகினம்" இப்படி சிரித்துக்கொண்டே பேசியது மறுமுனையில் ஒரு பெண்குரல். அந்தக் குரலுக்கு வயசு நாற்பதிற்கும் மேல் இருக்கும்.
" அப்பிடியே.......!பரவாயில்லை" என் வழமையான ட்ரேட் மார்க் அசட்டுச் சிரிப்புடன் நான்.
பிறகு அந்தப் பெண் நேயர் மிகுந்த உரிமை எடுத்துக்கொண்டு தொடர்ந்து வந்த காலத்தில் நான் படைத்த நிகழ்ச்சிகள் பற்றித் தன் அபிப்பிராயம் கூறுவதும்,
"எனக்கு உம்மட குரலைக் கேட்டால் என்ர தம்பி மாதிரி இருக்குதப்பா" என்று சொல்வதுமாகத் தன் தொலைபேசி நட்பை தொடர்ந்து வந்தார்.
ஒருநாள் தான் யார் என்பதைப் பற்றியும் எனக்குச் சொன்னார் இப்படி.
"எங்கட அப்பா, அம்மா நானும் என்ர 2 தம்பிமார், 2 சகோதரிகள் நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போதே அப்பா குடிச்சுக் குடிச்சு எல்லாத்தையும் அழிச்சுப் போட்டார். நான் தான் தம்பி, தங்கச்சிமாரை வளர்த்து ஆளாக்கவேண்டிய பொறுப்பு. சிங்கப்பூருக்குப் போய் வேலை செய்தன். அவங்களும் இப்ப கல்யாணம் கட்டி இப்ப யூரோப்பில, எனக்கு இனிக் கல்யாணம் என்னத்துக்கு எண்டு விட்டிட்டன். சகோதரங்கள் யுரோப்பில எண்டாலும், நான் ஒஸ்ரேலியா வந்திட்டன்," என்றார் மலர் என்ற அந்த நேயர்.
தொடர்ந்தகாலங்களிலும் அவர் என் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவதுமாக ஒருவருடமாகப் போன் மூலமே பேசிக்கொண்டார். வேடிக்கையாகப் பேசிக் கொண்டே
"எங்கையப்பா, உந்தப் பாட்டெல்லாம் எடுக்கிறனீர்? ,
நான் ஒரு நாளும் கேட்டதில்லை" என்று சீண்டுவார்.
இல்லையக்கா, எல்லாம் சீடியில தான் இருக்குது,
நான் இசையமைக்கிறதில்லை என்று சிரித்துச் சமாளிப்பேன்.
"போறபோக்கை பார்த்தால் நீரும் இசையமைப்பீர் போலக் கிடக்குது" என்பார் பிடிகொடுக்காமல்.
சிட்னியில் அவர் இருந்தாலும் ஒருமுறை கூட அவரை நேரே பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.
திடீரென்று ஆறு மாதங்களுக்கு மேலாக அவர் எனக்குப் போனில் பேசவேயில்லை. எனக்கு இது மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும், " ஏதாலும் வேலைப் பழு அவவுக்கு இருக்கும்" என்று நான் எனக்குள் சமாதானப்படுத்திக்கொண்டேன்.
ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஒரு நாள் வானொலிக் கலையகத்தில் இருந்தபோது தொலைபேசி அழைப்பொன்று வந்தது.
"தம்பி பிரபா, நான் மலரக்கா பேசிறன்" அவரின் குரலில் தளர்ச்சியிருந்தது.
"என்னக்கா குரல் ஒரு மாதிரியிருக்குது" இது நான்
"இல்லையப்பு, இவ்வளவு நாளும் நான் நல்லா உலைஞ்சு
போனன் கொஸ்பிடலும் வீடும் தான்" இது மலரக்கா.
"என்ன பெரிய வருத்தமோ?"
"கான்சர் எண்டு சொல்லுறாங்கள், ட்ரீட்மெண்ட் எடுத்துகொண்டிருக்கிறன்"
தளர்ச்சியான குரலில் மலரக்கா.
எனக்கு இடியே விழுந்தது போல இருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டாமல்
"உங்களுக்கு ஒண்டுமில்லையக்கா, சிட்னி முருகனிட்டை எல்லாத்தையும் விடுங்கோ,
இந்த நாட்டில உதெல்லாம் ஒரு வருத்தமே" என்றேன் நான். அப்போது என் குரலில் வலிமை இருந்தாலும் மனசு தளர்ந்து போயிருந்தது.
" அப்பிடியே சொல்லிறீர்? உண்மையாவே" என்று அப்பாவியாகக் கேட்டார் மலரக்கா.
" ஓண்டுக்கும் யோசியாமைப் பாட்டைக் கேளுங்கோ அக்கா, இண்டைக்கு நல்ல செலக்க்ஷன் கொண்டுவந்திருக்கிறன்" என்றேன் நான்.
" சரி தம்பி" என்றவாறே விடை பெற்றார் அவர்.
வேலை நிமித்தம் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் நான் அப்போது செல்ல வேண்டியிருந்தது.
மலரக்காவிற்கு நோய் முற்றி இப்போது ஆஸ்பத்திரியில் முழுதுமாக அட்மிட் ஆகிவிட்டாராம். எங்கள் வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர்களும் சில நேயர்களுமாக 2002 தீபாவளி தினத்தை மலர் அக்காவுடன் அவரின் வார்ட்டில் கொண்டாடினார்களாம். நகுலாக்கா என்ற மலரக்காவின் நண்பி தான் அவரோடு கூட இருந்து கவனித்தாராம். டாக்டர் ஏதேனும் சொல்லும் போது நகுலாக்கா அழுவாராம். மலரக்காவோ
" சும்மா இரும், இவ்வளவு நாளும் நான்
வீட்டுக்காரருக்காக வாழ்ந்திட்டன், இனித்தான் எனக்காக ,
நல்ல சந்தேசமாய் வாழப்போறன்,
பாரும் எனக்கு எல்லா நோயும் பறந்திடும்"
என்று சிரித்துக்கொண்டே சொல்வாராம். நாள் முற்ற முற்ற மலரக்காவைக் கான்சர் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக் கொண்டே வந்ததாம். நகுலாக்காவைச் சமாளிக்கத், தன் சக்தியெல்லாம் திரட்டித் தளர்ந்து போன தன் உடல் நிலையை நல்லது போலக் காட்ட நினைக்கும் மலர் அக்கா கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து போனார்.
நான் சீனாவிலிருந்து வந்து சேர்ந்த நாள் மறுதினம் நவம்பர் 12, 2002 காலை வானொலிப் போடுகிறேன், மலரக்கா இறந்த செய்தி வந்தது. தகனச் சாலைக்குச் செல்கிறேன். பெட்டிக்குள் மலரக்கா இருக்கிறார். முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். கண்மூடிப் படுத்திருக்கிறார். மலரக்கா, நான் வந்திருக்கிறேன் என்று மனதுக்குள் சொல்லிப் பார்க்கிறேன்.
எமது வானொலி நிலையம் செய்த முன் ஏற்பாட்டுப்படி தகனச்சாலையில் வைத்து அவர் உடல் எரிக்கப்படுவதற்கு முன் நாம் ஏற்பாடு செய்து கொண்டுபோன போர்டபிள் சீடி பிளேயரில் மலரக்காவிற்குப் பிடித்த பாடலான " மலரே மெளனமா" என்ற பாடல் ஒலிக்கின்றது. பாடல் ஒலித்து ஓய்ந்ததும் திரைக்குள் மறைகின்றது மலரக்காவின் சவப்பெட்டி.வந்த எல்லோரும் குமுறிக் குமுறி அழுகின்றார்கள். நான் வலிந்து இழுத்துக்கொண்டே என்னைக் கட்டுப்படுத்துகின்றேன், உடல் மட்டும் குலுங்குகின்றது.
வீட்டுக்கு வந்து குளியலறையைப் பூட்டிவிட்டு முகக்கண்ணாடியை வெறித்துப் பார்க்கின்றேன். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறுடுகின்றது. குமுறிக் குமுறி அழுகின்றேன் நான்.
அன்று அழுது தீர்த்துவிட்டேன், இன்றும் மலரக்காவை நினைத்து மனசுக்குள் மெளனமாக அழுகின்றேன். மலரக்கா என்ற நல்லதொரு நேயரை இழந்துவிட்ட சோகம் நான் வானொலி வாழ்வை விட்டுப் போகும் வரையும்,
ஏன்.... நான் சாகும் வரைக்கும் இருக்கும்.
(யாவும் உண்மையே)
Wednesday, July 05, 2006
வாடைக்காற்று
செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் "இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.
நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.
இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.
இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.
மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.
செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.
இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது "செம்மீன்" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
" எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்" என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.
நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். "ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.
இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து " கல்லுக்குள் ஈரம்" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.
வாடைக்காற்று திரைப்படமான போது
கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , "நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்" என்றாராம்.
நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்
திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)
"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.
சயந்தனுக்குக் கண்ணாலம்
பாரை மீனுக்கும் விள மீனுக்கும் கல்யாணம்...மன்னிக்கவும்
சயந்தனுக்கும் வெர்ஜினியாவுக்கும் கல்யாணம்
அந்த சுவிஸ் சனமும் சேருதைய்யா ஊர்கோலம்
எங்கள் சக வலி, மன்னிக்கவும் வலைப்பதிவாளர் சயந்தன் வருகிற யூலை 8 & 9ஆந் தேதிகளில் ( எதுக்குப்பா ரெண்டு நாள்) பொண்ணு இப்பவே, "கருத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்" பாட்டு பாடீட்டே திரியுதாம். நம்ம மாப்பிளை சயந்தன் "புது மாப்பிளைக்கு புது யோகமடா" பாட்டை விசிலடிச்சுக்கிட்டே சுவிஸ் நாட்டுக்குப் பறக்கிறாராம்.மேலதிக விபரங்களுக்கு "நிக்கோல் கிட்மன்" புகழ் வசந்தனின் வலைப்பதிவு இதோ:
சக வலைப்பதிவாளரின் திருமணம்
திருமண அனுபவம் பற்றித் திருமணமான ஆண் வலைப்பதிவாளரைடம் கேட்டபோது அவர் " என்னவோ போங்க, திருமணமான ஆணும் பலி ஆடும் ஒண்ணு தான்" என்றார் வெறுப்பாகக் சலித்துக்கொண்டே.
எல்லாரும் ஜோராக் கை தட்டி வாழ்த்துங்கப்பா இவங்களை.
Tuesday, July 04, 2006
ரச தந்திரம் - திரைப்பார்வை
முழுக்கதையையும் சொன்னால் VCD இல் கூட நீங்கள் பார்க்கமாட்டீர்கள்.
படத்தின் முதற்பாதியில் மீரா ஜாஸ்மின் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் , மறுபாதி மோகன்லால் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் காட்டியிருப்பது இந்தப் படத்தின் திரைக்கதையின் சிறப்பு. போரடிக்காமல் நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படமாக சத்தியன் அந்திக்காடு தந்திருப்பது அவரின் இயக்குனர் முத்திரையில் இன்னொரு முத்து.மலையாளப்படங்களில் கவனிக்கக் கூடிய இன்னொரு அம்சம் , ஒரே நடிகர் குழுவே பெரும்பாலான படங்களில் நடிப்பது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் தம் வித்தியாசமான பாத்திரத்தேர்வைச் செய்வது.
மோகன்லாலின் தச்சுத் தொழில்கூட முதலாளியாக வந்து ஆபாசம்/அடி உதையற்ற நல்லதொரு நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறர் இன்னசென்ட் , (இவர் சந்திரமுகி மூலப் பதிப்பான மணிச்சித்திர தாழு படத்தில் வடிவேலு பாத்திரத்தில் வந்தவர்) . இவர் ஒரு காட்சியில் சும்மா வந்து போனாலே தியேட்டர் கதிரைகள் சிரிப்பால் குலுங்குகின்றன.அதே போல் இன்னொரு நகைச்சுவை நடிகர் ஜெகதி சிறீக்குமார் , மீரா ஜாஸ்மினின் தாய்மாமனாக வந்து தமிழ் பேசிக் கலக்கல் நடிப்பை வழங்கும் போது எம். ஆர்.ராதாவை நினைவுபடுத்துகின்றார்.
படம் முழுக்கவே தனியான நகைச்சுவைக் காட்சி இல்லாது பெரும்பாலான நடிகர்களே கதையோட்டத்தோடு நகைச்சுவை நடிப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.கவியூர் பொன்னம்மாவிற்கு வழக்கமாக தமிழ் சினிமாவில் மனோரமா அதிகம் செய்யும் செண்டிமெண்ட் பாத்திரம். அநாதை வேலைக்காரியாக அல்லற்படுவதாகட்டும் , டீன் ஏஜ் பையனாக படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதாகட்டும், மீரா ஜாஸ்மின் பின்னியெடுக்கிறார். குறிப்பாக இவரின் ஆண் வேடம் எவ்வளவு இயல்பானது என்று தெரிந்து கொள்ள, மோகன் லால் கடைக்கு அனுப்பி சாமான் வாங்கிவரச் சொல்லிவிட்டு மாடியின் சாளரம் வழியே அவர் பார்க்கும் போது , இளம் பையன் போல நடை நடந்து கடையில் இருந்து தொங்கும் வாழைக்குலையில், ஒரு பழத்தை எடுத்து இலாவகமாக உரித்து மோகன்லாலைப் பார்த்தவாறே மிடுக்காகச் சாப்பிடும் போது , ஆஹா என்னவொரு இயல்பான நடிப்பு.
நம் தமிழ்சினிமா நாயகர்கள் 60 வயதிலும் உம்மா உம்மம்மா பாடிக்கொண்டும், வீர அரசியல் பேசிக்கொண்டும் இருக்கையில் மோகன்லால் போன்ற மலையாளத்து நாயகர்கள் வியப்பளிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இப்படமும் ஓர் சான்று. குறிப்பாக ஒரு காட்சியில் தன் நெருக்கடியான சூழ்நிலையிலும் அசட்டுச் சிரிப்பை வரவளைத்து நடிக்கும் காட்சியே நல்ல உதாரணம்.இவர், பாரதியின் " நிமிர்ந்த நன்னடையும்" என்ற கவிதையை மலையாளத்தமிழில் பேசும் போது நெருடலாக இருந்தாலும், மலையாளக் கதாபாத்திரமே அவ்வாறு பேசுவது போலக் காண்பிப்பதால் மன்னித்துவிடலாம்.
80 களில் தமிழ் சினிமா உலகில் இசைச்சக்கரவர்த்தியாக இருந்த இளையராஜா இப்போது கேரளாவின் சக்கரவர்த்தியாகி விட்டார் போலும். மனுஷர் பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி பின்னியெடுத்துவிட்டார். இந்தப்படத்துக்கு இளையராஜாவின் இசை இல்லை என்றால் என்ற கற்பனை வந்து பயம்கொள்ள வைக்குமளவிற்கு அவரின் ஈடுபாடு தெரிகிறது. பொன்னாவணிப் பாடம், பூ குங்குமப் பூ, ஆத்தங்கரையோரம், என்று எதையும் ஒதுக்கிவிட முடியாத அருமையான பாடல்கள். இன்னும் மலையாளப் பாடல் தேர்வில் முதல் 10 பாடல்களில் முதலாவாதாகவே பொன்னாவணிப் பாடம் பாடல் இருக்கிறது.Bangalore Landmark இல் இசைத்தட்டை வாங்கி என் காரில் ஒலிக்கவிட்டிருக்கிறேன். இன்னும் எடுக்கவே மனசு வரவில்லை.
இப்படப்பாடல்களை இணையத்தில் கேட்க
http://www.raaga.com/channels/malayalam/movie/M0000961.html
தந்தை மகன் பாசக்காட்சிகளும் தொடரும் பாடலும் மட்டும் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிகழிப்பு.மீரா ஜாஸ்மின் வேலை பார்க்கும் வீட்டின் அரை லூசு மூதாட்டியின் குறும்புகள், இதுவரை நான் எந்தப்படங்களிலும் காணாத பாத்திரம்.
இப்படத்தில் குறிப்பிடவேண்டிய இன்னொரு பாத்திரம் , பண்ணையாராக வந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பாத்திரம். பல படங்களில் இவரின் குணச்சித்திர நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக இவர் முக வீங்கியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. அடுத்த நாள் ஆலப்புழாவில் வைத்து பத்திரிகை பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன். நான் இப்படம் பார்த்த இதே நாள் (27/05/06) ஒடுவில் உன்னிகிருஷ்ணனும் இறந்துவிட்டாராம். அடூரின் தேசிய விருது பெற்ற "நிழல் கூத்து" திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகராக நடித்தமைக்கு விருதும் வாங்கியவர். ரச தந்திரம் நடிக்கும் போதே டயாலிஸிஸ் நோய் கண்டு சிரமப்பட்டே நடித்ததாக இயக்குனர் தன் அஞ்சலியில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் இவர் நாதஸ்வரத்தை பொழுது போக்காக வாசிக்கும் காட்சியிலேயே இந்த அற்புதக் கலைஞனின் சிறப்பு விளங்கும். இக்கட்டுரை மூலம் அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.
இப்படம் முழுமையான ஒரு மசாலாப் படமாக இருந்தாலும் நுட்பமான மனித உணர்வுகளை அது காட்டத்தவறவில்லை. தொடர்ந்து ஹொலிவூட் படங்களைப் பார்த்துப் பிரதிபண்ணும் தமிழ் சினிமா இயக்குனர் பலர் , கேரளாப் பக்கமும் தம் பார்வையைத் திருப்பினால் நல்ல பல திரைக்கதைகளைத் தமிழ் ரசிகனும் பார்க்கும் வாய்ப்பு அதிகப்படும். அதை விடுத்து படம் வெற்றி பெற வேறொரு தந்திரமும் அவர்கள் செய்யத் தேவையில்லை.படம் முடிந்து சாந்தி தியேட்டரை விட்டு வெளியேறுகின்றேன். நேரம் இரவு 9.15, ஆலப்புழாக் கடைத்தெருக்கள் இரவின் போர்வையில் தூங்கிக்கிடக்கின்றன.மூலப்பதிவு என் சகவலைப்பூவான உலாத்தல் இல் www.ulaathal.blogspot.comதமிழ்மண நட்சத்திரவாரத்துக்காகச் சமகாலத்தில் மீள்பதிவிடப்படுகிறது.