நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.
ஒலிவடிவில் கேட்க
அவுஸ்ரேலிய மண்ணில் இருந்து எமது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்திய அக்கடமி விருது கிடைத்ததற்காகவும் முதலில் ரசிகராகவும் இந்த வேளையிலே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக எழுத்துலகில் இருப்பவர். முதல் முறையாக ஒரு பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. சூடிய பூ சூடற்க என்கின்ற சிறுகதைத் தொகுதிக்காக உங்களுக்கு இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது. அது வந்து சர்ச்சைக்கு உரியது என்பதை விட சவாலான ஓர் கதை. சமகால அரசியல் விமர்சனமாக இந்தக் கதை பின்னப்பட்டிருக்கின்றது. இப்படியான கதைக்கு ஓரு அரசினுடைய அங்கீகாரம் கிடைத்ததை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
நான் வந்து நேர்மையற்ற விமர்சனங்கள் செய்றதில்லைங்க. அரசாங்கமானாலும் சரி நிறுவனங்களானாலும் சரி. ஓரு படைப்பிலக்கியவாதியின் மனோநிலையில் இருந்து சமூக நோக்கத்தோட நமக்கு சரி என்றுபடுவதை நான் விமர்சனம் செய்கிறேன். அந்த விமர்சனத்தை அவங்க எற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது நம்முடைய சிக்கல் இல்லை. ஆனா அப்படி ஒர் விமர்சனம் இருக்கிறதென்பதும் அவர்கள் அறியாதவர்கள் இல்லை. ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இந்த மாதிரியான விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது
பொதுவாகவே தமிழ் சமூகத்து எழுத்தாளர்களுக்கு இப்படியான அங்கீகாரங்கள் பொதுவாக இப்படி சாகித்திய அக்கடமியாகட்டும் அல்லது ஞான பீட விருதுகளாகட்டும் ஒர் புறக்கணிப்பு இருப்பதாகப்படுகின்றது,அதைப் பற்றி?
அதாவது இந்த விருது வாங்குதல் வழங்குதல் இதுக்குள்ளே இந்தச் சூழலிலே ஒரு அரசியல் இருக்குதைய்யா. அரசு அதிகாரங்களை செல்வாக்குகளை இலக்கிய கோட்பாடு செல்வாக்குகளை பயன்படுத்தி உரியவர்களை உரிய விதத்தில் அணுகி அப்படித் தான் பரிசில்களை பெரும்பாலும் பெற்றுக் கொள்கின்றனர் அது நம்ம மொழிக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு அவலம். என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தப் பரிசிலுக்காகவும் யாரையும் தேடியோ நாடியோ கோரிக்கைகள் எடுத்துக் கொண்டு போனது இல்லை. ஆனால் என்னுடைய எழுத்துக்கான ஒரு மரியாதை தெரிந்து வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது என்னுடைய நம்பிக்கை.
உங்கள் "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்த இந்த இன்னுமோர் சிறப்பு என்னவென்றால் கடந்த சென்னைப் புத்தக கண்காட்சியில் மாபெரும் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. விற்பனை அளவிலும் சரி ஒரு நல்ல அங்கீகாரத்தை வாசகன் வழங்கியிருக்கின்றான். இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பொதுவாகவே என்னுடைய புத்தகங்கள் விற்பனையில் இதுவரைக்கும் பின்னாடி இருந்ததில்லை. பதிப்பாளர்களும் என்னுடைய புத்தகத்தை வெளியீடுவார்கள். என்னுடைய முதல் நாவலுக்கு மாத்திரம் தான் பதிப்பாளர்களை தேடி நடந்த சிரமம் இருந்தது. என்னுடைய புத்தகங்கள் தொடர்ந்து ஓரளவிற்கு விற்கின்ற புத்தகங்கள் தான். அதனால் எந்த பதிப்பாளரும் எங்கிட்ட வந்து எனக்கும் ஒரு புத்தகம் அச்சுக்கு கொடுங்கள் பதிப்பிற்கு கொடுங்கள் என்று கேக்கிற நிலை தான் எனக்கு இருந்திருக்கு.
இப்ப இந்த விருது அறிவிக்கப்பட்ட பிறகும் என்னுடைய இணையத்தளம் தொடங்கப்பட்ட பிறகும் என்னுடைய புத்தகங்களிற்கான டிமாண்ட் அதிகமாய் இருக்குது. குறிப்பாக சூடியபூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்புக்கு விருது வழங்கியவுடனே எனக்கு கிடைத்த media attention ஒரு வகையில் பெரிய உதவியாக இருந்தது. இதுவரைக்கும் எந்த தமிழ் எழுத்தாளனுக்கும் கிடைக்காத வகையில் இலக்கிய பத்திரிகைகளில் என்னுடைய நேர்காணல்கள் என்னுடைய கட்டுரைகளை திருப்பி எடுத்து போடுறது சிறுகதைகளை திருப்பி எடுத்திட்டுப் போறது இந்த மாதிரியான ஒரு ஊக்கம் தொடர்ந்து கடந்த இரு மாதங்கள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே வாசகர் வந்து என்னுடைய புத்தகங்களை தேடி வருகின்றார்கள்.
அந்த நேரம் சரியாக இருந்ததினால் சென்னை புத்தக கண்காட்சியில் இந்த விருது அறிவிப்பும் கிட்டத்தட்ட சமகாலத்தில் இருந்த காரணத்தினால் இந்த புத்தகத்தை நிறையப் பேர் தேடி வந்து வாங்கியதை நான் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு கண்காட்சியினுடைய பதினாறாவது நாள் கால அளவில் 2560 படிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றது. அதற்காக இந்த புத்தகத்திற்காக மாத்திரம் தனியாக ஒரு விழிப்புச் சுற்று வைத்திருந்தனர் என்னுடைய பதிப்பாளர்கள். குறிப்பாக இளைஞர்கள் நிறைப்பேர் இந்தப் புத்தகத்தை தேடி வந்து வாங்கிறாங்க. பரவலாக என்னுடைய புத்தகம் அந்த புத்தகம் மாத்திரமல்லாமல் ஏற்கனமே அச்சிடப்பட்ட மறுபதிப்பு கண்ட என்னுடைய நாவல்கள் கட்டுரைத் தொகுதிகள் சிறுகதைத் தொகுதிகள் எல்லாம் கணிசமான அளவிற்கு இந்த ஆண்டு விற்பனையாகியிருக்கு. எனக்கு அது மகிழ்சியான விடயமாக படுது.
கேள்வி-- இளைய சமூதாயம் தீவிர வாசிப்பின் மீது எவ்வளவு தூரம் நாட்டம் கொண்டிருக்கின்றது ஒர் எழுத்தாளனாக இந்த தமிழ் சூழலை எடுத்துக் கொண்டால் எமது இளைய சமூதாயத்தினுடைய தீவிர வாசிப்புப் பற்றி உங்களுடைய பார்வை என்ன?
அதாவது எப்போதுமே தமிழ் வாசிப்புப் பழக்கம் என்கிறது பெரும் தொகையானவர்களுக்கு இல்லைங்க. நம்முடைய ஜனத்தொகை வளர்ந்த அளவிற்கு நம்முடைய வாசகன் வளர்ந்திருப்பான் என்று சொல்ல முடியாது. இணையத்தினுடைய ஒரு செல்வாக்கு மிகுந்திருப்பதன் காரணமாக தமிழ் நாட்டிற்கு வெளியே வேலை செய்யிறவர்கள் இந்தியாவிற்க்கு வெளியே வேலை செய்யிறவர்கள் தமிழ் மீது ஆர்வங் கொண்டவர்கள் தங்களுடைய கவனத்தை படைப்பிலக்கியங்கள் மீது தற்சமயம் செலுத்தியுள்ளார்கள். சற்று செலுத்தி வருகிறார்கள். அவர்களின் மூலமாக படித்த இளைஞர்கள் தமிழிலக்கியத்தின் பால் திரும்பியிருப்பது ஒரு வரவேற்க்கத்தக்க நிகழ்ச்சி. அவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கிறாங்க. அவர்களின் வழிகாட்டுதலிற்க்கும் நம்முடைய இலக்கியவாதிகள் பலர் தயாராக இருக்கிறாங்க. இளைய தலைமுறைகளிலே புத்தகம் வாங்குவதிலும் படிப்பதிலும் ஒரு துடிப்பை நான் கவனிக்கிறேன். கடந்த சில பத்தாண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இப்ப இருக்கிறது ஒர் உற்சாகமான சூழ்நிலை என சொல்லத் தோணுகிறது.
கேள்வி-- ஆனந்த விகடன் போன்ற பரந்துபட்ட வாசகர்களைக் கொண்ட வணிக சஞ்சிகைகள் உங்களைப் போன்ற செழுமையான எழுத்தாளர்களைப் பயன்படுத்துவதும் அதன் வாயிலாக உங்களுடைய சிந்தனைகளை அது வெறும் நாவலோ சிறுகதையொன்றோ ஒரு வட்டத்தில் இல்லாமல் பரந்து பட்ட சிந்தனைகளை உள்வாங்குவது ஒரு ஆரோக்கியமான விஷயமாகப்படுகின்றது அப்படித்தானே?
அது உண்மை தான். அதாவது வணிக இதழ்களை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கம் தொடக்க காலத்தில் எங்களுக்கு இருந்தது. எங்களை வழிப்படுத்திய ஆசான்கள் வந்து நான் சிறு பத்திரிகை வட்டத்தில் மாத்திரத்தில் இயங்க வேண்டும். வணிகப் பத்திரிகைகள் உரிய மரியாதை தராது. வணிக இதழ்களை எழுதுவதன் மூலம் நான் மரியாதையற்றுப் போகிறேன் என்கிற மாதிரியெல்லாம் எங்களுடைய மூத்த எழுத்தாளர்கள் நாம் தொடக்ககாலத்தில் எழுத வந்த போது எனக்கு கருத்துச் சொன்னார்கள். பின்னாடி பார்க்கும் போது எந்த இதழில் எழுதினாலும் என்னுடைய கட்டுரையை எழுதுகிறேன். எங்கு எழுதினாலும் என்னுடைய வாசகனை சென்றடைவது முக்கியம் என்பது மாதிரியான கருத்து வந்த பிறகு ஆனந்த விகடன் மாதிரியான பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஆனந்த விகடன் மாதிரிப் பத்திரிகைகளில் எழுதும் பொழுது அதனுடைய வீச்சு வாசகனை சென்றடையிற வேகம் வியப்பை ஊட்டுவதாக இருக்கிறது. சென்ற இதழில் ஆனந்த விகடனில் என்னுடைய ஆத்மா என்கிற சிறுகதை வெளிவந்திருந்தது. பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து அவர்கள் வெளிநாட்டில் குடியேறிய பிறகு நோய்வாய்ப்பட்டு மனைவி இறந்த பிறகு தனியாக வாழ்ந்து வந்த 85 வயது மதிக்கத்தக்க கிழவன் இறந்து விடுகிறான். அவன் மரணமானது கூட பக்கத்து வீடுகளுக்கு தெரியாமல் போறதுக்கு வாய்ப்பிருக்கிறதான சூழல். இப்படியான கதைகளை ஆனந்த விகடன் வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது வந்து இப்ப இருக்கிற சூழலில் ஒரு பொதுவான பிரச்சினை. இந்தக் கதை வெளியானவுடன் இதுக்கு கிடைக்கிற வரவேற்பு ஊக்கமூட்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் மற்ற பதிப்பகங்களை விடவும் ஆனந்த விகடன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவதாக இருக்கிறது.
கேள்வி-- தீதும் நன்றும் என்கின்ற தொடரை உங்களுடைய சிந்தனையை தொடராக விகடனிலே எழுதிய பொழுது கவனிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஒரு விஷயம், ஈழத்திலே நடந்த தமிழின அழிப்பு தமிழின படுகொலை குறித்து உங்களுடைய இயலாமையின் கூற்றாக ஓர் எழுத்தாளனாக நீங்கள் வெளிப்படுத்தியிருந்தீர்கள். அதையொட்டிய ஒரு கேள்வி. அதாவது ஒரு தமிழ் எழுத்தாளர் சமூகம். ஒரு எழுத்தாளனைப் பொறுத்தவரையிலே மற்றைய சமூகத்து எழுத்தாளர்கள் அளவுக்கு அவனுடைய குரல் ஒரு சமூகத்து குரலாக அங்கீகரிக்கப்படுவதில்லை என நான் நினைக்கின்றேன். அதை நீங்கள் ஏற்பீர்களா?
மலையாளத்தோடு, கன்னடத்தோடு, தெலுங்கோடு, மராட்டிய மொழியோடு, ஹிந்தி மொழியோடு ஒப்பிட்டுப் பார்க்கிற போது தமிழிலக்கியவாதியினுடைய குரல் இலக்கியவாதியினுடைய குரல் ஒரு அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட்ட குரலாக ஒலிக்கவில்லை என்று நீங்கள் கூறுவது சரி தான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ் இலக்கியவாதிகளும் அத்தகைய சூழலுக்கு ஏற்றவாறு தமிழினத்தினுடைய ஓர் அழிவிற்கு அழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் போதுமான அளவுக்கு தங்களுடைய குரலை உயர்த்திப் பேசினார்களா என்கின்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது. நான் தொடர்ந்தும் என்னுடைய கட்டுரைகளிலும் இதை எழுதியிருக்கிறேன். பொது மேடைகளிலும் இதைப் பற்றி நான் விவாதித்திருக்கிறேன்.
அதாவது எதிர்காலத்தில் ஈழத் தமிழனக்கு நடந்த கொடுமைகளை ஏனென்று கேட்காமல் வாய் மூடி மௌனியாகி மயங்கி கிடந்த தமிழ் எழுத்தாளன் வரலாற்றில் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாக இருப்பான் என்கிற ஓர் எண்ணம் எனக்குண்டு. ஆனால் எங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்குது. ஒரு இந்தியக் குடிமகனாக இந்திய சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டுத் தான் செயல்பட வேண்டியிருக்குது. நம்முடைய வருத்தத்தை கோபத்தை அநியாயத்தைக் கேட்கிற ஒரு குரலாக ஒட்டுமொத்தமாக தமிழ் படைப்புலகத்தின் குரல் ஒலிக்கவில்லை என்கிற ஆதங்கம் எனக்குள்ளே இருக்குது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன் என நினைக்கிறேன். ஆனந்த விகடனில் நான் எழுதிய 42 வாரம் தொடரில் குறைந்தது ஆறு ஏழு கட்டுரைகளில் இது பற்றி பேசியிருக்கிறேன். இது பற்றி வேறு இலக்கியங்களிலும் எழுதினேன். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் என்னுடைய குறையை சொல்லாமல் போகவில்லை. சமீபத்தில் வெளியான பச்சை நாயகி என்கிற என்னுடைய கவிதைத் தொகுப்பில் எட்டுப் பத்து கவிதைகளிலாவது மறைமுகமாக ஆனால் வெளிப்படையாக பொருள் விளங்கும் வகையில் காத்திரமாக பேசியிருக்குது. என்னுடைய வருத்தத்தை என்னுடைய கோபத்தை என்னுடைய ஆத்திரத்தை என்னுடைய இயலாமையை வேறு எந்த வழியில் வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியலீங்க. இந்தளவுக்கு படைப்புலகம் இயன்றளவு தன்னுடைய அதிருப்தியை வெளியிடவில்லை என்பது கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம் தான்.
உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் முக்கியமானதொரு எழுத்தாளர்களுடைய அணி அவர்களுடைய கூட்டான ஒரு செயற்பாடு என்பதும் ஒரு சவாலான சூழலாகத் தான் இருக்கிறது இல்லையா? அதாவது தமிழ் சூழலிலே ஒன்றுதிரண்டு ஒருமித்த கருத்தோடு இப்படி சமுதாயப் பிரச்சினைகளை வெளியிடுவது என்பதும் சாத்தியப்படாத ஓர் அம்சம் அப்படித் தானே?
பிற மொழிகளில் சாத்தியப்படுகிறது. தன்னுடைய மாநிலத்திற்கான பிரச்சினை என்று வரும் போது ஓர் மலையாளப் படைப்பாளிகள் அத்தனை பேரும் ஒரு குரலில் பேசுகிறார்கள். கன்னடப் படைப்பாளிகளும் ஒரு குரலில் பேசுகிறார்கள். மராத்தியப் படைப்பாளிகள் பேசுகிறார்கள். வங்காளிகள் பேசுகிறார்கள். தமிழனுக்கு மாத்திரம் ஏன் இந்த நிலமை? தனித்த ஒற்றைக் குரலாக பேச முடியவில்லை என்பது ஒரு வரலாற்று சோகமாகத் தான் எனக்குப்படுகிறது.
வட்டார மொழி வழக்கியல் குறிப்பாக நாஞ்சில் பின்ணணியிலே நீங்கள் வட்டார மொழி வழக்கியலை நவீன சிறுகதை இலக்கியத்திற்காகட்டும். படைப்புலகிற்காகட்டும் நீங்கள் பொதுவாக வழங்கியிருக்கிறீர்கள். தமிழுக்கு இருக்கின்ற ஒரு சிறப்பென்று கூட இதைச் சொல்லலாம். ஏராளமான வட்டார மொழி வழக்கியலை தனது இலக்கியத்திலே உள்வாங்கியிருக்கிறது தமிழ் இல்லையா?
அதாவது அந்த வட்டார வழக்கு என்கின்ற பகுப்பை வன்மையாக மறுக்கிறேன். இது வந்து கல்லூரிப் பேராசிரியர்களும் திறனாய்வாளர்களும் தம்முடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு சொல் வழக்கு. நான் என்னுடைய மக்களை எழுதுகிறேன். என்னுடைய கிராமத்தை எழுதுகிறேன். என்னுடைய பிரதேசத்தை எழுதுகிறேன். ஆனால் என்னுடைய திருநெல்வேலிப் பிரதேசத்தையோ நாஞ்சில் நாட்டுப் பிரதேசத்தையோ மாத்திரம் எழுதுகிற போது அது வட்டார வழக்கு என்கிற அடைப்புக்குறிக்குள் பேசப்படுகிறது. இதைப் போன்ற ஒரு மொழியைப் பயன்படுத்தியே தஞ்சை வட்டார அல்லது சென்னை வட்டார பிற வட்டார எழுத்துக்களை வட்டரா வழக்கு என்று குறிப்பிடுவதில்லை. நான் என்னுடைய மொழியை என்னுடைய பிரதேச மக்கள் பேசிய மொழியை கையாள முயற்சி செய்தேன். சரி ஒரு வசதிக்காக அவர்கள் வைத்துக் கொள்வார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட நான் என்னுடைய பிரதேசத்திற்குரிய மொழியை அது இறந்து போய் விடாமல் உயிரோடு இருப்பதற்கான முயற்சியைத் தான் படைப்பிலக்கியங்கள் மூலமாக நான் தொடர்ந்த செய்கிறேன். அதாவது சென்னைப் பொதுக் கூட்டத்தில் நான் பேசிய ஒரு விஷயம் என்னுடைய நாவலில் ஒரு வழக்கு மொழியை கையாளவதன் மூலம் அந்த சொல்லை ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும். இதை ஒரு பெரிய சேவை என்று நினைக்கிறேன்.
இப்படியான உங்களுடைய எழுத்துலக சூழலிலே இன்னுமொரு பரிமாணமாக அதாவது ஒரு எழுத்தாளனுக்கு பரந்துபட்ட ஒரு களத்தைக் கொடுக்கின்ற ஒரு ஊடகமாக சினிமா என்கின்ற ஊடகம் திகழ்கின்றது. ஊடங்களுக்கு முன்னால் இருக்கின்ற பல எழுத்தாளர்களுடைய படைப்பிலக்கியங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா உலகத்தைப் பொறுத்தவரையிலே படைப்பு அல்லது ஒரு நாவல் அல்லது ஒரு சிறுகதை காட்சி வடிவம் பெறும் பொழுது அதனுடைய அந்த உள்ளார்த்தம் திரிக்கப்படுகின்றது அல்லது சிதைவுறுகின்றது என்கிற விமர்சனம் எழுகின்றது. உங்களுடைய படைப்பு அப்படி ஒரு சந்தர்ப்பத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?
என்னுடைய "தலைகீழ் விகிதங்கள்" என்கிற நாவல் "சொல்ல மறந்த கதை" என்கிற பெயரில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படமாக வந்தது. தங்கர்பச்சன் இயக்கத்தில் சேரன் நடித்த முதல் படம் அது. நான் இதை வேறு விதத்திலே பார்க்கிறேன். நாவல் என்கிற தளம் வேறு சினிமா என்கிற தளம் வேறு. சினிமாவைப் பார்க்க போகக் கூடாது என்று நினைக்கிறவன் நான்.
நாவல் கையாளுகின்ற மொழி வேறு. இந்த குறிப்பிட்ட திரைப்படம் கையாளுகின்ற மொழி வேறு. நாவல் கையாண்ட தொழில் வேறு திரைப்படம் கையாண்ட தொழில் வேறு. இது வந்து என்னுடைய நாவல் சிதைக்கப்பட்டது என்கிற ஒரு எண்ணத்தில நான் சொல்லலை. என்னுடைய நாவலை எடுக்கிற போது அவருக்கு நாஞ்சில் வழக்கு மொழி புரியாத போது நெல்லை விவசாயம் பற்றி அறிவு இல்லாத போது எப்படி முடியும்? ஒரு இயக்குனர் அது இயக்குனருடைய மீடியம் அந்த இயக்குனர் அந்த தொழில் அந்த மொழியை எப்படிக் கையாள முடியும் என்கிற கேள்வி நம்மகிட்டே இருக்கு. ஒரு நாவலில் இருந்து அதாவது ஒரு நாவலைத் திரைப்படமாக்குவது என்பது அப்படியே திரைப்படமாக்குவது என்பது வரிக்கு வரி திரைப்படமாக்குவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல
அவர்களுக்குத் தேவையானது முக்கியமான 5 அல்லது 6 காட்சிகள். அதை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு இயக்குனருடைய பார்வையில் மூலம் அந்த நாவலை அவர்கள் திரைப்படம் என்ற இன்னொரு வடிவத்தில் வெளியே தருகிறார்கள். அது சிறந்த திரைப்படமா இல்லையா என்பதில் என்னுடைய விமர்சனங்கள் உண்டே தவிர என்னுடைய நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டது அதனுடைய மொழி சிதைக்கப்பட்டது, பிரதேசம் சிதைக்கப்பட்டது என்பதில் எனக்குப் பிரசனை இல்லை.
படித்துறை என்கிற திரைப்படத்தின் மூலம் திரையிசைக் கவிஞராக நீங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றீர்கள். அந்த வாய்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
படித்துறை என்கிற படம் சுகா என்கிற இயக்குநரால் எடுக்கப்படுகிற படம். சுகா எனக்கு நெருக்கமான நண்பர். என்னுடைய அண்ணாச்சி நெல்லைக் கண்ணனுடைய பையன். என்னடைய மகன் என்கிற இடத்தில் இருப்பவர். அவருடைய படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. இசை மேதை அவர். அதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இளையராஜா வந்து தன்னுடைய காலகட்டத்திலே வாழ்கின்ற சிறந்த படைப்பாளிகளை திரைக்கான பாடலை எழுதிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. பேராசை என்று நான் சொல்லி விட முடியாது.
அதனால எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனுடன் என்னையும் அழைத்து இந்த படித்துறை படத்திற்கு பாடல் எழுதச் சொன்னார். ஜெயமோகனுடைய பாடல் சில காரணங்களினால் இந்தப் படத்தில் இடம்பெற முடியவில்லை. நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதிய பாடல் இடம்பெற்றிருக்கின்றது. அதன் மூலம் எனக்கு திரையிசைப் பாடல் என்றால் என்ன என்பது போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது. சினிமாப் பாடல் என்பது வேறு. நம்முடைய கவிதை என்பது வேறு. சினிமா வேறு வடிவத்திற்காக வேறு எழுத்திற்காக எழுதப்படுகிற ஒரு வடிவம். இது பற்றிய அறிவும் அனுபவமும் எனக்கு கிடைத்தது. இதை வந்து ஒரு சந்தோசமான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன்.
நிறைவாக, கேட்டுக் கொண்டிருக்கின்ற வாசகர்களுக்கு, நேயர்களுக்கு ஏதாவது கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
இந்த நேர்காணலை கேட்டுக் கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழனுக்கு என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய மொழி அளப்பரிய ஆற்றல் கொண்டது. வரலாற்றுச் சிறப்புக் கொண்ட தொன்மை கொண்ட மிகச் சிறந்த இலக்கியங்களை உள்ளடக்கிய மொழி. இந்த மொழியில் எங்களாலான கூடுதலான நூல்களை இயற்ற முயன்று கொண்டிருக்கிறேன். இந்த மொழியை கற்பதன் மூலம் நலீன இலக்கியங்களை கற்பதன் மூலம் நம்மடைய மொழியினுடைய செழுமையை மேம்படுத்த முடியுமென்றும் இந்த மொழியினுடைய தொடர்ச்சியை வரும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல முடியும் என்றும் சொல்லி என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம்.
Saturday, July 23, 2011
Thursday, July 07, 2011
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்
இன்று காலை என் மின்னஞ்சலுக்கு GTV தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பர் மூலம் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்று காலமான செய்தியைக் கண்டு பெருந்துயருற்றேன். ஈழத்திற்கு அப்பால் தமிழகத்திலும் பரவலாக அறியப்பட்ட ஏற்றுக்கொள்ள எம் புலமைச் சொத்துக்களில் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் சிறப்பு ஆய்வரங்கள் சிலவற்றில் இவரின் பகிர்வுகளைத் தூர இருந்து கேட்டதோடு சரி. அவுஸ்திரேலியாவுக்கு வந்து வானொலிப்பணியில் என்னை ஈடுபடுத்தியபோது ஏ.ஜே.கனகரட்ணாவின் இழப்புச் செய்தியை வானொலியில் ஒரு அஞ்சலிப்பகிர்வாகச் செய்ய விழைந்த போது வானொலியாளர் அமரர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் மனைவியார் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள், பேராசரியர் சிவத்தம்பி அவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார். அன்றிலிருந்து கவிஞர் முருகையன் இழப்பு வரை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடவும் அவரின் பகிர்வுகளை வானொலியில் எடுத்துவரவும் உதவினார். "தம்பி! இப்பிடிச் செஞ்சா நல்லா இருக்கும் மேனை" என்பது வரை அவரது அக்கறை இருந்தது. இவ்வளவு பெரிய ஆளுமை இந்தச் சிறியோனின் பணிகளுக்குக் கேட்டமாத்திரத்தில் ஓம் தம்பி செய்வம் என்று ஒத்துழைத்தது அவரின் இன்னொரு எளிய பண்பிற்கு அடையாளமாக அமைந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எழுபத்தைந்தாவது அகவையை ஒலி ஆவணப்படுத்தலாக அமைக்க முனைந்தபோது பிரான்சில் வாழும் சகோதரர் கி.பி.அரவிந்தன் மற்றும் முகம் காட்ட மறுக்கும் நண்பர்கள் பேருதவி அளித்தார்கள். அந்த ஆவணத்தை நூலுருவில் கொண்டுவரவேண்டும் என்று பலசந்தர்ப்பங்களில் எண்ணியிருந்தேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் பேர் சேர்த்த சிவத்தம்பி அவர்களைத் துணைவேந்தராக மகுடம் சூட்டிப் தன்னைப் பெருமைகொள்ளவைக்கவில்லையே என்ற ஆதங்கம் சிவத்தம்பி அவர்கள் எம்மைக் கடந்து போனபின்னும் ஆதங்க இருப்பாய் உழன்றுகொண்டிருக்கின்றது.
சிவத்தம்பி ஐயா! இப்போது தான் உங்களின் இளைப்பாறும் நேரம் என்று நினைத்து அமைதி கொள்வோம்.
எழுபத்தைந்தில் பேராசான் கா.சிவத்தம்பி
தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.
ஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள். இந்த ஆலமரத்தின் விழுதுகள் போல் அவரின் பெருமையைச் சேர்க்கும் மாணவ சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களது பவள விழாவினை அவருக்கு உலகெங்கும் வாழும் தமிழினம் நடாத்துகின்றது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்னர் துறைசார் அறிஞர்களையும் , பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி செய்யக் கங்கணம் கட்டியிருந்தேன்.
இந்த வருஷமும் முடியப் போகின்றது ஆனால் எடுத்திருந்த ஒலிப்பகிர்வுகளை முறையாகக் கோர்த்து வெளியிடுவதில் நேரமும் காலமும் பிடிக்கிறதே என்ற கவலை வந்தாலும் முழு மூச்சோடு போனவாரம் இந்தப் படைப்பை 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஓடும் ஒலிப்பெட்டக நிகழ்ச்சியாகச் செய்து முடித்தேன். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானலைகளிலும் அரங்கேறியது. ஆசைக்கு அளவில்லை என்பது போல, இந்த ஒலிப்பெட்டக நிகழ்ச்சியில் இடம்பெற்ற தேர்ந்தெடுத்த பகிர்வுகளைத் தட்டச்சியும் பாதுகாத்து உங்களுக்கும், எதிர்காலத்துக்கும் தர வேண்டும் என்றும் ஒரு ஆசை. அதுவும் இப்பதிவோடு நிறைவேறுகின்றது.
இப்பெருமுயற்சிக்கு எனக்கு ஒத்துழைப்பு அளித்து ஒலிப்பகிர்வை வழாங்கிய கல்விச் சமூகத்திற்கும், ஒலிபரப்ப உதவிய அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், ஒருங்கிணைப்பில் உதவிய கி.பி அரவிந்தன் அவர்கட்கும், ஒலிப்பதிவில் உதவிய நண்பருக்கும், உசாத்துணையில் உதவிய பல்வேறு நூல்கள், குறிப்பாக வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் பதிப்பித்த "கரவையூற்று" என்னும் பேராசிரியர் சிவத்தம்பி குறித்த பல்முக நோக்கு நூலிற்கும் பதிவுக்கான படங்களை உதவிய யூ.எஸ்.தமிழ்ச்சங்க இணையத்துக்கும், சுந்தாவின் "மன ஓசை" நூலிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பதிவினை முழுமையாகவோ பகுதியாகவோ மீள் பிரசுரம் செய்ய விரும்புவோர் தயவு செய்து kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு மடல் இட்டு உறுதிப்படுத்த வேண்டுகின்றேன்.
ஒலிப்பெட்டகம்
பாகம் 1
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதனிலை விரிவுரையாளரும்,கலை கலாசார பீடத்தின் பட்டப்படிப்பின் இணைப்பாளருமான பேராசிரியர் அம்மங்கிளி முருகதாஸ் அவர்கள் வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் கல்விப்புலமைப் பயணத்தைப் பற்றிப் பேசுகின்றார். தொடர்ந்து பிரபல எழுத்தாளர், விமர்சகர், கலைஞர் திரு இரவி அருணாசலம் அவர்கள் தனது குருவுக்கும் தனக்கும் இடையிலான ஆசிரிய மாணவ உறவைக் கடந்த அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து " தமிழ் கலை இலக்கியப் பரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இடம்" குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் பகிர்வு.
பாகம் 2
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் , ஏறக்குறைய 2300 ஆண்டு தொன்மை மிக்க தமிழின் வரலாறு பண்பாடு குறித்து மேற்கொண்ட ஆய்வுப்பணிகளைச் சிலாகின்றார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்கள். தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மாணவியரில் ஒருவரான திருமதி சுமத்திரி.பிரான்சிஸ் அவர்கள் தன் ஆசான் பேராசிரியர் சிவத்தம்பியின் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து கிழக்குப் பல்கலைக்கழத்தில் பேராசிரியரின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் கருத்துரை.
பாகம் 3
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள், பேராசிரியர் சிவத்தம்பிக்குள் இருந்த நடிகனையும், நாடகத் தயாரிப்பாளரையும், புதிய நாடக வடிவங்களை ஏற்படுத்த ஏதுகோலாக இருந்த செயற்பாட்டையும் தன் வாழ்வியல் அனுபவத்தினூடே விளக்குகின்றார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு
பேராசிரியர் சிவத்தம்பிக்கு 75 வயது ஆகிவிட்டது. இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார்.
இவற்றிற்கும் அப்பால் இவர் மிகச்சிறந்த நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் இருப்பதும் ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்வதும் சிலர் அறியாத விடயமாகும்.
நான் இங்கு பேராசிரியரின் நாடக விடயங்களையும் அவருடன் எனக்கிருந்த உறவுகளையும் அழுத்திக் கூற விரும்புகிறேன். எனக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமான உறவு ஏறத்தாழ 45 வருடகால உறவாகும். இதை அரை நூற்றாண்டு உறவு எனலாம்.
ஈழத்தின் வடபால் பிறந்த ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஈழத்தின் கிழக்கிலே பிறந்தவன் நான் . இந்த இரண்டையும் இணைத்து வைத்த பெருமை நாடக கலைக்கு இருப்£தை நான் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன்.
1959ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்தேன். அப்போது நான் 16-17 வயது மாணவனாக வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலே பயின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு கூத்து அரங்கேற்றப்பட்டது. பேராசிரியர் நித்தியானந்தனும் பேராசிரியர் சிவத்தம்பியும் அந்த கூத்தை பார்வையிட வந்திருந்தனர்.
இரண்டு பெரிய ஆகிருதிகளும் அந்த கூத்தை வெகுவாக இரசித்தார்கள். கூத்து முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் கூத்தாடிய எல்லா மாணவர்களுக்கும் உச்சி முகர்ந்து கன்னம் தடவி வாஞ்சையுடன் எமமை வாழ்த்தினார்கள். அந்தப் பார்வை , அந்த நெருக்கம் , அந்த உறவுதான் எனக்கும் போராசிரியர் சிவத்தம்பிக்கும் ஏற்பட்ட முதலாவது உறவாக அமைந்தது.
அதன் பின்பு அந்த கூத்தை பேராதனைப் பல்கலைக்கழக மேடையில் அரங்கேற்றினார்கள். அப்போது நிறைந்த ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. அதை மேடை ஏற்றும்படி கூறியிருந்தவர்கூட பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான்.
1961 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கிழக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்தோரே அப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அந்த காலப்பகுதியில் சரத் சந்திரா அவர்கள் சிங்கள நாடக உலகிலே கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தார். சிங்கள மரபு வழி நாடகங்களை அடிப்படையாக வைத்து அவர் "மனமே சிங்கபாகு" அவர் போன்ற சிறந்த நாடகங்களை தயாரித்திருந்தார். அவை தனித்துவம் கொண்ட சிங்கள நாடகங்களாக அறியப்பட்டிருந்தன. அதனால் அவை நல்ல வரவேற்பை பெற்றன. பேராசிரியர் சரத் சந்திரா ஒரு நல்ல மனிதர், மிகவும் இன செளஜன்யத்தை விரும்புகின்ற ஒரு நல்ல புத்திஜீவி.தனது நாடகங்களுக்காக தமிழ்க்கூத்திலிருந்தும் சில அம்சங்களை தான் "மனமே சிங்கபாகு" போன்ற நாடகங்களுக்கு எடுத்துக் கொண்டதாக அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.
இவற்றைப் பார்த்தபோது தான் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஈழத்துக் கூத்து மரபில் இருந்து ஈழத்து தமிழ் நடன நாடக வடிவத்தை உருவாக்க முடியாதா என்ற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு அடித்தளமாக மட்டக்களப்புக் கூத்துக்கள் அமைந்திருந்தன. மட்டக்களப்பு கூத்துக்களில் தான் தாளக்கட்டுக்களும் ஆடல்களும் நிறைந்திருந்தன. அவற்றை அடிப்படையாகக்கொண்டு பேராசிரியர் நித்தியானந்தன் இத்தகைய நாடகங்களை தயாரிக்க வேண்டும் என்று அவாக் கொண்டிருந்தார். இதற்கு பின்பலமாக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
நாங்கள் பேராதனைக்கு சென்றபோது பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் கூத்துக்களைப் போட ஆரம்பித்திருந்தார். எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது, பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது 61 ஆம் ஆண்டிலே கர்ணன் போர், 62 ஆம் ஆண்டிலே நொண்டி நாடகம், 64 இலே இராவணேசன், 65 இலே வாலி வதை என்று மட்டக்களப்பின் தென்மோடி, வடமோடி நாடகங்களை செழுமைப்படுத்தி பேராசிரியர் சரத் சந்திரா பாணியிலே வித்தியானந்தன் தயாரிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. காலனித்துவ சிந்தனைகளாலும் மேற்கு மோகத்தாலும் சூழ்ந்திருந்த அந்த பேராதனை மண்ணிலே கூத்துக்கள் மத்தள ஒலியும் சலங்கை ஒலியும் கேட்க ஆரம்பித்தன.
கிராமிய சூழலிலமைந்த கூத்துக்கள் ஆட ஆரம்பித்தன. அந்த நாடகங்களை தமிழ் மாணவர்கள் வியப்போடு பார்த்தார்கள். அப்போது ஒரு கலக்கு கலக்கியது பேராதனைப் பல்கலைக்கழகம். எப்படி சிங்கள மாணவர்கள் மத்தியிலே பேராசிரியர் சரத்சந்திரா அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ வகித்தாரோ அதே தாக்கத்தை பேராசிரியர் நித்தியானந்தன் பேராசிரியர் சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மாணவர்கள் மத்தியிலே ஏற்படுத்தினார்.
அந்த அருமையான காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்போது தான் பேராசிரியர் சிவத்தம்பி பற்றி மெல்ல மெல்ல அறிய ஆரம்பித்தேன். அவர் அதற்கு முன்னரேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்திருக்கிறார். அவர் மாத்திரமல்ல பேராசிரியர் கைலாசபதியும் நடித்திருக்கிறார். பேராசிரியர் சிவத்தம்பி ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்திருக்கிறார்.
அவருடைய விதானையார் வீடு என்ற நாடகத்திலே அவர் பாத்திரம் மிகவும் பிரபல்யமானது.
( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).
இதைவிட அவர் நாடக எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். இவ்வண்ணமாக இந்த ஆய்வுத்துறைக்கு வர முதல் ஒரு நாடக கலைஞர் ஆகத் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்.
இதைப்பற்றி கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே குறிப்பிடுகின்ற பொழுது இவர் நடிப்பிலே சிறந்தவராக இருந்தவர் என குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை எப்படி சுருக்கலாம் என்ற ஆலோசனைகளை தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. இந்தக் காலகட்டத்திலே தான் பேராசிரியர் சிவத்தம்பியினுடைய நாடகப் படைப்பாற்றல் பணிகளை நான் அருகிலிருந்து அவதானித்தது மாத்திரமல்ல, அவரிடமிருந்து அதிகம் பெறவும் கூடியதாக இருந்தது.
இந்தக் கூத்துக்களை எப்படிச் சுருக்கலாம் என்பதை எனக்கு அவர் மிகவும் அதிகமாக விளங்கப்படுத்தினார். கர்ணம் போர், நெண்டி நாடகம், போன்ற நாடகங்களை மட்டக்களப்பு மரபு வழி நாடகங்களில் இருந்து நாங்கள் சுருக்கினோம். ஏற்கனவே கூத்தில் கொஞ்சம் பரிச்சயம் என்றபடியால் என்னைத்தான் அவற்றைச் சுருக்குவதற்குக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் முழு ஆலோசனைகளையும் தந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும் , பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களும்.
பிறகு அந்தக் கூத்துக்கள் மேடையேற்றுகின்ற போது கூத்தின் வீரியம் கெடாமல் ஒரு வட்டக்களரியில் ஆடப்பட்ட கூத்தினை எப்படிப் படச்சட்ட மேடைக்குள் போடலாம் என்பதை அதனுடைய வீரியமும் அதனுடைய தன்மையும் கெடாமல் அதனுடைய தாற்பரியங்களைப் புரிந்து கொண்டு மேடையிலே போடவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
இராவணேசன் மட்டக்களப்பு கூத்துப் பாணியில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாடகம். காரணம் மட்டக்களப்பு கூத்துக்களிலே ஒரு எடுத்துரை அரங்காகத் தான் அது இருக்கும். ஆனால் அதில் பாத்திரப் பண்புகள் வராது. இராவணேசனை பாத்திர குணாம்சம் பொருந்தியவராக மாற்றுவதற்கு பேராசிரியர் சிவத்தம்பி விரும்பினார். துன்பியல் நாயகனாக அவனைப் படைக்கவேணும் என்று அவர் கூறினார். துன்பியல் நாயகனை கிரேக்க நாடகங்களில் காணலாம்.
கிரேக்க நாடகத்திலே விதிக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கின்ற போட்டியிலே மனிதன் விழுவான். அந்த வீழ்ச்சி ஒரு துன்பியலாக இருக்கும். பல நல்ல குணங்கள் இருந்தும் ஒரு தீய குணத்தால் தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொள்பவன் தான் துன்பியல் நாயகன். இராவணேசனை அப்படியொரு துன்பியல் நாயகனாக மாற்றவேண்டுமென சிவத்தம்பி அவர்கள் கூறினார். அதன்படி அவர் கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தை எனக்குப் படிப்பித்தார்கள். இதைத்தான் எழுதும் படி கேட்டுக் கொண்டார். எப்படி இராவணன் சிந்தித்தான், எப்படிப் போனான், எப்படி துன்பியலுக்கான அடித்தளம் போடப்படுகின்றது என்பதை யுத்தகாண்டத்தினை படிப்பிப்பதனூடாக கூறி அந்த பாத்திரத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் விளைவாகத் தான் இராவணேசன் உருவாகியது.
இந்த இராவணேசன் நாடகத்தில் ஒரு கூத்தை நாடகமாக மாற்றுவதற்கு பேராசிரியர் நித்தியானந்தனுக்கு பேராசிரியர் சிவத்தம்பி நிறைய உதவியாக இருந்தார். அவர் சொல்லுவார் பாட்டை எப்படி நடிப்பாக வைரமுத்து அவர்கள் மாறினார்களோ அதோ போல ஆட்டம் நடிப்பாக மாறவேண்டும் என்று அடிக்கடி சிவத்தம்பி அவர்கள் கூறுவார்.
முக்கியமாக இராவணேசனின் பிரதியாக்கம் பெற உதவியாக இருந்தார். அது மாத்திரம் இல்லை கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் போன்ற நாடகங்களுக்கு உதவித்தயாரிப்பாளராகவும் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கர்ணம் போரில் தயாரிப்பாளர் அதாவது நெறியாளர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.உதவியாளர்கள் பேராசிரியர் கைலாசபதியும், பேராசிரியர் சிவத்தம்பியும். பிறகு வந்த நாடகங்களுக்கெல்லாம் உதவியாளராக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சி படப்பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களைப் படுத்தும் பாடுதல் என்று பாடும் முறைமையினைக் காட்டித் தந்ததோடு, ஒரு வட்டக்களரியிலே ஆடும் ஆட்டத்தை படச்சட்ட மேடையில் ஆடும் முறைமையினையும் எமக்கு விளக்கியவர் சிவத்தம்பி அவர்கள்.
உதாரணமாக இராவணேசனில் ஒரு காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இராவணேசன் தன் படையை அனுப்புகின்ற கட்டம். நான் தான் இராவணனாக நடித்தேன். மிகுந்த பயிற்சியை எனக்கு அவர்கள் தந்தார்கள்.அவன் நீலன், சிங்கன், மகரற்கண்ணன், குருதிக்கண்ணன் என்று அணியணியாக அரக்கர்களை இராமனுக்கு எதிராக ஏவுகின்றான்.அதற்கு பின்னணியாக அப்போது விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கணீரென்று
"போவதோ எனது வீரம் வீழ்வதோ புகழென்றெண்ணி அடி சூழ் சேனையோடு சிங்கனை அனுப்பி வைத்தான்"
என்று பாடலைப் பாடியவுடன் அந்த இராணவனாக நடித்த நான் அபிநயத்து, மெல்ல நடந்து, மத்தள ஓசைக்குத் தக்க திரும்பி ஆடி, வேகமாக ஆடி மேடையின் வலது கீழ் மேடைக்கு வந்து இரண்டு கைகளையும் தூக்கி படைகளை அனுப்பி வைப்பேன். தொடர்ந்து ஒலிக்கும் பறையும் உடுக்கும், மத்தளமும், சங்கும் படை போவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். திடீரென்று அவை நின்றதும் இராவணன் உடலிலே சோர்வு தோன்றும். மேடையில் அமைதி நிலவும். படைகள் அழிந்து போகின்ற உணர்வு வரும். பிறகு மீண்டும் படைகளை அனுப்புவதற்கான பாடலை சண்முகதாஸ் அவர்கள் பாடுவார்கள். இவ்வண்ணமாக கூத்திலே இல்லாத ஆனால் கூத்தை அடிநாதமாகக் கொண்ட காட்சியமைப்புக்களை மிக அற்புதமாக உருவாக்கினார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அதே போல் இராவணனும் இராமனும் போரிடுகின்ற கட்டத்தை அவரே படைத்தார். கூத்திலே அப்படி ஆடுவதில்லை. மிக இலாவகமாக, மிக வேகமாக ஆடி அந்தக் களரி ஆட்டத்தை முடிப்பார்.
எனக்கு ஒரு ஞாபகம் வருகின்றது.
ஒரு நாள் ஒத்திகை நடந்து கொண்டிருக்கின்றது. இராவணேசன் நாடகம், இராவணேசனாக நான், நீலன், மகரன், குருதிக்கண்ணன் எல்லாரையும் அனுப்பி, இந்திரஜித்தையும் அனுப்பி, உறவுகளையும் இழந்து, எல்லாரும் போய் விட்டார்கள், இனி யுத்தத்திலே வெல்ல முடியாது என்கின்ற நிலையிலே இராவணன் நிற்கின்றான். அவனுடைய சோர்வு, துக்கம், துயரம், வெட்கம், கோபம், எல்லாவற்றையும் முகத்திலே கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது முயற்சி எடுத்து நடிக்கின்றேன். சிவத்தம்பி அவர்கள் தலையாட்டிப் போட்டுச் சொல்கின்றார் போதாது என்று. அருகிலே சுங்கானோடு பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நிற்கின்றார். உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கின்றார். மீண்டும் நடிக்கின்றேன். வித்தியானந்தனும் திருப்தியின்றித் தலையசைக்கின்றார். இருவர் முகத்திலும் திருப்தியில்லை. என்னால் இனிமேல் நடிக்கமுடியவில்லை. சோர்ந்து போனேன், அப்போது எனக்கு வயது 21 இருக்கும். சிவத்தம்பி அவர்கள் என்னை அழைக்கின்றார்கள். யுத்த காண்டத்தில் இராவணேசனின் தோல்வியை விளக்கி கம்பன் பாடல் ஒன்ரையும் கூறி விளக்குகிறார். தோல்வி மேல் தோல்வி பெற்ற இராவணன், வாளினைப் பார்க்கிறான், தன் தோளினைப் பார்க்கிறான், வலிய தன் கைகளைப் பார்க்கிறான், இறுதியில் நாணத்தால் குறுகிச் சிரிக்கிறான், அழுகிறான், கோவிக்கிறான், வெட்கப்படுகின்றான். இதற்கான கம்பனுடைய பாடலைக் கூறி கம்பன் கடைசி அடியிலே நகும், அழும், முனியும், நாணும் என்று கூறுகின்றார். "எங்கே சிரியும், அழும், கோபியும், நாணப்படும், இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முகத்திலே கொண்டுவாரும்" என்று அவர் கேட்கவும், அவர் கூற்றை உள்வாங்கிக் கொண்டேன். "எனக்கு கொஞ்ச நேரம் தாருங்கள்" என்றேன். ஒரு சின்ன இடைவேளை. நாங்கள் பழகிக் கொண்டிருந்த விரிவுரை மண்டபத்துக்கு அருகிலே தான் பாத்றூம் இருந்தது. சுற்றி வர நிலைக்கண்ணாடி. போய் நடித்துப் பார்க்கின்றேன். திருப்பி திருப்பி நடித்துப் பார்க்கின்றேன். திருப்தி ஓரளவுக்கு வருகின்றது. மீண்டும் அவர்களுக்கு முன்னால் வந்து ஒத்திகை ஆரம்பமாகின்றது. நானும் காட்சியைச் செய்தபோது வித்தியானந்தனின் முகமும், சிவத்தம்பியின் முகமும் மலர்ந்ததும், ஒத்திகை முடிய அவர்கள் வந்து பாராட்டியதும் என் வாழ்வில் மறக்க முடியாத கணப்பொழுதுகள். இன்றும் அதை நினைத்து நினைத்து மகிழ்வேன், நெகிழ்வேன். செதுக்கிய அந்தச் சிற்பிகள் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது.
கூத்தை நாடகமாக்கிய அந்தக் காலகட்டங்களிலே தான் கிழக்கத்தேய நடிப்பு முறை என்ற உண்டு என்பது எனக்கு பொருள்பட விளங்கியது. இத்தனை சிக்கலான ஆக்கங்களும், தாளக்கட்டுக்களும், செழுமையான பாடல்களும் கொண்ட இக்கூத்து எப்படி ஒரு கிராமிய நாடகமாக இருக்க முடியும் என்று எம்மிடம் கேட்பார் சிவத்தம்பி அவர்கள். அக்கினிக் குஞ்சாக என் மனதுக்குள் புகுந்த அவரது கருத்துத் தான், எனது "மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்" என்ற பி.எச்.டி ஆய்வாக விரிந்தது. 660 பக்கங்களிலே அது வந்திருக்கின்றது. அதில் தமிழர்களுடைய தொன்மை பொருந்திய மரபில் ஒன்று கூத்து என்று நான் எழுதியிருக்கின்றேன்.
டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதேபோல் இந்த கூத்தை வைத்து கொண்டு செழுமை பொருந்திய பழைய நாடகமரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
உலகளாவிய பல விடயங்களை வயதுக்கு மீறி திணித்து சிந்திக்க வைத்து செதுக்கிய பெருமை முக்கியமானவர்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பியும், வித்தியானந்தனுமே. அந்த உறவு பின்னர் நன்றாக விரிந்தது. கொழும்பிலே அவர் அப்போது நாடகக்குழு தலைவராக இருந்தார். ஈழத்தின் தமிழர் வாழ் பிரதேசங்களுக்கெல்லாம் சென்று அந்தக் கூத்து மரபுகளை அறிகின்ற பணியிலே எங்களை ஊக்குவித்தார்.நானும்; சண்முக சுந்தரமும் எல்லா இடங்களுக்கும் பேராசிரியர் சிவத்தம்பியின் பிரதி நிதிகளாகச் சென்றோம். வன்னியிலே 1971/ 72 இலே ஒரு பெரிய மாநாட்டை கூட்டுவதற்கு ஒழுங்கு செய்தார் சிவத்தம்பி. வன்னிக்கலைகளை வெளியுலகுக்கு கொண்டு வருகின்ற முயற்சி தான் அது. வன்னி மாநிலத்திலே இருக்கின்ற கூத்து, கரகம் கோவலன் கூத்து சிலம்பு கூறல் குடக்கூத்து போன்ற பல்வ்வேறு கலைகளை வன்னி மாநிலத்திற்க வெளியே கொண்டு வருகின்ற முயற்சி தான் இது.
அந்தக் காலகட்டத்திலே தான் கொழும்பிலே தாசீசியஸ், சுந்தரலிங்கம் ஆகியோர் கொழும்பிலே நாடகங்களைப் போடுகின்றார்கள்.
சுந்தா என்று அறியப்பட்ட பி.பி.சி சுந்தரலிங்கம் அவர்களின் வீட்டில் நான் குடியிருந்தேன். அந்த வீட்டு மொட்டை மாடியில் இந்த வகையான நாடகங்கள் பழகப்பட்டன. அந்த மொட்டை மாடியில் இருந்து சுந்தா, கைலாசபதி, சிவத்தம்பி, எல்லோரும் சூழ்ந்திருக்க தாசீசியஸ், நான், சுந்தரலிங்கம் போன்றோர் இந்த நாடகங்களைப் பழகிய அற்புதமான காலங்கள், கொழும்பில் இருந்த காலங்கள்.
பிறகு 80 களுக்கு பிறகு நான் யாழ்ப்பாணம் வந்து விடுகின்றேன். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நுண்கலைத் துறைத் தலைவராக இருக்கின்றார். அவருக்கு கீழே நுண்கலைத் துறை விரிவுரையாளராக இருந்தேன்.
யாழ்ப்பாணத்திலே புதிய நாடக மரபு ஒன்று உருவாக ஆரம்பிக்கின்றது. அந்த நாடக மரபுக்குப் பின்புலமாக இருந்து ஊக்க சக்தி கொடுத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். நான் அப்போது தயாரித்த எல்லா நாடகங்களுக்கும் அவர் ஆலோசகராக இருந்தார்.
முக்கியமாக புதியதொரு வீடு நாடகம் தயாரிக்கப்பட்ட போது அவர் ஸ்ரனிஸ்லவஸ்கியின் மெதேட்டை எப்படி கொண்டு வரலாம் என்பதை அன்று நடிக்கப் பழக்கினார். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். இராவணேசன் மூலம் கீழத்தேய மரபை சிவத்தம்பி மூலம் கற்ற நான் யாழ்ப்பாணத்தில் ஸ்ரனிஸ்லவஸ்கியின் நாடக மரபை கற்கக் கூடியதாக இருந்தது.
அவர் ஓய்வு பெற்ற பின் கிழக்குப் பல்கலைகழகத்திற்கு இரண்டாண்டுகள் வந்து, லயம், இராவணேசன், கிழக்கிசை அவருடைய வழிகாட்டலில் நுண்கலைத்துறை செய்கின்றது.
ஒன்றை மட்டும் நிறைவாகச் சொல்லி வைக்கின்றேன். சிவத்தம்பி அவர்களை தந்தை போன்று உரிமையோடு சண்டை இட்டுக்கொள்வோம், சண்டை வரும், சமாதானம் வரும், தந்தைக்கும் மகனுக்குமுரிய எல்லா மோதல்களும் அதிலே வரும்.
ஆனால் அடி நாதமாக ஓடுவது ஒரு பாசம் தான். அந்த உறவு தான் ஸ்தாயிபாவமாக எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.
ஆரம்ப காலத்திலே தத்துவத்தின் அடியாகத்தான் எல்லாவற்றையும் விளக்க முயன்றார். நடந்து கொண்ட எல்லா விடயத்தையும், நடைமுறைகளையும் தத்துவமாக உருவாக்க முயன்றார். அதை எப்படிக் கூறலாம் என்று சொன்னால் விளக்க முயன்ற காலம் பழைய காலமானால் விளங்கமுயன்ற காலம் பிற்காலமாக காணப்படுகின்றது.
நாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார். பண்பாட்டில் வலிமையிலே அவர் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனபடியால் தான் அவர் பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் அப்பால் சென்று பண்பாட்டடியாக தமிழ் மக்களைப் புரிந்து கொள்ள அவர் முயன்றார்.
சிவத்தம்பி அவர்கள் ஆய்வாளர் , விமர்சகர் , கவிஞர் , சிந்தனையாளர். இவற்றுக்கும் அப்பால் ஒரு நடிகர் நாடக எழுத்தாளர். நாடக நெறியாளர். மரபு வழி நாடகங்களை செழுமைப்படுத்தியவர். நாடகங்களையும் அரங்கியலையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியத்தை தனக்கு பின்னால் உருவாக்கி சென்றவர். இந்த பகுதி இன்னும் விரிவாக எழுதப்படுகின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் இன்னொரு ஆளுமையின் முகம் வெளியே தெரிய வரும் என்றார் பேராசிரியர் சி.மெனகுரு.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்களின் பகிர்வு
பேராசிரியர் சிவத்தம்பியின் எழுபத்தைந்தாவது அகவையில் அவர் குறித்துப் பேசுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய ஆய்வுகள் குறித்து 2005 டிசெம்பர் மாதத்தில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையும், ரொறொண்டோ பல்கலைக் கழக தென்னாசிய ஆய்வு மையமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை நடாத்தினோம்.
அந்தக் கருத்தரங்கில் தமிழ் நாட்டிலுள்ள மிக முக்கியமான ஆய்வாளர்கள் பெரும்பகுதியானோர் பங்கேற்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தமிழியல் ஆய்வும் அவரது வகிபாகமும் திசை வழிகளும் என்ற கருத்தரங்கு மூன்று நாள் சென்னைப் பல்கலைக்கழக சஙக இலக்கியத்துறையில் நடைபெற்றது.
தமிழர்களுடைய வரலாறு என்பது 2300 ஆண்டுகளைக் கொண்டது என்பது வரையறுக்கப்பட்டு விட்டது. அதற்கு முன் இருக்கலாம்.ஆனால் சான்றுகளின் படி 2300 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ் மொழி பேசும் இனக்குழு இருந்திருக்கின்றது என்பது உறுதி பெற்றிருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் 2300 ஆண்டுகளுக்கான நீண்ட நெடிய வரலாற்றை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தங்களுடைய ஆய்வின் மூலமாக எப்படியெல்லாம் பதிவு செய்திருக்கின்றார் என்பதை உங்களோடு நான் பகிர விரும்புகின்றேன்.
பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வுகள் கி.பி 2000 இற்கு முற்பட்ட காலம் பற்றிய தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ச்சமூகம் என்ரு ஒரு பிரிவாகச் சொல்லலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான தமிழ் இலக்கியம், கல்வெட்டுக்கள், அது சார்ந்த ஆய்வுகளையும் இன்னொன்றாகச் சொல்லலாம். மூன்றாவதாக 20 ஆம் நூற்றாண்டு பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்த ஆய்வுகள் என்று சொல்லலாம்.
இந்த முதல் நிலையில் அதாவது தொல்பழங்காலம் பற்றிய, தமிழர்கள் பற்றிய ஆய்வு என்பது மிக முக்கியமான ஒரு ஆய்வாக இருக்கின்றது. குறிப்பாக பிரித்தானியர்கள் தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படும் இந்துஸ்தான் என்ற நிலப்பகுதியில் அவர்கள் ஆட்சி அதிகாரம் செலுத்திய பொழுது அவர்கள் செயத முக்கிய ஆய்வு கல்கத்தாவை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் உருவாக்கிய ஏஷியாட்டிக் சொசைட்டி என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தியவியல் ஆய்வுகளைத் தொடங்கினார்கள். அந்த ஆய்வில் இந்தியா என்ற நாடு சமஸ்கிருத மொழியை முதன்மையாகக் கொண்டதாகவும், ஆரியர் என்ற தேசிய இனத்தைக் கொண்டதாகவும் அவர்களது ஆய்வுகள் நடைபெற்றன. வில்லியம் ஜோன்ஸ் தொடங்கி பிறகு வில்சன், பேராசிரியர் மாக்ஸ்முல்லர் வரை இந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இவர்கள் எல்லோரும் இந்தோ ஆரியம் சார்ந்த சமஸ்கிருதம் தான் இந்தியாவின் முதன்மையான மொழி என்றும், முதன்மையான பண்பாடு அந்த சமஸ்கிருத மொழியைச் சார்ந்த வேதகாலப் பண்பாடு என்ற வகையில் தான் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
மாறாக 1900 தொடக்கம் 1924 வரை தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் பெரியவர்கள், குறிப்பாக சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும், பின்னர் உ.வே.சாமிநாத ஐயரும் சேர்ந்து தமிழ்ச் சுவடிகளில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிக அரிய தொல் பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றைப் பதிப்பித்து வெளியுலகுக்கு கொண்டு வந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வும் ஐரோப்பியர்களால் இந்தியா என்று கருதப்படும் நிலப்பகுதியில் சமஸ்கிருத மொழிக்கு மாற்றான இன்னொரு மொழிக்குடும்பம் இருக்கிறது என்பதையும், அந்த மொழிக்குடும்பத்துக்கென தொன்மையான பண்பாட்டு மரபுகள் தொடர்ச்சியாக இருக்கின்றன என்பதையும் உலகத்துக்குத் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
இந்தப் பின்புலத்தில் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய 1965, 75 ஆண்டுகளில் அவர் நிகழ்த்திய ஆய்வுகளின் மூலமாக இவ்விதம் இந்தியா என்ற நிலப்பகுதி சமஸ்கிருதம் என்ற மரபுக்கு அமைய ஒருபக்கம் இருக்கும் அதேவேளை மறுபக்கம் திராவிட மரபு எனப்படும் தமிழை முதன்மைப்படுத்திய ஒரு செம்மொழி இலக்கிய மரபும், ஒரு பழமையான தொல்காப்பிய இலக்கண மரபும் இருந்தது என்பதைச் சார்ந்த ஒரு அங்கீகாரம் இருந்தது.
அதில் பேராசிரியர் செய்த ஆய்வுகளில் அவரின் கலாநிதிப்பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வில், "பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம்" என்ற ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் மூலமாக கிரேக்கச் சமூகத்தில் இருக்கக் கூடிய பண்டை இன மரபுகள் சார்ந்த ஒரு இனக்குழுவைப் போலவே தமிழ் பேசக்கூடிய ஒரு இனக்குழு இங்கிருந்திருக்கிறது எனவும், அதில் ஒரு சமச்சீரற்ற சமூக அமைப்பு செயற்பட்டதென்பதும், அதில் பல்வேறு வகையான மரபுகளைக் கொண்ட கலைஞர்களும், குறிப்பாகப் பாணர்கள், புலவர்கள், விரலியர்கள் இப்படிப் பலர் வாழ்ந்தனர் என்றும், அவர்களுடைய கலை வடிவங்கள் செழுமையானவையாக நடைமுறையில் இருந்தன என்பதையும் தனது ஆய்வின் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இக்காலகட்டத்தில் எழுதிய மேலும் முக்கியமான சில ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது பண்டைத் தமிழ் சமூகத்தினுடைய திணைக்கோட்பாடு பற்றிய ஆய்வாகும். அதைப் போலவே பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் உருவான மேட்டிமை சார்ந்த தன்மை பற்றிய The development of aristocracy means in Tamil Nadu என்ற அவருடைய ஆங்கிலக் கட்டுரை. அதைப்போலவே திணைக்கோட்பாடு சார்ந்து உருவான உளவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள். ஏறக்குறைய அவருடைய கலாநிதி ஆய்வுப் பட்டமும் அதைச் சார்ந்த இந்த சங்க இலக்கியம் தொடர்பான பிற ஆய்வுகளும் ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்தன, என்னவென்று சொன்னால் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைப் போலவே திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் என்பது தொன்மையான நாகரிகம் என்றும் அந்த நாகரிகத்தைச் சார்ந்து ஒரு தொன்மையான கிரேக்க இலக்கியத்தோடு ஒப்பிடக்கூடிய ஒரு தொல் பழந்தமிழ் இலக்கியமும் உண்டு என்பதற்கான தர்க்கபூர்வமான, அறிவியல்பூர்வமான சான்றுகளை இவருடைய இந்த ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டன என்று சொல்லமுடியும்.
ஏனென்று சொன்னால் இக்காலங்களில் தமிழ் நாட்டைச் சேர்ர்ந்த தமிழ் தேசிய இனத்தை முதன்மைப்படுத்திய பலரும் குறிப்பாக தேவநேயப் பாவாணர், இலக்குவணார், இப்படியான பல பெருந்தகைகளும் இந்தக் கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்தினாலும் அதற்கு அவர்கள் அறிவியல்பூர்வமான சான்றுகளைத் தந்தார்களா என்று சொல்லமுடியாது. ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இந்த ஆய்வுகள் மூலமாக, குறிப்பாக பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் இருந்த நிலவியல் அமைப்பு, அங்கு வாழ்ந்த மக்கள் தன்மை, அதன் மூலமாக அவர்கள் உருவாக்கிய தமிழ் இலக்கியம், வரலாறு தொடர்பான ஒரு இலக்கிய எடுகோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மானுடவியல் ஆய்வை அவர் செய்தார் என்று சொல்லமுடியும். இந்த ஆய்வு இந்தியாவைப் பொறுத்தவரை மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களால் வட இந்தியாவைப் பற்றிக் கொண்டிருந்த அளவிற்கான ஒரு மிகப்பெரிய மதிப்பீட்டை தென்னிந்தியா அல்லது தென்னிந்தியாவில் இன்றைக்கு வாழக்கூடிய தமிழ் இனத்தின் முந்திய வரலாற்றை உறுதிப்படுத்துவனவாக அமைந்தன. இதை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மிக முக்கியமான பங்களிப்பாக நான் கருதுகிறேன். இப்பங்களிப்பை வரலாற்றுப் பேராசிரியரான செண்பகலட்சுமி, பேராசிரியர் பணிக்கர் போன்ற பலர் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இரண்டாவது மிக முக்கியமான பங்களிப்பு குறிப்பாக ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய உள்ள, தமிழின் மிக அதிகமான பங்களிப்பாக உள்ள சமய இலக்கியங்கள் தொடர்பாக அவர் செய்த ஆய்வுகள். இதில் குறிப்பாக அவர் சைவ இலக்கியத்தைப் பற்றி ஆய்வு செய்த பொழுது திருமுறைகள் தொடங்கி, மெய்கண்ட சாஸ்திரம் வரையான வளர்ச்சியப் பற்றி அவர் சொல்கின்ற பொழுது ஒரு பாசுர மரபில் உருவான ஒரு மனித நேய மரபு என்பதை ஒரு தத்துவ உரையாடலாக உருவாக்கியது தான் மெய்கண்ட சாஸ்திரங்கள் என்று அவர் எழுதியிருக்கின்றார்.
அதைப்போலவே பிற்காலங்களில் தமிழ்ச்சூழலில் உருவான மிக முக்கியமான சமய மரபைச் சார்ந்த திருமூலர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வள்ளலார் குறிப்பாக தாயுமானவர் இவர்களைப் பற்றி இவர் ஆய்வு செய்த பொழுது இரண்டாவது யுகம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இரண்டாவது பக்தி யுகம் என்று இவர் குறிப்பிடுகின்ற பொழுது கி.பி ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு வரை உருவான ஒரு பக்தி இலக்கிய மரபிலிருந்து ஒரு வேற்றான தமிழ் மரபு உருவானதென்றும் இந்த மரபு என்பது மனிதாபிமானத்தை முதன்மைப்படுத்தி மனித நேயத்தை முதன்மைப்படுத்திய ஒரு தமிழக சமய இலக்கியமரபாக உருவானதாக அவர் பதிவு செய்கிறார். ஒரு மாக்ஸிய முறையியலை முதன்மைப்படுத்திய பேராசிரியர் அவர்கள் மாக்ஸிய இயங்கியல் சார்ந்து சமூக வரலாற்றை எழுதக்கூடிய அவர் இவ்விதம் சமயத்தையும் மனித நேயத்தையும், இணைத்துக்காணக் கூடிய ஒரு மானுடவியல் துறை சார்ந்த சொல்லாட்சிகளால் அவர் செயற்பட்டிருப்பதைக் காணமுடியும்.
இதில் சில விஷயங்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் குறிப்பாக சமயம் என்பது மனிதநேயத்துக்காக செயற்படக்கூடிய ஒரு நிறுவனம் என்பதும், அது சார்ந்துதான் நாம் அவற்றின் பல்வேறு கூறுகளைப் பார்க்க வேண்டும் என்பதை அவருடைய பயிற்சியின் மூலமாக உருவான மானுடவியல் துறை சார்ந்த சொல்லாடல்கள் மூலமாக அவர் விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். நிறுவனமாக உருப்பெற்ற ஒரு சமயத்தின் மூலம் இவ்விதமான சாத்தியப்பாடுகள் உண்டா என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, ஒரு சமயத்தை மானுடவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ததில் பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கே மிக முக்கியமான பங்களிப்பு உண்டென்று நான் கருதுகின்றேன். இது அவருடைய பண்டைத் தமிழ்ச்சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி அளவிற்கு இருக்கும் அவருடைய சிறந்த ஆய்வென்று நான் கருதுவேன்.
இறுதியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் 20 ஆம் நூற்றாண்டு பற்றிச் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. குறிப்பாக் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சி, 20 ஆம் நூற்றாண்டில் உருவான புதிய ஊடகங்கள் பற்றிய ஆராய்ச்சி என்று நாம் சொல்ல முடியும். குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் திராவிட இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, தனித்தமிழ் இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, இதனுடைய மூலத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது, என்பதான பல கேள்விகளுக்கான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு மிக முக்கியமான இடம் உள்ளதாக நான் கருதுகிறேன்.
சிவத்தம்பி அவர்கள் பேசுகிறார், சைவ சமய மரபின் தொடர்ச்சியாகவே தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் போன்றவை உருப்பெற்றிருக்கக் கூடும் என்பதற்கான ஒரு தொடர்ச்சியான வரலாற்றுப் போக்குகள் குறித்த விரிவான இலக்கிய மற்றும் பல்வேறுவிதமான பண்பாட்டுத் தரவுகள அவர் முன்வைக்கிறார். இதை அவ்வளவு எளிதாக புறந்தள்ள இயலாது. குறிப்பாக மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதல் மறைமலை அடிகள் வழியாக, திரு வி.க வழியாக ஒரு தொடர்ச்சியான சைவ மரபு சார்ந்த உரையாடல் என்பது தமிழ்ச்சூழலில் நடைபெற்றிருக்கின்றது.
இந்த உரையாடல் மரபில் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்கள், குறிப்பாக தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றுக்கான பண்புகளோடு பேராசிரியர் இணைத்துப் பார்க்கும் இந்த ஆய்வு முறை மிகமுக்கியமான ஒரு பதிவாகும். அதைப்போலவே 20 ஆம் நூற்றாண்டில் உருவான ஊடகங்கள் குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் போன்ற பல குறித்து பேராசிரியருடை ஆய்வுகள் மிக விரிவானவை. புனைகதைகள், நாவல்கள், சிறுகதைகள் இவை உருவாக்கத்தை ஒரு சமூகவியலோடு எப்படிப் புரிந்துகொள்வது என்பது பற்றிய ஆய்வுகள் மிகச்சிறப்பானவை. வழக்கமாக இவ்வாறான புனைகதைகள் அது சார்ந்த ஊடகங்கள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு தன்முனைப்பு சார்ந்தும் தர்க்கபூர்வமின்றியும் ஒரு தொடர்ச்சியான மரபின் வளர்ச்சியென்று கருதுகின்ற அதே நேரத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புதிதாக உருவான அச்சு ஊடகப் பண்புகளையும், அதன் மூலமாக உருவான வாசிப்புப் பழக்கத்தையும் அந்தப் பழக்கத்தினூடாக உருவான புதிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய அச்சுப் பண்பாடு உருவாக்கமென்றும் அந்த அச்சுப் பண்பாடு உருவாக்கத்தை 20 ஆம் நூற்றாண்டில் உருவான புனைகதைகளினூடாக நாம் கண்டுகொள்ளலாமெனவும் பேராசிரியர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்து நமக்குத் தந்திருக்கிறார்கள்.
இந்த வகையில் ஒரு 2300 ஆண்டு கால தமிழ்ச்சமூகத்தின் நீண்ட தொடர்ச்சியான வரலாற்றை கி.பி 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பண்டைத் தமிழ்ச்சமூகம் குறித்த ஒரு விரிவான ஆய்வைத் தனது ஆய்வாகவும் , பின்னர் வந்த காலத்தில் சமய மேலாதிக்கம் மிக்க சூழலில் சமயத்தை எப்படி எதிர்கொள்வது, எப்படிப்புரிந்து கொள்வது என்பது பற்றிய ஆய்வாகவும், புதிய மறுமலர்ச்சி சார்ந்து, புதிய தன்மையில் உருவான 20 ஆம் நூற்றாண்டில் நிலவிய பண்புகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்துள்ள ஆய்வுகள் அவரது இந்த 75 ஆண்டு நிறைவு பவழ விழாக்காலத்தில், 1956 தொடக்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழியல் ஆய்வு மேற்கொண்ட அவருடைய ஆய்வுப் புலமைப் பாரம்பரியம் தமிழ்ச்சமூகம் விதந்து பாராட்ட வேண்டிய ஒரு மிக முக்கியமான செயல் என்று கருதுகிறேன். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து இன்னும் பல மேல் ஆய்வுகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப் பீடாதிபதி பாலசுகுமாரின் பகிர்வு
1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை நான் என்னுடைய பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டபோது அவர் என்னுடைய ஆசானாக இருந்தார். அவருக்கு கீழ் நான் படித்ததையிட்டு பெருமைப்படுகின்றேன். அவர் எங்களுக்கு பல விஷயங்களை அந்தக் காலகட்டத்திலே அந்த நான்கு வருடங்கள் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது பெற்றுக்
கொள்ளக்கூடியதாக இருந்தது. நான் தமிழை சிறப்பு பாடமாகப் படித்த பொழுது நான்கு வருசமும் அவர் எனக்கு விரிவுரையாளராக,ஆசானாக இருந்திருக்கின்றார். இந்த நான்கு வருசங்களிலே தமிழ் பற்றியதான ஒரு ஆழமான தேடுதலை மேற்கொள்வதற்கு ஒரு ஊக்கசக்தியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இருந்திருக்கின்றார்.
நான் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்திலே படிக்கின்றபொழுது வாசி, வாசி என்று என்னை வாசிப்பதற்கு தூண்டியவர் அவர். நான் லைபிரரியிலே போய் லைபிரரியின் கடைசி மணி அடிக்கும் வரை இருந்து வாசிப்பேன். அந்தக் காலகட்டத்தில் தான் நான் முற்று முழுதாக தமிழ் நாவல் இலக்கியம் என்பது ஒரு தனிப்பாடமாக இருந்தது. அந்தப் பாடத்தை அவர் தனியாகவே எனக்கு அவர் படிப்பித்தார். அதேபோல சங்ககால அகத்திணை மரபை நான் தனியே அவரிடம் படித்தேன். அதோடு சேர்த்து தொல்காப்பியத்தின் அகத்திணை மரபு, நாடகமும் அரங்கியலும் எனக்கு சிறப்பாகப் படிப்பிக்கப்பட்ட பாடம். இதோடு சேர்ந்து பொதுவாக மற்றமாணவர்களோடு சேர்ந்து தமிழ் சிறப்புப் பாடத்திலே பல விசயங்களை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய படிப்பித்தல் என்பது விரிவுரைகள் மிக ஆழமானதாக இருக்கும்.சிலபேருடைய விரிவுரைகளைக் கேட்கும் போது எப்போது அவை முடியும் என்று நாங்கள் நினைப்பதுண்டு.
ஆனால் அவருடைய விரிவுரைகள் அப்படியல்ல.சலிக்காமல் அலுக்காமல் எத்தனை மணித்தியாலமும் கேட்கக் கூடியதாக, நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக அந்த விரிவுரைகள் அமைந்திருக்கும். நான் தனியே அவரிடம் படித்தபோது சிலவேளைகளில் அவர் பன்னிரண்டு மணிக்கு விரிவுரையைத் தொடங்கினால் கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலங்கள், ஐந்து மணித்தியாலங்கள் அந்த விரிவுரைகள் நீண்டு கொண்டே போகும். அந்த விரிவுரைகள் நடத்தப்படுகின்ற பொழுது அது ஒரு விரிவுரையாக இல்லாமல் ஒரு பகிர்தலாக, ஒரு உரையாடலாகவே அது அமைந்திருக்கும். அப்போது தான் பல விஷயங்களை, சிலவேளைகளில் பாடத்துக்கு அப்பாலும் கூட கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. தனியே அந்தப் பாடப் பரப்போடு மாத்திரம் நில்லாமல் அந்தப் பாடத்தோடு தொடர்புடைய பல விஷயங்களை உலகளாவித் தழுவி வருகின்ற போது பரந்த அறிவைத் தரக்கூடியதாக அவருடைய விரிவுரைகள் அமைந்திருந்தன.
குறிப்பாக இன்னும் நான் சொல்லப் போனால் நான் அவரிடம் சிறப்பாகப் பயின்ற பாடங்கள் என்று சொல்லுகின்ற பொழுது நாடகமும் அரங்கியலும் என்ற பாடம். இந்த நாடகமும் அரங்கியலும் என்ற பாடம் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்துக்கு ஒரு தனிப்பாடமாக இருக்கவில்லை. அத்தோடு க.பொ.த உயர்தரத்திலும் கூட தனி ஒரு பாடமாக இருக்கவில்லை. அதன் பிற்பாடுதான் 1980 களுக்கு பின்னர் தான் தனி ஒரு பாடமாக க.பொ.த உயர்தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல பல்கலைக் கழகத்திலே தமிழ் மொழி மூலமாக இந்தப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்தை க.பொ.த உயர்தரவகுப்பில் அறிமுகப்படுத்தியதில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கு மிக முக்கியமானது.
தமிழ் கலை இலக்கியப்பரப்பிலே அவருடைய இடம் மிகப் பெரிய இடம். அதை யாரும் மறுக்க முடியாது. பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட அதையெல்லாம் தாண்டி, அவற்றுக்கெல்லாம் அப்பால் ஒரு மிகப்பெரிய மலையாக தமிழ் கலை இலக்கியப் உலகிலே அவர் இயங்கியிருக்கிறார். அப்படிப் பார்க்கின்ற பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கூடாக அவர் ஆற்றிய பணிகளும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு காலகட்டத்திலே மிகப்பெரிய சக்தியாக வளர்வதற்கான பல விஷயங்கள் இவரூடாகவே வெளிப்பட்டது.
அத்தோடு தமிழ் நாடக ஆராய்ச்சி என்று பார்க்கின்ற பொழுது, தமிழ் நாடகம் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் தொடக்கிவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என்று சொல்லலாம். சுவாமி விபுலானந்தர் ஆரம்பத்திலே தமிழ் நாடகங்கள் பற்றி விசயங்களை மதங்க சூளாமணி மூலமாகக் குறிப்பிட்டாலும் அதைத் தொடர்ந்து நாங்கள் பார்க்கின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அது இப்போது தமிழில் வந்திருக்கின்றது, "பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம்" சென்ற ஆண்டு என்று நினைக்கின்றேன், அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. அவர் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்திலே கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்டார். தமிழ் நாடகத்தையும் கிரேக்க நாடகத்தையும் ஒப்பு நோக்கி பண்டைத் தமிழ்ச் சமூகத்திலே இந்த நாடக மரபுகளை சிலப்பதிகாரத்தினூடு அவர் வெளிப்படுத்திய விதம் மிக முக்கியமானது. இன்றைக்கு கூத்துப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் நாட்டிலே பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் வழிகாட்டியாக, சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அடிப்படையாக அமைகின்றது. இந்த ஆய்வின் பின்புலம் தான் பலரை தமிழ் நாடகம் பால் இழுக்கச் செய்தது.
பிற்காலத்திலே நீங்கள் பார்த்தீர்களேயானால் தமிழ் நாட்டிலே சக்தி பெருமாள், ஏ,என் பெருமாள் போன்ற பலர் இத்தகைய தமிழ் நாடக ஆய்விலே ஈடுபடுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக பேராசிரியர் சிவத்தம்பியத் தான் தமிழ் நாடக ஆராய்ச்சியில் முக்கியமானவராகக் கருத முடியும். அதே போல அவர் இலங்கை கலைக்கழகத்திலே பணியாற்றிய பொழுது, ஈழத்து நாட்டாரியர் குறித்த அவரது ஈடுபாடு மிக முக்கியமானது. குறிப்பாக அவர் முல்லைத்தீவிலே செய்த நாட்டாரியல் விழா, இன்றைக்கும் பலர் நினைவு கூர்ந்து பேசக்கூடிய நிகழ்வாக இருக்கின்றது. இதை விட அவர் பேராசிரியர் வித்தியானந்தனோடு பணியாற்றிய போது, பேராசிரியர் வித்தியானந்தன் கூத்து மீள் கண்டுபிடிப்பு செயத போது அதாவது ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரங்க வடிவம் பற்றி சிந்தித்த பொழுது கிழக்கிலங்கையிலே பிரபல்யம் பெற்ற தென்மோடி வடமோடி நாடகங்களை அவர் மீளுருவாக்கம் செய்து மேடையேற்றினார் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் இவற்றை மேடையேற்றியபோது அதற்குப் பக்கத்துணையாக இருந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும், பேராசிரியர் கைலாசபதியும். அந்தக் காலத்திலே செய்யப்பட்ட கர்ணன் போர், நொண்டி நாடகம், வாலி வதை, இராவணேசன் போன்ற நாடகங்கள் மிக முக்கியமான நாடகங்கள். ஆகவே இன்றைக்கு நாங்கள் பேசுகின்றோமே ஈழத்து தமிழர்களுக்கான அரங்க வடிவம், ஈழத்து தமிழர்களுக்கான நடனவடிவம், ஈழத்துத் தமிழர்களுக்கான இசை வடிவம் என்று பேசுகின்ற பொழுது அதற்கான அடிப்படைகளை இத்தகைய கூத்து மீள் கண்டுபிடிப்பு என்கிற அந்த விசயத்திலிருந்து தான் தொடங்குகின்றது. ஆகவே அதற்கும் கூட அந்தக் காலத்தில் மிகக் காத்திரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
இன்றைக்கு தமிழ் நாட்டில் கூட நாடகமும் அரங்கியலும் என்ற கற்கை பிளஸ்டு வில் இல்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற தமிழகத்திலே பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், தஞ்சைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் தான் தமிழிலே நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதே போல் இந்தியா முழுவதிலும் எடுத்துக் கொண்டாலும் ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரம் தான். ஆனால் சிறிய ஒரு நாடான நம் நாட்டில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதன் மூலமாக பல கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் சிங்களத்தில் நாடகமும் அரங்கியலும் பல்கலைக்கழகத்திலே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்த வகையில் பார்க்கின்ற பொழுது ஈழத்திலே நாடகம் தொடர்ப்பான விஷயங்களிலே, ஆராய்ய்சிகளிலே, படிப்புக்களிலே பேராசிரியர் சிவத்தம்பியின் இடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.
கிழக்குப் பல்கலைக் கழகத்திலே அவர் வந்து பணியாற்றிய காலத்தை நான் இங்கு குறிப்பிடவேண்டும். கிழக்குப் பல்கலைக்கழகத்திலே அவர் 2 வருடங்கள் பணியாற்றியிருந்தார். அவர் பணியாற்றிய காலங்களிலே கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முக்கியமான பட விஷயங்களைத் தொடங்குவதற்கு அவர் காரணகர்த்தாவாக இருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.குறிப்பாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள், குறிப்பாக கலைமாணி, முதுமாணி, முதுதத்துவமாணி , தத்துவமாணி அதாவது எம்.ஏ.எம்.பிஎல், பி.எச்.டி ஆகிய கற்கைநெறிகளைத் தொடங்குவதற்கான பாடத்திட்ட வரைபை பேராசியர் சிவத்தம்பி அவர்கள் இருந்து அந்தப் பணியைச் செய்தார்கள். அவரோடு சேர்ந்து பேராசிரியர் மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு போன்றவர்களும் இணைந்து அந்த வேலகளை செய்தார்கள். ஆனால் அதற்கான திட்டவரைபை உருவாக்குவதற்கு சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக இருந்தார்.
அதுமாத்திரமல்லாமல் அந்த உயர்பட்டப்படிப்புக்களை நடாத்துவதற்கான விரிவுரைகளைக்கூடப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்தார்கள். அந்தவகையிலே நாடகமும் அரங்கியலும், நுண்கலை ஆகிய பாடங்களிலே இன்றைக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முதுமாணி, முதுதத்துவமாணி, தத்துவமாணி ஆகிய துறைகளைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் அங்கே இருக்கின்றன. அந்த வகையிலே
அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே முக்கியமான காரியத்தைச் செய்வதற்குக் காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார்.அதாவது நான் அவருடைய மாணவனாக இருந்தது ஒரு பக்கம், பின்னர் அவரோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது இரண்டாவது கட்டம்.
அடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தோடு சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரியை இணைக்கின்ற முயற்சியிலே திட்ட முன்வரைபு ஒன்று அதற்குத் தேவைப்பட்டது. அந்தத் திட்டமுன்வரைபைத் தயாரிப்பதற்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மிக முக்கியமானவராக இருந்தார். பலரும் அதனோடு இணைந்து பணியாற்றினாலும் கூட, சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக நின்று செயற்பட்டார்.
மூன்றாவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எங்களுடைய சிறப்பு மாணவர்களுக்கு, தமிழ் சிறப்பு மாணவர்கள், நுண்கலை சிறப்பு மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் படிக்கின்ற சிறப்பு மாணவர்களுக்கு அவர் விரிவுரைகளை நிகழ்த்தினார். இவ்வாறு மூன்று வகையான பணிகளை அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே இரண்டு வருடங்கள் பணியாற்றிய போது செய்ததை நாங்கள் அதை மிகப் பெருமையாகக் கருதுகின்றோம். பின்னாளிலே நான் பீடாதிபதியாக வந்த பொழுது பல விசயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்ள அவருடைய ஆலோசனைகள் மிகுந்த வழிகாட்டியாக அமைந்தன.
அதாவது சில ஆராய்ச்சி முயற்சிகளைச் செய்வதற்கும், சில கருத்தரங்குகளை நிகழ்த்துவதற்கும், ஆகவே ஒரு academic என்ற வகையிலே ஒரு கல்விசார் பேராசிரியர் என்ற வகையிலே, ஒரு பல்கலைக்கழக புத்திஜீவி என்ற வகையிலே கிழக்குப் பல்கலைக்கழகத்தோடு அவருக்கிருந்த தொடர்பு என்பது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தை மேலும் ஆளுமை உள்ளதாக, ஆளுமை உள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்குரிய ஒரு பின்புலத்தை அவர் எங்களுக்கு அளித்தார். கூடவே அவரால் வரமுடியாத காலகட்டத்தில் நாங்கள் எங்கள் மாணவர்களை கொழும்புக்கு அனுப்பி அவரிடம் கற்கை பெறுவதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தோம். இப்படி கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்புகள் முக்கியமானவை. அதை விட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உலக நாடகவிழா நடைபெற்ற பொழுது அவர் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றார். இப்படியாக கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்பு இன்று வரை தொடர்கின்ற உறவாகவே இருந்து வருகின்றது.
கவிஞர் முருகையன் காலமானபோது பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தந்த வானொலிப்பகிர்வு

Sunday, July 03, 2011
"சிவபூமி" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்
இந்தமுறை தாயகம் சென்றபோது கொழும்பில் நின்ற சில நாட்களில் ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. அங்கு சென்றுவிட்டு உடனேயே அந்தக் கும்மிருட்டில் வெள்ளவத்தையில் இருந்து ஓட்டோ ஒன்றைப் பிடிக்கின்றேன். வழக்கமாக நானாகப் பேச்சுக் கொடுக்கமாட்டேன் ஓட்டோக்காரர் பேசும் வரை. சிலவேளை யாராவது சிங்களவர் ஆட்டோக்காரராக வந்து வாய்த்து, அவர் தன் மொழிக்காரர் என்று நினைத்துச் சரளமாகச் சிங்களம் பேசி உரையாடும் போது இஞ்சி தின்ற மங்கியாக நானும் ஏதாவது சிரித்துச் சமாளித்து, கையில் இருக்கும் மொபைல் போனில் அவசரமாக அழைப்பு எடுப்பது போலப் பாவனை (பீலா) காட்டிய சந்தர்ப்பமும் உண்டு. ஆனால் இந்த அதிகாலை நேரம் ஊரே உறங்கிக்கொண்டிருக்கும் போது காலி வீதியில் எந்தவித வீதி நெரிசலும் இன்றி ஓட்டோ எறும் போது சாரதி தமிழில் பேச்சுக் கொடுக்கின்றார். பிரணவ மந்திரம் தெரியாத படைத்தல் தொழில் கடவுள் பிரமனுக்கும் தெரியாது, அழிக்கும் தொழிலைக் கொண்ட உருத்திரனுக்கும் புரியாது என்று பூடகமாக பிரணவமந்திரத்தை இனப்பிரச்சனையாகவும், பிரம்மா, உருத்திரன் கடவுளர்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கும் ஒப்பிட்டு அவர் பேசிக்கொண்டு வந்தது அவரின் கல்விப்புலமையின் உயர்வைக் காட்டியது. அதை மெய்ப்பிப்பது போல நான் இறங்கும் இடம் வந்ததும் அவர் சொன்ன ஒரு விஷயத்தைக் கேட்டதும் உண்மையில் என் மயிர்க்கால்கள் அந்த நேரம் குத்திட்டு நின்றன, இப்போது எழுதும் போதும் கூட.
"தம்பி! நான் ஒரு எலெக்ட்ரோனிக் இஞ்சினியர், என்ர அலுவலக நேரத்துக்கு முன்னமும், வேலை முடிஞ்ச பிறகும் ஆட்டோ ஓட்டுறன். அந்த ஓட்டோ ஓட்டுற காசை சண்டையிலை கைவிடப்பட்ட ஆதரவில்லாத பிள்ளையளுக்குக் கொடுக்கிறன்"
இதுதான் அவர் சொன்னது.
புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து ஒரு டொலரை ஆதரவற்ற இல்லங்களுக்குக் கொடுக்கக் கூட ஆயிரம் தடவை யோசிப்போம், ஆனால் தாயகத்தில் இருக்கும் இவரைப் போல எத்தனை உள்ளங்கள் தம் அடையாளம் தெரியாது உதவிக்கொண்டிருக்கிறார்கள். உதவுவதற்கு உள்ளம் மட்டும் இருந்தால் போதும் என்று மீண்டும் ஒருமுறை உணரப்பட்ட தருணம் அது.
"இந்தாங்கோ அண்ணை! என் பங்கும்" காற்சட்டைப் பையில் இருந்து மேலதிகமாகக் கொடுக்க
"இல்லைத்தம்பி இருக்கட்டுமே"
"இல்லையண்ணை, என் பங்குக்கும் போகட்டும்" என்று திணித்து விட்டு நகர்கின்றேன்.
அதிகாலையில் ஞான உபதேசம் தந்த முருகனாக அவர் தெரிந்தார்.
000000000000000000000
எங்கள் அயலூர் கோண்டாவிலில் சிவபூமி என்னும் சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இயங்குகின்றது. கடந்த முறை இங்கு செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை இங்கு செல்லவேண்டும் என்று வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். என் சகோதரர் லண்டனில் இருந்து வந்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து முதல் தடவை இப்போது தான் தாயகத்தில் பெற்றோரோடு தன் பிறந்த நாளைக் கொண்டாடப் போகின்றார். அவருக்கோ பிறந்த நாள் விருந்து என்பதை விட ஆதரவற்ற இல்லங்கள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒரு பகற்பொழுதைக் கழிப்பது என்று தீர்மானித்து வந்திருந்தார். இந்த நேரம் என் சிவபூமி பாடசாலைக்கான பயணமும் ஒருசேர அமைய அங்கு அவரின் பிறந்த நாளைக் கழிக்க எண்ணினோம்.
ஜீலை மாதம் 2 ஆம் திகதி, 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. இந்தப் பாடசாலையின் உருவாக்கத்திலும் தொடர்ந்த செயற்பாட்டிலும் முதற்காரணியாக இருப்பவர் திரு ஆறு. திருமுருகன் என்ற சிவத்தொண்டர். ஆறு.திருமுருகன் அவர்கள் கோண்டாவிலில் இயங்கும் சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை தவிர தொல்புரத்தில் இயங்கும் சிவபூமி முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்து சிவபூமி அறக்கட்டளையின் கீழ் சான்றோர்களை இணைத்து, வரும் நன்கொடைகளை சீரான நிர்வாகத்தில் கையாண்டு இந்த அமைப்புக்களைக் கொண்டு நடத்தி வருகின்றார். அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஈழத்தமிழர் கழகம் உட்பட புலம்பெயர் சமூகத்தில் இருந்து தனி நபர்களும் ,அமைப்புக்களும் இந்த அறக்கட்டளையின் தேவை உணர்ந்து உதவியிருக்கின்றார்கள். ஆனால் இன்னும் இன்னும் தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எங்கள் சொந்தங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் செய்ய வேண்டிய முதற்பணி இப்படியான அற நிறுவனங்களுக்கு இயன்ற உதவிகளைக் கொடுக்கவேண்டியது.
இந்த சிவப்பூமி அறக்கட்டளையின் இணைய முகவரி http://sivapoomi.org/
மேலை நாடுகளில் உள வளர்ச்சி குறைந்த பிள்ளைகளையும், செவிப்புலன் இழந்த, வாய்பேச முடியாத, விழிப்புலன் அற்ற, இன்னபிற குறைகள் கொண்ட பிள்ளைகளையும் கவனிக்கும் பொருட்டு அரசாங்கமும் தொண்டு அமைப்புக்களும் பல்வேறு பாடசாலைகளையும், உதவி நலத்திட்டங்களையும் உருவாக்கி அவர்களைச் சமூகத்தின் ஒரு அங்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் எம்மூரில் நான் வளர்ந்த காலகட்டத்தில் இப்படியான பிள்ளைகளை நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு வைத்திருந்ததைக் கண்டிருக்கின்றேன். அப்படியானதொரு சமூக அமைப்பில் இந்த சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையின் பெரும் பங்கை உணர முடிந்தது. காலை வேளையில் ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டுக்கும் வாகனத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்து, காலையில் போசாக்கான காலைச்சிற்றுண்டி, பின்னர் ஆரோக்கியமான மதிய உணவும் கொடுக்கின்றார்க. ஒவ்வொரு பிள்ளையின் மனவிருத்தியின் எல்லைக்கேற்ப அவர்கள் தரம் பிரிக்கப்பட்டு கற்பித்தல் கொடுக்கப்படுகின்றது.
வீட்டுக்காரரோடு அண்ணனின் பிறந்தநாளில் சிவபூமி பாடசாலைக்குச் சொல்கிறோம். அங்கே அதிபரின் அறைக்குச் சென்றபோது நிர்வாகப் பொறுப்புக்களில் இருக்கும் ஒரு இளைஞன்
"நீங்க கானா பிரபா தானே"
"ஓம் எப்படித் தெரியும் தம்பி?"
"உங்கட வலைப்பதிவு வாசிக்கிறனான்"
பாடசாலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. பிள்ளைகள் தமக்கான ஆசிரியர்களின் வகுப்பில் பிரிந்திருந்து சிரத்தையோடு கற்கின்றார்கள். ஒவ்வொரு பிள்ளையும் உடலளவில் பாதிக்கப்பட்டவர்கள், ஆனால் கள்ளமில்லாத தெய்வக்குழந்தைகளாக எங்களைக் கண்டு சிரிக்கின்றார்கள். பக்கத்தில் இருக்கும் மூன்று மாடிக்கட்டடத்திலும் வகுப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அங்கும் செல்கின்றோம். அந்தக் கட்டிடம் கூட லண்டனிலும், அமெரிக்காவிலும் வாழும் நம்மவர்களின் பெருங்கொடையின் சாட்சியமாக வெள்ளித்தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எங்களைக் கண்ட பிள்ளைகள் சிலர் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள். சிலர் கைகூப்புகின்றார்கள் அவர்களின் மொழி உடல் மொழி மாத்திரமே. அந்தப் பிள்ளைகளின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் வகுப்பறைகளில் மாட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடசாலையின் வளர்ச்சியும் தேவையும் பன்மடங்காகப் பெருகிய நிலையில் பக்கத்தில் இருக்கும் காணி கூட வாங்கப்பட்டு இன்னொரு பாடசாலை அமைக்கப்பட இருக்கின்றது.
"வணக்கம் சேர்" தானாகவே வந்து அறிமுகப்படுத்திய இன்னொரு இளைஞரை யார் என்று விசாரித்தோம்.
"நானும் இன்னொரு ரீச்சரும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இருந்து வந்திருக்கிறோம், நாங்கள் இப்படியான மனவிருத்திப் பாடசாலையில் எதிர்காலத்தில் படிப்பிக்கப்போறம் அதற்கான பயிற்சிக்குத் தான் வந்திருக்கிறோம்". அவர் பேசிக்கொண்டிருக்கும் போது மதிய உணவுக்கான நேரம் என்று மாடிப்படிகளில் தாவித்தாவி வரும் அந்த மாணவர்களைக் காணும் போது தெரிந்தது. ஒரு மாணவன் வழுக்கி விழப்போக, அவரை வாரியணைத்துத் தூக்கிக் கொண்டே போனார் அந்தப் பயிற்சிக்கல்லூரி ஆசிரியர். இப்படியான பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் இன்னும் அதிக பொறுமையும், பொறுப்பும் கொண்டிருக்கவேண்டிய தேவையும் உணரப்படுகின்றது.
"எதென்ஸ் இல் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்குப் போகப்போற மாணவன் எங்கே?" நானாக அங்கே பணியில் நின்ற இளைஞரைக் கேட்டேன். அகில இலங்கையில் இருந்து எதென்ஸ் இல் நடக்கும் விசேட ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள சிவபூமி பாடசாலையில் இருந்து சிவராசா துஷ்யந்தன் தெரிவாகி இருந்ததும் அதன் தொடர்பில் திரு ஆறு.திருமுருகன் அவர்களை நான் எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் கடந்த பெப்ரவரியில் பேட்டி எடுத்தும் இருந்தேன்.
"இவர் தான் அவர்" என்று சிவராசா துஷ்யந்தனைக் காட்டினார்கள்.
வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் அற்ற அவர் தனது ஏழு வயதில் இருந்து இந்தப் பாடசாலையில் படித்து வருபவர். என்னைக் கண்டு கைகூப்பினார். நான் அவரின் கையை இறுகப்பற்றினேன்.
இன்று ஜூலை 3 ஆம் திகதி எனது மின்னஞ்சலுக்கு வந்த செய்தியில் இப்படி இருந்தது.
கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்று வரும் மாற்று வலுவுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ். மாணவன் சிவராசா துஷ்யந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாண வனான இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் முதற் தடவையாக பங்கேற்று இருந்தார்.நேற்று இடம்பெற்ற 4–100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார் துஷ்யந்தன்.இன்று இடம்பெறும் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் உயரம் பாய்தல் போட்டியிலும் துஷ்யந்தன் பங்கேற்க இருக்கிறார்.
ஜூலை 4, 2011 இன்று கிடைத்த செய்தி
கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்று வரும் மாற்று வலுவுடையோருக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் யாழ். மாணவன் சிவராசா துஷ்யந்தன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மற்றும்போட்டியில் வெள்ளிபதக்கத்தை பெற்றுக்கொண்டர் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அண்ணன் தனது பிறந்த நாளைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுத்துத் தானும் அவர்களோடு கொஞ்ச நேரம் சப்பாணி கட்டி இருந்து மகிழ்கின்றார். அந்த நிறை உணவோடு வடை, பாயாசமும் பரிமாறப்படுகின்றது.
சாப்பாட்டு நேரம் முடிந்து எல்லாப்பிள்ளைகளும் ஒரே மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரை ஆசிரியர் அறிவிக்க, அவர்கள் முன்னே வந்து பாடுகிறார்கள், அபிநயம் பிடித்துப் பேசுகிறார்கள்.தாம் கற்பித்தவை அரங்கேறிக்கொண்டிருப்பதைக் கண்டு தொண்டர் ஆசிரியர்கள் முகத்தில் பூரிப்பு.
எமது மனதிலோ சிவபூமி இன்னும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டது.