அப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலான போது அப்பாவுக்குக் கிடைத்தது தாவடி இந்துத் தமிழ்க் கலைவன் பாடசாலை, அம்மாவுக்கோ இணுவில் அமெரிக்கன் மிஷன் பாடசாலை. எனக்கும் கணக்காக ஆரம்பப் பள்ளியைத் தொடங்கக் கணக்காக இருந்தது அந்தக் காலம்.
தாவடியில் உள்ள தோட்டத்துக்கு இருட்டு மாறாத வெள்ளணவே போய் இரண்டு மணி நேரம் இறைப்பு அது இதெண்டு தோட்ட வேலை செய்து விட்டுப் பின்னர் பள்ளிக்கூடம் போய் விட்டு வந்து மீண்டும் தோட்டத்துக்குள் இறங்கும் அப்பாவின் வாழ்வியலோடு பொருந்த முடியவில்லை சின்னனுக்கு (அவ்வ் நான் தான்) . இளைய அண்ணர் தாவடிப் பள்ளிக் கூடம், கடைக்குட்டி நான் அம்மாவோட அமெரிக்கன் மிஷன் என்று முடிவானது.
அது சரி அமெரிக்கன் மிஷனுக்கும் சீனிப்புளியடிக்கும் என்ன சம்பந்தம் ஐயா என்று மூன்றாவது பந்தியைப் படிக்க முன் கடுப்பாகும் உங்களுக்கு ஒரு தகவல். இணுவில் அமெரிக்கன் மிஷன் பாடசாலை, அதற்குப் பக்கத்தில் இருக்கும் மக் லியட் வைத்தியசாலை, தள்ளி இருக்கிற கிறீஸ்தவ தேவாலயம் என்று ஆங்கிலேயரின் சுவடுகள் இணுவில் மண்ணில் இருந்தாலும் எங்கட சனம் இணுவில் ஆஸ்பத்திரி, சீனிப் புளியடி பள்ளிக் கூடம் என்று தங்கட பாட்டிய பெயர் மாற்றி அப்பிடியே கூப்பிடவும் தொடங்கி விட்டினம். வேதப் பள்ளிக்கூடம் என்றும் ஒரு சாரார் அழைப்பர். கிறீஸ்தவர்களை வேதக்காரர் என்றே எங்களூரில் அழைப்பதால் கிறீஸ்தவர் கட்டிய பள்ளிக் கூடம் வேதப் பள்ளிக்கூடம்.
இணுவில் அமெரிக்கன் மிஷன் பள்ளிக் கூட வளவுக்குள் பென்னம் பெரிய சீனிப் புளி மரம் இருந்தது. அதுக்குக் கீழே இருக்கிற ஒரு பத்தடி பரப்பளவுக்குள்ள உள்ள நிலம் தான் எங்கட விளையாட்டு மைதானம், வெளியில கே.கே.எஸ் றோட்டு. ஆரம்பப் பள்ளிக்கூடம் என்றாலும் வகுப்பு நேரத்தைத் தாண்டிய பாடசாலை நிர்வாகக் கருமங்கள் இருக்கும் என்பதால் நானும் என் சக வயதில் இருந்த கந்த ரூபனும் (அருமை மணி ரீச்சரின் மகன்) அந்தப் புளியடிக்குக் கீழே நின்று தான் விளையாடுவோம். பள்ளிக்கூடம் விட்டும் போக மனமில்லாமல் அங்கேயே சுத்திக் கொண்டிருக்கும் வாலுகளும் சேர்ந்து கொள்ளும். சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டுக் கேள்வி இல்லாமல்
டப் டப் பென்று சுடச் சுடப் புளியம் பழங்கள் தலையில் வந்து விழும். புளியம் பழத்தை மெல்லப் பொறுக்கி, பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் அதை மெல்ல நொருக்கினால் பொன்னிறத்தில் உருண்டு திரண்ட களி சிப்பிக்குள் முத்துப் போலப் பதுங்கிக் கொண்டிருக்கும். அதை அப்படியே எடுத்து வாய்க்குள் போட்டால் முன் கூட்டியே தயாராகி வெள்ளப் பெருக்காக இருக்கும் உமிழ் நீருக்குள் ஜலக்கிரீடை செய்யும் இந்தப் புளியம் பழம். "புளியம் பழம் சாப்பிடாதேங்கோ வாய் பழுதாப் போகும் வயித்துக்குக் கூடாது" என்று உறுக்குவார் அம்மா. நானும் கந்தரூபனும் சின்னாக்கள் இருக்கிற கதிரைகளை அடுக்கி யாழ்தேவி விளையாட்டு விளையாடுவம்.
இன்று அந்தச் சீனிப் புளியமரம் அடையாளம் பெயர்ந்து போய் விட்டது.
அம்மா "வாங்கோ" "போங்கோ" என்று மரியாதையாகத் தான் எங்களோடு பேசுவார் படிக்கிற பிள்ளைகளோடும் அப்படித் தான். அரிவரி வகுப்பிலேயே அம்மா இருந்ததால் அவரைத் தாண்டிப் போகாதவர்கள் எண்பதுகளில் படிச்சவர்களில் குறைவு. பிள்ளைகளை நீ நான் என்று கூப்பிடப் பிடாது, கை நீட்டக் கூடாது என்று வீட்டில் காட்டும் மரியாதையைப் பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்கும் காட்டினதால் தவமணி ரீச்சரின்ர வகுப்பில தான் இருப்பேன் என்று ஓடி வந்து பின் கதிரையில் இருந்தவர்களும் உண்டு.
"ரீச்சர் உங்கட வகுப்பில என்ர பிள்ளையைச் சேர்த்து விடுறியளோ" என்றெல்லாம் பெற்றோரிடமிருந்து மனுக்கள் வரும்.
பல்லாண்டுக்குப் பிறகு அம்மாவை இனம் கண்டு
ரீச்சர் என்று கண் கலங்கிக் கொண்டே அழைத்தவரையும் கண்டதுண்டு. "மீண்டும் பள்ளிக்குப் போகலாம்"என்ற நிகழ்வு பள்ளிக்கூடத்தில் நடந்ததாகவும் தன்னட்டைப் படிச்ச பிள்ளையள் கெளரவிச்சதாகவும் பெருமை பறக்க இம்முறை என் தாயகப் பயணத்தில் சொல்லிக் கொண்டே அவர்கள் கொடுத்த ஞாபகச் சின்னம் தேநீர்க் குவளையையும் காட்டினார்
அம்மா.
சின்னப் பள்ளிக்கூடம் என்பதால் மட்டுமல்ல அதையும் தாண்டிய பந்தம் இருந்ததால் எல்லா ஆசிரியர்களுக்கும் சொந்த வீட்டில் பிறந்தவர்கள் போல அண்ணை, அக்கா என்று உறவுமுறையோடு கூப்பிடுவார்கள்.
"ஹலோ மாஸ்டர்" என்னைப் பார்த்துக் கூப்பிடுவார் அப்பாவோடு தாவடிப் பாடசாலையில் படிப்பிச்ச கம்பீரமான உடற் கட்டும் அந்தக் காலத்திலேயே சட்டையை உள்ளுக்குப் போட்டு லோங்க்ஸ் போட்டு ஸ்ரைலாகச் சைக்கிளில் பயணிக்கும் சண்முகலிங்கம் மாஸ்டர். அவரைத் தாண்டி மிச்ச எல்லோருக்கும் "நீங்கள் தவமணி ரீச்சர்ர மகன் தானே?"
ஆசிரியையின் மகன் என்ற தகுதியோடு இருப்பது கிட்டத்தட்ட அமைச்சரின் மகன் என்ற அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கு நிகரானது. எல்லா ஆசிரியர்களது கனிவுப் பார்வையிலும் ஐசிங் சேர்த்திருக்கும். அந்த சுகத்தோடு இருந்த எனக்கு ஆறாம் வகுப்பில் இருந்து கொக்குவில் இந்துப் பள்ளிக்கூடம் மாறிய போது மற்றைய உலகத்தைக் காட்டியது மறக்க முடியாது. அங்கு நான் பத்தோடு பதினொன்று.
பிள்ளைகளின் பிறந்த நாளுக்குக் கிடைக்கும் கேக், சொக்கிளேற்று, ஆசிரியர்களின் பிரியாவிடை விருந்துப் பலகாரங்கள், அந்த நாளில் கெயார் நிறுவனம் கொடுத்த விசுக்கோத்துகளில் கிடைக்கும் பங்கு இதெல்லாம் அம்மா பொத்திப் பொத்தி எனக்குத் தருவார்.
பள்ளிக்கூடம் முடிந்ததும் இணுவிலில் இருந்து கோண்டாவில் காண கே.கே.எஸ் றோட்டில் அம்மா, நேசமலர் ரீச்சர், அருமை மணி ரீச்சர், கந்தரூபன், நான் இவர்களோடு ஒரு கூட்டம் பிள்ளைகளும் கூட வருவார்கள். பள்ளிக் கூடம் போகும் போதும் வரும் போதும் அம்மா ஆக்களோடு தம் பிள்ளைகளும் பொறுப்பாக வரட்டும் என்று பெற்றோர் செய்த காரியம் அது.
முதலாம் வகுப்பெடுத்த ஆயில்யம் ரீச்சர் அவரின் கணவரின் வேலை நிமித்தம் ஜேர்மனி போய் விட்டார். அங்கேயும் தமிழ்ப் பள்ளி நடத்துகிறார்களாம்.
பாக்கியம் ரீச்சர் இரண்டாம் வகுப்பு படிப்பிச்சவ, அசல் ஒளவைப் பாட்டி மாதிரித் தோற்றம்.
செல்வநாயகம் மாஸ்டரின் கண்களைச் சுற்றி கறுத்த மை போட்ட போல இருக்கும், பூந்திப் பூந்திப் பார்த்து விட்டு "அட நீங்களே" என்பார். மாணவர்களை வெருட்டும் போதும் கீழ்த்தாடைப் பற்கள் மட்டும் நறுவும்.
தங்கேஸ்வரி அக்கா என்று அம்மா சொந்தம் கொண்டாடியவர் பள்ளிக் கூடம் தாண்டியும் வீட்டுக்கு அடிக்கடி வரும் எங்கட உறவினர் என்ற உரிமை இருக்கும். இடுப்பைப் பிடித்துக் கொண்டு அவர் சிரித்தாலே ஏதோ முத்துகள் பொல பொலவென்று கொட்டியது போல இருக்கும்.
பரமேஸ்வரி ரீச்சர் இன்னொரு அக்கா, செல்லம்மா ரீச்சரை அடிக்கடி மடத்துவாசல் பிள்ளையாரடியில் அடிக்கடி காணுவம், நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை. அவவும் அம்மாவுக்கு ஊடன் பிறவா அக்கா.
செல்லத்துரை மாஸ்டரின் நீட்டி இழுத்த தலை வகிடு ஏதோ தலைக்கவசம் அணிந்தது போல இருக்கும். வாயெல்லாம் வெற்றிலைக் காவி. அவர் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.
தட்சணாமூர்த்தி வாத்தியார் கடும் கோபக்காரர். ஆனால் அண்ணை என்று அம்மா கூப்பிடுவதும் தங்கச்சி என்று அவர் பாசத்தைப் பொழிவதுமாக பாசமலர் படம் போல இருக்கும்.
"அது பாவம் செத்துப் போச்சுது" என்று அம்மா கவலையோடு சொன்னார் ஒருமுறை அவரைப் பற்றி நான் கேட்ட போது.
கணபதிபிள்ளை மாஸ்ரர் எங்கட அப்பா போல தோட்டக்காரர் சக ஆசிரியர்.
மூண்டும் பெடியளாப் பிறந்திட்டுது என்று கிட்டத்தட்ட என்னைப் பெண் போலவே வைத்திருந்தார் அம்மா. அதனாலோ என்னமோ சண்முகப்பிரியா ரீச்சரிடம் சங்கீதம் எல்லாம் படிச்சிருக்கிறன்.
அப்போது மலையகத்தில் இருந்து இடம் மாறினார்கள் ஞானசேகரம் மாஸ்ரரும் அவரின் மனைவியும். மூன்றாம் வகுப்பு கணிதப் புத்தகத்துக்கெல்லாம் உறை போட்டுத் தருவார் திருமதி.ஞானசேகரம் ரீச்சர்.
ஞானசேகரம் மாஸ்ரர் தான் ஒழுக்கத்தை எனக்கு முதலில் பாடமெடுத்தது. அவர் எங்கள் வகுப்பாசிரியர் ஆனதும் ஒழுக்கம் தான் முதல் பாடம். ஒருமுறை "வாத்திமார்" என்று வாய் தவறிச் சொல்லி விட்டேன் என்று என்னை இழுத்துப் பிடித்து என் கையாலேயே என் கன்னங்களில் அடிக்க வைத்துத் தண்டித்தார். ஆனால் "என்ர பிள்ளையள்" என்று தன் வகுப்புப் பிள்ளைகளை விட்டுக் கொடார். ஒருமுறை அவர் என்னக் கோலியாத் ஆக நடிக்கச் சொல்லி தாவீது (நடித்தவன் சுதா) கல்லெறிய அது என் நெற்றியில் பட்டு விழ வேண்டும் என்று நடிப்புச் சொல்லிக் கொடுக்க நான் அந்தக்காலத்து வில்லன் சத்தியராஜ் நடிப்பெல்லாம் போட்டு அவரிடம் கை தட்டு வாங்கியிருக்கிறேன்.
ஞானசேகரம் மாஸ்டரின் மகன் ஞானசொரூபன் பின்னாளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து பின் இந்திய இராணுவத்துடனான மோதலில் வீர மரணம் அடைந்தவர்.
குணரத்தினம் மாஸ்ரர் கல கலப்பான பேர்வழி. ஒருமுறை சுற்றாடல் பாடப் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு கேள்வி மலேரியாவைப் பரப்பும் நுளம்பின் பெயரென்ன?
ஒரு மாணவன் அந்தப் பக்கமாகப் போன குணரத்தினம் மாஸ்ரரைச் சுறண்டிக் கேட்டான்.
"நோ ப்ளீஸ்" என்று சூசகமாகச் சொல்லி விட்டு அவர் கடந்ததும் தான் அவனுக்கு உறைத்தது மடமடவென்று விடையை எழுதினான் "அனோபிலஸ்" என்று 😀
செல்லைய்யா மிஸ் தான் ஆங்கில வகுப்பெடுப்பார். ரோல் ப்ளே எல்லாம் நடிக்க வைத்து அழகு பார்த்தவர். அவரோடு இன்னொரு ரீச்சர் ஆங்கிலப் பாடம் எடுத்தவர் பெயர் மறந்து விட்டது கடலோரக் கவிதைகள் ரேகா மாதிரி இருப்பார். அவர் கிறீஸ்தவர் என்பதால் கிறீஸ்தவ மாணவர்களுக்குக் கிறீஸ்தவப் பாடமும் போதித்தார்.
மக்லியட் வைத்தியசாலை வளாகத்தில் இருந்த கிறீஸ்தவப் பிள்ளைகள் சீனிப்புளியடி பாடசாலையில் படித்தார்கள். அவர்கள் கண் பார்வை இழந்தவர்கள், கால் ஊனமுற்றவர்கள் என்பதால் ஒரு வானில் ஏற்றி வந்து விடுவார்கள். அவர்களில் ஒருவன் என் கூட்டாளி விஜயராஜா கால் இரண்டும் வளைந்தவன் "பிரபு பிரபு" என்று பாசத்தைக் கொட்டுவான் . அவன் இப்ப எங்கிருக்கிறானோ தெரியவில்லை.
மண் சுமந்த மேனியர் நாடகம், உள்ளூர் உற்பத்திப் பொருட்காட்சி எல்லாம் நடந்திருக்கு எங்கட பள்ளிக்கூடத்தில. திருகோணமலைக்கெல்லாம் நாடக விழாவுக்குப் போயிருக்கிறோம் ஆனால் நான் எதிலும் நடிக்கவில்லை.
சோதிப்பெருமாள் அவர்கள் தான் நாங்கள் படிக்கும் காலத்தில் அதிபர். அவரையும் அண்ணை என்றே அழைப்பார் அம்மா. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும், சுறுட்டுமாக இருப்பார். அதிபர் அறை என்று பேர் தான் கோயில் மாதிரி தங்கட பாட்டில உள்ளுக்கு வந்து போவார்கள் மாணவர்கள்.
செந்தில் குமரன், சுதாகரன், இளங்குமாரன் என்று அதிபர் சோதிப்பெருமாள் அவர்களின் உறவினர் பிள்ளைகள் என் சக பாடிகள். பள்ளிக்கூடத்தில் குழுச் சண்டை என்றால் ஒரு பக்கம் நானும் இளங்குமரனும் மற்றப் பக்கம் மற்ற இரண்டு பேரும்.
சண்டை என்றால் பெருஞ்சண்டை இல்லை நுள்ளுறது, கையை இழுக்கிறது.
அமெரிக்க மிஷன் என்ற வேதப் பாடசாலை என்ற சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தைச் சுற்றித் தோட்டக்காரர்கள், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருந்ததால் அது கலவன் பாடசாலை என்பதில் சமத்துவமாக இயங்கியது. இன்று வரை என்னைச் சீர்தூக்கிப் பார்த்து எளிமையாக வாழப் பழக்கியது. அழகி காலத்துச் சின்னஞ் சிறு வயசுக் காதல் வந்து போனதும் இங்கே தான்.
நான் படிக்கும் காலத்தில் டொக்டராக, இஞ்சினியராக எல்லாம் வரவேண்டுமென்று கனவு பட்டதில்லை.!இருந்த ஒரு கனவு ஆசிரியராக வர வேண்டும் என்று. அதுக்குக் காரணம் சீனிப்புளியடி பள்ளிக்கூடமும் அம்மாவும்.
இன்னொரு கனவு ஒரு றெக்கோர்டிங் பார் வைக்கோணும். அதுக்குக் காரணம் அந்த நாளைய றெக்கோர்டிங் பார்களும் இளையராஜாவும்.
இன்று நான் IT முகாமைத்துவ வேலையில் இருந்தாலும் தமிழ்ப் பாடசாலையில் மாணவர்களுக்கான வழிகாட்டல் வகுப்புகள் எடுக்கிறேன் அது என் ஆசிரியக் கனவு, வானொலியில் நிகழ்ச்சி செய்கிறேன் அது என் றெக்கோர்டிங் பார் கனவு. பார்த்தியளே ஆண்டவன் எங்க கொண்டு வந்து விட்டிருக்கிறார் 😀
பொது இடங்களில் என்னையும் மனைவியையும் புதியவர் யாராவது சந்தித்தால் கேட்கும் சம்பிரதாயபூர்வமான கேள்வி "எங்க படிச்சனியள்"
மனைவியின் பதில் : முதல்ல குட் ஷெப்பர்ட்டில பிறகு ஹிண்டு லேடீசில
என் பதில் : கொக்குவில் இந்துவில படிச்சனான் அதுக்கு முன்னம் "சீனிப்புளியடி"
இதுதாங்க வாழ்க்கை 😀