மடத்துவாசல் பிள்ளையார் கோயில் கொடியேற இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரேயே ஊர் உலகமெல்லாம் பரவிவிட்டது. இப்போது கொடியேறித் திருவிழா நடக்குது. போன வருஷம் தாயகம் போனபோது 16 வருஷத்துக்குப் பிறகு மடத்துவாசல் பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழா எல்லாம் கண்ட காட்சி இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது. 16 வருஷம் எண்டவுடனை வருஷம் 16 றேஞ்சுக்குக் கன்னாபின்னாவெண்டு கற்பனை வளக்காதேங்கோ.
ஆயிரம் தான் இருந்தாலும் இணுவில் ஊர்ச் சனம் கோயில் என்றால் எதையும் அப்படியே விட்டுவிட்டுக் கடவுளே பழி என்று கிடக்கும். எங்கள் இணுவில் கிராமம் விவசாயபூமி, பெரும்பாலானவர்களின் தொழில் விவசாயம் மட்டுமே. மரவள்ளிக் கிழங்கு, சிறு தானியங்களில் இருந்து புகையிலைச் செடி வரை வருஷத்தின் பெரும்போகம் சிறுபோகம் எல்லாம் விட்டுவைக்காமல் தோட்ட நிலமெல்லாம் பச்சைபூக்க வைப்பதில் எங்களூர்க்காரர் வல்லவர்கள். முழுநேரம் தோட்டவேலை செய்பவர்கள் ஒரு புறம், பகுதி நேரமாக வாத்தி வேலை பார்த்துக் கொண்டே மன்னிக்கவேணும் முழுநேரமாக வாத்தி வேலை பார்த்துக் கொண்டே பள்ளிக்கூட நேரத்துக்கு முன்னும் பின்னும் தோட்டவேலை செய்யும் ஒரு பகுதியுமாக, எங்கள் ஊரில் தோட்டவேலை செய்யாதவர்களை அந்நிய தேசத்தில் இருந்து வந்தவர்கள் போலத் தான் கணிப்பார்கள். தாவடி கடந்து கொக்குவில் பக்கம் போனால் அவர்கள் தங்களை மெட்ரோ ஏரியாவுக்குள் இருக்கிறவை போல எங்களுக்கு ஒரு அடைமொழியையும் கொடுத்துச் சிறப்பிப்பது இன்று நேற்றல்ல, அடுத்த யுகம் வரை தொடரும் போல. அந்த அடை மொழி "இணுவில் கிழங்கு".
காலை ஆறரை மணிக்குக்குக் காலைப்பூசையை மட்டுமல்ல மாலை சாயரட்சைப் பூசையையும் பார்த்துப் பிள்ளையாரின் அருளை நிதமும் வேண்டுவார்கள். காலைப்பூசை முடிந்து யாழ் நகரத்தில் இருக்கும் ஶ்ரீ மாஸ்டரின் கணக்கியல் வகுப்புக்குப் போனால் அவர் எங்களைக் கண்டதும் சொல்லுவது இப்படி இருக்கும்,
"இணுவிலான்கள் வந்துட்டான்கள் சந்தனப் பொட்டு,திருநீத்துக் குறியோட"
பரராஜசேகர மன்னனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது, மடத்துவாசல் பிள்ளையார் என்பது வழக்கொழிந்து இப்போதெல்லாம் பரராஜசேகரப்பிள்ளையார் என்று ஆகிவிட்டார். இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்ட சமயம், இணுவில் கிராமத்தின் ஒருபக்கத்தின் பல நூறு குடும்பங்களையே தன்னுள் திணித்து வைத்துக் காத்தது இந்த கோயில்.
எவ்வளவுக்கு எவ்வளவு உடலை வருத்தித் தோட்டவேலை செய்து வாழும் இந்தச் சமூகம் அதற்கு மேல் அசாத்திய கடவுள் நம்பிக்கை கொண்டது. அதுவும் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் கொடியேறிவிட்டால் போதும், போட்டது போட்டபடி அப்படியே நிற்க, தேர், தீர்த்தம் கண்டு தான் மறுவேலை.
கோயில் திருவிழாக்காலம் தொடங்கிவிட்டால் கொழும்பு, மலையகம் போன்ற பகுதிகளில் பணி நிமித்தம் சென்றவர்களும் பத்து நாள் திருவிழாவுக்கு விடுப்பு எடுத்து வந்துவிடுவார்கள். இந்த நிலை இப்போது எல்லை கடந்து வெளிநாடு வரை வந்துவிட்டது. உலகத்தின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் இணுவில் சனம் தங்கள் வீட்டுக் கொண்டாட்டம் போலப் பிள்ளையாரின் மகோற்சவம் காண வந்துவிடுவார்கள்.
ஊரில் இருக்கும் பெடியளுக்கு முந்திய வருஷத்தின் தீர்த்தோற்சவம் அன்றே அடுத்த வருஷத் திருவிழா எப்படி இருக்கவேணும் என்று ப்ளான் போட ஆரம்பித்து விடுவார்கள். கொடியேற்ற காலம் அண்மிக்க அண்மிக்க, கோயிலைச் சுற்றியுள்ள பரப்பெல்லாம் துப்பரவு செய்து புல், பூண்டு இல்லாத தேசமாக்கிவிடுவார்கள். திருவிழா ஆரம்பித்துப் பத்து நாள் நடக்கும் போது காலையில் இருந்து மாலை வரை கண்ணும் கருத்துமாக ஆலய சேவை செய்வார்கள். சுவாமி வீதி வலம் வரும்போது அவற்றைத் தோளேந்திக் கவனமாக உலாத்தி உட்பிரகாரச் சந்நிதியில் வைக்கும் வரை ஒரு வயசுக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அதில் இருக்கும்.
அந்தக் காலத்தில் திருவிழாக்காலங்கள் இன்றைக்கும் என் மனக்கண்ணில் மங்கலாக இருக்கின்றது. கோயிலின் முன்புறம் எல்லாம் சப்பரப் பந்தல் அமைத்து கலர் கலராக ட்யூப் லைட் எல்லாம் போட்டு, நிலமெல்லாம் குருமணல் பரப்பி ஆலயச் சூழலே கடற்கரை மணலில் கால்பதிப்பது போல இருக்கும். திருவிழாக்காலங்களில் கதாப்பிரசங்கங்களுக்கும், பாட்டுக் கச்சேரிகளுக்கும் அப்போது குறைவில்லை. திருமுருக கிருபானந்த வாரியார், சுந்தராம்பாள், பாலமுரளி கிருஷ்ணா, என்று நம்மூருக்கு வந்து போன பிரபலங்களில் இருந்து கம்பவாருதி ஜெயராஜ் இன் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு வரை அந்தக் காலம் இருந்தது. இடைப்பட்ட காலம் போரோடு போராடி திருவிழா நடத்தும் காலமாயிற்று.
எங்கள் ஊரைப் பொறுத்தவரை ஆன்மீகமாகட்டும், பொழுதுபோக்கு ஆகட்டும், சமூக ஒன்றுகூடல் ஆகட்டும் எல்லாமே கோயிலைச் சுற்றித் தான். ஆலய முகப்பிலேயே கிடுகால் வேய்ந்த பந்தல் அமைக்கப்பட்டு தண்ணீர்ப்பந்தல் வந்துவிடும். ஆலயத்தின் இன்னொரு புறம் வருஷம் 355 நாட்கள் மூடப்பட்டிருக்கும் தேனீர்க்கடை அந்தப் பத்து நாளும் கதவு திறந்து சுண்டல் வாசம் வா வா பக்கம் வா என்றழைக்கும். கடலைக்காறியில் இருந்து ஐஸ்கிறீம் வண்டிகளும், இனிப்புக் கடைக்காரர்களும் பத்து நாட்கள் முகாமிட்டு விடுவார்கள்.
கோயில் திருவிழா என்பது ஆன்மீகத் தேடலாகவும், அதே சமயம் எல்லோரும் கூடி மகிழ்ந்துபேசும் களமாகவும் அன்றிலிருந்து தொடர்கின்றது. எங்கள் ஊரில் இருந்து புலம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்களைக் காணவேண்டும் என்றால் இந்தக் கொடியேற்றம் ஆரம்பித்து தேர், தீர்த்தம் காலம் வரையான மகோற்சவ காலமே உகந்த தருணம். வேடந்தாங்கலை நாடிவரும் பறவைகளாக உலகின் மூலை முடிக்கு எங்கிருந்தும் படையெடுத்துத் திருவிழாக் காண வருவார்கள். கோயிலை மையப்படுத்திய வாழ்வு, பிள்ளையாரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டால் போதும் எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொள்வார் என்ற சரணாகதித் தத்துவம் உணரப்படும்.
பதினாறு வருஷங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு மடத்துவாசல் பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழா காணச் செல்கிறேன். உள்ளூரில் இருந்து அயலூர், வெளியூர் என்று கனத்த சனக்கூட்டம். உட்பிரகாரத்தில் இருக்கும் பேரிகைகள் முழக்கம் ஓய்ந்து சுவாமி உள்வீதி வலம் வந்து தேரில் ஏற வரும் நேரம். எல்லோர் வாயிலும் பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா என்ற உச்சரிப்பு மெல்ல மெல்ல உரப்பாக ஒலிக்கிறது. பிரதட்டைக்காரர்கள் ஒரு புறம், கற்பூரச் சட்டிகளுடன் பெண்கள், காவடிக்காரர் இன்னொரு புறம், மேள, நாதஸ்வரக்காரர் நேர் முன்னே. இவையெல்லாம் கடந்து மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன தேங்காய்க்கூட்டம். தேங்காய்களை எப்போது அடித்துத் துவம்சம் பன்ணலாம் என்று ஆளாளுக்குக் இருகைகளிலும் தேங்காய்களை வைத்திருக்கும் இளையோர். ஓரமாய் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நான் கூச்சம் விலகி விறுவிறுவென ஓடிப்போய் இரண்டு தேங்காய்களைப் பொறுக்கவும் ஆளாளுக்குத் தேங்காய்களைக் குறிபார்த்து அடிக்கவும் சரியாகவிருக்கின்றது. படபடவென்று ஓங்கி அடிக்கிறோம் தேங்காய்களை. புது வேஷ்டி எல்லாம் மண்ணின் சேறும் இளநீரும் கலந்த வெதுவெதுப்பு உடம்பெல்லாம் நீராபிஷேகம். இதையெல்லாம் பார்த்துச் சிரித்துக் கொண்டே கடப்பது போல மெல்ல மெல்ல மக்கள் அலையில் மிதந்து தேரில் ஏறி உலாவரத் தயாராகிறார் எங்கட பிள்ளையார்.