வேலைக்குப் போவதற்காக ரயிலில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணித்தியாலத்துக்குக் குறைவில்லாத பயணம். அந்த நேரம் காதுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு கண்களுக்கு மட்டும் தீனி தேடவேண்டும். எனவே வழக்கம் போல் வாரப்பத்திரிகைகள் வாங்கும் கடைக்குப் போகின்றேன். அங்கே "அவள் விகடன்" சஞ்சிகையின் பதினோராவது ஆண்டு மலர் இருந்தது. புரட்டிப் பார்த்து விட்டு அதையும் எடுத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரையைத் தவிர ஆனந்த விகடனில் உருப்படியாக ஒன்றும் வருவதில்லை என்பது என் பல ஆண்டு விகடன் வாசிப்பில் நான் எடுத்த அனுமானம். அதனால் தான் அவள் விகடனில் ஆவது ஏதாவது சமாச்சாரங்கள் கிட்டுமே அதை வாங்கிக் கொண்டேன். அடுத்த நாள் ரயில் பயணத்தில் பிரிக்கின்றேன் அதன் பக்கங்களை. அதில் வந்த முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை வாசித்ததும் மனம் கனக்கின்றது. மெல்ல என் மடியில் புத்தகத்தை வைத்து விட்டு பழைய நினைவுகளுக்கு என் மனம் தாவுகின்றது.
"பிரபாகர்! புதுப் புத்தகங்கள் கொஞ்சம் வந்திருக்கு, புக் ரெஜிஸ்டரில் போட்டு விட்டேன், வந்து பாரும்" எமது கல்லூரி நூலகத்தைக் கடக்கும் என்னைக் கூப்பிடுகின்றது தனபாலசிங்கம் சேரின் அழைப்பு. எங்கள் கல்லூரி நூலகத்துக்கு அவர் வந்து கொஞ்ச நாளுக்குள்ளேயே என்னை நட்புப் பாராட்டியவர். அதற்குக் காரணமும் இருந்தது. என் பள்ளிப் பிராயத்தில் "கடலைச் சரைப் பேப்பரைக் கூட உவன் விடமாட்டான்" என்று என் மீது ஒரு விமர்சனம் இருந்தது. நடந்து போகும் போது றோட்டில் ஏதாவது பேப்பர் இருந்தாலோ அல்லது கச்சான் கடலையைப் பொதி பண்ணும் பேப்பர் சரை இருந்தாலோ அதைப் பிரித்து அதில் என்ன சமாச்சாரம் இருக்கு என்று ஆர்வக் கோளாறோடு படித்த காலமது. கல்லூரி நூலகத்தை மட்டும் விடுவேனா? பாட இடைவேளைக்கும் கூட அங்கேயே தஞ்சமாகிப் போன காலம் அது.எங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி நூலகம் மிகவும் பழமையானது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் இருக்குமாற் போல பல அரிய நூல்களைச் சேமித்து வைத்த அறிவுக் களஞ்சியம் அது.
செங்கை ஆழியானின் கதைகளை ஒரு வெறியோடு படித்துக் கொண்டிருந்த என்னை இன்னும் ஒரு உலகம் இருக்கு என்று காட்டியவர் எங்கள் நூலகத்துக்கு வந்த தனபால சிங்கம் என்ற நூலகர். அவரை லைப்ரரி சேர் என்று தான் அழைப்போம். தொடர்ந்த என் வாசிப்பு ஆர்வத்தையும், குறித்த நாளுக்குள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் பண்பையும் சத்தமில்லாமல் அவதானித்திருக்கிறார் இந்த லைப்ரரி சேர் போலும்.
"பிரபாகர்! செங்கை ஆழியானின் புத்தகங்கள் எங்கட பிரதேசத்துக்குரிய வாழ்க்கையை மட்டுமே காட்டும், அதோட மட்டும் நிக்கக் கூடாது, வாசிப்பை விசாலப்படுத்தோணும், இந்தாரும் இதைக் கொண்டு போய் வாசியும்" ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் நாவலைத் தானாகவே எடுத்து வந்து என் பெயரை ரிஜிஸ்டரில் போட்டு விட்டுக் கொடுக்கின்றார்.
பிறகு மு.வரதராசனின் "கரித்துண்டு", அகிலனின் "சித்திரப் பாவை", "பால்மரக் காட்டினிலே", "வேங்கையின் மைந்தன்", ஜெயகாந்தனின் " பிரம்மோபதேசம்" அ.செ.முருகானந்தனின் "மனித மாடுகள்", பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முதல் தொகுதி தமிழ்மாணவர்கள் அறுபதுகளில் எழுதிய "விண்ணும் மண்ணும்" சிறுகதைத் தொகுதி என்று அவர் எனக்காக அறிமுகப்படுத்தும் பட்டியல் தொடர்கின்றது. இன்றுவரை என் ஞாபகக் கூட்டில் எஞ்சியிருக்கும் நூல்களில் ஒரு சில தான் அவை.
சஞ்சிகைகளில் அப்போதெல்லாம் கோகுலமும் அம்புலிமாமாவுமாக இருந்த என்னை, யதார்த்த உலகுக்கு கைபிடித்து அழைத்துச் சென்றார் சுபமங்களா, க்ரோதாயுகம், துளிர் போன்ற சஞ்சிகைகளைக் காட்டியதன் மூலம்.
ஐம்பது வருஷத்துக்கு முற்பட்ட சஞ்சிகைகள், குறிப்பாக "விவேகி" போன்றவை உசாத்துணைப் பட்டியலில் மிகுந்த பாதுகாப்போடு பூட்டுப் போடப்பட்டு வைக்கப்பட்டிருந்தவை.
அவற்றை மெல்ல எடுத்து வந்து "வாசிச்சிட்டு தாரும்" என்று இரகசியமாகக் கையில் திணிப்பார். அந்த சஞ்சிகையைத் திறந்தாலே அப்பளம் போல நொருங்கிப் போய்விடும் அளவுக்கு பழசானது.
"கலாநிதி நா,சுப்ரமணியனின் "ஈழத்துச் சிறுகதை வரலாறு" என்ற ஆராய்ச்சி நூல் வந்திருக்கு, இதையும் கொண்டுபோய் வாசியும்" வெறும் நாவல் என்ற வட்டத்துக்குள் நின்று விடாது என்னுடைய வாசிப்பினை இன்னும் இன்னும் எல்லை கடக்கச் செய்யவேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்தது. அதே நேரம் என் வாசிப்பு திசை திரும்பி படிக்ககூடாத சமாச்சாரங்களில் இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் இவராகவே எனக்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்குமோ என்ற உணர்வு இப்போது எனக்குள் வருகின்றது.
ஒருமுறை லைப்ரரி சேருக்கு என் மீது ஏனோ மனஸ்தாபம், ஏசி விடுகின்றார். நான் அந்தப் பக்கம் கொஞ்ச நாள் போகவில்லை. ஆனால் என் வகுப்புக்குப் போவதென்றால் நூலகத்தைக் கடந்து தான் போகவேண்டும்.
"சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமி நாதன் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார், நாளைக்கு நாவலர் மண்டபத்தில் அவரின் பேச்சு இருக்கு நீரும் வரோணும்" என்று கதவுப் பக்கமாக நின்ற அவர் அன்புக் கட்டளை போடுகின்றார் லைப்ரரி சேர்."ஒகே சேர்" என்று விட்டு அடுத்த நாள் விழாவுக்குப் போகின்றேன். இலக்கிய ஆர்வலர்கள், பெருந்தலைகள் என்று நிரம்பி வழிந்த கூட்டத்தின் காற்சட்டைப் பையனாக நானும் ஒரு ஓரத்தில். ஈழத்து மொழி வழக்கை தமிழக வாசகர்கள் புரிந்து கொள்வதன் கஷ்டத்தை "சாரம்" என்ற உதாரணத்தின் மூலம் பேச்சில் காட்டிக் கொண்டு போகிறார் கோமல். ஈழத்தில் சாரம் என்றால் தமிழகத்தில் அது லுங்கி என்று பேசப்படுகின்றது, அது போல தமிழகத்தில் சாரம் என்று அழைப்பது கட்டிடங்கள் கட்டும் போது பிணைச்சலாகப் போடுவது என்று பேசிக் கொண்டே போகின்றார் கோமல். அவரின் உரை முடிந்ததும் கேள்வி நேரம். கோமலை பலரும் கேள்வி கேட்க மேடையில் ஏறுகின்றார்கள். மேடைக்குப் நின்ற லைப்ரரி சேர் மறுகரையில் நின்ற என்னைக் கண்டு
"ஏறும் ஏறும்" என்று கண்களாலேயே ஜாடை சொல்லி என்னை மேடைக்கு அனுப்புகின்றார்.
ஏதோ ஒரு துணிவில் மேடையில் ஏறி கோமலைக் கேட்கின்றேன். "திரைப்படங்கள் சமூக நாடகங்களுக்கு சாபக்கேடு என்றீர்கள், நீங்கள் கூட "ஒரு இந்தியக் கனவு", "தண்ணீர் தண்ணீர்" கதாசிரியர், நீங்கள் எதிர்பார்க்கும் சினிமாவை நீங்களே தொடர்ந்து செய்யலாமே" என்று ஏதோ ஒரு வேகத்தில் மேடையில் ஏறிய நான் கேட்கின்றேன். அவரின் பதிலோடு மேடையில் இருந்து இறங்கிய என்னைத் தட்டிக் கொடுக்கின்றார் லைப்ரரி சேர்.
இந்திய இராணுவப் பிரச்சனை முடிந்து எமது கல்லூரிக்குப் போன முதல் நாள் கண்ட காட்சிகள் அவலமானவை. அகதி முகாமாக்கப்பட்டு அது நாள் வரை இருந்த முழுக் கல்லூரியே விதவைக் கோலத்தில் இருந்தது. நூலகத்துக்குப் போகின்றேன். எல்லா புத்தக அலுமாரிகளும் உடைக்கப்பட்டு புத்தகங்கள் திசைக்கொன்றாய் இருக்கின்றன. நூலகத்தின் கதவுப் புறங்களில் ஷெல்லடித்து உடைந்த ஓடுகளின் ஊடாக வரும் மழை வெள்ளத்தைத் தடுக்க புத்தகங்களே தடுப்பாகப் போடப்பட்டிருக்கின்றன. பல அரிய நூல் தண்ணீரில் தொப்பமாக நனைந்து அகதிகளாகி அழுது கொண்டே இருக்கின்றன. லைப்ரரி சேரைப் பார்க்கின்றேன், ஷெல் வீச்சில் இறந்த குழந்தையின் தந்தை போல இடிந்து போய் இருக்கின்றார். மெதுவாக ஒவ்வொரு புத்தகமாகக் கையில் எடுத்துத் துடைத்துக் கொண்டு வருகின்றார்.
கல்லூரி வாழ்வு கழிந்து இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து ஆண்டு பல ஓடிவிட்ட பின்னர் ஊருக்குப் போன போது தாவடியில் இருக்கும் என் மாமி வீடு போகின்றேன். மச்சாள் எங்கள் கல்லூரியில் தான் படிப்பிக்கின்றார்.
ஆர்வமாக "லைப்ரரி சேர் இன்னும் அங்கே இருக்கிறாரா" என்று கேட்கிறேன்.
"இல்லை பிரபு! அவர் இப்ப ரிடயர்ட் ஆகிட்டார்" பக்கத்திலை தான் சுதுமலையில் இருக்கிறார் இது மாமி மகள்.
"அவரை ஒருக்கால் நான் பார்க்கோணும்" என்ற என்னை மச்சாள் புருஷன் தன் மோட்டார் சைக்கிளில் இருத்திக் கொண்டு போகின்றார்.
லைப்ரரி சேரின் வீட்டுக்கு முன்னால் வந்து வண்டி நிற்கின்றது. பூக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அவர் என்னைக் கண்டும் தெரியாத பாவனையில் உற்றுப் பார்க்கின்றார்.
"சேர்! நான் பிரபாகர், ஞாபகம் இருக்கா?"
"ஓ அப்படியா கனகாலத்துக்கு முந்தி இருக்கும் என்ன?" என்று மீண்டும் என்னை ஐயமுறப் பார்க்கின்றார்.
"முந்தி நீங்கள் தான் சேர் எனக்கு நிறையப் புத்தகம் எல்லாம் தாறனீங்கள்" என்று மீண்டும் ஆசையாகச் சொல்கிறேன்.
"இஞ்சையப்பா! எங்கட ஸ்கூல் பிள்ளை வந்திருக்கு, இஞ்சை வாரும்" என்று வீட்டுக்குள் இருந்த தன் மனைவியை அழைக்கிறார் லைப்ரரி சேர். அப்போதும் பிரபாகர் என்ற என்னை மறந்து விட்டார் என்று தொண்டைக்குள் எச்சிலை மிண்டுகின்றேன்.
தன்னுடைய மனைவி சந்திரா தனபாலசிங்கம் எழுதிய நூலை எனக்குத் தருகிறார். லைப்ரரி சேரை ஒரு போட்டோ எடுத்து விட்டு மச்சாளின் புருஷனின் மோட்டார் சைக்கிளில் அமர மீண்டும் தாவடிக்குப் போகின்றது. எதிர்த் திசையில் அலையும் காற்று முகத்தில் குப்பென்று அடிக்கின்றது.
லைப்ரரி சேருக்கு பிள்ளைகள் இல்லை, அந்தப் புத்தகங்கள் தான் அவரின் குழந்தைகள். அந்தப் புத்தகக் குழந்தைகளோடு நேசம் கொண்டு வருபவர்களை எந்தத் தந்தைக்குத் தான் பிடிக்காது? எனக்குப் பிறகு நிறைய பிரபாகர்கள் அந்த நூலகத்துக்கு வந்திருப்பினம். அந்தந்தக் காலகட்டத்தில் அவரின் புத்தகக் குழந்தைகளை நேசித்தவர்களை அவரும் நேசித்திருக்கின்றார் அவ்வளவு தான். ஆனாலும் லைப்ரரி சேரை நான் மறக்க மாட்டேன்.
இனி என் ஞாபகத்தைக் கிளறிய அவள் விகடனில் வந்த "ராஜம் கிருஷ்ணனின்" பேட்டியை அவள் விகடனுக்கு நன்றியுடன் அப்படியே தருகின்றேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.
'வேருக்கு நீர்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
இதுபோல எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த எண்பத்தி இரண்டு வயதான ராஜம் கிருஷ்ணன் இன்று இருப்பதோ பாலவாக்கம் விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில்!
குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.
மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.. என்று முதுமையின் வாட்டம் தெரிந்தாலும் பேச்சின் கம்பீரம் என்னவோ அப்படியே இருக்கிறது.
''என்னை எதுக்குப் பார்க்க வந்திருக்கீங்க? ஐ'ம் ஜஸ்ட் எ டஸ்ட்'' என்றவரை ஆசுவாசப்படுத்திப் பேச்சுக் கொடுத்தோம்..
''அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க. இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லை'' என்றபடியே பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தார்.
''1925-ல முசிறியில பிறந்தேன். சின்ன வயசுலயே எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா, என் பெற்றோர் என்னை ஸ்கூலுக்கு அனுப்பலை. அந்தக் காலத்துல பெண்கள் வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க. எனக்கும் பதினைந்து வயதில் பால்ய விவாகம் நடந்தது.
ஒன்பது நாத்தனார், மாமியார், மாமனார்னு நான் வாழ்க்கைப்பட்டது பெரிய குடும்பம். ரொம்பவே கஷ்டப்பட்டோம். என் கணவர் கிருஷ்ணன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கிப் போடுவார். லைப்ரரிக்குப் போயும் நிறையப் படிப்பேன்.
பதினாறு வயசுல கதைகள் எழுத ஆரம்பிச்சேன். அதெல்லாம் தொடர்ந்து பத்திரிகைகளில் பிரசுரமாகி, எழுத்தாளர்கள் வரிசையில் எனக்கு ஒரு தனி இடம் கிடைச்சது'' என்றவர் முகத்தில் மெலிதான பூரிப்பு. தொடர்ந்த ராஜம் கிருஷ்ணன்,
''தாம்பரத்துல மூணு கிரவுண்ட்ல வீடு வாங்கினோம். நிம்மதிக்குக் குறைவில்லை. நான் கதை எழுதும்போதெல்லாம் என் கணவர் பேனாவுக்கு மை போட்டுத் தருவார். என் துணிமணிகளை அயர்ன் பண்ணித் தருவதும் அவர்தான். என் கதைகளைப் படிக்கக்கூட அவருக்கு நேரம் இருக்காது. ஆனாலும், நான் எழுத அவ்வளவு ஊக்கம் கொடுத்தார்..'' என்று நெகிழ்ச்சியோடு சொன்னவர், தன் எழுத்து அனுபவங்களின் பக்கமாகப் பேச்சைத் திருப்பினார்.
''1970-ல் தூத்துக்குடி உப்பளத்துக்குப் போய் அங்கு வாழும் மீனவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடையாது. மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டே வாழ வேண்டிய நிலை. பரிதாபத்துக்குரிய அந்த மனிதர்களின் அவல நிலையை 'கரிப்பு மணிகள்' என்ற நாவலாக எழுதினேன். அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.
1972-ல் பீகாரில் கொள்ளையர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்த சமயம். அப்போ அந்த கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து பல மாதங்கள் அவர்களுடனே இருந்து பார்த்தவற்றை 'முள்ளும் மலரும்' என்ற தலைப்பில் எழுதினேன்.
பெண் சிசுக் கொலை, கோவா விடுதலை, சோவியத் நாடுகள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் என நான் எழுதாத விஷயங்களே இல்லை. பாரதியார் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால், 'முற்போக்குவாதியான பாரதியின் இறப்புக்குப் பின் செல்லம்மாளுக்கு மொட்டை அடித்தது ஏன்?' என்ற விவகாரத்தை ஆராய்ந்து 670 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டேன். இப்படி என்னுடைய 80-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது'' என்று நிறுத்தியவர், எதையோ நினைவுக்குக் கொண்டு வந்தவர் போல மேலே பேசினார்.
''ஒரு கட்டத்தில் என் கணவருக்குப் பக்கவாதம் தாக்கி நடமாட முடியாமப் போச்சு. தன்னோட தொண்ணூறாவது வயசுவரைக்கும் எனக்குத் துணையாவும் தூணாவும் இருந்தார். எங்களுக்குக் குழந்தைகளும் இல்லை. அவர் மறைவுக்குப் பின் 'என் ஒருத்திக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு?'னு உறவுகளும், நட்புகளும் கேட்டதால வீட்டை வித்துட்டேன். நான் எழுதிய அத்தனை படைப்புகளையும் எடுத்துச் செல்ல இடம் இல்லாததால் எல்லாத்தையும் தீ வெச்சுக் கொளுத்தினேன்.
கையில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை யார் யாரோ பகிர்ந்துக்கிட்டாங்க. பாங்க்ல இருந்த பணமும் என்னாச்சுன்னு தெரியலை. பங்களாவில் வாழ்ந்த நான் சகலத்தையும் இழந்து சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில வாடகைக்குக் குடிபோனேன். அங்க இருந்தப்போ, வரதட்சணை கேட்டுப் பொண்டாட்டியைக் கொடுமைப்படுத்தறவன்.. தினமும் குடிச்சிட்டு மனைவியை அடிச்சு உதைக்கிறவன்.. இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் பார்த்தப்போ இன்னும்கூட பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலையோன்னு தோணுச்சு'' என்றவரின் குரலில் பெரும் துயர்.
''எட்டு மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்சிடென்ட்ல எனக்குக் கால் எலும்பு முறிஞ்சு போச்சு. ஆபரேஷன் நடந்து அஞ்சு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். என் தோழியான திலகவதி ஐ.பி.எஸ்., பாரதி சந்துரு இருவரும் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்து விட்டாங்க. என்னால இப்ப நடக்க முடியலை. இந்த வாக்கர் உதவியா இருக்கு. எத்தனையோ பேருக்கு ஒரு கஷ்டம்னா ஓடிப்போய் உதவி பண்ணினேன். இப்போ எனக்கு உதவத்தான் யாருமில்லை. பார்ப்போம்..''
கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி அந்த இரும்பு மனுஷி நமக்கு விடை கொடுக்க, சமூகத்துக்காக எவ்வளவோ அக்கறையோடு யோசித்த ஒரு மனுஷிக்கு இந்த சமூகம் செய்திருக்கும் மரியாதையைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை படித்ததும் மனது கனத்தது. தனது நாவல்கள் மூலம் இரு காலகட்டத்தில் சமுதாயத்திற்கு வெளிச்சம் காட்டியவர் இன்று இருளில். எமது சிட்னி தமிழ் அறிவகத்துக்குப் போய் ஆசையாய் அவரின் ஒவ்வொரு புத்தகத்தையும் தொட்டுப் பார்த்து புகைப்படமும் எடுத்துவிட்டு "முள்ளும் மலர்ந்தது" என்ற அவரின் நாவலை எடுத்து வைத்தேன். இந்த வாரம் ரயிலில் வைத்து வாசிக்க வேணும்.
Sunday, October 26, 2008
Tuesday, October 14, 2008
என் சினிமா பேசுகிறது...!
என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பாவீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம். (எனது "சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்து தியேட்டர்களும்" Wednesday, March 15, 2006 பதிவில்)
மேலே சொன்ன என் வாக்குமூலமே தொடர்ந்து நண்பர் ஆயில்யன் என்னைச் சங்கிலித் தொடர் கேள்வி பதிலுக்கு அழைத்ததற்கான முகவுரையாக சொல்லிக் கொள்கின்றேன். இணையக் கோளாறினால் நேற்றுப் போட்ட பதிவை இன்று வெளியாக்கி தமிழ் பிரியனும் சங்கிலித் தொடருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இருவருக்கும் என் நன்றிகள்.
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயசுக்கணிப்பெல்லாம் தெரியாது, நம்மூரில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தபோது உள்ளூர் சனசமூக நிலையங்களின் முற்றத்தில் மூன்று, நான்குபடங்களை ஒரே இரவில் ஐந்து ரூபா கட்டணத்தில் போடுவார்கள். அப்போது தான் சினிமா என்ற வஸ்து இருப்பதே ஓரளவுக்கு தெரிய வந்தது. அப்போது தான் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா "அண்ணன் ஒரு கோயில்"
இது பற்றி "எங்களூர் வாசிகசாலைகள்" பதிவில் Thursday, June 15, 2006 இப்படிச் சொல்லியிருக்கிறேன்.
"ரீ.வீயும் வீடியோவும் முதன் முதலில யாழ்ப்பாணம் வரேக்க (அதைப் பற்றி ஒரு பெரியகதை சொல்ல இருக்கு) இந்த வாசிகசாலைகள் தான் மக்களுக்கு அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்தவை. 80 களின் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு வாசிகசாலையிலும் வச்சு விடியவிடியப் படம் காட்டினவை . தலைக்கு அஞ்சு ரூபா எண்டு நினைக்கிறன்.
ஒரு நாள் உந்த வாசிகசாலைப் பெடியள் மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு முகப்பில இருக்கும் கே .கே.எஸ் றோட்டுக்கு அங்காலை உள்ள பற்றைக் காணியை நல்லாச் சுத்தம் பண்ணி, ட்றக்டரில கொண்டு வந்த குருமணல் பறிச்சு கிழுவந்தடிப் பொட்டுக்குள்ளால நுளைவாயில் விட்டுச் சாமம் சாமமாய்ப் படம் போட்டவை.
போட்ட படங்களில "அண்ணன் ஒரு கோயில்" மட்டும் ஞாபகத்தில இருக்கு. அந்தப் படத்தில வரும் "நாலுபக்கம் வேடருண்டு" பாட்டு கனநாள் என்ர ஞாபகத்தில இருந்தது. அந்தப் பாட்டுக்கட்டத்தில பொலிஸ் துரத்தத் துரத்த "ஏன் உவன் சிவாசியும், சுயாதாவும் பத்தைகளுக்குள்ளால ஓடி ஒளியினம்?" என்று எனக்கு நானே கேட்ட விபரம் புரியாத வயசு அது . எனக்குத் தெரிஞ்சு இந்த மக்கள் முன்னேற்றக் கழகம் செய்த பெரிய வேலை உந்த வீடியோப்படம் காட்டினதுதான்.
எனது பாட்டனார் முறையானவர் வீட்டில் அப்போது தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோ காசெட் பிளேயரும் வாங்கியிருந்தார்கள். அந்த ஊருக்கே அது தான் ஒரே காட்சிப் பொருள். அப்பப்ப ஞாயிறு தூரதர்சனிலும் மழை, காற்று அடிக்காத வேளை காலநிலை சீராக இருக்கும் காலகட்டங்களில் படம் பார்க்கக் கூடியதாக இருந்தது. அது பற்றி இன்னொரு பதிவில் நிறையவே ஆராய வேண்டியிருக்கு.
தியேட்டர் பற்றி அந்த பால்யகாலத்தில் என் சகவாலுகளுடன் பேசும் போது, "திரைக்கு பின்னால் இருந்து தான் ஆட்கள் நடிக்கினமாம், ரோச் லைட் அடிச்சு தான் இங்காலிப்பக்கம் தெரியுமாம்" என்று அறிவுபூர்வமாகப் பேசியதும் நினைப்பிருக்கு.
எனக்கு ஓரளவு நினைவு தெரியுமாற் போலப் பயந்து பயந்தே பார்த்த படம் "நீயா".
அப்போது நான் ஆரம்ப வகுப்பில் இரண்டாம் வகுப்பு மாணவன். அதே பள்ளிக்கூடத்தில் அம்மா ஆசிரியை. எமது சித்திமார் அவர்களுக்குச் சொந்தமான காரில் பள்ளிக்கூடம் நடக்கும் வேளை அங்கே வந்து அம்மாவை ஒரு அவசர விஷயத்துக்குப் போகவேணும் என்று ஏமாற்றி, கூடவே என்னையும் அம்மா இழுத்துக் கொண்டு காரில் போனால் அது வின்சர் தியேட்டரில் வந்து நிக்குது. படம் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்று எழுதியிருந்ததை எழுத்துக் கூட்டி வாசித்து விட்டேன். அதில் இச்சாதாரி பாம்பு இருப்பதால் சின்னப் பிள்ளைகள் பயப்பிடுவினமாம். ஆனால் ஏதோ மாய்மாலம் செஞ்சு என்னையும் உள்ளே இழுத்துக் கொண்டு போனார்கள். யாழ்ப்பாணத்திலேயே உருப்படியான தியேட்டர் வின்சர் தான். பல்கனியில் இருந்து அகலத் திரை அளவுக்கு கண்களை அகல விரித்துப் பார்த்தது இப்போதும் நினைவிருக்கு. இச்சாதாரிப் பாம்பு வரும்போது மட்டும் சடாரென்று கண்களை தரையை நோக்கி மேய விடுவேன்.
அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஒரு மாசத்துக்கு மேலாக அம்மாவின் பழைய நைலெக்ஸ் சாறி ஒன்றை எடுத்து என் ரீ சேர்ட்டின் முதுகுப் புறமாகச் செருகிக் கொண்டே "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா" என்று கத்திக் கத்திப் பாடிக் கொண்டே அங்குமிங்கும் ஓடி விளையாடியதும் நினைப்பிருக்கு.
(மேலே படத்தில் 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டர் உட்புறம் நான் போய் எடுத்த புகைப்படம்)
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியாக அரங்கில் பார்த்த தமிழ் சினிமா "தாம் தூம்". ஒளிப்பதிவாளர் ஜீவாவின் இறுதிப் படம் என்ற ஆர்வக் கோளாறினால் சென்று பார்த்து மனதைத் தேற்றிக் கொண்டே வந்த படம்.
வரும் வாரம் மூன்று தேசிய விருதுகள் கிடைச்ச "சிருங்காரம்" திரைப்படத்தைப் பார்க்க இருக்கிறேன்.
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக அரங்கிலின்றி நிறைய தமிழ் சினிமாவை ஐந்து, பத்து, பதினைஞ்சு நிமிடம் மட்டும் பார்த்து விட்டு மீதியை பார்க்காமலே மனமாறிக் கொண்ட பட்டியல் நீளம். ஆனால் ஆசையாக இரண்டு வாரம் முன் ஒரிஜினல் டிவிடி ஒன்றை வாங்கி அணு அணுவாக ரசித்து முழுமையாகப் பார்த்த திரைப்படம் கரு.பழனியப்பனின் "பிரிவோம் சந்திப்போம்". இந்தியா, இலங்கையை விட புலம்பெயர் வாழ்வியலுக்கு மிகவும் பொருத்தமான கதைக் களம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பாடல்களை நுட்பமாக கேட்டு வாங்குவதிலும் சரி,எடுப்பதிலும் சரி கரு.பழனியப்பன் சிறப்பானவர். இயல்பான, மேதாவித்தனமற்ற வசனங்களும், காட்சியமைப்புக்களும் இந்த இளம் இயக்குனரின் முதிர்ச்சியான முத்திரைகள். இவருக்கு இன்னும் சிறப்பான பல வாய்ப்புக்கள் கிடைத்தால் இன்னும் மின்னுவார்.
மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
வருஷம் 16.
இந்தப் படத்தை முதல் காட்சியில் பார்த்த அதே உணர்வோடு தான் இன்றும் பார்க்கின்றேன். படம் வந்த போது எனக்கும் வயசு 16, ஆனால் 2 வருஷம் கழித்துத் தான் நம்மூர் திரையரங்கில் வந்தது அப்போது எனக்கு வயசு 18.
அவள் டியூசனுக்கு வரும் போதும், என்னை எதிர்ப்படும் போதும் எனக்கு ஏன் இருதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமா அடிக்கிது, ஓ! இது தான் காதலா?"
பரீட்சை எடுத்து விட்டு வருஷம் 16 படம் பார்க்க நண்பர்களுடன் வெலிங்டனுக்கு போனேன். ராதிகா (குஷ்பு) கண்ணன் (கார்த்திக்) மடியில் இறப்பதும், "மூர்த்தி மூர்த்தி என்று கண்ணன் அலறிக் கொண்டே அவனை உலுப்புவதும், இறுதிக் காட்சியில் வேலைக்காரன் ராஜாமணியுடன் பெரிய தாத்தா வீட்டை பார்க்க வரும் கண்ணனின் காதுகளில் பழைய கலகலப்பும் கேட்டு ஓய்வதுமாக படத்தின் இறுதிக் காட்சிகள் ரணமாகியதும் அந்தக் காலகட்டத்தில் என் மனநிலை சார்ந்து இருந்ததோ என்னவோ.
"வருஷம் 16 படம் இறுதிக்காட்சியில நாயகி குஷ்பு சாவதைக் கண்டு, கூடவே வந்த நண்பன் காந்தன் மூட்டைப் பூச்சியையும் பொருட்படுத்தாது அதிர்ச்சியில் கதிரையை விட்டு எழும்பவேயில்லை. பின்னால இருந்த தாய்க்குலங்கள் விசும்பி அழுவதும் கேட்டது." (சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்து தியேட்டர்களும்)
வருஷம் 16 படம் பார்த்து விட்டு வீடு திரும்பும் போது சித்தி மகள் சொல்கிறார்.
"இப்ப தான் உம்மடை ஆள் வந்திட்டுப் போனா, ஆள் வேலணைக்கு போயிட்டா, இனி A/L படிப்புக்கு தான் வருவாவாம்"(A/L - பிளஸ் டூ).
வேலணை என்பது யாழ்ப்பாணத்தை அண்டிய சிறு தீவுப் பகுதி, படிப்பதற்காகப் பலர் யாழ்ப்பாணத்துக்கு தான் வந்து தங்கிப் படிப்பார்கள், படிப்பு முடிந்ததும் போய்விடுவார்கள்)
அதுக்கு பிறகு யுத்தம்,வேலணையை இராணுவம் கைப்பற்றல், தொடர்ந்து வந்த இடப்பெயர்வுகள்,சம்பவங்கள் எல்லாம் கலந்து நிரந்த முற்றுப் புள்ளியை என் காதலுக்கும் வைத்து விட்டது.
உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
கமல்ஹாசனுடன் "சண்டியர்" பெயரை மாற்றச் சொல்லி வீம்பாக நின்றவர்கள் மேல் வந்தது முதல் எரிச்சல் , தமிழ் பெயர் மட்டும் வைத்தால் போதும் வரிவிலக்கு உண்டு என்ற கோமாளித்தனமான சட்டம்,இவற்றோடு சமீபத்திய எரிச்சல்+ஆச்சரியம் "சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சிடி" திரைப்படத்துக்கு சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியம் வழங்கியது.
நீண்டகால எரிச்சல், தமிழ் சினிமாவைப் புறக்கணியுங்கள் என்று சொல்லும் மொழி தாங்கிகள் திருட்டு வீசிடியில் திருட்டுத்தனமாக தமது வீட்டில் இருந்து போன வாரம் வரை வந்த படங்களைப் பார்த்து ரசிக்கும் போலித்தனம்.
தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறையவே உண்டு, ஆனால் இளைஞர்களுக்கு விஜய் அறிவுரை வகையறாக்கள் தவிர்த்து எப்போதும் புதிதாக வரும் படங்களிலில் யார் யாரெல்லாம் பணியாற்றுகின்றார்கள், குறிப்பாக இசையமைப்பாளர் யார்?என்று தேடும் வழக்கம் தொட்டிலில் இருந்து சுடுகாடு வரை இருக்கும்.
சின்ன வயசில் எங்கள் சித்திமார் வாங்கும் பேசும் படம், பொம்மை, ஜெமினி சினிமாவில் இருந்து,சமீபகாலம் தமிழ் சினிமா இணையம், தினத்தந்தி "திரைப்பட வரலாறு" மற்றும் கவிஞர் வாலியில் இருந்து மகேந்திரன் வரை தேர்ந்தெடுத்த படைப்பாளிகளின் நூற்களை வாங்கிப் படிப்பது வரை இது தொடர்கின்றது.
தமிழ் சினிமா இசை?
தமிழ் சினிமா இசை காலத்துக்குக் காலம் மிகுந்த சிறப்பும் தனித்தன்மையும், தனக்கென ஒரு அடையாளத்தோடும் இருந்தது. இளையராஜாவுக்கு முந்திய காலகட்டத்து முன்னணி இசையமைப்பாளர்கள் எல்லோருமே "சினிமாப் பாடல்களுக்கான இசை" என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதில் சிறப்பாகவே தம் பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். இளையராஜா பாடல்கள் மட்டுமல்ல, படத்தின் பேசாத காட்சிகளை இசையால் பேசவைக்கவும், பேசும் காட்சிகளை வலுப்படுத்தி நிற்கவும் இசை உதவும் என்பதில் பரிபூரணமான திரையிசையை அளித்திருக்கின்றார். இளையராஜாவுக்குப் பின் வந்த ரஹ்மான் கூட பாடல்கள் தவிர்த்த பின்னணி இசையில் பேசத்தக்க சாதனை செய்யவில்லை என்பதே என் கருத்து. இப்போதுள்ள தமிழ் சினிமா இசையையும், எதிர்காலத்தின் தமிழ் சினிமா இசையையும் நினைக்கும் போது பெருங் கவலை ஒட்டிக் கொள்கின்றது. எனக்கு வயசு போகின்றது என்று குறும்பாகச் சொல்லாதீர்கள், தமிழ் சினிமா இசையின் அடையாளம் இளையராஜாவுக்குப் பின் தொலைந்து போய் விட்டது என்றே சொல்வேன்.
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறையவே பார்ப்பதுண்டு. கடந்த ஆறேழு வருஷமாக அதிகமாக ஆக்கிரமிப்பது மலையாள சினிமா. அதில் காழ்ச்சா, அச்சுவின்டே அம்மா, வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள், பெருமழாக்காலம், தன்மத்ரா என்று ஒரு மிக நீண்ட பட்டியல் இடலாம்.
தேர்ந்தெடுத்த ஹிந்திப் படங்களைப் பார்ப்பது வழக்கம். குறிப்பாக கொங்கனா சென் நடித்த படங்கள், வயசுக்கேற்ற நடிப்பில் கலக்கி வரும் அமிதாப்பின் Black சமீபத்தில் வந்த The Last Lear.
வங்க மொழிப்படங்களை பெங்களூர் லாண்ட் மார்க்கில் அள்ளி வந்தேன். அதற்குக் காரணம் சத்யஜித் ரேயின் "பதேர் பாஞ்சாலி".
தெலுங்கில் ரசித்து ருசித்த படங்கள் பொம்மரிலு, ஹாப்பி டேய்ஸ், கோதாவரி
தவிர உலக சினிமா வரிசையில் அவுஸ்திரேலிய படமான Rabbit-proof Fence,அகிரா குரோசாவாவின் Seven Samurai போன்ற வித்தியாசமான படங்களையே பார்க்கப் பிடிக்கும். அடிதடி ஆக்ஷன் வகையறைக்கள் என் உடம்புக்கு ஒத்துவராது. பிடித்த நடிகர் என்றால் Tom Hanks இன் படங்களைத் தேடித் தேடிப்பார்பேன். நடிகை என்றால் Meg Ryan தான் எப்போதும்.
நான் சாகும் வரை விருப்பத்தேர்வில் இருக்கும் cinema Paradiso.
தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தமிழ் சினிமாவுடன் நேரடித் தொடர்பு என்றெல்லாம் இல்லை. ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஊடக நண்பர்கள் மூலம் சினிமாவில் சாதனை செய்தவர்களையும், வளர்ந்து வரும் கலைஞர்களையும் அவ்வப்போது வானொலிப் பேட்டிகள் செய்து வருவதும், இங்கே சிட்னிக்கு தமிழகக் கலைஞர்கள் வருபோது நேரடிப் பேட்டி எடுப்பதும் என்ற வகையில் எனக்கு ஒரு வகையான மறைமுகத் தொடர்பு உண்டு.
என்ன செய்தீர்கள் என்றால் ஏற்கனவே அறிமுகமான கலைஞர்களின் தெரியாத பக்கங்களைக் கொண்டு வருவதும், அறிமுகமாகும் கலைஞர்களையோ அவர்களின் படைப்புக்களையோ வானொலி, வலை வட்டத்தில் அறிமுகப்படுத்துவது. தவிர றேடியோஸ்பதி மூலம் அண்மைக்காலமாகச் செய்து வரும் பின்னணி இசைத் தொகுப்பு. இதன் மூலம் வலை வழியே உலாவிக்கொண்டிருக்கும் நாளைய இயக்குனர்களுக்கு இந்த இசைத் தொகுப்பு ஒரு முன்மாதிரியாக இருந்து அவர்கள் இயக்கும் படங்களின் இசையமைப்பாளர்களிடம் (சரக்கு இருந்தால்) இதே பாங்கில் வேலை வாங்க வேண்டும் என்பதே என் ஆசை.
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்பது அந்தந்தக் காலகட்டத்து ரசிகர்களின் ரசனை உணர்வு சார்ந்தது. எழுபதுகளின் இறுதியில் ராஜாக்கள் வந்தார்கள், எண்பதுகளில் மணிரத்னம் வந்தார்.
தொண்ணூறுகளில் ஒரு தேக்கம், இப்போது பாலாவின் வாரிசுகள் வருகின்றார்கள். ஒளிப்பதிவு, கணினி உத்திகளில் கண்ட உயர்ச்சி கதை உருவாக்கத்தில் அதிகம் இருக்காது. சுப்ரமணியபுரம் போன்ற நேர்மறையான சினிமா கதைககரு உத்திகள் அதிகம் வளரும்.
வெற்றிமாறன், வெங்கட்பிரபு போன்றவர்கள் ஆங்கிலப்படத்தைப் பிரதி பண்ணி ஆங்காங்கே நாகாசு வேலைகள் சுலபமான வெற்றியைக் கொடுக்கலாம் போன்ற தவறான முன்னுதாரணங்கள் புதிய சிந்தனையாளர்களை டிவிடியில் பிறக்க வைக்கும்.
அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்பதை விட எனக்கு என்ன ஆகும் என்றால், ஒன்றும் ஆகாது. எனக்கு எண்பதுகளில் வந்த படங்களே என் எஞ்சிய ஆயுளுக்குப் போதுமானவை. அவற்றைப் பற்றி நானே எனக்குள் சிலாகித்துக் கொண்டிருப்பேன். அது போலும் ;-)
சரி இனி இந்தச் சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு அன்பாக நான் அழைப்பவர்கள். அழைப்பினை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றேன்.
1. ஜி.ரா என்னும் ஜி.ராகவன்
2. கே.ஆர்.எஸ் என்னும் கண்ணபிரான் ரவி சங்கர்
3. கோபிநாத்
4. சின்னக்குட்டி
5. அருண்மொழிவர்மன்
6. வந்தியத் தேவன் (கொழும்பு)
Labels:
தொடர் விளையாட்டு