“அவங்கள் கல்லைச் சாப்பிடுறாங்கள்
இடைக்கிடை இரத்தத்தைக் குடிக்கிறாங்கள்”
வெள்ளைக்காரர் இலங்கையின் கரையோரப் பகுதியைக் கைப்பற்றிய போது வேவு பார்த்த ஈழத்துச் சிப்பாய் ஒருவன் தன் அரசனிடம் வந்து இவ்வாறு சொன்னானாம். அவன் கல் என்று குறிப்பிட்டது பாணை, இரத்தம் என்றது மதுவை.
ஈழத்தில் பாண் என்ற சொல்லைக் காவி வந்தது இந்த நாட்டை முற்றுகையிட்ட ஒல்லாந்தர் தான். இதுவொரு திசைச்சொல். பாண் என்று ஈழத்தில் அழைக்கப்படுவது தமிழகத்தில் ரொட்டி என்றும் பிரெட் என்றும் புழங்குகிறது. பணிஸ் என்று நாம் அழைப்பது அங்கே பன்.
விடுதலைப்புலிகள் ஆட்சிக்காலத்தில் பேக்கறி என்ற சொல் கழற்றப்பட்டு “வெதுப்பகம்” ஆனது.
நம்மூரில் தேசிய உணவாகப் பாண் ஐ அங்கீகரித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இடியப்பம், புட்டு போன்ற உணவுவகைகளைப் பலகாரம் என்போம்.
இவற்றைக் காலையில் ஆக்கிச் சாப்பிடுமளவுக்கு நேரம் கிட்டுவதில்லை. தோசை, அப்பம் போன்றவற்றை ஆக்க இன்னும் நேரம் பிடிக்கும்.
இவற்றைப் பலகாரம் என்னும் பொதுப் பெயரில் அழைப்போம். அதுவும் அப்பத்துக்கு மாவைப் புளிக்க வைக்க மாணிக்கனிடம் கள் வாங்கி வைத்துத் தயார்படுத்த வேண்டும். அது ஒரு பெரிய வேலை என்பதால் வார இறுதிக்கோ, விடுமுறை நாட்களுக்கோ இல்லாவிட்டால் வெளியார் யாரும் விருந்தினராக வரும் நாட்களுக்கோ ஆன தின்பண்டம் ஆக்கி விட்டோம்.
காலை அரக்கப் பரக்க வெளிக்கிட்டுப் பள்ளிக்கூடம் போறவை ஒரு பக்கம், வேலைக்குப் போறவை ஒரு பக்கம் என்றிருக்க, எண்பதுக்குப் பின்னான யாழ்ப்பாணக் கலாசாரமும் குடும்பத்தில் ஆணும், பெண்ணுமாக வேலைக்குப் போக வேண்டிய சூழலுக்கு மாறி விட்டது. இந்த நிலையில் ஆபத்பாந்தவனாகக் கைக் கொடுப்பது இந்தப் பாண் தான்.
இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்தில் பாணின் விலை முக்கிய சக்தியாக இருப்பதை வைத்தே அதன் பயனீட்டுப் பெறுமதியை உய்த்துணரலாம். பாணின் விலை ஒரு ரூபா கூடினாலும் குய்யோ முறையோ என்பார்கள். சந்திரிகா ஆட்சிக்காலத்தில் பாணின் விலையை இரண்டு ரூபா ஆக்குவேன் என்றெல்லாம் அதிரடித் தேர்தல் வாக்குறுதி எல்லாம் கொடுத்தார்.
மீன் விற்பவரும் சரி, பாண் விற்பவரும் சரி சைக்கிளில் எடுத்துச் சென்று தான் கூவிக் கூவி விற்பார்கள். இங்கே கூவுவது சைக்கிள் பாரில் பொருத்தியிருக்கும் கறுத்த உருண்டைக் கோள ஹோர்ண் ஒன்று. இன்று சைக்கிள் வியாபாரிகளை அதிகம் பார்க்க முடியாது. அவர்கள் சிறு ரக மோட்டார் சைக்கிளுக்கு மாறி விட்டார்கள். பாண் வண்டி இப்போது அளவாகப் பெட்டி பொருத்தப்பட்ட ஓட்டோ வாகனமாக மாறி விட்டது.
காலை ஆறுமணிக்கே உள்ளூர் பெட்டிக்கடைகள் எல்லாம் திறந்து முதல் காரியமாகப் பாண் வியாபாரத்தில் இறங்கி விடுவார்கள். பால் விநியோகம் பெரும்பாலும் ஊரின் பெரிய கமக்காரர் யாரவது வீட்டில் வளரும் பசு மாட்டுக் கொட்டிலில் இருந்து தான் சுடச் சுட மடியில் இருந்து செம்பில் வரும்.
பாணுக்குத் தோதாக செத்தல் மிளகாய், தேங்காய்ப் பூ, வெங்காயம், கொஞ்சம் உப்புத் தண்ணி இவற்றையெல்லாம் கலந்து அம்மியில் அரைச்ச சம்பல் தான் பெரும்பாலும். பின்னாளில் தான் பட்டரும் மாஜரினும் வந்தது. பாண் துண்டுக்கு மாஜரின் தடவி கொஞ்சம் சீனியைத் தூவி விட்ட இன்று வரை உருசித்துச் சாப்பிடும் பழக்கம் எனக்கு. பாணுக்குள் வண்டு தட்டுப் படும். அதனால் றோஸ் பாண் சாப்பிடும் போது நன்றாகப் பிரித்துப் பிரித்து வண்டு இருக்கிறதா என்று பார்த்து விட்டுச் சாப்பிடச் சொல்லுவார் அம்மா.
பாணும், கதலி வாழைப்பழமும் சாப்பிட்டால் அது தனிச்சுவை.
ஒரு இறாத்தல் மொத்தப் பாண், சப்பட்டைப் பாண் (றோஸ் பாண்), சங்கிலி பணிஸ் என்று பேக்கரி இல்லையில்லை வெதுப்பகத்தில் விளையும் தின்பண்டங்கள். இவற்றில் சீனியால் தடவிய கொம்பு பணிஸ் பள்ளிக்கூட உணவு விற்பனைக்கூடத்திலும், தேநீர்ச் சாலைகளிலும் அதிகம் தென்படும்.
எங்கள் பள்ளிக்கூடத்தில் இடைவேளை நேரம் திரண்ட மாணவர் கூட்டத்தில் ஃபாதரின் கன்ரீனில்
கொம்பு பணிசுக்கு ஒருவன் காசை நீட்ட இன்னொருவன் பணிசோடு கம்பி நீட்டிய கதையெல்லாம் உண்டு.
மெட்ரிக் முறைமை வந்து நான்கு தசாப்தங்கள் ஆகியும் இன்னமும் ஈழத்தில் இறாத்தல் முறைமையில் இருக்கும் ஒரு பொருள் பாண். ஒரு முழுப்பாணை வாடிக்கையாளத் தேவைக்கேற்ப கால் றாத்தல், அரை றாத்தல் என்று வெட்டிக் கொடுப்பார்கள்.
கூலி வேலை செய்பவர்களைப் பணி நியமிப்பவர்கள்
இவர்களுக்குப் பணி நேரத்தில் கொடுத்தால்
பாணையும், சம்பலையும் கொடுத்தால் சமைக்கும் நேரம் மிச்சம் என்பர்.
அதுவரை கடைக்காரர்களிடமோ, இல்லைப் பாண் வண்டிக்காரர்களிடமோ பாணை வாங்கிச் சாப்பிட்ட எங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டியது.
அதுதான் மணி மாமா பேக்கரியின் வருகை.
மிக்கி மெளஸ் போன்ற டிஸ்னியின் கார்ட்டூன் உருவங்கள் பொறிக்கப்பட்ட மோட்டார் வண்டியில் பெரிய எழுத்தில் “மணி மாமா” என்று எழுதப்பட்டு பாண் விற்பனை ஊரின் சந்து பொந்தெல்லாம் கலக்கியது. தெற்கு இணுவிலின் சந்துக்குள்ளால் செல்லத்துரைச் சாத்திரியாரின் வீட்டுக்குப் போற வழியில் இருந்து வலது பக்கம் திரும்பினால் “மணி மாமா பேக்கரி” என்ற பெரிய எழுத்து விளம்பரத்தோடு சுவர் முழுக்கக் குழந்தைகளுக்கான பல வர்ண ஓவியங்களோடு அந்தக் கட்டடம் இருப்பது எங்களுக்கு அப்போது புதினமாக இருந்தது.
திருவெம்பாவைக் காலத்த்தில் விடிகாலை மூன்று மணிக்குக் குளித்து வெளிக்கிட்டு வீதியில் சங்கு சேமக்கலத்தோடு வந்தால் மணி மாமாவின் பேக்கறியில் அடுப்பெரியும் வெளிச்சம் தெரியும். அவர்களுக்கு வருஷம் முழுக்க ஒவ்வொரு நாளும் திருவெம்பா தான். அதிகாலை ஒன்று, இரண்டு மணிக்கே பாண் தயாரிப்பைத் தொடங்க வேண்டும்.
இணுவிலில் அண்ணா தொழிலகம், மல்ரி ஒயில் போல மணி மாமாவின் வெதுப்பகமும் பிரபலமான உள்ளூர் உற்பத்தி நிறுவனம் ஆனது.
இப்போது வெளி நாட்டில் நிறுவனங்கள் செய்யும் விற்பனை மேம்படுத்தல் முறைமையை அப்போது எங்கள் சிற்றூரிலேயே எமக்குப் பாடமெடுத்த மணி மாமா பேக்கறியை மறக்க முடியாது.
போர்க்காலத்தில் மா தட்டுப்பாடான நேரத்தில் மானி மாமாவின் பேக்கரியில் ஒரு நீண்ட வரிசை வீதியைத் தாண்டி நிற்கும். அப்போது காய்ச்சலுக்குச் சாப்பிடும் ரஸ்க் துண்டங்களும் கிடைத்தற்கரிய தேவாமிர்தம் போல இனிக்கும். போர்க்கால நெருக்கடி என்று இழுத்து மூடாமல் கையிருப்பையும் அங்கத்தையச் சனத்துக்குப் பகிர்ந்தளித்த தொழிலகங்களில் அப்போது அண்ணா கோப்பிக்காரரின் இனிப்பு வகைகள் (சீனிக்குப் பதிலாக), உணவு உற்பத்திகள் இவற்றோடு மணி மாமாவும் தன் பங்குக்கு உதவினார்.
மணி மாமா முந்த நாள் இறந்து விட்டாராம் சேதி வந்ததும் அவரின் மிக்கி மெளஸ் பேக்கறி தான் மின்னி மறைந்தது நினைவில்.
கானா பிரபா