மிகப் பிரியத்துடன் எப்போதும் தன்னைத்தானே இறுக்கிப் பிடித்தபடி தான் சுமித்ரா தூங்குவாள்.
இறந்து கிடந்த போதும் சுமித்ரா அப்படியே தான் படுத்துக் கிடந்தாள்.
மரணத்துக்குப் பின்னர் தான் மனிதர்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்பேன்.
அவர்கள் மீதான பகைமை மறைகின்றத்து, அவர்களை மன்னிக்கும் மனப் பான்மை மேலோங்குகிறது.
இன்னும் இறந்து போனவர்களின்
தனித்துவத்தை அதிகம் கொண்டாடுவார்கள்.
“எங்கே போகப்போகிறார் இங்கே தானே இருப்பார், பேசுவோம் என்ற நினைப்புடன் இருக்கும் போது ஒருவர் செத்துப் போவதுதான் ஆயுள் தண்டனை போல வதைக்கும்”
என்று முன்னர் எழுதி இருந்தேன்.
மரண வீடு என்பதன் உள்ளார்ந்த தார்ப்பரியத்தை உணர்ந்த ஒவ்வொருவரையும் அங்கு நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் சுய பரிசோதனை செய்து கொள்ள வைக்கின்றது.
மனதுக்குள் பாவ மன்னிப்பும் கேட்பார் சிலர்.
கல்பட்டா நாராயணனின் “சுமித்ரா” நாவலைப் படித்த பின் நான் முன் சொன்ன அதே உணர்வுக்கும் ஆட்பட்டேன்.
இப்படித்தான் இந்த நாவலின் முதல் பக்கமே ஆரம்பிக்கிறது.
சுமித்ராவின் உயிரற்ற அந்த உடலைப் பார்க்க ஒவ்வொருவரும் வருகிறார்கள்.
தங்கள் கதையைச் சொல்லிக் கொண்டே அதில் சுமித் ரா எப்படி இருந்தாள் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டே நகர்கிறார்கள்.
ஒரு மரணம் பல கதைகளை விரிக்கின்றது. அந்தந்த மனிதர்களது வாழ்வோட்டத்தில் சுமித்ரா மீண்டும் பிறந்து இறக்கிறாள்.
“நான் இறந்த காலம் இல்லாதவளானேன்” என்று தோழி கீதா சவமாகக் கிடக்கும் சுமித்ராவிடம் கிசுகிசுத்து விட்டுப் போகிறாள்.
தம் அந்தங்கக் கதைகளைப் பேசி இளைப்பாறிய நினைவுகளை இறந்து போன அந்தத் தோழியோடு இறந்து போனதாகக் கொள்ளும் ஏக்கத்தின் வெளிப்பாடு அது.
சுமித்ராவின் தோழிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒருவருக்குப் பின் ஒருவராக இருவரும் அறியாது வந்த போது இப்படிக் கொண்டு போய் முடிக்கிறார்
“சொல்வதற்கென்று எங்கேயாவது ஏதாவது இருந்தால் இறந்ததைப் பொருட்படுத்தாமல் சுமித்ரா சுபைதாவுடன் இப்போதும் சொல்லலாம்.
சுமித்ரா கொண்டாடியவர்கள், சுமித்ராவால் கொண்டாடப்பட்டவர்கள்
தான் முன்னே வந்து போகிறார்கள்.
இறுதியை நெருங்கும் போது தான் அவள் மகள் அனுசூயா வருகிறாள்.
அந்த அத்தியாயத்துக்குத் தலைப்பிடுகிறார்
“சவம் மீண்டும் சுமித்ரா ஆனது”
கல்பட்டா நாராயணன் மலையாளத்தின் இலக்கியவாதி, அழகியல்வாதியாக அறியப்பட்டவர்.
கேரளத்தின் மிகச் சிறந்த கவிஞாக அறியப்பட்டவர் கவிஞனுக்குரிய கலைவடிவம் நாவலே என்று கண்டு கொண்டார் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
இந்த கவிதைக்காரன் கல்பட்டா நாராயணன் படைத்த “”இத்ர மாத்ரம்”
என்ற நாவலே வம்சி வெளியீடாக எழுத்தாளர் பவா செல்லத்துரையின் மனைவி கே.வி.ஷைலஜாவின் மொழி பெயர்ப்பில் “சுமித்ரா” என்று தமிழ் வடிவம் கண்டிருக்கிறது.
“இத்ர மாத்ரம்” அதே பெயரில் மலையாள சினிமாவாக ஸ்வேதா மேனன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க 2012 இல் வெளியானது. ஆனால் இந்த நாவலின் எழுத்தைப் படமாக்கும் போது அச்சு அனுபவம் கொடுத்த மனக் கிளர்ச்சியைப் படம் உண்டு பண்ணவில்லை.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரையே மிகக் கனதியானது.
எந்த நினைவுகளை விலக்கியும் வெறுத்தும் ஒதுக்கி வைத்தார்களோ அந்த நினைவுகளில் ஒன்றாக அவர்களும் உருமாறிப் போகிறார்கள்.
சாவு வீட்டில் ரோஜா மலர்கள் அதன் சுகந்தத்தை இழந்து விடுகின்றன. உணவு அதன் ருசியை இழந்து விடுகின்றது. மனிதர்கள் தமது இயல்பை இழந்து விடுகிறார்கள். ஊதுபத்தியின் புகை கூட துக்கத்தின் வாசனையாகி விடுகிறது.
இப்படியாகச் சொல்லிக் கொண்டு போகிறார். நாவலைப் படித்து முடித்த பின்னர் எஸ்.ராவின் அந்த முன்னுரையை மீண்டும் படித்த போது அதன் கனதி அவர் பாஷையில் இன்னும் பாறாங்கல்லாய் அழுத்துகிறது.
வய நாட்டின் குளிர்ந்த பச்சைக்காடுகள் வழியாக கிராமங்கள் வழியாக ஓடும் சிறிய நீரோடை இந்த நாவல் என்கிறார் ஜெயமோகன்.
ஒவ்வொரு அத்தியாய முடிவில் சீனிவாசனின் கோட்டோவியங்களில் கண்கள் குத்திட்டபடி வாசித்துக் கடந்த அத்தியாயத்தை மனம் அசை போடுகின்றது.
யக்ஷன் கேட்கிறார் இப்படி
இந்தப் பூவுலகின் வியப்பு என்ன?
அதற்கு யுதிஷ்ட்ரன் சொல்கிறார்
ஒவ்வொரு நாளும் மனித வாழ்வு முடிந்து மக்கள் யமனின் கோட்டைக்குள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இந்தப் பூலோகத்தில் எஞ்சி இருப்பவர்கள் தங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லையென்றும் இங்கே நாம் தங்கி விடுவோமென்றும் நினைக்கிறார்கள். இதை விட வியப்பு என்ன இருக்கிறது?
(ஆரண்ய பருவம் - மகா பாரதம்)
கானா பிரபா
07.03.2024
0 comments:
Post a Comment