பி.பி.சி தமிழோசை ஒலிபரப்பில் இரண்டரை தசாப்தங்களாக (1966 - 1991 ) இயங்கி வந்த சங்கரமுர்த்தி அவர்கள் கடந்த ஞாயிறன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்திருக்கிறார். சங்கரண்ணா என்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.
இந்த வேளை பி.பி.சி சங்கரண்ணா குறித்த மறைவுச் செய்தியை பி.பி.சி தமிழோசை தளத்தில் இருந்து பகிர்வதோடு, அவரின் குரல் ஒலிப்பகிர்வையும், அகவை எழுபதை பி.பி.சி தமிழோசை கண்டபோது நான் கொடுத்திருந்த பகிர்வையும் மீள் இடுகையாகத் தருகின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.
மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.
தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.
ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார்.
00000000000000000000000000000000000000000000000000000000
அகவை எழுபதில் பி.பி.சி தமிழோசை - மீள் இடுகை
"தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு" அப்பா சொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும் அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும் தான் எங்களுக்கு அப்போது வானொலிக் காந்திகள். பெரும்பாலான வீடுகளின் திண்ணையில் றேடியோவை இருத்தி வைத்துச் சுற்றும் சூழக் காதைத் தீட்டிக் கொண்டிருக்கும் ஊர்ப்பெருசுகள் லண்டன் தமிழோசையின் முக்கிய தலைப்புச் செய்திகளில் இருந்து அடுத்த அரைமணி நேரம் புகையிலை உணர்த்தலில் இருந்து, வெங்காய நடுகை வரை எல்லா கிராமிய சமாச்சாரங்களையும் ஓரமாகப் போட்டு விட்டு வானொலியின் சொல்லை வேதம் கற்கும் மாணவன் போன்ற சிரத்தையோடு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழோசை ஒலிபரப்பு முடிந்ததும் செய்தியின் பின்னணியில் தோரணையில் ஆளாளுக்கு அரசியலை அலச ஆரம்பிப்பார்கள். இது எங்களூரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்ததொன்று.
இன்றைக்கு உலகத்தில் தமிழன் பெருகிப் போயிருக்கும் இடமெல்லாம் ஒன்றோ, இரண்டோ பலதோ பத்தோ என்று 24 மணி நேர வானொலிகள் வியாபித்து விட்டன. ஆனால் வானொலி நிகழ்ச்சிகளின் தரமும், பகிர்வும் "பூசக் கொஞ்சம் சந்தனம் கிடைத்தால்" என்ற நிலையில் தான். ஆனால் ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியிலேயே நச்சென்று ஒரு நாளில் புரட்டிப்போட்ட சமாச்சாரங்களை அடக்கி வானொலி ரசிகர் மனதில் ஆள்வதென்பது அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல எழுபது ஆண்டுகள் என்பது தமிழ் ஊடகத்துறையில் தமிழோசையின் தவிர்க்கமுடியாத ஆளுமை எனலாம். தானும் பயணித்துக் கூடவே உலக வானொலிகள் பலவற்றிலும் தவிர்க்கமுடியாது இருக்கும் அங்கமாக மாறிவிட்ட BBC தமிழோசையின் எழுபதாவது அகவையில் ஒரு சிறப்பு வானொலிப் படையலையும் எழுத்து ஊடகப் பகிர்வையும் கொடுக்க விழைந்தேன்.
அகவை எழுபதில் இந்த ஆண்டு தடம்பதிக்கும் BBC தமிழோசை குறித்த சிறப்பு வானொலிப் பகிர்வை நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,BBC தமிழோசையின் நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு விமல் சொக்கநாதன் அவர்களை வானலையில் பகிர அழைத்தபோது அவர் வழங்கிய சிறப்புப் பகிர்வு
ஒலிவடிவில்
வணக்கம், இலண்டனில் இருந்து விமல் சொக்கநாதன் பேசுகிறேன். தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் மேற்குலக நாடுகளில் குடியேற ஆரம்பித்த காலப்பகுதி 1980களின் நடுப்பகுதி என்று சொல்லலாம். ஆனாலும் அதற்குப் பலவருடங்களுக்கு முன்னரே உலகில் தமிழ் வானொலிகள் பல, அமெரிக்காவில் இருந்தும் பிலிப்பீன்ஸ் இல் இருந்தும் இங்கு பிரிட்டனில் இருந்தும் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன. அமெரிக்காவின் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா தமிழ் வானொலி, சீனாவின் பீக்கிங் தமிழ் வானொலி, பிலிப்பீன்ஸின் மணிலா தமிழ் வானொலி ஆகியன இப்போது ஒலிபரப்பைத் தொடராவிட்டாலும் BBC என்ற எழுபது வயதுத் தமிழ் மூதாட்டி மட்டும் 1941 இல் இருந்து இன்றுவரை லண்டனில் இருந்து தமிழ் முழக்கம் செய்துகொண்டிருக்கிறாள். 1985 இற்குப் பிறகு தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இலட்சக்கணக்கில் குடியேற ஆரம்பித்தார்கள். குடியேறிய நாடுகளில் எல்லாம் ஆலயங்களும் தமிழ்க்கடைகளும் நிறுவப்பட்டமை போல புதிய பல வானொலி நிலையங்களும் புலம்பெயர் தமிழர்களால் நிறுவப்பட்டன. இத்தனை புதிய தமிழ் வானொலிகளின் இளம் ஒலிபரப்பாளர்களும் இலண்டன் BBC தமிழோசையின் மீது வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் தமிழோசையின் தனித்துவத்திற்கு ஒரு சான்று என்று சொல்லலாம். இரண்டாவது உலகப்போர் காலத்தில் தனது காலணித்துவ நாடுகளுக்கு அவரவர் மொழியிலேயே உலகச் செய்திகளை வழங்க வேண்டும், நாடு நாட்டுடன் நல்லுறவு பேசட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பிரிட்டிஷ் அரசாங்கம் 1940 களில் ஆரம்பித்தது BBC World Service பன்மொழி உலக ஒலிபரப்புச் சேவை. இதில் ஒன்றான தமிழ்மொழி ஒலிபரப்பு 1941 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்தது. வாரம் ஒரு தடவை வியாழக்கிழமைகளில் மட்டும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த தமிழோசை தினசரி ஒலிபரப்பாக விரிவுபடுத்தப்பட்ட போது நிரந்தரத் தயாரிப்பாளர் பதவிக்கு சங்கர் சங்கரமூர்த்தி என்ற ஒரு துடிப்பான அறிவிப்பாளர் தமிழ் நாடு அகில இந்திய வானொலியில் இருந்து கொண்டுவரப்பட்டுப் பதவியில் அமர்த்தப்பட்டார். ஆங்கிலத்தில் எழுதப்படும் BBC செய்திப்பிரதிகளை தமிழில் மொழிபெயர்க்கும் போது அவர் பயன்படுத்திய அழகு தமிழ்ச் சொற்கள் அவற்றை வான் அலைகளில் படிக்கும் போது கேட்கும் அவர் காட்டும் நெளிவு சுழிவுகள் செய்திகள் ஒரு திரைப்படத்தைப் போல கேட்போர் மனதைப் பதிய வைத்தன. இதனால் தமிழோசையை விரும்பிக் கேட்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக அதிகரித்தது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் நிதியுதவியோடு நடத்தப்படும் BBC பன்மொழிச் சேவையில் ஒன்றான தமிழோசையை நேயர்கள் தெளிவாகக் கேட்கிறார்களா, அந்த நிகழ்ச்சியில் எவற்றையெல்லாம் ரசிக்கிறார்கள் போன்ற தகவல்களை BBC நிர்வாக அதிகாரிகள் நேயர்கள் அனுப்பும் கடிதங்களின் வாயிலாக அறிந்துகொள்கிறார்கள். தமிழ்க்கடிதங்களை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்து அச்சிட்டுக் கொடுப்பதற்கு Listener research department என்ற ஒரு பிரிவு இயங்கி வந்தது. சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இசைமேதைகள் லண்டனுக்கு வரும்போது அவர்களை வெறுமனே பேட்டி மட்டும் கண்டு அனுப்பிவிடாமல் தானே சில பாடல்களை எழுதி அவர்களைக் கொண்டு பாடவைத்து ஒலிபரப்புவார் கவிஞரான சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள். "தேம்ஸ் நதிக்கரையில் இருந்து தேடிவரும் ஓசை தமிழோசை", "மகாராணி மெச்சும் ஒரு மாட்டுப்பொண்ணு டயானாக்கண்ணு" போன்ற பாடல்களை இவர் எழுதி சீர்காழி கோவிந்தராஜனும் அவர் புதல்வர் சிவசிதம்பரமும் எங்கள் BBC கலையகத்தில் பாடி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடல்கள். தமிழோசைத் தலைவர் சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள் தமிழோசைத் தலைவர் , தயாரிப்பாளர் என்ற பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு திரு.மகாதேவன், திருமதி ஆனந்தி.சூரியப்பிரகாசம், திரு சம்பத் குமார் ஆகியோரும் தமிழோசையின் தலைமைப்பதவியில் பணியாற்றினார்கள். இப்போது இந்தப்பதவியில் இருப்பவர் திருமலை மணிவண்ணன் அவர்கள். செய்திகளை முந்தித் தருவது, செய்திகளை நடுநிலையாக வழங்குவது , உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வழங்க மறுப்பது இவை BBC தமிழோசையின் அசைக்க முடியாத தூண்கள். உலகத்தமிழ் ஒலிபரப்புக்களில் BBC தமிழோசை ஒரு சிகரம் என்று மதிக்கப்படுவதற்கும் எழுபது ஆண்டுகளாக அது வானலைகளில் நிலைத்து நிற்பதற்குமான ரகசியம் இது ஒன்று தான். BBC தமிழோசை வழங்கிய சிறப்புப் பெட்டகப் பகிர்வுதமிழோசைக்கு வயது 70 BBC தமிழோசையில் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்த அமரர் சுந்தா வீ.சுந்தரலிங்கம் அவர்கள் BBC தமிழோசைக்கு வழங்கிய செவ்வி இருந்து ஒலிப்பகிர்வாக வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அறிவிப்பாளர் அமரர் "சுந்தா" வீ.சுந்தரலிங்கம் அவர்களின் மன ஓசையில் இருந்து லண்டனில் West Minister பாராளுமன்றத்திலே சில மாதங்கள் பயிற்சி பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது தமிழோசையுடன் தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சங்கரண்ணாவைச் சந்தித்தபோது "நீங்கள் ஒலிபரப்பாளராக இருந்தீர்கள் எவ்வளவோ நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கின்றீர்கள். ஆகவே நான் இங்கு இரண்டு மூன்று நாடகங்களை வானொலிக்குத் தயாரிக்க ஏற்பாடு செய்திருக்கின்றேன். நீங்கள் அதில் பங்கு கொண்டால் உதவியாக இருக்கும் வருவீர்களா" என்று கேட்டார். அதனை நான் ஏற்றுக் கொண்டு BBC தமிழோசையில் பங்குகொண்டேன். King Lear என்னும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தையும் Tempest என்ற நாடகத்தையும் சங்கர் தமிழில் தயாரித்தார், அதுவும் கவிதையாக. அதிலே முக்கிய பாத்திரங்களைக் கொடுத்து என்னைக் கெளரவப்படுத்தினார். BBC தமிழோசையின் சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள் ஒத்தல்லோ நாடகத்தைத் தமிழில் தயாரித்து அதை சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய பாத்திரம் ஏற்றவர்களில் ஒருவர் பிரபல நாடக, திரைப்படக் கலைஞர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து விலகி நான் சென்னை சென்று தங்கியிருந்த காலத்தில் அப்போது BBC நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்த சங்கரமூர்த்தி அவர்கள் கண்ணிலே சத்திரசிகிச்சை செய்ய வேண்டி விடுமுறையில் சென்ற போது BBC தமிழோசையில் ஒரு வருடமோ ஒன்றரை வருடமோ நிகழ்ச்சித்தயாரிப்பாளராக வரவேண்டும் என்ற அழைப்பின் பேரில் நான் லண்டன் சென்றேன். அப்பொழுது தமிழோசை நேயர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று விரும்பி BBC ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. Meet the listeners என்பதே அதன் பெயர். சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்களிலெல்லாம் தமிழோசை நேயர்களைச் சந்திப்பதற்காகக் கூட்டங்களை ஏற்பாடு செய்தோம். சங்கரும் நானும் BBCஐச் சேர்ந்த Judy Marshall, Heather Bond, Kailash Pudhwar போன்றோரும் ஒவ்வொரு ஊராகச் சென்று தமிழோசை நேயர்களைச் சந்தித்தோம். நேயர்களின் அன்பு வெள்ளத்தில் BBC குடும்பமே திக்குமுக்காடிப் போனோம். BBC அதிகாரிகளுக்கு இதன் பின்னர் தான் தமிழோசை நேயர்களின் ஊக்கமும் உற்சாகமும் புரிந்தது. இதன் பயனாக நிகழ்ச்சி நேரம் 15 நிமிடத்திலிருந்து அரைமணி நேரமாக உயர்த்தப்பட்டது. அத்துடன் வாரத்தில் இரண்டு நாட்கள் நடந்த தமிழோசை நிகழ்ச்சி வாரம் 5 நாட்களுக்கு மாற்றப்பட்டது. "தமிழோசை"என்ற தலைப்பைக் கேட்கும் பொழுதெல்லாம் தமிழ் ஒலிபரப்புக்கு இந்தப் பெயரைச் சூட்டிய சோ.சிவபாதசுந்தரனாரை வியக்காமல் இருக்க முடியாது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று பாரதி எப்படித் தீர்க்க தரிசனத்துடன் பாடினானோ என்று நினைத்துக் கொள்வேன்! இப்படியாகத் தன் மன ஓசையில் பகிர்ந்து கொண்டார் அமரர் சுந்தா.வீ.சுந்தரலிங்கம் அவர்கள். எத்தனையோ ஜாம்பவான்களால் கட்டியிழுத்த இந்தத் தமிழோசை என்னும் தேர் இன்னும் பல்லாண்டுகாலம் ஓடித் தமிழ்ப்பணியாற்ற வாழ்த்தி இப்பதிவை நிறைவாக்குகிறேன். இந்தத் தொகுப்புக்கு உதவிய ஊடகர் திரு விமல் சொக்கநாதன் அவர்கள் ஊடகர் அமரர் சுந்தா வீ.சுந்தரலிங்கம் அவர்கள் ஆகியோருக்கு நன்றி