முன்பொரு காலகட்டத்திலே இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு துறைசார் வல்லுனர்கள் பலர் தற்காலிகமான தங்கலில் வந்து தம் தொழில் ரீதியான கற்கையைப் புகட்டிவந்தனர். இவர்களில் ஆசிரியர்கள் (உ-ம்: சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற சீதா ராமசாஸ்திரிகள், ராமசாமி சர்மா) எழுத்தாளர்கள் ( உ-ம்: வீரகேசரி ஹரன்), விஞ்ஞானிகள் ( உ-ம்: டாக்டர் கோவூர்), சங்கீத விற்பன்னர்கள் (உ-ம்: மணி பாகவதர்) என்று பல்துறை விற்பன்னர்கள் தம் ஆளுமையைப் புகட்டும் களமாக அக்காலகட்டம் விளங்கியது. இவர்கள் வரிசையில் இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்தார் பிரபல வயலின் வித்துவான் லஷ்மி நாராயணா, கூடவே சங்கீதக்கலைஞரான இவர் மனைவி சீதாலஷ்மி. லஷ்மி நாராயணா தன் விரிவுரைகளை யாழ்ப்பாணக்கல்லூரியில் நிகழ்த்திவந்தார்.
லஷ்மி நாராயணா, சீதாலஷ்மி என்ற சங்கீதத் தம்பதிகளுக்கு மகனாக வைத்யநாதன் 1942 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவருக்கு பிருகந் நாயகி, சுப்பு லஷ்மி, கான சரஸ்வதி, சுப்ரமணியம், ஷங்கர் என்று உடன்பிறந்தோர் இருந்தார்கள். தம் பெற்றோர் மட்டுமன்றி தன் உடன்பிறப்புக்களும் இசையை மேலோங்கக் கற்றுத் தேர்ச்சிபெற்ற சூழலில் தான் வைத்யநாதனின் தொட்டில் தொடங்கிய பிறப்பும் வளர்ப்பும் இருந்தது. ஈழத்தில் வைத்யநாதனின் சிறுபிராயத் தகவல்களைக் கேட்டறிய, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றுத் தற்போது சிட்னியில் வாழ்ந்துவரும் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் தந்த தகவல்களின் படி, வைத்யநாதனின் சகோதரிகள் பிருகந் நாயகி, சுப்புலக்ஷ்மி ஆகியோர் இலங்கை வானொலியில் அன்றைய காலகட்டத்தில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும், வைத்ய நாதனின் இளமைப் படிப்பு அவர் வாழ்ந்த நுகேகொட என்ற இடத்தில் இருந்த நுகேகொட மகாவித்தியாயலத்தில் அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் கல்வி ஒலிபரப்புப் பணிப்பாளராக இருந்த காலகட்டத்தில் அகில இலங்கை ரீதியான வெண்பாப் போட்டிகள் நடைபெற்றதாகவும், அதில் 10 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட மாணவர் பிரிவில் 13 வயசான வைத்யநாதனும் பங்குபெற்றியதாகவும் குறிப்பிட்டார். இந்த வெண்பாப் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்கள் பலர் இன்று நாடறிந்த இசைக்கலைஞர்களாகப் புகழ்பெற்றதையும் குறிப்பிடத்தவறவில்லை. அவர்களில் அமரர் எஸ்.கே.பரராஜ சிங்கம், திருமதி குலபூஷணி கல்யாணராமன் , லண்டனின் வாழும் திருமதி மாதினி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
எல்.வைத்யநாதனின் இளமைப் பராயம் ஈழத்தில் கழிந்தது. தொடர்ந்து தந்தை வழியில் தனயனும் தன் இசையறிவை விருத்தி செய்துகொண்டார். இவருக்கு செஞ்சு லஷ்மி என்ற பெண்மணி வாழ்க்கைத்துணையாக வந்து சேர, எல்.வி.கணேஷன், எல்.வி.முத்துக்குமாரசுவாமி ஆகிய புதல்வர்களை பிறந்தனர். இசையுலகில் இவரின் சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிக் கெளரவித்தது.
எல்.வைத்திய நாதன், எல்.சுப்ரமணியம், எல்.ஷங்கர் சகோதரர்கள் music trio என்று போற்றிப் புகழும் அளவிற்கு வயலின் வாத்திய வாசிப்பில் மேதைகளாக இருந்தார்கள். பல பொது மேடைகளில் தனித்தும் சகோதரர்களோடும் தன் இசைப்பணியாற்றிவந்தார். பல இசைத்தொகுப்புப் பேழைகளையும் இவர் உருவாக்கி அளித்தார்.
சகோதரர் எல்.சுப்ரமணியம்
கடைசிச் சகோதரர் ஷங்கர்
சகோதரி சுப்புலஷ்மியின் மகள்கள் எம்.லதா, எம். நந்தினி
எல்.வைத்யநாதனின் இசைத் தொகுப்புக்கள் சில
இசைத்துறையில் தன் தந்தை லஷ்மி நாராயணாவைக் குருவாகப் பெற்ற இவர், சினிமாத்துறையில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக இணைந்து கொண்டார். இதன்மூலம் தனித்த இசைரசிகர்களைக் கடந்து திரையிசை ரசிகர்களையும் எல்.வைத்யநாதனின் இசை சென்றடைந்தது. வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தில் "அருள் வடிவே" என்ற அருமையான பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். ஒருகாலகட்டத்து இலங்கை வானொலி ரசிகர்களின் காதில் தேனாய் ஒலித்த பாடல் இது.
பாடலைக் கேட்க
ஏழாவது மனிதனைத் தொடர்ந்து எல்.வைத்யநாதனை அடையாளம் காட்டிய பல படங்கள் ஏதோ ஒருவிதத்தில் எதிர்பாராமல் தனித்துவமான படங்களாக அமைந்துவிட்டன. உதாரணமாக சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமலஹாசன் நாயகனாகத் தோன்றிய பேசும் படம் , வசனங்கள் இல்லாத படமாக இசைமட்டுமே ஒலிப்பொருளாக அமைந்திருந்தது. இயக்குனர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா இல்லாமல் படங்களை இயக்கமாட்டார் என்பதற்கு விதிவிலக்காய் அமைந்த படங்களில் ஒன்று சலீல் செளத்திரி இசையில் வந்த "அழியாத கோலங்கள்", மற்றையது எல்.வைத்யநாதன் இசையில் வந்த தேசியவிருதுப் படமான "சந்தியா ராகம்". இந்திரா பார்த்தசாரதியில் உச்சிவெயில் நவீனம் ஜெயபாரதியால் "மறுபக்கம்" (தேசியவிருதுப் படம்) என்று படமாக்கப்பட்ட போது அதற்கும் இசை இவரே. யூகி சேதுவின் "கவிதை பாட நேரமில்லை" படமும சொல்லிவைக்கலாம்.
பிரபல இந்திய எழுத்தாளர் ஆர்.கே நாராயணன் புனைவுக்கிராமம் ஒன்றை வைத்து எழுதிய " மால்குடி டேஸ்" என்ற புதினத்தைக் கன்னடத்தின் பிரபல இயக்குனர் சங்கர் நாக் இயக்கி , எல்.வைத்யநாதனின் இசையில் தூர்தர்ஷனில் தொடராக அரங்கேற்றினார்.
மணிரத்னத்தின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி இயக்கி மணிரத்னமே ஆலயம் நிறுவனம் பெயரில் தயாரித்த "தசரதன்" திரைப்படத்திற்கும் இவர் இசை வழங்கியிருந்தார்.
தமிழீழ எழுச்சிப்பாடல்களுக்கு இந்திய இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் போது தேவேந்திரன், போன்றோரோடு எ.வைத்ய நாதனின் இசையிலும் பாடல்கள் இருக்கின்றன. "பாசறைப்பாடல்கள்" போன்ற பாடற்தொகுப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
கி.ராஜநாராயணனின் நாவல், அம்சன் குமாரின் இயக்கத்தில் "ஒருத்தி" என்ற திரைப்படமான போதும், தெலுங்கில் கே.என்.டி.சாஸ்திரியின் இயக்கத்தில் வெளிவந்து சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருது பெற்ற "தில்லாடனம்" (thillaadanam)திரைப்படத்திற்கும், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கத்தில் வந்த "Current", கன்னடப் படவுலகின் தலைசிறந்த இயக்குனர் கிர்ஷ் காசரவள்ளியின் இயக்கத்தில் வந்த "Ek Ghar" ,மற்றும் கிரிஷின் இயக்கத்தில் வந்து இந்திய சினிமாவின் அதி உயர் விருதான தங்கத்தாமரை விருது பெற்ற "Tabarana Kathe" போன்ற படங்களையும் எல்.வைத்யநாதனின் இசை தான் கலந்து வியாபித்தது.
எல்.வைத்யநாதனின் இசையில் வந்த சில படங்கள்
நான் முன்னர் குறிப்பிட்டது போன்று எல்.வைத்யநாதனுக்குக் கிடைத்த பெரும்பாலான படங்கள் தனிமுத்திரை கொடுத்த படங்கள் என்பதற்கு மேலே சொன்ன படங்கள் சில உதாரணங்கள். நல்ல இயக்குனர்கள் எந்த மொழியில் இருந்தாலும் இவரைத் தேடிப் போய்த் தம் மாசுகெடாத கலைப்படைப்புக்களில் நிறைவாகப் பயன்படுத்தியிருப்பது அவற்றின் தரத்திலும் கிடைத்த வெற்றியிலும் தெரிகின்றது. ஏனெனில் ஒரு விருதுப்படத்திற்கு அச்சாணியாக இசை பெரும்பங்கு வகிக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. இசைமூலம் சொல்லவந்த சேதியின் ஆழத்தைத் துலத்தமுடியும் என்பதோடு, நல்ல இசை என்பது குறிப்பிட்ட அந்தப் படைப்பைச் சேதாரமில்லாமலும் பார்த்துக்கொள்ளும். அப்படிப்பட்ட இசைப்படைப்புக்கள் தான் எல்.வைத்யநாதனின் சிறப்பை வெறும் எழுத்து நிரப்பல்களை விட அதிகப்படியாகப் பறைசாற்றுகின்றன.
தன் தந்தையின் மூலம் ஆரம்பமுகவரி அமையப்பெற்ற இவருக்கு இரண்டாவதும் நிரந்தரமுமான முகவரியை வயலின் வாத்தியம் தேடிக்கொடுத்தது.
அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் இசையே தன் ஜீவநாடியாகக் கொண்டு வாழ்ந்த எல்.வைத்யநாதன் தன் இசைப்பணியைப் திரைப்படைப்புக்களிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், இசைக் கலவைகளிலும் கலந்து வியாபித்து எம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்.
மால்குடி டேஸ் ஆரம்ப இசை
ஏழாவது மனிதன் திரைப்படத்திலிருந்து சில பாடல்கள்
உசாத்துணை:
எல்.வைத்யநாதன் சிறுபிராயத் தகவல்கள்: திருமதி ஞானம் இரத்தினம்
அருள் வடிவே பாடல்: தூள் தளம்
மால்குடி டேஸ் இசை: செந்தில்குமார் வலைப்பதிவு
புகைப்படம்: ஆனந்த விகடன்