பரதேசி படம் வந்த முதல் நாளிலிருந்தே படம் குறித்த சிலாகிப்புக்கள் அதிகமாக வரும் போதே ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக பாலா படங்கள் என்றாலே சம அளவில் எதிர்மறையான விமர்சனங்களும் நிறைக்கும். இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இன்று தான் நிறைவேறியிருந்தது.
பி.எச்.டேனியேல் எழுதிய "எரியும் பனிக்காடு" என்ற நாவலை முன்வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் என்னளவில் "உதிரிப்பூக்கள்" படத்திற்குப் பின்னர் ஒரு நாவலைத் துணையாக வைத்து எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பு என்பேன். இயக்குனர் பாலாவின் நேர்த்தியான இயக்கம் படத்தின் ஆரம்பப் புள்ளி முதல் இறுதி வரை அழுத்தமாகப் பதிந்திருக்கின்றது. "அவன் இவன்" படம் கூட பரவலான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்திருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்த பாலாவுக்காக அந்தப் படத்தையும் நேசித்த எனக்கு, பரதேசி படம் எத்தனையோ மடங்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்து விட்டது. இளையராஜாக்களை விடுத்து வழக்கத்துக்கு மாற்றாக, ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் இந்தப் படைப்பைக் கெடுக்காமல் தன்னளவில் நியாயம் செய்து இசை கொடுத்திருக்கிறார். ஆனாலும் கங்கை அமரனைத் துயரத்தின் பாடலில் துணைக்கழைக்கும் போதுதான் அந்தக் குரல் (அல்லது சாயல்) இன் மகத்துவம் புரிகின்றது. செழியனின் ஒளிப்பதிவு கூட பாலாவின் தோள்பட்டையாக இயங்கியிருக்கிறது. நடிகர் முரளியே வாழும் காலத்தில் நினைத்துப் பார்த்திராத பாத்திரப்படைப்பை அதர்வா எடுத்துச் சுமந்து காட்டியிருக்கும் போது அடடா தந்தை இருந்தால் எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார் என்னுமளவுக்கு உச்சம். கூட நடித்த கவிஞர் விக்ரமாதித்தன், வேதிகா, தன்ஷிகா, அந்த கங்காணி என்று யாரை விலக்குவது எல்லோருமே படைப்புக்கு நியாயம் செய்து நடித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, நாஞ்சில் நாடனின் கையைப் பற்றிக் கண்ணில் ஒற்றுமளவுக்கு எவ்வளவு அற்புதமான வசனப்பங்களிப்பை வழங்கியிருக்கிறார் மனுஷர். காட்சிக்குக் காட்சி ஒவ்வொரு அசைவுக்கும் வசனம் அனாவசியமில்லாது புத்திசாலித்தனமான வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட வருஷங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரின் முத்திரை திரையில் தெரிகின்றது. இயக்குனர் பாலாவால் பெருமையடைகின்றது தமிழ் சினிமாவுலகம்.
பரதேசி படம் சூலூர் கிராமத்து மக்கள் தேயிலைத் தோட்டங்களில் பணியமைர்த்தி அடிமைத் தொழிலாளிகளாக வாழ்க்கைப்படுவதைக் காட்டும் படம். இந்தக் கதைக்கரு வெறுமனே இந்தியாவில் வாழ்ந்த ஒரு சமூகத்தை மட்டும் சொல்வதல்ல, இன்றும் இதே நிலையில் இலங்கையின் மலையகத்தில் இருக்கும் தமிழர்கள், இன்னும் தாண்டி மலேசியாவின் இறப்பர் தோட்டங்களில், தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற சமூகம் நூற்றாண்டு கடந்து இந்தப் படம் காட்டும் வாழ்வியலிலேயே இருந்து வருகின்றார்கள், இன்னும் பர்மா, பிஜித்தீவுகள், தென்னாபிரிக்கா என்று நீட்டலாம்.
மலேசியாவின் தோட்டப்புற மக்களின் பிரச்சனையை காட்டும் ஒரு பாடல்
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் பிறந்தது முதல் என் பால்ய பாகத்தின் முதற்பாகம் இலங்கையின் மலையகம் என்று சொல்லக்கூடிய தேயிலைத்தோட்டங்கள் சூழ்ந்த பிரதேசத்திலேயே அமைந்திருந்தது. என் அப்பாவும் அம்மாவும் முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக ஹட்டன் என்ற மலையகப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டர்கள், கூடவே கைக்குழந்தையாக நானும். இன்றைக்கும் மங்கலாகத் தெரியும் அந்த வாழ்வில் வெள்ளாந்தி மனிதர்களாக, காலா காலமாக அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாகத் தான் அவர்களின் வாழ்வியல் இருக்கின்றது.
"மாஸ்டர் மாஸ்டர்" என்று பரிவோடு அழைத்துப் பேசி எங்கள் குடும்பத்துக்கு அரணாக இருந்தவர்கள் அவர்கள். காளியம்மா, ராசி, காளிமுத்து என்று நீண்ட சொந்தங்களாக எனது அப்பா அம்மாவின் ஆசிரியப் பணி அங்கே நிகழ்ந்த காலத்தைத் தாண்டித் தங்கள் உறவைத் தொடர்ந்திருந்தார்கள்.
தொண்ணூறுக்கு முந்திய ஓரளவு சகஜமான
நிலையில், ஹற்றனில் இருந்து காளிமுத்து, ராசு எல்லாம் வருவார்கள், கூடவே
வீரகேசரி பேப்பரால் சுற்றி நூலால் இறுக்கிக் கட்டிய தேயிலைத்தூள் பொட்டலம்.
காளிமுத்து,
ராசு எல்லாருமே என் அப்பா அம்மாவிடம் படித்தவர்களாம். கைக்குழந்தையாக
இருந்த என்னைப் பராக்கு காட்டுவதில் இருந்து, நித்திரையாக்குவது, சாப்பாடு
கொடுக்கும் போது விளையாட்டுக் காட்டுவது எல்லாமே அவர்கள் என்று அம்மா
அடிக்கடி சொல்லுவார்.
"அம்மா! பிரபுத்தம்பி எவ்வளவு பெரிசா
வளந்துட்டார்ங்கம்மா" ஆசையோடு இராசு என் முகவாயைத் தடவுவார். விடைபெறும்
போது அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டே
"போய்ட்டு வர்ரேன் சார்" என்று
சொல்லும் காளிமுத்து ஒவ்வொரு பிரியாவிடையிலும் கண்ணீர் பெருக, புறங்கையால்
விசுக்கென்று துடைக்க, அப்பா அவரின் முதுகைத் தடவி ஆறுதல் கொடுப்பதை
விநோதமாகப் பார்த்திருக்கிறேன்.
எப்போதாவது
ஏதோவொரு கனவிலே மலைமுகடுகளைக் குடைந்த சாலைகளில் அப்பா அம்மாவின்
கைப்பிடித்து நடப்பது போலவெல்லாம் கண்டிருக்கிறேன். அது தானாக வந்த கனவா
அல்லது அம்மா அந்தப் பழைய நினைவுகளை அடிக்கடி சொன்னதன் பிரதிபலிப்பா என்று
தெரியவில்லை.
இலங்கையின் மலையகப் பிரதேசம் காலாகாலமாக
அரசியல்வாதிகளாலும், நிலச்சுவாந்தர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இந்திய வம்சாவளி
மக்கள் வாழும் பிரதேசம். பிரிட்டிஷ்காரன் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து
தம் தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் காடுகளிலும் வேலை வாங்கி இரத்தத்தை
உறிஞ்சும் மலை அட்டைகளை விடத் தம் உடல் உழைப்பில் இரத்தம் சிந்தி வாழும்
ஒரு சமுதாயம். கடந்த நூற்றாண்டில் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு
அலைக்கழிக்கப்பட்ட இவர்களை மெல்ல மெல்ல நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கான
வாழ்வுரிமை என்பது எழுத்தில் அரங்கேறினாலும் இன்றளவும் கைக்கெட்டாத
பேதுறுதாலகால மலையின் உச்சியில் இருப்பது போல. கல்வி, பொருளாதாரத்தில்
பின்மலையகப் பிரதேசங்களில் தான் தமது முதற்கட்ட ஆசிரியப்பணியை ஆரம்பிக்க
வேண்டும் என்பது இலங்கையின் கல்வி அமைப்பின் ஒரு விதி. இதனால் இலங்கையின்
ஏனைய பாகங்களில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியப்பணிக்காக
மலையகப் பிரதேசங்களுக்குப் போவார்கள். ஆனால் என் நினைவுக்கு எட்டிய
காலங்களில் யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பலர் ஆசிரியப்பணிக்காக மலையகத்தில்
இருக்கும் நாட்களை விட, லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் டியூஷன்
கொடுத்துப் பிழைப்பு நடத்தியதையும் கண்டிருக்கிறேன். மலையகப் பிள்ளைகளின்
ஆரம்பக் கல்வியே ஏனோ தானோவென்ற நிலையில் தான் கொண்டு
நடத்தப்பட்டிருக்கின்றது. இளைய சமுதாயமும் தேயிலைக் கொழுந்தைக் கையில் ஏந்த
வேண்டிய நிலைக்குத் தானாகவே போகவேண்டிய அமைப்பில் தான் காலச்சக்கரம்
இயங்கும் அமைப்பு. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருகிறோம் என்று சொல்லும்
பூர்வீக பூமியான அயல் தேசமும், தமது உழைப்பையே நாட்டின் மூலதனமாகக்
கொண்டியங்கும் அரசாங்கமும், முதலாளிமாருமே உதவ முன்வராத நிலையில் தாங்கள்
ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரியாமலோ, அல்லது தெரிந்தும் எதுவும் செய்யாத
முடியாத நிலையில் மலையகத் தமிழர்கள். ஆனால் தங்களால் கொடுக்கக் கூடியது
அளவற்ற அன்பு என்பதன் வடிவங்களாக இராசுவும், காளிமுத்து, இவர்கள் போல
இன்னும் பலர்.
"இலங்கையில் தமிழர்" என்ற கலாநிதி முருகர் குணசிங்கம்
அவர்களின் ஆய்வு நூலில் இருந்து சில பகுதிகளை முன் வைக்கின்றேன்.
சோல்பரி
ஆணைக்குழுவினரின் சிபாரிசுக்கு இணங்க, டி.எஸ்.சேனநாயக்கா, தான் ஏற்கனவே
திட்டமிட்டபடி, 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி "இந்தியர் பிரசாவுரிமை
மசோதா"வை பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் முன்வைத்தார்.(Ceylon
Parliamentary debates, 4 August 1948) இதைத் தொடர்ந்து மிகவும் காரசாரமான
வாதப்பிரதிவாதங்கள் டிசெம்பர் 1948 வரையில் இடம்பெற்றன.
முஸ்லீம்
பிரதிநிதிகளும், குறிப்பாக ரி.பி.ஜாயா, எம்.எஸ்.இஸ்மாயில், ஏ.சின்னலெப்பை
போன்றவர்களும் அரசுக்கு இவ்விடயத்தில் தமது ஆதரவை அளித்தனர். இவர்களை விட
இலங்கைத் தமிழ் பிரதிநிதிகளும், ஒரு சில இந்தியத்த் தமிழ்ப் பிரதிநிதிகளும்
குறிப்பாக , ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், கே.கனகரட்ணம்,
வி.நல்லையா, எஸ்.யூ.எதிர்மன்னசிங்கம், ரி.ராமலிங்கம், ஏ.எல்.தம்பிஐயா
போன்றவர்கள் கூட இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கினர்.
தமிழ்ப்பிரதிநிதிகளில்
எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பி.குமாரசிறி, கே.ராஜலிங்கம், டி.ராமானுஜம்,
எஸ்.சிவபாலன், எம்.சுப்பையா, எம்.தொண்டமான் சி.வன்னியசிங்கம்,
வி.வேலுப்பிள்ளை போன்றவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். (பக்கம் 590 -
591 )
இந்தியத் தமிழர் பிரசாவுரிமை மசோதா விவாதத்தில்
பாராளுமன்றத்தில் அதை எதிர்த்துக் குரலெழுப்பிய இரண்டு முக்கியமான
தலைவர்களில் ஒருவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் மற்றையவர் சி. தொண்டமான்
அவர்கள். இந்தியத் தமிழர் பிரசாவுரிமை, சட்டம் முலம் பறிக்கப்படுவதால்
ஏற்படப்போகும் நிரந்தரமான பாதிப்புக்களை நன்கு உணர்ந்திருந்த இரு
தலைவர்களும், மூன்று மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது
பாராளுமன்றக் கூட்டத்தொடர் கூட்டத்தில், மணித்தியாலக்கணக்கில் தமது வாதப்
பிரதிவாதங்களை ஏற்கனவே தமிழ்ப்பிரதிநிதிகளின் உதவியுடன் உரிய முறையில்
முன்வைத்த போதிலும் இறுதியில் அம் மசோதா பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டு , இந்தியத் தமிழரின் பிரசாவுரிமை 1948 டிசெம்பர் 10
பறிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியத் தமிழரின்
பிரசாவுரிமை பறிக்கப்பட்டதன் எதிர் விளைவாக செல்வநாயகம் அவர்களும்,
திருவாளர்கள் வன்னியசிங்கம், நாகநாதன் போன்ற அரசியற் தலைவர்களும் தமிழர்
காங்கிரசில் இருந்து விலகி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி (Tamil Federal
Party) என்ற அரசியல் கட்சியை டிசெம்பர் 1949 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்கள்.
(பக்கம் 595, இலங்கையில் தமிழர், கலாநிதி முருகர் குணசிங்கம்)
மேற்
சொன்ன விஷயங்கள் மலையகத்தில் வாழ்ந்த இந்தியத் தமிழர் பால்,
தலைவர்களுக்கு இருந்த கரிசனையும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் வரலாற்றுத்
திருப்பத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
தொண்டமானின் இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸ் பின்னாளில் சி.சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணி
போன்றவை தனியே மலையகம் வாழ் இந்தியத் தமிழர் நலனை நோக்கிய தம் செயற்பாடுகளை
அவ்வப்போது அமையும் இலங்கையின் அரசாங்கத்த்தில் சேர்வதன் மூலம் செய்யலாம்
என்ற நோக்கில் செயற்பட்டார்கள். ஆனால் மலையகத் தமிழரின் வாழ்வியல் என்பது
இப்படியான அரசில் அங்கம் வகிக்கும் பிரதிநிதித்துவங்கள் போல இது நாள் வரை
பெருத்த மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. போராளிக்குழுக்கள் பல உருவெடுத்த
போது ஈரோஸ் இயக்கம் மலையகத்தையும் இணைந்த தமிழீழ எல்லையாக வகுத்தது ஒரு
வரலாறு.
முதலில் இந்தியத் தமிழரில் பதம் பார்த்த சிங்களப்
பேரினவாதம் அடுத்துக் கைவைத்தது ஈழத்தின் பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்த
ஈழத்தமிழரை.
முப்பது வருஷங்களுக்கு முன்னர் நான் ஓடியாடித்
திரிந்த அந்த மலைப் பிரதேசத்துப் புழுதி அளைய ஆசை இந்த ஆண்டில்
கைகூடவேண்டும் என்ற நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக என்னோடு பயணிக்கும்
நிலையில் அம்மாவோ, அப்பவோ இல்லை. தனியாக கடந்த 2011 ஆம் ஆண்டு பயணிக்கிறேன். மலையகத்தின் நுவரெலியா பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் அங்கு தங்கலாம் என்று திட்டமிட்ட பயணத்தில், ஹோட்டல் நிர்வாகத்திடம் எனக்காக ஒரு ஆட்டோவை, தமிழ் தெரிந்த ஒருவரோடு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர்களும் ஏற்பாடு செய்து கொடுத்த அந்த ஆட்டோ அடுத்த நாள் வந்தது.
ஜஸ்டின் என்ற ஆட்டோ ஓட்டுனர் நுவரெலியாவிலேயே பிறந்து வளர்ந்த அடுத்த சந்ததி. தேயிலைத் தோட்டங்களில் தன்னைக் காவு கொடுக்காமல் தன் உழைப்புக்கேற்ற நேர்மையான ஊதியம் வேண்டி ஆட்டோ ஓட்டுகிறார்.
"எங்கே சார் போகணும்" என்று என்னைக் கேட்கிறார்.
"தேயிலைத் தோட்டங்கள் பக்கமா சுற்றிவிட்டு வருவோமா" என்று நான் கேட்க, தலையாட்டியவாறே ஆட்டோவை முடுக்குகிறார். என் அந்தப் பயணத்தின் நோக்கம் தேயிலைத் தோட்டத்து வாழ் மக்களின் இன்றைய நிலையை அவர்களின் வழியாகக் கேட்டுவிடவேண்டும் என்பதே. அதை நினைவில் வைத்துப் பேச்சுக் கொடுக்கின்றேன்.
"இப்போ எல்லாம் எப்பிடிங்க போகுது தேயிலைத்தோட்டங்கள்ல பொழைப்பு நடத்துறவங்க வாழ்க்கை" என்று நான் கேட்க.
"அதையேன் கேட்கிறீங்க, காலாகாலமா ஒவ்வொருத்தனும் வந்து ஆசை காட்டி ஓட்டைப் புடுங்கிட்டுப் போறான், நம்ம ஜனங்க வாழ்க்கை அப்படியேதான் இருக்கு. தொடர்ச்சியா இருபத்தஞ்சு நாள் வேலைக்குப் போயாகணும், நாட்கூலி முன்னூத்திப் பதினைஞ்சு, இடையில ஏதாச்சும் லீவு எடுத்தா சம்பளத்துல கட் பண்ணிடுவாங்க" என்று மெல்ல மெல்ல அங்குள்ள மக்களின் அவல வாழ்வியலைச் சொல்லிக் கொண்டே போனார். முன்னர் அப்பா, அம்மா சொல்லச் சொல்லக் கதையாய் கேட்ட அதே கஷ்டங்கள் தான், ஆண்டுகள் தான் மாறியிருந்ததை உணர்ந்தேன் அப்போது. ஒரு அறை கொண்ட குச்சுவீடுகள் அடுக்கடுக்காக லயன்கள் என்று அதே ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடக்கலையோடு.
கிட்டத்தட்ட இரண்டுமணி நேர உலாத்தலில் மலையகத் தமிழரின் இன்றைய நிலை குறித்து அறிந்து கொள்ள ஜஸ்டின் உதவினார். அந்தப் பேச்சுக்களினூடு முள்ளிவாய்க்கால் காலமெல்லாம் சேதி கேட்டு மலையக மக்கள் கொண்ட ஆற்றொணாத்துயரையும் காட்டிக் கொண்டார்.
பிரிட்டிஷாரைக் கடந்து இன்று தனியார் மயமாக்கப்பட்ட தேயிலைத் தோட்டத்து வாழ்வியலும் ஒரே மாதிரித்தான். மலையகத்தமிழரைப் பொறுத்தவரை அவர்களுக்கான உறுதியான தலைமைத்துவம் இல்லாமை,
சோரம் போகும் பிரதிநிதித்துவம் இவற்றால் ஆண்டாண்டுகாலமாக அவர்களின்
நியாயமான வாழ்வுரிமையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். இன்றைக்குக்கு ஈழத்தின் மற்றைய பாகங்களில் இருக்கும் தமிழனும் இதே நிலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றான்.