இந்த நூலைப் பிரித்து வாசிக்கத் தொடங்கியதுமே தாயகத்தில் நம் இணுவில் கிராமத்தில் நிற்பது போலவொரு பிரமை எழுந்தது.
ஏனெனில் நமக்கெல்லாம் கோயில்கள் தோறும் எழும் மணியோசையும், நாகசுர மற்றும் தவில் வித்துவான்கள் அவ்வாத்தியங்களினூடு எழுப்பும் சாதகமும் தான் கிண்ணென்று காதில் தட்டியெழுப்பும்.
லலிதாராம் தீவிர இசை ரசிகராக மட்டுமன்றி, அடியார்க்கும் அடியேன் என்ற நோக்கில் இயங்குபவர்.
ஈராயிரத்தின் ஆரம்பத்தில் வலைப்பதிவு யுகம் எழுந்த போது இணையத்தில் கட்டுரைகள், நேர்காணல்கள், ஆவணங்கள் வழி இசையுலக ஆளுமைகளை ஆவணப்படுத்தி வருவது அவரின் ஒரு முகம் என்றால்,
2013 இல் பரிவாதினி அறக்கட்டளையை உருவாக்கி, வெளித்தெரியாத அரிய பல கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து வருகிறார். அந்த அறக்கட்டளையின் இன்னொரு பரிமாணமே நாகசுர, தவில் வாத்தியக் கலைஞர்களுக்கும் முக்கிய இடம் கொடுத்து அவர்களைத் தனித்துவமான கெளரவமும் வழங்கிக் கெளரவித்து வருகின்றது.
காருகுறிச்சி அருணாசலம் அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டில், அவர் பெயரில் தென்னிந்தியாவின் பல ஊர்களில் வசதியற்ற, நாகசுரம் கற்றுவரும் மாணவர்கள் 100 பேருக்கு நிதி திரட்டியது பரிவாதினியின் முக்கியமான பங்களிப்பாகச் சொல்லி வைக்க வேண்டியது.
கலைஞர்களது வாழ்க்கை வரலாறுகள், சுய பரிமாறல்களாக அல்லது இன்னொருவர் தேடித் தொகுத்தவையாக அமைவது வழமை.
ஆனால் “காருகுறிச்சியைத் தேடி” என்ற இந்த நூல் அப்படியானதொன்றல்ல. தான் நேசித்துக் கொண்டிருக்கும் மகா கலைஞன் வாழ்ந்து கழித்த இடங்கள், அவரின் நினைவெச்சங்களைத் தேடி அலையும் ஒரு ரசிகனின் தேடலாக அமைகின்றது.
அதனால் ஒரு ஆவணப்படத்தைப் பார்க்கும் அனுபவமே எழுகிறது.
திருநெல்வேலி ஜில்லாவில் மூன்று நாட்களில் நிகழ்ந்த சந்திப்புகளும், அவற்றில் லலிதாராம் தேடியவையும் பதித்தவையுமாக அமைகின்றன. நூல் நாகரிகம் என்று புறந்தள்ளாமல் இவரின் உள்ளக்கிடக்கையையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறார்.
அதில் அந்த மகா கலைஞன் குறித்த தேடலில் ஒரு தொய்வு இருக்கக் கூடாது என்ற பரபரப்புத்தான் தொனிக்கிறது.
இந்த நூலில் அவர் கையாண்டிருக்கும் இன்னொரு விடயம், போலிகளுக்கு அனுமதியில்லை. அதாவது காருகுறிச்சியார் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு அவர் குறித்துச் சொல்லி வரும் புகழாரங்களை வரலாறாக ஏற்க மறுக்கிறார். மெய்த்தன்மை குறித்து ஆராய்ந்து அவற்றில் நேர்மையானதை மட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார்.
புத்தகத்தில் காருகுறிச்சி அருணாசலம் குறித்த துணைச் செய்திகளோடு அரிய பல புகைப்படங்களையும் இணைத்திருக்கிறார். இவையும் அந்தப் பயணத்தின் வழி பெறப்பட்டவையே.
காருகுறிச்சியார் வாழ்ந்த இடங்கள், சந்தித்த மனிதர்களின் சந்ததிகள், அவரின் இசையை கேட்ட எஞ்சி வாழும் மனிதர்கள், மகள் என்று அந்தப் பயணத்தில் திட்டம் போட்டதும், எதிர்பாராது கிட்டிய பொக்கிஷங்களையும் ஒரு தேனீ போல நுகர்ந்து கொடுக்கிறார்.
நகைச்சுவைக் கையாடல் அந்தப் பயணத்துக்குச் சுவாரஸ்யம் கூட்டுகிறது.
“காருகுறிச்சியாரைத் தேடி” இனைத் தொடர்ந்து இந்தப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் சிறுகதைகளில்
“நேனெந்து வெகுதூரா” பேசுவது, அருணாசலத்தின் நாகசுரக் கச்சேரியை வைக்க ஆசைப்படும் வேம்பு என்ற சாதாரணரின் அனுபவமாகப் பதிவாகிறது. ஊகிக்கும் முடிவென்றாலும் அதைக் கொடுக்கும் இடத்தில் சொல்லவெண்ணாப் பரவசத்தை எழுப்பி விடுகிறார், சிறுகதையாசிரியராகவும் பரிணமிக்கும் லலிதாராம்.
“சால கல்லலாடு” என்ற இன்னொரு சிறுகதை இணைப்பு, காருகுறிச்சி அருணாசலத்தின் தந்தை பலவேசம் தன் மகனுக்குத் தனித்துவ அடையாளம் தேடத் துடிப்பதும், ஞானத்தந்தை ரத்தினம்பிள்ளையின் மேதமையின் பால் காருகுறிச்சிக்கு எழும் இயல்பான குருபக்தியையும் காட்டும் சிறுகதை. இதிலும் லலிதாராம் கையாண்டிருக்கும் சொற்கட்டுமானம் அந்தக் காலத்து நிகழ்வைக் கண்முன் கொண்டு வருமாற்போல அமைகின்றது.
“சிங்காரவேலனே தேவா” பாடலோடே காருகுறிச்சியாரின் திரைப் பங்களிப்பைப் பதிவாக்கும் சூழலில், அந்தப் படத்தைத் தோண்டி எடுத்து மேலும் பல நுணுக்கமான வாசிப்பை நயம்படக் காட்டுகிறார். “ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும்” என்ற இன்னொரு படத்திலும் காருகுறிச்சியார் வாசிப்பு இருப்பது பதிவாகி உள்ளது.
மூர் மார்க்கெட்டில் அந்தத் திரையிசை இசைத்தட்டு லலிதாராமிடம் சேர்ந்தது சேரிடம் சேர்ந்தது போல.
மேலும், “சூட்சம உரசல்” என்ற நயப்பும், “ஆபோகி” எனும் கவி நடையும், “காந்தார பானம்” எனும் கட்டுரையோடு, “அளவு மிறா அமுதப் பெருக்கு” நிறைத்து நிற்கின்றது.
“காருகுறிச்சியைத் தேடி” இசையின் உயர் இலக்கணங்களை ஆய்வு ரீதியாகப் பேசும் நூலன்று, எல்லாத்தரப்பு வாசகனுக்கும் சென்றடையும் வண்ணம் எழுந்த “காருகுறிச்சி வாசிப்பு குறித்த மறு வாசிப்பு” என்று சொல்லலாம்.
“ஒரு கலைஞன் பிறந்து வளர்ந்தது ; மிகவும் சிரமப்பட்டு குருமுகமாகக் கலையில் தேர்ச்சி பெற்றது; கலையை அரங்கேற்ற மேடைகள் தேடிப் போராடியது; கிடைத்த மேடைகளில் நன்றாக வாசித்துத் துறையில் முன்னேறியது; தொடந்து பல ஆண்டுகள் வாசித்து பல அங்கீகாரங்களைப் பெற்றது என்ற சித்திரத்தை அநேகமாக எல்லாக் கலைஞர்களுக்கும் பொருத்த முடியும். எனில், பதிவுகள் அந்தக் கலையில் சிறப்பான தேர்ச்சி பெற்ற ஒரு நல்ல கலைஞனையும், உச்சங்களைத் தொட்டு கலையின் எல்லைகளை விஸ்தரித்த மாகலைஞனையும் போதிய அளவு பேதப்படுத்திக் காட்டுவதில்லை”
என்ற ஆதங்கத்தை முன்வைக்கும் லலிதாராம்,
“அந்த வித்தியாசத்தை வெளிப்படுத்த அந்தக் கலைஞனின் இசையின் நுட்பங்களுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது”
என்ற நியாயத்தைப் இறுதிப் பக்கத்தில் முத்தாய்ப்பாகச் சொல்லி வைக்கிறார்.
அந்த நியாயத்தைப் புத்தகம் நெடுக அனுபவரீதியாக உணரலாம்.
சந்திக்கும் மனிதர்கள், காணும் நினைவிடங்கள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் போது ஏதாவது காருகுறிச்சி அருணாசலம் போட்ட ஏதாவது ஒரு உருப்படியை அசை போட்டுக் கொண்டாடுகிறார். காருகுறிச்சியார் எவ்வளவு தூரம் தனித்துவமானவர் என்பதை அவரின் கலைத்திறனைக் கொண்டு நிறுவும் பண்பு அது.
கானா பிரபா
24.02.2025.