“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே..”
ஊரில் இருக்கும் அப்பாவுக்குத் தொலைபேசி முடிக்கும் போது அவர் அடிக்கடி இதைத் தான் சொல்லுவார்.
“சொந்த பூமி சொர்க்க பூமி" என்று தான் வாழ்வின் இறுதிவரை சொல்லிக் கொண்டே இருந்தவர் அவர்.
அவரின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று அல்லது
அவரின் நிறைவேறாத ஆசை ஒன்றே ஒன்று என்றால் தன் பிள்ளைகள் நாடு திரும்பி வாழ வேண்டும் என்ற ஒன்று தான்.
“யாழ்ப்பாணம்” பாடல் ஓய்வுறும் நிமிடம் “பெற்ற தாயும்” வந்த போது அப்பாவைத்தான் நினைப்பூட்டிக் கண்கலங்க வைத்தார்கள்.
“பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள்....மாடங்கள் ஆஹா”
தாயகத்துக்குப் போகும் ஒவ்வொரு சமயமும் “யாழ்ப்பாண வளைவுக்குள்” நுழையும் போது மலேசியா வாசுதேவன் மனசுக்குள் இருந்து பாடுவார்.
இதையெல்லாம் அனுபவிக்காதவர்களுக்கு, அல்லது இதே நிலையில் அந்த உணர்வை உணராதவர்களுக்கு இது அதீத உணர்ச்சிப் பிரதிபலிப்பாக இருக்கலாம்.
யாழ்ப்பாணப் பாடல் வந்தபோது முந்திக் கொண்டு பார்க்க வேண்டி ஆயத்தமானேன். ஆனால் ஆரம்பத்தில் ஒரு நெருடல் வந்து அப்படியே வைத்து விட்டுவிட்டேன்.
படைப்பு ரீதியாக இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று மனம் உந்த, மீண்டும் இந்தப் படைப்பை முழுமையாகப் பார்த்தேன்.
பாடல் கோவை வழியாக, ஊரின் தொன்மங்களை, பண்பாட்டு விழுமியங்களை, வாழ்வியலைக் காட்ட முடியுமா? என்ற கேள்விக்கு மிகக் கச்சிதமான பதிலைக் கொடுக்கிறது இந்தப் படைப்பு.
ஒரு தெம்மாங்குத் தாள லயத்தோடு தொடங்கி, பல்வேறு விதமான இசைக் கூட்டை இணைக்கும் போது உறுத்தல் இல்லாத இசைப்பயணமாகக் கொடுத்ததில் அற்புதமான இசையனுபவம் என்றால்,
காட்சிகளின் கூட்டுப் பிணைப்பும் மிக நேர்த்தியாகவும், ஆரவாரமற்றுப் பாடலோடு இழைந்தோடும் இலாவகமும் சேர்ந்து ஒரு பூரணமான படைப்பாக நம் நெஞ்சில் பதிகின்றது.
“ஊரோடு நீ வாழ்ந்து பாரு" மிதக்கும் கணம்,
எத்தனையோ ஈழத்து மெல்லிசைப் பாடல்களை அனுபவித்தவன் என்ற வகையில் கூட்டுக்குரல்களை மாறுபட்ட திசையில் நகர்த்தியிருக்கிறார்களே என்ற ஆச்சரியப்பட்ட சமயம் அதைக் கொண்டு போய்
“மாசறு பொன்னே வருக” வோடு இணைத்த விதத்தில் “அடடா” என்று வாய்விட்டுச் சொல்லி மகிழும் இன்ப அதிர்ச்சிக்குக் கொண்டு போய் விட்டு விட்டார்கள்.
இம்மாதிரியான படைப்பு எழும் போது ஊர்ப்பெருமை பேசுகிறார்களே என்றதொரு விமர்சனம் எழும், அல்லது எதை எடுப்பது எதை விடுவது என்ற குழப்பமே படைப்பைக் குழப்பி விட்டு விடும்.
ஆனால் இந்தப் பாடலின் அடி நாதம் எப்படி இருக்கவேண்டும் என்பதில் இருந்து பின்னப்பட்ட வரிகளும், காட்சியமைப்புகளும் அந்த மாதிரியான விமர்சனங்களைப் புறந்தள்ளி விடுகின்றன.
மாட்டு வண்டிச் சவாரிச் சாதனையாளர் மகேந்திரம் ஐயாவைக் கெளரவப்படுத்தியது பெருமை என்றால், சாம் சூசைட் பண்ணப் போகிறான் புகழ் ர.ஜசிகரனை உள்ளே இழுத்து வெளி நாட்டுக்காற அண்ணையை முறைத்துப் பார்க்க வைத்து ஒரு சேட்டை பண்ணி இருக்கிறார்கள், சிரித்துத் தள்ளி விட்டேன் அந்த இடத்தில்.
கழுகுப் பார்வையில் இருந்து, ஒளிப்பதிவின் ஒவ்வொரு அசைவும் அதன் தேவையறிந்து இயங்குகிறதென்றால், அந்த மந்திரி மனையில் இருந்து அடுத்த படிமத்துக்கு நகரும் படத்தொகுப்பு ஒரு சோறு பதமாக.
பாடல் வரிகளைச் சிறப்பாகக் கையாண்ட ரெங்கநாதன் துவாரகன், இசை மற்றும் மூலக் குரல் வழங்கிய புவனேந்திரன் பிரணவன், படத்தொகுப்பு மற்றும் இணை இயக்கம் கொடுத்த ரெங்கநாதன் நிஷாகரன், ஒளிப்பதிவு தந்த ஶ்ரீபவன் ரஜீபவன், இவர்களோடு உருவாக்கி அளித்த அருளானந்தம் ஜீவதர்ஷன், இந்தப் படைப்பை பரவலாகக் கொண்டு போக உழைக்கும் துஷி கரன், சக முகம் காட்டாத பின்னணியில் உழைத்த கூட்டுப் பாடகர்கள், கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்ல வேண்டும்.
இன்னும் உங்களிடமிருந்து இது போல எதிர்பார்க்கிறோம்.
முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த குலசிங்கம் கிருஷாந்தன் கூட அலட்டல் இல்லாமல் இயல்பாக வந்து போகிறார்.
இந்த மாதிரிப் பாடல்களுக்கு ஆட்டம் போட வைத்து குழப்பி அடித்து விடும் போலித்தனம் இல்லாதது இங்கே தனியே குறிப்பிட வேண்டியது.
“தூதுவளை இலை அரைச்சு” பஸ் பாடல்களில் தவிர்க்க முடியாத பயணி, அதுவும் கூட வருகின்றது, ஆனால் அது அடுத்த காட்சியோடு தொடர்புபடும் இடத்தில் இன்னும் சரியாக ஒலிக்கலவை இணைந்திருக்கலாம் என்று மனதில் பட்டது.
“யாழ்ப்பாணம்” பாடல் இந்த ஊரோடு வாழ்ந்தவர்களுக்கு அந்நியோன்யமாக இருக்கிறது. ஆனால் “ஓடக்கரை அப்பம்” கூடத் தெரியாத யாழ்ப்பாணவாசிகளே பலர் இருக்கிறார்கள்.
ஆகவே இந்தப் பாடலின் இன்னொரு வடிவத்தை ஆங்கில உப குறிப்பு கொடுத்து, பாடல் முடிவில் ஒவ்வொரு இடம் குறித்த சிறு பொழிப்புரையைக் கொடுத்தால் இந்த முயற்சியின் வீரியம் பலருக்கு உதவியாக இருக்கும்.
இந்த மாதிரியான தொடர் ஓட்டத்தை நம் தமிழ் வாழ்விடங்கள் ஒவ்வொன்றுக்கும் கொடுக்க வேண்டும் அதற்கான செய் நேர்த்தி இந்தக் குழுவிடம் உண்டு.
பழைய காதலில் இருந்து சின்னச் சின்னக் கவிதைத்தனங்கள் நிறைந்திருப்பதை ரசிக்க முடிந்தது. இன்னொரு முறை பார்த்தால் விடுபட்ட சேதியும் சொல்லும் போல.
யாழ்ப்பாணத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு
உணர்வு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் இந்த மண் பாட்டு
ஒரு பண்பாட்டுப் பாடலாகப் பண் பாடுகிறது
யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம் அனுபவத்தை நீங்களும் நுகர
Yaazhppanam Song A Melodic Tale
https://www.youtube.com/watch?v=M59MbRuYinU
கானா பிரபா
29.03.2024