இதற்குச் சில வாரங்களுக்கு முன்பு,
சாதாரணர்கள் வாழும் இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிங்களக் கிராமம் அது. கண் தெரியாத படு கிழவர் வன்னிஹாமி, கொட்டில் குடிசை, திருமணத்துக்காகக் காத்திருக்கும் கடைசி மகள் சுனந்தாவுக்கு வழக்கம் போல ஒரு காலைப் பொழுது விடிகின்றது.
அந்த ஊரின் சந்து பொந்துக்குள்ளால் மெல்ல ஊர்ந்து வருகின்றது ஒரு இராணுவ வண்டி, அதன் மேலே இலங்கைக் கொடி போர்த்திய ஒரு சவப்பெட்டி. சுனந்தாவால் அந்தச் சூழ்நிலையை ஊகிக்க முடிகின்றது, "அய்யேஏஏஏ" என்று அலறியடித்துக் கொண்டு அந்தச் சவப்பெட்டி சுமந்து வரும் கூட்டத்தை நோக்கி ஓடுகிறாள் அவள். மெல்ல மெல்ல ஊர்ச்சனங்கள் வன்னிஹாமியின் வீட்டில் மையம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.


"Purahanda Kaluwara" (Death on A Full Moon Day) என்ற திரைப்படம் 1997 ஆம் ஆண்டு பிரசன்ன விதானகே என்ற சிங்கள சினிமா இயக்குனரால் எழுதி இயக்கப்பட்ட இத்திரைப்படம் NHK எனும் ஜப்பானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பில் உருவானது. Grand Prix , Amiens Film Festival இல் பரிசு, சிங்கப்பூர் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பரிசு, FIPRESCI எனும் சிறீலங்கவின் விமர்சகர்கள் கூட்டின் விருது, SIGNIS film awards இன் சிறந்த இயக்குனருக்கான விருது, International Critic's Award, NETPAC Award - Amiens இவையெல்லாம் இந்தத் திரைப்படத்துக்காகக் கிடைத்த விருதுகள். பிரசன்ன விதானகே, சிங்கள சினிமாவுலகில் நம்பிகை தரும் ஒரு படைப்பாளி என்பதற்கு அவர் இதுவரை கொடுத்துள்ள திரைப்படைப்புக்களே சான்று பகரும். பிரபலமான ஹிந்தி, தமிழ்ப்பாடல்களை உல்டா செய்தும், நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமான கோமாளித்தனங்கள் செய்தும் தொன்று தொட்டுப் புனையப்படும் சிங்கள சினிமாவில் ஒரு சில பிரசன்ன விதானகே போன்றோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். முன்னவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். இந்தத் திரைப்படம் சந்திரிகா காலத்தில் சிறீலங்கா அரசினால் தடைசெய்யப்பட்டு வெளிவரமுடியாது கிடப்பில் இருந்த படம்.

ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கச்சிதமாக இந்தப் படைப்பினைச் செதுக்கியிருக்கின்றது. கூடவே மகிந்தபாலவின் ஒளிப்பதிவு சிங்களக் கிராமத்தினை உள்ளதை உள்ளவாறாகக் காட்டுவதை மட்டுமே செய்கின்றது, செயற்கைச் சாயங்கள் இல்லாமல்.
எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அமைதியான, அழகான கிராமம். தன்னுடைய தேவைகளோடு மட்டுமே வாழப்பழகிக் கொண்ட அந்த பூமியைக் கூட இந்த இனவாத யுத்தம் விட்டுவைக்கவில்லை என்பதை விமர்சன ரீதியாக இல்லாமல் வெறும் காட்சிகளினூடே காட்டிச் செல்கின்றது இப்படம். இந்தப் படம் யார் பக்கம் என்பதை விட, உண்மையின் பக்கம் என்பதே பெருத்தமான குறியீடாக அமைந்து நிற்கின்றது.
வெகு நிதானமாக நடைபோடும் கிழவர் வன்னிஹாமியை போலவே நிதானமாக ஆனால் ஆழமான காட்சியமைப்புக்களோடு விரியும் இக்காவியம் முடிவில் வன்னிஹாமி தன்னை நிரூபிக்கும் காட்சியில் நிமிர்ந்து நிற்கின்றது, அவரைப் போலவே.

நிலங்களை ஆக்கிரமிப்பது, கொடியேற்றுவது போன்ற குறுகியகாலக் களமுனை வெற்றிகள் தமது அரசியல் நாற்காலிகளுக்கு முண்டு கொடுக்கும் கற்களாக, ஆனால் அதன் பின்னே இருக்கும் குருதிக்குளிப்பும், பலியெடுப்புக்களும் கரிசனையற்றவையாக.
எங்கோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் சாதாரண இளைஞன் தன் குடும்பத்தின் பொருளாதார விருத்திக்காகத் தன்னையே பலிகடாவாக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இந்த நிர்ப்பந்ததின் அடிப்படையே யுத்தம் விதைத்த பொருளாதாரச் சீர்க்கேடு தானே.

வன்னிஹாமி என்று ஒருவரல்ல, பல்லாயிரம் குடும்பங்களின் நிலை இதுதான். இருந்தால் சில ஆயிரங்கள், இறந்தால் ஒரு லட்சம் என்ற விதியோடு வேள்விக்குப் பலிகொடுக்க பலியாடுகள் சிப்பாய்களாக. தம் பிள்ளை மீண்டும் உயிரோடு வருவான் என்ற நினைப்பில் காத்திருக்கின்றார்கள். மிஞ்சுவது வாழைக் குத்திகளை நிரப்பி, சடலம் என்ற போர்வையில் காத்திருக்கும் ஏமாற்றங்கள்.
எதிர்பாராதவிதமாக எனக்கு மின்னஞ்சல் மூலம் யாழில் இருந்து ஒரு நண்பர் அறிமுகமாகியிருந்தார். ஒரு சமயம் யாழில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்த சம்பாஷணை வந்தது. "ஏன் நீங்கள் வெளிநாடு செல்லக்கூடாது" என்று கேட்டேன். "அதெல்லாம் ஓரளவுக்காவது வசதி உள்ளவைக்கு வாய்க்கும் விஷயமெல்லோ அண்ணா" என்றார் அவர்.
என்று செத்துத் தொலையும் இந்தப் பாழாய்போன யுத்தம்?
