சிட்னியில் இருந்து சிங்கை நோக்கிப் பயணிக்கும் விமானத்தில் ஏறுகிறேன். இருக்கையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமர்ந்ததும் முதல்வேலையாகத் தேடியது அந்த சிங்க்ப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் காண்பிக்கவிருக்கும் படங்களின் பட்டியல். தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த மொக்கைப்படங்களான வேங்கை, மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என்று விபரமிடப்பட்டிருந்தது. அலுத்துச் சலித்து மேலும் ஏதாவது தேறுகிறதா என்று பக்கங்களைப் புரட்டினேன். Pancham Unmixed என்ற தலைப்பில் இசைமைப்பாளர் ஆர்.டி.பர்மன் குறித்த விபரணச்சித்திரம் ஒன்று இருப்பதாகப் போடப்படிருந்து. சில விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டால் போல எதேச்சையாக நிகழ்வது போலத்தான் இதுவும். காரணம் என் பயணத்துக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் ஆர்.டி.பர்மன் இசையில் இறுதியாக வெளியான 1942 A Love story படத்தின் பாடலான குச் நா கஹோ பாடலை ஏனோ கேட்கவேண்டும் என்று மனம் உந்தித் தள்ள சில பத்துத் தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்டிருப்பேன், பல வருஷங்களுக்குப் பின் கேட்கும் போது ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பிள்ளை வீட்டுக்கு வரும்போது ஆசை தீர உச்சி மோந்து கொண்டாடும் தாய்போல உணர்வு.
1995 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து பல்கலைக்கழகப் படிப்பில் நாட்களை நெட்டித் தள்ளியவேளை, இப்போது போல அப்போதெல்லாம் இணைய வானொலிகள்,நண்பர்கள் வாசனையே இல்லாத வேளை ஒரு வட இந்திய மளிகைக்கடையில் சரக்குப் பொட்டலங்களுக்கு மேல் தூசிபடர்ந்திருந்த பொம்மையாக 1942 A Love story படத்தின் ஒலிநாடாப்பேழையைக் கண்டு, (கையில் அப்போது காசு புழங்காத நேரம் வேறு) அந்தப் படம் பற்றி அப்போது விகடனில் வந்த கவர் ஸ்டோரி கொடுத்த பின்னணியால் மட்டுமே வாங்கிக் கேட்டிருந்தேன். அப்போது தான் ஆர்.டி.பர்மன் என்ற பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருப்பதே தெரிந்திருந்தது எனக்கு. ஊரில் இருக்கும் போது இலங்கை வானொலி வர்த்தக சேவையில் "தம் மரே தம்" பாடலை இவர் தான் இசைத்திருந்தார் என்று தெரியாது கேட்டிருந்தது வேறு விஷயம். அப்போதெல்லாம் எங்களை ஆக்கிரமித்திருந்தது இளையராஜா என்ற மந்திரம். நாளாக இளையராஜாவை என்ற எல்லைக்கு அப்பாலும் இசை மேதைகள் இருக்கின்றார்கள் என்று புரியவைத்தது 1942 A Love story.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மெல்ல அந்தரத்தில் மிதக்க ஆரம்பிக்கிறது. Pancham Unmixed என்ற ஆர்.டி.பர்மன் குறித்த விவரணச் சித்திரத்துக்குள் என்னை அர்ப்பணிக்கின்றேன். திரையிசையில் ஒரு சகாப்தமாக விளங்கிய கலைஞனுக்கு ஆத்மார்த்தமாகக் கொடுத்த உணர்வுகளின் கலவை என்றே இதைச் சொல்லவேண்டும். இந்தப் படத்தை இயக்கியிருந்தவர் Brahamanand Singh. எண்ணப்பரிமாறல்களைப் பதிவாக்கும் போது அது கொஞ்சம் பிசகினாலும் அசட்டுத்தனமான பாராட்டுக் குவியலாக மாறிவிடும் அபாயம் இருக்கும், ஆனால் இந்தப் படத்தில் ஆர்.டி.பர்மனைப் பற்றி வந்து பேசும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் அவரோடு பயணித்தவர்கள், அல்லது அவரின் இசையால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள். எனவே எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி அவரின் வாழ்க்கையின் எல்லாத் திசைகளையும் தொட்டுச் சொல்கின்றது இது. காலத்தினால் செய்த கெளரவமாக இந்த விவரணச் சித்திரத்துக்கு தேசிய விருதும் கிட்டிருப்பது உபரித்தகவல்.
Pancham da என்று செல்லமாக அழைக்கபட்ட ஆர்.டி.பர்மன் ஏற்கனவே சிகரத்தில் இருந்த எஸ்.டி.பர்மன் என்ற இசை ஆளுமையின் மகன். எனவே தந்தையைக் கடந்து தன்னை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு. அதைச் செய்தாரா என்றால் 1960 இலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளில் முதல் இருபது ஆண்டுகள் தன்னை நிரூபித்திருக்கின்றார். திரையிசையில் நுணுக்கமான சங்கதிகளைப் போடுவதில் வல்லவர் என்றவாறே அவர் காட்டிய சாகித்யங்களை ஒருவர் ஆசையோடு ஒப்புவிக்கிறார். இசையில் எந்தவொரு வட்டத்தையும் போட்டுவைக்காதது போலவே அவரின் வாழ்வும் அமைந்து விட்டதை நெருக்கமான நண்பர்கள் பகிரும் போது அவரின் ஆத்மார்த்தமான மனைவி இசை ஒன்றுதான் என்ற முடிவை எடுக்கவைக்கின்றது. அவருடைய இசைக்குழுவில் பணியாற்றியவர்களில் இருந்து இன்றைக்கு முன்னணி இசைமைப்பாளர்களான விஷால் பரத்வாஜ், சங்கர் மகாதேவன் போன்றோர், ஆர்.டி.பர்மன் திரையிசையில் காட்டிய தனித்துவத்தை ஒரு ஆய்வுப்பாடமாக நடத்திக் காட்டுகிறார்கள்.
ஆர்.டி.பர்மனின் முதல் திருமணமும் ஒரு குட்டி சினிமா போலத் தான். ஆர்.டி.பர்மனோடு சினிமா பார்க்கிறேன் பார் என்று தன் நண்பிகளோடு பந்தயம் கட்டி டார்ஜிலிங்கில் அவரைத் தன் வலையில் விழ வைத்த பணக்காரி ரீட்டா பட்டேல், பந்தயம் முடிந்தபின் கழன்றுவிட, தன் நண்பர்களின் உதவியோடு தொலைபேசி விபரக்கொத்தில் ரீட்டாவின் தொலைபேசியைத் தேடிக் கண்டுபிடித்துத் தன் காதலைப் பகிர்ந்து மணமும் முடித்துக் கொண்டார். ஆனால் இசையே வாழ்வாகிப்போனவருக்கு இடையில் வந்த சொந்தம் ஒட்டவில்லை. பின்னாளில் ஆஷா போன்ஸ்லே என்ற பெரும் பாடகியைத் தன் வாழ்நாள் துணையாக்கிக் கொண்டார். இந்த விபரணப்படம் சொல்லாத ஒரு சேதியை நான் பல வருஷங்களுக்கு முன்னர் படித்திருக்கின்றேன். அது என்னவென்றால், ஆஷா போன்ஸ்லேவின் முதல் கணவர் ஹேமந்த் போன்ஸ்லே என்ற பெயரோடு ஒட்டிருயிருந்த அந்தப் பெயரை இறுதிவரை அப்படியே வைத்திருக்கச் சொன்னாராம் ஆர்.டி.பர்மன்.
இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன், பாடகர் கிஷோர்குமார், நடிகர் ராஜேஷ்கண்ணா இந்த மூவரும் சேர்ந்தால் வெற்றி வெற்றி வெற்றிதான் என்றதொரு சூழல் எழுபதுகளில் இருந்தது. கலைத்துறையில் எதிர்பாராத ஏற்றம் வருவதும் பின்னர் திறமை என்ற ஏணியால் மேலே மேலே உயரப்போவதும், திடீரென்று எதிர்பாராத சறுக்கல் வருவதும் வாழ்வியல் நியதி. அந்தச் சுற்றோட்டத்தில் இருந்தும் ஆர்.டி.பர்மனால் விலகமுடியவில்லை. எண்பதுகளிலே புதிய அலை அடிக்கிறது, அதுவரை உயரத்தில் இருந்த ஆர்.டி.பர்மனின் 17 படங்கள் வரை தொடர்ச்சியாக வர்த்தகச் சூழலில் நஷ்டப்படுகின்றன. அதுவரை உச்சாணிக்கொம்பில் வைத்து அழகு பார்த்தவர்களாலேயே வேண்டப் பொருளாகச் சீண்டாத நிலை இவரின் இசைக்கு.
ஆனால் அவர் தன் சுயத்தை இழக்கத் தயாராகவில்லை. பிரபல இயக்குனர் சுபாஷ் கை, இவரை ராம் லக்கன் படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டு, லஷ்மிகாந்த் பியாரிலால் இரட்டையர்களிடம் பின்னர் கைமாற்றிவிட்டார். சுபாஷ் கை ஒரு மரியாதை நிமித்தமாவது என்னிடம் இதைச் சொல்லவில்லை என்று மனம் நொந்து பிலிம்பேர் பத்திரிகைக்குப் பின்னாளில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
"I am never going to let people who are close to me, destroying me because I am not commercially viable" - ஆர்.டி.பர்மன்
இயக்குனர் விது வினோத் சோப்ராவின் பரிண்டா படம் 1989 ஆம் ஆண்டில் தயாராகும் போது ஆர்.டி.பர்மன் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய்ப்படுகிறார். பாடல் இசை உருவாக்க இருக்கும் வேளை ஏதோவொரு காரணத்தால் திடீரென்று நாயகன் அனில் கபூர் நடிக்கமாட்டேன் என்று முரண்டு பிடிக்க, படத்தையே கிடப்பில் போடும் சூழல். விது வினோத் சோப்ரா, ஆர்.டி.பர்மனுக்குத் தொலைபேசியில் அழைத்து, இந்தப் படத்தை எடுக்கும் முடிவைக் கைவிடுகின்றேன் என்று விட்டு வைக்கிறார். அடுத்த நாள் ஆர்.டி.பர்மனிடம் இருந்து விது வினோத் சோப்ராவுக்கு அழைப்பு. "ஒரு பாடலை கம்போஸ் பண்ணி வைத்திருக்கிறேன் ஸ்டூடியோ வரை வந்து போகமுடியுமா"
எனவும், எந்தப் படத்துக்காக என்று விது வினோத் சோப்ரா வினவ "பரிண்டா படத்துக்குத் தான்" என்கிறார் ஆர்.டி.பர்மன். "எனக்கு மனம் சரியில்லை இப்போது அதைக் கேட்கும் சூழலில் நான் இல்லை"என்கிறார் விது வினோத் சோப்ரா. "இல்லை நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்" என்று வற்புறுத்தித் தான் கம்போஸ் பண்ணிய பாடலைக் கேட்க வைக்கிறார். அதுதான் ஆர்.டி.பர்மன்.
பின்னர் அந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டது.
1942 A Love story படத்தை 1994 ஆம் ஆண்டில் விது வினோத் சேப்ரா எடுக்கமுடிவெடுக்கிறார். ஆர்.டி.பர்மன் இசையமைத்தால் எங்களுக்கு வேண்டாம் என்று ஆடியோ கம்பனிகளே பகிரங்கமாக இவருக்குச் சொல்லிவிட்ட சூழலில் அவர்களுக்குச் சொல்லாமலேயே ஆர்.டி.பர்மனை ஒப்பந்தம் செய்து ஒருநாள் பாடல் கம்போஸ் பண்ண ஆரம்பிக்கும் நேரம்.
ஆர்.டி.பர்மன் ஒரு மெட்டை வேகமெடுத்துப் பாடிக்காட்டுகிறார், கூடவே தபேலா போன்ற பக்கவாத்தியங்கள் சொல்லிவைத்தாற் போல முழங்குகின்றன. எல்லாம் முடிந்த பின் விது வினோத் சோப்ராவின் முகத்தைப் பார்க்கிறார். எந்தவிதச் சலனமும் இல்லை.
"எப்படி இருக்கு பாட்டு?"
"குப்பை, படு குப்பை" என்று முகத்தில் அறைந்தாற்போலச் சொல்லுகிறார் விது வினோத் சோப்ரா.
அறையில் இருந்த ஒவ்வொரு இசைக்கலைஞர்களும் மெல்ல மெல்ல வெளியேறுகிறார்கள்.
விட்டு மேலே இருக்கும் எஸ்.டி.பர்மன் படத்தைக் காட்டி "I am looking for him",
"நான் உங்களுக்குப் பிச்சை போடுவதற்காக இந்தப் படவாய்ப்பைத் தரவில்லை, மேலே படத்தில் இருப்பவரின் இசை ஆளுமைக்கு நீங்கள் சளைத்தவரில்லை ஆனால் நீங்கள் இப்போது கொடுத்தது முடிவுற்ற இசையின் முற்றுப்புள்ளி இப்படியான ஆர்.டி.பர்மன் எனக்குத் தேவையில்லை" என்று கோபமாகப் பேசுகிறார் விது வினோத் சோப்ரா.
"நான் இந்தப் படத்தில் இசைமைக்கிறேனா" மெல்லக் கேட்கிறார் ஆர்.டி.பர்மன்.
"எனக்கு இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சுத் தேவையில்லை, எனக்குத் தேவை நீங்கள் கொடுக்கவேண்டிய இசை, அதைக் கொடுங்கள்"
இரண்டு வாரம் கழிகிறது. மீண்டும் ஆர்.டி.பர்மன், விது வினோத் சோப்ரா சந்திக்கிறார்கள். மீண்டும் அதே இசைக்குழுவினரோடு தன் ஆர்மோனியத்தை எடுத்து பெங்காலி இசைவடிவத்தை முதலடியாகக் கொடுக்கிறார் அது பாடலாகப் பரிணமிக்கிறது. அதுதான் இந்தப் பாட்டு "குச் நா கஹோ"
அந்தப் பாடலோடு 1942 A Love story படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பதியப்பட்டுப் பாடல்கள் வெளியாகின்றன. பட்டிதொட்டியெங்கும் அந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மீண்டும் ஆர்.டி.பர்மனை உயிர்ப்பிக்கின்றன. 1942 A Love story படக்குழுவே அவருக்காக ஜனவரி 1, 1994 பிறக்கும் கணத்தில் ஒரு ஸ்பெஷல் பாராட்டு விழாவை நடத்துகிறார்கள். அதில் வரும் "ஏக்கு லடுக்கிக்கே" பாடல் ஒலிபரப்பாகும் வேளை அவர் தன் காரை நிறுத்திவிட்டுக் கம்பீரமாக அரங்கில் நுழைகின்றார். January 4, 1994 அவர் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றார், கடைசி உயிர்ப்பில் தன்னை நிலை நிறுத்திய திருப்தியில். ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடிய அந்தப் படத்தை முழுதும் பார்த்தபோது உண்மையில் உணர்ச்சிவசப்பட்டுக் கலங்கினேன். இதை வெறும் வார்த்தை ஜாலங்களுக்காகப் நான் பகிரவில்லை. இதை நீங்களும் ஒருமுறை பார்த்தால் அதே உணர்வில் இருப்பீர்கள். இந்தப் படத்தை இணையத்தில் பார்க்கக் கிடைக்கும் தொடுப்பு இன்று வழக்கமாக இசைத்தட்டு வாங்கும் கடைக்குப் போகிறேன். ஆர்.டி.பர்மனின் இசைத் தட்டு ஒன்று கண்ணில் வெட்டெனப்படுகின்றது. ஆசையோடு உறை பிரித்து என் காரின் இறுவட்டுக்கருவியில் இசைத்தட்டைச் செருகுகின்றேன். Ek Ladki Ko Dekha To Aisa Laga நெஞ்சை நிறைக்கிறது.
Tuesday, July 24, 2012
என்னை உயரே பறக்க வைத்த ஆர்.டி.பர்மன்
Posted by
கானா பிரபா
at
10:18 PM
12
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook