"செந்தூருக்க கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு"
உரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர் சுகுமாரனைக் காதலோடு பார்த்துப் பாடுகிறது அந்தக் குரல்
"சேரும் இள நெஞ்சங்களை வாழ்த்துச் சொல்லக் கோர்த்தார்களா ஊருக்குக்குள்ள சொல்லாததை வெளியில் சொல்லித் தந்தார்களா?"
கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் முன்றலில் கே.கே.எஸ். றோட்டை மறித்துப் போடப்பட்ட தற்காலிக திடலில் மக்கள் திரண்டிருக்க, கோயிலின் வெளிப்புற மதிலை ஒட்டிய பக்கம் போடப்பட்ட மேடையில் இருந்து ஒலிக்கிறது அந்த கணீர்க் குரல். ஜிப்பாவும், வேட்டியும் கட்டி, முறுக்கேறிய அந்த அழகிய உருவத் தோற்றமே தென்னிந்திய சினிமா நட்சத்திரமொன்று எங்கள் முன்னால் நிற்பது போல ஒரு பிரமை. குரலுக்குச் சொந்தக் காரர் வேறு யாருமல்ல, அந்த எவரைப் பற்றிய அந்தப் பசுமையான நினைவுகளை எழுதும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு மெய் சிலிர்க்கின்றனவே அவர் தான் எஸ்.ஜி.சாந்தன்.
1991 ஆம் ஆண்டென்று நினைக்கிறேன் அதுதான் சரியாகப் பொருந்திப் போகிறது. எங்கள் அயலூர்
கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயிலின்
இரவுத் திருவிழாவுக்கு அருணா கோஷ்டி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், என் சகோதரனும் நண்பனுமான சுதாவோடு சைக்கிள் போட்டுக் கோயிலுக்குப் போகிறோம். நாச்சிமார் கோயிலடி ஐயரின் ஶ்ரீதேவி வில்லிசைக் குழு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த போது சாமப் போர்வையில் நட்சத்திரப் பதக்கங்கள் மின்னிக் கொண்டிருந்தது.
அடுத்தது அருணா இசை குழு தான் என்ற உற்சாகத்தில் சனம் தம்மை ஆசுவாசப்படுத்துகிறது. ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நேரம் கடந்தாலும் கூட்டம் அசையவில்லை. அப்போது தான் ஒரு மொறிஸ் மைனர் கார் வந்து நிற்க, பின்னால் ஒரு வானும் சேர்ந்து கொள்கிறது. கூட்டத்தின் ஒரு பகுதி எட்டிப் போய் அந்தக் காரையும் வானையும் மொய்த்து விட்டு வந்து கடலைச் சரை போட்டுக் குறி வைத்த தம் இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறது.
"அளவெட்டியில இருந்து கச்சேரி முடிச்சு வருகினமாம், தொடர்ச்சியா மூண்டு கச்சேரி பார்வதி சிவபாதத்துக்குத் தொண்டை கட்டிப் போச்சாம் பெண் பாடகிக்கு என்ன செய்யப் போகினமோ" என்று உச்சுக் கொட்டியது வேவு பார்த்து விட்டு வந்த சனம்.
அருணா இசைக்குழு கடகடவென்று தம் வாத்தியங்களை மேடையில் பரப்ப, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் பாட்டுக் கச்சேரி தொடங்கி விட்டது.
"தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை" என்று தன் ஒலிவாங்கியை இரு கைகளால் பவ்யமாகக் கோத்துக் கொண்டு ஆராதித்துப் பாடும் அந்தக் கலைஞன் எஸ்.ஜி.சாந்தன் என்று என்று எனக்கு முதன் முதலில் அறிமுகமாகிறார்.
அந்த நிகழ்ச்சியைத் தொகுத்தவர் லோகேஷ், ஒரு காலத்தில் றேடியோ சிலோனில் இருந்தவர் பின்னாளில் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்து அங்கும் வானொலிப் பணி செய்தவர். அவர் தன் கம்பீரக் குரலால் அறிமுகப்படுத்திய போது எம் போன்ற அடுத்த தலைமுறை இளையவர்களிடம் எஸ்.ஜி.சாந்தன் பதியம் போட்டு உட்கார்ந்து விட்டார். இவர் தான் தொடந்து எம் வாழ்நாளில் மறக்க முடியாத பாடகராக அமையப் போகிறார் என்பதும் அப்போது எமக்குத் தெரிந்திருக்காது.
பார்வதி சிவபாதம் இல்லாத தனிக் கச்சேரியா என்ற எங்கள் அவ நம்பிக்கையைத் தகர்த்துப் போட்டது "ராசாத்தி மனசுலே இந்த ராசாவின் நெனப்புத்தான்" சேவியர் நவனீதன் பெண் குரலெடுத்துக் கச்சிதமாகப் பாட, "தேவன் கோயில் மணியோசை" பாடலில் சீர்காழியாக உருகி நின்றவர் "ராசாத்தி மனசுல" பாடலில் மனோவாக காதல் ரசம் கொட்டிப் பாடுகிறார் இந்த எஸ்.ஜி.சாந்தன். இன்னும் "கேளடி கண்மணி காதலன் சங்கதி" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியமாகக் குரல் தணித்து இன்னொரு வேடம் பூணுகிறார் எங்கள் சாந்தன்.
தன்னுடைய குரலை வெவ்வேறு பரிமாணங்களாக வெளிப்படுத்தி, பாடும் போது தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பி போன்று மக்களோடு மக்களாய்க் குதூகலித்துப் பாடும் வித்தை கற்ற நட்சத்திரப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் ஊர் ஊராய் மக்கள் மனதில் ஊன்றியது இப்படித்தான். அப்போது பள்ளிக்கால விடலைகளாய் இருந்த எங்கள் காலத்துக்கு முற்பட்ட பால்ய காலத்து கண்ணன் கோஷ்டி மெல்லிசை மேடைகளிலும் எஸ்.ஜி.சாந்தனின் பங்களிப்பு இருந்தது பின்னாளில் தெரிந்த கதை. சாந்தனுக்காக, சேவியர் நவனீதனுக்காக, சுகுமாரனுக்காக, பார்வதி சிவபாதத்துக்காக கோயில் கோயிலாகத் திரிந்து திருவிழா மேடைகளில் அவர்களைக் கண்டு பூரித்தது ஒரு பொற்காலம்.
ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் தமிழகத்துப் பாடகர்களால் பாடி ஒலியேறிய காலம் கடந்து ஈழத்து இசை வல்லுநர்கள் இசைவாணர் கண்ணன் முதற் கொண்டு உள்ளூர்க் கலைஞர்களின் சங்கமம் அரங்கேறிய போது எஸ்.ஜி.சாந்தனின் அடுத்த பரிமாணம் வெளிப்படுகிறது. அதுவரை சினிமாப் பாடல்களால் அடையாளப்பட்டவர் நம் தாயகக் கலைஞன் என்ற சுய அந்தஸ்த்தை நிறுவுகிறார்.
ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் மரபிசை சார்ந்த திரு.பொன்.சுந்தரலிங்கம், திரு.வர்ண இராமேஸ்வரன் போன்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு வெகுஜன அந்தஸ்துப் பெற்ற பாடகன் எஸ்.ஜி.சாந்தனின் வரவு தனித்துவமாக அமைகிறது. தன் குரலில் மிடுக்கையும், உணர்வையும் ஒரு சேரக் கொடுக்கும் திறன் , இயல்பாக உள்ளே பொதிந்திருக்கும் நடிப்பாற்றல் சேர்ந்த ஒரு ஜனரஞ்சகக் கலைஞராகப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் வீறு கொண்டு வியாபித்த சாந்தன் குரல் பறையொலிக்கு நிகரான போர் முழக்கமாகத் தெனித்தது.
"போற்றியெம் தமிழெனும் காவியப் பொருளே" என்று சங்கீத பூஷணம் திரு பொன்.சுந்தரலிங்கம் தன் மரபிசை சார்ந்த வெளிப்பாட்டைக் குரல் வழியே வெளிப்படுத்த
"ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்" http://download.tamiltunes.com/songs/Eelam-Songs/Barani%20Paaduvom/Aathi%20Anithija%20-%20TamilTunes.com.mp3
என்று தன் தாய்த் தாய்த் தமிழைப் போற்றிப் பாடும் அந்தக் குரலின் பாங்கு இன்னொரு திசையில் இருந்து கிளம்புகிறது எஸ்.ஜி.சாந்தனின் குரல் அது இன்னொரு முத்திரை இந்த இரண்டு விதமான இசைக் கூறுகளின் அடிப்படையிலேயே ஈழத்துப் போர்க்கால இசைப்பாடல்கள் தம்மை நிறுவியிருக்கின்றன.
"ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா" https://www.youtube.com/watch?v=XxcpObs6h_0&sns=tw பாடல் ஆனையிறவுப் போர்க்களம் கடந்து பின்னாளில் சந்தித்த எல்லாக் களமுனைகளிலும் நின்றிருந்த போராளிகளின் வாயில் முணுமுணுக்க வைத்திருக்கும். அந்தக் காலத்துக் குஞ்சு குருமான்களும் சாந்தனின் குரலைப் பிரதி பண்ணிப் பாடிப் பார்த்தன.
"விண் வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்" https://www.youtube.com/shared?ci=rowENrcVw0k அந்த நீண்ட பாடலைக் கடப்பதற்குள் எத்தனை முறை அழுதிருப்பேன்/போம் அங்கே சாந்தன் வெளியில் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் குற்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பியதோடு மானசீகமான அஞ்சலியையையும் கொடுக்க வைத்தார் தன் குரலில் பொதிந்த கற்பூர மெழுகால்.
ஈழத்துப் போர்க்காலப் பாடல்கள் வெறும் வீரத்தை மட்டுமா பறை சாற்றியும் தட்டியெழுப்பியும் வைத்தது? தமிழின் பெருமையை, ஈழத்து ஆலயங்களின் மகிமையையும் அல்லவா அரவணைத்தது. வடக்கிலிருந்து கிழக்கின் கோடி வரை போற்றித் துதித்தது எஸ்.ஜி.சாந்தனின் குரல்
http://thesakkatru.com/archives/album/santhan-padalkal-esai
மொழியும் கலையும் எம் இனத்தின் இரு கண்கள் என்பது போல ஈழத்துக் கூத்திசைக்கான பாடல்களில் எஸ்.ஜி.சாந்தனின் குரலும் கையாளப்பட்டது. முந்த நாள் சிவராத்தியில் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கொக்கட்டிச்சோலைத் தாந்தோன்றீஸ்வரர் கோயிலுக்குப் போக வைத்தது "பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்" https://m.youtube.com/watch?v=xjofdsqMrJo&feature=youtu.be
இன்னும் "ஆழக் கடலெங்கும் சோழ மகராசன் ஆட்சி செய்தானே அன்று" https://www.youtube.com/watch?v=oLpDC1aleZ8&sns=tw என்று தலைவனைப் போற்றிய குரலாய், போர்க் கால மேகங்களில் மீனவர் படும் துயரின் வெளிப்பாடாய் "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்" https://www.youtube.com/watch?v=HCQ6162zvcw&sns=tw
"இந்த மண் எங்களின் சொந்த மண்" https://www.youtube.com/shared?ci=PfN6UWRXMaI என்று உறுதியின் குரலாயும் "குயிலே பாடு" http://thesakkatru.com/wp-content/themes/musicplay/musicband/music_download.php?type=9IKwQQ41f4j-ShZ1CaU2PJFBR6GaOSGaHtn1y8ELkRcR8rN05h6XeBs1rp_FUveUfiUJhb0kQy8j9-n4tVp920r-moxtfoYc1O51PGc1tOImF0GBRmDbUPbz4Oqp5_tw என யாசித்துப் போகும் அத்துணை போர்க்காலத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் எஸ்.ஜி.சாந்தனின் குரல் ஆவணப்படுத்தியிருக்கிறது.
இவற்றையெல்லாம் எழுதும் போது ஒரு பெருங்குற்ற உணர்வை ஈழ சமூகத்தோடு சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கிறது. எஸ்.ஜி.சாந்தன் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் என்று செய்தி வந்த போது முந்திக் கொண்டிருக்க வேண்டும் அவருக்கான மருத்துவ உதவிகளுக்குப் பணம் வேண்டும் என்ற அறை கூவல் வருவதற்கு முன்.
மீண்டும் ஒருமுறை நாம் நன்றி மறந்த சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கிறோம்.
தன்னுடலில் நோயைச் சுமந்து கொண்டு வாழ்வாதாரத்துக்காக மேடையேறிப் பாடிய இந்தக் காணொளியைக் காணும் போது https://www.facebook.com/jaffnajet/videos/832322986869310/ அந்தக் குற்ற உணர்ச்சி மிகும்.
இன்றும் கூட அந்தக் கலைக் குடும்பத்தை ஏந்திப் பிடிக்க நாம் முன் வர வேண்டும்.
எஸ்.ஜி.சாந்தன் குறித்த இன்றைய செய்திகள் எல்லாம் வெறும் செய்திகள் தான்.
எஸ்.ஜி.சாந்தன் எங்களிடமிருந்து காலாகாலமாகப் பிரிக்க முடியாத உணர்வு மட்டுமே.
சாந்தன் குறித்த பிபிசி ஆவணம்
http://www.bbc.co.uk/programmes/p03tnxmx
இந்தப் பதிவை எழுதி முடித்த போது இன்று மதியம் இலங்கை நேரம் 2.10க்கு எஸ்.ஜி.சாந்தன் இறந்தார் என்ற செய்தி வந்திருக்கிறது.
சாந்தன் குறித்த பிபிசி ஆவணம்
http://www.bbc.co.uk/programmes/p03tnxmx
இந்தப் பதிவை எழுதி முடித்த போது இன்று மதியம் இலங்கை நேரம் 2.10க்கு எஸ்.ஜி.சாந்தன் இறந்தார் என்ற செய்தி வந்திருக்கிறது.